என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • தே.மு.தி.க. ஆட்சிக்கு வந்தால் மது கடை இல்லாத தமிழகம் உருவாக்கப்படும்.
    • ரேஷன் பொருட்கள் பொதுமக்கள் வீடு தேடி வரும்.

    வேலூர்:

    வேலூர் அண்ணாசாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தேமுதிக பூத் ஏஜென்ட் ஆலோசனை கூட்டம் நடந்தது.

    கூட்டத்தில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் பேசியதாவது:-

    தே.மு.தி.க. ஆட்சிக்கு வந்தால் மது கடை இல்லாத தமிழகம் உருவாக்கப்படும். ரேஷன் பொருட்கள் பொதுமக்கள் வீடு தேடி வரும். தே.மு.தி.க. நிர்வாகிகள் யார் பெரியவர் என்ற ஈகோவை மறந்து வருகின்ற தேர்தலில் பணியாற்றினால் வெற்றி என்ற மூன்றெழுத்து நமக்கு பரிசாக கிடைக்கும்.

    இதன் மூலம் அதிக அளவில் வெற்றி பெறுவார்கள். விஜயகாந்த் உயிருடன் இருந்தபோது அவரின் முதுகில் குத்தி விட்டனர். கையெழுத்து போட்டு கொடுத்து விட்டு பின்னர் இல்லை என்று துரோகம் செய்துவிட்டனர். நாம் எவ்வளவோ துரோகிகளை பார்த்து விட்டோம்.

    நமக்கு எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஆளுங்கட்சியினர் என்ற எந்தவித ஆதரவும் இல்லை. நீங்கள் விஜயகாந்தை மனதில் வைத்துக் கொண்டு வெற்றிக்காக போராட வேண்டும். கடந்த ஒன்றை வருடங்களாக விஜயகாந்த் நினைவிடத்தில் ஏராளமான பொதுமக்கள் தினமும் வந்து கண்ணீர் வடிக்கின்றனர் என்று பேசினார்.

    தொடர்ந்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    குடியாத்தத்தில் மக்களைத் தேடி மக்கள் தலைவன் கேப்டன் என்ற ரதயாத்திரை தொடங்க இருக்கிறது.

    நடைபயணத்துடன் தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் மக்களை சந்தித்து தொண்டர்களை சந்தித்து பேச இருக்கிறோம். தற்பொழுது முதல் கட்டமாக இந்த நடைபயணம் வரும் 23-ந்தேதியோடு நிறைவுக்கு வருகிறது. 24-ந்தேதி கேப்டனின் நினைவு நாள் முன்னிட்டு கேப்டன் அறக்கட்டளையிலிருந்து நல திட்ட உதவிகள் வழங்க இருக்கின்றோம்.

    25-ந் தேதி விஜயகாந்த் பிறந்த நாள் அது எங்கள் கட்சிக்கு திருநாள். அவர் பிறந்த நாள் முடிந்து இரண்டாம் கட்ட பிரசாரம் தொடங்கும்.

    மீண்டும் மக்களை தேடி மக்கள் தலைவன் என்கின்ற சந்திப்பை முடித்துப் பின்பு தான் யாருடன் கூட்டணி என்பதை நாங்கள் அறிவிப்போம் என்றார்.

    • கடைசி மூச்சு வரை பாட்டாளி மக்களுக்காக உழைப்பேன்.
    • பா.ம.க.வை பெரிய கட்சியாக உருவாக்கியது நான் தான்.

    திண்டிவனம்:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தைலாபுரம் தோட்டத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    வன்னியர் சங்கம் சார்பில் பூம்புகாரில் 5 லட்சம் மகளிர்கள் பங்கு பெறும் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மாநாட்டிற்கு வரும் மகளிர் பாதுகாப்பாக வரவேண்டும்.

    அன்புமணி நிறைய பொய்களையும் கட்டுக்கதைகளையும் கட்சி தொண்டர்களிடம் பரப்பி வருகிறார். அன்புமணி தைலாபுரத்தில் தன்னை சந்திக்க வந்ததாகவும் நான் கதவை மூடிக்கொண்டு பார்க்க மறுத்ததாக அன்புமணி தெரிவித்துள்ளார். என்னை அவர் சந்திக்கவும் வரவில்லை, நான் கதவையும் அடைக்கவில்லை. நான் ஏன் பேச மறுக்கிறேன்? 46 ஆண்டு காலம் கட்டி காப்பாற்றிய கட்சியை அன்புமணியிடம் ஏன் கொடுக்க வேண்டும்? கட்சி நிர்வாகிகள் யாரையும் என்னை சந்திக்கக்கூடாது என அன்புமணி தெரிவிக்கிறார்.

    கட்சிக்கு அங்கீகாரம் இல்லை. சின்னமும் இல்லை. 2026 சட்டமன்ற தேர்தலில் கட்சி அங்கீகாரம் பெற வேண்டும் என்று சொல்லி நான் தலைமை ஏற்கிறேன் என கூறினேன். அதை அன்புமணி ஏற்றுக் கொள்ளவில்லை.

    மேலும் கட்சியில் உள்ள பொறுப்பாளர்களை நியமிக்கவும், நீக்கவும் எனக்கு தான் அதிகாரம் உள்ளது. அன்புமணிக்கு அதிகாரம் இல்லை.

    பா.ம.க.வை அன்புமணியிடம் கொடுத்துவிட்டு தைலாபுரம் இல்லதில் கதவை சாத்திகொண்டு கொள்ளு பேரன்களிடம் விளையாடுவதை ஏற்க முடியாது. கடைசி மூச்சு வரை பாட்டாளி மக்களுக்காக உழைப்பேன். மக்கள் என் மேல் உயிரை வைத்துள்ளார்கள். வஞ்சனையால், சூதுவால் உறிஞ்சி எடுத்து பா.ம.க.வை அன்புமணி எடுத்து கொள்வேன் என்கிறார்.

    பா.ம.க.வினர் தன்னை நிறுவனராக பார்க்க மாட்டார்கள். என்னை கடவுளாக பார்க்கின்றனர். அப்படி பார்த்தவர்களை எனக்கு எதிராக பணத்தை கொடுத்து அவர் பக்கம் வைத்துள்ளார். ராமதாஸ் விதையை போட்டு தண்ணீரை ஊற்றி வளர்க்கவில்லை, வேர்வையை ஊற்றி ஆலமரமாக வளர்த்தேன். அதன் கிளையை வெட்டி கோடாரி செய்து ஆலமரத்தை சாய்க்க பார்க்கிறார். கட்சியின் வளர்ச்சிக்காக அன்புமணி எதையும் செய்யவில்லை.

    பா.ம.க.வை பெரிய கட்சியாக உருவாக்கியது நான் தான். அன்புமணிக்கு எந்த குறையும் வைக்கவில்லை. நல்ல பள்ளியில் பயில வைத்து, எம்.பி.யாக்கி, ராஜ்யசபா உறுப்பினராக்கி, எல்லா பொறுப்புகளையும் ஒப்படைத்தேன்.

    தன்னை யாரும் பார்க்கக்கூடாது என்று பணத்தை கொடுத்து வருகிறார். காசு கொடுத்து கட்சிக்காரர்களை பொருளை விலைக்கு வாங்குவது போல் அன்புமணி செய்கிறார். தருமபுரியில் சுப்ரமணி ஓ.கே.எஸ். என்னை சந்திக்க வந்தபோது அவருக்கு தருமபுரி எம்.எல்.ஏ வெங்கடேஷ், ரூ.5 ஆயிரம் கொடுத்து தடுத்தார். இதுபோன்று என்னை சந்திக்க வருபவர்களை சந்திக்க விடாமல் நிறைய வேலைகளை செய்து வருகின்றனர். ஆனால் ஓ.கே.எஸ். அந்த பணத்தை எம்.எல்.ஏ. முகத்தில் வீசிவிட்டு என்னை சந்தித்தார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பசுமைப் புரட்சிக்கு வித்திட்டுப் பசியாற்றிய மானுடநோக்கு கொண்ட அறிவியலாளர் எம்.எஸ்.சுவாமிநாதனின் நூற்றாண்டுப் பிறந்தநாள் இன்று.
    • தந்தையின் பணியையும்-புகழையும் போற்றும் சவுமியா சுவாமிநாதனின் பணி சிறக்கவும் வாழ்த்துகள்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:-

    பசுமைப் புரட்சிக்கு வித்திட்டுப் பசியாற்றிய மானுடநோக்கு கொண்ட அறிவியலாளர் 'பாரத ரத்னா' எம்.எஸ்.சுவாமிநாதனின் நூற்றாண்டுப் பிறந்தநாள் இன்று. தமது அன்புக்கும் மதிப்புக்கும் பாத்திரமான எம்.எஸ். சுவாமிநாதனின் பெயரிலான ஆராய்ச்சி அறக்கட்டளைக்கு நிலம் வழங்கி, குடியரசுத் தலைவராக இருந்த கே.ஆர்.நாராயணனுடன் இணைந்து, அங்குள்ள ஜெ.ஆர்.டி. டாடா சுற்றுச்சூழல் தொழில்நுட்ப மையத்தைத் திறந்தும் வைத்தார் அன்றைய முதலமைச்சர் கலைஞர்.

    அவரது வழியிலான நமது திராவிடமாடல் அரசும், போரூர் வெட்லேண்ட் பார்க், தஞ்சை ஈச்சங்கோட்டை வேளாண் கல்லூரி ஆகியவற்றுக்குத் எம்.எஸ். சுவாமிநாதனின் பெயரைச் சூட்டியுள்ளதோடு, பயிர்ப் பெருக்கம் மற்றும் மரபியல் பாடங்களில் அதிக மதிப்பெண் பெறும் மாணவருக்கு எம்.எஸ்.சுவாமிநாதனின் பெயரில் ஆண்டுதோறும் விருது வழங்கப்படும் என்றும் அறிவித்து அவரது நினைவைப் போற்றி வருகிறோம்.

    காலநிலை மாற்றம் உட்பட இன்று நாம் எதிர்கொண்டு வரும் பல சவால்களைப் பல பத்தாண்டுகளுக்கு முன்பே கணித்து, எச்சரித்த மாபெரும் தொலைநோக்காளரான எம்.எஸ்.சுவாமிநாதனை அடியொற்றி, மேலும் பல மாணவர்கள் சமூகத்துக்குப் பணியாற்ற வேண்டும் என அவரது நூற்றாண்டில் கோரிக்கையாக முன்வைக்கிறேன்!

    தந்தையின் பணியையும்-புகழையும் போற்றும் சவுமியா சுவாமிநாதனின் பணி சிறக்கவும் வாழ்த்துகள்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பேரிகார்டுகளை முழுவதுமாக மூடி வைத்திருப்பதால் எதிரில் வரும் வாகனம் தெரிவதில்லை.
    • பேரிகார்டுகள் வைப்பது போக்குவரத்து மாற்றத்திற்காக, அவசர காலங்களில் பயன்படுத்தப்படும் தற்காலிக நடைமுறையே.

    மதுரை:

    கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த அழகேசன் ஐகோர்ட் மதுரை கிளையில் ஒரு பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், சாலைகளில் வேகத்தை முறைப்படுத்துவதற்காக திட்டமிட்டு பேரிகார்டுகள் வைக்கப்படும். ஆனால் காவல்துறையினர் எவ்விதமான திட்டமிடலுமின்றி சாலையின் நடுவில் இரும்பு பேரிகார்டுகளை வைப்பதால் ஏராளமான விபத்துக்கள் ஏற்படுகின்றன.

    பேரிகார்டுகளை முழுவதுமாக மூடி வைத்திருப்பதால் எதிரில் வரும் வாகனம் தெரிவதில்லை. பேரிகார்டுகள் வைப்பது போக்குவரத்து மாற்றத்திற்காக, அவசர காலங்களில் பயன்படுத்தப்படும் தற்காலிக நடைமுறையே. அதோடு அந்த பேரிகார்டுகளில் எந்த தனியார் விளம்பரங்களும் இடம்பெறக்கூடாது. இது தொடர்பாக நடவடிக்கை கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    ஆகவே தனியார் விளம்பரங்களுடன் மாநில, தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள பேரிகார்டுகளை அகற்றவும், பேரிகார்டுகளை சரியான அளவில் வாங்குவதற்கு உரிய வழிகாட்டுதல்களை பிறப்பிக்கவும் உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், மரியகிளாட் அமர்வு, வழக்கு தொடர்பாக தேசிய நெடுஞ்சாலைத்துறை தலைவர், மாநில நெடுஞ்சாலை துறையின் முதன்மைச் செயலர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

    • தமிழ், ஆங்கிலம் என்ற இருமொழி கொள்கையை கடைபிடிக்க வேண்டும்.
    • பள்ளிக்கல்வியில் தமிழ் மொழியை முதல் மொழியாக நிலைநிறுத்துவது அவசியம்.

    சென்னை:

    மாநில கல்வி கொள்கையை உருவாக்க 2022-ல் ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் 14 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இக்குழு 650 பக்கங்கள் கொண்ட அறிக்கையை கடந்த ஜூலை மாதம் சமர்ப்பித்தது.

    அந்த அறிக்கையில், 3,5,8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கூடாது என்றும் தமிழ், ஆங்கிலம் என்ற இருமொழி கொள்கையை கடைபிடிக்க வேண்டும் என்றும் மாநில கல்விக்கொள்கை குழு பரிந்துரைத்தது. மேலும், நீட் தேர்வு கூடாது, நீட் தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கும் மையங்களை விளம்பரப்படுத்துவதை தடை செய்ய வேண்டும். பள்ளிக்கல்வியில் தமிழ் மொழியை முதல் மொழியாக நிலைநிறுத்துவது அவசியம் என்று வலியுறுத்தப்பட்டது.

    இந்த நிலையில், மாநில கல்வி கொள்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

    • நாட்டுப்படகு, வள்ளம் போன்றவை கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.
    • மீனவர்கள் மீன் பிடிக்க செல்லாததால் கன்னியாகுமரி கடற்கரை பகுதி வெறிச்சோடி காணப்படுகிறது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி பெரியநாயகி தெருவில் மீனவர்கள் பாதுகாப்புடன் மீன்பிடி தொழில் செய்வதற்காக தூண்டில் வளைவு பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பாலம் குறுகலாக அமைக்கப்பட்டு உள்ளதால் மீனவர்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள் என்று புகார்கள் எழுந்து உள்ளன. எனவே பாலத்தை மேலும் நீட்டித்து தர வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இதனை வலியுறுத்தி கன்னியாகுமரியை சேர்ந்த விசைப்படகு, நாட்டுப்படகு மற்றும் வள்ளம் மீனவர்கள் சுமார் 5ஆயிரம் பேர் இன்று "திடீர்" என்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லாததால் விசைப்படகுகள் அனைத்தும் சின்ன முட்டம் துறைமுகத்தில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. அதேபோல நாட்டுப்படகு, வள்ளம் போன்றவை கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.

    மீனவர்கள் மீன் பிடிக்க செல்லாததால் கன்னியாகுமரி கடற்கரை பகுதி வெறிச்சோடி காணப்படுகிறது. மீன் வரத்தும் அடியோடு நின்று விட்டது. இதனால் கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் அமைந்துள்ள மீன் சந்தைகள் களையிழந்து கிடக்கின்றன. மீன் வரத்து குறைந்ததால் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதனால் மீன்விலையும் "கிடுகிடு" என்று உயர்ந்து உள்ளது.

    • கட்சியின் பொதுக்குழு, அவசர பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தை கூட்ட கட்சியின் நிறுவனருக்கே அதிகாரம் உள்ளது.
    • தன்னைத்தானே தலைவர் என சொல்லிக்கொண்டு அன்புமணி செயல்படுகிறார்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஆதரவு மாநில பொதுச்செயலாளர் முரளி சங்கர் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், "கடந்த 2022-ம் ஆண்டு மே மாதம் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்ட அன்புமணியின் பதவிக்காலம் கடந்த மே மாதம் 28-ந்தேதியுடன் நிறைவடைந்து விட்டது.

    கட்சியின் பொதுக்குழு, அவசர பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தை கூட்ட கட்சியின் நிறுவனருக்கே அதிகாரம் உள்ளது.

    தன்னைத்தானே தலைவர் என சொல்லிக்கொண்டு அன்புமணி செயல்படுகிறார். அவர் வருகிற 9-ந்தேதி கூட்டும் பொதுக்குழுவுக்கு தடை விதிக்கவேண்டும் என்று கூறியிருந்தார்.

    இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க கோரி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு முறையீடு செய்யப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இந்த வழக்கை நாளை விசாரிப்பதாக கூறினார்.

    • ‘தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும்’ ‘இளைய திராவிடம் எழுகிறது’ ஆகிய 2 புத்தகங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதி உள்ளார்.
    • கலைஞரின் சிலைகளை நினைவுப் பரிசாக உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

    சென்னை:

    மறைந்த தி.மு.க. தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதி நினைவு நாளையொட்டி இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கலைஞர் மாணவப் பத்திரிகையாளர் திட்டத்தை தொடங்கி வைத்து அதன் இலச்சினையை வெளியிட்டார். அதை நக்கீரன் கோபால் பெற்றுக் கொண்டார்.

    இதைத் தொடர்ந்து திராவிட இயக்க இளம் ஆய்வாளர்களை கண்டறிந்து அவர்களை வளர்த்தெடுத்து ஊக்குவிக்கும் விதமாக கலைஞர் நிதிநல்கை திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன் இலச்சினையை அவர் வெளியிட திராவிட இயக்க ஆய்வாளர் திருநாவுக்கரசு பெற்றுக்கொண்டார். இந்த திட்டத்தின் மூலம் இளம் ஆய்வாளர்கள் 15 பேருக்கு ஆண்டுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும்.

    முத்தமிழறிஞர் பதிப்பகத்தின் சார்பில் தயாரிக்கப்பட்ட 8 நூல்களான தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும், தி.மு.க. வரலாறு, இளைய திராவிடம் எழுகிறது, மாநில சுயாட்சி முழக்கம், திராவிட இயக்க வரலாறு கேள்வி பதில், இந்தித் திணிப்பை எதிர்க்கிறோம் ஏன்? இந்தியாவுக்கு வழிகாட்டும் திராவிட மாடல், 'இந்தியாவில் சமூக நீதியும் இட ஒதுக்கீடும்' ஆகிய புத்தகங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட அமைச்சர் துரைமுருகன் பெற்றுக்கொண்டார். இதில் 'தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும்' 'இளைய திராவிடம் எழுகிறது' ஆகிய 2 புத்தகங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதி உள்ளார்.

    துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னெடுப்பில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில் கருணாநிதி குறித்த சிறப்பு காணொலியும் ஒளிபரப்பப்பட்டது.

    நிகழ்ச்சியில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்பட அனைவருக்கும் கலைஞரின் சிலைகளை நினைவுப் பரிசாக உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி. முதன்மை செயலாளர் அமைச்சர் கே.என்.நேரு, துணை பொதுச்செயலாளர்கள் கனிமொழி எம்.பி., ஐ.பெரியசாமி, திருச்சி சிவா எம்.பி., ஆ.ராசா எம்.பி., அந்தியூர் செல்வராஜ், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தலைமை நிலைய செயலாளர்கள் பூச்சி முருகன், துறைமுகம் காஜா மற்றும் புத்தக எழுத்தாளர்கள், கட்சி நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.

    • திருவிழாவில் மாடு, குதிரை உள்ளிட்ட விலங்குகளின் சந்தை பிரபலமாக உள்ளது.
    • பல்வேறு மாநிலங்களில் இருந்து விலங்குகள் கொண்டு வரப்படுகிறது.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம், அந்தியூர் குருநாதசுவாமி கோவில் தேர்த்திருவிழா வரும் 13-ந்தேதி தொடங்கி 16-ந்தேதி வரை நடைபெற உள்ளது.

    இதற்காக அந்தியூர் பகுதியில் கோவில், கடைகள், கேளிக்கை அரங்குகள், குதிரை மற்றும் மாட்டு சந்தைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

    திருவிழாவில் மாடு, குதிரை உள்ளிட்ட விலங்குகளின் சந்தை பிரபலமாக உள்ளது. குறிப்பாக இசைக்கு ஏற்ப நடமாடும் குதிரை உலக புகழ் பெற்றது. சந்தைக்கு கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து விலங்குகள் கொண்டு வரப்படுகிறது.

    இந்நிலையில் இந்த ஆண்டுக்கான திருவிழாவை முன்னிட்டு கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த சைஜா என்பவர் 24 குதிரைகளை சந்தைக்கு கொண்டு வந்தார். குதிரையின் பாதுகாவலராக பைரஸ் என்பவர் இருந்தார். நேற்று இரவு குதிரைக்கு அருகில் உள்ள தோட்டத்தில் இருந்து வாளியின் மூலம் தண்ணீர் கொண்டு வைத்தார். வாளியில் யூரியா இருந்துள்ளதை கவனிக்காமல் தண்ணீர் எடுத்து வைத்ததில் 6 குதிரைகள் தண்ணீரை குடித்துள்ளது. யூரியா தண்ணீரை குடித்த 6 குதிரைகளும் ஒன்றன் பின் ஒன்றாக மயங்கி விழுந்து இறந்தன. மற்ற குதிரைகள் வேறு வாளியில் இருந்த தண்ணீரை குடித்ததால் உயிர் தப்பியது.

    திருவிழாவை முன்னிட்டு சந்தையில் விற்பனை செய்ய கொண்டு வரப்பட்ட குதிரைகளில் 6 குதிரைகள் இறந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • திருமணத்தின்போது பிரீத்திக்கு 120 பவுன் நகை, சொகுசு கார், ரூ.25 லட்சம் வரதட்சணையாக பெற்றோர் கொடுத்ததாக கூறப்படுகிறது.
    • கடந்த மாதம் 11-ந்தேதி ஈரோட்டில் இருந்து புறப்பட்டு திருப்பூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டார்.

    திருப்பூர்:

    திருப்பூர் கே.செட்டிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி. தொழில் அதிபர். இவரது மனைவி சுகந்தி. இந்த தம்பதியின் மகள் பிரீத்தி (வயது 26). இவருக்கும், ஈரோடு மாவட்டம் வீரப்பன் சத்திரத்தை சேர்ந்த என்ஜினீயரான சதீஸ்வர் (30) என்பவருக்கும் கடந்த 11 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    திருமணத்தின்போது பிரீத்திக்கு 120 பவுன் நகை, சொகுசு கார், ரூ.25 லட்சம் வரதட்சணையாக பெற்றோர் கொடுத்ததாக கூறப்படுகிறது.

    கணவர் மற்றும் மாமியாருடன் ஏற்பட்ட தகராறில் பிரீத்தி கோபித்துக்கொண்டு, கடந்த மாதம் 11-ந்தேதி ஈரோட்டில் இருந்து புறப்பட்டு திருப்பூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டார்.

    பிரீத்தியின் பெற்றோர், சின்னக்கரையில் உள்ள சொத்தை சமீபத்தில் விற்பனை செய்துள்ளனர். இதில் பிரீத்தியின் பங்காக ரூ.50 லட்சம் வந்துள்ளது. அந்த பணத்தை சதீஸ்வர், தனக்கு கொடுக்குமாறு மனைவியிடம் தொடர்ந்து கேட்டதாக தெரிகிறது. இதனால் பிரீத்தி மனம் உடைந்த நிலையில், கடந்த சில நாட்களாக பெற்றோர் வீட்டில் சோகமாக இருந்து வந்துள்ளார்.

    இந்தநிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பிரீத்தி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் பற்றி அறிந்ததும் நல்லூர் போலீசார் விரைந்து சென்று, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    வரதட்சணை கொடுமையால் பிரீத்தி தற்கொலை செய்து கொண்டதாக குடும்பத்தினர், உறவினர்கள் குற்றம்சாட்டினர். மேலும் பிரீத்தியின் கணவர் வீட்டார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன்பிறகே உடலை பெறுவோம் என உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    வரதட்சணை புகார் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து திருப்பூர் ஆர்.டி.ஓ. மோகனசுந்தரம், பிரீத்தியின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினார்.

    இந்தநிலையில் நல்லூர் போலீசார் பிரீத்தியின் கணவர் சதீஸ்வர், மாமனார் விஜயகுமார், மாமியார் உமா ஆகியோரிடம் விசாரணை நடத்திய நிலையில், இன்று காலை 3பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து ஆர்.டி.ஓ., மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அவினாசியில் வரதட்சணை கொடுமையால் இளம்பெண் ரிதன்யா தற்கொலை செய்த நிலையில், திருப்பூரில் மீண்டும் மற்றொரு இளம்பெண் தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

    • மக்கள் எங்களுக்கு சான்றிதழ் தரவேண்டும்.
    • எடப்பாடி பழனிசாமி சான்றிதழ் எங்களுக்கு வேண்டாம்.

    புதுக்கோட்டை:

    அமைச்சர் எஸ்.ரகுபதி புதுக்கோட்டையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அரசு திட்டத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெயர் வைத்தது தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு வரவேற்கத்தக்க ஒன்று. அ.தி.மு.க. ஆட்சியிலும் எடப்பாடி பழனிசாமி படம் போடப்பட்டது. மீன்வள பல்கலைக்கழகத்திற்கு ஜெயலலிதாவின் பெயரை வைத்தார்கள். அந்த சட்ட மசோதா ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

    மீண்டும் நாங்கள் அந்த சட்ட மசோதாவை கொண்டு வந்தபோது கவர்னர் ஏற்றுக்கொள்ளாமல் திருப்பி அனுப்பினார். அதற்கு சேர்த்துதான் உச்ச நீதிமன்றத்தில் கலைஞருக்காக, அவர்களது தலைவர் ஜெயலலிதாவிற்கும் சேர்த்து அவரது பெயரை வைக்க வேண்டும் என்று வாதாடி பெற்றிருக்கின்ற இயக்கம் தான் தி.மு.க.

    எங்களுக்கு கட்சி வேறுபாடு கிடையாது. எந்தெந்த நிகழ்ச்சிகளுக்கு எங்களுடைய முதலமைச்சர் பெயரை சூட்ட வேண்டுமோ அந்த பெயரை சூட்ட கடமைப்பட்டுள்ளோம். அதையெல்லாம் விமர்சித்த முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்திற்கு உச்சநீதிமன்றம் 10 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உள்ளது வரவேற்கத்தக்கது.

    பா.ஜ.க. ஆளுகின்ற மாநிலங்களில் எல்லாம் மோடியால் வளர்ச்சி விகிதத்தை எட்ட முடிந்ததா? இல்லை... மு.க.ஸ்டாலின் ஆட்சியில் தான் தமிழ்நாடு இந்த வளர்ச்சி விகிதத்தை எட்டி உள்ளோம். இது முழுக்க முழுக்க தமிழ்நாடு அரசுடைய உழைப்பு. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்திருக்கின்ற முயற்சிக்கு கிடைத்து உள்ள மிகப்பெரிய அங்கீகாரம்.

    திருவாரூரில் கலைஞர் பல்கலைக்கழகம் திறப்பதற்கு கவர்னருக்கு அனுப்பிய சட்ட மசோதாவை அவர் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளார். ஜனாதிபதி என்ன பதிலளிக்கிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

    ஒரு எதிர்க்கட்சி சட்டம் ஒழுங்கு நல்லா இருக்கின்றது என்று சான்றிதழ் கொடுக்க மாட்டார்கள். நாங்கள் எடப்பாடி பழனிசாமியிடம் இருந்து அந்த சான்றிதழை எதிர்பார்க்கவில்லை. மக்கள் எங்களுக்கு சான்றிதழ் தரவேண்டும். அந்த மக்கள் சட்டம் ஒழுங்கு சரியாக இருக்கிறது நாங்கள் பாதுகாப்பாக இருக்கின்றோம், நலமாக இருக்கின்றோம் என்று மக்கள் எங்களது தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு சான்றிதழ் தருகின்றனர். அந்த சான்றிதழ் எங்களுக்கு போதும். எடப்பாடி பழனிசாமி சான்றிதழ் எங்களுக்கு வேண்டாம்.

    திருப்பூரில் சப்-இன்ஸ்பெக்டர் கொலை வழக்கில் போலீஸ்காரரை தாக்கி விட்டு தப்பா சென்றதால் தான் இந்த என்கவுண்டர் சம்பவம் நடந்துள்ளது. காவல்துறைக்கு பாதுகாப்பு தேவையில்லை. காவல்துறை தனியாக போய் சில சமயங்களில் இது போன்ற கொலை சம்பவம் நடைபெறுகிறதே தவிர வேறு எங்கேயும் கிடையாது.

    இதைவிட மோசமான சம்பவங்கள் எல்லாம் வட மாநிலங்களில் வருகின்றது. இந்தியாவிலேயே தொழில் தொடங்கவும், வசிக்கவும் தகுந்த ஒரே மாநிலம் தமிழ்நாடு தான். ஆணவ படுகொலைகள் எங்களுக்கு தெரிந்து நடப்பது கிடையாது. தெரிந்தால் நிச்சயம் அதை தடுத்து விடுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழக விவசாயிகளின் கோரிக்கைகளைத் திமுக அரசு தொடர்ந்து புறக்கணிப்பது முறையல்ல.
    • சேதமடைந்த தடுப்பணைகளை மேம்படுத்துவதற்கும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த வேண்டும்.

    பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    திருச்சி மாவட்டம் அழகிரிபுரம் அருகேயுள்ள கொள்ளிடம் ஆற்றில் கடந்த ஆண்டு சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட தடுப்பணை சேதமடைந்ததை சீர்செய்யாமல் அறிவாலயம் அரசு அலட்சியப்படுத்துவதால், பயிர் பாசனத்திற்கு பயன்பட வேண்டிய மழை நீர் வீணாகக் கடலில் கலப்பதாகக் கூறி அப்பகுதி விவசாய பெருமக்கள் ஆற்றில் இறங்கி நின்று போராடும் காணொளி மனதை கனக்க வைக்கிறது.

    தரமற்ற முறையில் தடுப்பணையைக் கட்டியது மட்டுமன்றி ஊருக்கே படியளக்கும் விவசாயப் பெருமக்களின் வாழ்வாதாரத்தைக் கெடுத்து அவர்களின் வயிற்றிலடிக்கும் திமுக அரசின் அராஜகத்திற்கு எனது கடும் கண்டனங்கள். ஏற்கனவே பராமரிப்பற்ற அரசு சேமிப்பு கிடங்குகளில் அடுக்கி வைக்கும் நெல்மூட்டைகள் மழையில் நனைந்து வீணாவதாலும், முறையாக தூர்வாராமல் வறண்டு கிடக்கும் பாசனப் போக்குவரத்தால் பயிர்கள் கருகுவதாலும் ஏகப்பட்ட நஷ்டத்தை சந்தித்து வரும் தமிழக விவசாயிகளின் கோரிக்கைகளைத் திமுக அரசு தொடர்ந்து புறக்கணிப்பது முறையல்ல.

    எனவே, அழகிரிபுரம் விவசாயப் பெருமக்களின் அத்தனை கோரிக்கைகளுக்கும் செவிமடுத்து அவற்றை நிறைவேற்றுவதோடு, தமிழகத்தில் கிடப்பில் போடப்பட்டுள்ள தடுப்பணைகளைக் கட்டுவதற்கும், சேதமடைந்த தடுப்பணைகளை மேம்படுத்துவதற்கும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×