என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

இரும்பு பேரிகார்டுகளை அகற்ற கோரி வழக்கு- முதன்மை செயலாளர் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட் உத்தரவு
- பேரிகார்டுகளை முழுவதுமாக மூடி வைத்திருப்பதால் எதிரில் வரும் வாகனம் தெரிவதில்லை.
- பேரிகார்டுகள் வைப்பது போக்குவரத்து மாற்றத்திற்காக, அவசர காலங்களில் பயன்படுத்தப்படும் தற்காலிக நடைமுறையே.
மதுரை:
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த அழகேசன் ஐகோர்ட் மதுரை கிளையில் ஒரு பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், சாலைகளில் வேகத்தை முறைப்படுத்துவதற்காக திட்டமிட்டு பேரிகார்டுகள் வைக்கப்படும். ஆனால் காவல்துறையினர் எவ்விதமான திட்டமிடலுமின்றி சாலையின் நடுவில் இரும்பு பேரிகார்டுகளை வைப்பதால் ஏராளமான விபத்துக்கள் ஏற்படுகின்றன.
பேரிகார்டுகளை முழுவதுமாக மூடி வைத்திருப்பதால் எதிரில் வரும் வாகனம் தெரிவதில்லை. பேரிகார்டுகள் வைப்பது போக்குவரத்து மாற்றத்திற்காக, அவசர காலங்களில் பயன்படுத்தப்படும் தற்காலிக நடைமுறையே. அதோடு அந்த பேரிகார்டுகளில் எந்த தனியார் விளம்பரங்களும் இடம்பெறக்கூடாது. இது தொடர்பாக நடவடிக்கை கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
ஆகவே தனியார் விளம்பரங்களுடன் மாநில, தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள பேரிகார்டுகளை அகற்றவும், பேரிகார்டுகளை சரியான அளவில் வாங்குவதற்கு உரிய வழிகாட்டுதல்களை பிறப்பிக்கவும் உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், மரியகிளாட் அமர்வு, வழக்கு தொடர்பாக தேசிய நெடுஞ்சாலைத்துறை தலைவர், மாநில நெடுஞ்சாலை துறையின் முதன்மைச் செயலர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.






