என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
    • நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யலாம்.

    தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோல் தென்இந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக, இன்று திருவண்ணாமலை, வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலம் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

    அதன்படி, தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் இன்று காலை 10 மணிவரை 8 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 10 மணிவரை மழை பெய்யலாம் என கூறப்பட்டுள்ளது. 

    • தமிழக சட்டசபைத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது.
    • கூட்டணி, பிரச்சாரம் என அனைத்து அரசியல் கட்சிகளும் வேலை செய்து வருகின்றன.

    சென்னை:

    தமிழக சட்டசபைத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதையடுத்து, கூட்டணிகள், பிரச்சாரங்கள் என அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக வேலை செய்து வருகின்றன.

    ஏற்கனவே, அ.தி.மு.க. சார்பில் எடப்பாடி பழனிசாமி, பா.ம.க. சார்பில் அன்புமணி ராமதாஸ், தே.மு.தி.க சார்பில் பிரேமலதா ஆகியோர் தங்களது சுற்றுப்பயணங்களை செய்து வருகின்றனர்.

    தமிழக பா.ஜ.க. தலைவரான நயினார் நாகேந்திரன் ஆகஸ்ட் 17-ம் தேதி நெல்லையில் இருந்து தனது சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார். நேரடியாக மக்களை களத்தில் சந்தித்து பா.ஜ.க. சாதனைகள் மற்றும் நலத்திட்டங்களை எடுத்துரைக்க உள்ளார்.

    இதற்கிடையே, சட்டசபை தேர்தல் பிரசாரத்திற்காக 4777 என்ற எண் கொண்ட பிரசார வாகனத்தை நயினார் நாகேந்திரனுக்காக தயார் செய்துள்ளார்

    இந்நிலையில், பிரசார வாகனத்தின் எண் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். பயன்படுத்திய காரின் எண் என்பதை அறிந்த நயினார் நாகேந்திரன் ஆர்வமாக அதில் பா.ஜ.க. கொடியை பொருத்தி வாகனத்தை இயக்கிப் பார்த்தார்.

    • அரசு மரியாதையுடன் எஸ்எஸ்ஐ சண்முகவேல் உடல் தகனம் செய்யப்பட்டது.
    • மூர்த்தியின் மற்றொரு மகன் மணிகண்டன் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார் /

    திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் மகேந்திரன் எம்.எல்.ஏ. தோட்டத்தில் எஸ்.ஐ. சண்முகவேல் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அ.தி.மு.க. மகேந்திரன் எம்.எல்.ஏ. தோட்டத்தில் அப்பா, மகன் உள்ளிட்ட 4 பேரும் மோதலில் ஈடுபட்டுள்ளதாக வந்த தகவலையடுத்து அங்கு எஸ்.ஐ. சண்முகவேல் மற்றும் காவலர் சென்றுள்ளனர். மோதலை தடுத்து எஸ்.ஐ. சண்முகவேல் சமாதானப்படுத்த முயன்றபோது அவர்கள் சண்முகவேல் வெட்டி கொன்றுள்ளனர்.

    படுகொலை செய்யப்பட்ட எஸ்எஸ்ஐ சண்முகவேல் உடலுக்கு காவல் துறை அதிகாரிகள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். இதனையடுத்து அரசு மரியாதையுடன் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

    இந்நிலையில், எஸ்எஸ்ஐ சண்முகவேல் கொலை வழக்கில் மூர்த்தி மற்றும் அவரது மகன் தங்கப்பாண்டியன் ஆகிய 2 பேர் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சரண் அடைந்தனர்.

    இந்நிலையில், தங்கப்பாண்டி, நீதிமன்றத்தில் இருந்து தற்போது வெளியே கூட்டி வரப்பட்டபோது "எங்கள் உயிருக்கு காவல்துறையால் ஆபத்து உள்ளது. எங்க அண்ணனை கொலை செஞ்சிட்டாங்க... கண்ண கட்டி கூட்டிட்டு போய் சுடறதுக்கு நாங்கதான் கிடச்சோமா?..." என கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    முன்னதாக தங்கபாண்டியின் சகோதரரும், கொலையில் சம்பந்தம் உள்ளவர் என சொல்லப்படுபவருமான மணிகண்டன் இன்று காவல்துறையினரால் என்கவுண்ட்டர் செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கம்யூனிஸ்ட் கட்சிகளின் கொள்கைகள் காற்றோடு காற்றாக பறந்துவிட்டது.
    • இன்றைக்கு இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சி மக்களுக்காக போராட்டம் நடத்தவில்லை

    எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி 'மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்' என்ற சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.

    தற்போது தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி இன்று ராஜபாளையத்தில் பிரசாரம் மேற்கொண்டார்.

    அப்போது மக்களிடம் உரையாற்றிய எடப்பாடி பழனிசாமி, "உங்களுக்கு (திமுக) கூட்டணி வலிமையாக இருக்கலாம், ஆனால் எங்களுக்கு மக்கள் வலிமையாக இருக்கிறார்கள்; ஒவ்வொரு தேர்தலிலும் வெற்றி, தோல்வியை நிர்ணயம் செய்வது மக்கள்தான். அந்த மக்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள்.

    கம்யூனிஸ்ட் கட்சிகளின் கொள்கைகள் காற்றோடு காற்றாக பறந்துவிட்டது. மக்களிடத்தில் நீங்கள் செல்வாக்கை இழந்து விட்டீர்கள். தேர்தல் நேரத்தில் உங்களது கட்சி அடையாளம் தெரியாமல் போய்விடும். இன்றைக்கு இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சி மக்களுக்காக போராட்டம் நடத்தவில்லை

    50 மாதத்தில் ஒரு முறையாவது திமுகவை எதிர்த்து கம்யூனிஸ்டு கட்சிகள் அறிக்கை விட்டிருக்கிறதா? ஆணவக் கொலை பற்றி பேச திமுக கூட்டணி தலைவர்கள் முதல்வரிடம் அனுமதி கேட்கிறார்கள்" என்று தெரிவித்தார்.

    • நாள் ஒன்றிற்கு 3,000 நாய்களுக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
    • 1.5 லட்சம் நாய்களுக்கு தடுப்பூசி செலுத்த 30 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    தெரு நாய்களுக்கு மெகா ரேபிஸ் தடுப்பூசி போடும் திட்டத்தை சென்னை மாநகராட்சி ஆகஸ்ட் 9ஆம் தேதி தொடங்குகிறது.

    சென்னை மாநகராட்சி முழுவதும் 50 நாட்களில் 1.5 லட்சம் நாய்களுக்கு தடுப்பூசி செலுத்த 30 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    கால்நடை மருத்துவக்குழுக்கள் நேரடியாக தெருக்களுக்கே சென்று நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்துவார்கள்.

    நாள் ஒன்றிற்கு 3,000 நாய்களுக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தப்படும் நாய்களுக்கு அடையாள மை வைக்கப்படும்

    முன்னதாக தெரு நாய்களை பிடித்து கருத்தடை மையத்திற்குக்கொண்டு சென்று ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • அரசு மரியாதையுடன் எஸ்எஸ்ஐ சண்முகவேல் உடல் தகனம் செய்யப்பட்டது.
    • மூர்த்தியின் மற்றொரு மகன் மணிகண்டன் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

    திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் மகேந்திரன் எம்.எல்.ஏ. தோட்டத்தில் எஸ்.ஐ. சண்முகவேல் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அ.தி.மு.க. மகேந்திரன் எம்.எல்.ஏ. தோட்டத்தில் அப்பா, மகன் உள்ளிட்ட 4 பேரும் மோதலில் ஈடுபட்டுள்ளதாக வந்த தகவலையடுத்து அங்கு எஸ்.ஐ. சண்முகவேல் மற்றும் காவலர் சென்றுள்ளனர்.

    மோதலை தடுத்து எஸ்.ஐ. சண்முகவேல் சமாதானப்படுத்த முயன்றபோது அவர்கள் சண்முகவேல் வெட்டி கொன்றுள்ளனர்.

    படுகொலை செய்யப்பட்ட எஸ்எஸ்ஐ சண்முகவேல் உடலுக்கு காவல் துறை அதிகாரிகள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். இதனையடுத்து அரசு மரியாதையுடன் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

    இந்நிலையில், எஸ்எஸ்ஐ சண்முகவேல் கொலை வழக்கில் மூர்த்தி மற்றும் அவரது மகன் தங்கப்பாண்டியன் ஆகிய 2 பேர் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சரண் அடைந்தனர்.

    இதனிடையே மூர்த்தியின் மற்றொரு மகன் மணிகண்டன் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

    இந்நிலையில், இந்த வழக்கில் கைதான தந்தை மூர்த்தி, மகன் தங்கபாண்டிக்கு 15 நாட்கள் (ஆகஸ்ட் 21 வரை) நீதிமன்றக் காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    • ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
    • 16,73,333 குடும்ப அட்டைகளுக்கு நேரடியாக பொருட்களை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அடைதாரர்களின் வீடுகளுக்கே நேரில் ரேசன் பொருட்களை தரும் 'முதலமைச்சரின் தாயுமானவர்' திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 12ம் தேதி சென்னையில் தொடங்கி வைக்கிறார்.

    இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், "மக்கள் நலன்சார்ந்த இத்திட்டம் சிறப்புக் கவனம் தேவைப்படும் பிரிவினரின் வாழ்வை மேம்படுத்துவதுடன் உணவுப் பாதுகாப்பையும் உறுதி செய்யும். இத்திட்டத்தின் வாயிலாக 34,809 நியாயவிலைக் கடைகளைச் சேர்ந்த 70 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களைக் கொண்ட 15,81,364 குடும்ப அட்டைகளில் உள்ள 20,42,657 பயனாளர்களும், 91,969 குடும்ப அட்டைகளில் உள்ள 1,27.797 மாற்றுத்தினாளிகளும், ஆக மொத்தம் 16,73,333 குடும்ப அட்டைகளில் உள்ள 21,70,454 பயனாளர்களுக்கு அவர்தம் இல்லங்களிலேயே குடிமைப் பொருட்களை விநியோகம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது

    ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற தகுதியுள்ள குடும்ப அட்டைகள் மற்றும் பயனாளர்களின் விவரம் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையிடமிருந்து பெறப்பட்டு. கள அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    மின்னணு எடைத்தராசு, e-PoS இயந்திரம் உள்ளிட்ட உபகரணங்களுடன் மூடிய வாகனங்களில் குடிமைப் பொருட்களைப் பாதுகாப்பாகத் தகுதியுள்ள பயனாளர்களின் இல்லத்திற்கே சென்று நியாயவிலைக் கடை விற்பனையாளர்கள் விநியோகிப்பர்.

    70 வயதுக்கு மேல் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீட்டிற்கே சென்று குடிமைப் பொருட்கள் வழங்குவதால் அரசுக்கு ரூ.30.16 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ள மக்கள் நலன் சார்ந்த இத்திட்டம். நலிவுற்ற பிரிவினரின் வாழ்வாதாரத்தை சிறப்புறச் செய்வதுடன் அவர்தம் உணவுப் பாதுகாப்பையும் உறுதிசெய்யும்.

    மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 12.8.2025 அன்று இத்திட்டத்தை சென்னையில் தொடங்கிவைக்கும் வேளையில், மாவட்டங்களில் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள். உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் கலந்துகொள்வார்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • திருமணமாகி 57 நாட்களே ஆன நிலையில், கணவரின் குடும்பத்தினர் மீது இளம்பெண் புகார்
    • விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இளம்பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

    விழுப்புரம் மாவட்டம், அரியலூர் திருக்கை கிராமத்தைச் சேர்ந்த பட்டதாரி பெண் ஐஸ்வர்யா, தனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு சித்திரவதைசெய்வதாகக் கூறி, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

    திருமணமாகி 57 நாட்களே ஆன நிலையில், கணவரின் குடும்பத்தினர் மீது காவல் நிலையம் மற்றும் சமூக நலத்துறை அலுவலகங்களில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று வேதனையுடன் தெரிவித்தார்.

    இந்நிலையில், ஐஸ்வர்யா என்ற இளம்பெண். துணை ஆட்சியர் காரின் முன் படுத்து உரண்டு அவரும் அவர் குடும்பத்தினரும் போராட்டம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    அவருடன் சமூக நலத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்து அனுப்பி வைத்தனர்.

    • சென்னை மெட்ரோ ரெயில் டிக்கெட்டில் ஆகஸ்ட் 31 வரை ஊபர் 50% அறிமுக தள்ளுபடியை வழங்குகிறது.
    • ஆட்டோ, கார் முன்பதிவு செய்யும் ஊபர் செயலிலேயே மெட்ரோ ரெயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்

    சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் மெட்ரோ பயணச்சீட்டுகளை தற்போது Uber App மூலம் எளிதாகபெரும் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது

    இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், UBER மற்றும் ONDC நெட்வொர்க் உடன் இணைந்து, UBER செயலி மூலம் மெட்ரோ இரயில் பயணத்திற்கான பயணச்சீட்டு பெரும் வசதியை, சென்னை மெட்ரோஇரயில் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் மெட்ரோஸில் இன்று (07.08.2025) சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் திரு. மு.அ.சித்திக், இ.ஆ.ப., அறிமுகப்படுத்தினார்.

    இன்று முதல், சென்னையில் உள்ள UBER பயனாளர்கள், தங்களது மெட்ரோ பயணங்களை திட்டமிடவும், QR அடிப்படையிலான பயணச்சீட்டுகளை பெறவும், நேரடி மெட்ரோ பயண தகவல்களையும் UBER செயலியில் தெரிந்துக்கொள்ளலாம். இதன் அறிமுக சலுகையாக 2025-ல் ஆகஸ்ட் மாதம் முழுவதும் UBER செயலியை பயன்படுத்தி மெட்ரோ பயணச்சீட்டுகளை வாங்கும் பயணிகள் பயணச்சீட்டுகளில் 50% தள்ளுபடியை பெறலாம். இந்த சலுகை UBER செயலியில் மட்டுமே கிடைக்கும். இது சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் வழங்கும் பிற மெட்ரோ பயணச்சீட்டு சேவை தளங்களில் பொருந்தாது. UBER செயலியைபயன்படுத்தி மெட்ரோ பயணச்சீட்டு பெறுவதற்கு UPI முறையே பயன்படுத்தப்படும். இது டிஜிட்டல் பயன்பாட்டை மேம்படுத்துகிறது.

    இந்நிகழ்ச்சியில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் இயக்குநர் திரு. மனோஜ் கோயல் (அமைப்புகள் மற்றும் இயக்கம்), தலைமை ஆலோசகர் திரு. கோபிநாத் மல்லையா, (இயக்கம் மற்றும்பராமரிப்பு), ஆலோசகர் திரு.கே.ஏ.மனோகரன் (தானியங்கி கட்டண வசூல் அமைப்பு மற்றும் தொழில்நுட்பம்), UBER நிறுவனத்தின் உயர் இயக்குநர் திரு. மணிகண்டன் தங்கரத்தினம், ONDC நிறுவனத்தின் உயர் துணைத் தலைவர் திரு.நிதின் நாயர், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் மற்றும் UBER நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.

    சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், Digital SVP, க்யுஆர் குறியீடு (OR Code) பயணச்சீட்டு, Whatsapp - (+91 83000 86000), Paytm App, PhonePe மற்றும் சிங்கார சென்னை அட்டை போன்ற பயணச்சீட்டுகளை பயன்படுத்தி மெட்ரோ இரயில்களில் பயணிப்பவர்களுக்கு 20% கட்டணத் தள்ளுபடியை வழங்குகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஐஏஎஸ் தீரஜ் குமாருக்கு உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை ஒதுக்கப்ட்டுள்ளது
    • ஐஏஎஸ் அமுதாவுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை ஒதுக்கப்ட்டுள்ளது

    தமிழ்நாடு அரசின் செய்தித் தொடர்பாளர்களாக ஐஏஎஸ் அதிகாரிகள் ராதாகிருஷ்ணன், ககன்தீப் சிங் பேடி, தீரஜ்குமார், அமுதா ஆகியோர் நியமனம். செய்யப்பட்டுள்ளனர்

    தமிழ்நாடு அரசுத் துறைகளின் முக்கிய தகவல்கள், திட்டங்கள் ஆகியவற்றை செய்தி ஊடகங்கள் மூலமாக சரியான நேரத்தில் பொதுமக்களுக்கு எடுத்துரைப்பதற்கும், பிற அரசு துறைகளுடன் ஒருங்கிணைப்பதற்கும் 4 ஐஏஎஸ் அதிகாரிகளை தமிழ்நாடு அரசு நியமித்துள்ளது.

    இந்நிலையில், தமிழ்நாட்டின் 4 மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை அரசு செய்தித் தொடர்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சத்யகுமார் மனு தாக்கல் செய்திருந்தார்.

    இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம், மனு தாக்கல் செய்த வழக்கறிஞர் சத்யகுமாருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டது.

    • பரிதாபங்கள் சேனலில் வெளியான 'சொசைட்டி பாவங்கள்' வீடியோ இணையத்தில் வைரலானது.
    • நெல்லை கவின் ஆணவக் கொலை தொடர்பாக இந்த வீடியோவை அவர்கள் வெளியிட்டிருந்தனர்.

    யூடியூப் தளத்தில் நகைச்சுவை வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானவர்கள் கோபி - சுதாகர். இவர்களின் பரிதாபங்கள் சேனலுக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.

    அண்மையில் பரிதாபங்கள் சேனலில் வெளியான 'சொசைட்டி பாவங்கள்' வீடியோ இணையத்தில் வைரலானது. நெல்லை கவின் ஆணவக் கொலை தொடர்பாக இந்த வீடியோவை அவர்கள் வெளியிட்டிருந்தனர். இந்த வீடியோவில் சாதிவெறிக்கு எதிராக நகைச்சுவையுடன் சமூக கருத்துக்களை பேசியிருந்தது அனைவரையும் ஈர்த்தது.

    அதே சமயம் இந்த் வீடியோ டெலிட் ஆவதற்குள் பார்த்துவிடுங்கள் என்று நெட்டிசன்கள் இந்த வீடியோவை இணையத்தில் வைரலாக்கினர். ஏற்கனவே திருப்பதி லட்டு தொடர்பான வீடியோ மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றநிலையில், சில மணிநேரங்களிலேயே அந்த வீடியோ நீக்கப்பட்டது. பாஜக கொடுத்த அழுத்தத்தின் விளைவாக அந்த வீடியோ நீக்கப்பட்டது என்று கூறப்பட்டது.

    இந்நிலையில், 'பரிதாபங்கள்' யூடியூப் சேனல் மீது கோவை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கோவையைச் சேர்ந்த வழக்கறிஞர் தனுஷ்கோடி இந்த புகாரை கொடுத்துள்ளார்.

    அந்த புகார் மனுவில், பரிதாபங்கள் யூடியூப் சேனலில் இரு சமூகத்தினர் இடையே பிரச்சினையை உருவாக்கும் வகையில் பல்வேறு கருத்துக்கள் இருப்பதாகவும் குறிப்பிட்ட சமூகத்தின் அடையாளங்களை குறிப்பிட்டு அந்த சமூகத்தை இழிவுபடுத்தும் வகையில் பேசியிருக்கிறார்கள். அந்த வீடியோவை யூடியூப் தளத்தில் இருந்து நீக்க வேண்டும். பரிதாபங்கள் சேனலை தடை செய்யவேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பெரும்பாலான பார்கள் அதிகாலை 3 மணி வரை செயல்படுகிறது.
    • ஒவ்வொரு முறையும் நீதிமன்றம் தலையிட்டு உத்தரவை வழங்க இயலாது என குறிப்பிட்டனர்.

    மதுரை:

    திருச்சி கருமண்டபத்தை சேர்ந்த ஸ்ரீனிவாசன் மதுரை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    திருச்சி மாவட்டத்தில் திருச்சி மாநகராட்சியின் பிரதான சாலைகளில் எப்.எல். 2 உரிமம் பெற்ற மதுக்கடைகள் மனமகிழ் மன்றங்கள் என்ற பெயரில் செயல்பட்டு வருகின்றன. தமிழகத்தில் உரிமம் இல்லாமல் சட்ட விரோதமாக இயங்கி வரும் எப்.எல். 2 பார்கள் தொடர்பாக ஆய்வு செய்வது அவசியம். எப்.எல். 2 உரிமம் பெற்ற பார்கள் காலை 11 மணி முதல் இரவு 11 மணி வரை மட்டுமே இயங்க அனுமதி உண்டு. ஆனால் பெரும்பாலான பார்கள் அதிகாலை 3 மணி வரை செயல்படுகிறது.

    அதோடு அங்கு சட்ட விரோதமான நடவடிக்கை களும் நடைபெறுவதால் ஏராளமான புகார்கள் வருகின்றன. இருப்பினும் காவல்துறையினர் மனமகிழ் மன்றங்களிடம் மாதந் தோறும் மாமுல் பெற்றுக் கொண்டு நடவடிக்கை எடுக்காமல் இருக்கின்றனர். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    ஆகவே எப்.எல். 2 உரிமம் பெற்ற பார்களில், ஐ.எம்.எப்.எல் மது வகைகளை உறுப்பினர் அல்லாதவருக்கு விற்பனை செய்வதை ஒழுங்குபடுத்த உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியன், மரிய கிளாட் அமர்வு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒவ்வொரு முறையும் நீதிமன்றம் தலையிட்டு உத்தரவை வழங்க இயலாது என குறிப்பிட்டனர்.

    மனுதாரர் தரப்பில், மது விற்பனையின் போது ரசீது வழங்குவதில்லை. சட்டவிரோத மது விற்பனை தொடர்பாக அதிகாரிகளிடம் முறையிட்டாலும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை" என குறிப்பிட்டார்

    அதையடுத்து நீதிபதிகள், "சட்டவிரோதமாக மது விற்பனை யாருக்கு செய்யப்பட்டாலும் அது குற்றம். அது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டிய மதுவிலக்கு துறையின் உதவி ஆணையர் நடவடிக்கை எடுப்பதில்லை என மனுதாரர் தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஆகவே திருச்சி மாவட்டத்தில் எப்.எல். 2 உரிமம் பெற்ற பார்களில் சட்டவிரோத மது விற்பனை செய்வது தொடர்பான புகார் குறித்து திருச்சி மாவட்ட மதுவிலக்கு துறையின் உதவி ஆணையர் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

    ×