என் மலர்
உள்ளூர் செய்திகள்
- பாதி நேரம் குல தொழிலை கற்றுக்கொள்ளவேண்டும் என்பது தான் அந்த திட்டம்.
- தேசிய கல்விக் கொள்கையின் படி மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று மத்திய கல்வி அமைச்சர் சொன்னார்.
சென்னை:
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக கட்டிடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநில கல்விக்கொள்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அப்போது துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் அரசு முதன்மைச் செயலாளர் சந்திரமோகன் உடன் இருந்தனர்.
நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-
நமக்கு கல்வி உரிமை தடுக்கப்பட்டது. அப்படி தடுக்கப்பட்ட கல்வி உரிமையை மீண்டும் பெற்றுக்கொடுப்பதற்காக உருவாகுன இயக்கம் தான் திராவிட இயக்கம். அப்படி போராடி பெற்ற கல்வியை எப்படியாவது பறிக்கலாம் என்று அப்போது முதல் இப்போது வரை தொடர்ந்து சூழ்ச்சிகளை பலர் செய்துக்கொண்டே வருகிறார்கள்.
இட ஒதுக்கீட்டிற்கு எதிர்ப்பு, குல கல்வி திட்டம், மும்மொழிக் கொள்கை, புதிய கல்வி கொள்கை, நீட் தேர்வு என பல வழிகளில் நம்முடைய கல்வி உரிமையை சிதைக்க முயற்சிகள் நடந்து கொண்டு இருக்கிறது. ஒவ்வொரு காலக்கட்டத்திலும் அந்த தடைகளையெல்லாம் தகர்த்து எறிந்து தான் நாம் (தமிழ்நாடு) இன்றைக்கு இந்த அளவுக்கு உயர்ந்திருக்கிறோம். குல கல்வி திட்டம் என்று ஒன்று வந்தது. மாணவர்கள் பாதி நேரம் படிக்க வேண்டும். பாதி நேரம் குல தொழிலை கற்றுக்கொள்ளவேண்டும் என்பது தான் அந்த திட்டம். அந்த திட்டத்தை எதிர்த்து தந்தை பெரியார் மிகப்பெரிய போராட்டத்தை நடத்தினார். அதன்பிறகு தான் அந்த குலகல்வி திட்டம் தமிழ்நாட்டில் இருந்து ஒழிந்தது.
இப்போது புதிய கல்விக்கொள்கை என்கிற பெயரில் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்களை கல்வியில் இருந்து வெளியேற்றுகின்ற அந்த திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்திருக்கிறது. தமிழ்நாட்டில் மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையை அனுமதிக்க மாட்டோம் என இன்னொரு வாழும் பெரியாராக போர் முரசு கொட்டியவர்தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். உங்களுடைய கல்விக்கொள்கையை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழ்நாட்டிற்கு என்று நாங்கள் தனியா கல்விக்கொள்கையை ஏற்றுக்கொள்கிறோம் என்று தைரியமா, துணிச்சலா சொன்னவர் தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். மதம் பிடித்து தமிழ்நாட்டின் கல்வியை அழிக்க துடிப்பவர்களை அடக்குவதற்கான அங்குசம்தான் மாநில கல்வி கொள்கை. தேசிய கல்விக் கொள்கையின் படி மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று மத்திய கல்வி அமைச்சர் சொன்னார். மும்மொழிக்கொள்கையை ஏற்றுக்கொண்டால் தான் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய ரூ.2600 கோடியை தருவோம் என்று வெளிப்படையாகவே மிரட்டினார்கள். 2000 ஆயிரம் இல்ல நீங்க 10,000 கோடி தந்தாலும் தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம் என தைரியமாக சொன்ன ஒரே முதலமைச்சர் நம்முடைய முதலமைச்சர். எந்த ஒரு மொழியாக இருந்தாலும் அதை கட்டாயப்படுத்தி திணிப்பதை தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதுதான் வரலாறு என்றார்.
- விஜயகாந்த் உருவப்படத்திற்கு பிரேமலதா மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
- மாலை 4 மணி அளவில் உத்தனப்பள்ளியில் மக்களை சந்தித்து பேசுகிறார்.
ஓசூர்:
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்குவதால் தி.மு.க., அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி, பா.ம.க. அன்புமணி ராமதாஸ் என ஆகிய கட்சியினர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அரசியல் களம் சூடுப்பிடித்துள்ளது.
அந்த வரிசையில், தே.மு.தி.க.வும் தனது கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் "உள்ளம் தேடி இல்லம் நாடி" என்ற சுற்றுபயணம் தமிழகம் முழுவதும் மேற்கொண்டு வருகிறார்.
அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் தேன்கனிக்கோட்டை சாலையில் தின்னூர் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று காலை பூத் கமிட்டி நிர்வாகிகளுடன் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆலோசனை நடத்தினார்.
இதில், பொருளாளர் எல்.கே.சுதீஷ், அவைத்தலைவர் இளங்கோவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக, விஜயகாந்த் உருவப்படத்திற்கு பிரேமலதா மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அதனை முடித்து விட்டு அவர் மாலை 4 மணி அளவில் உத்தனப்பள்ளியில் மக்களை சந்தித்து பேசுகிறார். பின்னர் அவர் ராயக்கோட்டை, சூளகிரி, நெடுசாலை, வேப்பனப்பள்ளி ஆகிய இடங்களில் மக்களை சந்தித்து பேசுகிறார்.
பின்னர் அவர் இரவு தருமபுரி மாவட்டம், காரிமங்கலத்தில் தங்குகிறார். இதையடுத்து நாளை மாலை 4 மணி அளவில் பென்னாகரத்தில் மக்களை சந்தித்து பிரேமலதா பேசுகிறார். மறுநாள் மாலை 4 மணி அளவில் அவர் தருமபுரியில் மக்களை சந்தித்து பேசுகிறார்.
பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் விழாவிற்கான ஏற்பாடுகளை மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
- தொலைநோக்கு பார்வையுடன் மாநில கல்வி கொள்கை கொண்டு வரப்பட்டுள்ளது.
- இன்றைய சூழ்நிலைக்கு எந்த அறிவியல் பாடங்கள் தேவையோ அதையும் கொண்டு வந்துள்ளோம்.
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக கட்டிடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநில கல்விக்கொள்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
இந்நிலையில் மாநில கல்விக்கொள்கை குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* எல்லோருக்கும் எல்லாம் என்பதிலிருந்து பிறந்தது தான் மாநில கல்வி கொள்கை.
* இருமொழி கொள்கை தான் என்பது மாநில கல்வி கொள்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
* எல்லாவற்றையும் உள்ளடக்கிய அனைவருக்குமான கல்வி என்பதே திட்டம்.
* வாழ்க்கை மதிப்பீடுகள், தொலைநோக்கு பார்வை உள்ளடக்கியதாக மாநில கல்வி கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.
* அனைவருக்குமான கல்வியை வழங்குவதற்கான கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும்.
* தொலைநோக்கு பார்வையுடன் மாநில கல்வி கொள்கை கொண்டு வரப்பட்டுள்ளது.
* அச்சத்துடன் மாணவர்கள் பயிலும் நிலை ஏற்படக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளோம்.
* உடற்கல்வி உள்ளிட்ட விஷயங்களையும் பார்த்து பார்த்து கொண்டு வந்துள்ளோம்.
* மாநில கல்விக் கொள்கை காலத்திற்கு ஏற்றாற்போல் வருடந்தோறும் மாற்றப்படும்.
* அச்சம் நிறைந்த தேர்வு என்ற நிலையை மாற்றி மாணவர்களின் திறனை உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையில் மாநில கல்விக்கொள்கை கொண்டு வரப்பட்டுள்ளது.
* இன்றைய சூழ்நிலைக்கு எந்த அறிவியல் பாடங்கள் தேவையோ அதையும் கொண்டு வந்துள்ளோம்.
* 500 பள்ளிகளை வெற்றி பள்ளிகளாக கொண்டு வர உள்ளோம்.
* AI, Robotics போன்ற பாடத்திட்டங்களையும் கொண்டு வர வேண்டிய தேவை உள்ளது.
* எத்தகைய பின்னணி கொண்ட மாணவர்களும் எதிர்காலத்தில் எந்த கல்லூரியில் எந்த நிலை அடைய வேண்டும் என நினைக்கும் வகையில் மாநில கல்விக்கொள்கை கொண்டு வரப்பட்டுள்ளது.
* 9-ம் வகுப்பு படிக்கும்போதே மாணவ-மாணவிகள் கெரியர் வழிகாட்டி பெற்று எதிர்காலத்தை தீர்மானிக்கும் வகையில் கல்வித்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- சி.பி.ஐ. அதிகாரிகள் போலீசார் அளித்த தகவல்களை வீடியோ பதிவும் செய்துகொண்டனர்.
- அஜித் குமாரை கொடூரமாக தாக்க உத்தரவிட்டது யார் என்பது தொடர்பாக பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் தரிசனத்திற்கு வந்த நிகிதா என்ற பெண் காரில் வைத்திருந்த நகை மாயமான புகாரில் அங்கு பணியாற்றிய காவலாளி அஜித்குமார் குற்றப்பிரிவு தனிப்படை போலீசாரின் விசாரணையில் உயிரிழந்தார்.
இந்த வழக்கில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்ட போலீஸ்காரர்கள் கண்ணன், ஆனந்த், பிரபு, சங்கர் மணிகண்டன், ராஜா ஆகிய ஐந்து பேரையும் சி.பி.ஐ. அதிகாரிகள் இரண்டு நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.
அப்போது அவர்களிடம் அஜித் குமாரை கொடூரமாக தாக்க உத்தரவிட்டது யார் என்பது தொடர்பாக பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. மேலும் அஜித் குமார் விசாரணைக்காக எங்கெங்கு அழைத்து செல்லப்பட்டார், அப்போது என்ன நடந்தது? எனவும் விசாரித்த சி.பி.ஐ. அதிகாரிகள் போலீசார் அளித்த தகவல்களை வீடியோ பதிவும் செய்துகொண்டனர்.
கடந்த 25 நாட்களாக நடைபெற்றுவரும் சி.பி.ஐ. விசாரணையில் அஜித்குமார் கொடூரமாக அடித்து கொலை செய்யப்பட்டது தொடர்பாக ஏராளமான ஆதாரங்களை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர். முன்னதாக அஜித்குமாரின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அவரது உடலில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் காயங்கள் இருந்ததாகவும், அவரை சித்ரவதை செய்ய மிளகாய் பொடி பயன்படுத்தப்பட்டு இருந்ததும் தெரியவந்தது.
இந்தநிலையில் சி.பி.ஐ. விசாரணையில், அஜித் குமாரை சித்ரவதை செய்ய மிளகாய்ப்பொடி எங்கு, எப்போது வாங்கப்பட்டது என்பது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. இதில் மடப்புரம் கோவிலின் கார் பார்க்கிங் அருகே உள்ள ஒரு மளிகைக் கடையில், அஜித் குமாரின் நண்பர் ஒருவர், காவல்துறையினர் கூறியதன் அடிப்படையில், மிளகாய்ப்பொடியை வாங்கி கொடுத்தது தெரியவந்துள்ளது. இந்த தகவல் விசாரணையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- மாநில கல்விக்கொள்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
- 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே பொதுத்தேர்வு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக கட்டிடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநில கல்விக்கொள்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
மாநில கல்விக்கொள்கையின்படி, தமிழகத்தில் 11-ம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு கிடையாது என்றும் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே பொதுத்தேர்வு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 முதல் 8-ம் வகுப்பு வரை தடையற்ற தேர்ச்சி உறுதி செய்யப்படும். நடப்பு கல்வியாண்டே 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதால் மாணவர்களின் அழுத்தம் குறையும். மேலும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு மாணவர்கள் தயாராக வாய்ப்பாக இருக்கும் என்ற கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
- எந்த மாநிலத்திலும் தமிழகத்தை போல் மாணவர்களுக்கு பாராட்டு விழா நடத்தியதில்லை.
- முதன்மை உயர்கல்வி நிறுவனங்களில் தமிழக மாணவர்கள் அதிக அளவில் நுழைய வேண்டும்.
சென்னை:
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக கட்டிடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநில கல்விக்கொள்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அப்போது துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் அரசு முதன்மைச் செயலாளர் சந்திரமோகன் உடன் இருந்தனர்.
மாநில கல்விக்கொள்கையை வெளியிட்ட பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
* பள்ளி மாணவர்களையும், இளைஞர்களையும் பார்த்தாலே ஒரு புதிய ஆற்றல் வந்துவிடும்.
* மாணவர்களை சந்திக்கும் ஒவ்வொரு முறையும் கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்து கூறி வருகிறேன்.
* இளைய பருவத்தில் என்ஜாயும் பண்ணலாம், நன்றாகப்படித்து மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாகவும் வரலாம்.
* கொரோனா காலத்தில் கல்வி பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவே இல்லம் தேடி கல்வி திட்டம் வழங்கினோம்.
* பள்ளிக்கல்வித்துறை வரலாற்றில் இது சிறப்பு வாய்ந்த விழா.
* எந்த மாநிலத்திலும் தமிழகத்தை போல் மாணவர்களுக்கு பாராட்டு விழா நடத்தியதில்லை.
* திராவிட மாடல் அரசில் அனைத்து மாணவர்களும் உயர்கல்வி பெற வேண்டும் என்பதற்காகவே இந்த பாராட்டு விழா.
* திராவிட மாடல் அரசின் தாய்மை உணர்வை காட்டுவதே இந்த பாராட்டு விழா.
* 100 சதவீதம் உயர்கல்வி கற்க வேண்டும் என்பதே நமது இலக்கு. 100 சதவீதம் மாணவர்கள் உயர்கல்வி பெற்றனர் என்ற இலங்கை எட்டுவதற்கு சாதித்த மாணவர்கள் உதவ வேண்டும்.
* முதன்மை உயர்கல்வி நிறுவனங்களில் தமிழக மாணவர்கள் அதிக அளவில் நுழைய வேண்டும்.
* மாநில கல்விக் கொள்கையை உருவாக்கிய ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையிலான குழுவுக்கு நன்றி.
* தொலைநோக்கு பார்வையோடு மாநில கல்வி கொள்கையை உருவாக்கி உள்ளோம்.
* காடு எதுவாக இருந்தாலும் சிங்கம்தான் அங்கே ராஜா, அதுபோல் எளிய பின்னணியில் இருந்த வந்த நீங்கள் தான் ஹீரோ.
* மனப்பாடம் பண்ணும் மாணவர்கள் அல்லாமல் சிந்திக்கும் மாணவர்களை உருவாக்க உள்ளோம்.
* அரசு பள்ளிகள் வறுமையின் அடையாளம் அல்ல, பெருமையின் அடையாளம் என நெஞ்சை நிமிர்த்தி பேச செய்த மாணவர்களுக்கு நன்றி.
* தமிழக பள்ளிகளில் தமிழ், ஆங்கிலம் என இரு மொழிக்கொள்கையே கடைப்பிடிக்கப்படும். தமிழும், ஆங்கிலமும் என இருமொழிக் கொள்கை தான் நமது உறுதியான கொள்கை.
* கல்வித்துறையில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வர உள்ளோம்.
* மதிப்பெண்களை நோக்கி அல்ல, மதிப்பீடுகளை நோக்கிய பயணமாக அமைக்கப்படும்.
* பிற்போக்கு சிந்தனைகள் பள்ளிகளில் நுழைய ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்றார்.
- வாழை மரங்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகளுக்கு லட்ச கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
- வாழை மரத்தில் உள்ள வாழைத்தார்களை இன்று விவசாயிகள் பரிசல் மூலம் சென்று பறித்து வருகின்றனர்.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 105 அடியை உள்ளடக்கியுள்ளது. அணையின் நீர்மட்டம் 95 அடியை கடந்ததால் அணை நீர்த்தேக்க பகுதியை ஒட்டி உள்ள சித்தன் குட்டை, கனரா மொக்கை, வால் கரடு மற்றும் ஜே ஜே நகர் பகுதியில் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கும். இப்பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் வாழை மற்றும் காய்கறி பயிர் சாகுபடி செய்யப்படுவது வழக்கம்.
7 மாதங்களுக்கு முன் பயிரிடப்பட்ட கதளி, நேந்திரம் ரக வாழை, தற்போது குலை தள்ளி அறுவடைக்கு தயாராக உள்ளன. இந்நிலையில் தற்போது பவானி நீர்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்ததால் பவானி சாகர் அணையின் நீர்மட்டம் 102 அடியை நெருங்கியுள்ளது. இதனால் சிந்தன் குட்டை, ஜே.ஜே நகர், புதுக்காடு, கன்ரா மொக்கை பகுதிகளில் சுமார் 4 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் நீரில் மூழ்கி விட்டதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் வாழை மரங்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகளுக்கு லட்ச கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தொடர்ந்து ஒரு வாரத்திற்கும் மேல வாழை மரங்களை நீர் சூழ்ந்துள்ளது. இதனால் தொடர்ந்து நீரில் இருக்கும் வாழை மரங்கள் அழுகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வாழை மரத்தில் உள்ள வாழைத்தார்களை இன்று விவசாயிகள் பரிசல் மூலம் சென்று பறித்து வருகின்றனர்.
- கடந்த சில வாரங்களாக தக்காளி வரத்து குறைந்து வருகிறது.
- தமிழக மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருவதால் தக்காளி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை கடந்த மாதம் முதலே உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் உள் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருவதால் தக்காளி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் 20 ரூபாய்க்கு விற்கப்பட்ட தக்காளி, 50 ரூபாய் வரை உயர்ந்தது.
தக்காளி விலை உயர்வு தொடர்பாக கோயம்பேடு சந்தை காய்கறி வியாபாரிகளிடம் கேட்டபோது, "கடந்த சில வாரங்களாக தக்காளி வரத்து குறைந்து வருகிறது. தமிழக மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருவதால் தக்காளி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.
இந்நிலையில், வரத்து குறைவு காரணமாக சென்னையில் ஒரே நாளில் தக்காளி விலை கிலோவுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.45-க்கு விற்பனையாகிறது. சில்லறை விற்பனையில் ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கு விற்பனையாகிறது.
மொத்த விற்பனை:
ஒரு கிலோ தக்காளி விலை: ரூ. 45
முந்தைய விலையுடன் ஒப்பிடுகையில் உயர்வு: ரூ. 10
சில்லறை விற்பனை:
ஒரு கிலோ தக்காளி விலை: ரூ. 60
விலை உயர்வுக்குக் காரணம்: தக்காளி வரத்து குறைவு
தக்காளி விலை உயர்வால் ஏழை, நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- எழுத்தாளர்களுக்கு வீடு ஒதுக்கீடு செய்தது என்பது உணர்வுபூர்வமான விஷயம், இது ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு தெரியாது.
- கலைஞர் இதை ஒருபோதும் அனுமதித்திருக்க மாட்டார்.
'கலைஞரின் கனவு இல்லம் திட்டம்' என்ற பெயரில், தமிழ் எழுத்தாளர்களுக்கு வீடு வழங்கும் திட்டம் 2022ல் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ், சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர்களுக்கு வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், ஏற்கனவே வீட்டுவசதி வாரியத்தில் வீடு வாங்கியவர்கள் இந்தத் திட்டத்தின் கீழ் வீடு பெற தகுதியில்லை என்று அரசு ஒரு திருத்த அரசாணையை பிறப்பித்தது. இதன் காரணமாக, ஏற்கனவே வீடு ஒதுக்கீடு செய்யப்பட்ட பல எழுத்தாளர்களின் வீடுகள் ரத்து செய்யப்பட்டன.
இந்த ரத்து உத்தரவை எதிர்த்து கவிஞர் திலகவதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, அரசின் முடிவுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும், "தமிழுக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தவர்களை மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தனது வாழ்நாள் இறுதி வரை கவுரவப்படுத்தினார். தற்போது அரசு பிறப்பித்துள்ள திருத்த அரசாணை, கருணாநிதியின் விருப்பத்துக்கு முரணானது" என்றும் கருத்து தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்க தொடர்பாக ஐகோர்ட் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கூறுகையில்,
தமிழகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஒரு இணை அரசாங்கத்தை நடத்தி வருகின்றனர். ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இணையான ஒரு அரசாங்கத்தை நடத்துவது துரதிஷ்டவசமானது.
எழுத்தாளர்களுக்கு வீடு ஒதுக்கீடு செய்தது என்பது உணர்வுபூர்வமான விஷயம், இது ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு தெரியாது. கலைஞர் இதை ஒருபோதும் அனுமதித்திருக்க மாட்டார்.
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளை இணை அரசாங்கம் நடத்த அனுமதித்தால் அது பெரும் சிக்கலை ஏற்படுத்தி விடும் என்று நீதிபதி எச்சரிக்கை விடுத்தார்.
- விஜய் நடந்து சென்று தொண்டர்களை சந்திப்பதற்கு 800 அடி தூரத்திற்கு நடைமேடை அமைக்கப்பட்டுள்ளது.
- மாநாட்டில் ஆண்கள் 1,20,000 பேரும், பெண்கள் 25 ஆயிரம் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரையில் வருகிற 21-ந்தேதி நடைபெற உள்ள தமிழக வெற்றிக்கழகத்தின் 2-வது மாநில மாநாட்டிற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.
மாநாட்டில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நடந்து சென்று தொண்டர்களை சந்திப்பதற்கு 800 அடி தூரத்திற்கு நடைமேடை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் தெற்கு திசை பார்த்து அமைக்கப்பட்டிருக்கும் தமிழக வெற்றிக்கழகத்தின் மாநாட்டு மேடை 200 அடி நீளமும், 60 அடி அகலமும் கொண்டுள்ளது.
இதனிடையே, மாநாட்டில் பங்கேற்பவர்களுக்கு தமிழக வெற்றிக்கழகம் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி, மாநில மாநாட்டில் குழந்தைகள், கர்ப்பிணிகளுக்கு அனுமதியில்லை என்றும் மாநாட்டில் கலந்து கொள்ளும் தொண்டர்களுக்கு பாஸ் வழங்கப்போவதில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
த.வெ.க. மாநாடு முன்னேற்பாடு பணிகள்:-
* மாநாட்டில் ஆண்கள் 1,20,000 பேரும், பெண்கள் 25 ஆயிரம் பங்கேற்பார்கள் என எதிர்பார்ப்பு.
* மாநாடு நடைபெறும் இடத்தில் 100-க்கும் மேற்பட்ட தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது.
* 400 தற்காலிக கழிப்பறை வசதிகள்.
* மாநாடு நடைபெறும் இடத்தில் இருந்து உள்ளேயும், வெளியேயும் செல்வதற்காக 18 வழித்தடங்கள்.
* மாநாட்டு திடலில் தேவைக்கேற்ப சிசிடிவி கேமராக்கள், 450 ஒலிபெருக்கிள், 20 ஆயிரம் மின்விளக்குகள்.
* மருத்துவகுழு மற்றும் ஆம்புலன்ஸ் வசதிக்காக சுகாதாரத்துறையிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
- 'ஸ்போக்கன் இங்கிலீஷ்' தவிர 'ஸ்போக்கன் தமிழ்' மீது முதன்மையாக கவனம் செலுத்த வேண்டும்.
- அங்கன்வாடி மையங்களுக்கு 'தாய்-குழந்தை பராமரிப்பு மையங்கள்' என பெயரிட வேண்டும்.
சென்னை:
தமிழக அரசின் மாநில கல்விக் கொள்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னையில் வெளியிட்டார்.
மத்திய அரசின் தேசியக் கல்விக் கொள்கைக்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதற்கு மாற்றாக மாநிலத்துக்கு என தனியாக கல்விக் கொள்கை உருவாக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருந்தார்.
இந்த கல்விக் கொள்கையை வடிவமைக்க ஓய்வுபெற்ற நீதிபதி த.முருகேசன் தலைமையில் 14 பேர் கொண்ட குழு 2022-ம் ஆண்டு அமைக்கப்பட்டிருந்தது.
இந்த குழுவினர் பல்கலைக் கழக துணை வேந்தர்கள், கல்வியாளர்கள், ஆசிரியர்கள், தனியார் பள்ளி நிர்வாகிகள், பெற்றோர் உள்பட பல்வேறு தரப்பினரிடம் கருத்துக்கள் கேட்டறிந்து கல்விக் கொள்கையை வடிவமைத்தனர்.
அதன்படி சுமார் 650 பக்கங்கள் கொண்ட மாநிலக் கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கை 2023-ம் ஆண்டு அக்டோபரில் தயாரானது. ஆனாலும் வெள்ளப் பாதிப்புகள், பாராளுமன்றத் தேர்தல் பணிகளால் வரைவு அறிக்கையை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது. அதன் பின் மாநில கல்விக் கொள்கை அறிக்கையை ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையிலான குழுவினர் 2024 ஜூலை 1-ந்தேதி தமிழக அரசிடம் சமர்ப்பித்தனர்.
பள்ளி கல்வித்துறைக்கான தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கையை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக கட்டிடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
அப்போது துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் அரசு முதன்மைச் செயலாளர் சந்திரமோகன் உடன் இருந்தனர்.
மாநில பள்ளி கல்விக்கொள்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-
கல்விக்கொள்கை மற்றும் மொழி
மொழி: பள்ளிக்கல்வியில் தமிழ் முதல் மொழியாக இருக்க வேண்டும். தொடக்கநிலை முதல் பல்கலைக்கழகம் வரை தமிழ் வழிக்கல்வியை வழங்குதல் அவசியம்.
இருமொழிக்கொள்கை: தமிழ்நாட்டில் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இருமொழிக்கொள்கையை பின்பற்ற வேண்டும்.
'ஸ்போக்கன் தமிழ்': 'ஸ்போக்கன் இங்கிலீஷ்' போலவே 'ஸ்போக்கன் தமிழ்' மீதும் கவனம் செலுத்த வேண்டும்.
தேர்வு மற்றும் மதிப்பெண்
பொதுத்தேர்வு: 3, 5, மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள் இருக்கக் கூடாது.
நீட்: நீட் தேர்வு இருக்கக் கூடாது. நீட் உள்ளிட்ட தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கும் மையங்கள் மற்றும் தனியார் கல்வி நிலையங்கள் விளம்பரப்படுத்துவதை தடை செய்ய வேண்டும்.
11 மற்றும் 12-ஆம் வகுப்பு: 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர வேண்டும். கல்லூரி சேர்க்கையின்போது 12-ஆம் வகுப்பு மதிப்பெண்களுடன் 11-ஆம் வகுப்பு மதிப்பெண்களும் இடம்பெற வேண்டும்.
நிர்வாகம் மற்றும் கட்டணம்
மாநிலப் பட்டியல்: கல்வி, மாநிலப் பட்டியலில் வர வேண்டும்.
கட்டணக் குழு: சி.பி.எஸ்.இ மற்றும் சுயநிதி என்ஜினீயரிங் கல்லூரிகளுக்கான கட்டணங்களை சீரமைக்க ஒரு குழு அமைக்கப்பட வேண்டும்.
கண்காணிப்பு: தனியார் விளையாட்டுப் பள்ளிகள், முன் தொடக்கப் பள்ளிகள் போன்றவற்றை கண்காணிக்க விரிவான ஒழுங்குமுறை உருவாக்கப்பட வேண்டும்.
மாணவர் சேர்க்கை
வயது வரம்பு: 5 வயது பூர்த்தியானவர்கள் 1-ஆம் வகுப்பில் சேரலாம்.
இடஒதுக்கீடு: இரு பெற்றோர்களையும் இழந்த மாணவர்களுக்கு உயர் கல்வியில் 1% இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்.
உள்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சி
அங்கன்வாடி மையங்கள்: அங்கன்வாடி மையங்களுக்கு 'தாய்-குழந்தை பராமரிப்பு மையங்கள்' என பெயரிட வேண்டும்.
பல்கலைக்கழகங்கள்:
எம்.ஜி.ஆர்., அண்ணா, மற்றும் தமிழ் பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சி மையங்கள் அமைக்க வேண்டும்.
தமிழ் பல்கலைக்கழகத்தை சர்வதேச தரத்திற்கு உயர்த்த வேண்டும்.
தமிழ்ச்சங்கம் நடத்தும் கல்லூரிகளுக்கு தமிழ் ஆய்வு மற்றும் ஆராய்ச்சிக்கு போதிய நிதி ஒதுக்க வேண்டும்.
கிராமப்புறப் பள்ளிகள்: கிராமப்புற மற்றும் பழங்குடியினர் பகுதிகளில் உள்ள குழந்தைகளுக்கு அதிக விளையாட்டு வசதிகள், முறையான பயிற்சி, விளையாட்டு மைதானங்கள் மற்றும் விளையாட்டுப் பொருட்கள் வழங்கப்பட வேண்டும்.
சமூக பிரச்சனைகள்
போதைப்பொருள் ஒழிப்பு: ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆட்சியர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட வேண்டும். அக்குழுவில் மனநல ஆலோசகர், சுகாதார அதிகாரி, போலீஸ் அதிகாரி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவன உறுப்பினர் ஆகியோர் இடம்பெறுவர்.
- நீர்மட்டம் 119.06 அடியாகவும், நீர் இருப்பு 91.97 டி.எம்.சி.யாகவும் உள்ளது.
- அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு 16,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
மேட்டூர்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சற்று அதிகரித்துள்ளது. நேற்று மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 17,906 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை வினாடிக்கு 21,135 கன அடியாக அதிகரித்துள்ளது.
நீர்மட்டம் 119.06 அடியாகவும், நீர் இருப்பு 91.97 டி.எம்.சி.யாகவும் உள்ளது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு 16,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதேபோல் கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 500 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.






