என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • திருச்செந்தூரில் தைப்பூச திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும்.
    • பாதயாத்திரையாக பக்தர்கள் அலகு குத்தியும், காவடி எடுத்தும் தரிசனம்.

    திருச்செந்தூர்:

    அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுகிறது.

    அந்த வகையில் தைப்பூச திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். இதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து பாதயாத்திரையாகவும், வாகனங்களிலும் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்வார்கள். இ்ந்த ஆண்டு கோவிலில் தைப்பூச திருவிழா நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது.

    இதற்கிடையே, சுவாமி சண்முகரை கடலில் கண்டெடுத்த 369-ம் ஆண்டு தினமான இன்று (புதன்கிழமை) அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது.

    காலை 10 மணிக்கு உச்சிகால அபிஷேகம், சுவாமி சண்முகருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரமாகி, தீபாராதனை நடைபெற்றது. மாலையில் 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனையாகி, 4.30 மணிக்கு சுவாமி அலைவாயுகந்த பெருமான் கோவிலில் இருந்து புறப்பட்டு வீதி உலா வந்து சேர்கிறார்.

    தைப்பூசத்தை முன்னிட்டு நாளை கோவில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 7.30 மணிக்கு தீர்த்தவாரியும், காலை 10 மணிக்கு உச்சிகால அபிஷேகமும், உச்சிகால தீபாராதனை முடிந்த பிறகு சுவாமி அலைவாயுகந்த பெருமான் வடக்குரதவீதியில் உள்ள தைப்பூச மண்டபத்திற்கு சென்று, அங்கு சுவாமிக்கு அபிஷேக, அலங்காரம் நடைபெறுகிறது. தொடர்ந்து சுவாமி தனி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தவாறு கோவில் சேர்கிறார்.

     தைப்பூச திருவிழாவிற்கு தமிழகத்தின் தென்பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் பாதயாத்திரையாகவும், அலகு குத்தியும், காவடி எடுத்து வந்தும் தரிசனம் செய்து செல்கின்றனர்.

    நாளை நடக்கும் தைப்பூசம் திருவிழாவிற்கு இன்று காலையில் இருந்தே ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாகவும், வாகனங்களிலும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர். இதனால் கோவில் வளாகம், கடற்கரை பகுதிகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.

    • நீர்வரத்துக்கு ஏற்ப அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.
    • இன்று காலை பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு 1369 கனஅடியாக உயர்த்தப்பட்டது.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் மதுரை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. கடந்த சில நாட்களாக தொடர் மழை காரணமாக அணையின் நீர்மட்டம் அதன் முழுகொள்ளளவான 71 அடியை எட்டியது.

    அதன்பின்னர் நீர்வரத்துக்கு ஏற்ப அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் கடந்த 18 நாட்களாக அணையின் நீர் மட்டம் 71 அடியில் நீடித்தது. இந்தநிலையில் இன்று காலை அணையின் நீர்மட்டம் சற்று சரிந்து 70.85 அடியாக உள்ளது. அணைக்கு 916 கனஅடிநீர் வருகிறது. நேற்று 1169 கனஅடிநீர் திறக்கப்பட்டது. இன்று காலை பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு 1369 கனஅடியாக உயர்த்தப்பட்டது.

    முல்லை பெரியாறு அணையின்நீர்மட்டம் 138 அடியாக உள்ளது. அணைக்கு 282 கனஅடிநீர் வருகிறது. அணையிலிருந்து 1000 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55.60 அடியாக உள்ளது. 56 கனஅடிநீர் வருகிறது. 80 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின்நீர்மட்டம் 126.28 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 59 கனஅடிநீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. மழை எங்கும் இல்லை.

    • சத்திய ஞான சபையில் ஆண்டுதோறும் தைப்பூச விழா நடைபெறும்.
    • ஞானசபையில் கொடி ஏற்றம் நடந்தது.

    வடலூர்:

    கடலூர் மாவட்டம் வடலூரில் அருட்பிரகாச வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் ஆண்டுதோறும் நடைபெறும் தைப்பூச விழா இந்த ஆண்டு 153-வது ஆண்டு தைப்பூச விழாவாக நடைபெறுகிறது. இதன் தொடக்கமாக கடந்த 17-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை தருமச்சாலையில் மகா மந்திரம் ஓதுதல் நடைபெற்றது. 20-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை ஞான சபையில் அருட்பா முற்றோதல் நடைபெற்றது.

    இன்று காலை 5 மணி மணிக்கு அகவல் பாராயணமும், 7.30 மணிக்கு வள்ளலார் பிறந்த மருதூர், தண்ணீரால் விளக்கு எரித்த கருங்குழி மற்றும் வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப் பத்திலும், தருமச்சாலையில் சன்மார்க்க கொடி ஏற்றமும், காலை 10 மணிக்கு ஞானசபையில் கொடி ஏற்றமும் நடந்தது.

    நாளை (25-ந்தேதி) தைப்பூச திருவிழா வையொட்டி காலை 6 மணி, 10 மணி, பகல் 1 மணி, இரவு 7 மணி, 10 மணி, மறுநாள் (வெள்ளிகிழமை) காலை 5.30 மணி என 6 காலம், 7 திரை விலக்கி ஜோதிதரிசனம் நடக்கிறது.

    இந்த நிகழ்ச்சியில் தமிழகம் மற்றும் உலகெங்கும் வாழும் தமிழர்கள் லட்சக்கணக்கான சன்மார்க்க அன்பர்கள் திரண்டு வருவது வழக்கம். இதற்காக தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பபடுகிறது. வருகிற 27-ந் தேதி (சனிக்கிழமை) பகல் 12 மணி முதல் மாலை 6 மணி வரை மேட்டுக்குப்பத்தில் உள்ள, வள்ளலார் சித்திப்பெற்ற திருஅறை தரிசனம் நடைபெறுகிறது.

    முன்னதாக வடலூர் ஞானசபையில் இருந்து வள்ளலார் பயன்படுத்திய பொருட்கள் அடங்கிய பெட்டியை பூக்களால் அலங்கரித்து மேளதாளம் முழங்க வள்ளலார் சித்தி பெற்ற திருஅறை உள்ள மேட்டுக்குப்பம் கொண்டு செல்லப்படும். அங்கு பக்தர்கள் வழிபாட்டுக்கு பின்னர் மீண்டும் வடலூர் கொண்டு வரப்படும்.

    • கடந்த ஒரு ஆண்டுகளாக நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தது தெரிய வந்தது.
    • போலீசார் மருத்துவம் படிக்காமல் சிகிச்சை அளித்த போலி டாக்டர் தேவராஜ் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    கோவை:

    கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள நீலிக்கோணாம்பாளையம் ரோட்டில் ஒருவர் உரிய மருத்துவ படிப்பு இல்லாமல் கிளினிக் வைத்து நடத்தி வருவதாக கோவை மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் ராஜசேகரனுக்கு தகவல் வந்தது. பின்னர் இது குறித்து சிங்காநல்லூர் போலீசார் மற்றும் கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதனையடுத்து மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் ராஜசேகரன் தலைமையில் அதிகாரிகள் மற்றும் போலீசார் தகவல் வந்த கிளினிக்கிற்கு விரைந்து சென்றனர். அந்த கிளினிக்கிற்குள் நோயாளிகளை போல போலீசார் நுழைந்தனர். அப்போது தேவராஜ் (வயது 54) என்பவர் அங்கு சிகிச்சை அளித்துக் கொண்டு இருந்தார். உடனடியாக விரைந்து சென்ற இணை இயக்குனர் தலைமையிலான குழுவினர் மருத்துவம் பார்த்த தேவராஜிடம் மருத்துவம் படித்தற்கான சான்றிதழை கேட்டனர். அவரிடம் மருத்துவம் படித்தற்கான உரிய ஆவணங்கள் இல்லை என்பது தெரிய வந்தது.

    விசாரணையில் அவர் பிளஸ்-2 வரை மட்டுமே படித்து வந்ததும், இந்த கிளினிக்கை நடத்தி வந்த டாக்டர் இறந்ததும், அதன்பின் கடந்த ஒரு ஆண்டுகளாக நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தது தெரிய வந்தது.

    இது குறித்து மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் சிங்காநல்லூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் மருத்துவம் படிக்காமல் சிகிச்சை அளித்த போலி டாக்டர் தேவராஜ் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் போலீசார் போலி டாக்டர் தேவராஜை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய ஜெயிலில் அடைத்தனர்.

    • தங்கத்தை போலவே வெள்ளி விலையும் உயர்ந்தது.
    • வெள்ளி கிலோவுக்கு ரூ.300 அதிகரித்து ரூ. 76 ஆயிரத்து 800 ஆக உள்ளது.

    சென்னை:

    சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையில் சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.48 ஆயிரத்து 680-க்கு விற்றது. ஒரு கிராம் தங்கம் ரூ.5 ஆயிரத்து 835 ஆக உள்ளது.

    தங்கத்தை போலவே வெள்ளி விலையும் உயர்ந்தது. வெள்ளி கிலோவுக்கு ரூ.300 அதிகரித்து ரூ. 76 ஆயிரத்து 800 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.76.80-க்கு விற்கப்படுகிறது.

    • 5 ஆயிரம் பார்வையாளர்கள் அமர்ந்து பார்க்கும் வகையில் கேலரி அமைக்கப்பட்டுள்ளது.
    • ஜல்லிக்கட்டை நினைவு கூறும் வகையில் நுழைவு வாயிலில் காளை சிலை தத்ரூபமாக வைக்கப்பட்டுள்ளது.

    மதுரை:

    தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் ஜல்லிக்கட்டுக்காக நிரந்தர அரங்கம் அமைக்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி மதுரை மாவட்டம் கீழக்கரையில் 66.80 ஏக்கர் பரப்பளவில் ரூ.62.78 கோடி மதிப்பீட்டில் திட்டப்பணிகள் கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கப்பட்டு, தற்போது கட்டுமான பணிகள் 77 ஆயிரத்து 683 சதுர அடியில் நிறைவடைந்துள்ளது. 5 ஆயிரம் பார்வையாளர்கள் அமர்ந்து பார்க்கும் வகையில் கேலரி அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த மைதான அரங்கிற்கு 'கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம்' என தமிழக அரசு பெயர் சூட்டியுள்ளது. அரண்மனை போல் இந்த அரங்கத்தின் முகப்பு அமைக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டை நினைவு கூறும் வகையில் நுழைவு வாயிலில் காளை சிலை தத்ரூபமாக வைக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் முதன்முறையாக கிரிக்கெட், கால்பந்து, ஆக்கி உள்ளிட்ட போட்டி களை மைதானத்தில் கேலரியில் அமர்ந்து பார்ப்பது போன்று இனிவரும் காலங்களில் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டையும் பார்த்து ரசிக்கும் வகையில் இந்த அரங்கம் உருவாகியுள்ளது.


    இந்த ஜல்லிக்கட்டு மைதானத்தை திறந்து வைப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தார். வழிநெடுகிலும் அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    தொடர்ந்து ஜல்லிக்கட்டு மைதானத்தை அடைந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரங்கத்தை திறந்து வைத்தார். மேலும் ஜல்லிக்கட்டு காளை சிலையையும் திறந்து வைத்தார். இதையடுத்து அங்கு அமைக்கப்பட்டிருந்த நூலகம், அருங்காட்சியங்கள், ஒலி-ஒளி காட்சி கூடங்கள் ஆகியவற்றை பார்வையிட்டார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழக கவர்னர் ஆர்.என். ரவி கவர்னர் மாளிகையில் தேநீர் விருந்து அளிப்பது வழக்கம்.
    • கவர்னர் செயல்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கட்சிகள் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    நாடு முழுவதும் குடியரசு தின விழா வருகிற 26-ந் தேதி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

    குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழக கவர்னர் ஆர்.என். ரவி கவர்னர் மாளிகையில் தேநீர் விருந்து அளிப்பது வழக்கம். இந்த தேநீர் விருந்தில் கலந்துகொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், அரசு உயரதிகாரிகள் மற்றும் அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படும்.

    இந்நிலையில் குடியரசு தினத்தன்று கவர்னர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் தெரிவித்துள்ளன.

    கவர்னர் ஆர்.என்.ரவி செயல்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கட்சிகள் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், கவர்னரின் நடவடிக்கைகளை புறக்கணிக்கிறோம். தமிழ்நாட்டின் கலாச்சாரம், பண்பாடு, கலை, இலக்கியங்களுக்கு எதிராக கவர்னர் பேசுகிறார். வரலாற்றை சிதைக்கும் வகையில் கவர்னர் பேசி வருகிறார் என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ. செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

    ஆர்.எஸ்.எஸ். தொண்டனை போல் செயல்படுகிறார் கவர்னர் என்று மார்க்சிஸ்ட் கம்யூ. மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பல்வேறு நிதிச்சுமை ஏற்பட்டுள்ள நிலையில் வருவாயை பெருக்குவதற்கு டாஸ்மாக் மதுபானங்கள் விலையை குவார்ட்டருக்கு 10 ரூபாய் உயர்த்த அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
    • விலை உயர்வை பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக நடைமுறைப்படுத்துவதா? அல்லது தேர்தலுக்கு பிறகு நடைமுறைப்படுத்துவதா? என்பதை அரசு முடிவு செய்து அறிவிக்கும்.

    சென்னை:

    டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் விலை விரைவில் குவார்ட்டருக்கு 10 ரூபாய் உயரும் என தெரிகிறது.

    தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுக்கடைகள் மூலம் ஆண்டுக்கு ரூ.45 ஆயிரம் கோடி வரை வருமானம் வருகிறது. இதனால் டாஸ்மாக் மதுக்கடைகள் இப்போது தவிர்க்க முடியாததாகிவிட்டது.

    பொதுமக்கள் அதிகமாக வந்து செல்லும் பஸ் நிலையம், ரெயில் நிலையம், பள்ளிக்கூடங்கள் அருகேயும் டாஸ்மாக் மதுக்கடைகள் இன்னும் இயங்கி கொண்டுதான் இருக்கிறது. இப்போது மொத்தம் 4829 மதுக்கடைகள் செயல்படுகிறது.


    அரசுக்கு பல்வேறு நிதிச்சுமை ஏற்பட்டுள்ள நிலையில் வருவாயை பெருக்குவதற்கு டாஸ்மாக் மதுபானங்கள் விலையை குவார்ட்டருக்கு 10 ரூபாய் உயர்த்த அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

    அதன்படி பிராந்தி, விஸ்கி, ரம், ஜின், ஓட்கா உள்ளிட்ட மதுவகைகளின் விலை குவார்ட்டர் பாட்டிலுக்கு 10 ரூபாய் விரைவில் உயர உள்ளது. இதற்கேற்ப 'ஆப்' பாட்டில், முழு பாட்டில் விலையும் ரூ.30 முதல் ரூ.80 வரை விலை உயர வாய்ப்புள்ளது.

    இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    மூலப்பொருட்களின் விலை உயர்வால் மதுபானங்களின் விலையை உயர்த்த வேண்டும் என்று மதுபான ஆலை உரிமையாளர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். அரசுக்கும் நிதிச்சுமை ஏற்பட்டுள்ளது.

    அதன் அடிப்படையில் மது வகைகள் விலைகள் குவார்ட்டர் பாட்டிலுக்கு 10 ரூபாய் என்ற அளவில் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வை பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக நடைமுறைப்படுத்துவதா? அல்லது தேர்தலுக்கு பிறகு நடைமுறைப்படுத்துவதா? என்பதை அரசு முடிவு செய்து அறிவிக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆலய வளாகத்திற்குள் அடக்கம் செய்வதற்கு ஐகோர்ட்டு அனுமதி மறுத்துவிட்டது.
    • கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள பங்குத்தந்தை ராபின்சன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்சந்தை அருகே உள்ள மைலோடு மடத்துவிளை பகுதியைச் சேர்ந்தவர் சேவியர் குமார் (வயது 42). இவர் கன்னியாகுமரி அரசு போக்குவரத்து கழக பணிமனையில் மெக்கானிக்காக பணியாற்றி வந்தார்.

    நாம் தமிழர் கட்சியின் தக்கலை ஒன்றிய தலைவராகவும் இருந்தார். மேலும் மைலோடு கிறிஸ்தவ ஆலய பங்கு பேரவையின் முன்னாள் பொருளாளராகவும் இருந்துள்ளார். இவருக்கு ஜெமினி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். ஜெமினி, மைலோடு ஆலய நிர்வாகத்துக்கு உட்பட்ட தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் அவரை, பள்ளி நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்ததாக தெரிகிறது. இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்காக சேவியர் குமார், ஆலய வளாகத்தில் உள்ள பாதிரியார் இல்லத்திற்கு சென்றார். அப்போது அங்கு நடந்த தகராறில் சேவியர் குமார் கொலை செய்யப்பட்டார்.

    இது தொடர்பாக ஜெமினி கொடுத்த புகாரின் பேரில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் ரமேஷ் பாபு, பங்குத்தந்தைகள் ராபின் சன், பெனிட்டோ, பங்கு பேரவை துணைத் தலைவர் ஜஸ்டிஸ் ரோக், வின்சென்ட் உள்பட 15 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    இவர்களில் ஜஸ்டிஸ் ரோக், வின்சென்ட் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மற்றவர்களை பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் அவர்களை தேடி வருகிறார்கள். சென்னை மற்றும் திருவனந்தபுரத்தில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவல் அடிப்படையில் தனிப்படை போலீசார் அங்கு விரைந்துள்ளனர்.

    சேவியர் குமாரின் உடல் பிரேத பரிசோதனை முடிந்த பிறகு அவரது உறவினர்களிடம் ஒப்படைக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். ஆனால் உறவினர்கள் அவரது உடலை வாங்க மறுத்தனர். குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும், சேவியர் குமாரின் மனைவி ஜெமினிக்கு பணி வழங்க வேண்டும், 2 மகள்களுக்கும் ரூ. 2 கோடி வழங்க வேண்டும், மைலோடு ஆலய வளாகத்தில் உடலை அடக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தனர்.

    ஆனால் ஆலய வளாகத்திற்குள் அடக்கம் செய்வதற்கு ஐகோர்ட்டு அனுமதி மறுத்துவிட்டது. அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து உறவினர்கள் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்கள். இதற்கிடையில் சேவியர் குமாரின் வீட்டிற்கு விஜய்வசந்த் எம்.பி, தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. மற்றும் நிர்வாகிகள் பலரும் நேரில் சந்தித்து அவரது மனைவி மற்றும் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார்கள்.

    இதற்கிடையில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள பங்குத்தந்தை ராபின்சன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவரை பங்கு பேரவையிலிருந்து சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் ரமேஷ்பாபு மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக தி.மு.க. பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தக்கலை தெற்கு ஒன்றிய செயலாளர் ரமேஷ்பாபு அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கம் செய்யப்படுகிறார். தி.மு.க.வுக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டதால் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையில் சேவியர் குமார் கொலை வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்ய வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி சார்பில் நாளை மறுநாள் (26-ந்தேதி) போராட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு நடைபெறும் இந்த போராட்டத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொள்கிறார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தமிழ்நாட்டில் இந்த ஆண்டு அரசியல் மாற்றம் ஏற்படுவது உறுதி.
    • ராமருக்கும், தமிழகத்துக்கும் என்ன சம்பந்தம் என தி.மு.க.வினர் கேட்கின்றனர்.

    திருவிடைமருதூர்:

    தொடர் மழை காரணமாக நீண்ட இடைவெளிக்கு பிறகு தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே திருபுவனத்தில் பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை 'என் மண் என் மக்கள்' நடைபயணம் மேற்கொண்டார். அவருக்கு கட்சி நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். முக்கிய வீதிகள் வழியாக தொண்டர்களை பார்த்து கை அசைத்தபடி நடைபயணமாக சென்றார். பின்னர் அண்ணாமலை பேசியதாவது:-

    குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டி கடந்த 2014-ம் ஆண்டில் மோடி பிரதமர் ஆகுவதற்கு மக்கள் வாய்ப்பு அளித்தனர். இப்போது, 3-வது முறையாக மோடி பிரதமராக தொடர வேண்டும் என மக்கள் முடிவு செய்துவிட்டனர்.

    தமிழ்நாட்டில் இந்த ஆண்டு அரசியல் மாற்றம் ஏற்படுவது உறுதி. அனைத்து கட்சியினரும் மோடிக்கு வாக்களிக்க முடிவு செய்துவிட்டனர். தனது வருங்கால சந்ததியினர் வறுமை கோட்டுக்கு கீழே தள்ளப்பட்டு விடக்கூடாது என்பதற்காக மோடிக்கு வாக்களிக்க மக்கள் தீர்மானித்துள்ளனர். மக்களின் இந்த முடிவை நான் பாராட்டுகிறேன்.

    ராமருக்கும், தமிழகத்துக்கும் என்ன சம்பந்தம் என தி.மு.க.வினர் கேட்கின்றனர். ஆனால், ராமருக்கும், தமிழகத்துக்கும் ஆண்டாண்டு கால பந்தம் உள்ளது. தமிழகத்தின் ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம் உள்ளிட்ட இடங்களில் ராமர் வழிபட்டுள்ளார்.

    இவ்வாறு அண்ணாமலை பேசினார்.

    • வேதா நிலையம் இல்லத்திற்கு எதிரிலேயே புதிய வீடு கட்டும் பணிகள் கடந்த 2020ஆம் ஆண்டில் இருந்தே நடந்து வந்தது.
    • சுபமுகூர்த்த சுபதினமான இன்றைய தினம் புதிய இல்லத்தில் கோ பூஜை நடத்தி விநாயகரை வழிபட்டு பால்காய்ச்சி குடியேறி உள்ளார்.

    சென்னை:

    சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்ற சசிகலா கடந்த 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் விடுதலை ஆனார். பின்னர் அவர் தி.நகரில் வசித்து வந்தார். இதனிடையே போயஸ் தோட்டம் பகுதியிலேயே வேதா நிலையம் இல்லத்திற்கு எதிரிலேயே புதிய வீடு கட்டும் பணிகள் கடந்த 2020ஆம் ஆண்டில் இருந்தே நடந்து வந்தது.

    இந்நிலையில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்திற்கு எதிரே சசிகலா புதிதாக வீடு ஒன்றை கட்டி இன்று அதிகாலை கிரகபிரவேசம் செய்துள்ளார்.


    சுபமுகூர்த்த சுபதினமான இன்றைய தினம் புதிய இல்லத்தில் கோ பூஜை நடத்தி விநாயகரை வழிபட்டு பால்காய்ச்சி குடியேறி உள்ளார்.

    • தேர்தல் பணியில் அரசியல் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
    • பேச்சுவார்த்தை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற உள்ளது.

    சென்னை:

    2024 மக்களவை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் தேர்தல் பணியில் அரசியல் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் குழு, தொகுதி பங்கீடு, கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை என தேர்தல் பணியில் மும்முரம் காட்டி வருகின்றனர்.

    இந்நிலையில் பாராளுமன்ற தேர்தலில் தொகுதி பங்கீடு தொடர்பாக தி.மு.க.- காங்கிரஸ் இடையே வருகிற 28-ந்தேதி பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

    தி.மு.க. சார்பில் அமைக்கப்பட்டுள்ள டி.ஆர்.பாலு தலைமையிலான குழுவினர், காங்கிரஸ் கமிட்டி குழுவுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர். பேச்சுவார்த்தை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற உள்ளது.

    ×