என் மலர்
உள்ளூர் செய்திகள்
- வெடி விபத்து ஏற்பட்ட அறையில் பற்றிய தீயானது அடுத்தடுத்த அறைகளுக்கும் பரவியது.
- பட்டாசுகள் வெடித்து கொண்டிருந்ததால் உடனடியாக தீயணைப்பு படையினரால் நெருங்க முடியவில்லை.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம் சிவகாசி, விருதுநகர், சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 1,100-க்கும் மேற்பட்ட சிறிய, பெரிய பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. இந்த நிலையில் தீபாவளி பண்டிகை முடிந்த கையோடு பொங்கல், புத்தாண்டு, கிறிஸ்துமஸ் உள்ளிட்டவைகளுக்காக மீண்டும் இந்த ஆலைகள் பட்டாசு உற்பத்தியை தொடங்கின.
இதற்கிடையே அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவையொட்டி வடமாநிலங்களில் இருந்து அதிகளவில் வந்திருந்த ஆர்டர்களின் பேரில் பட்டாசு உற்பத்தி சூடுபிடிக்க தொடங்கியது. இதற்காக அதிகப்படியான தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டனர்.
விருதுநகர் அருகே உள்ள வச்சகாரப்பட்டி காமராஜர்புரத்தை சேர்ந்தவர் முருகேசன். இவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை ஆர்.ஆர். நகர் பகுதியில் உள்ளது. இந்த ஆலையில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பெண்கள் 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். தற்போது பட்டாசு தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.
இந்த நிலையில் இன்று அதிகாலையிலேயே ஊழியர்கள் வழக்கம் போல் வேலைக்கு வந்தனர். ஆலையில் உள்ள மருந்து சேமிக்கும் அறையில் பட்டாசு தயாரிப்பதற்காக மருந்து கலவையை தயார் செய்யும் பணி நடந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக அந்த அறையில் 'திடீர்' வெடிவிபத்து ஏற்பட்டது.
இதில் அங்கு வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின. இதனால் அதிர்ச்சி அடைந்த அங்கிருந்த தொழிலாளர்கள் கூக்குரலிட்டனர். வெடி விபத்து குறித்து தகவலறிந்த விருதுநகர், சிவகாசி தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
ஆனாலும் தொடர்ந்து வெடி விபத்து ஏற்பட்ட அந்த அறையில் பற்றிய தீயானது அடுத்தடுத்த அறைகளுக்கும் பரவியது. இதில் மற்ற 3 அறைகள் உள்பட 4 அறைகள் இடிந்து தரைமட்டமானது. இருந்தபோதிலும் அங்கு பட்டாசுகள் வெடித்து கொண்டிருந்ததால் உடனடியாக தீயணைப்பு படையினரால் நெருங்க முடியவில்லை.
இந்த பயங்கர விபத்தில் கன்னிசேரிபுதூரை சேர்ந்த காளிராஜ் (வயது 20), முதலிப்பட்டியை சேர்ந்த வீரக்குமார் (50) ஆகிய இருவரும் தரைமட்டமான அறைகளில் இடிபாடுகளுக்குள் சிக்கியும், உடல் சிதறியும் பலியானார்கள். மேலும் இனாம் ரெட்டியபட்டியை சேர்ந்த சுந்தரமூர்த்தி (18), தம்ம நாயக்கன்பட்டியை சேர்ந்த சரவணக்குமார் (25) ஆகிய இருவரும் பலத்த காயம் அடைந்தனர்.
தீயை கட்டுக்குள் கொண்டு வந்தபிறகு தீயணைப்பு வீரர்கள் காயமடைந்தவர்களை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பலியானோர் உடல்களும் மீட்கப்பட்டன. இந்த விபத்து தொடர்பாக வச்சக்காரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- வளைவில் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி சாலையில் கவிழ்ந்தது.
- லாரியில் கொண்டு வரப்பட்ட தேங்காய்கள் சாலைகளில் உருண்டு ஓடின.
நெல்லை:
ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர் தங்கராஜ். இவர் லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவர் ஈரோட்டில் இருந்து லாரியில் தேங்காய் ஏற்றிக் கொண்டு வந்து நெல்லையில் இறக்கிவிட்டு செல்வது வழக்கம்.
அதன்படி நேற்றிரவு ஈரோட்டில் இருந்து தேங்காய் ஏற்றிக்கொண்டு அவர் புறப்பட்டார். இன்று அதிகாலை நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் நான்கு வழிச்சாலையில் போலீஸ் சோதனை சாவடி அருகே லாரி வந்து கொண்டிருந்தது.
அப்போது அங்குள்ள வளைவில் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி சாலையில் கவிழ்ந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக தங்கராஜ் சிராய்ப்பு காயங்களுடன் உயிர் தப்பினார்.
நடு சாலையில் லாரி கவிழ்ந்ததால் அந்த வழியாக வந்த வாகனங்கள் ஒருவழிப்பாதையாக மாற்றி அமைக்கப்பட்டு திருப்பி விடப்பட்டன. இதில் லாரியில் கொண்டு வரப்பட்ட தேங்காய்கள் சாலைகளில் உருண்டு ஓடின.
இந்த காட்சிகள் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி உள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த கங்கைகொண்டான் போலீசார் அங்கு விரைந்து சென்று சாலையின் நடுவே கவிழ்ந்த லாரியை கிரேன் மூலம் அப்புறப்படுத்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனால் அப்பகுதியில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- அ.தி.மு.க. கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இடம்பெறும் என்பது இன்னும் உறுதியாகவில்லை.
- அ.தி.மு.க.வில் தம்பி துரை தலைமையில் தேர்தல் பிரசார குழு அமைக்கப்பட்டு உள்ளது.
சென்னை:
பாராளுமன்றத்துக்கு ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, பாரதிய ஜனதா கூட்டணி மற்றும் நாம் தமிழர் கட்சிகள் இடையே 4 முனை போட்டி ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்த எல்லா முக்கிய கட்சிகளும் குழுக்கள் அமைத்துள்ளன. இன்னும் சில தினங்களில் இந்த குழுக்கள் சந்தித்து பேச உள்ளன.
அது போல வேட்பாளர் தேர்வும் பிப்ரவரி முதல் வாரத்தில் தொடங்க வாய்ப்புள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது.
அ.தி.மு.க. கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இடம்பெறும் என்பது இன்னும் உறுதியாகவில்லை. என்றாலும் அந்த கட்சி தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை, தேர்தல் பணிகள் போன்றவற்றுக்காக 4 குழுக்களை அமைத்து உள்ளது.
எடப்பாடி பழனிசாமி கண்காணிப்பில் செயல்பட உள்ள இந்த 4 குழுக்களும் நாளை (வியாழக்கிழமை) சென்னையில் கூட இருப்பதாக தெரிய வந்துள்ளது. 4 குழுக்களில் இடம்பெற்று இருப்பவர்களும் அடுத்த கட்ட பணிகள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளனர்.
குறிப்பாக வேட்பாளர் தேர்வு பற்றி விரிவாக ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது.

தொகுதி பங்கீடுக்காக கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி, பென்ஜமின் ஆகிய 5 பேர் குழுவை எடப்பாடி பழனிசாமி உருவாக்கி இருக்கிறார். நாளை இந்த குழு முக்கிய முடிவுகளை மேற்கொள்ளும் என்று தெரிகிறது.
அதுபோல நத்தம் விஸ்வநாதன் தலைமையிலான தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவும் நாளை ஆலோசனை நடத்தி அடுத்த கட்ட பணிகள் குறித்து முடிவு செய்ய உள்ளது.
அ.தி.மு.க.வில் தம்பி துரை தலைமையில் தேர்தல் பிரசார குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த தடவை பிரசாரத்தில் எந்தெந்த பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது என்பது பற்றி இந்த தலைவர்களும் நாளை ஆலோசிக்க உள்ளனர்.
பிரசாரத்தில் புதிய வியூகங்களை அமல்படுத்த இந்த குழு திட்டமிட உள்ளது. எனவே அ.தி.மு.க.வின் நாளைய ஆலோசனை கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
- உத்தரவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
- பக்தர்கள் ரெங்கா, ரெங்கா என்ற கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
திருச்சி:
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தைத்தேர் திருவிழா கடந்த 16-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 4-ம் திருநாளான 19-ந்தேதி தங்க கருட வாகனத்தில் நம்பெருமாள் முக்கிய வீதிகள் வழியாக உத்தரவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருவிழாவின் 8-ம் நாளான நேற்று முன்தினம் மாலை தங்க குதிரை வாகனத்தில் நம்பெருமாள் புறப்பட்டு உத்திரவீதிகளில் வலம் வந்து வையாளி கண்டருளுளினார். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. இதையொட்டி நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் அதிகாலை 4.30 மணிக்கு கண்ணாடி அறையிலிருந்து புறப்பட்டு தைத்தேர் மண்டபத்திற்கு அதிகாலை 5 மணிக்கு வந்தார்.
காலை 5.15 மணிமுதல் காலை 6 மணிவரை ரதரோஹணம் (மகர லக்னத்தில்) நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட தேரில் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் எழுந்தருளிய பின் காலை 6.30 மணிக்கு பக்தர்கள் ரெங்கா, ரெங்கா என்ற கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தேர் நான்கு உத்திர வீதிகளில் வழியாக காலை 9.30 மணிக்கு நிலையை வந்தடைந்தது. பின்னர் பக்தர்கள் தேரின் முன் தேங்காய் உடைத்து, சூடம் ஏற்றி பெருமாளை தரிசனம் செய்தனர்.
நாளை (25-ந்தேதி) சப்தாவர்ணம் நிகழ்ச்சி நடக்கிறது. நிறைவு நாளான 26-ந்தேதி மாலை 3.30 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பட்டு மாலை 4 மணிக்கு ரெங்கவிலாச மண்டபம் வருகிறார். அங்கிருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு இரவு 7.30 மணிக்கு வாகன மண்டபம் சென்றடை கிறார். வாகன மண்ட பத்தில் இருந்து இரவு 8 மணிக்கு நம்பெருமாள் ஆளும்ப ல்லக்கில் புறப்பட்டு நான்கு உத்திர வீதிகளில் வலம் வந்து இரவு 9 மணிக்கு வாகன மண்டபம் வந்தடைகிறார்.
- அவினாசியில் லிங்கேசுவரர் கோவில் உள்ளது.
- வருகிற 2-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
அவினாசி:
திருப்பூர் மாவட்டம் அவினாசியில் கருணாம்பிகை உடனமர் அவினாசிலிங்கேசுவரர் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேகம் அடுத்த மாதம் (பிப்ரவரி) 2-ந் தேதி நடைபெற உள்ளது. அதற்காக கடந்த 6 மாதங்களாக கோவில் திருப்பணிகள் நடந்து வருகிறது.
பணிகள் முடிவடைந்த நிலையில் வருகிற 2-ந்தேதி காலை 9.30 மணி முதல் 10.30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
இதையொட்டி கும்பாபிஷேக விழா இன்று காலை மூத்தபிள்ளையார் வழிபாடு நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். மாலை 6 மணிக்கு நிலத்தேவர் வழிபாடு நடக்கிறது.
29-ந் தேதி காலை 9 மணிக்கு வேள்விச்சாலை அழகு பெறச்செய்தல், மாலை 6 மணிக்கு திருக்குடங்களில் திருவருள் சக்திகளை ஏற்றி வைத்தல், 7 மணிக்கு திருக்குடங்கள் வேள்விச்சாலை எழுந்தருளல் மற்றும் முதல் கால வேள்வி பூஜை நடைபெறுகிறது.
இரவு 9 மணிக்கு பேரொளி வழிபாடு மலர் போற்றுதல் ஆகியவையும் 30-ந் தேதி காலை 9 மணிக்கு இரண்டாம் கால வேள்வி பூஜையும், 10 மணிக்கு பரிவார தெய்வங்களுக்கு எண் வகை மருந்து சாத்துதல் நிகழ்ச்சியும், மாலை 6 மணிக்கு மூன்றாம் கால வேள்வி பூஜை மற்றும் அருட் பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது.
31-ந் தேதி காலை 6 மணிக்கு 4-ம்கால பூஜையும், 10 மணிக்கு சாமிக்கு மருந்து சாத்துதல் நிகழ்ச்சியும் நடக்கிறது. அன்று மாலை 6 மணிக்கு 5-ம் கால வேள்வி பூஜையும், பிப்ரவரி மாதம் 1-ந் தேதி காலை 6 மணிக்கு 6-ம்கால வேள்வி பூஜையும், காலை 9 மணி முதல் 10.15 மணிக்கு அவினாசி அப்பர் துணை நிற்கும் தெய்வங்களுக்கு திருக்குட நன்னீராட்டு நிகழ்ச்சி நடக்கிறது. மாலை 6 மணி முதல் 9 மணிக்குள் 7-ம் கால பூஜையும் நடக்கிறது.
2-ந்தேதி காலை 6 மணிக்கு 8-ம் கால பூஜையும், 8 மணிக்கு திருக்குடங்கள் ஞான உலா நிகழ்ச்சியும் நடக்கிறது. காலை 9.15 மணி முதல் 10.15 மணிக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. மாலை 6 மணிக்கு திருக்கல்யாணமும், இரவு 8 மணிக்கு அவினாசியப்பருக்கும் ஐம்பெரும் தெய்வங்களுக்கும் திருவீதி உலா நடக்கிறது.
- பிரம்மாண்ட பொதுக்கூட்டமும் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது.
- 2 முறை திருப்பூரில் நடைபெற இருந்த அண்ணாமலை நடைபயணம் ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
திருப்பூர்:
பிரதமர் மோடியின் 10 ஆண்டுகால ஆட்சியின் சாதனைகளை விளக்கி தமிழக பா.ஜ.க., தலைவர் அண்ணாமலை என் மண், என் மக்கள் என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி வாரியாக நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.
திருப்பூரில் வருகிற 28-ந்தேதி நடைபயணம் மேற்கொள்ள இருந்தார். இதற்கான ஏற்பாடுகளை திருப்பூர் மாநகர பா.ஜ.க. வினர் செய்து வந்தனர்.
இந்தநிலையில் அண்ணாமலையின் நடைபயணம் தேதி திடீரென மாற்றப்பட்டது. தமிழகம் முழுவதும் நடைபயணம் மேற்கொள்ளும் அண்ணாமலை இறுதிக்கட்ட நடை பயணத்தை சென்னையில் நிறைவு செய்து, அங்கு பிரம்மாண்ட பொதுக்கூட்டமும் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது.

இந்தநிலையில் இறுதிக்கட்ட நடைபயணம் மற்றும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தை திருப்பூரில் நடத்தவும், அதில் 10 லட்சம் பேரை பங்கேற்க செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக வருகிற 28-ந்தேதி திருப்பூரில் நடைபெற இருந்த நடைபயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக திருப்பூர் மாநகர பா.ஜ.க. நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 20-ந்தேதி திருப்பூரில் நடைபெற இருந்த நடைபயணம் மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் மறைவு காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. அதன்பிறகு 2 முறை திருப்பூரில் நடைபெற இருந்த அண்ணாமலை நடைபயணம் ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளி திருவீதிஉலா.
- முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது.
விராலிமலை:
விராலிமலையில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணியசுவாமி கோயில் உள்ளது. இங்கு மலைமேல் முருகன் வள்ளி-தெய்வானையுடன் அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இங்கு வருடம் தோறும் பல்வேறு திருவிழாக்கள் வெகு விமர்சியாக நடத்தப்படுவது வழக்கம்.
அதன்படி இந்த வருடம் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு கடந்த 16-ந்தேதியன்று சுப்ரமணிய சுவாமி கோவிலில் கொடியேற்றப்பட்டது.
அதனை தொடர்ந்து தினமும் காலை மற்றும் இரவு என இரு வேலைகளிலும் மஞ்சம், பத்மமயில், கேடயம், மயில், பூதம், நாகம், சிம்மம், வெள்ளிகுதிரை உள்ளிட்ட வாகனங்களில் முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளி சுவாமியின் திருவீதி உலா நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (புதன்கிழமை) நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். அதனை தொடர்ந்து 25-ந் தேதி இரவு தெப்ப உற்சவம் நடக்கிறது. 26-ந்தேதி விடையாற்றியுடன் தைப்பூச திருவிழா நிறைவடைகிறது.
- சென்னையில் விரைவில் கலைஞர் நினைவகம் திறக்கப்பட உள்ளது.
- திமுக அரசின் தீவிர முயற்சியால், நீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டிற்கு அனுமதி பெற்றோம்.
கீழக்கரை:
மதுரை மாவட்டம் அலங்கநல்லூர் அருகே உள்ள கீழக்கரையில் புதிதாக கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். முன்னதாக அரங்கத்தின் வாயிலில் அமைக்கப்பட்ட கருணாநிதி சிலையையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இதன்பின்னர் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
* ஏறுதழுவுதல் அரங்கத்தை கட்டியவர் ஸ்டாலின் என்று வரலாற்றில் இடம்பெற்றுவிட்டேன்.
* மதுரையில் கீழடி, கலைஞர் நூற்றாண்டு நூலகம், ஜல்லிக்கட்டு அரங்கம் அமைந்துள்ளது.
* சிந்து சமவெளி நாகரிகத்தில் திமில் கொண்ட காளைகள் இருந்தன.
* மதுரையை தூங்கா நகரம் என்பார்கள். போட்டி என்று வந்துவிட்டால் தோல்வியை தூள் தூளாக்கும் நகரம் என்பதை வாடிவாசல் ஆண்டுதோறும் நிரூபித்து வருகிறது.
* தை மாதம் வந்தாலே அமைச்சர் மூர்த்தி, ஜல்லிக்கட்டு மூர்த்தியாக மாறிவிடுவார்.
* சென்னையில் விரைவில் கலைஞர் நினைவகம் திறக்கப்பட உள்ளது.
* திமுக அரசின் தீவிர முயற்சியால், நீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டிற்கு அனுமதி பெற்றோம்.
* மத்திய அரசு மதுரையில் 2016-ல் அறிவித்து அடிக்கல் நாட்டிய பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
இதன்பின்னர் ஏறுதழுவுதல் அரங்கம் திறந்ததும் முதல் ஜல்லிக்கட்டு போட்டியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். முதலில் கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 500 மாடுகள் 300 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர்.
- அழகன்குளத்தை சேர்ந்த நம்புராஜன், அவரது மனைவி காளியம்மாள் உள்பட 20 பேர் பாத யாத்திரை சென்றனர்.
- படுகாயமடைந்த 5 பேரையும் தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
தேவகோட்டை:
தைப்பூச விழாவையொட்டி தமிழகத்தில் உள்ள அறுபடை முருகன் கோவில்களுக்கு அந்தந்த பகுதி மற்றும் அண்டை மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான முருக பக்தர்கள் பாதயாத்திரையாக சென்று வருகிறார்கள். தைப்பூச விழா நாளை நடைபெறுவதை முன்னிட்டு கூட்ட நெரிசலில் இருந்து தற்காத்துக்கொள்ளும் வகையில் பெரும்பாலான பக்தர்கள் முன்கூட்டியை தரிசனத்தை முடித்துக்கொண்டு ஊர் திரும்பி வருகின்றனர்.
அந்த வகையில், ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் அருகேயுள்ள அழகன்குளம் கிராமத்தை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் ஆண்டுதோறும் தைப்பூச விழாவையொட்டி பழனிக்கு பாதயாத்திரை செல்வது வழக்கம். கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக அவர்கள் சென்று வருகிறார்கள்.
இந்தநிலையில் அழகன்குளத்தை சேர்ந்த நம்புராஜன், அவரது மனைவி காளியம்மாள் உள்பட 20 பேர் பாத யாத்திரை சென்றனர். அங்கு சுவாமி தரிசனத்தை முடித்துக்கொண்டு டாடா ஏஸ் வேனில் ஊருக்கு புறப்பட்டனர். அந்த வேனை ராமநாதபுரத்தை சேர்ந்த டிரைவர் முகம்மது என்பவர் ஓட்டி வந்தார். பின்னால் அமர்ந்து வந்தவர்கள் பாத யாத்திரை சென்ற களைப்பில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர்.
அவர்கள் பயணம் செய்த வேன் இன்று அதிகால சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே திருச்சி-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் தளக்கா வயல் என்னும் இடத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே ஏர்வாடியில் இருந்து புதுக்கோட்டை நோக்கி வந்த லாரி மீது நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானது.
இந்த விபத்தில் டாட்டா ஏஸ் வாகன ஓட்டுனர் முகம்மது, பின்னால் அமர்ந்து பயணம் செய்த தம்பதியினரான நம்புராஜன், காளியம்மாள் ஆகிய 3 பேரும் வேனுக்கு உள்ளேயே உடல் நசுங்கி பலியானார்கள். மேலும் அதில் பயணம் செய்த 5 பேர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.
விபத்து பற்றி தகவல் அறிந்த தேவகோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பலியானவர்களின் உடல்களை மீட்டு தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் படுகாயமடைந்த 5 பேரையும் தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். விபத்து தொடர்பாக தேவகோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பாதயாத்திரை சென்று திரும்பும்போது கணவன், மனைவி உள்பட 3 பேர் விபத்தில் பலியானது அப்ப குதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- திருச்செந்தூரில் தைப்பூச திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும்.
- பாதயாத்திரையாக பக்தர்கள் அலகு குத்தியும், காவடி எடுத்தும் தரிசனம்.
திருச்செந்தூர்:
அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுகிறது.
அந்த வகையில் தைப்பூச திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். இதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து பாதயாத்திரையாகவும், வாகனங்களிலும் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்வார்கள். இ்ந்த ஆண்டு கோவிலில் தைப்பூச திருவிழா நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது.
இதற்கிடையே, சுவாமி சண்முகரை கடலில் கண்டெடுத்த 369-ம் ஆண்டு தினமான இன்று (புதன்கிழமை) அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது.
காலை 10 மணிக்கு உச்சிகால அபிஷேகம், சுவாமி சண்முகருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரமாகி, தீபாராதனை நடைபெற்றது. மாலையில் 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனையாகி, 4.30 மணிக்கு சுவாமி அலைவாயுகந்த பெருமான் கோவிலில் இருந்து புறப்பட்டு வீதி உலா வந்து சேர்கிறார்.
தைப்பூசத்தை முன்னிட்டு நாளை கோவில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 7.30 மணிக்கு தீர்த்தவாரியும், காலை 10 மணிக்கு உச்சிகால அபிஷேகமும், உச்சிகால தீபாராதனை முடிந்த பிறகு சுவாமி அலைவாயுகந்த பெருமான் வடக்குரதவீதியில் உள்ள தைப்பூச மண்டபத்திற்கு சென்று, அங்கு சுவாமிக்கு அபிஷேக, அலங்காரம் நடைபெறுகிறது. தொடர்ந்து சுவாமி தனி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தவாறு கோவில் சேர்கிறார்.

தைப்பூச திருவிழாவிற்கு தமிழகத்தின் தென்பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் பாதயாத்திரையாகவும், அலகு குத்தியும், காவடி எடுத்து வந்தும் தரிசனம் செய்து செல்கின்றனர்.
நாளை நடக்கும் தைப்பூசம் திருவிழாவிற்கு இன்று காலையில் இருந்தே ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாகவும், வாகனங்களிலும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர். இதனால் கோவில் வளாகம், கடற்கரை பகுதிகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.
- நீர்வரத்துக்கு ஏற்ப அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.
- இன்று காலை பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு 1369 கனஅடியாக உயர்த்தப்பட்டது.
கூடலூர்:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் மதுரை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. கடந்த சில நாட்களாக தொடர் மழை காரணமாக அணையின் நீர்மட்டம் அதன் முழுகொள்ளளவான 71 அடியை எட்டியது.
அதன்பின்னர் நீர்வரத்துக்கு ஏற்ப அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் கடந்த 18 நாட்களாக அணையின் நீர் மட்டம் 71 அடியில் நீடித்தது. இந்தநிலையில் இன்று காலை அணையின் நீர்மட்டம் சற்று சரிந்து 70.85 அடியாக உள்ளது. அணைக்கு 916 கனஅடிநீர் வருகிறது. நேற்று 1169 கனஅடிநீர் திறக்கப்பட்டது. இன்று காலை பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு 1369 கனஅடியாக உயர்த்தப்பட்டது.
முல்லை பெரியாறு அணையின்நீர்மட்டம் 138 அடியாக உள்ளது. அணைக்கு 282 கனஅடிநீர் வருகிறது. அணையிலிருந்து 1000 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55.60 அடியாக உள்ளது. 56 கனஅடிநீர் வருகிறது. 80 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின்நீர்மட்டம் 126.28 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 59 கனஅடிநீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. மழை எங்கும் இல்லை.
- சத்திய ஞான சபையில் ஆண்டுதோறும் தைப்பூச விழா நடைபெறும்.
- ஞானசபையில் கொடி ஏற்றம் நடந்தது.
வடலூர்:
கடலூர் மாவட்டம் வடலூரில் அருட்பிரகாச வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் ஆண்டுதோறும் நடைபெறும் தைப்பூச விழா இந்த ஆண்டு 153-வது ஆண்டு தைப்பூச விழாவாக நடைபெறுகிறது. இதன் தொடக்கமாக கடந்த 17-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை தருமச்சாலையில் மகா மந்திரம் ஓதுதல் நடைபெற்றது. 20-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை ஞான சபையில் அருட்பா முற்றோதல் நடைபெற்றது.
இன்று காலை 5 மணி மணிக்கு அகவல் பாராயணமும், 7.30 மணிக்கு வள்ளலார் பிறந்த மருதூர், தண்ணீரால் விளக்கு எரித்த கருங்குழி மற்றும் வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப் பத்திலும், தருமச்சாலையில் சன்மார்க்க கொடி ஏற்றமும், காலை 10 மணிக்கு ஞானசபையில் கொடி ஏற்றமும் நடந்தது.
நாளை (25-ந்தேதி) தைப்பூச திருவிழா வையொட்டி காலை 6 மணி, 10 மணி, பகல் 1 மணி, இரவு 7 மணி, 10 மணி, மறுநாள் (வெள்ளிகிழமை) காலை 5.30 மணி என 6 காலம், 7 திரை விலக்கி ஜோதிதரிசனம் நடக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் தமிழகம் மற்றும் உலகெங்கும் வாழும் தமிழர்கள் லட்சக்கணக்கான சன்மார்க்க அன்பர்கள் திரண்டு வருவது வழக்கம். இதற்காக தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பபடுகிறது. வருகிற 27-ந் தேதி (சனிக்கிழமை) பகல் 12 மணி முதல் மாலை 6 மணி வரை மேட்டுக்குப்பத்தில் உள்ள, வள்ளலார் சித்திப்பெற்ற திருஅறை தரிசனம் நடைபெறுகிறது.
முன்னதாக வடலூர் ஞானசபையில் இருந்து வள்ளலார் பயன்படுத்திய பொருட்கள் அடங்கிய பெட்டியை பூக்களால் அலங்கரித்து மேளதாளம் முழங்க வள்ளலார் சித்தி பெற்ற திருஅறை உள்ள மேட்டுக்குப்பம் கொண்டு செல்லப்படும். அங்கு பக்தர்கள் வழிபாட்டுக்கு பின்னர் மீண்டும் வடலூர் கொண்டு வரப்படும்.






