search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 2 பேர் உயிரிழப்பு
    X

    பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 2 பேர் உயிரிழப்பு

    • வெடி விபத்து ஏற்பட்ட அறையில் பற்றிய தீயானது அடுத்தடுத்த அறைகளுக்கும் பரவியது.
    • பட்டாசுகள் வெடித்து கொண்டிருந்ததால் உடனடியாக தீயணைப்பு படையினரால் நெருங்க முடியவில்லை.

    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி, விருதுநகர், சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 1,100-க்கும் மேற்பட்ட சிறிய, பெரிய பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. இந்த நிலையில் தீபாவளி பண்டிகை முடிந்த கையோடு பொங்கல், புத்தாண்டு, கிறிஸ்துமஸ் உள்ளிட்டவைகளுக்காக மீண்டும் இந்த ஆலைகள் பட்டாசு உற்பத்தியை தொடங்கின.

    இதற்கிடையே அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவையொட்டி வடமாநிலங்களில் இருந்து அதிகளவில் வந்திருந்த ஆர்டர்களின் பேரில் பட்டாசு உற்பத்தி சூடுபிடிக்க தொடங்கியது. இதற்காக அதிகப்படியான தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டனர்.

    விருதுநகர் அருகே உள்ள வச்சகாரப்பட்டி காமராஜர்புரத்தை சேர்ந்தவர் முருகேசன். இவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை ஆர்.ஆர். நகர் பகுதியில் உள்ளது. இந்த ஆலையில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பெண்கள் 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். தற்போது பட்டாசு தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

    இந்த நிலையில் இன்று அதிகாலையிலேயே ஊழியர்கள் வழக்கம் போல் வேலைக்கு வந்தனர். ஆலையில் உள்ள மருந்து சேமிக்கும் அறையில் பட்டாசு தயாரிப்பதற்காக மருந்து கலவையை தயார் செய்யும் பணி நடந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக அந்த அறையில் 'திடீர்' வெடிவிபத்து ஏற்பட்டது.

    இதில் அங்கு வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின. இதனால் அதிர்ச்சி அடைந்த அங்கிருந்த தொழிலாளர்கள் கூக்குரலிட்டனர். வெடி விபத்து குறித்து தகவலறிந்த விருதுநகர், சிவகாசி தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    ஆனாலும் தொடர்ந்து வெடி விபத்து ஏற்பட்ட அந்த அறையில் பற்றிய தீயானது அடுத்தடுத்த அறைகளுக்கும் பரவியது. இதில் மற்ற 3 அறைகள் உள்பட 4 அறைகள் இடிந்து தரைமட்டமானது. இருந்தபோதிலும் அங்கு பட்டாசுகள் வெடித்து கொண்டிருந்ததால் உடனடியாக தீயணைப்பு படையினரால் நெருங்க முடியவில்லை.

    இந்த பயங்கர விபத்தில் கன்னிசேரிபுதூரை சேர்ந்த காளிராஜ் (வயது 20), முதலிப்பட்டியை சேர்ந்த வீரக்குமார் (50) ஆகிய இருவரும் தரைமட்டமான அறைகளில் இடிபாடுகளுக்குள் சிக்கியும், உடல் சிதறியும் பலியானார்கள். மேலும் இனாம் ரெட்டியபட்டியை சேர்ந்த சுந்தரமூர்த்தி (18), தம்ம நாயக்கன்பட்டியை சேர்ந்த சரவணக்குமார் (25) ஆகிய இருவரும் பலத்த காயம் அடைந்தனர்.

    தீயை கட்டுக்குள் கொண்டு வந்தபிறகு தீயணைப்பு வீரர்கள் காயமடைந்தவர்களை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பலியானோர் உடல்களும் மீட்கப்பட்டன. இந்த விபத்து தொடர்பாக வச்சக்காரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×