search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தேவகோட்டை அருகே லாரி மீது வேன் மோதல்: கணவன்-மனைவி உள்பட 3 பேர் பலி
    X

    விபத்தில் சிக்கிய வேனின் முன்பகுதி நொறுங்கி கிடக்கும் காட்சி.

    தேவகோட்டை அருகே லாரி மீது வேன் மோதல்: கணவன்-மனைவி உள்பட 3 பேர் பலி

    • அழகன்குளத்தை சேர்ந்த நம்புராஜன், அவரது மனைவி காளியம்மாள் உள்பட 20 பேர் பாத யாத்திரை சென்றனர்.
    • படுகாயமடைந்த 5 பேரையும் தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    தேவகோட்டை:

    தைப்பூச விழாவையொட்டி தமிழகத்தில் உள்ள அறுபடை முருகன் கோவில்களுக்கு அந்தந்த பகுதி மற்றும் அண்டை மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான முருக பக்தர்கள் பாதயாத்திரையாக சென்று வருகிறார்கள். தைப்பூச விழா நாளை நடைபெறுவதை முன்னிட்டு கூட்ட நெரிசலில் இருந்து தற்காத்துக்கொள்ளும் வகையில் பெரும்பாலான பக்தர்கள் முன்கூட்டியை தரிசனத்தை முடித்துக்கொண்டு ஊர் திரும்பி வருகின்றனர்.

    அந்த வகையில், ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் அருகேயுள்ள அழகன்குளம் கிராமத்தை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் ஆண்டுதோறும் தைப்பூச விழாவையொட்டி பழனிக்கு பாதயாத்திரை செல்வது வழக்கம். கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக அவர்கள் சென்று வருகிறார்கள்.

    இந்தநிலையில் அழகன்குளத்தை சேர்ந்த நம்புராஜன், அவரது மனைவி காளியம்மாள் உள்பட 20 பேர் பாத யாத்திரை சென்றனர். அங்கு சுவாமி தரிசனத்தை முடித்துக்கொண்டு டாடா ஏஸ் வேனில் ஊருக்கு புறப்பட்டனர். அந்த வேனை ராமநாதபுரத்தை சேர்ந்த டிரைவர் முகம்மது என்பவர் ஓட்டி வந்தார். பின்னால் அமர்ந்து வந்தவர்கள் பாத யாத்திரை சென்ற களைப்பில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர்.

    அவர்கள் பயணம் செய்த வேன் இன்று அதிகால சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே திருச்சி-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் தளக்கா வயல் என்னும் இடத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே ஏர்வாடியில் இருந்து புதுக்கோட்டை நோக்கி வந்த லாரி மீது நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானது.

    இந்த விபத்தில் டாட்டா ஏஸ் வாகன ஓட்டுனர் முகம்மது, பின்னால் அமர்ந்து பயணம் செய்த தம்பதியினரான நம்புராஜன், காளியம்மாள் ஆகிய 3 பேரும் வேனுக்கு உள்ளேயே உடல் நசுங்கி பலியானார்கள். மேலும் அதில் பயணம் செய்த 5 பேர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.

    விபத்து பற்றி தகவல் அறிந்த தேவகோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பலியானவர்களின் உடல்களை மீட்டு தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    மேலும் படுகாயமடைந்த 5 பேரையும் தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். விபத்து தொடர்பாக தேவகோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பாதயாத்திரை சென்று திரும்பும்போது கணவன், மனைவி உள்பட 3 பேர் விபத்தில் பலியானது அப்ப குதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×