என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • வாகன உரிமையாளர் ஜோசப் நகர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
    • மதன்ராஜை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் பஸ் நிலையம் அருகே தனியார் பழக்கடை முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு வாகனம் மர்ம நபரால் திருடப்பட்டது. இது குறித்து வாகன உரிமையாளர் ஜோசப் நகர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    இந்தத் திருட்டுசம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை பிடிக்க எஸ்.பி.பிரதீப் தனிப்படை போலீசாருக்கு உத்தரவிட்டார். இந்த தனிப்படை போலீசார் சி.சி.டி.வி. காட்சிகள் அடிப்படையில் ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.

    அப்போது சரக்கு வாகனத்தை திருடிய நபர் சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த சேகர் மகன் மதன்ராஜ் (வயது28) என்பது தெரிய வந்தது. இதையடுத்து மதன்ராஜை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    மேலும் அவரிடமிருந்து சரக்கு வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது. திருடுபோன 10 மணி நேரத்தில் சரக்கு வாகனத்தை மீட்டுக் கொடுத்த தனிப்படை போலீசாரை எஸ்.பி. பிரதீப் பாராட்டினார்.

    மேலும் இவர் மீது பல்வேறு மாவட்டங்களில் ஏழுமலை, மணிகண்டன் மற்றும் வெவ்வேறு பெயர்களில் கார் திருட்டு வழக்குகள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

    • சி.பி.சி.ஐ.டி போலீசார் இதுவரை 500க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
    • சயானிடம் விசாரணை நடத்த உள்ளதால் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு மீண்டும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.

    கோவை:

    நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் உள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களாவில் கடந்த 2017-ல் கொலை, கொள்ளை சம்பவங்கள் அரங்கேறியது.

    இந்த சம்பவம் தொடர்பாக தற்போது சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சி.பி.சி.ஐ.டி போலீசார் இதுவரை 500க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

    மேலும் இது தொடர்பாக இடைக்கால விசாரணையை அறிக்கையையும் தாக்கல் ஊட்டி கோர்ட்டில் தாக்கல் செய்திருந்தனர்.

    இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் கேரளாவை சேர்ந்த சயானிடம் விசாரணை நடத்துவதற்காக அவரை கடந்த 11-ந் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பி இருந்தனர். ஆனால் அவர் கேரளாவில் ஒரு வழக்கில் ஆஜராக சென்றதால் அன்றைய தினம் ஆஜராகவில்லை.

    இந்த நிலையில் சயானிடம் விசாரணை நடத்துவதற்காக சி.பி.சி.ஐ.டி. போலீசார் மீண்டும் சம்மன் அனுப்பி உள்ளனர்.

    அதில் வருகிற பிப்ரவரி 1-ந் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து சயான் அன்றைய தினம் விசாரணைக்கு ஆஜராவார் என தெரிகிறது. அவரிடம் போலீசார் பல்வேறு கேள்விகளை கேட்டு விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். சயானிடம் விசாரணை நடத்த உள்ளதால் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு மீண்டும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.

    • டி.வி.யில் மாணவியின் ராமர் பாடலை கேட்டு மகிழ்ந்த தமிழிசை சவுந்தரராஜன் தாளமிட்டு பாடலை மிகவும் ரசித்தார்.
    • மஹன்யா ஸ்ரீ ஓசூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.

    ஓசூர்:

    அயோத்தியில் ராமர் கோவில், மகா கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ராமரை வழிபட்டனர்.

    இந்த நிலையில், விழாவை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்த பள்ளி மாணவி மஹன்யாஸ்ரீ என்பவர், ராமர் பாடல் ஒன்றை இயற்றி பாடியுள்ளார். இந்த பாடலை, தெலங்கானா, புதுச்சேரி மாநில கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டார்.

    புதுச்சேரி கவர்னர் மாளிகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின்போது தலைமை செயலாளர் ராஜீவ் வர்மா, மாணவி மஹன்யா ஸ்ரீ மற்றும் அவரது பெற்றோர் உடன் இருந்தனர்.

    அப்போது, அங்கிருந்த டி.வி.யில் மாணவியின் ராமர் பாடலை கேட்டு மகிழ்ந்த தமிழிசை சவுந்தரராஜன் தாளமிட்டு பாடலை மிகவும் ரசித்தார்.

    மேலும் மஹன்யா ஸ்ரீயை மிகவும் பாராட்டினார். மஹன்யாஸ்ரீ ஓசூர் உழவர் சந்தை பின்புறமுள்ள நியூ டெம்பிள் ஹட்கோ பகுதியில் வசித்து வரும் சிவராமன், ஜெயப்ரியா தம்பதியரின் மகள் ஆவார். இவர் ஓசூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.

    • ஏறுதழுவுதலை தனது உயிராகக் கருதக்கூடிய மூர்த்தியை நான் பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன்!
    • தமிழர்களின் பண்பாட்டை சரியாக அறிந்தவர்களாக, அந்தக் காலத்து கவர்னர்கள் இருந்திருக்கிறார்கள்.

    மதுரை:

    மதுரை, அலங்காநல்லூர், கீழக்கரையில், கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

    விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    வீரதீர விளையாட்டு களத்தை திறந்து வைக்க வந்திருக்கிறேன். மதுரையை தூங்கா நகரம் என்பார்கள். போட்டி என்று வந்துவிட்டால், தோல்வியை தூள்தூளாக்கும் நகரம் என்பதை வாடிவாசல் ஆண்டுதோறும் மெய்ப்பித்துக் கொண்டிருக்கிறது.

    தமிழர் பண்பாட்டு விளையாட்டான ஏறுதழுவுதலுக்கு சங்கம் வளர்த்த மதுரையில் இந்த மாபெரும் அரங்கம் நம்முடைய திராவிட முன்னேற்றக் கழக அரசால் கட்டி எழுப்பப்பட்டிருக்கிறது. அதுவும், தமிழினத் தலைவர் கலைஞருடைய நூற்றாண்டு விழா கொண்டாடுகிற ஆண்டில் அமைக்கப்பட்டிருப்பது கூடுதல் சிறப்பு.

    பல்லாயிரம் ஆண்டு பெருமை கொண்ட நம்முடைய தமிழினம் கொண்டாடும் ஏறுதழுவுதலுக்கான அரங்கத்தை கட்டி எழுப்பியவன் இந்த ஸ்டாலின் என்று வரலாற்றில் என்னுடைய பெயர் இடம்பெறுவது எனக்கு கிடைத்திருக்கக்கூடிய பெருமை.

    திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமைந்து, மூன்று ஆண்டுகள்தான் ஆகியிருக்கிறது. அதற்குள்ளாக, மூன்று முக்கியமான கம்பீரச் சின்னங்களை இந்த மதுரையில் ஏற்படுத்தி இருக்கிறோம்.

    ஒன்று, தமிழினத்தினுடைய பழமையை சொல்கின்ற கீழடி அருங்காட்சியகம் மதுரைக்கு அருகில் அமைக்கப்பட்டிருக்கிறது.

    இரண்டாவது, கலைஞரின் பெயரால் மாபெரும் நூலகம் பிரமாண்டமாக மதுரை மாநகரில் அறிவு மாளிகையாக அமைக்கப்பட்டிருக்கிறது.

    இப்போது மூன்றாவதாக, இந்த கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் ஜல்லிக்கட்டுக்கு பெயர்போன அலங்காநல்லூரில் அமைக்கப்பட்டிருக்கிறது.

    இதை சொல்லுகின்ற நேரத்தில், 2015-ம் ஆண்டு அறிவித்து, இன்றைக்கு வரைக்கும் மதுரைக்கு மத்தியில் இருக்கக்கூடிய ஒன்றிய பா.ஜ.க. அரசால் கொண்டு வரப்படாத ஒரு திட்டம் இருக்கிறதே, அது உங்கள் ஞாபகத்திற்கு வந்தால், அதுக்கு நான் பொறுப்பில்லை.

    இந்த அரங்கத்தை கம்பீரமாகவும், அழகாகவும் அமைத்துக் கொடுத்த பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவை பாராட்டுகிறேன். வாழ்த்துகிறேன். அவருடைய சாதனைப் பட்டியலில், இப்போது இந்த கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கமும் சேர்ந்துவிட்டது.

    சென்னையில், கலைஞர் நினைவகமும் விரைவில் திறக்கப்பட இருக்கிறது. இந்த விழாவை மிகப்பிரமாண்டமாக ஏற்பாடு செய்துள்ளார் அமைச்சர் மூர்த்தி.

    தை மாதம் பிறந்தாலே மூர்த்தி, ஜல்லிக்கட்டு மூர்த்தியாக மாறிவிடுவார். கோட்டைக்கு கூட வராமல் ஜல்லிக்கட்டு மைதானத்திலேயே இருந்துவிடுவார். அந்தளவுக்கு ஏறுதழுவுதலை தனது உயிராகக் கருதக்கூடிய மூர்த்தியை நான் பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன்!


    இங்கே அமைந்திருக்கும் இந்த பண்பாட்டுச் சின்னம், தமிழினத்தின் பண்பாட்டு மரபின் தொடர்ச்சி. சிந்து சமவெளி காலத்து முத்திரைகளிலேயே திமில் காளைகள் இருக்கிறது. அதில் காளைகளின் நேர்கொண்ட பார்வையை நாம் பார்க்கலாம்.

    பல்லாயிரம் ஆண்டுக்கு முன்பிருந்த ஓவியங்களில், திரண்டு தொங்கும் தாடை, அகன்று வளைந்த கொம்பு கொண்ட காளைகள் இருக்கிறது. ஏன், கீழடியில் திமிலுள்ள காளையின் முழு எலும்புக் கூடு கிடைத்திருக்கிறது. முல்லை நில மக்களுடைய வீர விளையாட்டாக இருந்திருக்கிறது. பழந்தமிழ் இலக்கியங்களிலும் இதைப் பற்றி உயர்வாக பாடப்பட்டிருக்கிறது.

    "எழுந்தது துகள் ஏற்றனர் மார்பு கவிழ்ந்தன மருப்பு கலங்கினர் பலர்" என்று ஏறுதழுவுதல் காட்சியை நம்முடைய கண்முன்னே கொண்டு வருவது கலித்தொகை. தை மாதம் தொடங்கி பொங்கலுக்காக முதல் மூன்று நாள், அரசு கருவூலத்தை தவிர மற்ற பொது அலுவலகங்களை மூட வேண்டும் என்று பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் கவர்னர் அறிவித்திருக்கிறார்.

    தமிழர்களின் பண்பாட்டை சரியாக அறிந்தவர்களாக, அந்தக் காலத்து கவர்னர்கள் இருந்திருக்கிறார்கள். ஆண்டு தோறும் தை மாதம் ஏறுதழுவுதல் நடக்கும்போது அலங்காநல்லூரும், அவனியாபுரமும், பாலமேடும் உற்சாகத்தோடு காணப்படும்.

    இந்த பண்பாட்டுத் திருவிழா உலகம் முழுவதும் பேசப்படும் என்று தான், இந்த அரங்கத்தை அமைக்கின்ற முடிவை எடுத்தோம். தலைவர் கலைஞருக்கு ஏறுதழுவதல் போட்டி மேல், தனி பாசம் உண்டு! அதனால்தான், தன்னுடைய மூத்த பிள்ளையான முரசொலியின் சின்னமாக, ஏறுதழுவுதல் காட்சியை வைத்தார்.

    1974-ம் ஆண்டு ஜனவரி மாதம் சென்னையில் ஏறு தழுவுதல் போட்டிகளை நடத்தியவர் கலைஞர். ஜல்லிக்கட்டு, ரேக்ளா ரேஸ் போன்றவற்றை 2006-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை தடை செய்தபோது, பாதுகாப்பான முறையில் நாங்கள் நடத்துவோம் என்று உறுதி அளித்து, அனுமதியை பெற்றவர் தலைவர் கலைஞர்.

    2007-ம் ஆண்டு உச்சநீதிமன்றம், ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தபோதும், தடையை நீக்குவதற்காக வலுவான வாதங்களை வைத்து வாதாடியதும் போட்டிகள் நடத்தலாம் என்று அனுமதியைப் பெற்றதும் கழக ஆட்சியில்தான்.

    ஆட்சி மாறியதும், 2014-ம் ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்த முடியாத சூழல் வந்தது. நம்முடைய இளைஞர்கள் சேர்ந்து, 'மெரினா தமிழர் புரட்சி' என்று சொல்கின்ற அளவிற்கு 2017-ல் மிகப்பெரிய மக்கள் போராட்டம் சென்னைக் கடற்கரையில் நடந்தது.

    அமைதி வழியில் போராடியவர்கள் மேல் வன்முறையை ஏவி கூட்டத்தை கலைத்தது அன்றைக்கு இருந்த அ.தி.மு.க. ஆட்சி. அவர்களே ஆட்டோக்களுக்கு தீ வைத்து கொளுத்தி, அந்த கொடுமையான காட்சியெல்லாம் அப்போது வெளியானது.

    தமிழ்நாடு முழுவதும் நடந்த போராட்டங்களுக்கு, அ.தி.மு.க. ஆட்சி அடி பணிந்தது. அதன் பிறகுதான் மீண்டும் ஏறுதழுவுதல் போட்டிகளை நடத்துகிற நிலை உருவானது. ஆனாலும், நிரந்தர தீர்வு எட்டப்படவில்லை. ஒவ்வொரு ஆண்டும் அனுமதி தருகிறோம் என்ற பெயரில் ஒன்றிய பா.ஜ.க. அரசு நாடகம் ஆடியது. ஆனாலும், உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டுதான் இருந்தது. அந்த வழக்கில், ஒன்றிய அரசு உச்சநீதி மன்றத்தில் என்ன சொன்னது தெரியுமா?

    'ஜல்லிக்கட்டு, மாட்டு வண்டி பந்தயம் உள்ளிட்ட போட்டிகளை நாங்கள் அங்கீகரிக்கவில்லை. மாட்டு வண்டி பந்தயம், ஜல்லிக்கட்டு போட்டியை ஊக்குவிக்கும் திட்டமும் இல்லை. கிராமப்புற வீரர்களை ஊக்குவிக்கும், கேலோ இந்தியா உள்ளிட்ட எந்தத் திட்டத்தின் கீழும் ஜல்லிக்கட்டு இல்லை" என்று தெரிவித்தார்கள் ஒன்றிய அரசு தரப்பில்.

    நமது திராவிட மாடல் அரசு நீதிமன்றத்தில் என்ன சொன்னது? "ஜல்லிக்கட்டு வெறும் பொழுதுபோக்கு போட்டி இல்லை. அது உழவர்களின் வாழ்வோடும், பண்பாட்டோடும் கலந்தது. போட்டிகளை பாதுகாப்பாக நடத்துகிறோம். காளைகளை நமது குடும்பங்கள் கவனத்தோடு வளர்க்கிறோம்" என்று அழுத்தம் திருத்தமாக வாதங்களை வைத்தோம். திராவிட மாடல் அரசின் தீவிர முயற்சியால், ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தலாம் என்ற வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை கடந்த ஆண்டு மே மாதம் உச்சநீதிமன்றத்தில் பெற்றோம்.


    இவ்வளவு தடைகளையும் தி.மு.க. அரசு உடைத்து எறிந்ததால்தான் இன்றைக்கு ஏறுதழுவுதல் போட்டி கம்பீரமாக நடக்கிறது. இந்த சாதனை வரலாற்றின் தொடர்ச்சியாக இந்த கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தில், காளைகள், ஏறுதழுவுதல் பற்றிய அருங்காட்சியகமும், நூலகமும் அமைக்கப்பட்டிருக்கிறது.

    பல நூற்றாண்டிற்கு முந்தைய நூல்களும், ஓவியங்களும், புகைப்படங்களும் இங்கே இருக்கிறது. இதனை உருவாக்கித் தந்த தமிழ் இணையக் கல்விக் கழகத்துக்கு நன்றி.

    அன்னை தமிழ் நிலத்துக்கு பேரறிஞர் அண்ணா 'தமிழ்நாடு' என பெயர் சூட்டினார். தமிழுக்கு 'செம்மொழி' தகுதி பெற்று தந்தார் தலைவர் கலைஞர். இன்றைக்கு தமிழர் பண்பாட்டு அடையாளமான ஏறுதழுவுதலுக்கு, நம்முடைய திராவிட மாடல் ஆட்சி அரங்கம் அமைத்திருக்கிறோம். இந்த தருணத்தில் நான் உங்களிடம் கேட்டுக்கொள்ள விரும்புவது, "சாதிப் பிளவுகளும், மத வேறுபாடுகளும், தமிழர் ஒற்றுமையை சிதைக்க பிற்காலத்தில் உருவாக்கப்பட்டவை என்பதை உணர்ந்து, தமிழர் என்ற நமது அடையாளத்தோடு இதுபோன்ற பண்பாட்டுத் திருவிழாக்களை ஒற்றுமையாக நடத்துவோம்"

    இந்த அரங்கில், காளைகள் வீரமாக களம் இறங்கட்டும்! காளையர்கள் தீரமாக காளைகளை தழுவட்டும். தமிழர்கள் அனைவரும் ஒற்றுமை உணர்வோடு கண்டுகளிப்போம்.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

    விழாவில் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, எ.வ.வேலு, மூர்த்தி, பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், தலைமை செயலாளர், மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • பேருந்து நிலையம் தயாராகாமல் ஆம்னி பேருந்துகளை இயக்கினால் செங்கல்பட்டு வரை போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.
    • அரசு எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தாமல் முடிவெடுத்துள்ளது.

    சென்னை:

    சென்னை நகருக்குள் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க கிளாம்பாக்கத்தில் புதிதாக பேருந்து முனையம் திறக்கப்பட்டு உள்ளது.

    தென்மாவட்டங்கள், கோவை உள்ளிட்ட பகுதிகளுக்கு பொங்கல் பண்டிகையின்போது அரசு விரைவு பஸ்கள் அங்கிருந்து இயக்கப்பட்டன. பேருந்து நிலையம் திறக்கப்பட்டதில் இருந்து அனைத்து அரசு விரைவு பஸ்களும் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படுகிறது. ஆம்னி பேருந்துகள் மட்டும் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது.

    ஆம்னி பஸ்கள் இன்று முதல் கோயம்பேட்டில் இருந்து இயக்க தடை விதிக்கப்பட்டது. கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்க வேண்டும் என்று போக்குவரத்து ஆணையரகம் அறிவித்தது. ஆனால் கோயம்பேட்டில் இருந்து ஆம்னி பேருந்துகளை இயக்க அனுமதிக்க வேண்டும் என ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்து இருந்தது.

    அரசு இதுகுறித்து எதுவும் தெரிவிக்காத போதிலும் ஆம்னி பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்து இயக்கப்பட்டு வருகின்றன.

    இதனால் அமைச்சர் சேகர்பாபு இன்று காலை ஆம்னி பேருந்துகள் அனைத்தும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து தான் இயக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி இருந்தார். ஆனால் கோயம்பேட்டில் இருந்து தான் இயக்குவோம் என்று ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்க தலைவர் கூறியுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

    2 லட்சம் பயணிகள் முன்பதிவு செய்துள்ள நிலையில், கிளாம்பாக்கத்தில் இருந்து ஆம்னி பேருந்துகளை இயக்க முடியாது. இன்று மட்டும் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர். கிளாம்பாக்கத்தில் இருந்து ஆம்னி பேருந்துகளை இயக்க அவகாசம் வேண்டும். அரசு எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தாமல் முடிவெடுத்துள்ளது.

    பேருந்து நிலையம் தயாராகாமல் ஆம்னி பேருந்துகளை இயக்கினால் செங்கல்பட்டு வரை போக்குவரத்து நெரிசல் ஏற்படும். ஆம்னி பேருந்துகள் வழக்கம்போல் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து தான் இயக்கப்படும். மாநகரப் பகுதியில் உள்ள பயணிகள் எங்கு முன்பதிவு செய்துள்ளார்களோ அந்த பகுதிக்கு நேரில் சென்று பயணம் மேற்கொள்ளலாம் என கூறினார்.

    • வடகிழக்கு பருவமழை காரணமாக மொத்தம் 22.96 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணை தற்போது நிரம்பிவிட்டது.
    • பாசன நிலங்கள் முழுமைக்கும் சுழற்சி முறையில் வினியோகம் செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் திசையன்விளை வட்டம் கோட்டைக்கருங்குளம் கிராமத்தில் நம்பியாற்றின் குறுக்காக அமைந்துள்ள 7 மற்றும் 8-வது அணைக்கட்டுகளுக்கு இடையில் நம்பியாறு அணை கட்டப்பட்டுள்ளது. இந்த அணையின் இடது மற்றும் வலது பிரதான கால்வாய்கள் வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டு அதன் மூலம் 40 குளங்கள் வாயிலாக சுமார் 1,744 ஏக்கர் நிலங்கள் பயனடைந்து வருகின்றனர்.

    வடகிழக்கு பருவமழை காரணமாக மொத்தம் 22.96 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணை தற்போது நிரம்பிவிட்டது. அதில் இருந்து பாசனத்திற்காக நீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி இன்று நம்பியாற்றின் வலது மற்றும் இடது மதகுகளின் பிரதான கால்வாய்களில் தண்ணீர் திறக்கப்பட்டது. இதில் சபாநாயகர் அப்பாவு கலந்துகொண்டு அணையில் இருந்து நீரை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சேரன்மகாதேவி சப்-கலெக்டர் அர்பித் ஜெயின், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    இதன் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 1,744 ஏக்கர் விளைநிலங்கள் பாசனம் பெறும். இந்த தண்ணீரானது வருகிற மார்ச் மாதம் 31-ந்தேதி வரை நாள் ஒன்றுக்கு 60 கனஅடிக்கு மிகாமல் 68 நாட்களுக்கு நீர் இருப்பை பொறுத்து திறந்துவிட உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை பாசன நிலங்கள் முழுமைக்கும் சுழற்சி முறையில் வினியோகம் செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது.

    இந்த தண்ணீரின் மூலமாக ராதாபுரம் வட்டாரத்தில் கோட்டைக் கருங்குளம், கஸ்தூரி ரெங்கபுரம், குமாரபுரம், திசையன்விளை, உறுமன்குளம், முதுமொத்தன்மொழி, கரைசுத்துபுதூர் ஆகிய கிராமங்கள் பாசன வசதி பெறும். 

    • பள்ளி ஆண்டு பெரு விழா நிகழ்ச்சியில் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டார்.
    • நிகழ்ச்சியில் மாலிக், ஜெகபர் சாதிக், மதர்ஷா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    தக்கலையில் உள்ள பிரசித்தி பெற்ற அஞ்சுவன்னம் பீர்முஹம்மதியா பள்ளி ஆண்டு பெரு விழா நிகழ்ச்சியில் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டார்.


    நிகழ்ச்சியில் அக்ரி நிஜாம், பத்மனாபபுரம் நகர காங்கிரஸ் தலைவர் ஹனுகுமார், மாவட்ட பொது செயலாளர் பால் டி சைலஸ், மாவட்ட செயலாளர் ஷாகுல் ஹமீது, மாவட்ட செயலாளர் தேவி, மாவட்ட ஊடக பிரிவு பொது செயலாளர் பீர்மைதீன், நகர இளைஞர் காங்கிரஸ் தலைவர் கௌதம், நகர மகிளா காங்கிரஸ் தலைவி நாசியா, நகர காங்கிரஸ் துணை தலைவர் நிர்மல், நகர பொது செயலாளர் ஆல்பர்ட், நகர செயலாளர் அம்ஜத் மற்றும் நாசர், தமீம், மாலிக், ஜெகபர் சாதிக், மதர்ஷா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • திமுக எம்.எல்.ஏ. மருமகள் மெர்லினாவின் தாய், தந்தையிடம் காவல் உதவி ஆணையர் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது.
    • பெங்களூரு சென்றுள்ள தனிப்படை போலீசார் அவர்களது உறவினர் வீடுகளிலும் இரண்டு பேர் குறித்தும் விசாரணை நடத்தினர்.

    சென்னை:

    பல்லாவரம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. கருணாநிதியின் மகன் மற்றும் மருமகள், தனது வீட்டில் சிறுமி ஒருவரை வீட்டு வேலைக்காக அழைத்துச் சென்று கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது.

    இதுதொடர்பாக திருவான்மியூர் மகளிர் காவல் நிலையத்தில் எஸ்.சி., எஸ்.டி. உட்பட ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இருவரும் தலைமறைவாகினர். இதையடுத்து இருவரையும் பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து திமுக எம்.எல்.ஏ. மருமகள் மெர்லினாவின் தாய், தந்தையிடம் காவல் உதவி ஆணையர் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது. மெர்லினா எங்கே இருக்கிறார் என்பது குறித்தும், சிறுமியை தாக்கிய சம்பவம் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தினர்.

    தலைமறைவாக உள்ள ஆண்ட்ரோ மதிவாணன் மற்றும் அவரது மனைவி மெர்லினாவின் செல்போன் சிக்னல் மூலம் இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

    பெங்களூரு சென்றுள்ள தனிப்படை போலீசார் அவர்களது உறவினர் வீடுகளிலும் இரண்டு பேர் குறித்தும் விசாரணை நடத்தினர்.

    இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக எம்.எல்.ஏ. மகன், மருமகள் அளித்த மனுவில், சரணடையும் நாளிலேயே ஜாமின் மனுவை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருந்தனர்.

    இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், திமுக எம்.எல்.ஏ.வின் மகன், மருமகள் சரணடையும் நாளிலேயே ஜாமின் வழங்குவது குறித்து சட்டத்திற்குட்பட்டு பரிசீலிக்க வேண்டும் என்று சென்னை முதன்மை அமர்விற்கு உத்தரவிட்டனர்.

    மேலும் அனைத்து தரப்பிற்கும் போதிய வாய்ப்பளித்து முடிவெடுக்க உத்தரவிட்டு வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

    • உடல் நலக்குறைவு காரணமாக நேற்று முன்தினம் தாராகவுரி இறந்தார்.
    • நாய் எஜமானியை பிரிய முடியாமல் பாசத்துடன் உடலை சுற்றி சுற்றி வந்த காட்சிகள் காண்போரை கண் கலங்க வைத்தது.

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள சிம்ம தீர்த்தம் பகுதியில் வசித்து வந்தவர் தாராகவுரி (வயது 85).

    பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்ட இவர் சுதந்திரத்திற்கு பிறகு குஜராத் மாநிலத்தில் குடியேறினார். பின்னர் மும்பையில் ஆசிரியையாக பணியாற்றினார். திருமணமாகாத இவர் சில ஆண்டுகள் சென்னையில் வசித்து வந்தார்.

    வயது முதிர்வு காரணமாக தனித்து வசிக்க இயலாத நிலையில், திருவண்ணாமலையில் உள்ள உறவினர் வீட்டில் கடந்த 2 ஆண்டுகளாக தங்கி இருந்தார்.

    இவர் தனிமையில் இருந்ததால் தனது பாதுகாப்பிற்காக நோபு என்ற நாய் ஒன்றை வளர்த்து வந்தார். தினமும் அதற்கு உணவு வைத்து அதனுடன் விளையாடி வந்தார்.

    இந்த நிலையில், உடல் நலக்குறைவு காரணமாக நேற்று முன்தினம் தாராகவுரி இறந்தார். தனது எஜமானி இறந்ததை அறியாமல் அந்த நாய் சுற்றி சுற்றி வந்து மூதாட்டியின் உடல் மீது படுத்துக்கொண்டு அவரை எழுப்ப முயன்றது.

    அவரது உடலை அடக்கம் செய்ய யாரும் இல்லாததால் சமூக சேவகர் மணிமாறன் உதவியை நாடினர். இதையடுத்து சமூக சேவகர் மணிமாறன் தாராகவுரியின் உறவினர்கள் தெரிவித்த சம்பிரதாயங்களின் அடிப்படையில் சடங்குகளை செய்தார்.

    தகனம் செய்ய கொண்டு செல்ல முயன்ற போது நாய் உடலை எடுக்க விடவில்லை. பின்னர் வாகனத்தில் உடலை ஏற்றியபோது அந்த வாகனத்தில் நாயும் ஏறிக்கொண்டது. அப்போதும் அந்த பெண்ணின் உடல் அருகே நின்று வாலை ஆட்டிக் கொண்டே தவித்தது.

    மேலும் சுடுகாடு வரை உடன் வந்த வளர்ப்பு நாய் இறுதிச் சடங்குகள் முடியும் வரை அங்கேயே பரிதவிப்புடன் இருந்தது. இதையடுத்து மூதாட்டியின் உடல் கிரிவலப் பாதையில் உள்ள சுடுகாட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

    நாய் எஜமானியை பிரிய முடியாமல் பாசத்துடன் உடலை சுற்றி சுற்றி வந்த காட்சிகள் காண்போரை கண் கலங்க வைத்தது.

    மூதாட்டியின் உறவினர்கள் நாயை வீட்டிற்கு அழைத்து சென்றனர்.

    • கடந்த சில நாட்களாக பிச்சி, மல்லிகை பூக்களின் வரத்து குறைவாகவே உள்ளது.
    • பிச்சி, மல்லிகை பூக்களின் விலை சற்று உயர்ந்து காணப்பட்டது.

    ஆரல்வாய்மொழி:

    தோவாளை பூ மார்க்கெட்டிற்கு குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நெல்லை மாவட்டம் ஆவரைகுளம், பழவூர், கோலியான்குளம் மற்றும் மதுரை, ஊட்டி, பெங்களூரு பகுதிகளில் இருந்தும் விற்பனைக்கு பூக்கள் கொண்டு வரப்படுகிறது.

    கடந்த சில நாட்களாக பிச்சி, மல்லிகை பூக்களின் வரத்து குறைவாகவே உள்ளது. பனிப்பொழிவு காரணமாக பூக்களின் வரத்து குறைந்து இருந்தது. இதனால் பிச்சி, மல்லிகை பூக்களின் விலை அவ்வப்போது உயர்ந்து வருகிறது. கடந்த சில நாட்களாக பிச்சி, மல்லிகை பூக்கள் கிலோ ரூ.1000-க்கு கீழ் விற்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் தைப்பூசம் மற்றும் குடியரசு தினத்தையொட்டி பூக்களின் தேவை அதிகரித்தது. வியாபாரிகள் பூக்களை வாங்குவதற்கு இன்று மார்க்கெட்டில் குவிந்திருந்தனர். இதனால் பிச்சி, மல்லிகை பூக்களின் விலை சற்று உயர்ந்து காணப்பட்டது.

    மல்லிகைப்பூ கிலோ ரூ.1800-க்கும், பிச்சிப்பூ ரூ.1100-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் சேலம் அரளி ரூ.230, தோவாளை அரளி ரூ.200, வாடாமல்லி ரூ.80, கோழிப்பூ ரூ.60, மஞ்சள் சிவந்தி ரூ.130, சம்பங்கி ரூ. 170, மஞ்சள் கேந்தி ரூ.70, சிவப்பு கேந்தி ரூ.80-க்கும் விற்கப்பட்டது. தாமரை பூ ஒன்று ரூ.10-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    • கோவிலில் இருந்து விநாயகரையும், சுவாமியையும், அம்மனையும் தேரில் எழுந்தருள செய்தனர்.
    • நாகராஜன், விஜயமணியன், ரங்கநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    பூதப்பாண்டி:

    பூதப்பாண்டி பூதலிங்கசுவாமி-சிவகாமி அம்மன் கோவிலில் தைத்திருவிழா கடந்த 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் மங்கள இசை, பக்தி இசை, வாகன பவனி நடைபெற்றது.

    9-ம் திருவிழாவான இன்று காலை தேரோட்டம் நடந்தது. கோவிலில் இருந்து விநாயகரையும், சுவாமியையும், அம்மனையும் தேரில் எழுந்தருள செய்தனர். பின்னர் தேரோட்டம் நடந்தது. பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

    விழாவில் விஜய் வசந்த் எம்.பி, தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ., முன்னாள் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன், அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், உறுப்பினர் ராஜேஷ், பூதப்பாண்டி பேரூராட்சி தலைவர் ஆலிவர் தாஸ், செயல் அலுவலர் பாலசுப்பிரமணியன், தி.மு.க. துணைச் செயலாளர்கள் கரோலின் ஆலிவர் தாஸ், பூதலிங்கம், ஆரல்வாய்மொழி பேரூராட்சி தலைவர் முத்துக்குமார், தோவாளை ஒன்றிய தலைவர் சாந்தினி பகவதியப்பன், நாகராஜன், விஜயமணியன், ரங்கநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


    இரவு 7 மணிக்கு பக்தி மெல்லிசையும், 9 மணிக்கு சுவாமி-அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வருதல் நிகழ்ச்சியும், இரவு 10 மணிக்கு சப்தாவர்ணம் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    10-ம் திருவிழாவான நாளை (25-ந்தேதி) காலை 10 மணிக்கு சுவாமி- அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக தீபாராதனையும், மாலை 6 மணிக்கு மேல் ஆராட்டு வைபோக நிகழ்ச்சியும், 7 மணிக்கு பக்தி மெல்லிசையும், இரவு 9 மணிக்கு ஸ்ரீ கன்னி விநாயகர் தூத்துவாரி அம்மன் கோவிலில் இருந்து சுவாமியும் அம்மாளும் தெப்போற்சவம் புறப்படும் நிகழ்ச்சியும் இரவு 10 மணிக்கு தெப்போற்சவம் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    • தேர் 4 ரத வீதிகளில் வலம் வந்து நிலையை அடைந்தது.
    • தி.மு.க. மத்திய ஒன்றிய செயலாளர் அய்யப்பன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    விராலிமலை:

    விராலிமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது.

    விராலிமலையில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணியசுவாமி கோயில் உள்ளது. இங்கு மலைமேல் முருகன் வள்ளி-தெய்வானையுடன் அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இங்கு வருடம் தோறும் பல்வேறு திருவிழாக்கள் வெகு விமர்சியாக நடத்தப்படுவது வழக்கம்.

    அதன்படி இந்த வருடம் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு கடந்த 16-ந்தேதியன்று சுப்ரமணிய சுவாமி கோவிலில் கொடியேற்றப்பட்டது. அதனை தொடர்ந்து தினமும் காலை மற்றும் இரவு என இரு வேலைகளிலும் மஞ்சம், பத்மமயில், கேடயம், மயில், பூதம், நாகம், சிம்மம், வெள்ளிகுதிரை உள்ளிட்ட வாகனங்களில் முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளி சுவாமியின் திருவீதி உலா நடைபெற்றது.


    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (புதன்கிழமை) நடைபெற்றது. தேரை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ. வடம்பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். தேர் 4 ரத வீதிகளில் வலம் வந்து நிலையை அடைந்தது.

    நிகழ்ச்சியில் தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் பழனியப்பன், முன்னாள் ஆவின் சேர்மன் பழனியாண்டி, அ.தி.மு.க. மாவட்ட கவுன்சிலர் சிவசாமி, முன்னாள் யூனியன் சேர்மன் மணி, தி.மு.க. மத்திய ஒன்றிய செயலாளர் அய்யப்பன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். அதனை தொடர்ந்து 25-ந் தேதி இரவு தெப்ப உற்சவம் நடக்கிறது. 26-ந் தேதி விடையாற்றியுடன் தைப்பூச திருவிழா நிறைவடைகிறது தேரோட்டம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்துடன் இணைந்து மண்டக படிதாரர்கள், உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.

    ×