என் மலர்
உள்ளூர் செய்திகள்
- வடிவுடையம்மன் கோவில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது.
- தெப்பத் திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
திருவொற்றியூர்:
திருவொற்றியூரில் உள்ள வடிவுடையம்மன் கோவில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. இந்த கோவிலின் உள்ளே பிரம்ம தீர்த்தமும், வெளியே ஆதிஷேச தீர்த்த குளமும் உள்ளது. ஆண்டுதோறும், தைப்பூசத்தையொட்டி கோவில் வெளியே உள்ள ஆதிஷேச தீர்த்த குளத்தில் தெப்பத் திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டுக்கான தெப்பத்திருவிழா இன்று மாலை நடைபெற உள்ளது. மாலை 6 மணிக்கு தெப்பத்தில் உற்சவர் சந்திரசேகரர் உடனுறை திரிபுரசுந்தரி தாயார் எழுந்தருளி ஆதிஷேச தீர்த்த குளத்தின் மைய மண்டபத்தை ஐந்து முறை வலம் வருவார். இரவு 7 மணிக்கு மேல் தியாகராஜ சுவாமி மாடவீதி உற்சவம் நடைபெற உள்ளது.
- தி.மு.க. பொறுப்பேற்று 2 ஆண்டு 8 மாத காலத்தில் அவர்கள் செய்த நன்மைகள் என்ன என்று கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார்கள்.
- தினந்தோறும் கொலை, கொள்ளை, திருட்டு நடக்காத நாளே இல்லை.
சேலம்:
சேலம் மல்லமூப்பம்பட்டியில் தி.மு.க., பா.ம.க., கொ.ம.தே.க., உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 1000-க்கும் மேற்பட்டோர் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தங்களை அ.தி.மு.க.வில் இணைத்துக் கொண்டனர். தொடர்ந்து அவர்களை வரவேற்று எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
அ.தி.மு.க. 30 ஆண்டுகால ஆட்சியின் காரணமாக இந்தியாவில் உயர்கல்வி படிப்பதில் தமிழ்நாடு முதல் இடத்தில் உள்ளது. கல்வி புரட்சியில் அ.தி.மு.க. 30 ஆண்டு கால ஆட்சியில் மறுமலர்ச்சி ஏற்படுத்தியது. தி.மு.க. பொறுப்பேற்று 2 ஆண்டு 8 மாத காலத்தில் அவர்கள் செய்த நன்மைகள் என்ன என்று கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார்கள்.

கருணாநிதி அவருக்கு பின்பு மு.க.ஸ்டாலின், தற்போது உதயநிதி, நடந்து முடிந்த தி.மு.க. இளைஞரணி மாநாட்டில் இன்பநிதியும் கலந்து கொண்டார். மன்னராட்சி முறையை கொண்டுவர தி.மு.க. முயற்சி செய்து வருகிறது. மக்களை பற்றி கவலைப்படுவதில்லை. அதிகார மையம் தி.மு.க.வில் அதிகரித்து விட்டது. தி.மு.க.வில் 4 முதலமைச்சர்கள் உள்ளனர். சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது. தினந்தோறும் கொலை, கொள்ளை, திருட்டு நடக்காத நாளே இல்லை. கஞ்சா தாராளமாக கிடைக்கிறது. இதனால் மாணவர்கள், இளைஞர்கள் சீரழிகின்றனர். இதற்கு அரசு பதில் சொல்ல வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- நிலத்தில் எழுந்து நடக்க முடியாத நிலையில் பெண் காட்டுயானை ஒன்று படுத்திருந்தது.
- கால்நடை மருத்துவ குழுவினர் யானையின் உடலை கண்காணித்து வருகின்றனர்.
மேட்டுப்பாளையம்:
மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை வனச்சரகத்திற்குட்பட்ட லிங்காபுரம் அருகில் முருகன் என்பவரின் விவசாய நிலம் உள்ளது.
இந்த நிலத்தில் எழுந்து நடக்க முடியாத நிலையில் பெண் காட்டுயானை ஒன்று படுத்திருந்தது.
இதை பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக சிறுமுகை வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு மாவட்ட வன அலுவலர் ஆலோசனையின் பேரில் சிறுமுகை வனரக அலுவலர் மனோஜ், வன கால்நடை மருத்துவர் சுகுமார், உதவி கால்நடை மருத்துவர் தியாகராஜன் ஆகியோர் கொண்ட மருத்துவ குழுவினர் பெண் காட்டு யானைக்கு முதலுதவி சிகிச்சை மற்றும் ஊட்டச்சத்து மருந்துகள் அளித்து வருகின்றனர்.
யானையின் உடல்நிலை மெலிந்த நிலையில் உள்ளதால் தொடர்ந்து கால்நடை மருத்துவ குழுவினர் யானையை கண்காணித்து வருகின்றனர்.
இன்றும் உடல் நலம் பாதித்த காட்டு யானைக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- பவதாரிணி மறைந்தது மிகப்பெரிய இழப்பு.
- பவதாரிணியின் இனிய குரலை இனி கேட்க முடியாது என்பதே வேதனை தான்.
சென்னை:
கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் அதன் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

விஜயகாந்த் உயிருடன் இருந்த காலத்திலேயே விருது வழங்கப்பட்டிருக்க வேண்டும். விஜயகாந்த் இருந்தபோதே கொடுத்திருந்தால் சந்தோஷமாக பெற்றிருப்போம். விஜயகாந்த் மறைந்து 30 நாட்களுக்கு பிறகு இந்த சிறப்பை மத்திய அரசு கொடுத்துள்ளது. விஜயகாந்த் மீது அன்பு வைத்திருந்தவர்களுக்கு பத்ம பூஷன் விருதை சமர்ப்பிக்கிறோம்.
பவதாரிணி மறைந்தது மிகப்பெரிய இழப்பு. பவதாரிணியை சின்ன குழந்தையாக இருந்த போதிருந்து பார்த்திருக்கிறேன். பவதாரிணியின் இனிய குரலை இனி கேட்க முடியாது என்பதே வேதனை தான் என்றார்.
- “ஆழி சூழ் உலகு” எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2004-ம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் புதினம் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.
- நான் எனது நிலத்துக்கான மக்களுக்கான பணிகளை செய்வதை பெருமையாகவும், சந்தோஷமாகவும் கருதுகிறேன்.
நெல்லை:
குடியரசு தினத்தையொட்டி பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.
அதன்படி பத்ம விபூஷன் விருது 5 பேருக்கும், பத்ம பூஷன் விருது 17 பேருக்கும், பத்மஸ்ரீ விருது 110 பேருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் நெல்லை மாவட்டம் உவரியை சேர்ந்த பிரபல எழுத்தாளர் ஜோ டி குரூஸ் கல்வி மற்றும் இலக்கியப் பிரிவில் பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
உவரி கிராமத்தில் பிறந்து வளர்ந்து பாளை புனித சவேரியார் பள்ளியில் அவர் தனது உயர்கல்வியை முடித்தார். இடையன்குடி கால்டுவெல் மேல்நிலைப் பள்ளியில் விஞ்ஞான பாடம் படித்த இவர், சென்னை லயோலா கல்லூரியில் பொருளாதாரத்தில் முதுகலையும், திருச்சி வளனார் கல்லூரியில் ஆய்வறிஞர் பட்டமும் பெற்றவர்.
தமிழ் நெய்தல் குடிகளின் வாழ்வை இலக்கியத்தில் பதிவுசெய்த குறிப்பிடத்தக்க எழுத்தாளர் ஆவார். சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சரக்குக் கப்பல் நிறுவனங்களில், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தலைமைப் பொறுப்பில் இவர் பணியாற்றினார். இவர் கொற்கை, ஆழிசூழ் உலகு உள்ளிட்ட பல நாவல்களையும், புலம்பல்கள் என்ற கவிதையையும், விடியாத பொழுதுகள் உள்ளிட்ட ஏராளமான ஆவண படங்களையும் வெளியிட்டுள்ளார்.
இவரது கொற்கை என்ற புதினத்திற்காக 2013-ம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருது இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இவர் எழுதிய "ஆழி சூழ் உலகு" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2004-ம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் புதினம் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது. கடந்த 2013-ம் ஆண்டு நடிகர் தனுஷ் நடிப்பில், இயக்குநர் பரத் பாலா இயக்கிய மரியான் திரைப்படத்துக்கு வசனங்களை இவர் எழுதி உள்ளார்.
இந்நிலையில் அவருக்கு தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பத்மஸ்ரீ விருது குறித்து கேட்டபோது அவர் கூறியதாவது:-
கடற்கரை மக்களுக்கான அங்கீகாரமாக இதனை நான் பார்க்கிறேன். எனக்கு தனிப்பட்ட முறையில் எதுவும் இல்லை.
நான் எனது நிலத்துக்கான மக்களுக்கான பணிகளை செய்வதை பெருமையாகவும், சந்தோஷமாகவும் கருதுகிறேன். அந்த வகையில் அதனை மத்திய அரசு அங்கீகரித்திருப்பதில், கடலோர மக்களை அரசு மதிக்கிறது என்பதில் எனக்கு சந்தோஷம் என்றார்.
- கடந்த 9 ஆண்டுகளில் நடந்த விபத்துகளில் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர்.
- இந்தியாவின் வேறு எந்த பகுதியிலும் இந்த அளவுக்கு அதிகமாக விபத்துகள் நடந்ததில்லை.
கடத்தூர்:
தருமபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் பகுதியில் நிகழ்ந்த சாலை விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 8 பேர் காயமடைந்துள்ளனர். இது குறித்து பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-
சாலை விபத்தில் உயிரிழந்த அனைவரின் குடும்பங்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்களுக்கு தரமான மருத்துவம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
தொப்பூர் பகுதியில் நடந்ததை விபத்து என்று கூற முடியாது, மத்திய, மாநில அரசுகளின் அலட்சியத்தால் நடந்த கொலை என்று தான் கூற வேண்டும். தொப்பூர் பகுதி நெடுஞ்சாலை நாளுக்கு நாள் அதிக விபத்து நடக்கும் பகுதியாகவும், உயிர்ப்பலி வாங்கும் சாலையாகவும் மாறி வருகிறது. அதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். சில ஆண்டுகளுக்கு முன் தொப்பூரில் ஒரே நேரத்தில் 15 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். மொத்தம் 400 மீட்டர் தொலைவு மட்டுமே கொண்ட தொப்பூர் கணவாய் பகுதியில் கடந்த 9 ஆண்டுகளில் நடந்த விபத்துகளில் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவின் வேறு எந்த பகுதியிலும் இந்த அளவுக்கு அதிகமாக விபத்துகள் நடந்ததில்லை. தொப்பூர் கணவாய் பகுதியில் நடைபெறும் சாலை விபத்துகளுக்கு மனிதத் தவறுகளை விட, தேசிய நெடுஞ்சாலையின் அபத்தமான வடிவமைப்பு தான் காரணம் என்பதையும் பல்வேறு தருணங்களில் சுட்டிக் காட்டியுள்ளேன். தொப்பூர் பகுதியில் விபத்துகளைத் தடுக்க வேண்டும் என்ற அக்கறை மத்திய, மாநில அரசுகளுக்கு இருந்திருந்தால் சாலை வடிவமைப்பை மாற்ற எப்போதோ நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
- பாராளுமன்ற கட்டிடம் தான் புரட்சியாளர் அம்பேத்கர் போன்ற தலைவர்கள் அமர்ந்து புதிய இந்தியாவை கட்டமைக்க விவாதித்த இடம்.
- ஜனநாயகத்தை காப்பாற்ற அரசியலமைப்பை காப்பாற்ற சட்டத்தின் விளிம்புகளை காப்பாற்ற இந்த மாநாடு ஒருங்கிணைக்கப்படுகிறது.
திருச்சி:
திருச்சியில் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கட்சியின் தலைவரும் சிதம்பர பாராளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் தலைமையில் நடைபெறும் வெல்லும் சனநாயகம் மாநாட்டிற்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு வருகை தந்த தொல்.திருமாவளவனை கட்சியினர் உற்சாகமாக வரவேற்றனர்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறும் போது, நடைபெற உள்ள மாநாட்டில் புதிய பாராளுமன்ற கட்டிடம் உள்ளது. மேடை புதிய நாடாளுமன்ற கட்டிடம், வரவேற்பு வளைவு பழைய நாடாளுமன்ற கட்டிடம், இந்த பாராளுமன்ற கட்டிடம் தான் புரட்சியாளர் அம்பேத்கர் போன்ற தலைவர்கள் அமர்ந்து புதிய இந்தியாவை கட்டமைக்க விவாதித்த இடம்.
ஆகவே அந்த கட்டிடத்தை நாம் மறந்து விட முடியாது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. பழைய பாராளுமன்ற கட்டிடம் அதனை வரவேற்பு வளைவாகவும் அதன் பக்கத்தில் அரசியலமைப்பு சட்ட புத்தகத்தை திறந்து வைப்பது போல கட்டமைப்பு உள்ளது.
இதில் மூன்று வாயில்கள் கொண்டதாக வளைவை அமைத்துள்ளோம். ஒன்று சுதந்திர வாயில் மெயின் கேட் சமத்துவ வாயில், மூன்றாவது சகோதரத்துவ வாயில் இது அரசியல் அமைப்பு சட்டத்தில் முக்கியமானதாகும்.
சென்னையிலிருந்து சமத்துவ சுடர் தஞ்சையில் இருந்து சகோதரத்துவச்சுடர் வருகிறது. மதுரை மேலவளைவிலிருந்து விடுதலை களத்தில் இருந்து சுதந்திர சுடர் மூன்றும் இன்று மதியம் மாநாடு திடலுக்கு வரவுள்ளது. மாநாட்டு மேடையில் இருந்து அனைத்து தலைவர்களும் ஜனநாயக சுடர்களை ஏந்துகின்றனர்.
இந்த நாட்டில் ஜனநாயகத்திற்கு ஆபத்து உள்ளது. மீண்டும் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் அரசமைப்புச் சட்டத்தையே தூக்கி எறிந்து விடுவார்கள். ஜனநாயகத்தை குழி தோண்டி புதைத்து விடுவார்கள், சமூக நீதியை அழித்து எறிந்து விடுவார்கள், தேர்தல் முறையே இல்லாமல் போய் விடும் தேர்தல் பழங்கனவாகிவிடும்.
ஆகவே, ஜனநாயகத்தை காப்பாற்ற அரசியலமைப்பை காப்பாற்ற சட்டத்தின் விளிம்புகளை காப்பாற்ற இந்த மாநாடு ஒருங்கிணைக்கப்படுகிறது.
இந்தியா கூட்டணியில் இருந்து யாரும் வெளியே போய்விடவில்லை. கூட்டணிக்குள் தான் இருக்கிறார்கள். காங்கிரஸ் உடன் பேச்சு வார்த்தையில் சமூக தீர்வு எட்டப்படவில்லை என மம்தா பானர்ஜி கூறி உள்ளார்.
மறுபடியும் பேச்சு வார்த்தைக்கு இடம் இருக்கிறது. இதேபோல் ஆம்ஆத்மி கட்சி பஞ்சாபில் மட்டும்தான் தனித்து போட்டியிட உள்ளது. இந்தியா கூட்டணி சின்னச் சின்ன முரண்பாடுகள் உள்ளது. இந்தியா கூட்டணி உறுதியாக இருக்கும்.
இந்த கூட்டணி தேர்தலுக்குப் பின்னர் எவ்வளவு வலிமை மிக்கதாக உள்ளது என்பதை உணர முடியும்.
காங்கிரஸ் விட்டுக் கொடுத்ததன் அடிப்படையில் தான் இந்த கூட்டணி உருவாக்கியுள்ளது. இல்லை என்றால் கூட்டணி உருவாகி இருக்காது. நாங்கள் தேசிய கட்சி என இருந்திருந்தால் இந்த கூட்டணி உருவாகி இருக்காது.
காங்கிரஸ் பொறுத்தவரை விட்டுக் கொடுத்து அரவணைத்து செல்கிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சிதம்பரத்தில் மீண்டும் போட்டியிடுகிறீர்களா என்ற கேள்விக்கு அது என் சொந்த தொகுதி என தெரிவித்தார்.
பேட்டியின் போது சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி மேலிட தேர்தல் பொறுப்பாளரும், மாநாட்டு பொறுப்பாளருமான இரா.கிட்டு தொழிலாளர் விடுதலை முன்னணி மாநில நிர்வாகி கவுன்சிலர் பிரபாகரன் உடனிருந்தனர்.
- அ.தி.மு.க.வின் சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு அறிவிக்கப்பட்டு உள்ளது.
- மக்கள் பிரச்சனைகளுக்கான தீர்வுகளை, எதிர்கால நாட்டின் வளர்ச்சிக்கான திட்டங்களை உள்ளடக்கியதாக கழகத்தின் தேர்தல் அறிக்கைகள் இருந்திருக்கின்றன.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
18-வது பாராளுமன்ற மக்களவை பொதுத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு, அ.தி.மு.க.வின் சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு அறிவிக்கப்பட்டு உள்ளது.
எந்தவொரு தேர்தல் என்றாலும், மக்கள் பிரச்சனைகளுக்கான தீர்வுகளை, எதிர்கால நாட்டின் வளர்ச்சிக்கான திட்டங்களை உள்ளடக்கியதாக கழகத்தின் தேர்தல் அறிக்கைகள் இருந்திருக்கின்றன. அதுபோன்றே, சமீப காலங்களில் ஏற்பட்டுள்ள
சமூக அரசியல், பொருளாதார மாற்றங்களை கணக்கில் எடுத்து, தமிழ்நாட்டின் நலனை முன்னிலைப்படுத்துவதும், இந்திய சமூக அரசியல் முன்னேற்றத்திற்கு ஆக்கப்பூர்வமான பங்களிப்பை வழங்குவதுமான ஒரு தேர்தல் அறிக்கையை தயாரிக்கும் பொருட்டு, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர் தமிழ்நாடு முழுவதும் வருகிற 5-ந்தேதி முதல் 10-ந் தேதி வரை, கீழ்க்கண்ட 9 மண்டலங்களுக்கு சுற்றுப் பயணம் செய்து பல்வேறு தரப்பு மக்களையும் சந்தித்து தரவுகளை சேகரித்து, ஆகச் சிறந்த தேர்தல் அறிக்கை தயார் செய்யப்பட உள்ளது.
அதன்படி, 5-ந்தேதி சென்னை, வேலூர், 6-ந்தேதி விழுப்புரம், சேலம், 7-ந்தேதி தஞ்சை, திருச்சி, 8-ந்தேதி கோவை, மதுரை, 10-ந்தேதி நெல்லை மண்டலங்களில் கருத்து கேட்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவினருக்கான சைக்கிளிங் போட்டி.
- கோவளம் முதல் மாமல்லபுரம் வரையிலான பகுதியில் சைக்கிளிங் போட்டி நடைபெறுகிறது.
சென்னை:
கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் 2024 தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை மற்றும் திருச்சி ஆகிய நகரங்களில் நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவினருக்கான சைக்கிளிங் போட்டியானது கிழக்கு கடற்கரை சாலையில் கோவளம் முதல் மாமல்லபுரம் வரையிலான பகுதியில் நாளை (27.01.2024) மற்றும் நாளை மறுநாள் (28.01.2024) நடைபெற இருக்கிறது.
எனவே கிழக்கு கடற்கரை சாலையில் கோவளம் முதல் மாமல்லபுரம் வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் தங்கள் பயணத்திற்கு பூஞ்சேரி, திருப்போரூர், கேளம்பாக்கம் (OMR) வழியாக பயன்படுத்தி கொள்ளவும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- தேசிய கொடியை கோவில் செயல் அலுவலர் அய்யர் சிவமணி ஏற்றி மரியாதை செய்தார்.
- குடியரசு தினவிழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
நெல்லை:
குடியரசு தினத்தையொட்டி இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தேசிய கொடி ஏற்றும் நிகழ்வு பாரம்பரியமாக நடைபெற்று வருகிறது.
அதன்படி தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் குடியரசு தின விழாவையொட்டி கோவில் முன்பு அமைந்துள்ள விக்டோரியா மகாராணியால் வழங்கப்பட்ட தூண் முன்பு தேசியக்கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கோவிலில் தேசியக்கொடி வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட பின்னர் யானை காந்திமதி முன் செல்ல ஊர்வலமாக கோவில் ஊழியர்களால் தேசியக்கொடி எடுத்து வரப்பட்டது.
தொடர்ந்து கொடிக்கம்பம் முன்பு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தேசிய கொடியை கோவில் செயல் அலுவலர் அய்யர் சிவமணி ஏற்றி மரியாதை செய்தார்.
அப்போது கோவில் யானை காந்திமதி 3 முறை பிளிறி, தேசியக் கொடிக்கு வணக்கம் செய்தது. அதே வேளையில் கோவில் ஊழியர்களும் தேசியக் கொடிக்கு வணக்கம் செலுத்தி மரியாதை செய்தனர்.
தொடர்ந்து தேசியக் கொடிக்கு மகா தீபாராதனை நடைபெற்று குடியரசு தினவிழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
- வருகிற பாராளுமன்ற தேர்தலில் எனது கட்சி அதிக தொகுதிகளில் போட்டியிடும்.
- யாருடன் கூட்டணி என்பதை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டு விரைவில் அறிவிப்பேன் என்றார்.
சென்னை:
நடிகர் மன்சூர் அலிகான் 'தமிழ் தேசிய புலிகள்' என்ற பெயரில் அரசியல் கட்சி நடத்தி வந்தார்.
இந்த நிலையில் கட்சியின் பெயரை தற்போது இந்திய ஜனநாயக புலிகள் என மாற்றியுள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழ் தேசிய புலிகள் என பெயரிடப்பட்ட நமது கட்சி இந்திய ஜனநாயக புலிகள் என மாற்றப்பட்டுள்ளது. இந்த மாற்றம் சாதி வெறியை நீக்கி, கல்வி மற்றும் சமத்துவ உரிமைகளை அனைவருக்கும் குறிப்பாக ஏழைகளுக்கு உறுதி செய்வதில் உள்ள அக்கறையை பிரதிபலிக்கிறது.
தந்தை பெரியார் மற்றும் டாக்டர் அம்பேத்கரின் கொள்கைகளை பின்பற்றி காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை நமது இயக்கத்தை விரிவுபடுத்தும் இந்த புதிய பயணத்தின் மூலம் நாம் சமூக நீதி மற்றும் சமத்துவத்தை உறுதி செய்வோம்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
இதைத் தொடர்ந்து நிருபர்களிடம் மேலும் அவர் கூறியதாவது:-
வருகிற பாராளுமன்ற தேர்தலில் எனது கட்சி அதிக தொகுதிகளில் போட்டியிடும். யாருடன் கூட்டணி என்பதை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டு விரைவில் அறிவிப்பேன் என்றார்.

மன்சூர் அலிகானிடம் விஜய்-யின் அரசியல் வருகை பற்றிய கேள்விக்கு சீமான், கமல், சரத்குமார், விஜயகாந்த் இன்னும் பிற நடிகர்களுக்கு முன்பே நான் அரசியலில் களம் கண்டவன். எனக்கு யாரும் போட்டி கிடையாது. யாருக்கும் நானும் போட்டி கிடையாது. மக்கள் நலனே முக்கியம் என்று கூறினார்.
- கள்ளச்சாராய வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 140 வாகனங்கள் ஏலத்தில் விடப்பட்டு ரூ.32 லட்சத்து 53 ஆயிரத்து 800 அரசு கருவூலத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.
- பள்ளி-கல்லூரிகளில் 275 கள்ளச்சாராய விழிப்புணர்வு முகாம்களை நடத்தி 250 கிராமங்கள் கள்ளச்சாராய இல்லாத கிராமமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னை:
தமிழக காவல்துறையில் கள்ளச்சாராயத்தை ஒழிக்கும் பணியில் மெச்சத்தக்க வகையில் பணியாற்றும் காவலர்களுக்கு ஆண்டுதோறும் காந்தியடிகள் பதக்கம் வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு இந்த பணிக்காக விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய் உள்பட 5 பேர் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். இவர்களுக்கு ரூ.40 ஆயிரத்துக்கான காசோலை மற்றும் பதக்கங்களை இன்று நடைபெற்ற குடியரசு தின விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
காந்தியடிகள் பதக்கம் பெற்றவர்கள் விவரம் வருமாறு:-
விழுப்புரம் மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டாக பணிபுரிந்து வரும் ஐ.பி.எஸ். அதிகாரியான சசாங்சாய்க்கு காந்தியடிகள் பதக்கம் வழங்கப்பட்டு உள்ளது. 2012-ம் ஆண்டு ஐ.பி.எஸ். அதிகாரியாக தேர்வான சசாங்சாய், திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் 7-ந்தேதி பணியில் சேர்ந்தார். திருப்பூர் மாவட்டத்தில் பணியாற்றிய காலத்தில் இவர் நடத்திய மதுவிலக்கு வேட்டையில் 9742 வழக்குகள் போடப்பட்டு 9822 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.
கள்ளச்சாராய வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 140 வாகனங்கள் ஏலத்தில் விடப்பட்டு ரூ.32 லட்சத்து 53 ஆயிரத்து 800 அரசு கருவூலத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் 26-ந்தேதி முதல் விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டாக பணிபுரிந்து வரும் சசாங்சாய் அங்கும் தீவிர மதுவிலக்கு வேட்டையில் ஈடுபட்டுள்ளார். இதனால் 790 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 843 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பள்ளி-கல்லூரிகளில் 275 கள்ளச்சாராய விழிப்புணர்வு முகாம்களை நடத்தி 250 கிராமங்கள் கள்ளச்சாராய இல்லாத கிராமமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மரக்காணத்தில் 22 பேர் பலியான கள்ளச்சாராய வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த முக்கிய குற்றவாளி மதன்குமாரை கொல்கத்தாவில் கைது செய்தும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். இதனால் காந்தியடிகள் பதக்கம் போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய்க்கு வழங்கப்பட்டுள்ளது.
சென்னை தெற்கு மத்திய நுண்ணறிவு பிரிவு துணை கண்காணிப்பாளரான காசி விஸ்வநாதனுக்கும் காந்தியடிகள் பதக்கம் வழங்கப்பட்டுள்ளது. நுண்ணறிவு பிரிவில் மதுவிலக்கு குற்றங்கள் தொடர்பாக சிறப்பான தகவல்களை சேகரித்துள்ள இவர் மதுவிலக்கு அமலாக்க பிரிவில் சிறப்பாக பணிபுரிந்துள்ளார். மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திண்டுக்கல் மாவட்டங்களில் இவர் கள்ளச்சாராயம் மற்றும் போலி மதுவை ஒழிப்பதில் தீவிரமாக செயலாற்றியுள்ளார்.
செங்குன்றம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் முனியசாமிக்கும் காந்தியடிகள் பதக்கம் கிடைத்துள்ளது. 2000-ம் ஆண்டு சப்-இன்ஸ்பெக்டராக பணியில் சேர்ந்த முனியசாமி, 2013-ம் ஆண்டு முதல் ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றிய காலத்தில் பல வழக்குகளில் எதிரிகளை கைது செய்வதற்கும் குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்யவும் உதவி புரிந்துள்ளார்.
செங்குன்றம் மதுவிலக்கு அமலாக்க பிரிவில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் முனியசாமி போதை பொருட்கள் கடத்தல் வழக்கில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இதற்காக அவருக்கு பதக்கம் வழங்கப்பட்டுள்ளது.
மதுரை மத்திய நுண்ணறிவு பிரிவு சப்-இன்ஸ்பெக்டரான பாண்டியனுக்கும் போதை பொருட்கள் மற்றும் மதுபான கடத்தல் வழக்குகளில் சிறப்பாக செயல்பட்டமைக்காக காந்தியடிகள் பதக்கம் வழங்கப்பட்டுள்ளது. 2021, 2022, 2023 ஆகிய ஆண்டுகளில் மதுவிலக்கு சட்டத்தின்படி 160 வழக்குகளை பதிவு செய்துள்ளார். இதில் 32 வழக்குகள் கொடுங்குற்ற வழக்குகளாகும்.
ராணிப்பேட்டை மத்திய நுண்ணறிவு பிரிவு போலீஸ் ஏட்டு ரங்கநாதனுக்கும் காந்தியடிகள் பதக்கம் வழங்கப்பட்டுள்ளது. மது விலக்கு வேட்டையில் சிறப்பாக பணியாற்றியதாக அவருக்கு பதக்கம் கிடைத்து உள்ளது.
தமிழகத்திலேயே சிறந்த காவல் நிலையமாக மதுரை மாவட்டத்தை சேர்ந்த எஸ்.எஸ்.காலனி காவல் நிலையத்திற்கான கோப்பையை காவல் ஆய்வாளர் பூமிநாதனிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
நாமக்கல் போலீஸ் நிலையத்துக்கு 2-வது இடமும், பாளையங்கோட்டை காவல் நிலையத்துக்கு 3-வது இடமும் கிடைத்துள்ளன.






