என் மலர்
உள்ளூர் செய்திகள்
- குடியரசு தின விழா தேநீர் விருந்து, ஜனவரி 26 ஆம் தேதி மாலை ஆளுநர் மாளிகையில் நடைபெறுகிறது.
- காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆளுநர் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக ஏற்கனவே தெரிவித்தனர்.
ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தையொட்டி சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து அளிக்கப்படுவது வழக்கம். இதில் தமிழக முதல்வர், அமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், பாராளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள், உயர்நீதிமன்ற நீதிபதிகள், மூத்த ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஆளுமைகள் எனப் பலரும் பங்கேற்பார்கள்.
அந்த வகையில், இந்த ஆண்டு குடியரசு தின விழா தேநீர் விருந்து, இன்று மாலை ஆளுநர் மாளிகையில் நடைபெறுகிறது. இந்த விருந்தில் கலந்துகொள்ள அரசியல் கட்சியினர் பலருக்கு அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டுள்ளன. இந்நிலையில், குடியரசு தினத்தையொட்டி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தில் அதிமுக பங்கேற்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆளுநர் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக தெரிவித்தது குறிப்பிடதக்கது.
- வீரதீர செயல் புரிந்தவர்களுக்கு பதக்கங்களையும் , விருதுகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
- கல்வி எனும் ஆயுதம் ஏந்தி செயலாற்றுவோம்.
சென்னை:
நாடு முழுவதும் 75-வயது குடியரசு தினவிழா இன்று கொண்டாடப்படுகிறது. சென்னை மெரினா கடற்கரை சாலை உழைப்பாளர் சிலை அருகே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கவர்னர் ஆர்.என்.ரவி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
இதன்பின்னர் வீரதீர செயல் புரிந்தவர்களுக்கு பதக்கங்களையும் , விருதுகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதில் அரசு பள்ளி கட்டுவதற்காக ரூ.7 கோடி மதிப்புள்ள நிலத்தை அரசுக்கு நன்கொடையாக கொடுத்த ஆயி பூரணம் அம்மாளுக்கு முதலமைச்சரின் சிறப்பு விருதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இந்நிலையில், பள்ளக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'கல்வி எனும் அறத்தின் வழியே ஒன்றிணைந்தோம். கல்வி எனும் ஆயுதம் ஏந்தி செயலாற்றுவோம். எங்கள் பூரணம் அம்மா' என பதிவிட்டு குடியரசு தின விழாவில் எடுத்துக்கொண்டுள்ள புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.
கல்வி எனும் அறத்தின் வழியே ஒன்றிணைந்தோம்.
— Anbil Mahesh (@Anbil_Mahesh) January 26, 2024
கல்வி எனும் ஆயுதம் ஏந்தி செயலாற்றுவோம்!
எங்கள் பூரணம் அம்மா❤ pic.twitter.com/IxMIJwVTBM
- பொதுக் கூட்டத்தை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மிகச்சிறப்பாக எழுச்சியோடு ஏற்பாடு செய்துள்ளார்.
- கல்வியில் நாம் ஏற்கனவே மிகப்பெரிய சாதனை செய்து கொண்டிருக்கிறோம்.
சென்னை:
மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக் கூட்டம் காஞ்சி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் பல்லாவரம் கண்டோன்மெண்டில் மாவட்டக் கழக செயலாளர் தா.மோ.அன்பரசன் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது:-
இந்த வீரவணக்க நாள் பொதுக் கூட்டத்தை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மிகச்சிறப்பாக எழுச்சியோடு ஏற்பாடு செய்துள்ளார்.
ஆண்களுக்கு நிகராக, ஆண்களைவிட அதிகமாக, தாய்மார்கள், பெண்கள் பங்கேற்றுள்ளீர்கள் வாழ்த்துக்கள்.
மொழி உரிமைதான் மாநில உரிமை.
இன்றைக்கு என்னென்ன வழிகளில் இந்தி சமஸ்கிருதத்தை திணிக்க முடியுமோ அந்தந்த வழிகளில் எல்லாம் ஒன்றிய அரசு மொழி திணிப்பை மேற்கொண்டு வருகிறது.
பா.ஜ.க. கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. விலகிவிட்டோம் என்று சொல்கிறார்கள். ஆனால் மக்கள் அதை நம்பவேமாட்டார்கள். எனவே அ.தி.மு.க. பா.ஜ.க.வை விரட்டியடிக்க வேண்டும். 2024 மக்களவை தேர்தலில் 2 கட்சிகளையும் டெபாசிட் இழக்க செய்ய வேண்டும்.
கல்வியில் நாம் ஏற்கனவே மிகப்பெரிய சாதனை செய்து கொண்டிருக்கிறோம். இந்தி பாடம் இல்லாமலேயே இதையெல்லாம் நாம் சாதித்து காட்டியிருக்கிறோம்.
இந்தி திணிப்பை போலவே இப்போது நீட் நெக்ஸ்ட் என்று அனைத்து நுழைவுத் தேர்வுகளையும் தமிழ்நாட்டிற்குள் திணிக்கிறார்கள். இதை மாற்றிக்காட்டுவோம்.
2024 மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணியை வெல்லச் செய்வோம்.
இவ்வாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
உதயநிதி ஸ்டாலின் பொதுக் கூட்டத்தில் கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டது. பொதுக் கூட்டம் நடைபெற்ற இடம் மட்டுமின்றி பக்கத்து ரோடுகளிலும் கூட்டம் அலை மோதியது.
- மூத்த கலைஞர்கள் வைஜெயந்தி மாலா மற்றும் பத்மா சுப்ரமணியம் ஆகிய இருவருக்கும் எனது வாழ்த்துகள்.
- சசீந்திரன் முத்துவேல், செல்லம்மாள் ஆகியோரையும் பத்மஸ்ரீ விருது பெறுவதற்காகத் தமிழனாகப் பாராட்டி மகிழ்கிறேன்.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
தமிழ்நாட்டில் இருந்து நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்மவிபூஷன் விருதுக்குத் தேர்வாகியுள்ள மூத்த கலைஞர்கள் வைஜெயந்தி மாலா மற்றும் பத்மா சுப்ரமணியம் ஆகிய இருவருக்கும் எனது வாழ்த்துகள்.
மேலும் பத்மஸ்ரீ விருதுக்குத் தேர்வாகியுள்ள பத்திரப்பன் (கலை) ஜோஷ்னா சின்னப்பா (விளையாட்டு), ஜோ டி குரூஸ் (இலக்கியம்), சேஷம்பட்டி சிவலிங்கம் (கலை), நாச்சியார் (மருத்துவம்) ஆகியோருக்கும் எனது வாழ்த்துகள்.
தமிழ்நாட்டில் பிறந்து பப்புவா நியூ கினியில் ஆளுநர் பொறுப்பு வரை உயர்ந்த சசீந்திரன் முத்துவேல், அந்தமானைச் சேர்ந்த இயற்கை விவசாயியான செல்லம்மாள் ஆகியோரையும் பத்மஸ்ரீ விருது பெறுவதற்காகத் தமிழனாகப் பாராட்டி மகிழ்கிறேன்.
அண்மையில் மறைந்த எனது நண்பர் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்குப் பத்மபூஷன் விருது அறிவித்தமைக்காக எனது நன்றியை உரித்தாக்கிக் கொள்கிறேன்.
இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் இருந்து நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்மவிபூஷன் விருதுக்குத் தேர்வாகியுள்ள மூத்த கலைஞர்கள் வைஜெயந்தி மாலா மற்றும் பத்மா சுப்ரமணியம் ஆகிய இருவருக்கும் எனது வாழ்த்துகள்.
— M.K.Stalin (@mkstalin) January 26, 2024
மேலும் பத்மஸ்ரீ விருதுக்குத் தேர்வாகியுள்ள பத்திரப்பன் (கலை) ஜோஷ்னா சின்னப்பா (விளையாட்டு),… pic.twitter.com/Cd8gojjM7H
- குடிபோதையில் பஸ்சை இயக்க அனுமதித்த பஸ்சின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கும் வரை நாங்கள் கலைந்து செல்லமாட்டோம் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
- மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
தருமபுரி:
திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெற உள்ள மாநாட்டில் கலந்து கொள்ள தருமபுரி மாவட்டம் ஒடசல்பட்டியில் இருந்து இன்று காலை தனியார் பஸ்சில் அந்த கட்சியின் நிர்வாகிகள் 60-க்கும் மேற்பட்டோர் புறப்பட்டு சென்றனர்.
அப்போது பஸ் பொம்மிடி அருகே சென்றபோது எதிரே வந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானதில் 20 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து பஸ்சில் பயணித்த கட்சியின் மற்ற நிர்வாகிகள் திடீரென்று சம்பவ இடத்திலேயே அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட எஸ்.பி. ஸ்டீபன் ஜேசுபாதம், அரூர் டி.எஸ்.பி மற்றும் போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் பஸ்சை ஓட்டி வந்த டிரைவர் குடிபோதையில் இருந்துள்ளார். இதனால் தான் விபத்து அரங்கேறி உள்ளது. அதிர்ஷ்டவசமாக பெரிய அளவில் விபத்து நடக்கவில்லை. இதன் காரணமாக நாங்கள் உயிர் தப்பினோம்.
குடிபோதையில் பஸ்சை இயக்க அனுமதித்த பஸ்சின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கும் வரை நாங்கள் கலைந்து செல்லமாட்டோம் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது கட்சியினர் அனைவரும் சத்தம் போட்டனர்.
இதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
- பஸ்சின் முன்பக்க மற்றும் பக்கவாட்டில் உள்ள கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின.
- பஸ் டிரைவரை கைது செய்து விசாரித்ததில் பஸ் டிரைவர் தருமபுரியைச் சேர்ந்தவர் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.
பாப்பிரெட்டிப்பட்டி:
தருமபுரி மாவட்டம் கடத்தூர் அருகேயுள்ள ஒடசல்பட்டி பத்திரஅள்ளி கிராமத்தை சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இன்று காலை திருச்சியில் நடைபெறும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெறும் வெல்லும் சனநாயகம் மாநாட்டுக்கு ஒரு தனியார் பஸ்சில் அந்த கட்சியை சேர்ந்த 60 பேர் சென்றனர்.
அப்போது பொம்மிடி பகுதியில் தருமபுரி சாலையில் உள்ள ரெயில்வே பாலம் அருகே சென்றபோது திடீரென்று பஸ் எதிரே வைக்கோல் பாரம் ஏற்றி லாரி வந்தது. அந்த லாரி மீது எதிர்பாராத விதமாக மோதியது.
இதில் பஸ்சின் முன்பக்க மற்றும் பக்கவாட்டில் உள்ள கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. இதில் பஸ்சில் பயணித்த கட்சியினர் 20 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்த தகவலின் பேரில் விரைந்து பொம்மிடி போலீசார் விசாரணையில் ஈடுப்பட்டனர்.
அப்போது மாநாட்டுக்கு செல்லும் பஸ்சை ஓட்டி வந்த டிரைவர் மதுப்போதையில் இருப்பது தெரியவந்தது. எதிரே வந்த லாரி டிரைவர் சாதூர்யமாக செயல்பட்டதால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து பஸ் டிரைவரை கைது செய்து விசாரித்ததில் பஸ் டிரைவர் தருமபுரியைச் சேர்ந்தவர் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.
காயமடைந்தவர்களை உடனே அக்கம்பக்கத்தினர் மீட்டு தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனை தொடர்ந்து தனியார் பஸ் நிர்வாகத்தை கண்டித்து பஸ்சில் வந்த விடுதலை கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் தொப்பூர் கணவாய் பகுதில் நடந்த விபத்தில் 4 பேர் இறந்த நிலையில் இன்று பொம்மிடியில் நடந்த விபத்தால் அந்த பகுதியில் பதட்டம் நிலவி வருகிறது.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
- நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் இன்று வட தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். இதர தமிழக மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.
நாளை முதல் 29-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.
30.01.2024 முதல் 01.02.2024 வரை தென்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். வடதமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். நகரின் சில பகுதிகளில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸை ஒட்டியும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்சியஸை ஒட்டியும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
இன்று முதல் 30-ந்தேதி வரை குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகததிலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
- மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
- நகராட்சி ஆணையர் சுபாஷினி உள்ளிட்டடோர் கலந்து கொண்டனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா காவல் அரங்கில் 75-வது குடியரசு தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் திறந்த ஜீப்பில் சென்று போலீசார், ஊர்க்காவல் படை, தேசிய மாணவர் படை, நாட்டு நலப் பணித்திட்ட மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். இதைத்தொடர்ந்து கலெக்டர் கலைச்செல்வி மோகன் மூவர்ண பலூன்களை பறக்க விட்டு சிறப்பாக பணியாற்றிய போலீஸ் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சரின் காவலர் பதக்கங்களை வழங்கினார். பல்வேறு அரசு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அரசு அலுவலர்களுக்கும், 25- ஆண்டுகள் பணி முடித்தவர்களுக்கும் நற்சான்றிதழ்களை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து இந்திய திருநாட்டின் விடுதலைக்காக மேலும் சுதந்திரப் போராட்ட தியாகிகளின், மற்றும் மொழிப்போர் தியாகிகளுக்கு கலெக்டர் கலைச்செல்வி மோகன் கதர் ஆடை அணிவித்து கவுரவித்தார். பின்னர் 23 பயனாளிகளுக்கு ரூ. 5 லட்சத்து 9 ஆயிரம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் டி.ஐ.ஜி. பொன்னி, போலீஸ்சூப்பிரண்டு சண்முகம், காஞ்சிபுரம் தொகுதி எம்.எல்.ஏ. வக்கீல் எழிலரசன், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயக்குமார், வருவாய் கோட்டாட்சியர் திவ்யா, முதன்மை கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி, செய்தி மக்கள் தொடர்புத்துறை அலுவலர் ராமச்சந்திர பிரபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகப் பெருந்திட்ட வளாகத்தில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் தேசிய கொடியை ஏற்றி வைத்து மூவர்ண பலூன்களை பறக்கவிட்டார். பின்னர் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். இதைத்தொடர்ந்து சுதந்திர போராட்ட தியாகிகளை கவுரவித்தார். மேலும், மாவட்ட தொழில் மையம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையர் நலத்துறை, வேளாண்மை உழவர் பாதுகாப்புத் நலத்துறை, முன்னாள் படைவீரர் நலத் துறை, தாட்கோ ஆகியவற்றின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகள் 25 பேருக்கு ரூ. 27 லட்சத்து 91 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
தமிழக முதல்வரின் காவலர் பதக்கங்களை 24 போலீசாருக்கும், பல்வேறு அரசுத் துறைகளில் சிறப்பாகப் பணியாற்றிய 579 அலுவலர்களுக்கு சான்றிதழ்களையும் கலெக்டர் பிரபு சங்கர் வழங்கினார். தொடர்ந்து பள்ளி மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிநடைபெற்றது.
இதில் மாவட்ட போலீஸ் சூப்பரண்டு சீபாஸ் கல்யாண், வருவாய் அலுவலர் ராஜ்குமார், ஊரக வளர்ச்சித் திட்ட இயக்குநர் சுகபுத்திரா, கூடுதல் போலீஸ் சூப்பரண்டு ஹரிகுமார், மீனாட்சி, திருவள்ளூர் துணை சூப்பரண்டு அனுமந்தன், நகராட்சி ஆணையர் சுபாஷினி உள்ளிட்டடோர் கலந்து கொண்டனர்.

செங்கல்பட்டு அடுத்த வெண்பாக்கம் பகுதியில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலைய மைதானத்தில செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். பின்னர் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இதைத்தொடர்ந்து பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் மற்றும் சிறப்பாக பணியாற்றிய அரசு ஊழியர்களுக்கு நன்னடைத்தை சான்றிதழ்களை கலெக்டர் ராகுல்நாத் வழங்கினார். பள்ளி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் மாவட்ட போலீஸ்சூப்பிரண்டு சாய் பிரனீத், மாவட்ட வருவாய் அலுவலர் சுபா நந்தினி மற்றும் அரசு அதிகாரிகள், பொதுமக்கள் பங்கேற்றனர்.
- மழை முழுவதுமாக நின்று விட்டதால் மதகுகள் வழியாக தண்ணீர் திறப்பும் முழுவதுமாக நிறுத்தப்பட்டது.
- புழல் ஏரிக்கு 200 கன அடியும், செம்பரம்பாக்கம் ஏரிக்கு 150 கன அடியும் தண்ணீர் செல்கிறது.
ஊத்துக்கோட்டை:
சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி ஏரி உள்ளது. இந்த ஏரியில் மழை நீர் மற்றும் கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின் படி ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ளது கண்டலேறு அணையில் இருந்து பெறப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும்போது புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திறந்து விடப்படுவது வழக்கம்.
சமீபத்தில் பெய்த பலத்த மழை காரணமாக பூண்டி ஏரி முழுவதுமாக நிரம்பியது. ஏரியின் பாதுகாப்பை கருதி உபரி நீர் மதகுகள் வழியாக கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதன் காரணமாக கண்டலேறு அணையில் இருந்து பெறப்படும் தண்ணீரும் நிறுத்தப்பட்டது. மழை முழுவதுமாக நின்று விட்டதால் மதகுகள் வழியாக தண்ணீர் திறப்பும் முழுவதுமாக நிறுத்தப்பட்டது. போதுமான தண்ணீர் பூண்டி ஏரியில் இருந்ததால் கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா தண்ணீர் திறக்க வேண்டாம் என்று தமிழக அதிகாரிகள் கோரிக்கை விடுத்து இருந்தனர்.
கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின் படி ஆந்திரா அரசு வருடம் தோறும் ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி. தண்ணீரை வழங்க வேண்டும். அதன் அடிப்படையில் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளது. பூண்டி ஏரியின் உயரம் 35 அடி. இதில் 3.231 டி.எம்.சி. தண்ணீர் சேமித்து வைக்கலாம். தற்போதைய நிலவரப்படி ஏரி நீர்மட்டம் 34. 65 அடியாகவும் தண்ணீர் இருப்பு 3.028 டி.எம்.சி.யாகவும் உள்ளது.
கிருஷ்ணா தண்ணீர் திறப்பை கருத்தில் கொண்டு பூண்டி ஏரியில் தண்ணீர் இருப்பை குறைக்கும் வகையில் புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தண்ணீர் திறந்து விட அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி இன்று காலை முதல் இணைப்பு கால்வாய் வழியாக பூண்டி ஏரியில் இருந்து புழல் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.
வினாடிக்கு 350 கன அடி தண்ணீர் கால்வாயில் திறக்கப்பட்டு உள்ளது. இதில் புழல் ஏரிக்கு 200 கன அடியும், செம்பரம்பாக்கம் ஏரிக்கு 150 கன அடியும் தண்ணீர் செல்கிறது. எனவே விரைவில் கிருஷ்ணா தண்ணீர் ஒப்பந்தப்படி கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- வடிவுடையம்மன் கோவில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது.
- தெப்பத் திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
திருவொற்றியூர்:
திருவொற்றியூரில் உள்ள வடிவுடையம்மன் கோவில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. இந்த கோவிலின் உள்ளே பிரம்ம தீர்த்தமும், வெளியே ஆதிஷேச தீர்த்த குளமும் உள்ளது. ஆண்டுதோறும், தைப்பூசத்தையொட்டி கோவில் வெளியே உள்ள ஆதிஷேச தீர்த்த குளத்தில் தெப்பத் திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டுக்கான தெப்பத்திருவிழா இன்று மாலை நடைபெற உள்ளது. மாலை 6 மணிக்கு தெப்பத்தில் உற்சவர் சந்திரசேகரர் உடனுறை திரிபுரசுந்தரி தாயார் எழுந்தருளி ஆதிஷேச தீர்த்த குளத்தின் மைய மண்டபத்தை ஐந்து முறை வலம் வருவார். இரவு 7 மணிக்கு மேல் தியாகராஜ சுவாமி மாடவீதி உற்சவம் நடைபெற உள்ளது.
- தி.மு.க. பொறுப்பேற்று 2 ஆண்டு 8 மாத காலத்தில் அவர்கள் செய்த நன்மைகள் என்ன என்று கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார்கள்.
- தினந்தோறும் கொலை, கொள்ளை, திருட்டு நடக்காத நாளே இல்லை.
சேலம்:
சேலம் மல்லமூப்பம்பட்டியில் தி.மு.க., பா.ம.க., கொ.ம.தே.க., உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 1000-க்கும் மேற்பட்டோர் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தங்களை அ.தி.மு.க.வில் இணைத்துக் கொண்டனர். தொடர்ந்து அவர்களை வரவேற்று எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
அ.தி.மு.க. 30 ஆண்டுகால ஆட்சியின் காரணமாக இந்தியாவில் உயர்கல்வி படிப்பதில் தமிழ்நாடு முதல் இடத்தில் உள்ளது. கல்வி புரட்சியில் அ.தி.மு.க. 30 ஆண்டு கால ஆட்சியில் மறுமலர்ச்சி ஏற்படுத்தியது. தி.மு.க. பொறுப்பேற்று 2 ஆண்டு 8 மாத காலத்தில் அவர்கள் செய்த நன்மைகள் என்ன என்று கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார்கள்.

கருணாநிதி அவருக்கு பின்பு மு.க.ஸ்டாலின், தற்போது உதயநிதி, நடந்து முடிந்த தி.மு.க. இளைஞரணி மாநாட்டில் இன்பநிதியும் கலந்து கொண்டார். மன்னராட்சி முறையை கொண்டுவர தி.மு.க. முயற்சி செய்து வருகிறது. மக்களை பற்றி கவலைப்படுவதில்லை. அதிகார மையம் தி.மு.க.வில் அதிகரித்து விட்டது. தி.மு.க.வில் 4 முதலமைச்சர்கள் உள்ளனர். சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது. தினந்தோறும் கொலை, கொள்ளை, திருட்டு நடக்காத நாளே இல்லை. கஞ்சா தாராளமாக கிடைக்கிறது. இதனால் மாணவர்கள், இளைஞர்கள் சீரழிகின்றனர். இதற்கு அரசு பதில் சொல்ல வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- நிலத்தில் எழுந்து நடக்க முடியாத நிலையில் பெண் காட்டுயானை ஒன்று படுத்திருந்தது.
- கால்நடை மருத்துவ குழுவினர் யானையின் உடலை கண்காணித்து வருகின்றனர்.
மேட்டுப்பாளையம்:
மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை வனச்சரகத்திற்குட்பட்ட லிங்காபுரம் அருகில் முருகன் என்பவரின் விவசாய நிலம் உள்ளது.
இந்த நிலத்தில் எழுந்து நடக்க முடியாத நிலையில் பெண் காட்டுயானை ஒன்று படுத்திருந்தது.
இதை பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக சிறுமுகை வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு மாவட்ட வன அலுவலர் ஆலோசனையின் பேரில் சிறுமுகை வனரக அலுவலர் மனோஜ், வன கால்நடை மருத்துவர் சுகுமார், உதவி கால்நடை மருத்துவர் தியாகராஜன் ஆகியோர் கொண்ட மருத்துவ குழுவினர் பெண் காட்டு யானைக்கு முதலுதவி சிகிச்சை மற்றும் ஊட்டச்சத்து மருந்துகள் அளித்து வருகின்றனர்.
யானையின் உடல்நிலை மெலிந்த நிலையில் உள்ளதால் தொடர்ந்து கால்நடை மருத்துவ குழுவினர் யானையை கண்காணித்து வருகின்றனர்.
இன்றும் உடல் நலம் பாதித்த காட்டு யானைக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.






