search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பூண்டி ஏரியில் இருந்து புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தண்ணீர் திறப்பு
    X

    பூண்டி ஏரியில் இருந்து புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தண்ணீர் திறப்பு

    • மழை முழுவதுமாக நின்று விட்டதால் மதகுகள் வழியாக தண்ணீர் திறப்பும் முழுவதுமாக நிறுத்தப்பட்டது.
    • புழல் ஏரிக்கு 200 கன அடியும், செம்பரம்பாக்கம் ஏரிக்கு 150 கன அடியும் தண்ணீர் செல்கிறது.

    ஊத்துக்கோட்டை:

    சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி ஏரி உள்ளது. இந்த ஏரியில் மழை நீர் மற்றும் கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின் படி ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ளது கண்டலேறு அணையில் இருந்து பெறப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும்போது புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திறந்து விடப்படுவது வழக்கம்.

    சமீபத்தில் பெய்த பலத்த மழை காரணமாக பூண்டி ஏரி முழுவதுமாக நிரம்பியது. ஏரியின் பாதுகாப்பை கருதி உபரி நீர் மதகுகள் வழியாக கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதன் காரணமாக கண்டலேறு அணையில் இருந்து பெறப்படும் தண்ணீரும் நிறுத்தப்பட்டது. மழை முழுவதுமாக நின்று விட்டதால் மதகுகள் வழியாக தண்ணீர் திறப்பும் முழுவதுமாக நிறுத்தப்பட்டது. போதுமான தண்ணீர் பூண்டி ஏரியில் இருந்ததால் கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா தண்ணீர் திறக்க வேண்டாம் என்று தமிழக அதிகாரிகள் கோரிக்கை விடுத்து இருந்தனர்.

    கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின் படி ஆந்திரா அரசு வருடம் தோறும் ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி. தண்ணீரை வழங்க வேண்டும். அதன் அடிப்படையில் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளது. பூண்டி ஏரியின் உயரம் 35 அடி. இதில் 3.231 டி.எம்.சி. தண்ணீர் சேமித்து வைக்கலாம். தற்போதைய நிலவரப்படி ஏரி நீர்மட்டம் 34. 65 அடியாகவும் தண்ணீர் இருப்பு 3.028 டி.எம்.சி.யாகவும் உள்ளது.

    கிருஷ்ணா தண்ணீர் திறப்பை கருத்தில் கொண்டு பூண்டி ஏரியில் தண்ணீர் இருப்பை குறைக்கும் வகையில் புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தண்ணீர் திறந்து விட அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி இன்று காலை முதல் இணைப்பு கால்வாய் வழியாக பூண்டி ஏரியில் இருந்து புழல் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    வினாடிக்கு 350 கன அடி தண்ணீர் கால்வாயில் திறக்கப்பட்டு உள்ளது. இதில் புழல் ஏரிக்கு 200 கன அடியும், செம்பரம்பாக்கம் ஏரிக்கு 150 கன அடியும் தண்ணீர் செல்கிறது. எனவே விரைவில் கிருஷ்ணா தண்ணீர் ஒப்பந்தப்படி கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×