என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • ரேசன் கடை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.
    • நிகழ்ச்சியில் தோவாளை காங்கிரஸ் வட்டார கமிட்டி தலைவர் முருகானந்தம், இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

    கன்னியாகுமரி மாவட்டம் மாதவலாயம் ஊராட்சி பகுதியில் ரேசன் கடை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.

    அவர்கள் கோரிக்கையை ஏற்று பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 14 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. அதற்கான பூமி பூஜை விழாவில் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டார்.

    இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆஸ்டின், தோவாளை காங்கிரஸ் வட்டார கமிட்டி தலைவர் முருகானந்தம், இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சோனியா காந்தி உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் இருந்து பாராளுமன்றத்துக்கு தேர்வாகி இருந்தார்.
    • ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் மீண்டும் களம் இறங்க திட்டமிட்டுள்ளார்.

    பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா, ராகுல், பிரியங்கா ஆகிய மூவரும் எங்கு போட்டியிடுவார்கள் என்பதில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் மீண்டும் களம் இறங்க திட்டமிட்டுள்ளார்.

    ஆனால் அவருக்கு கம்யூனிஸ்டு கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. என்றாலும் உத்தரபிரதேசத்துக்கு செல்ல விரும்பாத அவர் வயநாடு தொகுதியில் போட்டியிடவே ஆர்வம் காட்டி உள்ளார்.

    சோனியா காந்தி உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் இருந்து பாராளுமன்றத்துக்கு தேர்வாகி இருந்தார். ஆனால் இந்த தடவை அந்த தொகுதியில் போட்டியிட அவர் விரும்பவில்லை.

    அதற்கு பதில் அவர் பாராளுமன்ற மேல்சபை எம்.பி.யாக முடிவு செய்துள்ளார். ராஜஸ்தான் அல்லது இமாச்சல பிரதேசத்தில் இருந்து அவர் மேல்சபை எம்.பி.யாக தேர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


    காங்கிரசின் பாரம்பரிய தொகுதியான ரேபரேலி தொகுதியில் பிரியங்கா போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை அந்த தொகுதி காங்கிரஸ் தலைவர்கள் செய்ய தொடங்கி உள்ளனர்.

    முன்னதாக பிரியங்கா தமிழகத்தில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து இருந்ததாக கூறப்படுகிறது. ராஜீவ்காந்தி உயிரிழந்த அந்த தொகுதியில் இருந்து பாராளுமன்றத்துக்கு செல்ல அவர் திட்டமிட்டிருந்தார்.

    அவரை தமிழகத்துக்கு கொண்டுவர காங்கிரஸ் மூத்த தலைவர்களும் ஆர்வம் காட்டினார்கள். ஆனால் ராகுல் காந்தி ஏற்கனவே கேரளாவில் போட்டியிடுவதால் பிரியங்காவும் தென் இந்தியாவுக்கு வர சிலர் அதிருப்தி தெரிவித்தனர்.

    ராகுல், பிரியங்கா தென் இந்திய மாநிலங்களில் கவனம் செலுத்தும்பட்சத்தில் வட மாநிலங்களில் காங்கிரசுக்கு மேலும் பாதிப்பு ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பிரியங்கா ரேபரேலி தொகுதியில் களம் இறங்குவார் என்று கூறப்படுகிறது.

    • போலீசார் வழக்குப்பதிவு செய்து முசரவாக்கம் காலனியை சேர்ந்த தொழிலாளியான சீராளன் என்பவரை கைது செய்தனர்.
    • சீராளன் குற்றவாளி என்று உறுதி செய்யப்பட்டதால் அவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

    காஞ்சிபுரம்:

    பாலுசெட்டி சத்திரம் அருகே உள்ள திருப்புட்குழி பகுதியை சேர்ந்தவர் கண்ணியப்பன். இவரது மனைவி பார்வதி (வயது66). கடந்த 7.12.2018-ம் ஆண்டு திருப்புட்குழி ஏரிக்கரை அருகில் உள்ள நிலத்தில் பார்வதி கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து முசரவாக்கம் காலனியை சேர்ந்த தொழிலாளியான சீராளன் என்பவரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிந்து நீதிபதி எழிலரசி தீர்ப்பு அளித்தார். அதில், சீராளன் குற்றவாளி என்று உறுதி செய்யப்பட்டதால் அவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

    • போக்குவரத்து நெரிசலால் பள்ளி மாணவர்கள், பணிக்கு செல்வோர் என அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
    • தனியார் வாகன டிரைவர்கள் போலீசாருடன் இணைந்து, வாகனங்களை மாற்று பாதையில் அனுப்பி வைத்தனர்.

    கண்டமங்கலம்:

    விழுப்புரம்-புதுச்சேரி நெடுஞ்சாலையில் கண்டமங்கலத்தில் ரெயில்வே கேட் சர்வீஸ் சாலை உள்ளது. மகாராஷ்டிராவில் இருந்து புதுச்சேரிக்கு சொகுசு ரக கார்களை ஏற்றி வந்த கனரக கண்டெய்னர் லாரி ரெயில்வே பாதையை கடக்க முற்பட்டது. கண்டமங்கலம் ரெயில்வே கிராசிங்கில் அமைக்கப்பட்டு இருக்கும் உயர் மின்னழுத்த பாதுகாப்பு தடுப்பு கட்டையை கடந்து செல்ல முடியாமல் கனரக வாகனம் பாதியிலேயே நின்றது. இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    அந்த நேரத்தில் ரெயில்வே கேட் மூடப்பட்டதால் சுமார் 2 கிலோ மீட்டர்களுக்கு மேலாக மோட்டார் சைக்கிள், கார், பஸ், லாரி மற்றும் கனரக வாகனங்கள் அணிவகுத்து நின்றன. காலை நேரம் என்பதால் தனியார் பள்ளி, கல்லூரிகள் பஸ்களும் நெரிசலில் சிக்கியது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கண்டமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையிலான போலீசார் போக்குவரத்து நெரிசலை சரி செய்ய முற்பட்டனர்.

    கண்டமங்கலம் பகுதியில் உள்ள தனியார் வாகன டிரைவர்கள் போலீசாருடன் இணைந்து, வாகனங்களை மாற்று பாதையில் அனுப்பி வைத்தனர். இதனால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் ஒரு புற வாகனங்களை மாற்று வழியில் திருப்பப்பட்டு சொகுசு கார்களை ஏற்றி வந்த கண்டெய்னர் லாரியை விழுப்புரத்திற்கு திருப்பி அனுப்பினர். பின்னர் கண்டமங்கலம் ரெயில்வே கேட் சாலை இயல்பு நிலைக்கு திரும்பியது. ஒரு மணி நேரத்திற்கு மேலாக நீடித்த இந்த திடீர் போக்குவரத்து நெரிசலால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பணிக்கு செல்வோர் என அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

    • காட்டுப் பன்றியை வனவிலங்கு பட்டியலில் இருந்து நீக்க வேண்டும்.
    • கேரளாவில் உள்ளது போல் தமிழகத்திலும் காட்டுப்பன்றிகளை சுட்டுப் பிடிக்க தனி சட்டத்தை அரசு அமல்படுத்த வேண்டும்.

    நெல்லை:

    தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் நெல்லை மாவட்டத்தில் விவசாய விளை நிலங்களையும், பயிர்களையும் அழிக்கும் காட்டுப்பன்றியை வனத்துறையினர் சுட்டுப்பிடிக்க வலியுறுத்தி இன்று பாளை பெருமாள்புரத்தில் உள்ள நெல்லை மாவட்ட வன அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது.

    போராட்டத்திற்கு ஒருங்கிணைப்பு குழுவின் மாவட்ட செயலாளர் ஆபிரகாம் தலைமை தாங்கினார். பின்னர் அவர்கள் தமிழக அரசையும், மாவட்ட நிர்வாகத்தையும் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

    அதனைத் தொடர்ந்து வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். அப்போது அங்கே பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர். தொடர்ந்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவினர் கூறியதாவது:-

    நெல்லை, தென்காசி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் இங்கு வந்துள்ளோம். மேற்கு தொடர்ச்சி மலை அடி வாரத்தை ஒட்டிய பகுதிகளில் விவசாயம் செய்ய முடியாத நிலை இருக்கிறது. இதற்கு காரணம் வன விலங்குகள் ஏற்படுத்தும் சேதங்கள் தான்.

    காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகளால் மானாவாரி பயிர்களை கூட விவசாயம் செய்ய முடியாத அளவுக்கு நாங்கள் சிரமத்திற்கு உள்ளாகி இருக்கிறோம்.

    நெல், கரும்பு, உளுந்து உள்ளிட்ட எந்த பயிர்களுக்கும் ஆதார விலை கூட அரசு வழங்காமல் இருந்து வருகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் தற்போது வடகிழக்கு பருவ மழை நன்றாகப் பெய்து தண்ணீர் இருந்தும் விவசாயம் செய்ய முடியாத நிலைக்கு நாங்கள் ஆளாகி உள்ளோம்.

    எனவே காட்டுப் பன்றியை வனவிலங்கு பட்டியலில் இருந்து நீக்க வேண்டும். அதை வனத்துறையினர் சுட்டுப்பிடிக்க வேண்டும். அப்போதுதான் நாங்கள் எவ்வித சிரமமும் இன்றி விவசாயத்தில் ஈடுபட முடியும்.

    100 சதவீதம் நடக்க வேண்டிய விவசாயம் தண்ணீர் இருந்தும் காட்டுப் பன்றிகளின் அட்டகாசத்தால் 40 சதவீதம் தான் நடக்கிறது. லட்சக்கணக்கில் பணம் செலவு செய்து அவை வீணாகி விடுகிறது.

    இந்த கோரிக்கைகளை பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறோம். ஆனால் அரசு எங்களது கோரிக்கைக்கு செவி சாய்க்காமல் இருந்து வருகிறது. கேரளாவில் உள்ளது போல் தமிழகத்திலும் காட்டுப்பன்றிகளை சுட்டுப் பிடிக்க தனி சட்டத்தை அரசு அமல்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • நீல நிற தொண்டை உடைய ஈ பிடிப்பான் குருவி இந்த ஆண்டு புதிய வரவு ஆகும்.
    • கடந்த ஆண்டு 130 பறவை இனங்களும், இந்த ஆண்டு 148 பறவை இனங்களும் வந்து உள்ளன.

    வேளச்சேரி:

    கடந்த ஆண்டு பெய்த பருவமழையின் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள ஏரி, குளங்களில் போதுமான அளவு தண்ணீர் நிரம்பி உள்ளது. பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் தண்ணீர் நிரம்பி ரம்மியமாக காட்சி அளிக்கிறது.

    இதைத் தொடர்ந்து பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திற்கு வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பறவைகள், வாத்து இனங்கள் வந்து உள்ளன. குறிப்பாக நீல நிற தொண்டை உடைய ஈ பிடிப்பான் குருவி இந்த ஆண்டு புதிய வரவு ஆகும்.

    கடந்த ஆண்டை ஒப்பிடும் போது இந்த ஆண்டு பள்ளிக்க ரணை சதுப்பு நிலத்திற்கு கூடுதலாக பறவை இனங்கள் வந்து இருப்பது கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. கடந்த ஆண்டு 130 பறவை இனங்களும், இந்த ஆண்டு 148 பறவை இனங்களும் வந்து உள்ளன.

    இதேபோல் கொரட்டூர் ஏரி, அம்பத்தூர் ஏரி, பெரும்பாக்கம் சதுப்பு நிலம், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் விரிவாக்கம், போரூர் ஏரி, எண்ணூர் முகத்துவாரம், வண்டலூர் ஏரி, மடிப்பாக்கம் ஏரி உள்ளிட்ட 25 இடங்களில் இடம் பெயர்ந்து வரும் பறவைகள் அதிக அளவில் வந்திருப்பது கணக்கிடப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பறவைகள் நல ஆர்வலர்கள் கூறும் போது, நன்மங்கலம் ஏரியில் பறவைகள் கணக்கெடுப்பில் ஈடுபட்டபோது சென்னையில் முதன்முறையாக நீல நிற தொண்டை உடைய நீலத் தொண்டை நீல ஈ பிடிப்பான் பறவை இருப்பது பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் கணக்கெடுப்புக்காக 9 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. பெரும்பாலும் தட்டை வாயன் வாத்து, சிறிய சீழ்க்கைச்சிரவி வாத்து, ஊசிவால் வாத்து, நாமத் தலை வாத்து உள்ளிட்டவை பரவலாக காணப்படுகிறது என்றனர்.

    • பஞ்சு மிட்டாய்களில் கலக்கப்படும் ரசாயனம் குடலில் ஆறாத புண் ஏற்பட்டு பின்னர் புற்று நோயாக மாறும் அபாயம்.
    • செயற்கை நிறமூட்டிகள் சேர்க்கப்பட்ட உணவு பொருட்களை சாப்பிட வேண்டாம்.

    சேலம்:

    தமிழக அரசின் உத்தரவின் பேரில் பஞ்சு மிட்டாய்கள் விற்கப்படும் பகுதிகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்து வருகிறார்கள். அதன்படி சேலம் மாவட்டத்தில் பஞ்சு மிட்டாய் தயாரிப்பு நிறுவனங்களில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

    இதில் உணவு பொருளுக்கு அனுமதிக்கப்படாத நிறமிகள் சேர்க்கப்பட்டுள்ளதா? என்றும் அனுமதிக்கப்பட்ட நிறமிகள் குறிப்பிட்ட அளவு உள்ளதா? என்றும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

    உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கதிரவன் தலைமையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சேலம் 5 ரோட்டில் உள்ள தனியார் மால், பெங்களூர் பைபாஸ் சாலையில் உள்ள பஞ்சு மிட்டாய் தயாரிப்பு நிறுவனங்களிலும் இந்த ஆய்வை மேற்கொண்டனர்.

    2-வது நாளாக இன்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பஞ்சு மிட்டாய் கடைகள் மற்றும் ரோட்டோரம் பஞ்சு மிட்டாய் விற்பவர்களிடம் மாதிரிகளை எடுத்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். சந்தேகத்தின் பேரில் 8 மாதிரிகள் எடுத்து ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கிருந்து வரும் அறிக்கையின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும், சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் இந்த ஆய்வு2-வது நாளாக இன்றும் நடைபெறுவதாகவும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் தெிவித்தனர்.

    பஞ்சு மிட்டாய்களில் கலக்கப்படும் ரசாயனம் குடலில் ஆறாத புண் ஏற்பட்டு பின்னர் புற்று நோயாக மாறும் அபாயம் இருக்கிறது. சிறுநீர் பிரச்சினைகளை தாண்டி மூளை செயலிழக்கும் அபாயமும் இருக்கிறது. சட்டை, தோல் பொருட்களில் பயன்படுத்தப்படும் இந்த வகை ரசாயன பொருட்கள் உடலுக்கு கேடு விளைவிக்க கூடியது.

    செயற்கை நிறமூட்டிகள் சேர்க்கப்பட்ட உணவு பொருட்களை சாப்பிட வேண்டாம் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஆள் இல்லாத வீடுகளை நோட்டமிட்டு இந்த கொள்ளை சம்பவங்கள் நடந்தது.
    • 6 கொள்ளை சம்பவங்களிலும் ஈடுபட்ட ராமச்சந்திரன் பழைய குற்றவாளி ஆவார்.

    பொள்ளாச்சி:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூர், ஆனைமலை பகுதியில் உள்ள 6 இடங்களில் தொடர்கொள்ளை சம்பவங்கள் அரங்கேறின. ஆள் இல்லாத வீடுகளை நோட்டமிட்டு இந்த கொள்ளை சம்பவங்கள் நடந்தது.

    இதில் தொடர்புடைய குற்றவாளியை கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவிட்டார்.

    இதன்படி வால்பாறை டி.எஸ்.பி. ஸ்ரீநிதி மற்றும் ஆனைமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அவர்கள் சம்பவ இடங்களில் விசாரணை நடத்தினர். மேலும் அந்தந்த பகுதிகளில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராக்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.

    விசாரணையில் மதுரையைச் சேர்ந்த ராமச்சந்திரன் (வயது 38) என்பவர் இந்த கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது. பகலில் கட்டிடத் தொழிலாளி போல் வலம் வந்துள்ளார். அப்போது பூட்டியிருக்கும் வீடுகளை நோட்டமிட்டு இரவில் வீடு புகுந்து நகை திருடியது தெரியவந்தது. இதையடுத்து ராமச்சந்திரனை தனிப்படை போலீசார் கைது செய்தனர். இவர் சமீபகாலமாக கோட்டூரில் உள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அதில் குடும்பத்துடன் தங்கியுள்ளார். அவரிடம் இருந்து ரூ.28 லட்சம் மதிப்புடைய 56 பவுன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    குற்றவாளி ராமச்சந்திரனை கைது செய்த தனிப்படை போலீசாருக்கு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் பாராட்டு தெரிவித்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    கோவை கோட்டூர் போலீஸ் சரகத்தில் கடந்தாண்டு அக்டோபர் மாதம் பூட்டியிருந்த 3 வீடுகளில் கொள்ளை சம்பவங்கள் நடைபெற்றது. தொடர்ந்து நடப்பாண்டு ஜனவரி மாதம் மேலும் 3 வீடுகளில் தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டது.

    இதுதொடர்பாக 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அவர்கள் அந்த பகுதியில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். இதில் அந்த பகுதிக்கு பரிச்சயம் இல்லாத ஒருவர் மோட்டார் சைக்கிளில் சென்றது தெரியவந்தது.

    தொடர்ந்து மோட்டார் சைக்கிள் பதிவெண் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டது. இதில் கோட்டூர் கொள்ளை சம்பவத்தில் தொடர்பு உடைய குற்றவாளி பற்றி தெரியவந்தது. தொடர்ந்து அதே பகுதியில் குடும்பத்துடன் தங்கியிருந்த கொத்தனார் ராமச்சந்திரன் என்பவரை கைது செய்தோம். பின்னர் அவரிடம் இருந்து ரூ.28 லட்சம் மதிப்புடைய 56 பவுன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

    கோட்டூரில் நடைபெற்ற 6 கொள்ளை சம்பவங்களிலும் ஈடுபட்ட ராமச்சந்திரன் பழைய குற்றவாளி ஆவார். இவர் மீது மதுரை மாநகர், மாவட்ட போலீஸ் நிலையங்களில் 15 குற்றவழக்குகள் நிலுவையில் உள்ளன. எனவே அவர் போலீசின் தேடுதல் வேட்டைக்கு பயந்து குடும்பத்துடன் கோவைக்கு வந்து கோட்டூர் பகுதியில் தனியாக வீடு எடுத்து தங்கி வந்து உள்ளார். இந்த நிலையில் அவருக்கு பணத்தேவை ஏற்பட்டதால் மீண்டும் கைவரிசை காட்டியது தெரியவந்து உள்ளது.

    ராமச்சந்திரனை கைது செய்யும் விஷயத்தில் எங்களுக்கு கண்காணிப்பு கேமராக்கள் மிகவும் உதவியாக இருந்தது. எனவே கோவை மாவட்டத்தில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அந்தந்த பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த முன்வர வேண்டும். மேலும் வெளியூர் செல்லும் பொதுமக்கள் அந்த பகுதியில் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு தகவல் தெரிவித்து விட்டு சென்றால், நாங்கள் ரோந்து பணிகளை மேலும் தீவிரப்படுத்த உதவியாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இலங்கை துணை தூதரகம் அனுப்பிய ஆவணங்கள் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்று தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
    • இலங்கை அனுப்புவதற்கான உத்தரவு ஒரு வாரத்தில் பிறப்பிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்தது.

    சென்னை:

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட சாந்தன், தற்போது திருச்சி சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

    தாயை கவனித்துக்கொள்ள தன்னை இலங்கைக்கு அனுப்ப உத்தரவிடக்கோரி சாந்தன் தாக்கல் செய்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

    விசாரணையின்போது, சாந்தன் தாயகம் திரும்புவதற்கான தற்காலிக பயண ஆவணத்தை இலங்கை துணை தூதரகம் அனுப்பி உள்ளது. இலங்கை துணை தூதரகம் அனுப்பிய ஆவணங்கள் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்று தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    தமிழக அரசு அனுப்பிய ஆவணம் வந்து சேரவில்லை. இலங்கை அனுப்புவதற்கான உத்தரவு ஒரு வாரத்தில் பிறப்பிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்தது.

    இதையடுத்து சாந்தன் தாக்கல் செய்த மனுவை பிப்.29-ந்தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தள்ளிவைத்தது.

    • ஒரு நிகழ்ச்சி வாயிலாக நான் வெறும் 2 கோடி மட்டுமே செலவு செய்துள்ளதாக தவறான தகவல் வெளியிட்டுள்ளது.
    • நிறுவனத்திற்கு கடிதம் வாயிலாக அந்த தவறான செய்தியை திருத்தி உண்மையை சொல்ல வேண்டும்.

    கன்னியாகுமரி:

    நிதி தொடர்பாக தவறாக செய்தி வெளியிட்ட தனியார் தொலைக்காட்சிக்கு விஜய் வச்ந்த் எம்.பி. கடிதம் எழுதியுள்ளார்.

    அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் கன்னியாகுமரி தொகுதிக்கு கடந்த 5 ஆண்டுகளில் அரசு ஒதுக்கிய 17 கோடி ரூபாய் முழுவதும் (100%) மக்கள் நல திட்டங்களுக்காக செலவு செய்துள்ள நிலையில், சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒரு நிகழ்ச்சி வாயிலாக நான் வெறும் 2 கோடி மட்டுமே செலவு செய்துள்ளதாக தவறான தகவல் வெளியிட்டுள்ளது.

    இன்று அந்த நிறுவனத்திற்கு கடிதம் வாயிலாக அந்த தவறான செய்தியை திருத்தி உண்மையை சொல்ல வேண்டும் என கேட்டு கொண்டேன்.

    தவறும் பட்சத்தில் சட்டரீதியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று கூறியுள்ளார்.

    • கவர்னருக்கும் கோட்சேவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
    • சபாநாயகருக்கு கட்சி சார்ந்து பேச உரிமையில்லை.

    ராயபுரம்:

    தண்டையார்பேட்டை, பழைய வைத்தியநாதன் சாலையில் பா.ஜனதா கட்சியின் வடசென்னை பாராளுமன்ற தேர்தல் அலுவலகத்தை மாநில தலைவர் அண்ணாமலை திறந்து வைத்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சென்னையை பொறுத்தவரை பாதயாத்திரையை வேறுவிதமாக நடத்த இருக் கிறோம். செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததை வைத்து அவருக்கு ஜாமீன் வழங்க கூடாது. சட்டசபையில் தமிழ்தாய் வாழ்த்தை முழுமையாக வாசிக்க வேண்டும்.

    கருணாநிதியால் வெட்டப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்தை இசைக்கக் கூடாது. ஜி.எஸ்.டி.கொண்டு வரப்பட்டதற்கு பின்பு தான் தமிழகத்தின் வரி வளர்ச்சி அதிகரிக்கப்பட்டுள்ளது.

    சபாநாயகர் அப்பாவு தி.மு.க. உறுப்பினர் போல் நடந்து கொண்டார். நாதி ராம் கோட்சேவுக்கும் அப்பாவுக்கும் தொடர்பு இருக்கலாம். கவர்னருக்கும் கோட்சேவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சபாநாயகருக்கு கட்சி சார்ந்து பேச உரிமையில்லை.


    ஆளுநருக்காக எழுதி கொடுத்த உரையில் 10 பொய்களை சுட்டிக்காட்டி உள்ளோம். சபாநாயகர் அப்பாவு தி.மு.க.வை விட மோசமாக உள்ளார்.

    சென்னை வெள்ளத்தில் மக்கள் தத்தளிக்கவில்லை என்று கூறி தி.மு.க.வை கவர்னர் பாராட்ட வேண்டும் என்றால் எப்படி பாராட்டுவார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் பா.ஜனதா மாநில துணைத் தலைவரும் வடசென்னை பொறுப்பாளருமான பால்கனகராஜ், பாராளுமன்ற இணை அமைப்பாளர் பிரசாத், பாராளுமன்ற பொறுப்பாளர் பெப்சி சிவா, மாவட்டத் தலைவர் கிருஷ்ணகுமார், கபிலன், ஊடகப்பிரிவு மாநில செயலாளர் மற்றும் பாராளுமன்ற பிரிவு பொறுப்பாளர் சி.பி.நவீன், ஆர்.கே.நகர் சட்டமன்ற அமைப்பாளர் எஸ்.ஆர்.செந்தில், பாஸ்கோ மாணிக்கம், சிவகுமார், திருவொற்றியூர் சட்டமன்ற அமைப்பாளர் ஜெய் கணேஷ், திருமுருகன், ராயபுரம் சட்டமன்ற அமைப்பாளர் வன்னிய ராஜன், இணை அமைப்பாளர் விஜயகுமார், பொருளாளர் சதாசிவம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தகுதி உள்ளவர்களில் 85-ல் இருந்து 90 சதவிகித மகளிருக்கு உரிமைத் தொகை சென்றடைந்து உள்ளது.
    • நம் பிரச்சாரம் வெற்றிப் பிரச்சாரமாக அமைந்திட வேண்டும்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தி.மு.க.வின் சார்பில் 'உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் பாசிசம் வீழட்டும்! இந்தியா வெல்லட்டும்' என்ற தலைப்பில் பாராளுமன்றத் தொகுதிவாரியாக தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டங்கள் வருகிற 16, 17, 18 ஆகிய தேதிகளில் நடை பெற உள்ளன.

    இந்த பொதுக்கூட்டங்களை மிகச்சிறப்பாக நடத்துவது குறித்து பாராளுமன்றத் தேர்தல் ஒருங்கிணைப்பு குழு, அனைத்து மாவட்டக் கழக செயலாளர்கள், மாவட்ட பொறுப்பு அமைச்சர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தியது.

    இந்தக் கூட்டத்தில் தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும் பாராளுமன்ற தேர்தல் ஒருங்கிணைப்பு குழு உறுப்பினருமான அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்துக்கு மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. இதுவரை ஒரு கோடியே 15 லட்சம் மகளிர் பயனடைந்து இருக்கிறார்கள். அதாவது தகுதி உள்ளவர்களில் 85-ல் இருந்து 90 சதவிகித மகளிருக்கு உரிமைத் தொகை சென்றடைந்து உள்ளது.

    கடுமையான நிதி நெருக்கடிக்கு இடையில்தான் இந்த மகளிர் உரிமைத் திட் டம், மகளிருக்குக் கட்டணம் இல்லா பேருந்து வசதி போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. மகளிருக்குக் கட்டணம் இல்லா பேருந்துத் திட்டத்தின் மூலம் ஒவ்வொரு மகளிரும் மாதந்தோறும் கிட்டத்தட்ட 900 ரூபாய் சேமிக்கிறார்கள்.

    2 லட்சத்து 71 ஆயிரம் மாணவிகள் புதுமைப் பெண் திட்டத்தின் மூலம் இந்த இரண்டரை வருடங்களில் பயனடைந்து இருக்கிறார்கள். அதேபோல் முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டம். இதில் தினமும் 17 லட்சம் குழந் தைகள் பயன்பெற்று வருகிறார்கள். 'நான் முதல்வன்' திட்டம் வாயிலாக இது வரைக்கும் 12 லட்சம் மாணவர்கள் பயன்பெற்று இருக்கிறார்கள்.

    இதை மக்களிடம் எடுத்துக் கொண்டு சென்று பேசுங்கள். இதை ஒரு பேசு பொருளாக்குங்கள்.

    ஊழல் ஒழிப்பு பற்றிப் பேசிய ஒன்றிய அரசு ஏழரை லட்சம் கோடி ரூபாய் ஊழல் செய்திருக்கிறது. இதனை நாம் சொல்லவில்லை, சி.ஏ.ஜி அறிக்கையே அம் பலப்படுத்தி இருக்கிறது.

    இன்றைக்கு அ.தி.மு.க. வினர் ஏதோ பா.ஜ.க கூட்டணியை விட்டு வெளியே வந்துவிட்டோம் என்று திடீரென சிறுபான்மையினர் மீது பாசத்தைப் பொழிகிறார்கள்.

    இதை மக்கள் நம்புவதற்குத் தயாராக இல்லை. பத்தாண்டு காலம் பா.ஜ.க தமிழ்நாட்டைச் சீரழித்தது என்றால், நேரடியாக அவர்கள் வந்து செய்யவில்லை. அ.தி.மு.க.வின் உதவியோடுதான் எல்லா வற்றையும் நமக்கு எதிராகச் செய்து முடித்தார்கள்.

    இதையெல்லாம்தான் நாம் மக்களிடம் எடுத்துச் செல்லவேண்டும். நம் பிரச்சாரம் வெற்றிப் பிரச்சாரமாக அமைந்திட வேண்டும்.

    தென் சென்னை, மத்திய சென்னை, வடசென்னை ஆகிய மூன்று தொகுதிகளுக்கான மிகப்பெரிய, ஒரு பிரமாண்டக் கூட்டம் நம் தலைவரின் பிறந்த நாளான மார்ச் 1 அன்று நடைபெற இருக்கிறது. எனவே, இந்தக் கூட்டங்களை யெல்லாம் மிகப்பெரிய வெற்றி அடையச் செய்ய வேண்டியது நம் கடமை.

    விடியலை நோக்கி தலைவரின் குரலாக நாம் 2021-ல் தமிழ்நாடு எங்கும் எதிரொலித்தோம். தமிழ் நாட்டுக்குப் புதிய விடியல் கிடைத்தது. அதே போல் இப்போது உரிமைகளை மீட்க தலைவரின் குரலாக எதிரொலிப்போம். ஒட்டு மொத்த இந்தியாவுக்கும் விடியல் கிடைக்கும் நாள் தூரத்தில் இல்லை. கலைஞர் நூற்றாண்டில் 'பாசிசம் வீழ்ந்தது, இந்தியா வென்றது' என்ற வரலாற்றைப் படைத்திடுவோம் என்று கூறி விடை பெறுகிறேன்."

    இவ்வாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

    ×