search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பகலில் கட்டிடத் தொழிலாளி- இரவில் கொள்ளையனாக வலம் வந்த வாலிபர்
    X

    பகலில் கட்டிடத் தொழிலாளி- இரவில் கொள்ளையனாக வலம் வந்த வாலிபர்

    • ஆள் இல்லாத வீடுகளை நோட்டமிட்டு இந்த கொள்ளை சம்பவங்கள் நடந்தது.
    • 6 கொள்ளை சம்பவங்களிலும் ஈடுபட்ட ராமச்சந்திரன் பழைய குற்றவாளி ஆவார்.

    பொள்ளாச்சி:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூர், ஆனைமலை பகுதியில் உள்ள 6 இடங்களில் தொடர்கொள்ளை சம்பவங்கள் அரங்கேறின. ஆள் இல்லாத வீடுகளை நோட்டமிட்டு இந்த கொள்ளை சம்பவங்கள் நடந்தது.

    இதில் தொடர்புடைய குற்றவாளியை கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவிட்டார்.

    இதன்படி வால்பாறை டி.எஸ்.பி. ஸ்ரீநிதி மற்றும் ஆனைமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அவர்கள் சம்பவ இடங்களில் விசாரணை நடத்தினர். மேலும் அந்தந்த பகுதிகளில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராக்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.

    விசாரணையில் மதுரையைச் சேர்ந்த ராமச்சந்திரன் (வயது 38) என்பவர் இந்த கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது. பகலில் கட்டிடத் தொழிலாளி போல் வலம் வந்துள்ளார். அப்போது பூட்டியிருக்கும் வீடுகளை நோட்டமிட்டு இரவில் வீடு புகுந்து நகை திருடியது தெரியவந்தது. இதையடுத்து ராமச்சந்திரனை தனிப்படை போலீசார் கைது செய்தனர். இவர் சமீபகாலமாக கோட்டூரில் உள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அதில் குடும்பத்துடன் தங்கியுள்ளார். அவரிடம் இருந்து ரூ.28 லட்சம் மதிப்புடைய 56 பவுன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    குற்றவாளி ராமச்சந்திரனை கைது செய்த தனிப்படை போலீசாருக்கு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் பாராட்டு தெரிவித்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    கோவை கோட்டூர் போலீஸ் சரகத்தில் கடந்தாண்டு அக்டோபர் மாதம் பூட்டியிருந்த 3 வீடுகளில் கொள்ளை சம்பவங்கள் நடைபெற்றது. தொடர்ந்து நடப்பாண்டு ஜனவரி மாதம் மேலும் 3 வீடுகளில் தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டது.

    இதுதொடர்பாக 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அவர்கள் அந்த பகுதியில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். இதில் அந்த பகுதிக்கு பரிச்சயம் இல்லாத ஒருவர் மோட்டார் சைக்கிளில் சென்றது தெரியவந்தது.

    தொடர்ந்து மோட்டார் சைக்கிள் பதிவெண் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டது. இதில் கோட்டூர் கொள்ளை சம்பவத்தில் தொடர்பு உடைய குற்றவாளி பற்றி தெரியவந்தது. தொடர்ந்து அதே பகுதியில் குடும்பத்துடன் தங்கியிருந்த கொத்தனார் ராமச்சந்திரன் என்பவரை கைது செய்தோம். பின்னர் அவரிடம் இருந்து ரூ.28 லட்சம் மதிப்புடைய 56 பவுன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

    கோட்டூரில் நடைபெற்ற 6 கொள்ளை சம்பவங்களிலும் ஈடுபட்ட ராமச்சந்திரன் பழைய குற்றவாளி ஆவார். இவர் மீது மதுரை மாநகர், மாவட்ட போலீஸ் நிலையங்களில் 15 குற்றவழக்குகள் நிலுவையில் உள்ளன. எனவே அவர் போலீசின் தேடுதல் வேட்டைக்கு பயந்து குடும்பத்துடன் கோவைக்கு வந்து கோட்டூர் பகுதியில் தனியாக வீடு எடுத்து தங்கி வந்து உள்ளார். இந்த நிலையில் அவருக்கு பணத்தேவை ஏற்பட்டதால் மீண்டும் கைவரிசை காட்டியது தெரியவந்து உள்ளது.

    ராமச்சந்திரனை கைது செய்யும் விஷயத்தில் எங்களுக்கு கண்காணிப்பு கேமராக்கள் மிகவும் உதவியாக இருந்தது. எனவே கோவை மாவட்டத்தில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அந்தந்த பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த முன்வர வேண்டும். மேலும் வெளியூர் செல்லும் பொதுமக்கள் அந்த பகுதியில் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு தகவல் தெரிவித்து விட்டு சென்றால், நாங்கள் ரோந்து பணிகளை மேலும் தீவிரப்படுத்த உதவியாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×