என் மலர்
உள்ளூர் செய்திகள்
- மேட்டுப்பாளையம் வனச்சரக பகுதிகளில் 9 குட்டைகள், 18 தண்ணீர் தொட்டிகள் உள்ளன.
- காட்டுக்குள் வசிக்கும் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் தண்ணீர்த்தொட்டிகளை தேடி அலைந்து திரிந்து வருகின்றன.
மேட்டுப்பாளையம்:
மேட்டுப்பாளையம் வனச்சரக பகுதிகளில் காட்டு யானை, மான், காட்டுப்பன்றி, காட்டெருமை, சிறுத்தை உள்ளிட்ட எண்ணற்ற வன விலங்குகள் உள்ளன. அங்கு கடந்த சில நாட்களாக கோடைக்காலம் தொடங்கும் முன்பாகவே வெயில் வாட்டி வதைத்து வருகிறது.
இதன் காரணமாக வனப்பகுதிகளில் தற்போது கடும் வறட்சி நிலவி வருகிறது. மேலும் அங்குள்ள குளம், குட்டைகள் மற்றும் நீர்நிலைகளில் தண்ணீர் வற்றிவிட்டதால், வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீரை தேடி காட்டுக்குள் அங்கு மிங்குமாக அலைந்து திரிந்து வருகின்றன.
எனவே அடர்ந்த வனப்பகுதியில் இருக்கும் விலங்குகளின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக, காட்டுக்குள் இருக்கும் வனநீர்த்தேக்க தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதுதொடர்பாக மேட்டுப்பாளையம் வனச்சரகர் ஜோசப்ஸ்டாலின் கூறியதாவது:-
மேட்டுப்பாளையம் வனச்சரக பகுதிகளில் 9 குட்டைகள், 18 தண்ணீர் தொட்டிகள் உள்ளன. அங்கு தற்போது கடும் வறட்சி நிலவி வருவதால் குளம், குட்டை மற்றும் நீர்நிலைகளில் தண்ணீர் வற்றிவிட்டது. எனவே காட்டுக்குள் வசிக்கும் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் தண்ணீர்த்தொட்டிகளை தேடி அலைந்து திரிந்து வருகின்றன.
இதனை கருத்தில் கொண்டு காட்டுக்குள் இருக்கும் வனநீர்த்தேக்க தொட்டிகளை சீரமைக்கும் பணிகள் முழுவீச்சில் தொடங்கி நடைபெற்று வருகின்றன. அங்கு தினந்தோறும் தண்ணீரை நிரப்பும் பணி முடுக்கி விடப்பட்டு உள்ளது.
வன நீர்த்தேக்க தொட்டிகளில் தண்ணீர் நிரப்புவதன் மூலம் வன விலங்குகளின் தண்ணீர் தேவை பூர்த்தியாகும். மேலும் வனப்பகுதியில் இருந்து விலங்குகள் வெளியேறுவதும் தவிர்க்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- காங்கிரஸ் கட்சி எனக்கு பல்வேறு பொறுப்புகளை தந்திருக்கிறது.
- காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி கொள்கை ரீதியான கூட்டணி.
சென்னை:
தமிழக காங்கிரஸ் தலைவராக செல்வபெருந்தகை நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நாளை (புதன்கிழமை) மாலையில் சத்தியமூர்த்தி பவனில் நடக்கும் நிகழ்ச்சியில் பதவியேற்கிறார். கே.எஸ்.அழகிரி அவரிடம் பொறுப்புகளை ஒப்படைக்கிறார்.
கே.எஸ்.அழகிரி திடீரென்று மாற்றப்பட்டதற்கு, பல்வேறு காரணங்கள் வலைதளங்களில் உலா வருகிறது. இதுபற்றி கே.எஸ்.அழகிரியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
நான் தூய காங்கிரஸ்காரனாக இத்தனை ஆண்டு காலம் பொது வாழ்வில் ஈடுபட்டு வருகிறேன். காங்கிரஸ் கட்சி எனக்கு பல்வேறு பொறுப்புகளை தந்திருக்கிறது.

மிகவும் உயர்வான பொறுப்பாக மாநில தலைவர் பதவியை கட்சி மேலிடம் வழங்கியது. 50 ஆண்டுகாலத்தில் மூதறிஞர் ராஜாஜி, பெருந்தலைவர் காமராஜர், வாழப்பாடி ராமமூர்த்தி ஆகியோருக்கு பிறகு 5 ஆண்டுகளுக்கும் மேலாக தலைவர் பதவியில் நீடித்தவன் என்ற மனநிறைவுடன் இருக்கிறேன்.
பொதுவாகவே இரண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்குள் புதிய தலைவர் பற்றிய பேச்சு அடிபடும். ஆனால் என்னை பொறுத்த வரை கடந்த 3 மாதமாகவே புதிய தலைவர் நியமனம் பற்றி கட்சி மேலிடம் ஆலோசனை செய்து வந்தது. இந்த மாற்றம் என்பது இயல்பான ஒன்றுதான். நான் மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டு உள்ளேன்.
கட்சிக்குள் ஏதாவது பிரச்சினைகள் உருவாக்கலாமா? என்று வதந்திகளை பரப்புகிறார்கள். உண்மையான காங்கிரஸ் தொண்டர்கள் இந்த தவறான தகவல்களை ஏற்றுக் கொள்ளவும் மாட்டார்கள். கண்டு கொள்ளவும் மாட்டார்கள்.
காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி கொள்கை ரீதியான கூட்டணி. இந்த கூட்டணி மகத்தான வெற்றி பெறும். அதில் சந்தேகம் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- ராகுல் காந்தியுடன் கமல்ஹாசன் மிகவும் நெருக்கமாக உள்ளார்.
- பல்வேறு கேள்விகளுக்கு விடை அளிக்க வேண்டிய கட்டாயத்தில் கமல்ஹாசன் உள்ளார்.
சென்னை:
பாராளுமன்ற தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணியில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி இடம் பெறுமா என்பது மிகப் பெரிய கேள்வியாக உருவெடுத்து உள்ளது. தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், ம.தி.மு.க., கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளோடு தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழு முதல்கட்ட பேச்சுவார்த்தையை நடத்தி முடித்துள்ளது.
இரண்டாவது கட்ட பேச்சு வார்த்தையை நடத்துவதற்கு தி.மு.க. கூட்டணி கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன. அதே நேரத்தில் தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ளதாக கருதப்படும் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியை இதுவரை தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்துவதற்கு யாரும் அழைக்கவில்லை.
இது தொடர்பாக தி.மு.க. முன்னணி தலைவர்கள் கூறும்போது, 'கமல்ஹாசன் கூட்டணியில் இருக்கிறாரா என்பது எங்களுக்கு தெரியாது. அது பற்றி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தான் முடிவு செய்வார் என்று தெரிவித்து இருந்தனர். இதன் மூலம் கமல்ஹாசன் தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ளாரா? என்கிற கேள்வி வலுப்பெற்றது.
இந்த நிலையில் அமெரிக்கா சென்றிருந்த கமல்ஹாசன் தனது 19 நாட்கள் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பினார். அவரிடம் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பிய போது அமெரிக்காவில் இருந்து செய்தியோடு நான் வரவில்லை.

இனி தான் செய்தியை உருவாக்க வேண்டும். இரண்டு நாட்களில் உங்களை சந்திக்கிறேன். அப்போது அனைத்து விஷயங்களுக்கும் பதில் அளிக்கிறேன். நல்ல செய்தியை தருகிறேன் என்று கூறிவிட்டு சென்றுவிட்டார். இதன் மூலம் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் இடம் பெறுவது இன்னும் உறுதிப்படுத்தப்படாமலேயே உள்ளது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சி 7-ம் ஆண்டு தொடக்க விழா ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் கமல்ஹாசன் பங்கேற்று கட்சி நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்துகிறார். அப்போது இதுவரையில் தொகுதி பங்கீடு தொடர்பாக தி.மு.க. கூட்டணியில் இருந்து அழைப்பு வராதது பற்றி விரிவாக விவாதிக்கப்படுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கமல்ஹாசன் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சு நடத்துவார் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியினர் ஏற்கனவே தெரிவித்து இருந்தனர். எனவே வரும் நாட்களில் அது போன்ற சந்திப்பு நடந்து தி.மு.க. காங்கிரஸ் கூட்டணியில் கமல்ஹாசன் இடம் பெறுவது உறுதி செய்யப்படுமா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக தி.மு.க.வினர் கூறும் போது கூட்டணியில் ஏற்கனவே உள்ள கட்சிகளுக்கு இடங்களை பகிர்ந்து கொடுப்பதிலேயே பெரிய சிக்கல் நீடித்து வருகிறது. இந்த நிலையில் புதிதாக சேர உள்ள கமல்ஹாசன் கட்சிக்கு எப்படி இடங்களைபகிர்ந்து கொடுப்பது என்பது பெரிய பிரச்சினையாகவே உள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சியை பொறுத்த வரையில் காங்கிரஸ் கட்சியுடன் அதிக நெருக்கமாக அந்த கட்சி உள்ளது அந்த கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தியுடன் கமல்ஹாசன் மிகவும் நெருக்கமாக உள்ளார்.
எனவே காங்கிரசுக்கு நாங்கள் ஒதுக்கும் இடத்தில் கமல்ஹாசன் ஒன்றோ அல்லது இரண்டு இடங்களையோ கேட்டு பெற்று போட்டியிடுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாகவும் நாளை நடைபெறும் கூட்டத்தில் கமல்ஹாசன் ஆலோசனை நடத்துகிறார். ஒருவேளை தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியில் இடம் கிடைக்காத பட்சத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி தனித்து போட்டியிடுமா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. இப்படி பாராளுமன்ற தேர்தல் களத்தில் பல்வேறு கேள்விகளுக்கு விடை அளிக்க வேண்டிய கட்டாயத்தில் கமல்ஹாசன் உள்ளார். இந்த கேள்விகள் அனைத்துக்கும் நாளை நடைபெறும் கூட்டத்துக்கு பிறகு கமல்ஹாசன் விடை அளிப்பார் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
- 100 உழவர் அங்காடிகள் அமைக்க ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு.
- சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்து விதைகள் மானிய விலையில் விநியோகிக்க ரூ.35 கோடி நிதி ஒதுக்கீடு.
சென்னை:
தமிழக சட்டசபையில் இன்று 2024-25ம் ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் விபரம் வருமாறு:
* சீவன் சம்பா போன்ற பாரம்பரிய நெல் ரகங்கள் சாகுபடி செய்ய விதை விநியோகம் செய்யப்படும்.
* உயிர்ம வேளாண்மைக்கான மாதிரிப் பண்ணை உருவாக்க ரூ.38 லட்சம் நிதி ஒதுக்கீடு.
* விவசாயிகள் கூடுதல் லாபம் பெற 725 உயிர்ம வேளாண் தொகுப்புகளுக்கு ரூ.27 கோடி நிதி ஒதுக்கீடு
* பதப்படுத்தும் கூடங்கள் அமைத்து, தேனீ வளர்ப்பு பயிற்சிகள் அளித்திட ரூ.3.60 கோடி நிதி ஒதுக்கீடு.
* 100 உழவர் அங்காடிகள் அமைக்க ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு.
* 2482 ஊராட்சிகளை அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்துடன் இணைத்து செயல்படுத்த ரூ.200 கோடி நிதி.
* பயறு பெருக்குத் திட்டம், 4.75 லட்சம் ஏக்கர் பரப்பில் செயல்படுத்திட ரூ.40.27 கோடி நிதி ஒதுக்கீடு.
* துவரை சாகுபடிப் பரப்பு விரிவாக்க இயக்கம் செயல்படுத்த ரூ.17.50 கோடி நிதி ஒதுக்கீடு.
* எண்ணெய் வித்துப்பயிர்களின் சாகுபடியை 2.50 லட்சம் ஏக்கர் பரப்பளவில் பரவலாக்கம் செய்திட, ரூ.45 கோடி நிதி ஒதுக்கீடு.
* எள் சாகுபடி பரப்பு விரிவாக்க திட்டம் 25,000 ஏக்கர் பரப்பளவில் செயல்படுத்திட ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு.
* சூரியகாந்தி சாகுபடி பரப்பு விரிவாக்கத் திட்டம் 12,500 ஏக்கர் பரப்பளவில் செயல்படுத்திட ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு.
* வீரிய ஒட்டு ஆமணக்கு சாகுபடி பரப்பு விரிவாக்கத்திட்டத்திற்கு ரூ.18 லட்சம் நிதி ஒதுக்கீடு.
* சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்து விதைகள் மானிய விலையில் விநியோகிக்க ரூ.35 கோடி நிதி ஒதுக்கீடு.
* நிலக்கடலை போன்ற வேளாண் பயிர்களில் 50,000 ஏக்கர் பரப்பிற்கு ஜிப்சம் வழங்க ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு.
* ஒரு கிராமம் ஒரு பயிர் என்ற புதிய திட்டம் 15,280 கிராமங்களில் அறிமுகம்.
இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.
- அகத்தியருக்கு திருமண கோலத்தில் சிவபெருமான் காட்சி அளித்த தலம்.
- ஆண்டுதோறும் மாசிமக பெருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் வேதாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றிலும் சிறப்புடையது. அகத்தியருக்கு திருமண கோலத்தில் சிவபெருமான் காட்சி அளித்த தலம்.
மேலும், பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் ஆண்டுதோறும் மாசிமக பெருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான மாசிமக பெருவிழா கடந்த 5-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழா நாட்களில் தினமும் காலை, மாலை வேளையில் சிறப்பு அலங்காரத்தில் பல்வேறு வாகனங்களில் சுவாமி- அம்பாள் எழுந்தருளி வீதிஉலா நடைபெற்று வருகிறது. பிரசித்திபெற்ற திருக்கதவு அடைக்க, திறக்க பாடும் ஐதீக விழா சிறப்பாக நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று காலை வெகு விமரிசையாக நடைபெற்றது. தேரில் சிறப்பு அலங்காரத்தில் தியாகராஜ சுவாமி எழுந்தருளினார். பாரம்பரிய இசைக்கருவிகளான தாரை, தப்பு உள்ளிட்ட வாத்தியங்கள் முழங்க பக்தர்கள் புடைசூழ தேரோட்டம் நடைபெற்றது.
இதில் வேதாரண்யம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தியாகேசா.. மறைகாடா.. என பக்தி கோஷம் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேரானது 4 வீதிகளிலும் அசைந்தாடியபடி சென்று, நிலையை வந்தடைந்தது.
- போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே சம்புவராயநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் ரகு (வயது 48). பட்டு நெசவு தொழில் செய்து வருகிறார். இவர் நேற்று மதியம் ஆரணி தனியார் வங்கிக்கு பைக்கில் சென்றார்.
வங்கியில் இருந்து தனது கணக்கில் உள்ள ரூ.5 லட்சத்தை எடுத்தார். ஆரணி டவுன் பெரியகடை வீதியில் உள்ள நகைகடைக்கு சென்று தன் பெயரில் வைத்துள்ள நகைகளை மீட்பதற்காக சென்றார்.
இதனால் ரூ.1 லட்சத்து 23 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு மீதி தொகையான ரூ.3 லட்சத்து 77 ஆயிரத்தை பைக்கில் உள்ள பெட்டியில் வைத்து விட்டு நகை கடையின் உள்ளே சென்றார்.
இதனை நோட்டமிட்ட மர்ம கும்பல் பைக்கின் பெட்டியை உடைத்து அதில் இருந்த ரூ.3 லட்சத்து 77 ஆயிரத்தை திருடி சென்றனர்.
பின்னர் வெளியே வந்த ரகு வீட்டிற்கு செல்வதற்காக பைக்கை எடுக்க முயன்றார். அப்போது பைக்கின் பெட்டி உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
மேலும் பணம் திருடு போனது தெரிய வந்தது. இது குறித்து ரகு ஆரணி டவுன் போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.
அதில் மர்ம கும்பல் பணத்தை திருடி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இதனை வைத்து போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.
அதிக நடமாட்டம் உள்ள ஆரணி டவுன் பகுதியில் பட்டப்பகலில் பைக்கின் பெட்டியை உடைத்து பணத்தை திருடி சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- ஆண்டு தோறும் புலிகள் கணக்கெடுக்கும் பணி நடைபெறுகிறது.
- பயிற்சி முகாம் அம்பை கோட்ட துணை இயக்குனர் இளையராஜா தலைமையில் முண்டந்துறையில் இன்று காலை தொடங்கியது.
கல்லிடைக்குறிச்சி:
நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் திருக்குறுங்குடி முதல் கடையம் வரை 895 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அமைந்துள்ளது.
பல்லுயிர் பெருக்கத்திற்கு புகழ் பெற்ற இக்காப்பகத்தில் புலி, சிறுத்தை, யானை, கரடி, சிங்கவால் குரங்கு, செந்நாய்கள், கடமான் உள்ளிட்ட அரிய வகை விலங்குகள், மூலிகை தாவரங்கள் உள்ளது.
இங்கு ஆண்டு தோறும் புலிகள் கணக்கெடுக்கும் பணி நடைபெறுகிறது. இந்த ஆண்டு அம்பை கோட்டத்திற்கு உட்பட்ட அம்பை, பாபநாசம், முண்டந்துறை, கடையம் உள்ளிட்ட வனச் சரகங்களில் இன்று முதல் புலிகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கி வருகிற 27-ந்தேதி வரை நடைபெறுகிறது.
இதனையொட்டி புலிகள் கணக்கெடுப்பாளர்களுக்கான பயிற்சி முகாம் அம்பை கோட்ட துணை இயக்குனர் இளையராஜா தலைமையில் முண்டந்துறையில் இன்று காலை தொடங்கியது. இந்த பயிற்சி முகாமில் 100-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.
இதைத்தொடர்ந்து பயிற்சி காலையில் முடிந்தவுடன் உடனடியாக மதியமே கணக்கெடுக்கும் பணியில் தன்னார்வலர்கள் ஈடுபட தொடங்கினர். தொடர்ந்து முண்டந்துறை அருகே நாளை (புதன்கிழமை) கணக்கெடுப்பு பணி நடக்கிறது.
இதனையொட்டி பாபநாசம், மணிமுத்தாறு சோதனை சாவடிகள் தற்காலிகமாக மூடப்படுகிறது. இதனால் அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அருவி, மாஞ்சோலை, சொரிமுத்து அய்யனார் கோவில் ஆகிய இடங்களுக்கு இன்று முதல் பொதுமக்கள் செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். இதனை அறியாமல் வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
- ஒருவர் விரதம் மேற்கொள்வதன் நோக்கம் எதுவாகவும் இருக்கலாம்.
- பசியோடு விரதம் இருந்தால் உங்கள் ஆற்றல் பலவீனமடையும்.
விரதம் என்பது உணவின் மீதான பற்றை தற்காலிகமாக கைவிடுதல். காரணம் ஒரு மனிதனின் வாழ்வாதாரத்தின் மிக முக்கிய அங்கமாக இருப்பது உணவு. நம் புராணங்களில், இலக்கியங்களில் பல்வேறு விதமான விரதம் குறித்த குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.
சஷ்டி விரதம், நவராத்திரி விரதம், மஹா சிவராத்திரி விரதம், ஏகாதசி விரதம் என ஏராளமான விரத முறைகள் உண்டு. ஒவ்வொரு விரதத்திற்கும் ஒவ்வொரு குணநலன்களும், பலன்களும் உண்டு. நம்முடைய ஒவ்வொரு செயலுக்கும் நோக்கம் என்பது கட்டாயம் இருக்கும். அந்த வகையில் ஒருவர் விரதம் மேற்கொள்வதன் நோக்கம் எதுவாகவும் இருக்கலாம். ஆன்மீகம், ஆரோக்கியம் என எந்த நோக்கத்தோடு ஒருவர் விரதம் அனுசரித்தாலும், இறுதியில் அது அந்த குறிப்பிட்ட நபரின் நல்வாழ்வை மேம்படுத்துவது தான் விரதத்தின் சிறப்பு.
அந்த வகையில் ஆன்மீக பாதையில் விரதம் இருப்பதால், தெய்வீகத்தின் தீவிரத்தை சற்று நெருக்கமாக உணர முடியும். ஆன்மீக ரீதியான சாதனாக்கள் செய்கிற போது அதற்கு ஒத்துழைக்கும் விதமாக மனமும், உடலும் சமநிலை அடைகிறது. உணவு உட்கொள்ளும் முறை குறித்து சத்குரு அவர்கள் கூறும் போது கூட, யோக முறையில் ஒரு உணவுக்கும் மற்றொரு உணவுக்குமான இடைவெளி குறைந்தது 8 மணி நேரம் இருக்க வேண்டும் என்கிறார்.
மேலும் அவர் "வயிறு காலியாக இருக்கும் போது உணவை ஜீரணித்து வெளியேற்றும் மண்டலம் சிறப்பாக வேலை செய்கிறது. அதுமட்டுமின்றி ஒருவர் ஒருபோதும் கட்டாயமாக, இந்த விரதத்தை மேற்கொள்ளாமல் இருப்பது அவசியம். உடலின் இயற்கையான சுழற்சியோடு ஒன்றி இந்த விரதத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். இதை தான் நாம் மண்டலம் என்று அழைக்கிறோம். ஒரு செயல்முறையை 40 இல் இருந்து 48 நாட்கள் தொடர்ந்து செய்கிற போது நம் உடல் குறிப்பிட்ட செயல்முறைக்கு உட்படுத்தப்படும்.
இந்த சுழற்சி தொடரும் போது உடலுக்கு எப்போது உணவு தேவை என்கிற விழிப்புணர்வு கிடைக்கும். அதற்கு உணவு தேவைப்படாத போது நீங்கள் வெகு இயல்பாக விரதத்தை மேற்கொள்ள முடியும். அதோடு வயிறு காலியாக இருப்பதற்கும் பசியோடு இருப்பதற்கும் வித்தியாசம் உண்டு. பசியோடு விரதம் இருந்தால் உங்கள் ஆற்றல் பலவீனமடையும். அதுவே உங்கள் வயிறு காலியாக இருந்தால் உங்கள் உடலும் மனமும் அதன் உட்சபட்ச திறனில் வேலை செய்யும்" என்கிறார்.
இதனால் தான் சிவாங்கா சாதனாவில் இருக்கும் சாதகர்கள், இரு வேளை உணவு மட்டுமே உண்ண அறிவுருத்தப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக முதல் வேளை உணவு நண்பகல் 12 மணிக்கு மேல் உண்ண அறிவுருத்தப்பட்டுள்ளது.
அதன்படி விரதமிருந்து சிவாங்கா சாதனா மேற்கொள்ளும் சாதகர்கள் பலர், தற்போது ஆதியோகி ரத யாத்திரையில் பங்கேற்றுள்ளனர். அவர்களோடு ஏராளமான தொண்டர்கள், பக்தர்கள், பொதுமக்கள் என பலரும் ஆதியோகி ரத யாத்திரையில் பங்கெடுத்துள்ளனர். மஹாசிவராத்திரியை முன்னிட்டு 4 ஆதியோகி ரதங்கள் கடந்த ஜனவரி 5 ஆம் தேதி கோவை ஈஷா யோக மையத்தில் இருந்து புறப்பட்டு தமிழகத்தின் நான்கு திசைகளிலும் வலம் வந்தவாறு இருக்கிறது. 35,000 கி.மீக்கும் மேற்பட்ட தூரத்தை கடந்து, மார்ச் 8 ஆம் தேதி மஹாசிவராத்திரி அன்று இந்த ரதங்கள் கோவை ஈஷா யோக மையத்தை வந்தடைய உள்ளன.
- 2 லட்சம் ஏக்கரில் பசுந்தாள் உரப் பயிரிட, ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு.
- ஆடாதொடா, நொச்சி தாவர வகைகளை நடவு செய்திட ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு.
சென்னை:
தமிழக சட்டசபையில் இன்று 2024-25ம் ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் விபரம் வருமாறு:
* கரும்பு உற்பத்தியில் தேசிய அளவில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
* தென் மாவட்டங்களில் ஏற்பட்ட பெருமழை பயிர் சேதத்திற்கு விரைவில் 208.20 கோடி நிதி வழங்கப்படும்.
* 2023-24ம் ஆண்டில் 127 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானிய உற்பத்தியை எட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
* முதலமைச்சரின் "மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம்" 2024-25ம் ஆண்டில் இந்த திட்டம் 22 இனங்களுடன், 206 கோடி ரூபாய் நிதியில் செயல்படுத்தப்படும்.
* 2 லட்சம் ஏக்கரில் பசுந்தாள் உரப் பயிரிட, ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு.
* 10,000 விவசாயிகளுக்கு தலா 2 மண் புழு உரப்படுக்கைகள் வழங்கிட ரூ.6 கோடி மானியம்
* நிரந்தர மண்புழு உரத்தொட்டிகள், உரப்படுக்கை அமைக்க ரூ.5 கோடி மானியம்.
* மண்வளம் குறித்து தெரிந்து கொள்வதற்காக தமிழ் மண்வளம் இணைய தளம் வாயிலாக உரப்பரிந்துரை வழங்கப்படும்.
* 37,500 ஏக்கர் களர், அமில நிலங்களைச் சீர்படுத்த ரூ.22.5 கோடி நிதி ஒதுக்கீடு.
* 5 லட்சம் லிட்டர் திரவ உயிர் உரங்கள், 2 லட்சம் விவசாயிகளுக்கு வழங்க ரூ.7.5 கோடி நிதி ஒதுக்கீடு.
* 2,482 கிராம ஊராட்சிகளில் 2 லட்சம் விவசாயிகளின் நிலத்தில் மண் பரிசோதனைக்கு ரூ.6.27 கோடி நிதி ஒதுக்கீடு.
* 10 லட்சம் வேப்ப மரக்கன்றுகள் இலவசமாக வழங்கிட ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு.
* ஆடாதொடா, நொச்சி தாவர வகைகளை நடவு செய்திட ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு.
* 200 மெட்ரிக் டன் பாரம்பரிய நெல் ரக விதைகள் உற்பத்தியை மேற்கொள்ள ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு.
இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.
- டி.ஆர்.பாலு எழுதிய நூல் வெளியீட்டு விழா ஒன்றிலும் அவரை கருணாநிதி வாழ்த்துவது போன்ற வீடியோ தயாரித்து வெளியிடப்பட்டது.
- ஏ.ஐ. தொழில்நுட்பம் என்பது நல்ல வழிக்கே பயன்படுத்தப்பட வேண்டும் என்பதே அதன் முக்கிய நோக்கமாக உள்ளது.
சென்னை:
பாராளுமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் இந்த தேர்தலில் செயற்கை நுண்ணறிவு என்று அழைக்கப்படும் ஏ.ஐ. வீடியோக்களும் முக்கிய பங்காற்ற தொடங்கி உள்ளன.
இந்த தேர்தல் களத்தில் இதனை ஆளும் கட்சியான தி.மு.க. முதல் முறையாக கையில் எடுத்து செயல்படுத்தி உள்ளது. சேலத்தில் நடைபெற்ற தி.மு.க. இளைஞரணி மாநாட்டையொட்டி மறைந்த தி.மு.க. தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதி தி.மு.க. இளைஞர் அணி மாநாட்டை வாழ்த்துவது போன்ற ஏ.ஐ. வீடியோ வெளியிடப்பட்டது.
தி.மு.க. மாநாட்டு பந்தலிலும் இது ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதன் மூலம் கருணாநிதியே மாநாட்டுக்கு நேரில் வந்தது போன்ற உணர்வை ஏற்படுத்தியது. இதே போன்று முன்னாள் மத்திய மந்திரியும் தற்போதைய எம்.பி.யுமான டி.ஆர்.பாலு எழுதிய நூல் வெளியீட்டு விழா ஒன்றிலும் அவரை கருணாநிதி வாழ்த்துவது போன்ற வீடியோ தயாரித்து வெளியிடப்பட்டது.
இப்படி தி.மு.க. சார்பில் இரண்டு வீடியோக்கள் தயாரிக்கப்பட்டு வெளியாகி அது தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் வரவேற்பையும் பெற்றுள்ளது.
இதேபோன்று மறைந்த தங்கள் தலைவர்கள் ஏ.ஐ. வீடியோ மூலம் பேசுவதற்கான ஏற்பாடுகளையும் மற்ற கட்சியினரும் மேற்கொள்ள தொடங்கியுள்ளனர். அ.தி.மு.க. சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வீடியோவை தயாரித்து வெளியிட அ.தி.மு.க.வினர் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
இதே போன்று மற்ற அரசியல் கட்சியினரும் ஏ.ஐ. தொழில்நுட்பத்துடன் கூடிய வீடியோக்களை தயாரிக்க முடிவு செய்து உள்ளனர். இந்த வீடியோக்கள் மூலம் நன்மைகளும் உள்ளன. தீமைகளும் உள்ளன என்கிறார்கள் அரசியல் நிபுணர்கள்.
குறிப்பாக இரண்டு பிரிவாக பிரிந்து கிடக்கும் கட்சியினர் மறைந்த தங்களது தலைவர்களை பயன்படுத்தி மாற்று அணியினரை விமர்சிக்க முடியும் என்ப தால் அது அரசியல் களத்தில் மோதல் போக்கை உரு வாக்க வழிவகுக்கும் என்கிறார்கள்.

உதாரணத்துக்கு தமிழகத்தில் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் தனி அணியாக செயல்பட்டு வருகிறார்.
அவர் எடப்பாடி பழனிசாமியை விமர்சிப்பது போன்று ஏ.ஐ. வீடியோக்களை வெளியிட்டால் அது இரண்டு பிரிவினருக்கும் இடையே மோதலை ஏற்படுத்தலாம் என்றும் அரசியல் நோக்கர்கள் கூறி உள்ளனர்.
தேசிய அளவில் பல்வேறு மாநிலங்களில் கட்சிகள் பிரிந்து கிடக்கின்றன. இந்த அணிகளை சேர்ந்தவர்களும் மறைந்த தங்களது தலை வர்களை ஏ.ஐ. வீடியோக்கள் மூலமாக உருவாக்கி விமர்ச னம் செய்யவும் வழி வகுக்கும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
ஏ.ஐ. தொழில்நுட்பம் என்பது நல்ல வழிக்கே பயன்படுத்தப்பட வேண்டும் என்பதே அதன் முக்கிய நோக்கமாக உள்ளது. அதே நேரத்தில் அதனை தவறாக பயன்படுத்தவும் வாய்ப்பு இருப்பதாக ஏற்கனவே கணிக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
- படுகாயம் அடைந்த நேஹா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜோலார்பேட்டை:
கர்நாடகா மாநிலம், பெங்களூர் ஸ்டெர்லிங் குரூப் அப்பார்ட்மெண்ட் பகுதியைச் சேர்ந்தவர் தன்னுஜ் (வயது 36). இவரது மனைவி நேஹா (35). தம்பதியினருக்கு டக்ஸ் (4) என்ற குழந்தை உள்ளது.
கணவன்-மனைவி இருவரும் சென்னையில் உள்ள தனியார் ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்தனர்.
தம்பதியினர் குழந்தையுடன் இன்று அதிகாலை கார் மூலம் பெங்களூர் நோக்கி சென்றனர். காரை தன்னுஜ் ஓட்டினார்.
திருப்பத்தூர் மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத்த பைனப்பள்ளி அருகே சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் தறிகெட்டு ஓடியது. சாலையோரம் இருந்த விவசாய நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த தடுப்பு வேலியில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதில் படுகாயம் அடைந்த நேஹா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். குழந்தை மற்றும் தன்னுஜ் ஆகிய 2 பேர் காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இது குறித்து தகவல் அறிந்த நாட்டறம்பள்ளி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
நேஹா பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக நாட்டறம்பள்ளி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து நாட்டறம்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அரசு தரப்பிலும், போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தரப்பிலும் பல கட்டங்களாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
- இணை ஆணையர் முன்னிலையில் போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் நாளை பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
சென்னை:
காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும் என்பவை உள்பட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்கங்கள் கடந்த சில மாதங்களாக கோரிக்கை விடுத்து வந்தன.
இதையடுத்து அரசு தரப்பிலும், போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தரப்பிலும் பல கட்டங்களாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
இந்நிலையில் போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் நாளை போக்குவரத்துத்துறை முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. இணை ஆணையர் முன்னிலையில் போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் நாளை மதியம் 3 மணிக்கு முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.






