search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    திமுக- காங்கிரஸ் கூட்டணியில் கமல்ஹாசனுக்கு இடம் உண்டா?
    X

    திமுக- காங்கிரஸ் கூட்டணியில் கமல்ஹாசனுக்கு இடம் உண்டா?

    • ராகுல் காந்தியுடன் கமல்ஹாசன் மிகவும் நெருக்கமாக உள்ளார்.
    • பல்வேறு கேள்விகளுக்கு விடை அளிக்க வேண்டிய கட்டாயத்தில் கமல்ஹாசன் உள்ளார்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணியில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி இடம் பெறுமா என்பது மிகப் பெரிய கேள்வியாக உருவெடுத்து உள்ளது. தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், ம.தி.மு.க., கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளோடு தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழு முதல்கட்ட பேச்சுவார்த்தையை நடத்தி முடித்துள்ளது.

    இரண்டாவது கட்ட பேச்சு வார்த்தையை நடத்துவதற்கு தி.மு.க. கூட்டணி கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன. அதே நேரத்தில் தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ளதாக கருதப்படும் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியை இதுவரை தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்துவதற்கு யாரும் அழைக்கவில்லை.

    இது தொடர்பாக தி.மு.க. முன்னணி தலைவர்கள் கூறும்போது, 'கமல்ஹாசன் கூட்டணியில் இருக்கிறாரா என்பது எங்களுக்கு தெரியாது. அது பற்றி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தான் முடிவு செய்வார் என்று தெரிவித்து இருந்தனர். இதன் மூலம் கமல்ஹாசன் தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ளாரா? என்கிற கேள்வி வலுப்பெற்றது.

    இந்த நிலையில் அமெரிக்கா சென்றிருந்த கமல்ஹாசன் தனது 19 நாட்கள் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பினார். அவரிடம் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பிய போது அமெரிக்காவில் இருந்து செய்தியோடு நான் வரவில்லை.


    இனி தான் செய்தியை உருவாக்க வேண்டும். இரண்டு நாட்களில் உங்களை சந்திக்கிறேன். அப்போது அனைத்து விஷயங்களுக்கும் பதில் அளிக்கிறேன். நல்ல செய்தியை தருகிறேன் என்று கூறிவிட்டு சென்றுவிட்டார். இதன் மூலம் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் இடம் பெறுவது இன்னும் உறுதிப்படுத்தப்படாமலேயே உள்ளது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

    இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சி 7-ம் ஆண்டு தொடக்க விழா ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் கமல்ஹாசன் பங்கேற்று கட்சி நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்துகிறார். அப்போது இதுவரையில் தொகுதி பங்கீடு தொடர்பாக தி.மு.க. கூட்டணியில் இருந்து அழைப்பு வராதது பற்றி விரிவாக விவாதிக்கப்படுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கமல்ஹாசன் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சு நடத்துவார் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியினர் ஏற்கனவே தெரிவித்து இருந்தனர். எனவே வரும் நாட்களில் அது போன்ற சந்திப்பு நடந்து தி.மு.க. காங்கிரஸ் கூட்டணியில் கமல்ஹாசன் இடம் பெறுவது உறுதி செய்யப்படுமா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.


    இந்த விவகாரம் தொடர்பாக தி.மு.க.வினர் கூறும் போது கூட்டணியில் ஏற்கனவே உள்ள கட்சிகளுக்கு இடங்களை பகிர்ந்து கொடுப்பதிலேயே பெரிய சிக்கல் நீடித்து வருகிறது. இந்த நிலையில் புதிதாக சேர உள்ள கமல்ஹாசன் கட்சிக்கு எப்படி இடங்களைபகிர்ந்து கொடுப்பது என்பது பெரிய பிரச்சினையாகவே உள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சியை பொறுத்த வரையில் காங்கிரஸ் கட்சியுடன் அதிக நெருக்கமாக அந்த கட்சி உள்ளது அந்த கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தியுடன் கமல்ஹாசன் மிகவும் நெருக்கமாக உள்ளார்.

    எனவே காங்கிரசுக்கு நாங்கள் ஒதுக்கும் இடத்தில் கமல்ஹாசன் ஒன்றோ அல்லது இரண்டு இடங்களையோ கேட்டு பெற்று போட்டியிடுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாகவும் நாளை நடைபெறும் கூட்டத்தில் கமல்ஹாசன் ஆலோசனை நடத்துகிறார். ஒருவேளை தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியில் இடம் கிடைக்காத பட்சத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி தனித்து போட்டியிடுமா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. இப்படி பாராளுமன்ற தேர்தல் களத்தில் பல்வேறு கேள்விகளுக்கு விடை அளிக்க வேண்டிய கட்டாயத்தில் கமல்ஹாசன் உள்ளார். இந்த கேள்விகள் அனைத்துக்கும் நாளை நடைபெறும் கூட்டத்துக்கு பிறகு கமல்ஹாசன் விடை அளிப்பார் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×