என் மலர்
உள்ளூர் செய்திகள்
- தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
- ஏணி சின்னத்தில் போட்டியிடவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சென்னை:
பாராளுமன்ற தேர்தல் தேதி இன்னும் சில தினங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், தி.மு.க. கூட்டணி சார்பில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய யூனியன் முஸ்லிம் கட்சி வேட்பாளர் நவாஸ் கனியே போட்டியிடுவார் என அக்கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டத்தில் அதிகாரப்பூர்வமாக முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஏணி சின்னத்தில் போட்டியிடவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- ஒவ்வொருவர் வீட்டிலும் சோலார் பேனல் அமைத்து பேட்டரிகளில் மின்சாரத்தை சேமிக்க முடியும்.
- மின்சார வாகனங்களை சார்ஜ் செய்யவும் இத்திட்டம் உதவியாக இருக்கும்.
காஞ்சிபுரம்:
வீடுகளில் சோலார் பேனல் அமைத்தால் 300 யூனிட் மின்சாரம் இலவசமாக கிடைக்கும் என காஞ்சிபுரம் அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் அருள்தாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
ஒவ்வொருவர் வீட்டிலும் சோலார் பேனல் அமைத்து பேட்டரிகளில் மின்சாரத்தை சேமிக்க முடியும். மேலும் உபரி மின்சாரத்தை விநியோகம் செய்யும் நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதன் மூலம் ரூ.15,000 முதல் ரூ.18 ஆயிரம் வரை பெற முடியும். மேலும் இத்திட்டத்தில் இணைவோர்க்கு மாதந்தோறும் 300 யூனிட் வரை மின்சாரம் இலவசம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
குறிப்பாக மின்சார வாகனங்களை சார்ஜ் செய்யவும் இத்திட்டம் உதவியாக இருக்கும். இத்திட்டத்தில் இணைய விரும்புவோர்களின் விவரங்களை சேகரிக்கும் பணியை அஞ்சல் துறையில் பணியாற்றும் தபால்காரர்களும் மேற்கொள்ள மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. எனவே காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பை பெற உங்கள் அருகில் உள்ள தபால் அலுவலகத்தையோ அல்லது உங்கள் பகுதியில் தினம்தோறும் வரும் தபால்காரரை அணுகி விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- காஞ்சிபுரம் மாவட்டத்தில் 93,394 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கு வதற்கு மாவட்ட சுகாதார நலத்துறை இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.
- நடமாடும் குழுக்கள் மூலம் பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் நாளை காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.
காஞ்சிபுரம்:
தமிழகம் முழுவதும் நாளை (3-ந்தேதி) போலியோ சொட்டு மருந்து முகாம் நடக்கிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 93,394 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கு வதற்கு மாவட்ட சுகாதார நலத்துறை இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.
அதன்படி ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், சத்துணவு மையங்கள், அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள் பள்ளிகள் என மொத்தம் 731 மையங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.
நடமாடும் குழுக்கள் மூலம் பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் நாளை காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. பிறந்த குழந்தை முதல் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து குடிபெயர்ந்து வந்த குழந்தைகள் உள்ளிட்டோர் போலியோ சொட்டு மருந்து போட்டு பயன் பெறலாம் என காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார்.
- கோவில் விழா படையலில் வைக்கப்பட்ட மது அருந்தியவர் பரிதாபமாக இறந்த சம்பவம் குமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- சம்பவம் குறித்து கோட்டார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகர்கோவில்:
நாகர்கோவில் வைத்தியநாதபுரம் பகுதியில் உள்ள ஒரு கோவிலில் திருவிழா நடைபெற்றது. இந்த விழாவின் போது சுவாமிக்கு படையல் போடப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த படையிலில் உணவுடன், மதுபாட்டில்களும் வைக்கப்பட்டதாக தெரிகிறது.
பூஜைகள் முடிந்ததும் படையலில் வைக்கப்பட்ட மதுவை, பூசாரி சிலரிடம் கொடுத்துள்ளார். அதனை வைத்தியநாதபுரம் செல்வகுமார் (வயது 49), வடலிவிளை அருள் ஆகியோர் பெற்றுக்கொண்டு அருகே உள்ள சுடுகாட்டுப் பகுதிக்குச் சென்று சாப்பிட்டார்களாம்.
இந்த நிலையில் அருள் தனது நண்பர்களுக்கு போன் செய்து, மது குடிக்க வந்த விவரத்தையும், அதனை குடித்த பிறகு தனக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதாக கூறி உள்ளார். மேலும் உடனே இங்கு வந்து தன்னை காப்பாற்ற வேண்டும் என்றும் அவர் கூறி உள்ளார்.
இதனை தொடர்ந்து நண்பர்கள் அங்கு சென்ற போது, அருள் மயக்க நிலையில் இருந்துள்ளார். செல்வகுமார் பேச்சு மூச்சின்றி கிடந்துள்ளார். அவர்களை மீட்டு ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் நண்பர்கள் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், செல்வகுமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
அருள் உடல் நலம் மோசமாக உள்ளதால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கோவில் விழா படையலில் வைக்கப்பட்ட மது அருந்தியவர் பரிதாபமாக இறந்த சம்பவம் குமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து கோட்டார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செல்வகுமார் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அதன் முடிவு வந்த பிறகே எப்படி இறந்தார்? என்ற விவரம் தெரியவரும்.
- சந்தேகம் அடைந்த பொதுமக்கள் அந்த வாலிபர் மற்றும் அவருடன் தங்கியிருந்த 5பேரை பிடித்து விசாரித்தனர்.
- கைதான 10 பேரையும் போலீசார் தாராபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
தாராபுரம்:
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே சத்திரம், சின்னபுத்தூர், கோவிந்தாபுரம் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இப்பகுதிகளில் மின்சாரம் தயாரிப்பதற்கான தனியார் காற்றாலைகள் ஏராளமான அளவில் உள்ளன. சில இடங்களில் பாதுகாப்பு இல்லாத நிலையில் காற்றாலைகளில் இருந்து கேபிள் வயர்கள் மற்றும் எலக்ட்ரானிக் பாகங்களை அவ்வப்போது மர்மநபர்கள் திருடி சென்று வந்தனர். பல மாதமாக தொடர் திருட்டு நடந்து வரும் நிலையில் அருகில் உள்ள கிராமப் பகுதிகளில் உள்ள தோட்ட ங்கள் மற்றும் வீடுகளில் மின்வயர்கள், இரும்பு பொருட்கள் திருடப்பட்டு வந்தது.
இதனைத்தொடர்ந்து கிராமமக்கள் தங்களுக்குள் கண்காணிப்பு குழு ஒன்றை அமைத்து காற்றாலை மற்றும் தோட்டம், வீடுகளில் கேபிள் வயர்கள், இரும்பு பொருட்களை திருடும் மர்மநபர்களை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இந்தநிலையில் சத்திரம் கிராமத்தில் வாலிபர் ஒருவர் தான் வாடகைக்கு குடியிருந்த வீட்டின் முன் கேபிள் வயர்களை போட்டு தீயிட்டு கொளுத்தி அதில் இருந்து செம்பு கம்பிகளை சுருட்டி வைத்து கொண்டிருந்தார்.
சந்தேகம் அடைந்த பொதுமக்கள் அந்த வாலிபர் மற்றும் அவருடன் தங்கியிருந்த 5பேரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த கிராமமக்கள் 6 பேரையும் அங்குள்ள மரத்தில் கட்டி வைத்து உண்மையை தெரிந்து கொள்ள தர்ம அடி கொடுத்தனர்.
அப்போது அவர்கள்தான் தாராபுரம் பகுதியில் உள்ள காற்றாலைகள் மற்றும் தோட்டங்களில் மின்வயர்களை திருடியது தெரியவந்தது. மேலும் அவர்களுடன் தங்கியிருந்த மேலும் 4 பேர் பொதுமக்கள் பிடியில் இருந்து தப்பியோடினர். அவர்களையும் பொதுமக்கள் விரட்டி பிடித்து தர்ம அடி கொடுத்தனர். இதில் 10 பேருக்கும் உடலில் காயம் ஏற்பட்டது.
இது குறித்த தகவல் அறிந்ததும் தாராபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் 10 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் 10 பேரையும் கைது செய்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர்கள் நெல்லை மாவட்டம் ஆயங்குளத்தை சேர்ந்த கண்ணன் (வயது 36) மற்றும் திசையன்விளையை சேர்ந்த பாலாஜி (20), சுதாகர் (22), சக்திமுருகன் (25), கதிரேசன் (25), கோபிகிருஷ்ணன் (27), சக்திவேல் (26), செல்வன் (28), ராகுல் (26), முத்துசெல்வன் (26) என்பது தெரியவந்தது. கைதான 10 பேரையும் போலீசார் தாராபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கைதான ஆயங்குளத்தை சேர்ந்த கண்ணன் தாராபுரம் சத்திரம் பகுதியில் பழைய இரும்பு கடை வைத்துள்ளார். அவருடன் மற்ற 9 பேரும் வேலை செய்து வந்துள்ளனர். பழைய இரும்பு பொருட்களை பணம் கொடுத்து வாங்கி வந்த அவர்கள், லோடு ஆட்டோவில் தாராபுரம் பகுதிக்குட்பட்ட பகுதிகளுக்கு சென்று ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்து பழைய இரும்பு பொருட்களை வாங்கி வந்துள்ளனர்.
அப்போது ஆளில்லாத காற்றாலைகள், தோட்டங்கள், வீடுகள் ஆகியவற்றை நோட்டமிடுவதுடன் இரவு நேரங்களில் லோடு ஆட்டோவில் சென்று அங்குள்ள இரும்பு பொருட்களை திருடி சென்றுள்ளனர். பின்னர் அதில் கிடைக்கும் காப்பர் கம்பிகளை பொள்ளாச்சியில் உள்ள ஒரு வியாபாரிக்கு விற்பனை செய்து வந்துள்ளனர். இதற்காக அவர்கள் தாராபுரத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் விவசாயிகள் வளர்க்கும் ஆட்டுக்குட்டிகளை திருடி கறிக்கடைகளுக்கு விற்பனை செய்தும் வந்துள்ளனர். கடந்த வாரம் ஆடுகளின் வாயில் துணியை வைத்து அடைத்து 50க்கும் மேற்பட்ட ஆடுகளை திருடியுள்ளனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணை முடிவில் மேலும் பரபரப்பு தகவல்கள் வெளியாக வாய்ப்புள்ளது.
- 2023-2024-ம் ஆண்டுக்கு செலுத்த வேண்டிய கட்டணங்களுக்கான காலம் 31-ந்தேதியுடன் முடிவடைய உள்ளது.
- மாநகராட்சி கமிஷனர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் நூதன உத்தரவு ஒன்றை பிறப்பித்தார்.
நெல்லை:
நெல்லை மாநகராட்சியில் நெல்லை, பாளை, தச்சநல்லூர், மேலப்பாளையம் என்ற 4 மண்டலங்கள் உள்ளன. இந்த 4 மண்டலங்களிலும் மொத்தம் 55 வார்டுகள் உள்ளன.
இந்த வார்டுகளில் வசிக்கும் மக்கள், வணிக நிறுவனங்களின் உரிமையாளர்கள் சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி, பாதாள சாக்கடை சேவைக் கட்டணம் மற்றும் வரியில்லா இனங்கள், கடைகளின் வாடகை போன்ற வைகள் ஆண்டுதோறும் மார்ச் 31-ந்தேதிக்குள் செலுத்தப்பட வேண்டும்.
அந்த வகையில் 2023-2024-ம் ஆண்டுக்கு செலுத்த வேண்டிய கட்டணங்களுக்கான காலம் 31-ந்தேதியுடன் முடிவடைய உள்ளது.
ஆனால் இதுவரை பலர் வரிகளை செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ளனர். இதனால் மாநகராட்சிக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டதால் இந்த மாதத்திற்குள் வரியை வசூலிக்க ஆலோசிக்கப்பட்டது.
பெரும்பாலானோர் பணிக்கு செல்பவர்கள் வீடு திரும்ப நேரம் ஆகிவிடுவதால், அவர்கள் வரியை கொண்டுவந்து மையங்களில் செலுத்துவதற்கு நேரம் இல்லாமல் போய் விடுகிறது என்ற கருத்து எழுந்தது. இதனை தொடர்ந்து மாநகராட்சி கமிஷனர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் நூதன உத்தரவு ஒன்றை பிறப்பித்தார்.
அதன்படி அனைத்து மண்டலங்களிலும் உள்ள வரிவசூல் மையங்களும் கூடுதல் நேரம் செயல்பட அறிவுறுத்தினார்.
இதனை தொடர்ந்து பொதுமக்களின் வசதிக்காக வரித்தொகைகளை செலுத்திட ஏதுவாக வருகிற 31-ந்தேதி வரை மாநகராட்சியின் அனைத்து வரிவசூல் மையங்களும் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை விடுமுறையின்றி செயல்படும் என கமிஷனர் தெரிவித்தார்.
அதன்படி அனைத்து வரிவசூல் மையங்களும் நேற்று முதல் கூடுதல் நேரம் திறக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஒரு சில மையங்களில் நேற்று இரவு நேரத்திலும் பெரும்பா லானோர் தங்களது வரி களை செலுத்தினர். இதனை பயன்படுத்தி 2023-2024ம் ஆண்டிற்கான வரித் தொகைகளை உடனடியாக செலுத்தி உரிய ரசீது பெற்று கொள்ள கமிஷனர் அறிவுறுத்தி உள்ளார்.
- மர்ப நபர்கள் வீட்டின் பின்பக்க கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி:
திருச்சி திருவெறும்பூர் பேல்பூர் பகுதியைச் சேர்ந்தவர் அன்பரசன் (வயது 52) அரசு பள்ளி ஆசிரியர். இவரது மனைவியும் அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.
இந்த தம்பதியரின் மகன், மகள் இருவரும் வெளியூரில் தங்கி கல்வி பயின்று வருகின்றனர்.
இந்த நிலையில் வழக்கம்போல் இரண்டு பேரும் பணிக்கு சென்று விட்டு வீடு திரும்பினர்.
பின்னர் இரவு சாப்பிட்டு விட்டு உள்பக்க அறையில் படுத்து தூங்கினர்.
இந்த தலையில் அவர்கள் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தபோது மர்ப நபர்கள் வீட்டின் பின்பக்க கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர்.
பின்னர் வேறொரு அறையில் பீரோவில் வைத்திருந்த ஒன்பதரை பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.5000 ரொக்க பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து விட்டு தப்பிச் சென்றனர்.
காலையில் எழுந்து பார்த்த போது தான் வீட்டில் திருட்டு நடந்தது அவர்களுக்கு தெரியவந்தது. அன்பரசன் திருபெரும்பூர் போலீசில் புகார் செய்தார் அதன் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ரெயிலில் பயணம் செய்த சுஜன்புடியல் கால் தவறி எதிர்பாராத விதமாக கீழே விழுந்தார்.
- போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மத்தூர்:
கோவை எக்ஸ்பிரஸில் அசாம் மாநிலம் பகுதியை சேர்ந்த சுஜன் புடியல் வயது (35). இவரது தந்தை பகத்புடியல். இவர்கள் இருவரும் அசாமில் இருந்து திருப்பூருக்கு வேலைக்கு செல்ல கோவை எக்ஸ்பிரஸில் பயணம் செய்துள்ளனர். அப்போது நேற்று மாலை 5 மணியளவில் ரெயில் சாமல்பட்டி அருகே உள்ள கே.எட்டிப்பட்டி பகுதியில் வந்து கொண்டிருந்தது.
இந்நிலையில் ரெயிலில் பயணம் செய்த சுஜன்புடியல் கால் தவறி எதிர்பாராத விதமாக கீழே விழுந்தார். அதில் அவர் முகம் சிதைந்த நிலையில் சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து சேலம் ரெயில்வே போலீசாருக்கு அப்பகுதியில் உள்ளவர்கள் தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் ரெயில்வே போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுஜன்புடியல் உடலை கைப்பற்றி ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த இறப்பு குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து உடன் இருந்த அவரது தந்தை பகத் புடியலிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஒற்றை யானை ஒன்று உணவு மற்றும் தண்ணீர் தேடி ஊருக்குள் நுழைந்துள்ளது.
- ஜெயஸ்ரீயை தாக்கிய அந்த ஒற்றைக் காட்டு யானை அருகில் உள்ள கரும்பு தோட்டத்தில் முகாமிட்டு உள்ளது.
தருமபுரி:
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில் கடந்த சில நாட்களாக ஒற்றை ஆண் யானை ஒன்று உணவு மற்றும் தண்ணீர் தேடி ஊருக்குள் நுழைந்துள்ளது. இந்த யானை காலை நேரங்களில் வனப் பகுதிக்குள் செல்வதும், இரவில் கிராமப்புறங்களில் நுழைந்து விவசாய பயிர்களை அழிப்பதுமாக இருந்து வந்துள்ளது.
இதனை கடந்த 3 நாட்களாக பாலக்கோடு-காரிமங்கலம் இடையில் உள்ள ஆராதஹள்ளி கூட்ரோடு பகுதியில் உள்ள மலைப் பகுதியில் முகாமிட்டு உள்ளது. இதனை பாலக்கோடு வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு காரிமங்கலம் பகுதியை நோக்கி யானை சென்றுள்ளது. அப்பொழுது சவுளுக்கொட்டாய் பகுதிகளில் விவசாய நிலங்களில் நுழைந்துள்ளது. இரவு நேரம் என்பதால், வனத்துறையினரால் யானையினை கண்காணித்து வந்த நிலையில், ஒரு கட்டத்திற்கு மேல் யானை சென்ற திசை தெரியாமல் வனத்துறையினர் அதே பகுதியில் சுற்றி தேடி வந்தனர்.
இந்நிலையில் அதிகாலை காரிமங்கலம் அருகே உள்ள சவுளுக்கொட்டாய் பகுதியில் பெருமாள் என்பவரின் மனைவி ஜெயஸ்ரீ என்பவர், அதிகாலை 5.30 மணிக்கு இயற்கை உபாதை கழிப்பதற்காக வயல் வழி பகுதிக்கு சென்றுள்ளார். அப்பொழுது எதிர்பாராத விதமாக திடீரென வந்த யானை ஜெயஸ்ரீயை தாக்கியுள்ளது. இதில் படுகாயம் அடைந்து சுயநினைவின்றி அதே இடத்தில் அவர் விழுந்து கிடந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து இயற்கை உபாதை கழிக்க சென்ற ஜெயஸ்ரீ நீண்ட நேரமாக வராததால், வீட்டில் இருந்தவர்கள் அக்கம்பக்கத்தில் தேடி பார்த்துள்ளனர். அப்பொழுது சுய நினைவின்றி படுகாயத்துடன் கிடந்துள்ளார். அதன் அருகில் கரும்பு தோட்டத்தில் ஒற்றை யானை இருந்தது தெரிய வந்தது.
இதனைக் கண்டு அதிர்ச்சடைந்த ஜெயஸ்ரீயின் குடும்பத்தினர், ஜெயஸ்ரீயை உடனடியாக அந்த இடத்தில் இருந்து மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் எடுத்துச் சென்றனர். அப்பொழுது மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது நுரையீரல் பகுதியில் யானை பலமாக தாக்கி இருந்தது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து ஜெயஸ்ரீ தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும் ஜெயஸ்ரீயை தாக்கிய அந்த ஒற்றைக் காட்டு யானை அருகில் உள்ள கரும்பு தோட்டத்தில் முகாமிட்டு உள்ளது. இதனை பாலக்கோடு வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மேலும் திருமணம் ஆகி ஒன்றரை ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் பெருமாள் ஜெயஸ்ரீ தம்பதியினருக்கு மூன்று மாத பெண் குழந்தை ஒன்றும் உள்ளது. இந்த நிலையில் ஒற்றை ஆண் யானை தாக்கியதில், படுகாயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில், ஜெயஸ்ரீ சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
- நீண்ட போராட்டத்திற்கு பின்னர் தீயை அணைத்து கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.
- அதிர்ஷ்டவசமாக தொழிலாளர்கள் யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை.
கோவில்பட்டி:
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கணேஷ் நகரைச் சேர்ந்த செந்தில்குமார் மற்றும் வள்ளுவர் நகரை சேர்ந்த கண்ணன் இருவரும் தோனுகாலில் உள்ள ஒரு எந்திர தீப்பெட்டி ஆலை ஒன்றை குத்தகைக்கு எடுத்து நடத்தி வருகின்றனர்.
அந்த ஆலையில் பணியாளர்கள் நேற்று வழக்கம் போல பணிகளை முடித்துவிட்டு வீடுகளுக்கு சென்று விட்டனர். இரவில் பணியாற்றும் ஊழியர்கள் மட்டும் இருந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று இரவில் ஆலையில் உள்ள எந்திரத்தில் திடீரென தீப்பிடித்து பற்றி எரிந்துள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் உடனடியாக வெளியேறி தீயணைப்பு படை மற்றும் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து கோவில்பட்டி தீயணைப்பு நிலைய அதிகாரி சுந்தர்ராஜ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். எனினும் தீ தொடர்ந்து எரிந்ததால் தீயை அணைப்பதற்கு டிராக்டர் மூலமும் தண்ணீர் கொண்டு வந்து தீயணைக்கும் பணி நடைபெற்றது.
நீண்ட போராட்டத்திற்கு பின்னர் தீயை அணைத்து கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். இதில் அதிர்ஷ்டவசமாக தொழிலாளர்கள் யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை. ஆனால் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள எந்திரங்கள் முற்றிலுமாக சேதமடைந்தன.
சம்பவ இடத்தை கோவில்பட்டி தாசில்தார் சரவணபெருமாள், வருவாய் ஆய்வாளர் ராம மூர்த்தி ஆகியோர் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அதிகளவில் வாழை, தென்னை, கம்பு, சோளம் மற்றும் காய்கறிகள் அதிகளவில் விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது.
- சேதமடைந்த வாழைகளுக்கு உரிய இறப்பின் தொகை வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
மேட்டுப்பாளையம்:
அன்னூர் அருகே குப்பனூர் ஊராட்சிக்குட்பட்ட ஆத்திக்குட்டை, வாக்கானாகொம்பு, புலியூர், ஒட்டகமண்டலம், ஆலாங்கொட்டை, அழகியபாளையம், சொலவம்பாளையம், அக்கறைசெங்கப்பள்ளி உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன.
இப்பகுதிகளில் அதிகளவில் வாழை, தென்னை, கம்பு, சோளம் மற்றும் காய்கறிகள் அதிகளவில் விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது.
இந்த பகுதியில் காட்டுப்பன்றிகளின் தொல்லை அதிகளவு உள்ளது. காட்டு பன்றிகள் அவ்வப்போது விவசாய நிலங்களில் புகுந்து, பயிர்களை சேதப்படுத்தி வருவதை வாடிக்கையாக வைத்துள்ளன. இதனால் விவசாயிகள் பெரிதும் கவலை அடைந்து வருகின்றனர்.
இந்நிலையில், வாக்கனாங்கொம்பு கிராமத்தைச் சேர்ந்த மருதமுத்து என்பவர் தனது தோட்டத்தில் வாழைகளை பயிரிட்டிருந்தார்.
நேற்று இரவு இந்த தோட்டத்திற்குள் காட்டு பன்றிகள் கூட்டமாக நுழைந்தன. பின்னர் அவை, அங்கிருந்த வாழைகளை தின்றும், காலால் மிதித்தும் சேதப்படுத்தியது.
இதேபோல், அங்குள்ள துளசிராஜ் என்பவரின் தோட்டத்திற்குள் புகுந்து, அங்கு பயிரிடப்பட்டிருந்த 200 வாழைகள் என மொத்தமாக 1000த்திற்கும் மேற்பட்ட வாழைகளை காட்டு பன்றிகள் சேதப்படுத்திவிட்டு சென்றன.
இதையடுத்து சேதமடைந்த வாழைகளுக்கு உரிய இறப்பின் தொகை வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
- தமிழ்நாட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மத்திய அரசு செய்துள்ளது.
- இந்தியா தகவல் தொழில் நுட்ப முறையில் நல்ல முன்னேற்றத்தை அடைந்து உள்ளது.
நாகர்கோவில்:
கன்னியாகுமரி மாவட்டத்தில் மத்திய மந்திரி வி.கே.சிங் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அவர் இன்று நாகர்கோவிலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:-
பாராளுமன்ற தேர்தலையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு 2 நாள் சுற்றுப்பயணமாக வந்துள்ளேன். தேர்தல் முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக கட்சி நிர்வாகிகளுடன் பல்வேறு ஆலோசனைகளை நடத்தி உள்ளேன்.
பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாரதிய ஜனதாவிற்கு பிரகாசமான வெற்றி வாய்ப்பு உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் விமான நிலையம் வருவதற்கு மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. விமான நிலையம் அமைப்பதற்கு தகுந்த இடத்தை தேர்வு செய்து மாநில அரசுதான் தெரிவிக்க வேண்டும். ஆனால் இது குறித்து மாநில அரசு எந்த முயற்சிகளையும் எடுக்க வில்லை.

மக்களின் நலனை கருத்தில் கொண்டு தேர்தலில் எங்களுடன் அதி.மு.க. அல்லது தி.மு.க. யார் வந்தாலும் கூட்டணியில் சேர்த்துக் கொள்வோம். கன்னியாகுமரி பாராளுமன்ற தேர்தல் வேட்பாளர் யார் என்பது குறித்து ஆலோசனை நடத்தி தலைமை முடிவு செய்யும்.
தமிழ்நாட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மத்திய அரசு செய்துள்ளது. ஆனால் அந்தத் திட்டத்திற்கு மாநில அரசு தாங்கள் செய்தது போன்ற ஒரு போலியான சூழலை உருவாக்கியுள்ளது. இந்தியா தகவல் தொழில் நுட்ப முறையில் நல்ல முன்னேற்றத்தை அடைந்து உள்ளது. பேரிடர் நிவாரண நிதி தமிழகத்தில் வழங்குவதற்கு பல்வேறு வழிமுறைகள் உள்ளன. அதன்படி மத்திய அரசு நிவாரணம் வழங்கும்.
தேர்தல் பயத்தில் மோடி உள்ளார் என மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதை யாரும் ஏற்றுக் கொள்ள முடியாது. தேர்தல் பயத்தினால் அவர் இது போன்ற கருத்துக்களை பேசி வருகிறார். தமிழகத்தில் தி.மு.க. குடும்ப அரசியல் நடத்தி வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது மாவட்ட தலைவர் தர்மராஜ், பொருளாளர் முத்துராமன், எம்.ஆர். காந்தி எம்.எல்.ஏ., மாநிலச் செயலாளர் மீனாதேவ் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.






