என் மலர்
உள்ளூர் செய்திகள்
- திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தில் அணுமின் நிலையம் செயல்பட்டு வருகிறது.
- 1999 ம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தத்தின் படி அணுமின் நிலையத்தில் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்.
கூடங்குளம் அணுமின் நிலைய வளாக மையத்தில் நாளை நடைபெறவிருந்த அணுமின் நிலைய பணியாளர்கள் தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தில் அணுமின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த 1999-ம் ஆண்டு ஒப்பந்தப்படி அனுமின் நிலையத்தில் கூடங்குளம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு இருந்தது. இந்நிலையில், கடந்த 2018ம் ஆண்டு அணுமின் நிலையத்தில் சி மற்றும் டி பிரிவு பணிகளுக்கு ஆள்கள் எடுப்பதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. இதில், 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், இந்த பணிகளுக்காக விண்ணப்பித்திருந்தனர்.
இந்த தேர்வை ரத்துசெய்ய கோரி அணுமின் நிலைய வளாக இயக்குநர் மறறும் இந்திய அணுசக்தி துறைக்கு, ராதாபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், சபாநாயகருமான அப்பாவு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால், இந்த எழுத்துத் தேர்வு நாளை நடக்க உள்ளதாக, அணுமின் நிலையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், கூடங்குளத்தில் உள்ளாட்சி பிரதிநிதிகள், நிலம் கொடுத்தவர்கள், பொதுமக்கள் நடத்திய ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இதில், 1999-ம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தத்தின் படி அணுமின் நிலையத்தில் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். நாளை நடக்க உள்ள எழுத்துத் தேர்வை ரத்து செய்ய வேண்டும். தேர்வை ரத்து செய்யாவிடில், தேர்வு நடைபெறும் அணுமின் நிலைய வளாகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் நாளை முற்றுகை போராட்டம் அறிவித்ததை அடுத்து தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- தலைமறைவாக உள்ள ஜாபர் சாதிக்கிற்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.
- அவரது வீட்டில் நடந்த சோதனையில் நிலம், வங்கிக் கணக்குகள் தொடர்பான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சென்னை:
டெல்லியில் கைலாஷ் பார்க் பகுதியில் உணவுப்பொருள் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த போதைப் பொருட்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிடிபட்டது. தேங்காய் பவுடர் மற்றும் சத்துமாவு பாக்கெட்டுகளில் மறைத்து வைத்து சூடோ பெட்ரின் என்கிற போதைப்பொருள் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளுக்கு கடத்தப்பட்டிருப்பது அம்பலமானது.
இதுதொடர்பாக கடந்த 15-ம் தேதி சென்னையை சேர்ந்த முகேஷ், முஜிபுர், விழுப்புரத்தை சேர்ந்த அசோக்குமார் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சென்னையை சேர்ந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளரான ஜாபர் சாதிக்குக்கு போதைப் பொருள் கடத்தலில் பெரிய அளவில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இதை தொடர்ந்து தி.மு.க. அயலக அணியில் பொறுப்பில் இருந்த ஜாபர் சாதிக் அதிரடியாக நீக்கப்பட்டார். தற்போது ஜாபர் சாதிக் தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
டெல்லி போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கவேண்டும் என குறிப்பிட்டிருந்த சம்மனை சென்னை மயிலாப்பூர், சாந்தோம் பகுதி அருணாச்சலம் தெருவில் உள்ள ஜாபர் சாதிக் வீட்டில் டெல்லி போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் ஒட்டினர். மேலும் தலைமறைவாக உள்ள ஜாபர் சாதிக்கிற்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னையில் உள்ள ஜாபர் சாதிக் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் நிலம், வங்கிக் கணக்குகள் தொடர்பான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து, ஜாபர் சாதிக் தொடர்புடைய 8 வங்கிக்கணக்குகளை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் முடக்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- கிரிக்கெட் மட்டுமின்றி அனைத்து விளையாட்டுகளிலும் பயிற்சி பெற்றால் நல்ல வேலை கிடைக்கும்.
- நான் படிக்கும்போது நல்ல ஷூ கிடையாது, நல்ல சாப்பாடு இல்லை. பெற்றோர்கள் கூலி வேலை செய்தனர். மிகவும் கஷ்டப்பட்டு தான் முன்னேறினேன்
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் விமேக்ஸ் என்ற பெயரில் கிரிக்கெட் பயிற்சி அகாடமி துவக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் இந்திய வேகபந்து வீச்சாளர் நடராஜன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
அந்நிகழ்ச்சியில் பேசிய நடராஜன், "கிராமப்புறங்களில் இருக்கும் வாய்ப்பைக் கொண்டு மாணவ மாணவிகளுக்கு விளையாட்டுத் துறையில் ஊக்கத்தை ஏற்படுத்த வேண்டும். கிரிக்கெட் மட்டுமின்றி அனைத்து விளையாட்டுகளிலும் பயிற்சி பெற்றால் நல்ல வேலை கிடைக்கும்.
"எந்த துறையை தேர்வு செய்தாலும் அதற்காக கடினமாக உழைக்க வேண்டும். 20 வயதில் ஒரு லட்சியம் வைத்து முன்னேறினால் 30 வயதில் இலக்கை அடைய முடியும். லட்சியம் இல்லாமல் இருந்தால் வாழ்க்கையில் எதையும் சாதிக்க முடியாது. நான் படிக்கும்போது நல்ல ஷூ கிடையாது, நல்ல சாப்பாடு இல்லை. பெற்றோர்கள் கூலி வேலை செய்தனர். மிகவும் கஷ்டப்பட்டு தான் முன்னேறினேன். கிரிக்கெட் விளையாடும் பொழுது மூத்தவனான நீ எந்த வேலைக்கும் போகாமல் ஊர் சுற்றுகிறார்கள் என்று பேசினார்கள்.
இன்று சாதித்த பிறகு எனக்கு அப்பவே தெரியும் என்று சொல்கிறார்கள். இதுதான் உலகம் மற்றவர்களுக்காக வாழ வேண்டாம். உங்களுக்கு பிடித்த விஷயத்தை நோக்கி பயணம் செய்ய வேண்டும். இப்பொழுது கிராமப்புறம் மட்டுமன்றி அனைத்து இடங்களிலும் செல்போன்கள் வைத்து விளையாடுகின்றனர். உடலுக்கு ஆரோக்கியமாக நல்ல காற்றில் குறைந்தது நடைப்பயிற்சியாவது மேற்கொள்ள வேண்டும்" என கேட்டுக் கொண்டார்.
அனைத்து விளையாட்டுகளும் அவசியம். அதேபோல் படிப்பும் அவசியம். ஆனால் படிப்பிற்கும் எனக்கும் தூரம். படிப்பு இல்லாமல் ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கேன் என்ற நடராஜன், இப்போதும் எனக்கு மொழி பிரச்சனை இருக்கு என்றார். படிக்கும் பொழுது செங்கல் சூளையில் வேலை செய்து இருக்கிறேன், கட்டிட வேலையை செய்து இருக்கின்றேன். அதை ஒரு தடையாக நினைக்காமல் உழைத்ததால் தான் முன்னேற முடிந்தது. தமிழ்நாடு முழுவதும் அனைத்து விளையாட்டுகளிலும் அனைவரும் சாதிக்க வேண்டும். தன்னம்பிக்கையுடன் தன்னடக்கமும் முக்கியம் என்றும் நடராஜன் பேசினார்.
இதனையடுத்து நிகழ்ச்சியில் பங்கேற்ற கிரிக்கெட் வீரர் நடராஜனுடன் மாணவர்கள், இளைஞர்கள் ஆர்வமுடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.
- வருகிற பாராளுமன்ற தேர்தலில் தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு ஒரு பாராளுமன்ற தொகுதி ஒதுக்கி தர வேண்டும்
- நாங்கள் தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் தான் இருக்கிறோம்.
சென்னை:
தி.மு.க-தமிழக வாழ்வுரிமை கட்சி இடையே இன்று தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்தது.
பேச்சுவார்த்தை முடிந்து வெளியே வந்த தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் நிருபர்களிடம் கூறியதாவது:-
வருகிற பாராளுமன்ற தேர்தலில் தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு ஒரு பாராளுமன்ற தொகுதி ஒதுக்கி தர வேண்டும் என்கிற வேண்டுகோளை தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையிலான தொகுதி பங்கீட்டு குழுவிடம் வைத்து உள்ளேன். அதற்கான நியாயமான காரணங்களையும் எடுத்து வைத்திருக்கிறேன்.
கடந்த பாராளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தல்களில் தமிழ்நாட்டின் பெரும்பான்மையான இடங்களுக்கு சென்று பிரசார பீரங்கியாக இருந்து இந்த மாபெரும் வெற்றி கூட்டணியில் நானும் ஒரு சிறு பங்காற்றி இருக்கிறேன்.
தமிழக வாழ்வுரிமை கட்சியின் குரல் தமிழக மக்களுக்காக சட்டமன்றத்தில் எப்படி ஓங்கி ஒலிக்கிறதோ அதேபோல் பாராளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் என்கிற எனது விருப்பத்தையும், கட்சியின் பொதுக்குழு தீர்மானத்தையும் தி.மு.க. பேச்சுவார்த்தை குழுவிடம் ஒப்படைத்திருக்கிறேன். அவர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்துக்கு எடுத்து சென்று நல்ல பதிலை தருகிறேன் என்று தெரிவித்து இருக்கிறார்கள். எனவே தி.மு.க. கூட்டணியில் ஒரு இடம் கிடைக்கும் என்று நம்புகிறேன்.
மேலும் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக தமிழ்நாட்டில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்கிற வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட வேண்டும் என்றும் வேண்டுகோள் வைத்துள்ளேன். இந்த சந்திப்பு மட்டற்ற மகிழ்ச்சி அடைகிற சந்திப்பாக இருந்தது.
நாங்கள் தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் தான் இருக்கிறோம். இதுவரை நடந்த தேர்தல்களில் நான் காங்கிரஸ் மேடைகளில் ஏறி பிரசாரம் செய்தது இல்லை. இந்த தேர்தலிலும் காங்கிரஸ் கட்சிக்கு பிரசாரம் செய்ய மாட்டேன்.
தி.மு.க. கூட்டணியில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தால் எங்கள் கட்சி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும். நான் தேர்தலில் போட்டியிடமாட்டேன். எனது கட்சி நிர்வாகிகளில் ஒருவருக்கு போட்டியிடும் வாய்ப்பை கொடுப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 2 பேரும் நகைக்கடையில் கொடுத்த செல்போன் எண்ணை கொண்டு போலீசார் ஆய்வு செய்தனர்.
கடையநல்லூர்:
தென்காசி மாவட்டம் கடையநல்லூரை சேர்ந்தவர் ரபீஸ் ராஜா (வயது33). இவர் அங்கு நகைக்கடை நடத்தி வருகிறார்.
சம்பவத்தன்று இவரது நகைக்கடைக்கு பெண் ஒருவர், வாலிபரை அழைத்துக்கொண்டு வந்திருந்தார். அவர்கள் சுமார் 78 கிராம் பழைய நகைகளை கொடுத்துவிட்டு 4 கிராம் கொண்ட ஒரு ஜோடி கம்மல் வாங்கி உள்ளனர்.
மீதமுள்ள நகைக்கு பதிலாக பணமாக ரூ.2.55 லட்சம் பணமாக பெற்றுள்ளனர். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்றுவிட்டனர். மறுநாள் ரபீஸ் ராஜா அந்த 78 கிராம் பழைய நகைகளை உருக்கி உள்ளார். அப்போது அவை போலியான நகைகள் என்பதை அறிந்து அவர் அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து 2 பேரும் சேர்ந்து ஏமாற்றியதை அறிந்த கடை உரிமையாளர், கடையநல்லூர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
கடையில் இருந்த சி.சி.டி.வி. கேமராக்கள் மூலம் போலீசார் ஆய்வு செய்து விசாரணை நடத்திய நிலையில், 2 பேரும் நகைக்கடையில் கொடுத்த செல்போன் எண்ணை கொண்டு போலீசார் ஆய்வு செய்தனர்.
அப்போது அவர்கள் 2 பேரும் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் இருப்பது தெரியவந்தது. அங்கு சென்று போலீசார் நடத்திய விசாரணையில், நகைக்கடையில் போலி நகைகளை கொடுத்துவிட்டு மோசடியில் ஈடுபட்டது ராஜபாளையம் சோமையா புரத்தை சேர்ந்த அன்னலெட்சுமி (வயது45), ஸ்ரீநாத் (29) என்பது தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அன்னலட்சுமியிடம் இருந்து கம்மல் மற்றும் ரூ.2.½ லட்சத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- கோட்டூர்புரம், அண்ணாநகர், தி.நகர் உள்ளிட்ட இடங்களில் சோதனை.
- கட்டுமானம் மற்றும் கெமிக்கல் நிறுவன அதிபர்களின் வீடுகளிலும் அதிரடி சோதனை.
சென்னையில் 5க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
கட்டுமானம் மற்றும் கெமிக்கல் நிறுவன அதிபர்களின் வீடுகள், அலுவலகங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடைபெற்று வருகிறது.
சென்னை கோட்டூர்புரத்தில் விஷ்ணு என்பவரின் வீட்டிலும், அண்ணா நகரில் சுப்பிரமணியம் என்பவரின் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
இதேபோல், தி.நகரில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்திலும் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
- மகளிர் காங்கிரஸ் கமிட்டி சார்பாக மாபெரும் மகளிர் மாநாடு நடைபெற உள்ளது.
- மாவட்ட மகளிர் காங்கிரஸ் தலைவி மற்றும் நிர்வாகிகளுடன் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் ஆலோசனை மேற்கொண்டார்.
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு நாளை மறுநாள் கன்னியாகுமரி மாவட்ட மகளிர் காங்கிரஸ் கமிட்டி சார்பாக மாபெரும் மகளிர் மாநாடு நடைபெற உள்ளது.
அகில இந்திய மகளிர் காங்கிரஸ் தலைவி அல்கா லம்பா அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளும் இந்த மாநாடு ஏற்பாடுகள் குறித்து மாநில மகளிர் காங்கிரஸ் தலைவி சுதா ராமகிருஷ்ணன் மற்றும் மாவட்ட மகளிர் காங்கிரஸ் தலைவி மற்றும் நிர்வாகிகளுடன் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் ஆலோசனை மேற்கொண்டார்.

நாகர்கோவிலில் உள்ள எமது அலுவலகத்திற்கு வருகை தந்த கேரள சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி அவர்களுடைய புதல்வனும் ஆன சாண்டி உம்மனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை விஜய் வசந்த் எம்.பி. தெரிவித்தார்.
- பா.ஜனதா கூட்டணி பேச்சுவார்த்தை குழுவினர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து கூட்டணி பற்றி பேசுகிறார்கள்.
- சென்னை வரும் பிரதமர் மோடியையும் சந்திக்க ஓ.பன்னீர்செல்வம் திட்டமிட்டுள்ளார்.
சென்னை:
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று முன்தினம் நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில், வருகிற தேர்தலில் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட போவதாக அறிவித்து இருந்தார்.
இந்த நிலையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலையில் பா.ஜனதா கூட்டணி பேச்சுவார்த்தை குழுவினர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து கூட்டணி பற்றி பேசுகிறார்கள். நாளை மறுநாள் (4-ந்தேதி) சென்னை வரும் பிரதமர் மோடியையும் சந்திக்க ஓ.பன்னீர்செல்வம் திட்டமிட்டுள்ளார்.
- தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
- ஏணி சின்னத்தில் போட்டியிடவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சென்னை:
பாராளுமன்ற தேர்தல் தேதி இன்னும் சில தினங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், தி.மு.க. கூட்டணி சார்பில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய யூனியன் முஸ்லிம் கட்சி வேட்பாளர் நவாஸ் கனியே போட்டியிடுவார் என அக்கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டத்தில் அதிகாரப்பூர்வமாக முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஏணி சின்னத்தில் போட்டியிடவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- ஒவ்வொருவர் வீட்டிலும் சோலார் பேனல் அமைத்து பேட்டரிகளில் மின்சாரத்தை சேமிக்க முடியும்.
- மின்சார வாகனங்களை சார்ஜ் செய்யவும் இத்திட்டம் உதவியாக இருக்கும்.
காஞ்சிபுரம்:
வீடுகளில் சோலார் பேனல் அமைத்தால் 300 யூனிட் மின்சாரம் இலவசமாக கிடைக்கும் என காஞ்சிபுரம் அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் அருள்தாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
ஒவ்வொருவர் வீட்டிலும் சோலார் பேனல் அமைத்து பேட்டரிகளில் மின்சாரத்தை சேமிக்க முடியும். மேலும் உபரி மின்சாரத்தை விநியோகம் செய்யும் நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதன் மூலம் ரூ.15,000 முதல் ரூ.18 ஆயிரம் வரை பெற முடியும். மேலும் இத்திட்டத்தில் இணைவோர்க்கு மாதந்தோறும் 300 யூனிட் வரை மின்சாரம் இலவசம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
குறிப்பாக மின்சார வாகனங்களை சார்ஜ் செய்யவும் இத்திட்டம் உதவியாக இருக்கும். இத்திட்டத்தில் இணைய விரும்புவோர்களின் விவரங்களை சேகரிக்கும் பணியை அஞ்சல் துறையில் பணியாற்றும் தபால்காரர்களும் மேற்கொள்ள மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. எனவே காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பை பெற உங்கள் அருகில் உள்ள தபால் அலுவலகத்தையோ அல்லது உங்கள் பகுதியில் தினம்தோறும் வரும் தபால்காரரை அணுகி விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- காஞ்சிபுரம் மாவட்டத்தில் 93,394 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கு வதற்கு மாவட்ட சுகாதார நலத்துறை இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.
- நடமாடும் குழுக்கள் மூலம் பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் நாளை காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.
காஞ்சிபுரம்:
தமிழகம் முழுவதும் நாளை (3-ந்தேதி) போலியோ சொட்டு மருந்து முகாம் நடக்கிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 93,394 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கு வதற்கு மாவட்ட சுகாதார நலத்துறை இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.
அதன்படி ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், சத்துணவு மையங்கள், அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள் பள்ளிகள் என மொத்தம் 731 மையங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.
நடமாடும் குழுக்கள் மூலம் பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் நாளை காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. பிறந்த குழந்தை முதல் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து குடிபெயர்ந்து வந்த குழந்தைகள் உள்ளிட்டோர் போலியோ சொட்டு மருந்து போட்டு பயன் பெறலாம் என காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார்.
- கோவில் விழா படையலில் வைக்கப்பட்ட மது அருந்தியவர் பரிதாபமாக இறந்த சம்பவம் குமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- சம்பவம் குறித்து கோட்டார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகர்கோவில்:
நாகர்கோவில் வைத்தியநாதபுரம் பகுதியில் உள்ள ஒரு கோவிலில் திருவிழா நடைபெற்றது. இந்த விழாவின் போது சுவாமிக்கு படையல் போடப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த படையிலில் உணவுடன், மதுபாட்டில்களும் வைக்கப்பட்டதாக தெரிகிறது.
பூஜைகள் முடிந்ததும் படையலில் வைக்கப்பட்ட மதுவை, பூசாரி சிலரிடம் கொடுத்துள்ளார். அதனை வைத்தியநாதபுரம் செல்வகுமார் (வயது 49), வடலிவிளை அருள் ஆகியோர் பெற்றுக்கொண்டு அருகே உள்ள சுடுகாட்டுப் பகுதிக்குச் சென்று சாப்பிட்டார்களாம்.
இந்த நிலையில் அருள் தனது நண்பர்களுக்கு போன் செய்து, மது குடிக்க வந்த விவரத்தையும், அதனை குடித்த பிறகு தனக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதாக கூறி உள்ளார். மேலும் உடனே இங்கு வந்து தன்னை காப்பாற்ற வேண்டும் என்றும் அவர் கூறி உள்ளார்.
இதனை தொடர்ந்து நண்பர்கள் அங்கு சென்ற போது, அருள் மயக்க நிலையில் இருந்துள்ளார். செல்வகுமார் பேச்சு மூச்சின்றி கிடந்துள்ளார். அவர்களை மீட்டு ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் நண்பர்கள் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், செல்வகுமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
அருள் உடல் நலம் மோசமாக உள்ளதால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கோவில் விழா படையலில் வைக்கப்பட்ட மது அருந்தியவர் பரிதாபமாக இறந்த சம்பவம் குமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து கோட்டார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செல்வகுமார் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அதன் முடிவு வந்த பிறகே எப்படி இறந்தார்? என்ற விவரம் தெரியவரும்.






