search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    போதைப்பொருள் கடத்தல் வழக்கு: தலைமறைவான ஜாபர் சாதிக் வங்கிக் கணக்குகள் முடக்கம்
    X

    போதைப்பொருள் கடத்தல் வழக்கு: தலைமறைவான ஜாபர் சாதிக் வங்கிக் கணக்குகள் முடக்கம்

    • தலைமறைவாக உள்ள ஜாபர் சாதிக்கிற்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.
    • அவரது வீட்டில் நடந்த சோதனையில் நிலம், வங்கிக் கணக்குகள் தொடர்பான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    சென்னை:

    டெல்லியில் கைலாஷ் பார்க் பகுதியில் உணவுப்பொருள் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த போதைப் பொருட்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிடிபட்டது. தேங்காய் பவுடர் மற்றும் சத்துமாவு பாக்கெட்டுகளில் மறைத்து வைத்து சூடோ பெட்ரின் என்கிற போதைப்பொருள் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளுக்கு கடத்தப்பட்டிருப்பது அம்பலமானது.

    இதுதொடர்பாக கடந்த 15-ம் தேதி சென்னையை சேர்ந்த முகேஷ், முஜிபுர், விழுப்புரத்தை சேர்ந்த அசோக்குமார் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சென்னையை சேர்ந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளரான ஜாபர் சாதிக்குக்கு போதைப் பொருள் கடத்தலில் பெரிய அளவில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

    இதை தொடர்ந்து தி.மு.க. அயலக அணியில் பொறுப்பில் இருந்த ஜாபர் சாதிக் அதிரடியாக நீக்கப்பட்டார். தற்போது ஜாபர் சாதிக் தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

    டெல்லி போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கவேண்டும் என குறிப்பிட்டிருந்த சம்மனை சென்னை மயிலாப்பூர், சாந்தோம் பகுதி அருணாச்சலம் தெருவில் உள்ள ஜாபர் சாதிக் வீட்டில் டெல்லி போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் ஒட்டினர். மேலும் தலைமறைவாக உள்ள ஜாபர் சாதிக்கிற்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

    இந்நிலையில், சென்னையில் உள்ள ஜாபர் சாதிக் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் நிலம், வங்கிக் கணக்குகள் தொடர்பான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து, ஜாபர் சாதிக் தொடர்புடைய 8 வங்கிக்கணக்குகளை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் முடக்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    Next Story
    ×