என் மலர்
உள்ளூர் செய்திகள்
- தமிழ்நாடு முழுவதும் 3 ஆயிரத்து 302 தேர்வு மையங்களில் பிளஸ்-1 பொதுத்தேர்வை மாணவ-மாணவிகள் எழுத இருக்கிறார்கள்.
- முதல் நாளில் தமிழ் உள்ளிட்ட மொழி பாடங்களுக்கான தேர்வு நடைபெற உள்ளது.
சென்னை:
பிளஸ்-2 வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு நேற்று முன்தினம் தொடங்கியது. இதனைத்தொடர்ந்து பிளஸ்-1 வகுப்புக்கான பொதுத்தேர்வு நாளை (திங்கட்கிழமை) தொடங்க இருக்கிறது.
இந்த தேர்வை தமிழ்நாட்டில் உள்ள 7 ஆயிரத்து 534 பள்ளிகளில் இருந்து 3 லட்சத்து 89 ஆயிரத்து 736 மாணவர்களும், 4 லட்சத்து 30 ஆயிரத்து 471 மாணவிகளும் என மொத்தம் 8 லட்சத்து 20 ஆயிரத்து 207 பேர் எழுத உள்ளனர்.
இதுதவிர தனித்தேர்வர்களாக 5 ஆயிரம் பேரும், சிறைவாசிகளாக 187 பேரும் தேர்வை எழுதுகின்றனர். தமிழ்நாடு முழுவதும் 3 ஆயிரத்து 302 தேர்வு மையங்களில் பிளஸ்-1 பொதுத்தேர்வை மாணவ-மாணவிகள் எழுத இருக்கிறார்கள்.
தேர்வில் முறைகேடுகளை தடுக்க 3 ஆயிரத்து 200 பறக்கும் படைகளும், தேர்வு பணிகளில் 46 ஆயிரத்து 700 தேர்வறை கண்காணிப்பாளர்களும் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தேர்வு மையங்களில் குடிநீர், இருக்கை, மின்சாரம் மற்றும் கழிப்பறை வசதிகள் சிறந்த முறையில் அமைக்கப்பட்டுள்ளன.
முதல் நாளில் தமிழ் உள்ளிட்ட மொழி பாடங்களுக்கான தேர்வு நடைபெற உள்ளது. காலை 10 மணி முதல் பிற்பகல் 1.15 மணி வரை தேர்வு நடக்க இருக்கிறது. நாளை தொடங்கும் தேர்வு வருகிற 25-ந் தேதி வரை நடைபெறுகிறது.
- விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு, கல்பாக்கம் ஹெலிகாப்டர் தளத்திற்கு வருகிறார்.
- சாலை மார்க்கமாக நந்தனம் பொதுக்கூட்ட திடலுக்கு மாலை 5.10 மணிக்கு வருகிறார்.
சென்னை:
சென்னை நந்தனத்தில் நாளை (திங்கட்கிழமை) நடைபெறும் பா.ஜனதா பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்கிறார். இதையொட்டி அவரது பயண திட்டம் வகுக்கப்பட்டு உள்ளது.
அதன்படி பிரதமர் நரேந்திர மோடி நாளை பகல் 1.15 மணிக்கு மகாராஷ்டித்தில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு, சென்னைக்கு மதியம் 2.45 மணிக்கு வருகிறார்.
பின்னர் விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு, கல்பாக்கம் ஹெலிகாப்டர் தளத்திற்கு வருகிறார். பின்னர் அங்கிருந்து சாலை மார்க்கமாக சென்று மதியம் 3.30 முதல் மாலை 4.15 மணி வரை கல்பாக்கம் அணு உலை ரியாக்டர் மேம்பாடு (உற்பத்தி) திட்டத்தை பார்வையிடுகிறார்.
அதனைத்தொடர்ந்து மீண்டும் கல்பாக்கம் ஹெலிபேடு சென்று, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக மாலை 5 மணிக்கு மீண்டும் சென்னை விமான நிலைய ஹெலிகாப்டர் தளத்துக்கு வருகிறார். அங்கிருந்து சாலை மார்க்கமாக நந்தனம் பொதுக்கூட்ட திடலுக்கு மாலை 5.10 மணிக்கு வருகிறார்.
மாலை 6.15 மணி வரை பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் பிரதமர் மோடி, மாலை 6.20 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு சாலை மார்க்கமாக விமான நிலையம் செல்கிறார். மாலை 6.35 மணிக்கு சென்னையில் இருந்து தெலுங்கானா நோக்கி விமானத்தில் அவர் புறப்பட்டு செல்கிறார். தெலுங்கானாவை இரவு 7.45 மணிக்கு சென்றடைகிறார்.
- மொத்தமாக வழங்கப்படும் விருதுகளில் 25 சதவீத விருதுகளை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் பெற்றுள்ளது.
- முதல் பரிசுக்கான 38 பிரிவுகளில் 9 பிரிவுகளிலும், இரண்டாம் பரிசுக்கான 31 பிரிவுகளில் 8 பிரிவுகளிலும் ஆக மொத்தம் 69-ல் 17 பிரிவுகளில் பரிசு பெறுவதற்கு தேர்வாகியுள்ளது.
சென்னை:
தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மத்திய அரசின் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறையின் அனைத்து இந்திய மாநில சாலை போக்குவரத்து கழகங்களின் கூட்டமைப்பு இயங்கி வருகிறது.
இந்த கூட்டமைப்பு ஆண்டுதோறும் அனைத்து மாநில போக்குவரத்து கழகங்களை ஊக்குவிக்கும் வகையில் அவற்றின் செயல்திறன்களை ஆய்வு செய்து விருதுகள் வழங்கி வருகிறது.
அதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் உள்ள அரசு போக்குவரத்து கழகங்கள் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து விருதுகள் பெற்று வருகின்றன. தற்போது முதலமைச்சரின் அறிவுறுத்தல்படியும், எனது வழிக்காட்டுதல்படியும் போக்குவரத்து துறை சிறந்த முறையில் பணியாற்றியது. இதன் பயனாக அனைத்து இந்திய மாநில சாலைப் போக்குவரத்து கழகங்களின் கூட்டமைப்பு மூலமாக வழங்கப்படும் 2022-23-ம் ஆண்டுக்கான தேசிய பொது பஸ் போக்குவரத்து சிறப்பு விருதுகளில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் 17 விருதுகளுக்கு தேர்வாகியுள்ளது.
மொத்தமாக வழங்கப்படும் விருதுகளில் 25 சதவீத விருதுகளை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் பெற்றுள்ளது.
முதல் பரிசுக்கான 38 பிரிவுகளில் 9 பிரிவுகளிலும், இரண்டாம் பரிசுக்கான 31 பிரிவுகளில் 8 பிரிவுகளிலும் ஆக மொத்தம் 69-ல் 17 பிரிவுகளில் பரிசு பெறுவதற்கு தேர்வாகியுள்ளது. இது மொத்த விருதுகளில் 4-ல் ஒரு பங்கு ஆகும்.
பஸ்களில் எரிபொருள் திறன், சாலை பாதுகாப்பு, டயர் செயற்திறன் (கிராமப்புறம், நகர்ப்புறம்), வாகன பயன்பாடு (கிராமப்புறம், நகர்ப்புறம்) ஆகியவற்றின் அடிப்படையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் மதுரை 6 விருதுகளுக்கும், கும்பகோணம் 5 விருதுகளுக்கும், அரசு விரைவு போக்குவரத்து கழகம் 3 விருதுகளுக்கும், சேலம் 2 விருதுகளுக்கும் தேர்வாகி உள்ளன.
ஏ.எஸ்.ஆர்.டி.யு. தள்ளுபடி விலையில் அதிக பொருட்கள் கொள்முதல் செய்ததற்காக முதல் இடத்துக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் விழுப்புரம் ஒரு விருதும் பெற்றிட தேர்வாகி உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- வாலிபர் மீது ஆசிட் வீசிய சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மானாமதுரை:
மானாமதுரையை அடுத்த கொன்னக்குளம் கிராமத்தை சேர்ந்த சதீஷ்குமார், சிவகங்கையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில், இவர் கருங்காலி மாலை வாங்குவதற்காக மானாமதுரையில் உள்ள விஜய மார்த்தாண்டம், என்பவரது நகை கடைக்கு சென்றுள்ளார்.
அப்போது, நகை பட்டறை உரிமையாளருக்கும், சதீஷ்குமாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. திடீரென, நகை பட்டறை உரிமையாளர் விஜய மார்த்தாண்டம், சதீஷ்குமார் மீது ஆசிட் வீசியதில், அவர் படுகாயம் அடைந்தார்.
இதனையடுத்து, அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கருங்காலி மாலை வாங்க சென்ற வாலிபர் மீது ஆசிட் வீசிய சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- தமிழகம் முழுவதும் 43,051 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடக்கிறது.
- சொட்டு மருந்து வழங்கும் மையங்கள் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும்.
சென்னை:
போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என 43,051 மையங்களில் நடைபெறும்.
இந்த மையங்களில் 57 லட்சத்து 84 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. சொட்டு மருந்து வழங்கும் மையங்கள் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும்.
சொட்டு மருந்து மையங்களில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட சுகாதார பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
இந்நிலையில், சென்னை உள்பட தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று காலை தொடங்கியது.
பல்லாவரத்தில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் போலியோ சொட்டு மருந்து முகாமை தொடங்கி வைத்தார்.
- தமிழகம் முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது.
- இந்த மையங்கள் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும்.
சென்னை:
போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என 43,051 மையங்களில் நடைபெறுகிறது.
சொட்டு மருந்து வழங்கும் மையங்கள் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும். இதில் சுகாதார பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
இந்நிலையில், போலியோ இல்லாத சமுதாயம் தொடர சொட்டு மருந்து வழங்குங்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக முக ஸ்டாலின் எக்ஸ் வலைதள பக்கத்தில், போலியோ இல்லாச் சமுதாயம் தொடர சொட்டு மருந்து வழங்குங்கள். ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தவறாமல் சொட்டு மருந்து வழங்க வேண்டும். நலமான குழந்தைகளே எதிர்காலத்திற்கான ஒளி என பதிவிட்டுள்ளார்.
- நல்ல ஆட்சி செய்யாத உத்தர பிரதேசத்துக்கு 5 மடங்கு கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
- நல்லாட்சி செய்து வரும் தமிழ்நாடு தண்டிக்கப்படுகிறது என கனிமொழி எம்.பி. பேசினார்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டத்தில் தி.மு.க. சார்பில் 'எல்லோருக்கும் எல்லாம்' மற்றும் தமிழக அரசின் 2024-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தி.மு.க. எம்.பி. கனிமொழி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
கருணாநிதி முதலமைச்சராக இல்லாமல் இருந்திருந்தால் தமிழ்நாட்டில் விவசாயமே இருந்திருக்காது. ஏனெனில், அவர் இலவச மின்சாரத்தை கொண்டு வரவில்லை என்றால் எங்களால் தொடர்ந்து விவசாயம் செய்திருக்க முடியாது என விவசாயிகள் சொல்லும் அளவிற்கு விவசாயத்தையும், விவசாயிகளையும் காப்பாற்றியவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி.
அதுமட்டுமின்றி 7 ஆயிரம் கோடி விவசாயக் கடனை அவர் ரத்து செய்தார். இங்கே ஒடுக்கப்பட்டு நின்ற மக்கள் தலைநிமிர்ந்து நடப்பதற்காக தனது வாழ்நாள் முழுவதும் கலைஞர் கருணாநிதி பாடுபட்டார். கலைஞரின் ஆட்சியின் நீட்சியாக தற்போது ஆட்சி செய்து வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்தியாவிலேயே முதல் முறையாக விவசாயத்திற்காக தனி பட்ஜெட்டை கொண்டுவந்தார்.
இந்த நாட்டில் விவசாயம்தான் மிகப்பெரிய தொழில். கொரோனா காலகட்டத்தில் ஊரடங்கு வந்தபோது கடைகள், தொழிற்சாலைகள் உள்பட அனைத்தும் மூடப்பட்ட நிலையில், விவசாயத்தை மட்டும்தான் யாராலும் நிறுத்தச் சொல்ல முடியவில்லை.
தமிழ்நாட்டுக்கு எந்த வகையிலும் நிதி கொடுக்கக்கூடாது என்ற நிலைப்பாட்டில் மத்திய அரசு உள்ளது. தமிழ்நாட்டிடம் இருந்து ஜிஎஸ்டி உள்பட அனைத்து வரிகளையும் வாங்கிக் கொள்ளும் மத்திய அரசு, திரும்பக் கொடுப்பதற்கு மனசு இல்லை.
நல்லாட்சி செய்து வரும் தமிழ்நாடு தண்டிக்கப்படுகிறது. ஆனால், நல்ல ஆட்சி செய்யாத உத்தர பிரதேசத்துக்கு 5 மடங்கு கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு இத்தனை முறை வந்தாலும் புயல் மழையால் பாதிக்கப்பட்ட சென்னை, தென்மாவட்ட மக்களுக்கு ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும், மீனவர்களுக்கும் தமிழக முதல்வர்தான் உதவிக்கரம் நீட்டினார். தமிழ்நாட்டு மக்களைப் பற்றி பிரதமர் கவலைப்படுவதில்லை என கடுமையாக சாடினார்.
- காயத்ரி ரகுராம் இன்று முதல் நியமிக்கப்படுகிறார்.
- கழக உடன்பிறப்புகள் இவருக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டுகோள்.
பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த காயத்திரி ரகுராமை அதிமுக மகளிர் அணி துணைச் செயலாளர் பொறுப்பில் நியமித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அதிமுக சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக மகளிர் அணி துணைச் செயலாளர் பொறுப்பில்
காயத்திரி ரகுராம் அவர்கள் (நடிகை மற்றும் நடன இயக்குநர்) இன்று முதல் நியமிக்கப்படுகிறார்.
கழக உடன்பிறப்புகள் இவருக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகளும், முடிவுகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.
- அதிமுகவுடன் புதிய தமிழக கட்சி கூட்டணி அமைக்க கூடும்.
பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. தேர்தலில் போட்டியிடுவதற்கான பணியில் கட்சிகள் தீவிரமாக இறங்கியுள்ளன.
கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகளும், முடிவுகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் எடப்பாடி பழனிசாமியுடன் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி சந்தித்துள்ளார்.
மக்களவை தேர்தலில் அதிமுகவுடன் புதிய தமிழக கட்சி கூட்டணி அமைக்க கூடும் என தகவல்கள் வெளியான நிலையில் சந்தித்துள்ளார்.
- இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 22 முதல் தொடங்கவுள்ளது.
- முதல் போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணிகளுக்கு இடையே மார்ச் 22ஆம் தேதி தொடங்குகிறது.
ஐ.பி.எல் 2024 தொடர் தொடங்குவதற்கு இன்னும் 20 நாள்கள் மட்டுமே இருக்கும் நிலையில் சிஎஸ்கே அணி தனது பயிற்சியை தொடங்கியுள்ளது. இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 22 முதல் தொடங்கவுள்ளது. இன்னும் ஓரிரு வாரங்களில் போட்டிகள் தொடங்கவிருக்கும் நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் பயிற்சியைத் தொடங்குவதற்காக சென்னைக்கு வருகை புரிந்துள்ளனர்.
முதல் கட்டமாக சென்னை அணியின் தீபக் சஹார், சிமர்ஜித் சிங், ராஜவர்தன் ஹங்கேர்கர், முகேஷ் சௌதரி, பிரசாந்த் சோலங்கி, அஜய் மண்டல் ஆகியோர் பயிற்சிக்காக சென்னைக்கு வருகை புரிந்துள்ளனர். இதனை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது.
அண்மையில் முகேஷ் அம்பானியின் மகனின் இல்லத் திருமண நிழ்ச்சியில் தோனி அவரது மனைவியுடன் கலந்து கொண்டார். அவர் விரைவில் சென்னைக்கு வருகை தந்து பயிற்சியில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐ.பி.எல் 2024 தொடரின் முதல் போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணிகளுக்கு இடையே மார்ச் 22ஆம் தேதி தொடங்குகிறது.
The first step of the journey! ?
— Chennai Super Kings (@ChennaiIPL) March 2, 2024
Huddle ?! ??#WhistlePodu pic.twitter.com/0nkmaM3P30
- தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை ஆகிய வட்டங்கள் சீரமைப்பு.
- 45 வருவாய் கிராமங்களையும் உள்ளடக்கியது திருவோணம் தாலுகா.
தஞ்சாவூரில் புதிய தாலுகாவாக திருவோணம் உருவாக்கம் செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை ஆகிய வட்டங்கள் சீரமைக்கப்படுகிறது.
திருவோணம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மக்கள் 34 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரத்தநாடு செல்ல வேண்டி இருப்பதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
அதன்படி, காவாளப்பட்டி, சில்லத்தூர், திருநெல்லூர், வஙெ்கரை ஆகிய 4 குறு வட்டங்களையும், 45 வருவாய் கிராமங்களையும் உள்ளடக்கி திருவோணம் தாலுகா உருவாகிறது.
- திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தில் அணுமின் நிலையம் செயல்பட்டு வருகிறது.
- 1999 ம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தத்தின் படி அணுமின் நிலையத்தில் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்.
கூடங்குளம் அணுமின் நிலைய வளாக மையத்தில் நாளை நடைபெறவிருந்த அணுமின் நிலைய பணியாளர்கள் தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தில் அணுமின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த 1999-ம் ஆண்டு ஒப்பந்தப்படி அனுமின் நிலையத்தில் கூடங்குளம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு இருந்தது. இந்நிலையில், கடந்த 2018ம் ஆண்டு அணுமின் நிலையத்தில் சி மற்றும் டி பிரிவு பணிகளுக்கு ஆள்கள் எடுப்பதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. இதில், 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், இந்த பணிகளுக்காக விண்ணப்பித்திருந்தனர்.
இந்த தேர்வை ரத்துசெய்ய கோரி அணுமின் நிலைய வளாக இயக்குநர் மறறும் இந்திய அணுசக்தி துறைக்கு, ராதாபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், சபாநாயகருமான அப்பாவு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால், இந்த எழுத்துத் தேர்வு நாளை நடக்க உள்ளதாக, அணுமின் நிலையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், கூடங்குளத்தில் உள்ளாட்சி பிரதிநிதிகள், நிலம் கொடுத்தவர்கள், பொதுமக்கள் நடத்திய ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இதில், 1999-ம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தத்தின் படி அணுமின் நிலையத்தில் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். நாளை நடக்க உள்ள எழுத்துத் தேர்வை ரத்து செய்ய வேண்டும். தேர்வை ரத்து செய்யாவிடில், தேர்வு நடைபெறும் அணுமின் நிலைய வளாகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் நாளை முற்றுகை போராட்டம் அறிவித்ததை அடுத்து தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.






