என் மலர்
உள்ளூர் செய்திகள்
- தமிழகம் முழுவதும் 43 ஆயிரத்து 51 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று தொடங்கியது.
- நாகப்பட்டினத்தில் கட்டப்பட்டுள்ள மருத்துவமனையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
சென்னை:
தமிழகம் முழுவதும் 43 ஆயிரத்து 51 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று தொடங்கியது. 57.84 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* இன்று போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்று வருகிறது. இதில் 2 லட்சம் பணியாளர்கள் சொட்டு மருந்து வழங்குகின்றனர்.
* நாகப்பட்டினத்தில் கட்டப்பட்டுள்ள மருத்துவமனையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
* எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரத்தில் மத்திய அரசு குழந்தைத்தனமாக காரணங்களை கூறுகிறது.
* எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது தமிழக அரசு நில ஆர்ஜிதம் செய்யாத இடத்தில் எப்படி பிரதமரை அழைத்து அடிக்கல் நாட்டினார்.
* மரங்கள் முழுமையாக அகற்றப்படாததால், எய்ம்ஸ் பணிகள் காலதாமதம் ஆனது எனக்கூறுவதெல்லாம் உண்மைக்கு புறம்பானது என்று அவர் கூறினார்.
- தற்போது தக்காளிக்கு உரிய விலை கிடைக்காத நிலையில் ஆங்காங்கே சாலையில் கொட்டும் அவலம் ஏற்பட்டுள்ளது.
- ஆண்டின் பெரும்பாலான மாதங்களில் விலை சரிவை சந்திப்பதும் விவசாயிகள் நஷ்டமடைவதும் தொடர்கதையாகவே உள்ளது.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம், குடிமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் காய்கறிகள் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். குறிப்பாக தக்காளி, சின்ன வெங்காயம் அதிக அளவில் சாகுபடி செய்து வருகின்றனர். இந்நிலையில் அடிக்கடி ஏற்படும் விலை சரிவு விவசாயிகளின் வாழ்க்கையை அதல பாதாளத்துக்கு தள்ளி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். தற்போது தக்காளிக்கு உரிய விலை கிடைக்காத நிலையில் ஆங்காங்கே சாலையில் கொட்டும் அவலம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-
மடத்துக்குளம், குடிமங்கலம் வட்டாரங்களில் சாகுபடி செய்யப்படும் தக்காளி உடுமலை தினசரி சந்தைக்கு கொண்டு வரப்படுகிறது. அங்கிருந்து வியாபாரிகள் மூலம் தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்யப்படுகிறது. கேரள மாநிலத்தின் சில பகுதிகளுக்கும் இங்கிருந்து தக்காளி அனுப்பி வைக்கப்படுகிறது. வரத்து மற்றும் தேவையை பொறுத்து தினசரி விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
ஆண்டின் பெரும்பாலான மாதங்களில் விலை சரிவை சந்திப்பதும் விவசாயிகள் நஷ்டமடைவதும் தொடர்கதையாகவே உள்ளது. தற்போது 14 கிலோ கொண்ட ஒரு பெட்டி தக்காளி ரூ.80 முதல் ரூ.150 வரையே விற்பனையாகிறது. இதனால் போக்குவரத்து, சுங்கம், கூலி என செலவு செய்து சந்தைக்கு கொண்டு வந்து நஷ்டத்துடன் திரும்புவதை விட சாலை ஓரத்தில் வீசி எறிவதே சிறந்தது என்று விவசாயிகள் முடிவு செய்து விடுகின்றனர்.
பல விவசாயிகள் விரக்தியின் உச்சத்தில், டிராக்டர்கள் மூலம் தக்காளி செடிகளை அழிக்க தொடங்கியுள்ளனர். ஆண்டுதோறும் ஏற்படும் இந்த நிலையால் தக்காளி செடிகள் மட்டும் அழிக்கப்படுவதில்லை. விவசாயிகளின் வாழ்வாதாரமும், எதிர்காலமும் சேர்ந்தே அழிந்து போகிறது. இந்தநிலை ஏற்படாமல் தவிர்க்க உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் விவசாயம் மட்டுமல்லாமல் விவசாயியும் சேர்ந்தே அழியும் நிலை உருவாகி விடும்.
எல்லா பொருட்களின் விலைவாசியும் 10 ஆண்டுகளுக்குள் பல மடங்கு விலை உயர்ந்துள்ளது.ஆனால் ஒரு கட்டு கீரை ரூ.10 லிருந்து ரூ.15 ஆக உயர்த்தப்பட்டால் அது அநியாய விலையாக பார்க்கப்படுகிறது. உற்பத்தி செலவு பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில் ஒரு கிலோ தக்காளி ரூ.50-க்கு விற்கப்பட வேண்டும். ஆனால் ரூ.5-க்கும் ரூ.10-க்கும் அள்ளி கொடுத்து விட்டு விவசாயி மூலையில் முடங்கி கிடக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் மடத்துக்குளம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் தக்காளியை கொட்டி உள்ளனர்.
எனவே விவசாய விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உடுமலையில் தக்காளி சந்தை உருவாக்கி, இருப்பு வைக்கவும், உரிய விலை கிடைக்கும் பகுதிகளுக்கு அனுப்பி வைக்கவும், மதிப்புக் கூட்டுப்பொருட்கள் உற்பத்தியை ஊக்குவிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு விவசாயிகள் கூறினர்.
- மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாராபுரம்:
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பஸ் நிலையத்தில் இருந்து கோவை, பழனி உள்பட பல்வேறு ஊர்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் 100க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. பஸ் நிலையத்தின் வடக்கு புறம் திருச்சி, கரூர், பழனி செல்லும் பேருந்துகள் நிற்கும் இடத்தின் பின்புறத்தில் பேக்கரி மற்றும் செல்போன் கடைகள் உள்ளது. நேற்றிரவு வியாபாரிகள் கடைகளை அடைத்து விட்டு சென்றனர். இன்று அதிகாலை பேக்கரி கடை நடத்துபவர்கள் தங்களது கடைகளை திறக்க வந்தனர்.
அப்போது கடைகளின் ஷட்டரில் இருந்து கரும்புகை வந்து கொண்டிருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த வியாபாரிகள் உடனே தாராபுரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமையில் 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அதற்குள் ஒரு பேக்கரி கடை , 3 செல்போன் கடை ஆகியவற்றில் தீ மளமளவென பற்றி எரிந்தது.

தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. இதனிடையே தீயணைப்பு வாகனங்களில் இருந்த தண்ணீரும் காலியானது. உடனே தீயணைப்பு நிலைய அதிகாரிகள் தாராபுரம் நகராட்சி தலைவர் பாப்பு கண்ணனை தொடர்பு கொண்டு தெரிவிக்கவே, அவர் நகராட்சி தண்ணீர் லாரிகளை அனுப்பி வைத்தார். இதையடுத்து அதன் மூலம் தீயை அணைக்கும் பணி நடைபெற்றது. சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
இருப்பினும் பேக்கரி கடையில் இருந்த பிரிட்ஜ், பேன், டி.வி., இனிப்பு வகைகள் உள்ளிட்ட பொருட்கள் மற்றும் செல்போன் கடைகளில் இருந்த விலையுயர்ந்த செல்போன்கள் தீயில் எரிந்து சேதமானது. அவற்றின் மதிப்பு ரூ.20 லட்சத்திற்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. தீ விபத்துக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இது குறித்து தாராபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாராபுரம் பஸ் நிலையத்தில் உள்ள கடைகள் மேம்பாட்டு பணிக்காக இடிக்கப்பட்டு வருகிறது. தீ விபத்து ஏற்பட்ட 4 கடைகளின் உரிமையாளர்களுக்கும் தற்காலிக கடை ஒதுக்கப்பட்டு கடைகள் இடிக்கப்பட இருந்தது. இந்தநிலையில் தீ விபத்து ஏற்பட்டு 4 கடைகளும் சேதமாகி உள்ளன. சேதமான கடைகளை நகராட்சி தலைவர் பாப்பு கண்ணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
- அய்யா வைகுண்டர் 192-வது அவதார தின விழா.
- அய்யா வைகுண்டரை அவதார பதிக்கு அழைத்து வருதல் நடைபெற்றது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதார பதியில் அய்யா வைகுண்டர் 192-வது ஆண்டு அவதார தின விழா நேற்று தொடங்கியது.
வள்ளியூர் அய்யா வழி அகில திருக்குடும்ப மக்கள் சபை தலைவர் எஸ்.தர்மர் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் அய்யா பழம், பொருளாளர் கோபால் நாடார், துணை செயலாளர் ராஜேந்திரன் நாடார், இணை தலைவர் பால்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இன்று வரை 2 நாட்கள் விழா நடைபெற்றது. முன்னதாக செயலாளர் பொன்னுதுரை வரவேற்றார்.
விழாவின் முதல் நாளான நேற்று அதிகாலை 5 மணிக்கு பணிவிடை, உகப்படிப்பு, காலை 6 மணிக்கு அன்னதர்மம், பகல் 12மணிக்கு உச்சிப்படிப்பு, பணிவிடை, மதியம் 1மணிக்கு அன்னதர்மம், இரவு 7 மணிக்கு பணிவிடை அய்யா புஷ்ப வாகன பவனி தொடர்ந்து அன்னதர்மம் நடந்தது.
தொடர்ந்து திரு ஏடு வாசிப்பு, இரவு அகில திரட்டு அம்மானை கருத்துரைகள்,18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு அய்யா வைகுண்டர் அவதார மகிமை, துவையல் தவசு, அகில திருட்டில் வாழ்வியல் கருத்து ஆகிய தலைப்புகளில் பேச்சுப் போட்டியும், இரவு சிவசந்திரன் வழங்கிய இன்னிசை கச்சேரியும் நடந்தது.

2-ம் நாளான இன்று அதிகாலை 5 மணிக்கு தாலாட்டு பாடுதல், பள்ளி உணர்ந்தால், அபயம் பாடுதல், 6.28 மணிக்கு சூரிய உதயத்தில் கடலில் பதம் இட்டு சூரிய பிரகாச சுத்த அய்யா வைகுண்டரை அவதார பதிக்கு அழைத்து வருதல் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் வள்ளியூர் அய்யாவழி அகிலதிருக்குடும்ப மக்கள்சபை தலைவர் வள்ளியூர் எஸ்.தர்மர், துணைத் தலைவர் அய்யா பழம், பொருளாளர் கோபால் நாடார், துணை செயலாளர் ராஜேந்திரன் நாடார், இணை தலைவர் பால்சாமி, முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராயணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து அவதார தின விழா பணிவிடை,அன்ன தர்மம், இனிமம் வழங்குதல் நடந்தது. விழா ஏற்பாடுகளை அய்யா வழி அகில திருக்குடும்ப மக்கள் சபையினர் செய்து வருகின்றனர்.
- ஆற்றல் மிகுந்த பிரதமராக நரேந்திர மோடி திகழ்கிறார்.
- இந்த தேர்தலில் நாங்கள் போட்டியிடவில்லை. 2026 சட்டசபை தேர்தலில் போட்டியிடுவோம்.
கோவை:
கொங்குநாடு முன்னேற்ற கழக மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கோவையில் நடந்தது. கூட்டத்துக்கு அந்த கட்சியின் நிறுவன தலைவர் பெஸ்ட் ராமசாமி தலைமை தாங்கினார்.
இந்த கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதாவுக்கு கொங்குநாடு முன்னேற்ற கழகம் நிபந்தனையற்ற ஆதரவு தெரிவிப்பது என முடிவு செய்யப்பட்டது.
இதுதொடர்பாக பெஸ்ட் ராமசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
கடந்த 10 ஆண்டுகளில் நாடு வளர்ச்சி அடைந்துள்ளது. அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு உள்ளன. ஆற்றல் மிகுந்த பிரதமராக நரேந்திர மோடி திகழ்கிறார். அவர் மீண்டும் பிரதமரானால் ஊழல் இன்றி விவசாயிகள், ஏழை-எளிய மக்களுக்கு வேண்டிய உதவிகளை செய்வார்.
உலகில் ஒரு வலுவான நாடாக இந்தியா மாறியுள்ளது. பேச்சுத்திறனும், உலகம் போற்றும் தலைவராகவும் மோடி உள்ளார். இந்தியாவை உலக நாடுகள் வியப்புடன் பார்க்கின்றன. அதனால் வருகிற பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு கொங்குநாடு முன்னேற்ற கழகம் நிபந்தனையற்ற ஆதரவு தெரிவிக்கிறது.
இந்த தேர்தலில் நாங்கள் போட்டியிடவில்லை. 2026 சட்டசபை தேர்தலில் போட்டியிடுவோம். பாராளுமன்ற தேர்தல்களில் தமிழகத்தில் மாறி, மாறி வெற்றி பெற்ற அ.தி.மு.க., தி.மு.க. உறுப்பினர்கள் மாநில வளர்ச்சிக்காக எதுவும் செய்யவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
கோவை விமான நிலையத்துக்கு தீரன் சின்னமலை பெயர் சூட்ட வேண்டும், மெட்ரோ ரெயில் திட்டத்தை திருப்பூர் வரை நீட்டிக்க வேண்டும், ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெயை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
- விலை தொடர்ந்து அதிகரித்து வந்து கடந்த மாதம் முதல் வாரத்தில் வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டது.
- கடந்த மாதம் 25-ந்தேதி ஒரு கிலோ பழைய பூண்டு ரூ.400 முதல் ரூ.420 வரையிலும், புதிய பூண்டு ரூ.180 முதல் ரூ.250 வரையிலும் விற்பனை ஆனது.
சென்னை:
கடந்த ஆண்டின் இறுதியில் இருந்து பூண்டு விலை படிப்படியாக உயரத் தொடங்கியது. பொங்கல் பண்டிகைக்கு முன்பு (ஜனவரி மாதத்தில்) ஒரு கிலோ ரூ.300 வரை விற்பனை ஆனது. ஆனால் அதன் பிறகு ராக்கெட் வேகத்தில் அதன் விலை அதிகரித்தது.
மலைப் பகுதிகளில் மட்டுமே விளையக்கூடிய இந்த பூண்டின் விளைச்சல் பாதிப்பால் வரத்து பெருமளவில் குறைந்ததாலேயே அதன் விலை தாறுமாறாக உயர்ந்தது என வியாபாரிகள் தெரிவித்தனர். தமிழ்நாட்டில் மட்டுமல்லாது, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், இமாசலபிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் வரத்து அப்போது குறைந்திருந்தது.
விலை தொடர்ந்து அதிகரித்து வந்து கடந்த மாதம் (பிப்ரவரி) முதல் வாரத்தில் வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டது. சென்னையில் அப்போது ஒரு கிலோ பூண்டு ரூ.500 வரை விற்பனை ஆனது. மற்ற மாவட்டங்களில் ரூ.550 வரை விற்பனை ஆனதை பார்க்க முடிந்தது.
மாத பட்ஜெட்டில் தவிர்க்க முடியாத உணவு சார்ந்த பொருட்களில் ஒன்றான பூண்டின் இந்த விலை உயர்வு இல்லத்தரசிகளுக்கு பேரிடியாக அமைந்தது என்றே சொல்லலாம். தொடர்ந்து விலை அதே நிலையில் நீடித்து வந்த நிலையில், கடந்த மாதத்தின் இறுதியில் இருந்து பூண்டு வரத்து சற்று அதிகரித்ததால் அதன் விலை குறையத் தொடங்கியது.
கடந்த மாதம் 25-ந்தேதி ஒரு கிலோ பழைய பூண்டு ரூ.400 முதல் ரூ.420 வரையிலும், புதிய பூண்டு ரூ.180 முதல் ரூ.250 வரையிலும் விற்பனை ஆனது. அதன் பின்னரும் விலை குறைந்து வந்து, கடந்த 2 தினங்களுக்கு முன்பு ஒரு கிலோ பூண்டு ரூ.160 முதல் ரூ.400 வரையிலும் விற்கப்பட்டது. இந்த நிலையில் நேற்றும் அதன் விலை மேலும் கிலோவுக்கு ரூ.50 வரை குறைந்து ஒரு கிலோ ரூ.160 முதல் ரூ.350 வரையில் விற்பனை ஆனது.
தமிழ்நாடு உள்பட பிற மாநிலங்கள் மற்றும் சீனாவில் இருந்து பூண்டு வரத்து அதிகரிக்கத் தொடங்கி இருப்பதால் அதன் விலை மேலும் குறைந்து வருவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
- வெளிமாநிலங்களிலிருந்து 30க்கும் மேற்பட்ட வல்லுநர்கள் வருகை புரிந்துள்ளனர்.
- பல அரியவகை பறவைகள் கொடைக்கானல் வனப்பகுதியில் இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
கொடைக்கானல்:
தமிழகம் முழுவதும் பறவைகள் கணக்கெடுப்பு பணி தொடங்கி உள்ளது. இதில் ஒரு பகுதியாக திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வனக்கோட்டத்திற்கு உட்பட்ட கொடைக்கானல், தேவதானப்பட்டி, பழனி, மன்னவனூர், பூம்பாறை உள்ளிட்ட வனச்சரகங்களில் பறவைகள் கணக்கெடுப்பு பணி நேற்று தொடங்கியது.
இந்த பறவைகள் கணக்கெடுப்பு பணிக்காக மும்பை, டெல்லி, கேரளா, பாண்டிச்சேரி, மத்திய பிரதேசம் உள்ளிட்ட வெளிமாநிலங்களிலிருந்து 30க்கும் மேற்பட்ட வல்லுநர்கள் வருகை புரிந்துள்ளனர். இவர்களுடன் கொடைக்கானலில் பயிலும் உள்ளூர் மாணவ-மாணவிகள் சுமார் 30க்கும் மேற்பட்டோர் மற்றும் வனப்பணியாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் இணைந்து 25 குழுக்களாக பிரிந்து பறவைகள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக கரடிச்சோலை, ரெட் ராக், பாம்பே சோலா, புலிச்சோலை, வட்டக்கானல் உள்ளிட்ட வனப்பகுதிகளில் பறவைகள் கணகக்கெடுப்பு பணி நடைபெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.
இந்த கணக்கெடுப்பில் பாரடைஸ், பிளைகேட்சர், சாம்பல் நெற்றி, பச்சைபுறா, மாம்பழச்சிட்டு, நீல நிற கரும்பிடாரி, கருந்தலை மாங்குயில், கருந்தலை குயில் கீச்சான் உள்ளிட்ட பறவைகள் கண்டறியப்பட்டன. இன்றும் 2-வது நாளாக பறவைகள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் பல அரியவகை பறவைகள் கொடைக்கானல் வனப்பகுதியில் இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
- திருவெண்காட்டில் உள்ள தனது மாமனார் வீட்டுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செல்கிறார்.
- நாளை மயிலாடுதுறை சென்று கலெக்டர் அலுவலகத்தை திறந்துவைக்கிறார்.
சென்னை:
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக புதிய கட்டிடம் மன்னம்பந்தல் ஊராட்சி மூங்கில்தோட்டம் பால்பண்ணை பகுதியில் ரூ.114 கோடியே 48 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ளது.
இந்த அலுவலகத்தை நாளை (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைக்கிறார்.
இதில் கலந்துகொள்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4.15 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் புறப்படுகிறார். இரவு 8.15 மணிக்கு சீர்காழி ரெயில் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து கார் மூலம் திருவெண்காட்டில் உள்ள தனது மாமனார் வீட்டுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செல்கிறார். அன்று இரவு அங்கேயே தங்குகிறார்.
நாளை அங்கிருந்து கார் மூலமாக மயிலாடுதுறை சென்று கலெக்டர் அலுவலகத்தை காலை 10 மணிக்கு திறந்துவைக்கிறார். பிற்பகல் 1 மணிக்கு திருச்சி-சென்னை சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏறி, மாலை 6.15 மணிக்கு மீண்டும் சென்னை திரும்புகிறார்.
- சென்னைக்கு குடிநீர் அனுப்பப்பட்டு வந்ததால் வீராணம் ஏரியின் நீர்மட்டம் படிப்படியாக குறைய தொடங்கியது.
- சென்னை மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.
கடலூர்:
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. 47.50 அடி கொள்ளளவு கொண்ட இந்த ஏரி மூலம் கடலூர் மாவட்டத்தில் சுமார் 44 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.
மேலும் நீர்மட்டத்திற்கு ஏற்ப ஏரியில் இருந்து சென்னை மக்களின் தேவைக்காக குடிநீர் அனுப்பப்பட்டு வருகிறது. இருப்பினும் வீராணம் ஏரியில் 39 அடிக்கு கீழ் நீர்மட்டம் குறைந்தால், பாசனத்துக்கு தண்ணீர் திறக்கமுடியாது. அதேபோல் சென்னைக்கும் குடிநீர் அனுப்பமுடியாது. இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை மற்றும் கீழணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரால் வறண்டு கிடந்த வீராணம் ஏரி நிரம்பியது. இதையடுத்து கடந்த மாதம் பாசனத்துக்காக ஏரியில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.
மேலும் சென்னைக்கும் குடிநீர் அனுப்பப்பட்டு வந்ததால் வீராணம் ஏரியின் நீர்மட்டம் படிப்படியாக குறைய தொடங்கியது. இதன் காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்படுவது நிறுத்தப்பட்டது. அதேபோல் சென்னைக்கு அனுப்பும் குடிநீரின் அளவும் படிப்படியாக குறைக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் நேற்று வீராணம் ஏரியின் நீர்மட்டம் 38.50 அடியாக குறைந்ததால், சென்னைக்கு குடிநீர் அனுப்பும் பணி முற்றுலும் நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக சென்னை மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.
நீர் மட்டம் குறைந்ததால் வீராணம் ஏரி தற்போது விளையாட்டு மைதானம் போல் காட்சி அளிக்கிறது. ஆங்காங்கே உள்ள பள்ளங்களில் மட்டும் தண்ணீர் தேங்கி தற்போது வீராணம் ஏரி குட்டைபோன்று காட்சி அளிக்கிறது.
- சாமிதோப்பு அய்யா வைகுண்டரின் அவதார தின விழா.
- பக்தர்கள் "அய்யா சிவ சிவ.. அரகர அரகரா.."என்ற பக்தி கோஷத்தை எழுப்பினர்.
நாகர்கோவில்:
சாமிதோப்பு அய்யா வைகுண்டரின் அவதார தின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையடுத்து நேற்று அய்யா வைகுண்டர் விஞ்சை பெற்ற திருச்செந்தூர் கடற்கரை பகுதியில் உள்ள பதியில் இருந்து வாகன பேரணி நாகர்கோவிலுக்கு புறப்பட்டது. இந்த பேரணியானது நேற்று இரவு நாகராஜா திடலை வந்தடைந்தது.
இதேபோல் திருவனந்த புரத்தில் இருந்து புறப்பட்ட வாகன பேரணியும் நேற்று இரவு நாகராஜா திடலை வந்தது. இதைத்தொடர்ந்து அங்கு மாசி மாநாடு நடைபெற்றது. மாநாட்டிற்கு பூஜித குரு ராஜசேகர் தலைமை தாங்கினார். பூஜிதகுரு சுவாமி உள்பட பலர் இந்த மாநாட்டில் கலந்துகொண்டனர். இதைத் தொடர்ந்து இன்று காலை அய்யா வைகுண்டரின் அவதார தின ஊர்வலம் நாகராஜா திடலில் இருந்து புறப்பட்டது. ஊர்வலத்திற்கு பூஜிதகுரு சாமி தலைமை தாங்கினார். அரவிந்த், ஆனந்த், அஜித் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஊர்வலத்தில் செண்டை மேளம் முழங்க மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அகிலத்திரட்டு ஏந்திய அய்யாவின் வாகனம் முன் சென்றது.
அதைத்தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் அணிவகுத்து சென்றார்கள். அப்போது காவி உடை அணிந்தும், கையில் காவிக்கொடிகளை ஏந்தியபடி பக்தர்கள் "அய்யா சிவ சிவ.. அரகர அரகரா.."என்ற பக்தி கோஷத்தை எழுப்பினர். மேலும் பல பக்தர்கள் தலையில் சந்தனக்குடம் சுமந்து சென்றனர்.

ஊர்வலத்தில் விஜய் வசந்த் எம்.பி. நாகர்கோவில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் நவீன்குமார் மற்றும் அரசியல் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். ஊர்வலம் மணிமேடை சந்திப்பு வழியாக சவேரியார் கோவில் சந்திப்பு பகுதிக்கு வந்தது. அங்கு பிற மதத்தை சேர்ந்தவர்கள் ஊர்வலத்திற்கு வரவேற்பு கொடுத்தனர்.
பின்னர் ஊர்வலம் கோட்டார், இடலாக்குடி, சுசீந்திரம், வழுக்கம்பாறை, ஈத்தங் காடு, வடக்கு தாமரை குளம் வழியாக முத்திரி கிணற் றங்கரையை சுற்றி வந்த ஊர்வலம் மதியம் தலைமை பதியை வந்தடைந்தது.

ஊர்வலத்தில் சிறுவர், சிறுமிகள் கோலாட்டம் ஆடியபடி சென்றனர். ஊர்வ லத்தில் குமரி மாவட் டத்தை சேர்ந்த அய்யாவழி பக்தர்கள் மட்டும் இன்றி நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும், கேரளா வில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஊர்வலத்தில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு மோர், தண்ணீர், பானகாரம் தர்மங்கள் வழங்கப்பட்டது. பல்வேறு இடங்களில் அன்னதானமும் வழங்கப்பட்டது.
அவதார தினத்தை யொட்டி சாமிதோப்பு தலைமை பதிக்கு நேற்று இரவு பக்தர்கள் வருகை அதிகமாக இருந்தது. சாமி தோப்பு ரதவீதிகள் முழுவதும் பக்தர்கள் தலை யாக காட்சியளித்தது. இன்று அதிகாலை முதலே பக்தர்கள் முத்திரி கிணற்றில் குளித்துவிட்டு குடும்பத்தோடு அய்யா வைகுண்டரை வழிபட்டனர். சாமிதோப்பு பதியில் தரிசனம் செய்வதற்கு பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து அய்யாவை தரிசனம் செய்தனர்.
பக்தர்களுக்கு அன்ன தர்மமும் வழங்கப்பட்டது. அய்யா வைகுண்டர் அவதார தின ஊர்வலத்தை யொட்டி சாமிதோப்பிற்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு சுந்தரவதனம் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அய்யா வைகுண்டர் பதி வை சுற்றியுள்ள நான்கு ரத வீதிகளையும், இரு சக்கர வாகனங்களும் மற்றும் நான்கு சக்கர வாகனங்களும் நுழைய தடை செய்யப்பட்டது.
இதையடுத்து ஆங்காங்கே போலீசார் பேரிகார்டுகளை அமைத்து வாகனங்களை திருப்பி விட்டனர். இதனால் சாலையோரங்களிலும் அந்த பகுதியில் உள்ள தென்னந்தோப்புகளிலும் கார்களையும், இருசக்கர வாகனங்களையும் பொது மக்கள் நிறுத்தி சென்று இருந்தனர்.
- பெருங்கற்கால மக்கள் பயன்படுத்திய அரவை கற்கள் மற்றும் உரல்கள் அதிக அளவில் இப்பகுதியில் காணக் கிடைக்கின்றன.
- நெடுங்கல் அமைப்பு 5 ½ அடி உயரமும், 4 அடி அகலமும் கொண்டதாக உள்ளன.
வருசநாடு:
தேனி மாவட்டம் குமணன் தொழு அருகே 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான பெருங்கற்கால நினைவுச் சின்னங்களை தொல்லியல் ஆய்வாளரும், கடமலைக்குண்டு அரசு மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியருமான, செல்வம் கள ஆய்வின்போது கண்டுபிடித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
வருசநாடு குமணன்தொழு அருகில் அருவா தீட்டுப்பாறை பகுதியில், மொக்கை என்பவரின் காட்டில் 3000 ஆண்டுகள் பழமையான 20க்கும் மேற்பட்ட பெருங்கற்கால கல்வட்டங்கள் மற்றும் 5 க்கும் மேற்பட்ட நெடுங்கற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
பல கல்வட்டங்களும் நெடுங்கற்களும் சிதைக்கப்பட்டுள்ளன. இங்கு காணப்படும் கல்வட்டங்கள் 13 அடி விட்டம் கொண்டதாக அமைக்கப்பட்டிருக்கின்றன. நெடுங்கல் அமைப்பு 5 ½ அடி உயரமும், 4 அடி அகலமும் கொண்டதாக உள்ளன.
பெருங்கற்கால மக்கள் பயன்படுத்திய அரவை கற்கள் மற்றும் உரல்கள் அதிக அளவில் இப்பகுதியில் காணக் கிடைக்கின்றன.
குமணன் தொழுவிலிருந்து வெள்ளையம்மாள்புரம், சின்னமனூருக்கு கால்நடையாக செல்வதற்கு பழமையான பாதை ஒன்று இவ்வழியாக செல்கிறது. வழி நெடுகிலும் தீட்டுக்கற்கள் காணப்படுவதால் இப்பகுதி அருவா தீட்டுக் கணவாய் என இப்பகுதி மக்களால் அழைக்கப்படுகிறது.
பெருங்கற்காலம் தொட்டு தற்காலம் வரை தீட்டுக்கற்களில் அருவா உள்ளிட்ட ஆயுதங்களைத் தீட்டும் வழக்கம் இப்பகுதி மக்களிடையே தொடர்ந்து வருவது வியப்புக்குரியது.
வருசநாட்டுப் பகுதியில் பெருங்கற்காலத்தில் அடர்த்தியாக மக்கள் வாழ்ந்திருக்கின்றனர் என்பதற்குச் சான்றாக இந்த நினைவுச் சின்னங்கள் உள்ளன.
- மர்ம ஆசாமிகள் வந்த காரை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.
- கடலூரில் இருந்து 2 போலீஸ் மோப்ப நாய்கள் கூப்பர், வெற்றி வரவழைக்கப்பட்டது.
பண்ருட்டி:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த எல்.என்.புரம் சென்னை சாலை பூங்குணம் ஏரிக்கரை பகுதியில் போக்குவரத்து போலீஸ் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் மணிவண்ணன்,போக்குவரத்து போலீஸ்காரர் கார்த்தி ஆகியோர் நேற்று பிற்பகல் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது அவ்வழியே வந்த காரை நிறுத்தி விசாரித்தனர்.காரில் கட்டு கட்டாக பணம், நகை இருந்தது தெரியவந்தது. காரின் சாவியை போலீசார் எடுத்தனர். இதனால் ஆத்திரமடை ந்த காரில் வந்த 3 பேர் போலீசாரிடம் தகாத வார்த்தைகளால் பேசி வாக்கு வாதத்தில் ஈடுபட்டு கத்தியால் போலீசாரை தாக்கமுயன்றனர்.அதிர்ஷ்டவசமாக அவர்களின் கொலை வெறி தாக்குதலில் இருந்து போலீசார் காயம் இன்றி தப்பினார். பின்னர் கண்ணிமை க்கும் நேரத்தில் காரில் இருந்த பணம் நகைகளை வாரி சுருட்டிக்கொண்டு ஆளுக்கொரு திசையாக ஓட்டம் பிடித்தனர்.வாகன சோதனையில் இருந்தபோக்குவரத்துபோலீசாரை தாக்கம் முயன்றுகொலை மிரட்டல் விடுத்து 3 பேர் தப்பிய தகவல் அந்த பகுதியில்காட்டுத்தீ போல பரவியது.
தகவல் அறிந்ததும் பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டுபழனி இன்ஸ்பெக்டர்கள் கண்ணன், பரமேஸ்வர பத்மநாபன், சப்-இன்ஸ்பெக்டர்கள் தங்கவேலு, எழில்தாசன், ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றுமர்ம ஆசாமிகள்வந்த காரை பறிமுதல்செய்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர் . மேலும் கடலூரில் இருந்து 2 போலீஸ் மோப்ப நாய்கள் கூப்பர், வெற்றி வரவழைக்கப்பட்டது. சம்பவ இடத்திலிருந்து மோப்பம் பிடித்துக் கொண்டு சித்திரச்சாவடி, கணிசப்பாக்கம், வி.ஆண்டி குப்பம் வழியாக பண்ருட்டிக்கு ஓடி வந்தது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.
போக்குவரத்து போலீசாரை கத்தியை காட்டி மிரட்டி தப்பிய ஓடிய மர்ம ஆசாமிகள் வந்த காருக்கு 4 நம்பர் பிளேட் இருந்தது. காரின் நம்பர் போலி எனவும், மர்ம நபர்கள் திருச்சி, திண்டுக்கல் பகுதியில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு சென்னைக்கு செல்ல பண்ருட்டி வழியாக வந்து இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். இந்த சம்பவம் பண்ருட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






