என் மலர்
உள்ளூர் செய்திகள்
- தமிழக முதல்வர் தீபாவளி பண்டிகைக்கு வாழ்த்து கூறுவது கிடையாது.
- கொரோனா தொற்றை நாம் தடுப்பூசியினாலும், ஆன்மீகத்தாலும் வென்றோம்.
மணவாளக்குறிச்சி:
குமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதியம்மன் கோவில் மாசி திருவிழாவில் ஹைந்தவ சேவா சங்கம் சார்பில் நடந்த 87 வது சமய மாநாட்டில் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன் குத்து விளக்கேற்றினார். பின்னர் அவர் பேசியதாவது:-
500 ஆண்டு கால கனவு அயோத்தி கோவில் மூலம் நனவாகி உள்ளது. ஆன்மீகம் தழைக்கும் நாடு நன்றாக இருக்கும். இப்போது உலகில் வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் இந்தியா முதலிடம் பெற்றுள்ளது.
இதற்கு காரணம் நம் நாட்டின் ஆன்மீகம்தான். ஆன்மீகத்துடன் தேசியமும் வளர்கிறது. நான் பிறந்த இந்து மதத்தை பின்பற்றுகிறேன். என் மதம் பற்றி பேசினால் மதவாதி என்கிறார்கள். மதவாதி என்கிறவர்களை நான் எதிர்க்கிறேன்.
தமிழக முதல்வர் தீபாவளி பண்டிகைக்கு வாழ்த்து கூறுவது கிடையாது. வாழ்த்து சொல்ல மறுப்பது ஏன்? என்று தெரியவில்லை. எல்லா பண்டிகைக்கும் வாழ்த்துகளை பரிமாறுவது தான் நல்ல பண்பு.

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசி திருவிழா கொடியேற்றத்தில் புதுவை கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன் கலந்து கொண்ட காட்சி. அருகில் விஜய்வசந்த் எம்.பி., மேயர் மகேஷ் மற்றும் பலர் உள்ளனர்.
நாடும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். நாட்டு மக்களும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். அதற்கு ஆன்மிகமும், தேசியமும் அவசியம். கொரோனா தொற்றை நாம் தடுப்பூசியினாலும், ஆன்மீகத்தாலும் வென்றோம்.
ஏனென்றால் நம் உணவு பழக்கம் முறை, அழுத்தமான ஆன்மீகம்தான். பெருமாள் கோயில்களில் துளசி தீர்த்தம் தருவார்கள். அதில் விஞ்ஞானம் உள்ளது. ஜூன் 21-ந் தேதி உலக யோகா தினம் கடை பிடிக்கப்படுகிறது. ஆனால் ஒவ்வொரு நாளும் யோகா தினம்தான். நம் நாட்டு பழக்கவழக்கங்கள் அப்படி அமைந்துள்ளது. விவேகானந்தர் வெளிநாடு செல்லும்போது இந்தியாவை விரும்பினேன் என்றார். வெளிநாட்டிலிருந்து திரும்பி வரும்போது இந்தியாவை வணங்குகிறேன் என்றார். இந்தியாவின் பண்பாடு, கலச்சாரம் நல்ல வாழ்வியலை தருகிறது. இந்து மதம் இதை சொல்லிக்கொடுக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
- பிரதமர் மோடி பொதுமக்களுக்கு அறிவித்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை.
- தி.மு.க.வினர் நடத்திய இந்த நூதன போராட்டம் பொள்ளாச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
பொள்ளாச்சி:
பொள்ளாச்சி நகர தி.மு.க. சார்பில் செயலாளர் நவநீத கிருஷ்ணன் தலைமையில் புதிய பஸ்நிலையம் முன்பு மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
பிரதமர் மோடி பொதுமக்களுக்கு அறிவித்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை, பொதுமக்கள் வங்கி கணக்கில் ரூ.15 லட்சம் செலுத்தப்படும் என்ற அறிவிப்பு பொய்யானது, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை இதுவரை கட்டப்படவில்லை என குற்றம்சாட்டி இந்த போராட்டம் நடந்தது.
பிரதமர் மோடி திட்டங்களை நிறைவேற்றாமல் வாயால் வடை சுடுவதாக கூறியும், அதனை கண்டித்தும் போராட்டத்தில் பங்கேற்ற தி.மு.க. நிர்வாகிகள் பொதுமக்களுக்கு இலவசமாக வடை வழங்கினர். இதில் பங்கேற்றவர்கள் வெள்ளை சட்டை, வேட்டி அணிந்து மோடியின் முகம் பொறித்த முகமூடியை அணிந்திருந்தனர். தோளில் காவித்துண்டும் அணிந்திருந்தனர்.
தி.மு.க.வினர் நடத்திய இந்த நூதன போராட்டம் பொள்ளாச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- தமிழ்நாட்டின் தலைநகர் சென்னைக்கும், வட தமிழ்நாட்டுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் இத்திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
- பா.ஜ.க அரசு, தமிழ்நாட்டில் தொடர்ந்து இத்தகைய நாசகாரத் திட்டங்களைக் கொண்டு வருகிறது.
சென்னை:
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கத்தில் உள்ள அணுஉலை வளாகத்தில் பாவினி எனும் பொதுத்துறை நிறுவனத்தால் கடந்த 2003-ல் இருந்து 500 மெகாவாட் திறன் கொண்ட ஒரு மாதிரி அதிவேக ஈனுலை கட்டப்பட்டு வருகிறது. இந்த அதிவேக ஈனுலையின் முக்கியத்துவமுறும் நிலைக்கான எரிபொருள் நிரப்பும் பணிகளை நரேந்திர மோடி நாளை (4-ந்தேதி) தொடங்கி வைக்க இருப்பதாக சில ஊடகங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளன.
திரவ சோடியத்தைக் குளிர்விப்பானாகவும், ஆபத்தான புளூட்டோனியத்தை எரிபொருளாகவும் கொண்ட இத்தொழில்நுட்பம் மிகவும் ஆபத்தானது என்பதால் உலக நாடுகளே இந்த ஈனுலைகளைக் கைவிட்டு விட்டன.
பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் இருந்து அணு உலைகளுக்கும், அணுக்கழிவு மையங்களுக்கும் எதிர்ப்பு வந்தால் அத்திட்டங்களைக் கைவிடும் பா.ஜ.க அரசு, தமிழ்நாட்டில் தொடர்ந்து இத்தகைய நாசகாரத் திட்டங்களைக் கொண்டு வருகிறது.
தமிழ்நாட்டின் தலைநகர் சென்னைக்கும், வட தமிழ்நாட்டுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் இத்திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. எனவே பா.ஜ.க. அரசு உடனடியாக இத்திட்டத்தைக் கைவிட வேண்டும் என்றும், தமிழ்நாடு அரசு முனைந்து தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- சின்னம் கேட்டு விண்ணப்பிக்கும் நேரத்தில் நான் வெள்ள பாதிப்பு நிவாரண பணிகளில் ஈடுபட்டிருந்தேன்.
- கரும்பு விவசாயி சின்னம் தராமல் என்னை முடக்க நினைக்கிறார்கள்.
சென்னை:
சென்னை வளசரவாக்கத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* சின்னம் கேட்டு விண்ணப்பிக்கும் நேரத்தில் நான் வெள்ள பாதிப்பு நிவாரண பணிகளில் ஈடுபட்டிருந்தேன்.
* நான் மயில் சின்னத்தை கேட்டபோது தேசிய பறவை என கொடுக்க மறுத்தனர். ஆனால் தேசிய மலர் தாமரை பாஜகவிற்கு கொடுக்கப்பட்டது ஏன்?
* பாஜகவுக்கு தாமரை சின்னம் ஒதுக்கப்பட்டதற்கு எதிராக வழக்கு தொடர்வேன்.
* அங்கீகாரம் பெறுவதற்குள் என்னை தூக்கி எறிந்து விடுகிறீர்கள்.
* கரும்பு விவசாயி சின்னம் தராமல் என்னை முடக்க நினைக்கிறார்கள்.
* ஒரு இடத்தில் கூட 100 வாக்குகளுக்கு மேல் பெறாத கர்நாடக கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் கொடுத்துள்ளனர் என்று அவர் கூறினார்.
- சென்னை மாநகரத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் திருப்பதி செல்ல வாய்ப்பு உருவாக்கப்பட்டு உள்ளது.
- கீழ் திருப்பதியில் மதிய உணவும், திருத்தணி தமிழ்நாடு ஓட்டல் உணவகத்தில் இரவு உணவும் வழங்கப்படுகின்றது.
சென்னை:
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் சி.சமயமூர்த்தி வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகத்தினால் இயக்கப்பட்டு வரும் சுற்றுலா திட்டங்களில் அதிக அளவில் பொது மக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் சுற்றுலா பயணம் திருப்பதி ஒரு நாள் சுற்றுலாவாகும். திருப்பதி சுற்றுலா செல்லும் பஸ், சென்னை வாலாஜா சாலை, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் தலைமை அலுவலகமான சுற்றுலா வளாகத்திலிருந்து தினசரி காலை 4.30 மணிக்கு சுற்றுலா பயணிகளை அழைத்து செல்கின்றது.
மேலும் கோயம்பேடு, ரோகினி திரையரங்கிற்கு எதிர்புறம் இருந்தும், பூந்தமல்லி ரோடு திருப்பதி ரோடு இணையும் சந்திப்பு (சங்கீதா ஹோட்டல் அருகில்), திருவள்ளூர் பகுதியில் மணவாளன் நகர் இந்திரா காந்தி சிலை அருகில் ஆகிய இடங்களிலும் திருப்பதி சுற்றுலா செல்லும் பயணிகளை பேருந்தில் ஏற்றிக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னை மாநகரத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் திருப்பதி செல்ல வாய்ப்பு உருவாக்கப்பட்டு உள்ளது.
ஒவ்வொரு பேருந்திலும் சுற்றுலா பயணிகளுக்கு ஒரு சுற்றுலா வழிகாட்டி பணியில் ஈடுபடுவார். வழிகாட்டிகள் திருப்பதி சுற்றுலா பயணிகளுக்கு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் சுற்றுலா பயணத்திற்கான விளக்கங்களை அளிப்பார். சுற்றுலா பயணிகளுக்கு காலை உணவு திருத்தணி ஓட்டல் தமிழ்நாடு உணவகத்தில் வழங்கப்படுகின்றது.
சுற்றுலா வழிகாட்டி, சுற்றுலா பயணிகள் முடி காணிக்கை விரைவாக செலுத்த உரிய வழிகாட்டுதல்களை வழங்குவார். தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்திற்கு திருப்பதி தேவஸ்தானம் சிறப்பு அனுமதியாக வழங்கிய விரைவு தரிசன அனுமதி சீட்டின் மூலம் சுற்றுலா பயணிகள் தரிசனம் செய்த பின்னர் சுற்றுலா பயணிகள் அனைவருக்கும் நபர் ஒருவருக்கு திருப்பதி லட்டு ஒன்று வழங்கப்படுகின்றது.
கீழ் திருப்பதியில் மதிய உணவும், திருத்தணி தமிழ்நாடு ஓட்டல் உணவகத்தில் இரவு உணவும் வழங்கப்படுகின்றது. திருப்பதி சுற்றுலா முடிந்து சென்னை வாலாஜா சாலை, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் சுற்றுலா பயணிகளை கொண்டு சேர்த்து திருப்பதி சுற்றுலா பயணம் முடிவு பெறுகின்றது.
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் பயணத் திட்டங்களுக்கு முன்பதிவு செய்ய தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் www.ttdconline.com இணைதள பக்கத்தில் முன்பதிவு செய்தோ, அல்லது சென்னை வாலாஜா சாலையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் தலைமை அலுவலகமான சுற்றுலா வளாகத்திற்கு நேரில் வருகை தந்தோ முன்பதிவு செய்யலாம்.
சுற்றுலா குறித்த மேலும் விவரங்களுக்கு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக கட்டணமில்லா தொலைபேசி எண் 180042531111 மற்றும் 044-25333333, 044-25333444 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டும், வலைதள முகவரி www.ttdconline.com மூலமாகவும் விவரங்களை பெறலாம்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- ‘டார்ச் லைட்’ ஒளி வீசுமா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.
- காங்கிரஸ் 10 தொகுதிகளை கேட்கும் நிலையில், தி.மு.க.வோ 6 தொகுதிகளை மட்டுமே தருவதாக கூறியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சென்னை:
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில் கட்சிகளிடையே கூட்டணி மற்றும் தொகுதி பங்கீட்டு பேச்சு வார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிப்பதாக கருதப்படும் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஒரு தொகுதியை ஒதுக்கி கொடுப்பதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது. தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரசுக்கு ஒதுக்கப்படும் தொகுதியிலேயே கமல்ஹாசனுக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை கூறும்போது, அதுபோன்று எந்தவிதமான ஒப்பந்தங்க ளும் போடப்பட வில்லை என்றும் இதுபற்றி கமல்ஹாசனும் எங்களுடன் எதுவும் பேசவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில் தி.மு.க. தரப்பிலும் கமல்ஹாசன் கூட்டணியில் இருப்பதை யாரும் உறுதி செய்யாமலேயே உள்ளனர். இது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு கருத்து தெரிவித்திருந்த தி.மு.க. மூத்த தலைவர்களில் ஒருவரான டி.ஆர்.பாலு, தி.மு.க. கூட்டணியில் கமல்ஹாசன் இடம் பெறுவது பற்றி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்வார் என்று கூறியிருந்தார். வெளிநாட்டு பயணம் முடிந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திரும்பியதும் கமல்ஹாசன் சந்தித்து பேச இருப்பதாக வும் தகவல்கள் வெளியா னது.
ஆனால் அது தொடர்பான எந்த சந்திப்புகளும் நடைபெறவில்லை. மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஒதுக்கப்படும் இடம் தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்துள்ள தி.மு.க.வி னர், கமல்ஹாசன், ஈரோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்குதான் ஆதரவு தெரி வித்து பிரசாரம் செய்தார். அவர்களோடுதான் பேசிக் கொண்டிருக்கிறார்கள். எங்களுடன் எதுவும் பேசவில்லை என்றும் கூறியுள்ள னர்.
இதனால் கமல்ஹாச னுக்கு ஒரு தொகுதியை ஒதுக்கி கொடுப்பது தி.மு.க.வா? காங்கிரசா? என்கிற கேள்வியும் எழுந்து உள்ளது.
கமல்ஹாசனை பொறுத்தவரையில் காங்கிரஸ் டெல்லி மேலிட தலைவர்கள் மற்றும் ராகுல்காந்தியுடன் மிகவும் நெருக்கமாகவே இருந்து வருகிறார்.
இதனால் அவர் காங்கிரசோடு பேசி எளிதாக தனக்கு தேவையான தொகுதிகளை கேட்டுப் பெற்றுக் கொள்வார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கே எத்தனை இடங்கள் என்பது இன்னும் கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது.
காங்கிரஸ் 10 தொகுதிகளை கேட்கும் நிலையில், தி.மு.க.வோ 6 தொகுதிகளை மட்டுமே தருவதாக கூறியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இப்படி குறைவான தொகுதிகள் கிடைக்கும் பட்சத்தில் அதில் ஒரு தொகுதியை கமல்ஹாசனுக்கு எப்படி ஒதுக்க முடியும் என்று கூறியே காங்கிரஸ் கட்சி 'கை' விரித்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதற்கிடையே கமல்ஹாசன் தி.மு.க. கூட்டணியில் 'டார்ச் லைட்' சின்னத்தில் போட்டியிடுவார் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியினர் கூறி வருகிறார்கள். இதனால் பாராளுமன்ற தேர்தலில் 'டார்ச் லைட்' ஒளி வீசுமா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. இப்படி தொகுதி பங்கீட்டில் நீடிக்கும் சிக்கல் மற்றும் இழுபறியால் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
- தீ விபத்தில் 3 பணியாளர்கள் படுகாயமடைந்தனர்.
- விபத்து குறித்து அண்ணா நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை:
சென்னை அண்ணா நகரில் உள்ள பிரபல ஃபுட் ஸ்ட்ரீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 3 பணியாளர்கள் படுகாயமடைந்தனர்.
சிலிண்டரில் கேஸ் கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. காயமடைந்த 3 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து குறித்து அண்ணா நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- படகுகள் பறிமுதல் செய்யப்படுவதுடன் இரண்டாவது முறையாக கைது செய்யப்படும் மீனவர்களுக்கு சிறை தண்டனையும் விதிக்கப்படுகிறது.
- பெரும்பாலான படகுகள் எச்சரிக்கை காரணமாக கரை திரும்பி உள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் பகுதியில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள், இலங்கை கடற்பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன் பிடிப்பதாக கூறி சமீப காலமாக தொடர்ந்து கடற்படையினர் கைது செய்து வருகின்றனர். இதில், படகுகள் பறிமுதல் செய்யப்படுவது டன் இரண்டாவது முறையாக கைது செய்யப்படும் மீனவர்களுக்கு சிறை தண்டனையும் விதிக்கப்படுகிறது.
இதனை கண்டித்து, ராமேசுவரம் பகுதி மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டம் மற்றும் உண்ணாவிரத போராட்டங்களை மேற்கொண்டனர். மேலும் இலங்கை மீனவர்கள் குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவித்ததாகவும் பரபரப்பு ஏற்பட்டது. கலெக்டர், சட்டமன்ற உறுப்பினர் நடத்திய சமரச பேச்சுவார்த்தையை ஏற்றுக் கொண்ட ராமேசுவரம் மீனவர்கள் தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டு மீண்டும் கடலுக்கு சென்றனர்.
இதனை கண்டித்து, இலங்கை மன்னார், பேசாளை, நெடுந்தீவு பகுதி மீனவ சங்கத்தினர் கண்டனம் தெரிவித்ததுடன் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்பகுதிக்குள் வந்து மீன் பிடிப்பதை தடுக்க வேண்டும் என போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக இன்று இலங்கை மீனவர்கள் தங்களது படகுகளில் கருப்பு கொடியுடன் நடுக்கடலில் போராட்டம் அறிவித்துள்ளனர்.
இதனால் ராமேசுவரம், பாம்பன், மண்டபத்தில் இருந்து மீன்பிடிக்க செல் லும் மீனவர்களுக்கு மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை அதிகாரிகள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரித்துள்ளனர். மேலும் பெரும்பாலான படகுகள் எச்சரிக்கை காரணமாக கரை திரும்பி உள்ளனர்.
ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்ட இரட்டைமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்கும் போது இலங்கை மீனவர்கள் பாதிக்கப்படுகின்றனர். இதனால் மீண்டும் மீனவர்கள் பிரச்சினை ஏற்படும். இதனை தடுக்க வேண்டும் என மீனவ சங்கத்தினர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அதிகாரிகளிடம் பலமுறை மனுக்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதன் காரணமாக இந்திய தமிழ் மீனவர்கள் இலங்கை தமிழ் மீனவர்களிடையே பெரும் மோதல் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனை தடுக்க குறுகிய மீன்பிடி கடல் பகுதியை கொண்ட ராமேசுவரம் பகு தியில் அரசின் அனுமதிக்கப்பட்ட வலைகளை பயன்படுத்துவது, அதிவேக படகுகளை மாற்று துறைமுகத்திற்கு கொண்டு செல்லுவது, எல்லை தாண்டி மீன்பிடிக்க செல்லுவதை கட்டுப்படுத்துவது, இந்திய-இலங்கை மீனவர்கள் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி இரு நாட்டு மீனவர்கள் ஏற்றுக் கொள்ளும் வகையில் மீன் பிடிக்க அனுமதிக்க வேண் டும் என மீனவ சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பிரதமர் மோடி வருகையையொட்டி சென்னையில் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- முக்கிய சாலைகள் மற்றும் சந்திப்புகளில் தீவிர வாகன சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சென்னை:
பிரதமர் மோடி தமிழகத்துக்கு நாளை (திங்கட்கிழமை) ஒரு நாள் பயணமாக வர உள்ளார்.
கல்பாக்கத்துக்கு செல்லும் அவர் பிறகு சென்னை வந்து நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.
இதையொட்டி சென்னையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இது தொடர்பாக சென்னை கமிஷனர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
பிரதமர் நரேந்திர மோடி நாளை (4-ந்தேதி) சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.
பிரதமர் மோடி சென்னை வருகையையொட்டி சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்வது குறித்து, சென்னை காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் தலைமையில் கூடுதல் காவல் ஆணையாளர்கள், இணை ஆணையாளர்கள் மற்றும் துணை ஆணையாளர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின் பேரில் சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர்கள், காவல் இணை ஆணையாளர்கள், காவல் துணை ஆணையாளர்கள், உதவி ஆணையாளர்கள், சட்டம், ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து மற்றும் சிறப்பு பிரிவுகளின் காவல் அதிகாரிகள், ஆளிநர்கள், ஆயுதப்படை, கமாண்டோ, தமிழ்நாடு சிறப்பு காவல் படை காவல் ஆளிநர்கள் உள்பட 15,000 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுடன் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
பிரதமரின் நிகழ்ச்சி நடைபெறும் சென்னை, நந்தனம், ஒய்.எம்.சி.ஏ. மைதானம், சென்னை விமான நிலையம், மற்றும் சுற்றுப்புறங்களிலும், சென்னையில் செல்லும் வழித்தடங்களிலும், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, தீவிர சோதனைகள் மற்றும் கண்காணிப்பு பணிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், சென்னையில் உள்ள லாட்ஜுகள், தங்கும் விடுதிகள், நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் விடுதிகளிலும் சோதனைகள் மேற்கொண்டு சந்தேக நபர்கள் மற்றும் அந்நிய நபர்கள் உள்ளனரா என கண்காணித்து வருகின்றனர். மேலும், முக்கிய சாலைகள் மற்றும் சந்திப்புகளில் தீவிர வாகன சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
- ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் ஆன்மிக குரு பங்காரு அடிகளாரின் 84-வது பிறந்தநாள் விழா.
- அதிகாலை சுயம்பு அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது.
சென்னை:
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் ஆன்மிக குரு பங்காரு அடிகளாரின் 84-வது பிறந்தநாள் விழா நேற்று முன்தினம் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் கருவறையில் உள்ள ஆதிபராசக்தி அம்மனுக்கும், சுயம்புவிற்கும் சிறப்பு அபிஷேகம், ஆராதனை செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஆதிபராசக்தி மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் ரமேஷ் கலந்து கொண்டார்.
ஆன்மிக இயக்கத் துணைத் தலைவர் செந்தில்குமார் கலந்துகொண்டு அன்னதானம் வழங்கினார். சித்தர் பீடம் வந்த ஆன்மிக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளாருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் பங்காரு அடிகளாரின் திரு வுருவப்ப டத்தினை வெள்ளி ரதத்தில் வைத்து சித்தர் பீடத்தில் வலம் வந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அன்று மாலை கலச விளக்கு வேள்வி பூஜையை ஆன்மிக இயக்கத் துணைத் தலைவர் ஸ்ரீதேவி ரமேஷ் தொடங்கி வைத்தார்.
நேற்று காலை ஆதிபராசக்தி அம்மனுக்கு நடைபெற்ற அபிஷேகத்தை ஆன்மிக இயக்கத் துணைத் தலைவர் கோ.ப.அன்பழகன் துவக்கி வைத்தார். பின்னர் பங்காரு அடிகளாரின் திருவுருவ சிலையுடன் தங்கரதம் சித்தர் பீடத்தை வலம் வந்தது.
பங்காரு அடிகளாரின் பிறந்த நாளான இன்று அதிகாலை சுயம்பு அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. பின்னர் பங்காரு அடிகளாரின் திருவுருவப் பட மலர் அலங்கார ரத ஊர்வலம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் பங்காரு அடிகளாரின் திருப்பாதுகைகளுக்கு பக்தர்கள் பொது பாத பூஜை செய்து தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு தொழில் அதிபர் ஜெய் கணேஷ், உமாதேவி, ஆன்மீக இயக்க தலைமை செயல் அதிகாரி வழக்கறிஞர் அகத்தியன் ஆகியோர் அருட்பிரசாதம் வழங்கினார்கள்.
இன்று மாலை மக்கள் நலப்பணி விழா மற்றும் விழா மலர் வெளியிடும் நிகழ்ச்சி ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க கலை அரங்கில் நடைபெற உள்ளது.
- தமிழ்நாட்டில் இருந்து ஆதினம் செங்கோலை மோடியிடம் கொடுத்தது குறிப்பிடதக்கது.
- பா.ஜ.க, அ.தி.மு.க-வை தோற்கடித்து தருமபுரி மாவட்டத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லவேண்டும்.
தருமபுரி:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பாராளுமன்ற தேர்தல் தயாரிப்பு பேரவை கூட்டம் தருமபுரி பெரியார் மன்றத்தில் நடைபெற்றது.
இதில் மாவட்ட செயலாளர் குமார் தலைமை வகித்தார். மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் ரவீந்திரன், மாநிலக்குழு உறுப்பினர்கள் மற்றும் மூத்ததலைவர் கலந்து கொண்டு பேசினர்.
கூட்டத்திற்கு பின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-
முன்னணி ஊழியர்கள் வாக்குசாவடி முகவர்கள் கூட்டம் தமிழ்நாடு முழுவதும் நடந்து வருகிறது. பா.ஜ.க-வின் தலைவர் அண்ணாமலை பேசும் போது அரசியல் அநாகரிகமாக பேசக்கூடாது.
அவர் குறிப்பாக தி.மு.க கூட்டணி கட்சியினரை தரம் தாழ்த்தி பேசிவருகிறார். தமிழகத்தில் பா.ஜ.க 40 தொகுதிகளிலும் தோற்பது, தேர்தலுக்கு முன்னரே உறுதியாகிவிட்டது. மேலும் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க-வை டெபாசிட் இழக்க வைப்போம்.
மேலும் அவர்கள் ஆபாச படத்தை வெளியிடுவதாக கூறி தருமபுரம் ஆதினத்தை மிரட்டுகின்றனர். போலீசார் விசாரணையில், அவரை மிரட்டுவதே பா.ஜ.க கட்சியினர் என தெரிய வந்துள்ளது. தமிழ்நாட்டில் இருந்து ஆதினம் செங்கோலை மோடியிடம் கொடுத்தது குறிப்பிடதக்கது. அவருக்கே அந்த நிலை என்றால் மக்கள் யோசித்து பார்க்க வேண்டும்.
பா.ஜ.க ,அ.தி.மு.க-வை தோற்கடித்து தருமபுரி மாவட்டத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லவேண்டும். சாதிய கூட்டணியை தோற்கடிக்க கிராமங்கள் தோறும் சென்று பிரச்சாரம் செய்யவேண்டும்.
தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்து 2 சீட் கொடுத்துள்ளனர். அடுத்த கட்ட பேச்சுவார்த்தையில் எந்த தொகுதி என்பது முடிவாகும், தி.மு.க கூட்டணி தேர்தல் கால கூட்டணி அல்ல, மதச்சார்பின்மையை பாதுகாக்க, உருவான கொள்கை கூட்டணி.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- மாநிலம் முழுவதும் இருந்து சுமார் 1,500 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.
- முதல் பரிசாக தலா ரூ. 1 லட்சம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களையும் கனிமொழி எம்.பி. வழங்கினார்.
திருச்செந்தூர்:
தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு. க.ஸ்டாலின் 71-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் ஆண்கள், பெண்கள் என இரு பாலருக்குமான மாநில அளவிலான மினி மாரத்தான் போட்டி திருச்செந்தூரில் சட்டமன்ற அலுவலகம் முன்பு நடை பெற்றது.
நிகழ்ச்சிக்கு தமிழக மீன்வளம், மீனவர்நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
இதில் மாநிலம் முழுவதும் இருந்து சுமார் 1,500 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.
ஆண்களுக்கான போட்டி திருச்செந்தூர் காயல்பட்டினம், ஆறுமுகநேரி, அடைக்கலாபுரம் வழியாக சுமார் 21 கிலோ மீட்டர் தொலைவிலும், பெண்களுக்கு திருச்செந்தூரில் இருந்து காயல்பட்டினம் வரையிலான சுமார் 14 கிலோ மீட்டர் தொலைவிலும் நடைபெற்றது.
கனிமொழி எம்.பி. கொடி அசைத்து மினி மாரத்தான் போட்டியை தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிக்கும் விழா நடைபெற்றது. போட்டியில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த லட்சுமணன்-சூர்யா தம்பதியினர் வெற்றி பெற்றனர்.
இதனையடுத்து வெற்றி பெற்ற தம்பதியினருக்கு முதல் பரிசாக தலா ரூ. 1 லட்சம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களையும் கனிமொழி எம்.பி. வழங்கினார்.
2-வது பரிசாக 75 ஆயிரம், 3-வது பரிசாக ரூ. 50 ஆயிரம் உட்பட 10 பரிசுகள் தலா இருபாலர்களுக்கும் வழங்கப்பட்டது. போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் ஆறுதல் பரிசும் வழங்கப்பட்டது.
விழாவில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தி.மு.க. மாநில வர்த்தகர் அணி இணை செயலாளர் உமரிசங்கர், திருச்செந்தூர் நகராட்சி தலைவர் சிவ ஆனந்தி, துணைத்தலைவர் ரமேஷ், நகர செயலாளர் சுடலை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.






