search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "price drop"

    • தற்போது தக்காளிக்கு உரிய விலை கிடைக்காத நிலையில் ஆங்காங்கே சாலையில் கொட்டும் அவலம் ஏற்பட்டுள்ளது.
    • ஆண்டின் பெரும்பாலான மாதங்களில் விலை சரிவை சந்திப்பதும் விவசாயிகள் நஷ்டமடைவதும் தொடர்கதையாகவே உள்ளது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம், குடிமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் காய்கறிகள் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். குறிப்பாக தக்காளி, சின்ன வெங்காயம் அதிக அளவில் சாகுபடி செய்து வருகின்றனர். இந்நிலையில் அடிக்கடி ஏற்படும் விலை சரிவு விவசாயிகளின் வாழ்க்கையை அதல பாதாளத்துக்கு தள்ளி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். தற்போது தக்காளிக்கு உரிய விலை கிடைக்காத நிலையில் ஆங்காங்கே சாலையில் கொட்டும் அவலம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    மடத்துக்குளம், குடிமங்கலம் வட்டாரங்களில் சாகுபடி செய்யப்படும் தக்காளி உடுமலை தினசரி சந்தைக்கு கொண்டு வரப்படுகிறது. அங்கிருந்து வியாபாரிகள் மூலம் தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்யப்படுகிறது. கேரள மாநிலத்தின் சில பகுதிகளுக்கும் இங்கிருந்து தக்காளி அனுப்பி வைக்கப்படுகிறது. வரத்து மற்றும் தேவையை பொறுத்து தினசரி விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

    ஆண்டின் பெரும்பாலான மாதங்களில் விலை சரிவை சந்திப்பதும் விவசாயிகள் நஷ்டமடைவதும் தொடர்கதையாகவே உள்ளது. தற்போது 14 கிலோ கொண்ட ஒரு பெட்டி தக்காளி ரூ.80 முதல் ரூ.150 வரையே விற்பனையாகிறது. இதனால் போக்குவரத்து, சுங்கம், கூலி என செலவு செய்து சந்தைக்கு கொண்டு வந்து நஷ்டத்துடன் திரும்புவதை விட சாலை ஓரத்தில் வீசி எறிவதே சிறந்தது என்று விவசாயிகள் முடிவு செய்து விடுகின்றனர்.

    பல விவசாயிகள் விரக்தியின் உச்சத்தில், டிராக்டர்கள் மூலம் தக்காளி செடிகளை அழிக்க தொடங்கியுள்ளனர். ஆண்டுதோறும் ஏற்படும் இந்த நிலையால் தக்காளி செடிகள் மட்டும் அழிக்கப்படுவதில்லை. விவசாயிகளின் வாழ்வாதாரமும், எதிர்காலமும் சேர்ந்தே அழிந்து போகிறது. இந்தநிலை ஏற்படாமல் தவிர்க்க உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் விவசாயம் மட்டுமல்லாமல் விவசாயியும் சேர்ந்தே அழியும் நிலை உருவாகி விடும்.

    எல்லா பொருட்களின் விலைவாசியும் 10 ஆண்டுகளுக்குள் பல மடங்கு விலை உயர்ந்துள்ளது.ஆனால் ஒரு கட்டு கீரை ரூ.10 லிருந்து ரூ.15 ஆக உயர்த்தப்பட்டால் அது அநியாய விலையாக பார்க்கப்படுகிறது. உற்பத்தி செலவு பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில் ஒரு கிலோ தக்காளி ரூ.50-க்கு விற்கப்பட வேண்டும். ஆனால் ரூ.5-க்கும் ரூ.10-க்கும் அள்ளி கொடுத்து விட்டு விவசாயி மூலையில் முடங்கி கிடக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் மடத்துக்குளம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் தக்காளியை கொட்டி உள்ளனர்.

    எனவே விவசாய விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உடுமலையில் தக்காளி சந்தை உருவாக்கி, இருப்பு வைக்கவும், உரிய விலை கிடைக்கும் பகுதிகளுக்கு அனுப்பி வைக்கவும், மதிப்புக் கூட்டுப்பொருட்கள் உற்பத்தியை ஊக்குவிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு விவசாயிகள் கூறினர்.

    • பரமத்திவேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல்வேறு பகுதிகளில் மரவள்ளி கிழங்கு பயிரிடப்பட்டுள்ளது.
    • கிழங்கு ஆலைகளில் மரவள்ளி கிழங்கில் இருந்து ஜவ்வரிசி மற்றும் கிழங்கு மாவு தயார் செய்யப்படுகிறது.

    பரமத்திவேலூர்:

    பரமத்திவேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளான எஸ்.வாழவந்தி, பெரியகரசபாளையம், செங்கப்பள்ளி, பரமத்தி, பொத்தனூர், கூடச்சேரி, கபிலர்மலை, சின்னமருதூர், சோழசிராமணி, பெருங்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மரவள்ளி கிழங்கு பயிரிடப்பட்டுள்ளது.

    கிழங்கு ஆலைகள்

    இப்பகுதிகளில் விளையும் மரவள்ளி கிழங்குகளை வியாபாரிகள் வாங்கிச் சென்று புதன்சந்தை, புதுச்சத்திரம், மின்னாம்பள்ளி, மலவேப்பங் கொட்டை, சேலம் மாவட்டம் ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கிழங்கு ஆலைகளுக்கு அனுப்பி வருகின்றனர்.

    கிழங்கு ஆலைகளில் மரவள்ளி கிழங்கில் இருந்து ஜவ்வரிசி மற்றும் கிழங்கு மாவு தயார் செய்யப்படுகிறது. மரவள்ளி கிழங்குகளை வாங்கும் ஆலை உரிமையாளர்கள் மரவள்ளி கிழங்கில் உள்ள மாவுச்சத்து மற்றும் புள்ளிகள் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்கின்றனர்.

    ரூ.1000 சரிவு

    கடந்த வாரம் இந்த மரவள்ளிகிழங்கு டன் ஒன்று ரூ.13 ஆயிரத்திற்கு விற்பனையானது. தற்பொழுது டன் ஒன்றுக்கு ரூ.1000 வரை சரிவடைந்து ரூ.12 ஆயிரத்திற்கு விற்பனையாகிறது.

    சிப்ஸ் கிழங்கு

    அதுபோல் சிப்ஸ் தயாரிக்கும் மரவள்ளி கிழங்கு டன் ஒன்று கடந்த வாரம் டன் ஒன்று ரூ.13 ஆயிரத்திற்கு விற்பனையானது. தற்போது டன் ஒன்றுக்கு ரூ. 500 வரை உயர்ந்து டன் ஒன்று ரூ.13 ஆயிரத்து 500-க்கு விற்பனையாகிறது. மரவள்ளி கிழங்கு விலை குறைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    • தினசரி அதிகாலை 5 மணி முதல் 10 மணிவரை, நூற்றுக்கணக் கான விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் விளைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை இங்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர்.
    • தமிழகத்தில் மற்ற இடங்களில் உள்ள விலை நிலவரத்தை அனுசரித்து காய்கறி மற்றும் பழங்கள் விலையை உழவர் சந்தை அதிகாரிகள் நிர்ணயம் செய்து அறிவிக்கின்றனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் நகரில், கோட்டை ரோட்டில், உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. தினசரி அதி காலை 5 மணி முதல் 10 மணிவரை, நூற்றுக்கணக் கான விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் விளைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை இங்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர்.

    தமிழகத்தில் மற்ற இடங்களில் உள்ள விலை நிலவரத்தை அனுசரித்து காய்கறி மற்றும் பழங்கள் விலையை உழவர் சந்தை அதிகாரிகள் நிர்ணயம் செய்து அறிவிக்கின்றனர். அந்த விலைக்கு விவசாயி கள் விற்பனை செய்கின்ற னர். நாமக்கல் உழவர் சந்தையில் இன்று காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்:

    கத்தரி ஒரு கிலோ ரூ.40 முதல் 60, தக்காளி ரூ.80 முதல் 90, வெண்டை ரூ.28 முதல் 32, அவரை ரூ.40 முதல் 70, கொத்தவரை ரூ.40, முருங்கைக்காய் ரூ.50, முள்ளங்கி ரூ.36, புடல் ரூ.28 முதல் 32, பாகல் ரூ.50 முதல் 70, பீர்க்கன் ரூ.40 முதல் 56, வாழைக்காய் ரூ.24, வாழைப்பூ (1) ரூ.7 முதல் 10, வாழைத்தண்டு (1) ரூ.5 முதல் 10, பரங்கிக்காய் ரூ.25, பூசணி ரூ.20, சுரைக்காய் (1) ரூ.10 முதல் 15, மாங்காய் ரூ.20, தேங்காய் ரூ.25, எலுமிச்சை ரூ.50, கோவக்காய் ரூ.40, கெடாரங்காய் ரூ.30, சி.வெங்காயம் ரூ.50 முதல் 70, பெ.வெங்காயம் ரூ.25 முதல் 27, கீரை ரூ.30, பீன்ஸ் ரூ.70 முதல் 90, கேரட் ரூ.60 முதல் 64, பீட்ரூட் ரூ.40 முதல் 50, உருளைக்கிழங்கு ரூ.25 முதல் 27, சவ்சவ் ரூ.28, முட்டைகோஸ் ரூ.16 முதல் 20, காளிபிளவர் ரூ.15 முதல் 30.

    குடைமிளகாய் ரூ.50, கொய்யா ரூ.30 முதல் 40, மலைவாழைப்பழம் ரூ.50, பச்சை பழம் ரூ.25, கற்பூர வள்ளி ரூ.50, ரஸ்தாளி ரூ.30, செவ்வாழை ரூ.50, பூவன் ரூ.20, இளநீர் ரூ.15 முதல் 25, பலாப்பழம் ரூ.30, கறிவேப்பிலை ரூ.50, மல்லிதழை ரூ.50, புதினா ரூ.30, இஞ்சி ரூ.300, பூண்டு ரூ.50, பச்சை மிளகாய் ரூ.60 முதல் 80, வாழை இலை ரூ.30, மரவள்ளிக்கிழங்கு ரூ.30, மக்காச்சோளம் ரூ. 30.

    வெள்ளரிக்காய் ரூ.20 முதல் 70, சேனைக்கிழங்கு ரூ. 60, கருணைக்கிழங்கு ரூ.50, பப்பாளி ரூ.25, நூல்கோல் ரூ.32 முதல் 36, பச்சை பட்டாணி ரூ.70, நிலக்கடலை ரூ.50, சர்க்கரைவள்ளிக்கிழங்கு ரூ.50, மாம்பழம் ரூ.60, கொலுமிச்சை ரூ.30, சப்போட்டா ரூ.40, தர்பூசணி ரூ. 20, விலாம்பழம் ரூ.40.

    • நாமக்கல் மாவட்டம பரமத்திவேலூரில் ஞாயிற்றுக்கிழமை தோறும் நாட்டுக்கோழி சந்தை நடைபெற்று வருகிறது.
    • பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான நாட்டுக் கோழிகளை விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கொண்டு வருகின்றனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம பரமத்திவேலூரில் ஞாயிற்றுக்கிழமை தோறும் நாட்டுக்கோழி சந்தை நடைபெற்று வருகிறது. இந்த சந்தைக்கு பரமத்தி வேலூர், மோகனூர், கரூர், பாளையம், நாமக்கல், ஜேடர்பாளையம், சோழசிராமணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான நாட்டுக் கோழிகளை விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கொண்டு வருகின்றனர்.

    இங்கு விற்பனைக்கு கொண்டு வரப்படும் நாட்டுக் கோழிகளுக்கு நல்ல வரவேற்பு இருப்பதால் நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் வந்திருந்து நாட்டு கோழிகளை வாங்கிச் செல்கின்றனர்.

    நேற்று நடைபெற்ற சந்தைக்கு பெருவடை, கீரி, கடகநாத், அசில், மயில், காகம், கருங்கண் கருங்காலி, கிரிராஜா உள்ளிட்ட பல்வேறு வகையான நாட்டுக்கோழிகளை விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கொண்டு வந்திருந்தனர்.

    கடந்த வாரம், தரமான நாட்டுக் கோழிகள் கிலோ ஒன்று ரூ.400 வரையிலும், பண்ணைகளில் வளர்க்கப் படும் நாட்டுக் கோழிகள் கிலோ ரூ.300 வரையிலும் விற்பனையானது.

    நேற்று நடைபெற்ற ஏலத்தில் நாட்டுக்கோழிகள் கிலோ ரூ.350 வரையிலும், பண்ணை நாட்டுக்கோழிகள் ரூ.250 வரையிலும் விற்பனையானது. சண்டைக்கோழிகள் ரூ.2 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரம் வரை விற்பனையானது.

    வரத்து அதிகரித்ததால் நாட்டுக்கோழிகள் விலை சரிவடைந்ததாக வியா பாரிகள் தெரிவித்தனர்.

    • நூற்றுக்கணக்கான ஏக்கரில் வெள்ளைக்கொடி வெற்றிலை, கற்பூரி வெற்றிலை போன்ற வெற்றிலைகளை பயிர் செய்துள்ளனர்.
    • வெற்றிலை தினசரி ஏல மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர், பொத்த னூர் , பாண்டமங்கலம், அண்ணாநகர், வெங்கரை, நன்செய் இடையாறு, பாலப்பட்டி, மோகனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதி களில் விவசாயிகள் நூற்றுக் கணக்கான ஏக்கரில் வெள்ளைக்கொடி வெற்றிலை, கற்பூரி வெற்றிலை போன்ற வெற்றிலைகளை பயிர் செய்துள்ளனர். வெற்றிலை பறிக்கும் தருவாய்க்கு வரும்போது கூலி ஆட்கள் மூலம் வெற்றிலைகளை பறித்து 100 வெற்றிலைகள் கொண்ட ஒரு கவுளியாகவும், பின்னர் 104 கவுளி கொண்ட ஒரு சுமையாகவும் கட்டு கின்றனர்.

    பின்னர் உள்ளுர் பகுதி களுக்கு வரும் வியாபாரி களுக்கும் , பரமத்திவேலூர், பொத்தனூர், பாண்டமங் கலம் பகுதிகளில் செயல்பட்டு வரும் தனியார் வெற்றிலை மண்டிகளுக்கும், பரமத்தி வேலூர் -கரூர் செல்லும் பழைய பைபாஸ் சாலையில் உள்ள வெற்றிலை தினசரி ஏல மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.

    வெற்றிலை சுமைகளை வாங்கிச் செல்வதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வியாபாரிகள் வந்து இருந்து தங்களுக்கு கட்டுப்படியாகும் விலைக்கு வெற்றிலை சுமைகளை வாங்கி லாரிகள் மூலம் தமிழ்நாட்டில் உள்ள ஈரோடு, கோவை, நீலகிரி, திருப்பூர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, நாமக்கல், கரூர், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்திரபிரதேசம், உத்தராஞ்சல் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும், மும்பை போன்ற பெரு நகரங்களுக்கும் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கின் றனர்.

    இந்நிலையில் கடந்த வாரம் வெள்ளைக்கொடி வெற்றிலை இளம்பயிர் மார் 104 கவுளி கொண்ட சுமை ஒன்று ரூ.9 ஆயிரத்திற்கும், கற்பூரி வெற்றிலை இளம்பயிர் மார் சுமை ஒன்று ரூ.6 ஆயிரத்திற்கும், வெள்ளைக் கொடி வெற்றிலை முதியம்பயிர் மார் சுமை ஒன்று ரூ.4500-க்கும், கற்பூரி வெற்றிலை முதியம் பயிர் மார் ரூ.3 ஆயிரத்து 500-க்கும் விற்பனையானது.

    தற்பொழுது வெள்ளைக்கொடி வெற்றிலை இளம்பயிர் மார் 104 கவுளி கொண்ட சுமை ஒன்று ரூ.8 ஆயிரத்திற்கும் ,கற்பூரி வெற்றிலை இளம்பயிர் மார் சுமை ஒன்று ரூ.4,500-க்கும், வெள்ளைக்கொடி வெற்றிலை முதியம் பயிர் மார் சுமை ஒன்று ரூ.4 ஆயிரத்திற்கும், கற்பூரி வெற்றிலை முதியம் பயிர் மார் சுமை ஒன்று 2 ஆயிரத்து 500-க்கும் விற்பனையாகிறது. வெற்றிலை வரத்து அதிகரிப்பால் வெற்றிலை விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    • இந்தியாவில் மகாராஷ்டிரா, குஜராத், மத்தியப் பிரதேசம், உத்திரப் பிரதேசம், ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பல்வேறு வகையான சமையல் பொருட்கள் விளைவிக்கப்படுகின்றன.
    • ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை சீசன் நாட்களில் வட மாநிலங்களில் இருந்து புதிய மளிகைப்பொருட்கள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படும்.

    அன்னதானப்பட்டி:

    பொங்கல் பண்டிகைக்கு பிறகு புதிய மளிகைப் பொருட்கள் வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால், வட மாநிலங்களில் இருப்பில் உள்ள மளிகைப் பொருட்களை வியாபாரிகள் வெளியூர்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர்.

    மளிகை பொருட்கள்

    இந்தியாவில் மகாராஷ்டிரா, குஜராத், மத்தியப் பிரதேசம், உத்திரப் பிரதேசம், ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் துவரம் பருப்பு, கொண்டைக் கடலை, பச்சைப்பயறு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கொள்ளு, சீரகம், மிளகு, கசகசா, சோம்பு, வெந்தயம், இலவங்கப்பட்டை, கடுகு உள்ளிட்ட பல்வேறு வகையான சமையல் பொருட்கள் விளைவிக்கப்படுகின்றன. இங்கு உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

    அதன் படி ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை சீசன் நாட்களில் வட மாநிலங்களில் இருந்து புதிய மளிகைப்பொருட்கள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படும். அதிலும் குறிப்பாக தமிழகத்தில் சென்னை, கோவைக்கு அடுத்தப்படியாக சேலத்திற்கு தான் அதிகளவில் மளிகைப்பொருட்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படும். பொங்கல் பண்டிகையையொட்டி வட மாநிலங்களில் இருந்து புதிய மளிகைப்பொருட்கள் விற்பனைக்கு வர இருப்பதால், தற்போது கை இருப்பில் உள்ள பழைய பொருட்களை கடந்த சில நாட்களாக மொத்த வியாபாரிகள் அனைத்து பகுதிகளுக்கும் அனுப்பி வைத்து வருகின்றனர்.

    விளைச்சல் அதிகரிப்பு

    ஒவ்வொரு ஆண்டும் வட மாநிலங்களில் இருந்து பொங்கல் பண்டிகைக்கு பிறகு புதிய மளிகைப்பொருட்கள் விற்பனைக்கு வருவது வழக்கம். சேலம் லீபஜார், செவ்வாய்பேட்டை, பால்மார்க்கெட், நெத்திமேடு, அன்னதானப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 1000- க்கும் மேற்பட்ட மொத்த, சில்லறை மளிகைக் கடைகள் உள்ளன. இந்த கடைகளுக்கு சீசன் சமயத்தில் பல்லாயிரக்கணக்கான டன் வரை மளிகைப்பொருட்கள் விற்பனைக்கு வரும். இங்கு விற்பனைக்கு வரும் பொருட்களை மொத்த விலையில் கொள்முதல் செய்யும் வியாபாரிகள், அதனை சில்லறை விற்பனையில் விற்பனை செய்வார்கள்.

    அந்த வகையில் சேலம் லீபஜார், செவ்வாய்பேட்டை மார்க்கெட் பகுதிகளில் இருந்து ஓமலூர்,மேச்சேரி, மேட்டூர், கொளத்தூர், ஆத்தூர், தலைவாசல், கள்ளக்குறிச்சி, மேட்டூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், ஈரோடு, திருநெல்வேலி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் நகரங்களுக்கு மளிகைப் பொருட்கள் சில்லறை விலையில் அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த வருடம் வட மாநிலங்களில் அனைத்து பகுதிகளிலும் நல்ல மழை பெய்து உள்ளதால், வருகிற 2023- ம் வருடம் அனைத்து பொருட்களும் விளைச்சல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக அங்குள்ள விவசாயிகள் தகவல் தெரிவித்தனர்.

    விலை சரிவு

    இதன் காரணமாக வருகிற பொங்கல் பண்டிகைக்கு பிறகு வட மாநிலங்களில் இருந்து புதிய மளிகைப்பொருட்கள் வரத்து வழக்கத்தைவிட அதிகளவில் இருக்கும்‌. பொங்கல் பண்டிகைக்கு பிறகு புதிய மளிகைப்பொருட்களை அனுப்ப இருப்பதால், வட மாநிலங்களில் கைவசம் குடோன்களில் இருப்பில் வைத்திருக்கும் துவரம் பருப்பு, உளுத்தம்பருப்பு, கொண்டைக்கடலை உள்ளிட்ட பல்வேறு வகையான மளிகைப் பொருட்களை அங்குள்ள வியாபாரிகள் கடந்த சில வாரங்களாக விற்பனைக்கு அனுப்பி வைத்து வருகின்றனர். இதன் காரணமாக பருப்பு வகைகள் உள்ளிட்ட பல்வேறு மளிகைப் பொருட்களின் விலை கடந்த மாதத்தை விட இந்த மாதம் 20 சதவீதம் வரை குறைந்துள்ளது.

    இதனால் பொது மக்கள், குறிப்பாக பெண்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சேலம் மார்க்கெட்டுகளில் தினமும் சில்லறை வியாபாரிகள் அதிகளவில் மளிகைப் பொருட்கள் வாங்கிச் சென்று அவர்கள் இடங்களில் விற்பனை செய்து வருகின்றனர். அதே சமயம் பெண்கள் வீட்டுக்குத் தேவையான மளிகைப் பொருட்களை வருடம் முழுவதும் தேவைப்படும் அளவிற்கு மொத்தமாக வாங்கிச் சென்று இருப்பு வைத்து கொள்கின்றனர். இதனால் சேலம் செவ்வாய்பேட்டை, லீபஜார் மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் அடுத்த ஒரு மாதம் மளிகைப் பொருட்கள் விற்பனை பரபரப்பாக நடக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

    ×