search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலத்தில் மளிகைப்பொருட்கள் விலை சரிவு
    X

    சேலத்தில் மளிகைப்பொருட்கள் விலை சரிவு

    • இந்தியாவில் மகாராஷ்டிரா, குஜராத், மத்தியப் பிரதேசம், உத்திரப் பிரதேசம், ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பல்வேறு வகையான சமையல் பொருட்கள் விளைவிக்கப்படுகின்றன.
    • ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை சீசன் நாட்களில் வட மாநிலங்களில் இருந்து புதிய மளிகைப்பொருட்கள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படும்.

    அன்னதானப்பட்டி:

    பொங்கல் பண்டிகைக்கு பிறகு புதிய மளிகைப் பொருட்கள் வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால், வட மாநிலங்களில் இருப்பில் உள்ள மளிகைப் பொருட்களை வியாபாரிகள் வெளியூர்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர்.

    மளிகை பொருட்கள்

    இந்தியாவில் மகாராஷ்டிரா, குஜராத், மத்தியப் பிரதேசம், உத்திரப் பிரதேசம், ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் துவரம் பருப்பு, கொண்டைக் கடலை, பச்சைப்பயறு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கொள்ளு, சீரகம், மிளகு, கசகசா, சோம்பு, வெந்தயம், இலவங்கப்பட்டை, கடுகு உள்ளிட்ட பல்வேறு வகையான சமையல் பொருட்கள் விளைவிக்கப்படுகின்றன. இங்கு உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

    அதன் படி ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை சீசன் நாட்களில் வட மாநிலங்களில் இருந்து புதிய மளிகைப்பொருட்கள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படும். அதிலும் குறிப்பாக தமிழகத்தில் சென்னை, கோவைக்கு அடுத்தப்படியாக சேலத்திற்கு தான் அதிகளவில் மளிகைப்பொருட்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படும். பொங்கல் பண்டிகையையொட்டி வட மாநிலங்களில் இருந்து புதிய மளிகைப்பொருட்கள் விற்பனைக்கு வர இருப்பதால், தற்போது கை இருப்பில் உள்ள பழைய பொருட்களை கடந்த சில நாட்களாக மொத்த வியாபாரிகள் அனைத்து பகுதிகளுக்கும் அனுப்பி வைத்து வருகின்றனர்.

    விளைச்சல் அதிகரிப்பு

    ஒவ்வொரு ஆண்டும் வட மாநிலங்களில் இருந்து பொங்கல் பண்டிகைக்கு பிறகு புதிய மளிகைப்பொருட்கள் விற்பனைக்கு வருவது வழக்கம். சேலம் லீபஜார், செவ்வாய்பேட்டை, பால்மார்க்கெட், நெத்திமேடு, அன்னதானப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 1000- க்கும் மேற்பட்ட மொத்த, சில்லறை மளிகைக் கடைகள் உள்ளன. இந்த கடைகளுக்கு சீசன் சமயத்தில் பல்லாயிரக்கணக்கான டன் வரை மளிகைப்பொருட்கள் விற்பனைக்கு வரும். இங்கு விற்பனைக்கு வரும் பொருட்களை மொத்த விலையில் கொள்முதல் செய்யும் வியாபாரிகள், அதனை சில்லறை விற்பனையில் விற்பனை செய்வார்கள்.

    அந்த வகையில் சேலம் லீபஜார், செவ்வாய்பேட்டை மார்க்கெட் பகுதிகளில் இருந்து ஓமலூர்,மேச்சேரி, மேட்டூர், கொளத்தூர், ஆத்தூர், தலைவாசல், கள்ளக்குறிச்சி, மேட்டூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், ஈரோடு, திருநெல்வேலி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் நகரங்களுக்கு மளிகைப் பொருட்கள் சில்லறை விலையில் அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த வருடம் வட மாநிலங்களில் அனைத்து பகுதிகளிலும் நல்ல மழை பெய்து உள்ளதால், வருகிற 2023- ம் வருடம் அனைத்து பொருட்களும் விளைச்சல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக அங்குள்ள விவசாயிகள் தகவல் தெரிவித்தனர்.

    விலை சரிவு

    இதன் காரணமாக வருகிற பொங்கல் பண்டிகைக்கு பிறகு வட மாநிலங்களில் இருந்து புதிய மளிகைப்பொருட்கள் வரத்து வழக்கத்தைவிட அதிகளவில் இருக்கும்‌. பொங்கல் பண்டிகைக்கு பிறகு புதிய மளிகைப்பொருட்களை அனுப்ப இருப்பதால், வட மாநிலங்களில் கைவசம் குடோன்களில் இருப்பில் வைத்திருக்கும் துவரம் பருப்பு, உளுத்தம்பருப்பு, கொண்டைக்கடலை உள்ளிட்ட பல்வேறு வகையான மளிகைப் பொருட்களை அங்குள்ள வியாபாரிகள் கடந்த சில வாரங்களாக விற்பனைக்கு அனுப்பி வைத்து வருகின்றனர். இதன் காரணமாக பருப்பு வகைகள் உள்ளிட்ட பல்வேறு மளிகைப் பொருட்களின் விலை கடந்த மாதத்தை விட இந்த மாதம் 20 சதவீதம் வரை குறைந்துள்ளது.

    இதனால் பொது மக்கள், குறிப்பாக பெண்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சேலம் மார்க்கெட்டுகளில் தினமும் சில்லறை வியாபாரிகள் அதிகளவில் மளிகைப் பொருட்கள் வாங்கிச் சென்று அவர்கள் இடங்களில் விற்பனை செய்து வருகின்றனர். அதே சமயம் பெண்கள் வீட்டுக்குத் தேவையான மளிகைப் பொருட்களை வருடம் முழுவதும் தேவைப்படும் அளவிற்கு மொத்தமாக வாங்கிச் சென்று இருப்பு வைத்து கொள்கின்றனர். இதனால் சேலம் செவ்வாய்பேட்டை, லீபஜார் மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் அடுத்த ஒரு மாதம் மளிகைப் பொருட்கள் விற்பனை பரபரப்பாக நடக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×