search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "arrest. theft"

    • சந்தேகம் அடைந்த பொதுமக்கள் அந்த வாலிபர் மற்றும் அவருடன் தங்கியிருந்த 5பேரை பிடித்து விசாரித்தனர்.
    • கைதான 10 பேரையும் போலீசார் தாராபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே சத்திரம், சின்னபுத்தூர், கோவிந்தாபுரம் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இப்பகுதிகளில் மின்சாரம் தயாரிப்பதற்கான தனியார் காற்றாலைகள் ஏராளமான அளவில் உள்ளன. சில இடங்களில் பாதுகாப்பு இல்லாத நிலையில் காற்றாலைகளில் இருந்து கேபிள் வயர்கள் மற்றும் எலக்ட்ரானிக் பாகங்களை அவ்வப்போது மர்மநபர்கள் திருடி சென்று வந்தனர். பல மாதமாக தொடர் திருட்டு நடந்து வரும் நிலையில் அருகில் உள்ள கிராமப் பகுதிகளில் உள்ள தோட்ட ங்கள் மற்றும் வீடுகளில் மின்வயர்கள், இரும்பு பொருட்கள் திருடப்பட்டு வந்தது.

    இதனைத்தொடர்ந்து கிராமமக்கள் தங்களுக்குள் கண்காணிப்பு குழு ஒன்றை அமைத்து காற்றாலை மற்றும் தோட்டம், வீடுகளில் கேபிள் வயர்கள், இரும்பு பொருட்களை திருடும் மர்மநபர்களை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    இந்தநிலையில் சத்திரம் கிராமத்தில் வாலிபர் ஒருவர் தான் வாடகைக்கு குடியிருந்த வீட்டின் முன் கேபிள் வயர்களை போட்டு தீயிட்டு கொளுத்தி அதில் இருந்து செம்பு கம்பிகளை சுருட்டி வைத்து கொண்டிருந்தார்.

    சந்தேகம் அடைந்த பொதுமக்கள் அந்த வாலிபர் மற்றும் அவருடன் தங்கியிருந்த 5பேரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த கிராமமக்கள் 6 பேரையும் அங்குள்ள மரத்தில் கட்டி வைத்து உண்மையை தெரிந்து கொள்ள தர்ம அடி கொடுத்தனர்.

    அப்போது அவர்கள்தான் தாராபுரம் பகுதியில் உள்ள காற்றாலைகள் மற்றும் தோட்டங்களில் மின்வயர்களை திருடியது தெரியவந்தது. மேலும் அவர்களுடன் தங்கியிருந்த மேலும் 4 பேர் பொதுமக்கள் பிடியில் இருந்து தப்பியோடினர். அவர்களையும் பொதுமக்கள் விரட்டி பிடித்து தர்ம அடி கொடுத்தனர். இதில் 10 பேருக்கும் உடலில் காயம் ஏற்பட்டது.

    இது குறித்த தகவல் அறிந்ததும் தாராபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் 10 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் 10 பேரையும் கைது செய்து விசாரித்தனர்.

    விசாரணையில் அவர்கள் நெல்லை மாவட்டம் ஆயங்குளத்தை சேர்ந்த கண்ணன் (வயது 36) மற்றும் திசையன்விளையை சேர்ந்த பாலாஜி (20), சுதாகர் (22), சக்திமுருகன் (25), கதிரேசன் (25), கோபிகிருஷ்ணன் (27), சக்திவேல் (26), செல்வன் (28), ராகுல் (26), முத்துசெல்வன் (26) என்பது தெரியவந்தது. கைதான 10 பேரையும் போலீசார் தாராபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    கைதான ஆயங்குளத்தை சேர்ந்த கண்ணன் தாராபுரம் சத்திரம் பகுதியில் பழைய இரும்பு கடை வைத்துள்ளார். அவருடன் மற்ற 9 பேரும் வேலை செய்து வந்துள்ளனர். பழைய இரும்பு பொருட்களை பணம் கொடுத்து வாங்கி வந்த அவர்கள், லோடு ஆட்டோவில் தாராபுரம் பகுதிக்குட்பட்ட பகுதிகளுக்கு சென்று ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்து பழைய இரும்பு பொருட்களை வாங்கி வந்துள்ளனர்.

    அப்போது ஆளில்லாத காற்றாலைகள், தோட்டங்கள், வீடுகள் ஆகியவற்றை நோட்டமிடுவதுடன் இரவு நேரங்களில் லோடு ஆட்டோவில் சென்று அங்குள்ள இரும்பு பொருட்களை திருடி சென்றுள்ளனர். பின்னர் அதில் கிடைக்கும் காப்பர் கம்பிகளை பொள்ளாச்சியில் உள்ள ஒரு வியாபாரிக்கு விற்பனை செய்து வந்துள்ளனர். இதற்காக அவர்கள் தாராபுரத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் விவசாயிகள் வளர்க்கும் ஆட்டுக்குட்டிகளை திருடி கறிக்கடைகளுக்கு விற்பனை செய்தும் வந்துள்ளனர். கடந்த வாரம் ஆடுகளின் வாயில் துணியை வைத்து அடைத்து 50க்கும் மேற்பட்ட ஆடுகளை திருடியுள்ளனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணை முடிவில் மேலும் பரபரப்பு தகவல்கள் வெளியாக வாய்ப்புள்ளது.

    ×