என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • முதல் போட்டியில், சென்னை- பெங்களூரு அணிகள் மோதுகின்றன.
    • கடந்த ஆண்டு நேரடியாக டிக்கெட் வாங்கி, கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை.

    இந்தியன் பிரீமியர் லீக் 2024 தொடர் இம்மாதம் 22-ம் தேதி துவங்க இருக்கிறது. இந்த சீசனின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதவுள்ளன.

    இதற்காக சென்னை அணி வீரர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதனையொட்டி அணியின் கேப்டன் மகேந்திர சிங் டோனி சென்னை வந்தடைந்தார்.

    இந்நிலையில், சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற உள்ள ஐபிஎல் போட்டிகளுக்கு ஆன்லைனில் மட்டுமே டிக்கெட் விற்பனை செய்ய சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

    சேப்பாக்கத்தில் 22ம் தேதி நடைபெற உள்ள முதல் போட்டியில், சென்னை- பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

    கடந்த ஆண்டு நேரடியாக டிக்கெட் வாங்கி, கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்றதாக சர்ச்சை எழுந்தது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பிரதமர், தமிழ்நாடு மேல் பாசமிருப்பது போல் நடிப்பதா?
    • பொய்களால் எங்களை ஒருபோதும் வீழ்த்த முடியாது.

    சென்னை, தூத்துக்குடியில் வெள்ளம் வந்தபோது பாதிக்கப்பட்ட மக்களை பார்க்க வராத பிரதமர், இப்போது அடிக்கடி வருகிறாரே அதற்கு என்ன காரணம் ? என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

    மேலும், பிரதமர் மோடியின் சுற்றுப்பயணங்கள் வெறும் வெற்றுப் பயணங்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

    இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:-

    தேர்தல் காலங்களில் மட்டும், நம்மை எட்டிப் பார்க்கும் பிரதமரின் சுற்றுப்பயணங்கள் - வெற்றுப்பயணங்களே!

    பேரிடர் காலங்களில் கூட தமிழ்நாட்டைக் கண்டுகொள்ளாமல் கைவிட்ட மாண்புமிகு பிரதமர் தற்போது வெறும் கையில் முழம் போடலாமா?

    நிதிதான் மாநிலங்களின் ஆக்சிஜன். அதையே நிறுத்திவிட்டுத் தமிழ்நாடு மேல் பாசமிருப்பது போல் நடிப்பதா?

    ஜல்ஜீவன், பிரதமர் வீடு வழங்கும் திட்டம் என பல்வேறு திட்டங்களில் மாநில அரசின் பங்கே அதிகமாக இருக்க, அதில் பிரதமர் தனது பெயரை ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்வது நியாயமா?

    பொய்களால் எங்களை ஒருபோதும் வீழ்த்த முடியாது.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சில நாட்களுக்கு முன் ஆரம்பித்த கட்சிக்கு உறுப்பினராக சேர்க்க இணையதளமே பிளாக் ஆகிவிட்டதாக கூறுகிறார்கள்
    • தமிழகத்தில் கூத்தாடிகளை கொண்டாடுகிற நிலையை உடைக்க வேண்டும்

    சென்னை அடையாறில் முத்தமிழ் பேரவையில் எழுத்தாளர் அஸ்வகோஷ் (எ) இராசேந்திர சோழன் அவரின் நினைவேந்தல் மற்றும் படத்திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் கலந்து கொண்டார்.

    அந்நிகழ்ச்சியில் பேசிய வேல்முருகன், "சில நாட்களுக்கு முன் ஆரம்பித்த கட்சியின் பெயர் கூட எனக்கு தெரியாது, ஆனால் அந்த கட்சிக்கு உறுப்பினராக சேர்க்க இணையதளமே பிளாக் ஆகிவிட்டதாக கூறுகிறார்கள். 50 லட்சம் பேர் அக்கட்சியில் இணைந்துள்ளதாக ஊடகத்தில் செய்தி வெளியிட்டு வருகிறார்கள்

    தமிழகத்தில் கூத்தாடிகளை கொண்டாடுகிற நிலையை உடைக்க வேண்டும். நான் பேசி சென்று விட்ட பிறகு விஜய் ரசிகர்கள் ஒருவேளை என்னை கல்லால் அடிக்க கூட வாய்ப்பு உண்டு என்று கூறியுள்ளார்.

    அண்மையில் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில் அந்த கட்சிகள் உறுப்பினர் ஆவதற்கு செயலி ஒன்றை அறிமுகப்படுத்தினார். அந்த செயலி மூலம் உறுப்பினர்கள் சேரலாம் என்று விஜய் அறிவித்த நிலையில் அந்த கட்சியில் 50 லட்சம் பேர் சேர்ந்து உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

    மேலும், தமிழக வாழ்வுரிமை கட்சி TVK என சுருக்கமாக அழைக்கப்பட்டு வந்தது. இந்த சூழ்நிலையில், நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக்கழகமும் TVK என அழைக்கப்படுகிறது. இதற்கு தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஏற்கனவே எனது கட்சியை TVK என அழைக்கும் நிலையில் விஜய் கட்சிக்கு எப்படி TVK என அழைக்கலாம் என தேர்தல் ஆணையத்தில் அவர் முறையிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தி.மு.க. ஆட்சியில் போதைப்பொருள் புழக்கம் கட்டுக்கடங்காத நிலைக்கு சென்றுவிட்டது.
    • தமிழ்நாட்டில் செய்யப்படும் பல்வேறு போதைப்பொருள் பறிமுதல்கள், மத்திய அமைப்புகளால்தான் செய்யப்படுகின்றன.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:-

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் இலங்கைக்கு கடத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த ரூ.110 கோடி மதிப்பிலான 100 கிலோ ஹசீஸ் என்ற போதைப்பொருளும், 874 கிலோ கஞ்சாவும் திருச்சி சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. இந்த தி.மு.க. ஆட்சியில் போதைப்பொருள் புழக்கம் கட்டுக்கடங்காத நிலைக்கு சென்றுவிட்டது.

    அ.தி.மு.க. ஆட்சியில் தனக்கு தும்மல் வந்தாலும் நான் பதவி விலக வேண்டும் என்று சொன்ன இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தற்போதைய சூழலைக் கருத்தில் கொண்டு தார்மீக பொறுப்பேற்று இன்னும் ராஜினாமா செய்யாதது ஏன்?

    அ.தி.மு.க. ஆட்சியில் தொடர்ந்து குரல் கொடுத்து, அரசின் கவனத்திற்கு பல்வேறு விஷயங்களைக் கொண்டு வந்த சமூகப் பொறுப்பாளர்கள் பலர், தற்போது தி.மு.க. ஆட்சியில் தமிழ்நாட்டு மக்கள் அனைவரையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ள இந்த போதைப்பொருள் விவகாரத்தில் மவுனமாக இருப்பது ஏன்? தமிழ்நாட்டில் செய்யப்படும் பல்வேறு போதைப்பொருள் பறிமுதல்கள், மத்திய அமைப்புகளால்தான் செய்யப்படுகின்றன. தமிழ்நாடு காவல்துறை துரிதமாக நடவடிக்கை எடுத்து போதைப்பொருட்கள் அற்ற தமிழ்நாடு என்ற நிலையை எட்டுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

    • கர்நாடக மாநில அ.தி. மு.க. செயலாளர் எஸ்.டி. குமார் விருப்ப மனு அளித்தார்.
    • 2-வது நாளாக நேர்காணலில் பங்கேற்க அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் கட்சி அலுவலகத்தில் குவிந்தனர்.

    சென்னை:

    அ.தி.மு.க. சார்பில் 40 தொகுதிகளுக்கும் விருப்ப மனு பெறப்பட்டு நேற்று 20 தொகுதிகளுக்கு நேர்காணல் நடந்தது. மீதமுள்ள 20 தொகுதிகளுக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று 2-வது நாளாக நடந்தது.

    கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விருப்ப மனு கொடுத்தவர்களிடம் நேரடியாக சில கேள்விகளை கேட்டார்.

    காலையில் பொள்ளாச்சி, திண்டுக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், கடலூர், சிதம்பரம் (தனி), மயிலாடுதுறை, நாகப்பட்டினம் (தனி), தஞ்சாவூர் ஆகிய தொகுதிகளுக்கு நடத்தினார். பிற்பகல் 2 மணி முதல் சிவகங்கை, தேனி, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி (தனி), திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய தொகுதிகளுக்கு நடத்தினார்.

    ஜெயலலிதா இருந்தவரை கர்நாடகாவில் சட்டப்பேரவை, பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. களம் கண்டு வந்தது. அவர் மறைவுக்கு பிறகு கர்நாடகாவில் அ.தி.மு.க. போட்டியிடவில்லை.


    அதே நேரத்தில் பெங்களூர், கோலார் தங்கவயல், சிவமொக்கா, பத்ராவதி, மைசூரு, மண்டியா, கோலார் போன்ற பகுதிகளில் அ.தி.மு.க.வுக்கு கணிசமான வாக்கு வங்கி உள்ளது.

    இதைப் பயன்படுத்தி தற்போது கர்நாடக அ.தி.மு.க.வினர், பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட சென்னையில் உள்ள அ.தி.மு.க. தலைமைக்கு வலியுறுத்தி வந்தனர்.

    கர்நாடக மாநில அ.தி. மு.க. செயலாளர் எஸ்.டி. குமார் விருப்ப மனு அளித்தார். பெங்களூரிவில் உள்ள 3 மக்களவை தொகுதிகளில் தமிழர்கள் பெருவாரியாக வாழ்ந்து வரும் மத்திய தொகுதியில் போட்டியிட அவர் விருப்ப மனு அளித்தார்.

    நேர்காணலை தொடர்ந்து கர்நாடகாவில் அ.தி.மு.க. போட்டியிடுமா? என்பது குறித்து பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பார் என்று தெரிகிறது.

    2-வது நாளாக நேர்காணலில் பங்கேற்க அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் கட்சி அலுவலகத்தில் குவிந்தனர். விருப்ப மனு கொடுத்தவர்கள் தவிர வேறு யாரையும் அலுவலகத்திற்குள் அனுமதிக்கவில்லை.

    • புத்தக வெளியீட்டு விழா நாகர்கோவிலில் நடைபெற்றது.
    • இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் எழுதிய "மன் கீ பாத். மனதின் குரலுக்கு ஓர் இந்திய குடிமகனின் 108 கேள்விகள்" எனும் புத்தக வெளியீட்டு விழா நாகர்கோவிலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டார்.


    மாநில திட்டக்குழு துணை தலைவர் ஜெய ரஞ்சன் புத்தகத்தை வெளியிட, தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் பெற்று கொண்டார். நிகழ்ச்சியில் காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் ராஜேஷ்குமார் உட்பட இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • புதுப்பட்டு கிராமத்தில் மிகவும் பழமையான பிரசித்தி பெற்ற ஆனந்த வல்லி அம்பிகா சமேத ஆபத்சகாயேஸ்வரர் கோவில் உள்ளது.
    • மூலவர் ஆபத்சகாயேஸ்வரருக்கு பால், தயிர், பழங்கள், இளநீர் ஆகியவற்றால் நடைபெற்ற சிறப்பு அபிஷேகத்தை கவர்னர் தரையில் அமர்ந்தபடி பயபக்தியுடன் கண்டு களித்தார்.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகில் புதுப்பட்டு கிராமத்தில் மிகவும் பழமையான பிரசித்தி பெற்ற ஆனந்தவல்லி அம்பிகாசமேத ஆபத்சகாயேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் ராம பிரானும், அகத்திய மாமுனிவரும் வழிபட்ட கோவிலாகும். இக்கோவிலில் ஜார்க்கண்ட் மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் தரிசனம் செய்ய வந்தார்.

    கோவில் நிர்வாகி வி.ஆர்.சிவராமன் மற்றும் கிராம மக்கள் பெருந்திரளாக திரண்டு பூரண கும்பம் மரியாதையுடன் மேளதாளங்கள் முழங்க சிறப்பான வரவேற்பு அளித்தனர். வருவாய் துறை அதிகாரிகள், இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    இதனை தொடர்ந்து மூலவர் ஆபத்சகாயேஸ்வரருக்கு பால், தயிர், பழங்கள், இளநீர் ஆகியவற்றால் நடைபெற்ற சிறப்பு அபிஷேகத்தை கவர்னர் தரையில் அமர்ந்தபடி பயபக்தியுடன் கண்டு களித்தார். அதைத் தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது. இந்த கோவிலின் வரலாறு, சிறப்புகள் மற்றும் முக்கிய விவரங்கள் அடங்கிய இணையதளத்தை கவர்னர் தொடங்கி வைத்து அந்த இணையதளம் மூலம் கோவிலுக்கு நன்கொடை வழங்கினார். 3 மணி நேரம் இந்த கோவிலில் கவர்னர் இருந்தார். அர்ச்சனையும் செய்தார்.

    விவேகானந்தா பள்ளி மாணவிகள் 108 பேர் சிவனின் பெருமையை விளக்கும் நாட்டிய நடனம் ஆடினார்கள். தொடர்ந்து ருத்ர தாண்டவ நிகழ்ச்சியும் நடந்தது.

    • இன்னொரு அரசியல் பிரமுகருக்கு ரூ.1 கோடி பணம் கொடுத்ததாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
    • ஜாபர் சாதிக் சினிமா வட்டாரத்தில் தயாரிப்பாளராக வருவதற்கும் சிலர் முக்கிய காரணமாக இருந்துள்ளனர்.

    சென்னை:

    சூடோபெட்ரின் என்னும் போதைப்பொருளை வெளிநாடுகளுக்கு சட்ட விரோதமாக கடத்திய வழக்கில் திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக்கை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கடந்த 9-ந்தேதி டெல்லியில் கைது செய்தனர்.

    அவர் கடந்த 3 ஆண்டுகளில் ரூ.2 ஆயிரம் கோடி மதிப்புள்ள 3,500 கிலோ சூடோபெட்ரின் போதைப் பொருளை இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, மலேசியா ஆகிய நாடுகளுக்கு கடத்தியது தெரியவந்தது.

    இந்த நிலையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், ஜாபர் சாதிக் மீது சட்ட விரோத பண பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். அவர் மீது போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் பதிவு செய்துள்ள வழக்குகள் உள்பட பல முதல் தகவல் அறிக்கைகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு உள்ளன.

    இந்த வழக்கு தொடர்பாக தமிழ் மற்றும் இந்தி திரைப்பட பைனான்சியர்கள், சில முக்கிய பிரமுகர்கள் மற்றும் ஜாபர் சாதிக் பணம் கொடுத்த அரசியல் பிரமுகர்கள் ஆகியோரை கண்காணித்து வருவதாக போதைப்பொருள் தடுப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    போதைப்பொருள் கடத்தல் மூலம் ஜாபர் சாதிக் கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்துள்ளார். அந்த பணத்தை சினிமா, ஓட்டல் தொழில் ஆகியவற்றில் முதலீடு செய்ததும், அரசிய லில் உயர்ந்த இடத்துக்கு வருவதற்காக பணத்தை வாரி இறைத்துள்ளதும் தெரியவந்துள்ளது.

    ரூ.7 லட்சம் பணத்தை அவர் ஒரு அரசியல் பிரமுகருக்கு கொடுத்துள்ளார். அந்த பணத்தை ரூ.5 லட்சம், ரூ.2 லட்சம் என 2 தவணைகளில் கொடுத்துள்ளார்.

    மேலும் இன்னொரு அரசியல் பிரமுகருக்கு ரூ.1 கோடி பணம் கொடுத்ததாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. ஜாபர் சாதிக்கை அரசியலில் உயர்ந்த பதவிக்கு கொண்டு வருவதாக உறுதி அளித்து அந்த பிரமுகர் பணத்தை வாங்கியதாக கூறப்படுகிறது. அவர்கள் யார்-யார்? என்று அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.

    மேலும் ஜாபர் சாதிக் சினிமா வட்டாரத்தில் தயாரிப்பாளராக வருவதற்கும் சிலர் முக்கிய காரணமாக இருந்துள்ளனர். அதனால் அவர் ஒரே நேரத்தில் 3 படங்களை தயாரித்து இருக்கிறார். அவர் சினிமா தயாரிப்பாளராக மாற யார் யார் உறுதுணையாக இருந்துள்ளனர் என்கிற பட்டியலையும் அதிகாரிகள் சேகரித்து வருகிறார்கள்.

    திரையுலகில் ஜொலிக்க ஜாபர் சாதிக் பல வகைகளில் பணம் வாரி வழங்கியுள்ளார். தமிழ் சினிமா இயக்குனர் ஒருவரிடம் அவருக்கு நெருங்கிய தொடர்பு இருந்திருக்கிறது. மேலும் நடிகர்கள் சிலரும் ஜாபர் சாதிக்குடன் நெருங்கிய தொடர்பில் இருந்திருக்கிறார்கள். அவர்களுடன் விருந்து நிகழ்ச்சிகளிலும் ஜாபர் சாதிக் கலந்து கொண்டுள்ளார்.

    அடுத்த கட்டமாக போதைப்பொருள் கடத்தலில் ஜாபர் சாதிக்குடன் யார் யாருக்கு தொடர்பு இருக்கிறது என்பது தொடர்பாக மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.

    மேலும் அமலாக்கத்துறையினர் சட்டவிரோத பண பரிவர்த்தனை தொடர்பான வழக்குகளை முடுக்கி விட்டுள்ளனர்.

    ஜாபர் சாதிக்கின் வங்கி கணக்குகள், செல்போன் எண் ஆகியவற்றை வைத்து எந்தெந்த வகையில் பண பரிமாற்றம் செய்யப்பட்டு உள்ளது. முறைப்படி வங்கி கணக்கில் இருந்து பணம் எடுத்து கொடுக்கப்பட்டு உள்ளதா அல்லது போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த பணத்தை பதுக்கி வைத்து சட்ட விரோதமாக கொடுத்து உள்ளாரா என்ற கோணத்திலும் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். இதன் மூலம் பணம் வாங்கிய சினிமா பிரபலங்கள், அரசியல் பிரமுகர்களுக்கு விரைவில் சம்மன் அனுப்பி டெல்லிக்கு வரவழைத்து விசாரிக்க அமலாக்கத்துறை அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர். இதையடுத்து ஜாபர் சாதிக் விவகாரத்தில் அமலாக்கத்துறை விசாரணை அடுத்தடுத்த நாட்களில் இன்னும் வேகம் எடுக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • வருகிற பாராளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க. வெற்றிபெற நாம் கடுமையாக உழைப்போம்.
    • வருகிற தேர்தலிலும் மக்கள் மீது நம்பிக்கை வைத்து நாம் களம் காண்போம்.

    பெரியகுளம்:

    தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள எருமலைநாயக்கன் பட்டியில் நடந்த தே.மு.தி.க. பிரமுகர் இல்ல திருமண விழாவில் பங்கேற்று விஜய பிரபாகரன் பேசியதாவது:-

    தி.மு.க., அ.தி.மு.க. என இரண்டு கட்சிகளும் மாறி மாறி ஆட்சி அமைத்து பணத்தை சுரண்டி வளமாக வாழ்ந்து வருகின்றனர். வருகிற பாராளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க. வெற்றிபெற நாம் கடுமையாக உழைப்போம்.

    பொருளாதார வசதி இல்லாவிட்டாலும் தன்னம்பிக்கை மற்றும் தைரியத்துடன் தேர்தலை எதிர்கொள்வோம். அமைச்சர் உதயநிதியின் தாத்தா முன்னாள் முதல்வர் கருணாநிதி பல முறை முதலமைச்சராக இருந்தவர்.


    உதயநிதியின் தந்தை ஸ்டாலின் முன்னாள் மேயர், தற்போதைய முதலமைச்சராக உள்ளார். அண்ணாமலைக்கு பா.ஜ.க. கட்சி உள்ளது. ஆனால் இது போன்ற எந்த பின்புலமும் இல்லாமல் விஜயகாந்த் மக்களை நம்பியே தேர்தலை சந்தித்தார். அதே போல் வருகிற தேர்தலிலும் மக்கள் மீது நம்பிக்கை வைத்து நாம் களம் காண்போம். நாம் நல்லவர்களாக இருந்தால் மட்டும் போதாது. வல்லவர்களாகவும் இருக்க வேண்டும். தயவு செய்து ஓட்டுக்கு பணம் வாங்காதீர்கள். நான் தேனி அல்லது விருதுநகர் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளேன். கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து கொண்டு உள்ளது. தேனி தொகுதி கிடைத்தால் மகிழ்ச்சியடைவேன். யார் போட்டியிடுவார் என்பதை கட்சி தலைமை முடிவெடுக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    விஜய பிரபாகரன் மைக்கை எடுத்து பேசத் தொடங்கியதும் மின் தடை ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சியில் சிறிது நேரம் அருகில் இருந்த நிர்வாகிகளிடம் இந்த நேரத்தில் மின் தடை ஏற்படுமா எனக் கேட்டார். மின் தடை ஏற்படாது என்று தொண்டர்கள் தெரிவித்தனர். நான் பேச ஆரம்பிக்கும் நேரத்தை அறிந்து மின் இணைப்பை துண்டித்துள்ளனர். இது போன்ற பல இடையூறுகள் ஏற்படுத்தினாலும் நாம் சோர்ந்து விடக்கூடாது என தொண்டர்களை உற்சாகப்படுத்தினார்.

    • மாநகராட்சி ஊழியர்கள் போலீஸ் பாதுகாப்புடன் பிருந்தா வீதியில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.
    • கழிவுநீர் ஓடை செல்ல தடையாக இருக்கும் கான்கிரீட் தளங்களையும் இடித்து வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் இருந்து மணிக்கூண்டு வழியாக எல்லை மாரியம்மன் கோவில் வரை உள்ள சாலையில் இருபுறங்களிலும் ஆக்கிரமிப்புகள் இருந்ததால் கடந்த 10 நாட்களுக்கு முன்பு மாநகராட்சி நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் இணைந்து ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றினர்.

    இதே போல் ஆர்.கே.வி. சாலையில் இருந்து மணிக்கூண்டு வரை இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இந்நிலையில் பன்னீர்செல்வம் பார்க் அருகில் உள்ள பிருந்தா வீதி, வேலா புக்ஸ் வீதி உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் ஜவுளி கடைகள், பர்னிச்சர் கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைகள் உள்ளன.

    இப்பகுதியில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளதால் சாலையில் வாகனங்கள் செல்வதில் மிகுந்த சிரமம் ஏற்படுகின்றது. இதையடுத்து இன்று மாநகராட்சி ஊழியர்கள் போலீஸ் பாதுகாப்புடன் பிருந்தா வீதியில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.

    கச்சேரி வீதி, முத்துரங்கம் வீதி, சிவா சண்முகம் வீதி, அண்ணாச்சி வீதி, நேதாஜி வீதி, மணிக்கூண்டு, கொங்கலம்மன் கோவில் போன்ற பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை இன்று ஈரோடு மாநகராட்சி துணை ஆணையாளர் பாஸ்கர் தலைமையில் மாநகராட்சி ஊழியர்கள் அகற்றி வருகின்றனர்.

    இதேபோல் கழிவுநீர் ஓடை செல்ல தடையாக இருக்கும் கான்கிரீட் தளங்களையும் இடித்து வருகின்றனர். 108 ஆம்புலன்ஸ் குழுவினர், தீயணைப்பு வீரர்களும் தயார் நிலையில் உடன் உள்ளனர். ஒருசில நாட்களுக்கு ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடரும் என்று மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • பாராளுமன்ற தேர்தல் சுதந்திரமாக, சுயேட்சையாக நடைபெறுவதற்கு வாய்ப்புகள் மிகமிக குறைவாக உள்ளன.
    • இந்திய ஜனநாயகத்தை மீட்பதற்கு இந்தியா கூட்டணியின் வெற்றியே உரிய தீர்வாக அமைய முடியும்.

    சென்னை:

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    பிரதமராக நரேந்திர மோடி பதவி யேற்றது முதல் அரசமைப்புச் சட்டத்தால் உருவாக்கப்பட்ட சுதந்திரமான அமைப்புகள் சுயேட்சையாக செயல்பட முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது.

    தேர்தல் தேதி ஒருசில நாட்களில் அறிவிக்கப்பட இருக்கிற நிலையில், எதிர்பாராத விதமாக தேர்தல் ஆணையர் அருண் கோயல் பதவி விலகியிருப்பது நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளது.

    பாராளுமன்ற தேர்தல் சுதந்திரமாக, சுயேட்சையாக நடைபெறுவதற்கு வாய்ப்புகள் மிகமிக குறைவாக உள்ளன.


    இன்றைய தேர்தல் நடைமுறை என்பது சமநிலைத்தன்மை இல்லாததாக இருக்கிறது. இந்திய தேர்தல் ஆணையம் மோடியின் கைப்பாவையாக இருப்பதால் தான் வருகிற மக்களவை தேர்தலில் பா.ஜ.க. 370 இடங்களையும், கூட்டணியோடு 400 இடங்களையும் கைப்பற்றுவோம் என்று பிரதமர் மோடி உறுதியாக கூறுகிறார். இதன்மூலம், ஜனநாயகத்தில் ஒரு சர்வாதிகாரி போல தேர்தல் ஆணையத்தை தனது கைப்பிடிக்குள் வைத்துக் கொண்டு இந்திய ஜனநாயகத்தின் குரல் வளையை நெறித்துக் கொண்டிருக்கிறார். இதிலிருந்து இந்திய ஜனநாயகத்தை மீட்பதற்கு இந்தியா கூட்டணியின் வெற்றியே உரிய தீர்வாக அமைய முடியும்.

    சர்வாதிகார அரசியலை செய்து வருகிற மக்கள் விரோத மோடி ஆட்சியை அகற்றுவதே ஒரே நோக்கமாக கொண்டு நாம் செயல்பட வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. இதன் மூலம் மோடி ஆட்சியில் பாதிக்கப்பட்ட மக்களின் பேராதரவோடு தலைவர் ராகுல் காந்தியின் கடுமையான உழைப்பின் மூலம் மோடி ஆட்சி நிச்சயம் அகற்றப்படும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • கடந்த 2 பாராளுமன்ற தேர்தல்களின் போதும், கன்னியாகுமரியில் இருந்து தான் பிரதமர் மோடி தேர்தல் பிரசார கூட்டங்களை தொடங்கினார்.
    • பிரதமர் மோடி வருகிற 18-ந் தேதி கோவையில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.

    சேலம்:

    தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே பாராளுமன்ற தேர்தல் களம் நாடு முழுவதும் களை கட்டி உள்ளது. பிரதமர் மோடி நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கி பேசி வருகிறார்.

    இந்த முறை தென் மாநிலங்களில் குறிப்பாக தமிழகத்தில் அதிக அளவில் வெற்றி பெற வேண்டும் என்பதில் பா.ஜ.க. உறுதியாக இருக்கிறது. அதன் அடிப்படையில் பிரதமர் மோடி கடந்த ஒரு மாத காலத்தில் 2 முறை தமிழகத்துக்கு வந்து பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை திறந்து வைத்தும், புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

    கடந்த மாதம் 27-ந் தேதி கொங்கு மண்டலமான திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பிரதமர் மோடி பேசினார். பின்னர் மதுரைக்கு புறப்பட்டு சென்ற பிரதமர் மோடி மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். இரவில் மதுரையில் தங்கிய அவர் மறுநாள் (28-ந்தேதி) தூத்துக்குடி துறைமுகத்தில் நடந்த விழாவில் குலசேகர பட்டணம் ராக்கெட் ஏவுதளத்துக்கு அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து நெல்லை பாளையங்கோட்டையில் நடந்த பிரமாண்ட பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

    பின்னர் கடந்த 4-ந் தேதி 2-வது முறையாக தமிழகம் வந்த பிரதமர் மோடி சென்னை கல்பாக்கம் அனல்மின் நிலையத்தில் ஈனுலை திட்டத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து அன்று மாலை சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

    தற்போது 3-வது முறையாக பிரதமர் மோடி வருகிற 15-ந்தேதி தமிழகம் வருகிறார். சேலத்தில் நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். இதற்காக சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கெஜ்ஜல் நாயக்கன்பட்டியில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட உள்ளது.

    இந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் சேலம், நாமக்கல், கரூர் பாராளுமன்ற தொகுதி வாக்காளர்களிடம் பிரதமர் மோடி பேச ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள பிரதமர் மோடி பெங்களூருவில் இருந்து தனி விமானம் மூலம் சேலம் வருகிறார். பின்னர் காலை 11 மணி அளவில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று வாக்காளர்கள் மத்தியில் பேசுகிறார்.

    இதையொட்டி அங்கு 1 லட்சத்திற்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை திரட்ட பா.ஜ.க. நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர். இதற்கான ஏற்பாடுகளில் கட்சியினர் தீவிரமாக இறங்கி உள்ளனர். பிரதமர் மோடிக்கு பல்லாயிரக்கணக்கான கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரண்டு உற்சாக வரவேற்பு அளிக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை பா.ஜ.க.வினர் செய்து வருகிறார்கள்.

    பிரதமர் மோடி சேலம் வருகையையொட்டி பா.ஜ.க. தொண்டர்கள், நிர்வாகிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து அந்த பகுதியில் தொண்டர்கள் அமருவதற்கான இடமும், வாகனம் நிறுத்தும் வசதியும் ஏற்பாடு செய்யப்படுகிறது. சேலம் கூட்டத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி கோவைக்கு புறப்பட்டு செல்கிறார். பிரதமர் மோடி பேச உள்ள மேடை அமையும் இடத்தில் நேற்று பொதுக்கூட்ட ஒருங்கிணைப்பாளர் கே.பி.ராமலிங்கம் தலைமையில் கட்சி நிர்வாகிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    இதற்கிடையே நேற்று சேலம் பாராளுமன்ற தொகுதி அலுவலகத்தில் மாவட்ட தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பொதுக்கூட்ட ஒருங்கிணைப்பாளரும், மாநில துணை செயலாளருமான கே.பி.ராமலிங்கம், சேலம் கிழக்கு மாவட்ட தலைவர் சண்முகநாதன், மாநகர் மாவட்ட தலைவர் சுரேஷ் பாபு, மேற்கு மாவட்ட தலைவர் சுரேஷ்முருகன், சேலம் தொகுதி பொறுப்பாளர் அண்ணாதுரை, கரூர் மாவட்ட தலைவர் செந்தில்நாதன், நாமக்கல் மேற்கு மாவட்ட தலைவர் ராஜேஷ்குமார், கிழக்கு மாவட்ட தலைவர் சத்யமூர்த்தி, திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் ரவி, வீரபாண்டி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் ராஜேந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர். அவர்கள் சேலத்திற்கு வருகை தரும் மோடிக்கு உற்சாக வரவேற்பு கொடுப்பது குறித்தும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகள் குறித்தும் விவாதித்தனர்.

    சேலம் கூட்டத்துக்கு பிறகு பிரதமர் மோடி 16-ந்தேதி கன்னியாகுமரி செல்கிறார். அவர் அங்கு நடக்கும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.

    அவர் அந்த கூட்டத்தில் வருகிற பாராளுமன்ற தேர்தலில் தென் மாவட்டங்களில் போட்டியிடும் பாரதிய ஜனதா மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை அறிமுகம் செய்து, அவர்களுக்கு ஆதரவு திரட்டி பேசுகிறார்.

    அப்போது கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், தென்காசி ஆகிய 5 தொகுதி வேட்பாளர்களும் அறிமுகப்படுத்தப்படுகிறார்கள்.

    பிரதமர் மோடி பேசுவதற்காக கன்னியாகுமரி விவேகானந்தா கல்லூரி மைதானம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.

    கடந்த 2 பாராளுமன்ற தேர்தல்களின் போதும், கன்னியாகுமரியில் இருந்து தான் பிரதமர் மோடி தேர்தல் பிரசார கூட்டங்களை தொடங்கினார்.

    இந்த முறை பாராளுமன்ற தேர்தலோடு விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடத்த வாய்ப்பு உள்ளது. கடந்த முறை இந்த தொகுதியில் பா.ஜனதா, அ.தி.மு.க.வுடன் இணைந்து களம் இறங்கியது. தற்போது இந்த கட்சிகள் தனித்து களம் இறங்க உள்ளன.

    இந்த தொகுதிக்கான பா.ஜனதா வேட்பாளரையும் 16-ந்தேதி கூட்டத்தில் பிரதமர் மோடி அறிவித்து ஆதரவு திரட்ட உள்ளார்.

    பிரதமர் மோடியின் கன்னியாகுமரி வருகை பாரதிய ஜனதா கட்சியினர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. பிரதமர் வருகையை முன்னிட்டு குமரி மாவட்டத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன. அது தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் ஆலோசனை நடத்தி வருகிறார்.

    பிரதமர் மோடி வருகிற 18-ந் தேதி கோவையில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். கோவை, பொள்ளாச்சி, நீலகிரி, திருப்பூர் உள்ளிட்ட பாராளுமன்ற தொகுதிகளில் போட்டியிட உள்ள பா.ஜ.க. மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அவர் கோவையில் பிரசாரம் செய்ய இருக்கிறார்.

    இந்த 4 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் மைய பகுதியில் பிரமாண்ட பொதுக்கூட்டத்தை நடத்த பா.ஜ.க.வினர் ஏற்பாடு செய்து வருகிறார்கள். கோவையில் ஏற்கனவே கொடிசியா மைதானத்தில் பிரதமர் மோடி பேசி இருக்கிறார். அங்கு ஒரே இடத்தில் லட்சக்கணக்கானோர் குவியும் வகையில் இட வசதி உள்ளன. இதனால் அந்த இடத்திலேயே இந்த முறையும் பொதுக்கூட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

    கோவை பாராளுமன்ற தொகுதியை வெற்றி வாய்ப்புள்ள தொகுதியாக பா.ஜ.க. பார்க்கிறது. இதனால் இந்த தொகுதியில் வெற்றி பெறும் வகையில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ள பிரசார கூட்டத்தில் லட்சக்கணக்கானோரை திரட்ட பா.ஜ.க.வினர் முடிவு செய்துள்ளனர்.

    மேலும் நீலகிரி, பொள்ளாச்சி தொகுதிகளில் இருந்தும் திரளான பொதுமக்களை பங்கேற்க செய்ய ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.

    இதுதொடர்பாக போலீசாரிடம் கேட்டபோது பிரதமர் வருகை தொடர்பாக அதிகாரபூர்வ தகவல் வந்தவுடன் பாதுகாப்பு ஏற்பாடுகளை தொடங்குவோம். பிரதமர் கேரளாவில் இருந்து கோவை வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதற்கேற்ப பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தனர்.

    ×