search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஜாபர் சாதிக்கிடம் கோடிக்கணக்கில் பணம் வாங்கிய அரசியல்வாதிகள் யார்-யார்?
    X

    ஜாபர் சாதிக்கிடம் கோடிக்கணக்கில் பணம் வாங்கிய அரசியல்வாதிகள் யார்-யார்?

    • இன்னொரு அரசியல் பிரமுகருக்கு ரூ.1 கோடி பணம் கொடுத்ததாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
    • ஜாபர் சாதிக் சினிமா வட்டாரத்தில் தயாரிப்பாளராக வருவதற்கும் சிலர் முக்கிய காரணமாக இருந்துள்ளனர்.

    சென்னை:

    சூடோபெட்ரின் என்னும் போதைப்பொருளை வெளிநாடுகளுக்கு சட்ட விரோதமாக கடத்திய வழக்கில் திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக்கை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கடந்த 9-ந்தேதி டெல்லியில் கைது செய்தனர்.

    அவர் கடந்த 3 ஆண்டுகளில் ரூ.2 ஆயிரம் கோடி மதிப்புள்ள 3,500 கிலோ சூடோபெட்ரின் போதைப் பொருளை இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, மலேசியா ஆகிய நாடுகளுக்கு கடத்தியது தெரியவந்தது.

    இந்த நிலையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், ஜாபர் சாதிக் மீது சட்ட விரோத பண பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். அவர் மீது போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் பதிவு செய்துள்ள வழக்குகள் உள்பட பல முதல் தகவல் அறிக்கைகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு உள்ளன.

    இந்த வழக்கு தொடர்பாக தமிழ் மற்றும் இந்தி திரைப்பட பைனான்சியர்கள், சில முக்கிய பிரமுகர்கள் மற்றும் ஜாபர் சாதிக் பணம் கொடுத்த அரசியல் பிரமுகர்கள் ஆகியோரை கண்காணித்து வருவதாக போதைப்பொருள் தடுப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    போதைப்பொருள் கடத்தல் மூலம் ஜாபர் சாதிக் கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்துள்ளார். அந்த பணத்தை சினிமா, ஓட்டல் தொழில் ஆகியவற்றில் முதலீடு செய்ததும், அரசிய லில் உயர்ந்த இடத்துக்கு வருவதற்காக பணத்தை வாரி இறைத்துள்ளதும் தெரியவந்துள்ளது.

    ரூ.7 லட்சம் பணத்தை அவர் ஒரு அரசியல் பிரமுகருக்கு கொடுத்துள்ளார். அந்த பணத்தை ரூ.5 லட்சம், ரூ.2 லட்சம் என 2 தவணைகளில் கொடுத்துள்ளார்.

    மேலும் இன்னொரு அரசியல் பிரமுகருக்கு ரூ.1 கோடி பணம் கொடுத்ததாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. ஜாபர் சாதிக்கை அரசியலில் உயர்ந்த பதவிக்கு கொண்டு வருவதாக உறுதி அளித்து அந்த பிரமுகர் பணத்தை வாங்கியதாக கூறப்படுகிறது. அவர்கள் யார்-யார்? என்று அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.

    மேலும் ஜாபர் சாதிக் சினிமா வட்டாரத்தில் தயாரிப்பாளராக வருவதற்கும் சிலர் முக்கிய காரணமாக இருந்துள்ளனர். அதனால் அவர் ஒரே நேரத்தில் 3 படங்களை தயாரித்து இருக்கிறார். அவர் சினிமா தயாரிப்பாளராக மாற யார் யார் உறுதுணையாக இருந்துள்ளனர் என்கிற பட்டியலையும் அதிகாரிகள் சேகரித்து வருகிறார்கள்.

    திரையுலகில் ஜொலிக்க ஜாபர் சாதிக் பல வகைகளில் பணம் வாரி வழங்கியுள்ளார். தமிழ் சினிமா இயக்குனர் ஒருவரிடம் அவருக்கு நெருங்கிய தொடர்பு இருந்திருக்கிறது. மேலும் நடிகர்கள் சிலரும் ஜாபர் சாதிக்குடன் நெருங்கிய தொடர்பில் இருந்திருக்கிறார்கள். அவர்களுடன் விருந்து நிகழ்ச்சிகளிலும் ஜாபர் சாதிக் கலந்து கொண்டுள்ளார்.

    அடுத்த கட்டமாக போதைப்பொருள் கடத்தலில் ஜாபர் சாதிக்குடன் யார் யாருக்கு தொடர்பு இருக்கிறது என்பது தொடர்பாக மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.

    மேலும் அமலாக்கத்துறையினர் சட்டவிரோத பண பரிவர்த்தனை தொடர்பான வழக்குகளை முடுக்கி விட்டுள்ளனர்.

    ஜாபர் சாதிக்கின் வங்கி கணக்குகள், செல்போன் எண் ஆகியவற்றை வைத்து எந்தெந்த வகையில் பண பரிமாற்றம் செய்யப்பட்டு உள்ளது. முறைப்படி வங்கி கணக்கில் இருந்து பணம் எடுத்து கொடுக்கப்பட்டு உள்ளதா அல்லது போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த பணத்தை பதுக்கி வைத்து சட்ட விரோதமாக கொடுத்து உள்ளாரா என்ற கோணத்திலும் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். இதன் மூலம் பணம் வாங்கிய சினிமா பிரபலங்கள், அரசியல் பிரமுகர்களுக்கு விரைவில் சம்மன் அனுப்பி டெல்லிக்கு வரவழைத்து விசாரிக்க அமலாக்கத்துறை அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர். இதையடுத்து ஜாபர் சாதிக் விவகாரத்தில் அமலாக்கத்துறை விசாரணை அடுத்தடுத்த நாட்களில் இன்னும் வேகம் எடுக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×