என் மலர்
உள்ளூர் செய்திகள்
- விபத்தில் காருக்குள் இருந்த 6 பேர் சிக்கிய நிலையில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
- விபத்து காரணமாக திம்பம் மலைப்பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் நம்பியூர் பகுதியை சேர்ந்த குமார் (60), மூலக்கிணறு பகுதியை சேர்ந்த செல்வம் (60), சவந்தரராஜ் (60), இண்டியன்பாளையம் பகுதியை சேர்ந்த சென்னைய்யன் (55), காஞ்ச நாயக்கனூர் பகுதியை சேர்ந்த செல்வம் (50), ஈரோட்டை சேர்ந்த மனோகர் (50) ஆகியோர் இன்று காலை 6 மணி அளவில் ஆம்னி வேனில் கர்நாடக மாநிலம் நஞ்சன்கூடு பகுதியில் உள்ள ஈஸ்வரன் கோவிலுக்கு சென்று கொண்டிருந்தனர்.
அப்போது தாளவாடி மலை 27-வது கொண்டை ஊசி வளைவில் கார் திரும்பி கொண்டிருந்தபோது எதிரே தாளவாடியில் இருந்து சத்தியமங்கலம் நோக்கி கரும்பு லோடுகளை ஏற்றி கொண்டு வந்த லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து காரின் மீது கரும்பு லோடு உடன் கவிழ்ந்தது.
இதில் காரில் இருந்த 6 பேரும் சிக்கிக்கொண்டு அலறினர். விபத்து குறித்து தாளவாடி மற்றும் ஆசனூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 108 மருத்துவ குழுவினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
பின்னர் போலீசார், மருத்துவ குழுவினர் மற்றும் பொதுமக்கள் காரில் சிக்கிக்கொண்டிருந்த அவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரம் போராட்டத்துக்கு பிறகு காரில் படுகாயம் அடைந்த மூலகிணறு பகுதியை சேர்ந்த செல்வம், சவுந்தர்ராஜ் மற்றும் ஈரோட்டை சேர்ந்த மனோகர் ஆகியோரை மீட்டு சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.
இந்த விபத்தில் நம்பியூரை சேர்ந்த குமார், இந்தியன் பாளையம் பகுதியை சேர்ந்த சென்னைய்யன், காஞ்ச நாயக்கனூர் பகுதியை சேர்ந்த செல்வம் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தது தெரியவந்தது. 3 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
நடுரோட்டில் லாரி கவிழ்ந்ததால் திம்பம் மலைப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவியது. ஈரோடு-கர்நாடகா இடையே போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில் படுகாயமடைந்த 3 பேரும் சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
இந்த கோர விபத்தால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.
- சூனாம்பேட்டில் இருந்து அச்சரப்பாக்கம் வழியாக மதுராந்தகம் நோக்கி சென்ற தனியார் பஸ்சில் கல்லூரிக்கு புறப்பட்டனர்.
- உயிருக்கு போராடிய மாணவரை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மதுராந்தகம்:
மேல்மருவத்தூர் அருகே கண்டெய்னர் லாரி மீது பஸ் உரசியதில் படிக்கட்டில் தொங்கியபடி சென்ற 3 கல்லூரி மாணவர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது பற்றிய விபரம் வருமாறு:-
மதுராந்தகத்தில் தனியார் கலை அறிவியல் கல்லூரி உள்ளது. இங்கு மேல்மருவத்தூர் அருகே உள்ள ராமாபுரம் பகுதியை சேர்ந்த கமலேஷ்(வயது19), சூனாம்பேடு தனுஷ்(19), மோகல்வாடி பகுதியை சேர்ந்த மோனிஷ்(19) உள்ளிட்டோர் படித்து வந்தனர். அவர்கள் கல்லூரிக்கு பஸ்சில் சென்று வருவது வழக்கம்.
இன்று காலை கமலேஷ் உள்ளிட்ட மாணவர்கள் அனைவரும் வழக்கம் போல் சூனாம்பேட்டில் இருந்து அச்சரப்பாக்கம் வழியாக மதுராந்தகம் நோக்கி சென்ற தனியார் பஸ்சில் கல்லூரிக்கு புறப்பட்டனர். பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்ததால் அவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்தனர்.
மேல்மருவத்தூர் அருகே சிறுநாகலூர் என்ற இடத்தில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பஸ் சென்று கொண்டு இருந்த போது சாலை ஓரமாக நிறுத்தப்பட்டு இருந்த கண்டெய்னர் லாரி மீது திடீரென பஸ் உரசியது.
இதில்படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த கமலேஷ், தனுஷ், மோனிஷ் மற்றும் ஒரு மாணவர் என 4 பேர் இடிபாட்டில் சிக்கி சாலையில் விழுந்தனர். இந்த விபத்தில் கமலேஷ், தனுஷ், மோனிஷ் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள். மற்றொரு மாணவர் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடினார்.
தகவல் அறிந்ததும் மேல்மருவத்தூர் போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் உயிருக்கு போராடிய மாணவரை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பலியான 3 மாணவர்களின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது. இந்த விபத்தில் பஸ்சின் மற்றொரு படிக்கட்டில் தொங்கியபடி சென்ற மேலும் 5 மாணவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக அவர்கள் உயிர் தப்பினர்.
பலியான 3 மாணவர்களும் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தனர். கல்லூரிக்கு சென்ற மாணவர்கள் பலியானது பற்றி அறிந்ததும் அவர்களது பெற்றோர் கதறி துடித்தனர். மாணவர்களின் உடல்களை பார்த்து உடன் படித்த மாணவர்கள் கண்ணீர் வடித்தனர். இதனை பார்க்க பரிதாபமாக இருந்தது. இந்த விபத்து குறித்து மேல்மருவத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- தீ விபத்து குறித்து வங்கி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
- கடந்த வாரம் மாநகராட்சி அலுவலகத்திலும் இதே போல தீ விபத்து ஏற்பட்டு பொருட்சேதம் ஏற்பட்டது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் ஆர்.எஸ். ரோட்டில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் நேற்று வழக்கம் போல் பணிகள் இயங்கி வந்த நிலையில் மாலை ஊழியர்கள் வங்கியை அடைத்து விட்டு சென்று விட்டனர். இன்று அதிகாலை 6.30 மணியளவில் வங்கியில் இருந்து புகை மண்டலமாக வெளியே வந்து கொண்டு இருந்தது.
இதைப் பார்த்ததும் அருகில் இருந்த பொதுமக்கள் இது குறித்து திண்டுக்கல் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். மாவட்ட அலுவலர் சிவக்குமார் தலைமையில் 2 வாகனங்களில் சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இதனிடையே தீ விபத்து குறித்து வங்கி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து வங்கியை திறந்து பார்த்தனர். வங்கியின் முன்புறம் உள்ள பணம் செலுத்தும் கவுண்டர்கள், அங்கிருந்த கம்ப்யூட்டர்கள் அனைத்தும் தீயில் கருகி சேதமாகி இருந்தது.
இதன் மதிப்பு ரூ.பல லட்சம் இருக்கும் என தெரிய வந்துள்ளது. வங்கியில் உள்ள பணம், நகைகள், பத்திரங்கள் ஆகியவை மற்றொரு அறையில் இருந்துள்ளது. அங்கு தீ விபத்து ஏற்படாததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இது குறித்து நகர் வடக்கு போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டதின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என தெரிய வந்துள்ளது. அதிகாலை நேரத்தில் ஏற்பட்ட தீ விபத்து உடனடியாக கண்டுபிடிக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இந்த வங்கியின் அருகேதான் மாநகராட்சி அலுவலகம், மிகப்பெரிய ஜவுளிக்கடைகள், வர்த்தக நிறுவனங்கள், அதிக அளவில் செயல்பட்டு வருகின்றன. நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டு இருந்தால் பெரும் சேதம் ஏற்பட்டு இருக்கும்.
கடந்த வாரம் மாநகராட்சி அலுவலகத்திலும் இதே போல தீ விபத்து ஏற்பட்டு பொருட்சேதம் ஏற்பட்டது. அதன் அருகில் உள்ள வங்கியிலும் தற்போது தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
இந்த வங்கிக்கு காவலாளி யாரும் கிடையாது. பாதுகாப்புக்காக சி.சி.டி.வி. கேமரா மட்டுமே உட்புறமும், வெளிப்பகுதியிலும் பொருத்தப்பட்டுள்ளது. காவலாளி இருந்திருந்தால் தீ விபத்து நடந்த உடனே தகவல் தெரிவிக்கப்பட்டு விபத்து தவிர்க்கப்பட்டு இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.
- சசிகலாவை நேரில் சந்தித்து பாரதிய ஜனதா கட்சியினர் பேச வேண்டும் என்றும் ஓ.பி.எஸ். கூறியுள்ளார்.
- பொது சின்னத்தில் போட்டியிடுகிறோம் என்றும் ஓ.பி.எஸ். தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில் பாரதிய ஜனதா கட்சி புதிய கூட்டணியை அமைப்பதற்கான முயற்சிகளில் தீவிரம் காட்டி வருகிறது. அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்தை கூட்டணியில் சேர்ப்பதற்காக பாரதிய ஜனதா கட்சி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையின் போது, தங்கள் அணிக்கு 15 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று கேட்டுள்ளார். இதைக் கேட்டு பாரதிய ஜனதா கட்சியினர் அதிர்ச்சியில் உறைந்து போய் இருக்கிறார்கள். இருப்பினும் அதனை வெளிக்காட்டாமல் எத்தனை தொகுதிகளை உங்களுக்கு ஒதுக்குவது என்பது பற்றி பேசி முடி வெடுத்துக் கொள்ளலாம் என்று பாரதிய ஜனதா கட்சியினர் தெரிவித்து இருக்கிறார்கள்.
இது தொடர்பாக பாரதிய ஜனதா கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறும் போது, ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் அந்தஸ்தில் இருந்தவர். அ.தி.மு.க.வை மீட்பதற்காக சட்ட நடவடிக்கைகளை தொடர்ச்சியாக மேற் கொண்டு வருகிறார்.
அதனால் அவர் 15 தொகுதிகளை கேட்டுப் பெற வேண்டும் என்று எண்ணியிருக்கலாம் என்றார். அதே நேரத்தில் ஓ.பன்னீர்செல்வத்திடம் தற்போது கட்சியும் இல்லை. கொடியும் இல்லை. எனவே அவருக்கு 15 தொகுதிகளை கொடுப்பது என்பது மிகப் பெரிய எண்ணிக்கையாகும்.
4 அல்லது 5 இடங்களை ஓ.பி.எஸ்.சுக்கு ஒதுக்குவதற்கு வாய்ப்பு உள்ளது என்றும் அவர் தெரிவித்தார். பாரதிய ஜனதா கூட்டணியில் ஓ.பன்னீர்செல்வத்தை தாமரை சின்னத்திலேயே போட்டியிட வைப்பதற்கு பாரதிய ஜனதா கட்சி காய் நகர்த்தி வருகிறது.
இதுதொடர்பாக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையின் போது பா.ஜனதா நிர்வாகிகள் அவரிடம் நேரடியாகவே வற்புறுத்தி இருக்கிறார்கள். ஆனால் ஓ.பன்னீர்செல்வமோ அதனை ஏற்றுக் கொள்ளவில்லை.

அ.தி.மு.க. விவகாரம் இன்னும் முடிவுக்கு வராமலேயே உள்ளது. நாங்கள் தான் உண்மையான அ.தி. மு.க. என்று தொடர்ந்து கூறி வருகிறோம். இது போன்ற சூழலில் தாமரை சின்னத்தில் போட்டியிட்டால் தங்களது தனித்தன்மை பாதித்துவிடும் என்றும் எனவே பொது சின்னத்தில் போட்டியிடுகிறோம் என்றும் ஓ.பி.எஸ். தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாரதிய ஜனதா கட்சியினர் இதனை ஏற்றுக் கொள்ளாமல் தாமரை சின்னத்திலேயே போட்டியிட வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தி இருக்கிறார்கள். இதை தொடர்ந்து அதுபற்றி ஆலோசித்து கூறுகிறேன் என்று ஓ.பி.எஸ். தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதனால் எந்த சின்னத்தில் போட்டியிடுவது என்பது பற்றி முடிவெடுக்க முடியாமல் ஓ.பி.எஸ். குழப்பத்தில் உள்ளார். அதே நேரத்தில் பாரதிய ஜனதா கட்சியுடனான கூட்டணிக்கு சசிகலாவின் ஆதரவை கேட்டுப் பெற வேண்டும் என்றும் ஓ.பி.எஸ். பாரதிய ஜனதா கட்சிக்கு நிபந்தனை விதித்திருப்பதாக கூறப்படுகிறது.
சசிகலாவை நேரில் சந்தித்து பாரதிய ஜனதா கட்சியினர் பேச வேண்டும் என்றும் ஓ.பி.எஸ். கூறியுள்ளார். ஆனால் இதனை பாரதிய ஜனதா கட்சியினர் விரும்பவில்லை என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. தென் மாவட்டங்களில் பாரதிய ஜனதா கூட்டணியை வலுப்படுத்த வேண்டும் என்றால் டி.டி.வி. தினகரனுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர் கேட்கும் இடங்களை ஒதுக்கி கொடுக்க வேண்டும் என்றும் ஓ.பி.எஸ். பாரதிய ஜனதா கட்சியினரிடம் வலியுறுத்தி உள்ளார்.
இதனை ஏற்றுக் கொண்ட பாரதிய ஜனதா கட்சியினர் டி.டி.வி. தினகரனுடன் விரைவில் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்க உள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி பேச்சுவார்த்தைகளை விரைவாக முடித்து தேர்தல் பிரசாரத்தை தொடங்க திட்டமிட்டு உள்ளனர்.
- 10 வழித்தடங்களில் புதிய வந்தே பாரத் ரெயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
- திருவனந்தபுரம்-காசா்கோடு வந்தே பாரத் ரெயில் சேவையை மங்களூரு வரை நீட்டிக்கும் நிகழ்வையும் தொடங்கி வைத்தார்.
சென்னை:
சென்னை-மைசூரு இடையே மேலும் ஒரு வந்தே பாரத் ரெயில் உள்பட நாடு முழுவதும் 10 வந்தே பாரத் ரெயில் சேவையை பிரதமா் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார்.
நாடு முழுவதும் ரூ.85 ஆயிரம் கோடிக்கு அதிகமான ரெயில்வே திட்டங்களை பிரதமா் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் இன்று காலை தொடங்கி வைத்தார்.
இதன்படி, தெற்கு ரெயில்வேயில் சென்னை-மைசூரு இடையே கூடுதலாக ஒரு புதிய வந்தே பாரத் ரெயில், லக்னோ-டேராடூன், கலபுா்கி-பெங்களூரு, ராஞ்சி-வாரணாசி, டெல்லி (நிஜாமுதீன்)-கஜுரஹோ, செகந்திராபாத்-விசாகப்பட்டினம், நியூ ஜல்பைகுரி-பாட்னா, லக்னோ-பாட்னா, அகமதாபாத்-மும்பை, பூரி-விசாகப்பட்டினம் என மொத்தம் 10 வழித்தடங்களில் புதிய வந்தே பாரத் ரெயில் சேவையை தொடங்கி வைத்தார்.
சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு நடைபெறும் சென்னை-மைசூரு இடையேயான 2-வது வந்தே பாரத் ரெயில் தொடக்க விழாவில் கவர்னர் ஆா்.என்.ரவி, மத்திய இணை-மந்திரி எல்.முருகன் ஆகியோா் கலந்து கொண்டனர்.
வாரந்தோறும் புதன்கிழமை தவிர தினசரி காலை 6 மணிக்கு மைசூருவிலிருந்து புறப்படும் இந்த வந்தே பாரத் ரெயில்(எண்:20663), பிற்பகல் 12.25 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் வந்தடையும். மீண்டும் மறுமாா்க்கமாக சென்னை சென்ட்ரலில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் (எண்:20664), சென்ட்ரல், காட்பாடி, ஜோலாா்பேட்டை, கிருஷ்ண ராஜபுரம், மாண்டியா வழியாக இரவு 11.20-க்கு மைசூரு சென்றடையும்.
திருவனந்தபுரம்-காசா்கோடு வந்தே பாரத் ரெயில் சேவையை மங்களூரு வரை நீட்டிக்கும் நிகழ்வையும் தொடங்கி வைத்தார்.
இதுதவிர, கொல்லம்-திருப்பதி விரைவு ரெயில் சேவையைத் தொடங்கி வைக்கும் அவா், பேசின்பாலத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பிட் லைனை நாட்டுக்கு அா்ப்பணித்தார். மேலும், சிங்கப்பெருமாள் கோவில், கங்கைகொண்டான், தேனி, பட்டுக்கோட்டை, திருத்துறைப்பூண்டி, வள்ளியூா் ஆகிய 6 ஊா்களில் அமைக்கப்பட்டுள்ள சரக்கு முனையத்தையும் நாட்டுக்கு அா்ப்பணித்தார். திண்டுக்கல், ஈரோடு, திருச்சி, பாலக்காடு ஆகிய ரெயில் நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள மலிவுவிலை மருந்தகங்களையும், 168 ரெயில் நிலையங்களில் 'ஒரு நிலையம் ஒரு பொருள்' (விற்பனை) அரங்குகளையும் திறந்து வைத்தார்.
இதுதவிர, பல்வேறு திட்டப் பணிகளையும் தொடங்கி வைத்தார்.
- சகோதரர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரச்சனையாகியுள்ளது.
- சம்பவ இடத்திலேயே கிருஷ்ணமூர்த்தி துடிதுடித்து பரிதாபமாக உயிர் இழந்தார்.
துறையூர்:
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள பெருமாள் பாளையம் நாயுடு தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 56). இவர் விவசாயம் மற்றும் கால்நடை வளர்த்து வந்தார். இவரது இளைய சகோதரர் சந்திரசேகரன் (52). இவர் லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.
இவர்கள் இருவரும் தங்களுக்கு சொந்தமான பூர்வீக சொத்தை கடந்த 10 வருடங்களுக்கு முன்பு, வாய்மொழியாக பாகப்பிரி வினை செய்து கொண்ட னர். இதில் சந்திரசேகரன் தனக்குப் பிரிந்த பாகத்தை, சிக்கத்தம்பூர் கிராமத்தில் உள்ள கோவில் ஒன்றிற்கு தானமாக எழுதிக் கொடுத்துள்ளார். இது தொடர்பாக சகோதரர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரச்சனையாகியுள்ளது.
இதன் தொடர்ச்சியாக கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்த கிருஷ்ண மூர்த்தி, தன்னுடைய தம்பியான சந்திரசேகரனை கொலை செய்ய முயன்றதாக தெரிகிறது. அப்பொழு து சந்திரசேகரன் அருகில் இந்த ஒருவரின் வீட்டிற்குள் நுழைந்து தப்பினார். அச்சம்பவத்தின் போது சந்திரசேகரனின் மாமியாரின் மூன்று கைவிரல்கள் வெட்டப்பட்டது.
இந்த வழக்கில் இறந்த கிருஷ்ணமூர்த்தி சிறை சென்று வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 3 மாதங்களாக சகோதரர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று கிருஷ்ணமூர்த்தி ரெங்கநாதபுரம் கிராமத்திற்கு சென்று கறந்த பாலினை விற்றுவிட்டு, மீண்டும் தன்னுடைய இருசக்கர வாகனத்தில் பெருமாள் பாளையம் கிராமத்தை நோக்கி வந்து கொண்டிருந்தார்.
அப்பொழுது சாலையோரம் மறைந்திருந்த சந்திரசேகரன், அவரது இருசக்கர வாகனத்தை மறித்தார். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த கிருஷ்ணமூர்த்தி தன்னுடைய இருசக்கர வாகனத்தை கீழே போட்டுவிட்டு ஓடினார். பின்னால் துரத்தி சென்ற சந்திரசேகரன் கிருஷ்ண மூர்த்தியை தலை மற்றும் வலது கை உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக வெட்டினார். இதில், சம்பவ இடத்திலேயே கிருஷ்ணமூர்த்தி துடிதுடித்து பரிதாபமாக உயிர் இழந்தார்.
இச்சம்பவத்தை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக துறையூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் அங்கு சென்ற துறையூர் போலீசார் கிருஷ்ணமூர்த்தி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் கொலை செய்துவிட்டு சம்பவ இடத்திலேயே அமர்ந்திருந்த சந்திரசேகரனை போலீசார் கைது செய்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கைதான சந்திரசேகரன் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். அதில் சொத்து பிரச்சினையில் தன்னை கொலை செய்ய முயன்றதோடு தொடர்ந்து மிரட்டல் விடுத்ததால் கொலை செய்ததாக தெரிவித்துள்ளார். துறையூர் அருகே நிலத்தகராறில் தம்பியே அண்ணனை வெட்டிக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கால காலமாக உழைத்த முக்கிய பொறுப்பாளர்கள் தங்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று குரல் கொடுக்க தொடங்கிவிட்டனர்.
- வாய்ப்பு கொடுத்தால் வெற்றி பெறுவேன். வாய்ப்பு கொடுப்பதும், கொடுக்காததும் தலைவர் கையில் உள்ளது.
சென்னை:
விடுதலை சிறுத்தை கட்சிக்கு தி.மு.க. 2 தனி தொகுதிகளை ஒதுக்கி தொகுதி உடன்பாடு செய்துள்ளது. சிதம்பரம், விழுப்புரம் ஆகிய தொகுதிகளை கடந்த முறை போல ஒதுக்கி இருப்பதால் அடிப்படையான தேர்தல் பணிகளை அங்கு தொடங்கிவிட்டனர்.
சிதம்பரம் தொகுதியில் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் போட்டியிடுகிறார். விழுப்புரம் தொகுதியில் கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமார் கடந்த முறை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இந்த தேர்தலில் விழுப்புரம் தொகுதியில் ரவிக்குமார் மீண்டும் நிறுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கட்சியில் மூத்த நிர்வாகிகள் சிலர் போட்டியிட ஆர்வம் காட்டுகிறார்கள்.
கட்சியில் எந்த பிரதிபலனையும் எதிர் பார்க்காமல் கால காலமாக உழைத்த முக்கிய பொறுப்பாளர்கள் தங்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று குரல் கொடுக்க தொடங்கிவிட்டனர்.
இளைஞர் அணி மாநில செயலாளர் சங்கத் தமிழன் விழுப்புரம் தொகுதியில் தன்னை போட்டியிட அனு மதிக்க வேண்டும் என்று தலைவர் திருமாவளவனிடம் விருப்ப மனு கொடுத்துள்ளார்.
அப்போது அவர் இந்த முறை இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள். கட்டாயம் எனக்கு வாய்ப்பு கொடுத்தால் வெற்றி பெறுவேன் என்று கூறியுள்ளார்.
ரவிக்குமார் ஒருமுறை எம்.எல்.ஏ., ஒருமுறை எம்.பி.யாக இருந்துவிட்டார். இந்த முறை இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுத்தால் சிறப்பாக இருக்கும். எல்லோருக்கும் தேர்தலில் நிற்க ஆசை இருக்கிறது. வாய்ப்பு கொடுத்தால் வெற்றி பெறுவேன். வாய்ப்பு கொடுப்பதும், கொடுக்காததும் தலைவர் கையில் உள்ளது.
விழுப்புரம் தொகுதி நன்கு அறிந்த தொகுதியாகும். வாய்ப்பு கொடுத்தால் வெற்றி பெறுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
சங்கத்தமிழனை போல மேலும் சிலர் போட்டியிட மனு கொடுக்க தயாராக உள்ளனர். வக்கீல் எழில் கரோலினை நிறுத்த வேண்டும் என்று மகளிர் அணி சார்பில் வலியுறுத்தப்படுகிறது. விடுதலை சிறுத்தை கட்சியில் விருப்பமனு வாங்கும் நடைமுறை பாராளுமன்ற தேர்தலில் இதுவரை இருந்தது இல்லை. ஆனால் இந்த முறை கட்சி நிர்வாகிகள் சிலர் விருப்ப மனுக்களை தாங்களாகவே முன் வந்து கொடுக்கின்றனர்.
இதனால் ரவிக்குமாருக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்குமா? புதிதாக ஒருவர் வேட்பாளராக நிறுத்தப்படுவாரா? என்பது கட்சியின் உயர்நிலைக் குழுவில் தான் முடிவு செய்யப்படும்.
எனவே விழுப்புரம் தொகுதி வி.சி.க. வேட்பாளர் யார்? என்ற தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- எஸ்.எஸ்.எல்.சி. வகுப்புக்கான பொதுத்தேர்வு வருகிற 26-ந்தேதி தொடங்கி அடுத்த மாதம் 8-ந்தேதி வரை நடக்க இருக்கிறது.
- விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவு பெற்றதும், மதிப்பெண்களை ஆன்லைன் வாயிலாக பதிவேற்றும் பணிகள் தொடங்கி நடைபெறும்.
சென்னை:
பிளஸ்-2, பிளஸ்-1 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு 22-ந்தேதியுடனும், பிளஸ்-1 மாணவ-மாணவிகளுக்கு 25-ந்தேதியுடனும் தேர்வு நிறைவு பெற உள்ளது. அதனைத் தொடர்ந்து எஸ்.எஸ்.எல்.சி. வகுப்புக்கான பொதுத்தேர்வு வருகிற 26-ந்தேதி தொடங்கி அடுத்த மாதம் (ஏப்ரல்) 8-ந்தேதி வரை நடக்க இருக்கிறது.
இந்த நிலையில் பொதுத் தேர்வு நிறைவு பெற்றதும், மாணவ-மாணவிகள் எழுதிய விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் தொடங்கப்படும். அந்த வகையில் விடைத்தாள் திருத்தும் பணிகள் எப்போது தொடங்கப்படும்? என்ற தகவலை பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.
அதன்படி, பிளஸ்-2 வகுப்புக்கு அடுத்த மாதம் 1-ந்தேதியில் இருந்து 13-ந்தேதி வரையிலும், பிளஸ்-1 வகுப்புக்கு அடுத்த மாதம் 6-ந்தேதியில் இருந்து 25-ந்தேதி வரையிலும் விடைத்தாள் திருத்தும் பணிகள் நடக்கிறது. அதனைத் தொடர்ந்து எஸ்.எஸ்.எல்.சி. வகுப்புக்கு அடுத்த மாதம் 12-ந்தேதி ஆரம்பித்து 22-ந்தேதி வரையிலும் நடைபெற உள்ளது.
விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவு பெற்றதும், மதிப்பெண்களை ஆன்லைன் வாயிலாக பதிவேற்றும் பணிகள் தொடங்கி நடைபெறும். ஏற்கனவே பொதுத் தேர்வு அட்டவணை வெளியிட்ட நேரத்தில், பிளஸ்-2 வகுப்புக்கு மே மாதம் 6-ந்தேதியும், எஸ்.எஸ்.எல்.சி. வகுப்புக்கு மே 10-ந்தேதியும், பிளஸ்-1 வகுப்புக்கு மே 14-ந்தேதியும் பொதுத்தேர்வு முடிவு வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் பொதுத்தேர்வு முடிவை வெளியிட பள்ளிக்கல்வித் துறை தீவிரமாக பணிகளில் ஈடுபட உள்ளது குறிப்பிடத்தக்கது.
- சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்த விவசாயிகள் மாக்கையா தோட்டத்திற்கு வந்தனர்.
- மாக்கையா குடும்பத்தினருக்கு உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
தாளவாடி:
ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த திகினாரை ஆதிதிராவிடர் வீதியை சேர்ந்தவர் மாக்கையா (65). விவசாயி. இவருக்கு திகினாரை கிராமத்தில் 4 ஏக்கரில் விவசாய நிலம் உள்ளது. தோட்டத்தில் 2 ஏக்கரில் வாழை, 2 ஏக்கரில் மக்காச்சோளம் பயிரிட்டுள்ளனர்.
இவரது தோட்டம் திகினாரை வனப்பகுதியையொட்டி உள்ளதால் இரவு நேரங்களில் காட்டு யானைகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து விடக்கூடாது என்பதற்காக விவசாய தோட்டத்தில் இரவு நேரங்களில் காவலில் இருப்பது வழக்கம். அதைபோல் மாக்கையா மக்காசோள தோட்டத்தில் நேற்று இரவு நேரத்தில் காவலில் இருந்து உள்ளார்.
இந்த நிலையில் இன்று அதிகாலையில் வனப்பகுதியை விட்டு வெளியேறி காட்டுயானை ஒன்று மாக்கையா தோட்டத்திற்குள் புகுந்துள்ளது. சத்தம் கேட்டு வெளியே வந்த மாக்கையா யானை மிதித்துள்ளது. இதில் மாக்கையா சம்பவ இடத்தில் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.
இந்நிலையில் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்த விவசாயிகள் மாக்கையா தோட்டத்திற்கு வந்தனர். அப்போது யானை தோட்டத்தில் இருந்து வனப்பகுதிக்கு சென்றதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மாக்கையாவை சென்று பார்த்தபோது அவர் யானை மிதித்து ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததை கண்டு மேலும் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்த தகவல் காட்டு தீ போல் பரவியதால் மாக்கையா தோட்டத்திற்கு 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் திரண்டு வந்தனர்.
மேலும் இதுகுறித்து தாளவாடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் செல்வம், சப்-இன்ஸ்பெக்டர் மார்ட்டின் லூதர் மற்றும் போலீசார் வந்தனர்.
அடிக்கடி யானைகள் ஊருக்குள் புகுந்து உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது. இதனால் வனப்பகுதியையொட்டி உள்ள அகலிகளை ஆழப்படுத்த வேண்டும். வனத்துறையினர் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும்.
மாக்கையா குடும்பத்தினருக்கு உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். மேலும் விவசாயிகள் மாக்கையா உடலை எடுக்க விடாமல் அங்கு திரண்டு உள்ளனர்.
இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.
- 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இம்மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. ஜனாதிபதி ஒப்புதலையும் பெற்றது.
- 3 நாடுகளில் இருந்து வந்த மேற்கண்ட மதத்தினருக்கு இந்திய குடியுரிமை வழங்கும் பணியை மத்திய அரசு தொடங்கும்.
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சமூக நல்லிணக்கத்துடன் நாட்டு மக்கள் அனைவரும் வாழும் சூழலில், பிளவுவாத அரசியலை முன்னிறுத்திச் செயல்படுத்தப்படும் இந்திய குடியுரிமை திருச்சச் சட்டம் 2019 (CAA) போன்ற எந்த சட்டமும் ஏற்கத்தக்கது அல்ல.
தமிழ்நாட்டில் இச்சட்டத்தை நடைமுறைப்படுத்த மாட்டோம் என ஆட்சியாளர்கள் உறுதி அளிக்க வேண்டும்.
இவ்வாறு விஜய் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கடந்த 1955-ம் ஆண்டு குடியுரிமை சட்டம் கொண்டுவரப்பட்டது. அதில் திருத்தங்கள் செய்து, கடந்த 2019-ம் ஆண்டு குடியுரிமை திருத்த மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்தது.
இதன்படி பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மத அடக்குமுறைக்கு உள்ளாகி, அங்கிருந்து 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ந்தேதிக்கு முன்பு இந்தியாவில் குடியேறிய இந்து, கிறிஸ்தவர், சீக்கியர், சமணர், பார்சிகள், பவுத்தர்கள் ஆகிய சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமை வழங்க இம்மசோதா வகை செய்கிறது.
2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இம்மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. ஜனாதிபதி ஒப்புதலையும் பெற்றது.
ஜனாதிபதி ஒப்புதல் பெற்று 6 மாதங்களுக்குள் சட்டத்துக்கான விதிமுறைகளை வெளியிட்டால்தான், அச்சட்டம் அமலுக்கு வரும். ஆனால், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக சில மாநிலங்களில் போராட்டங்கள் வெடித்தன. அவற்றில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.
எனவே, விதிமுறைகள் வெளியிடப்படவில்லை. சட்டமும் அமல்படுத்தப்படவில்லை.
இதற்கிடையே, குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு உறுதி பூண்டிருப்பதாக கடந்த டிசம்பர் மாதம் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூறினார். அதையடுத்து இதற்கான பணிகள் வேகம் எடுத்தன.
இந்நிலையில், குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்துவதற்கான விதிமுறைகள் நேற்று வெளியிடப்பட்டன. இத்துடன் அச்சட்டம் அமலுக்கு வந்து விட்டதாக மத்திய அரசு அறிவித்தது.
3 நாடுகளில் இருந்து வந்த மேற்கண்ட மதத்தினருக்கு இந்திய குடியுரிமை வழங்கும் பணியை மத்திய அரசு தொடங்கும். இதற்கென பிரத்யேக இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
எவ்வித ஆவணமும் இல்லாமல், 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ந் தேதிக்கு முன்பு வந்தவர்கள் அதில் விண்ணப்பிக்க வேண்டும். எந்த ஆண்டு வந்தனர் என்பதை குறிப்பிட வேண்டும். அவர்களிடம் எந்த ஆவணமும் கேட்கப்படாது என்று மத்திய உள்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.
- தமிழக அரசின் தலைமை காஜி அறிக்கை வௌியிட்டுள்ளார்.
- பிறை பார்க்கப்பட்டு ரமலான் மாதம் தொடங்கிவிட்டதாக அறிவிப்பு.
ரமலான் பிறை தொடங்கிய நாளில் இருந்து இஸ்லாமியர்கள் நோன்பு நோற்பார்கள். ரமலான் மாத இறுதிநாளில் ரமலான் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
இந்தநிலையில், இன்று முதல் ரமலான் நோன்பு தொடங்கியதாக தலைமை காஜி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழக அரசின் தலைமை காஜி அறிக்கை வௌியிட்டுள்ளார்.
பிறை பார்க்கப்பட்டு ரமலான் மாதம் தொடங்கிவிட்டதாக தமிழ்நாடு அரசு தலைமை காஜி அறிவித்துள்ளது.

- மாநில தேர்தல் ஆணையராக இருந்த பழனிசாமி, வயது மூப்பு காரணமாக ஓய்வு.
- பழனிசாமி ஓய்வுபெற்ற நிலையில் புதிய ஆணையர் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராக, வணிகவரி மற்றும் பதிவுத் துறை செயலாளர் ஜோதி நிர்மலாசாமி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மாநில தேர்தல் ஆணையராக இருந்த பழனிசாமி, வயது மூப்பு காரணமாக ஓய்வு பெற்றார்.
இந்நிலையில், புதிய ஆணையர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.






