search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    15 தொகுதிகளை கேட்டு பா.ஜனதாவுக்கு அதிர்ச்சி அளித்த ஓ.பன்னீர்செல்வம்
    X

    15 தொகுதிகளை கேட்டு பா.ஜனதாவுக்கு அதிர்ச்சி அளித்த ஓ.பன்னீர்செல்வம்

    • சசிகலாவை நேரில் சந்தித்து பாரதிய ஜனதா கட்சியினர் பேச வேண்டும் என்றும் ஓ.பி.எஸ். கூறியுள்ளார்.
    • பொது சின்னத்தில் போட்டியிடுகிறோம் என்றும் ஓ.பி.எஸ். தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில் பாரதிய ஜனதா கட்சி புதிய கூட்டணியை அமைப்பதற்கான முயற்சிகளில் தீவிரம் காட்டி வருகிறது. அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்தை கூட்டணியில் சேர்ப்பதற்காக பாரதிய ஜனதா கட்சி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையின் போது, தங்கள் அணிக்கு 15 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று கேட்டுள்ளார். இதைக் கேட்டு பாரதிய ஜனதா கட்சியினர் அதிர்ச்சியில் உறைந்து போய் இருக்கிறார்கள். இருப்பினும் அதனை வெளிக்காட்டாமல் எத்தனை தொகுதிகளை உங்களுக்கு ஒதுக்குவது என்பது பற்றி பேசி முடி வெடுத்துக் கொள்ளலாம் என்று பாரதிய ஜனதா கட்சியினர் தெரிவித்து இருக்கிறார்கள்.

    இது தொடர்பாக பாரதிய ஜனதா கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறும் போது, ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் அந்தஸ்தில் இருந்தவர். அ.தி.மு.க.வை மீட்பதற்காக சட்ட நடவடிக்கைகளை தொடர்ச்சியாக மேற் கொண்டு வருகிறார்.

    அதனால் அவர் 15 தொகுதிகளை கேட்டுப் பெற வேண்டும் என்று எண்ணியிருக்கலாம் என்றார். அதே நேரத்தில் ஓ.பன்னீர்செல்வத்திடம் தற்போது கட்சியும் இல்லை. கொடியும் இல்லை. எனவே அவருக்கு 15 தொகுதிகளை கொடுப்பது என்பது மிகப் பெரிய எண்ணிக்கையாகும்.

    4 அல்லது 5 இடங்களை ஓ.பி.எஸ்.சுக்கு ஒதுக்குவதற்கு வாய்ப்பு உள்ளது என்றும் அவர் தெரிவித்தார். பாரதிய ஜனதா கூட்டணியில் ஓ.பன்னீர்செல்வத்தை தாமரை சின்னத்திலேயே போட்டியிட வைப்பதற்கு பாரதிய ஜனதா கட்சி காய் நகர்த்தி வருகிறது.

    இதுதொடர்பாக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையின் போது பா.ஜனதா நிர்வாகிகள் அவரிடம் நேரடியாகவே வற்புறுத்தி இருக்கிறார்கள். ஆனால் ஓ.பன்னீர்செல்வமோ அதனை ஏற்றுக் கொள்ளவில்லை.


    அ.தி.மு.க. விவகாரம் இன்னும் முடிவுக்கு வராமலேயே உள்ளது. நாங்கள் தான் உண்மையான அ.தி. மு.க. என்று தொடர்ந்து கூறி வருகிறோம். இது போன்ற சூழலில் தாமரை சின்னத்தில் போட்டியிட்டால் தங்களது தனித்தன்மை பாதித்துவிடும் என்றும் எனவே பொது சின்னத்தில் போட்டியிடுகிறோம் என்றும் ஓ.பி.எஸ். தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பாரதிய ஜனதா கட்சியினர் இதனை ஏற்றுக் கொள்ளாமல் தாமரை சின்னத்திலேயே போட்டியிட வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தி இருக்கிறார்கள். இதை தொடர்ந்து அதுபற்றி ஆலோசித்து கூறுகிறேன் என்று ஓ.பி.எஸ். தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இதனால் எந்த சின்னத்தில் போட்டியிடுவது என்பது பற்றி முடிவெடுக்க முடியாமல் ஓ.பி.எஸ். குழப்பத்தில் உள்ளார். அதே நேரத்தில் பாரதிய ஜனதா கட்சியுடனான கூட்டணிக்கு சசிகலாவின் ஆதரவை கேட்டுப் பெற வேண்டும் என்றும் ஓ.பி.எஸ். பாரதிய ஜனதா கட்சிக்கு நிபந்தனை விதித்திருப்பதாக கூறப்படுகிறது.

    சசிகலாவை நேரில் சந்தித்து பாரதிய ஜனதா கட்சியினர் பேச வேண்டும் என்றும் ஓ.பி.எஸ். கூறியுள்ளார். ஆனால் இதனை பாரதிய ஜனதா கட்சியினர் விரும்பவில்லை என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. தென் மாவட்டங்களில் பாரதிய ஜனதா கூட்டணியை வலுப்படுத்த வேண்டும் என்றால் டி.டி.வி. தினகரனுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர் கேட்கும் இடங்களை ஒதுக்கி கொடுக்க வேண்டும் என்றும் ஓ.பி.எஸ். பாரதிய ஜனதா கட்சியினரிடம் வலியுறுத்தி உள்ளார்.

    இதனை ஏற்றுக் கொண்ட பாரதிய ஜனதா கட்சியினர் டி.டி.வி. தினகரனுடன் விரைவில் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்க உள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி பேச்சுவார்த்தைகளை விரைவாக முடித்து தேர்தல் பிரசாரத்தை தொடங்க திட்டமிட்டு உள்ளனர்.

    Next Story
    ×