என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • பயணிகளை ஆம்புலன்ஸ் உதவியுடன் லால்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.
    • 15க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    லால்குடி:

    திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்து நத்த மாங்குடியில் இருந்து சத்திரம் பேருந்து நிலையம் நோக்கி அரசு பஸ் பயணிகளுடன் வந்து கொண்டிருந்தது.

    மேட்டுப்பட்டி அருகே வந்து கொண்டு இருந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையில் அங்குமிங்கும் ஓடி. சாலை ஓரத்தில் இருந்த வயலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இதில் பஸ் பயணிகள் ரத்த வெள்ளத்தில் காயங்களுடன் துடி துடித்தனர். இதனை பார்த்த அப்பகுதி பொது மக்கள் ஓடிவந்து, காயத்து டன் காணப்பட்ட 15க்கு மேற்பட்ட பயணிகளை ஆம்புலன்ஸ் உதவியுடன் லால்குடி அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.

    அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த 2 பேருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற லால்குடி இன்ஸ்பெக்டர் சரவணகுமார் மற்றும் போலீசார் சம்பவம் குறித்து அப்பகுதியில் விசாரணை நடத்தினர். பின்னர் வழக்கு பதிவு செய்து பேருந்து கவிழ்ந்தது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அரசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து 15க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும் போது, பூவாளூர் பின்னவாசல் முதல் ஆலங்குடி மகாஜனம் வரை சாலை மிகவும் குறுகலாக உள்ளதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது. சாலை அகலப்படுத்த பலமுறை கோரிக்கை வைத்தும் நட வடிக்கை எடுக்கப்படவில்லை என வேதனையுடன் அவர்கள் தெரிவித்தனர்.

    • ஊட்டி கேரட், பீன்ஸ் ஆகிய காய்கறிகளின் விலை திடீரென அதிகரித்து உள்ளது.
    • வெளி மார்க்கெட்டில் உள்ள காய்கறி கடைகளில் பீன்ஸ், கேரட் ஆகிய காய்கறிகள் ஒரு கிலோ ரூ.80 முதல் ரூ.90 வரை விற்கப்படுகிறது.

    போரூர்:

    கோயம்பேடு, காய்கறி மார்க்கெட்டில் வரத்து குறைவால் ஊட்டி கேரட், பீன்ஸ் ஆகிய காய்கறிகளின் விலை திடீரென அதிகரித்து உள்ளது.

    மொத்த விற்பனையில் ஊட்டி கேரட் ஒரு கிலோ ரூ.60-க்கும், பீன்ஸ் கிலோ ரூ.65-க்கும் விற்கப்படுகிறது. அவரைக்காய், வெண்டைக்காய், கத்தரிக்காய், பாகற்காய் மொத்த விற்பனையில் ஒரு கிலோ ரூ.20 முதல் ரூ.25 வரை மட்டுமே விற்பனை ஆகி வருகிறது. வெளி மார்க்கெட்டில் உள்ள காய்கறி கடைகளில் பீன்ஸ், கேரட் ஆகிய காய்கறிகள் ஒரு கிலோ ரூ.80 முதல் ரூ.90 வரை விற்கப்படுகிறது.

    கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் கோயம்பேடு சந்தைக்கு வரும் பீன்ஸ் வரத்து வெகுவாக குறைந்துள்ளதால் அதன் விலை அதிகரித்து உள்ளதாக மொத்த வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    • பிரதமர் மோடி பங்கேற்ற ரோடு ஷோவில் எந்தவித தேர்தல் நடத்தை விதிமுறைகளையும் மீறவில்லை.
    • எல்லோரை போலவும் பிரதமரை நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆர்வ மிகுதியில் பள்ளி மாணவர்கள் தன்னெழுச்சியாகவே பங்கேற்றுள்ளனர்.

    கோவை:

    கோவை மாவட்டத்தில் கடந்த 18-ந் தேதி பிரதமர் மோடி பங்கேற்ற பிரமாண்ட வாகன பேரணி (ரோடு ஷோ) நடைபெற்றது. இதில் பா.ஜ.க.வினர் மற்றும் பொதுமக்கள் என லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர்.

    இவர்களுக்கு மத்தியில் பள்ளி சீருடையில் மாணவ, மாணவிகளும் வாகன பேரணியில் பங்கேற்று வரவேற்றனர். இதற்கு தி.மு.க உள்ளிட்ட அனைத்து கூட்டணி கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் தேர்தல் ஆணையத்திலும் புகார் அளிக்கப்பட்டது.

    இதையடுத்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவிட்டார். அதன்பேரில் விசாரணை நடத்தப்பட்டு, பிரதமர் மோடியின் பிரமாண்ட ரோடு ஷோவில் மாணவர்களை பங்கேற்க வைத்ததாக சாய்பாபா கோவில் அருகே உள்ள அரசு உதவி பெறும் பள்ளி நிர்வாகம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    இதேபோல் பிரதமரின் வாகன பேரணியில் பங்கேற்றதாக வடவள்ளி பகுதியில் உள்ள தனியார் பள்ளியிடம் விளக்கம் கேட்டு, தனியார் பள்ளிகளுக்கான மாவட்ட கல்வி அலுவலர் செந்தில் நோட்டீஸ் வழங்கினார்.

    இதற்கிடையே பிரதமரின் பேரணியில் மாணவர்கள் பங்கேற்ற சம்பவம் தொடர்பாக பா.ஜனதா மாவட்ட தலைவரிடமும் விளக்கம் கேட்டு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பியது.

    அந்த நோட்டீசுக்கு கோவை மாவட்ட பா.ஜ.க. தலைவர் ரமேஷ்குமார், தேர்தல் நடத்தும் அலுவலரான சுரேஷ் என்பவரிடம் விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

    பிரதமர் மோடி பங்கேற்ற ரோடு ஷோவில் எந்தவித தேர்தல் நடத்தை விதிமுறைகளையும் மீறவில்லை. பிரதமர் மோடியை பார்ப்பதற்காக அனைவரும் அங்கு திரண்டிருந்தனர்.

    இந்த பேரணியில் நாங்கள் மாணவர்களை பங்கேற்க செய்யவில்லை. மாணவர்கள் பிரதமருக்கு ஆதரவாக பதாகைகளை ஏந்துவது, துண்டு பிரசுரங்களை வினியோகிப்பது என எந்த பிரசார பணியிலும் ஈடுபடவில்லை.

    எல்லோரை போலவும் பிரதமரை நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆர்வ மிகுதியில் பள்ளி மாணவர்கள் தன்னெழுச்சியாகவே பங்கேற்றுள்ளனர். ஒரு ஜனநாயக நாட்டில் பள்ளி மாணவர்கள் பிரதமரை நேரில் பார்க்க வருவதில் எந்த தவறும் இருப்பதாக கருதவில்லை.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • கன்னியாகுமரி மாவட்டம் ராமன்புதூரை பூர்வீகமாக கொண்ட சிம்லா முத்துசோழன் பிறந்து வளர்ந்தது எல்லாமே சென்னையில் தான்.
    • வக்கீலான சிம்லா முத்துசோழன், தி.மு.க. முன்னாள் அமைச்சர் சற்குணபாண்டியனின் மருமகள் ஆவார்.

    நெல்லை:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி அ.தி.மு.க. முதல் கட்ட வேட்பாளர்களை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று அறிவித்தார்.

    இதில் 16 தொகுதி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். கூட்டணி கட்சிகளுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கியது. இதைத்தொடர்ந்து தமிழகத்தில் எஞ்சிய 16 தொகுதிகளுக்கான அ.தி.மு.க. வேட்பாளர்களை எடப்பாடி பழனிசாமி இன்று அறிவித்தார். அதில் நெல்லை பாராளுமன்ற தொகுதியில் சிம்லா முத்துசோழன் போட்டியிடுகிறார்.

    தமிழகத்தில் அ.தி.மு.க. போட்டியிடும் 32 தொகுதிகளில் ஒரே ஒரு பெண் வேட்பாளர் என்ற பெயரை சிம்லா முத்துசோழன் பெற்றுள்ளார்.

    கன்னியாகுமரி மாவட்டம் ராமன்புதூரை பூர்வீகமாக கொண்ட இவர் பிறந்து வளர்ந்தது எல்லாமே சென்னையில் தான். வக்கீலான சிம்லா முத்துசோழன், தி.மு.க. முன்னாள் அமைச்சர் சற்குணபாண்டியனின் மருமகள் ஆவார். சற்குண பாண்டியன் தி.மு.க.வின் துணை பொதுச்செயலாளராகவும், கருணாநிதி முதலமைச்சராக இருந்த போது அமைச்சராகவும் இருந்துள்ளார்.

    சிம்லா முத்துசோழன் 2016-ம் ஆண்டு ஆர்.கே.நகர் தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை எதிர்த்து தி.மு.க. சார்பில் போட்டியிட்டு 30 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு தி.மு.க.வில் இருந்து விலகிய அவர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்த நிலையில் தற்போது அவருக்கு நெல்லை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட அ.தி.மு.க. சார்பில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    • பங்குனி உத்திரத்தை முன்னிட்டு லட்சார்ச்சனை மற்றும் தெப்பத்திருவிழா இன்று தொடங்கி வருகிற 27-ந்தேதி வரை நடைபெறுகிறது.
    • இன்று காலை யாக சாலை பூஜைகளுடன் லட்சார்ச்சனை தொடங்கியது.

    சென்னை:

    வடபழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திரவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு பங்குனி உத்திரத்தை முன்னிட்டு லட்சார்ச்சனை மற்றும் தெப்பத்திருவிழா இன்று தொடங்கி வருகிற 27-ந்தேதி வரை நடைபெறுகிறது.

    இன்று காலை யாக சாலை பூஜைகளுடன் லட்சார்ச்சனை தொடங்கியது. வருகிற 23-ந்தேதி மாலை வரை லட்சார்ச்சனை நடக்கிறது.

    வருகிற 24-ந்தேதி பங்குனி உத்திரத்தன்று உச்சி கால தீர்த்தவாரி மற்றும் கலசாபிஷேகத்துடன் பூஜைகள் நடைபெறுகின்றன. அன்று இரவு 7 மணிக்கு சிறப்பு அலங்காரத்துடன் சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது. வருகிற 25-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை இரவு 7 மணிக்கு தெப்பத் திருவிழா நடைபெறுகிறது.

    • சிறையில் பார்க்க வந்த மகனை பார்க்க விடாமல் காவலர்கள் தடுத்தார்கள்.
    • எனது மகனை நான் ஒரு வருடம் தொடாமல் பாசத்தை கட்டுப்படுத்தி தியாகம் செய்துள்ளேன்.

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    பிரதமர் மோடி நாங்கள் தியாகம் செய்யவில்லை என கூறுகிறார். நாங்கள் தியாகத்திலேயே வளர்ந்தவர்கள். பலமுறை மிசாக்கு சிறை சென்றுள்ளோம். அப்படி சிறைக்கு சென்ற போது எனது மகன் எனது சட்டையை பிடித்து இழுத்து அழுது கொண்டிருந்தார். மேலும் சிறையில் பார்க்க வந்த மகனை பார்க்க விடாமல் காவலர்கள் தடுத்தார்கள்.

    மேலும் எனது மகனை நான் ஒரு வருடம் தொடாமல் பாசத்தை கட்டுப்படுத்தி தியாகம் செய்துள்ளேன். திமுக-வில் செல்வாக்குள்ள வேட்பாளர் நிற்பதால் அவரை ரெய்டு நடத்தி கைது செய்ய மேலிடம் சொன்னதாக எனக்கு தகவல் வந்துள்ளது. அதைப் பற்றி நாங்கள் கவலைப்பட மாட்டோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இரு கட்சி தலைவர்களுடனும் பா.ஜனதா குழுவினர் பேசி வருகிறார்கள்.
    • நாளை வேட்பாளர் பட்டியல் வெளியாகிறது.

    சென்னை:

    பா.ஜனதா கூட்டணியில் இடம்பெற்றுள்ள த.மா.கா., பா.ம.க. ஆகிய கட்சிகளுக்கான தொகுதிகளின் எண்ணிக்கை உடன்பாடாகிவிட்டது.

    இன்று கூட்டணி கட்சிகளுடன் உடன்பாடு செய்து விட்டு பிற்பகல் 2 மணிக்கு தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை டெல்லி செல்வதாக இருந்தது.

    ஆனால் மயிலாடுதுறை தொகுதியை பா.ம.க.வும், த.மா.கா.வும் கேட்பதால் உடன்பாடு எட்டுவதில் தாமதமானது.

    இதுதொடர்பாக இரு கட்சி தலைவர்களுடனும் பா.ஜனதா குழுவினர் பேசி வருகிறார்கள். மாலை 4 மணிக்கு த.மா.கா. குழுவினர் கமலாலயம் செல்கிறார்கள். மாலைக்குள் அனைத்து கட்சிகளுடனும் பேச்சு வார்த்தையை முடித்துவிட்டு அண்ணாமலை வேட்பாளர் பட்டியலுடன் டெல்லி செல்கிறார். நாளை வேட்பாளர் பட்டியல் வெளியாகிறது.

    • 85 வயது கடந்த முதியவர்கள் தங்கள் வீட்டிலேயே இருந்து வாக்களிக்கும் வகையில் தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.
    • பணிகள் கிராம நிர்வாக அலுவலர்கள் மேற்பார்வையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    நெல்லை:

    நெல்லை பாராளுமன்ற தொகுதியில் 85 வயது முதல் 99 வயது வரையிலான முதியவர்கள் 23 ஆயிரத்து 100 பேரும், 100 வயதை கடந்தவர்கள் 795 பேரும் உள்ளனர்.

    இதில் 85 வயது கடந்த முதியவர்கள் தங்கள் வீட்டிலேயே இருந்து வாக்களிக்கும் வகையில் தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.

    அதனடிப்படையில் நெல்லை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் முதியவர்கள் வீடுகளிலேயே இருந்தவாறு வாக்களிக்கும் வகையிலான 12டி விண்ணப்பம் வாக்குச்சாவடி அலுவலர்களால் முதியவர்களின் வீடுகளுக்கே சென்று வழங்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் கிராம நிர்வாக அலுவலர்கள் மேற்பார்வையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் மேலப் பாளையம் சிவராஜபுரம் பகுதியில் வசிக்கும் 90 வயது மூதாட்டியான வள்ளியம்மாளிடம் அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் அனந்த ராமகிருஷ்ணன், வீட்டில் இருந்து வாக்களிக்கும் வகையிலான விண்ணப்பத்தை வழங்கி உள்ளார்.

    அப்போது ஓட்டு கேட்டு வேட்பாளர்கள் தான் யாரோ வந்திருக்கிறார்கள் என்று நினைத்த மூதாட்டி வள்ளியம்மாள், அந்த விண்ணப்பத்தை பெற்றுக்கொண்டு என் ஓட்டு உனக்குதான் பா, உனக்குத்தான் என் ஓட்டு என்று கூறியுள்ளார். உடனே கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்டோர் கலகலவென சிரித்து விட்டனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • வாலிநோக்கம்-கீழமுந்தல் சாலையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • போலீசார் லாரியை சோதனையிட்ட போது 70 மூடைகளில் 30 கிலோ எடையுள்ள பீடி இலைகள் இருப்பது தெரிய வந்தது.

    சாயல்குடி:

    ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு கஞ்சா, மாத்திரைகள், பீடி இலைகள், தங்கம் உள்ளிட்டவை அடிக்கடி கடத்தப்பட்டு வருகிறது.

    மேலம் இலங்கையில் இருந்து ராமநாதபுரத்திற்கு சட்ட விரோதமாக கடத்தல்கள் நடந்து வருகிறது. இதனை தடுக்க கடலோர காவல்படை போலீசார் தீவிர ரோந்து சுற்றி வருகின்றனர்.

    இந்நிலையில் சாயல்குடி அருகே உள்ள வாலிநோக்கத்தில் இருந்து இலங்கைக்கு பீடி இலைகள் கடத்த இருப்பதாக கடலோர காவல்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் வாலிநோக்கம்-கீழமுந்தல் சாலையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த சரக்கு லாரியை போலீசார் மறித்தனர். உடனே அதில் இருந்த டிரைவர் உள்பட சிலர் லாரியை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பினர். தொடர்ந்து போலீசார் லாரியை சோதனையிட்ட போது 70 மூடைகளில் 30 கிலோ எடையுள்ள பீடி இலைகள் இருப்பது தெரிய வந்தது. அதனையும், கடத்த பயன்படுத்தப்பட்ட சரக்கு லாரியையும் பறிமுதல் செய்த போலீசார் கடத்த முயன்றது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக வாலிநோக்கம் கடலோர காவல்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள் வழக்குப்பதிவு செய்து கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டது யார்? என்பது குறித்து தப்பியோடிய நபர்களையும் தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    • தி.மு.க. சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ எம்.பி. பங்கேற்று தி.மு.க. வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்வது குறித்து ஆலோசனை வழங்க உள்ளார்.
    • கூட்டத்தில் வேட்பாளர் அல்லது அவரது முகவர், மாவட்ட கழக செயலாளர்கள், வழக்கறிஞர் அணி அமைப்பாளர்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்று தி.மு.க. தலைமைக் கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. வேட்பாளர்களாக போட்டியிடுபவர்களுக்கு வேட்புமனு தாக்கல் செய்வது குறித்து ஆலோசனை வழங்க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் நாளை காலை 11 மணியளவில் (22-ந்தேதி) காணொலி காட்சி வாயிலாக கூட்டம் நடத்தப்படுகிறது.

    இதில் தி.மு.க. சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ எம்.பி. பங்கேற்று தி.மு.க. வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்வது குறித்து ஆலோசனை வழங்க உள்ளார்.

    கூட்டத்தில் வேட்பாளர் அல்லது அவரது முகவர், மாவட்ட கழக செயலாளர்கள், வழக்கறிஞர் அணி அமைப்பாளர்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்று தி.மு.க. தலைமைக் கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    • சைதாப்பேட்டையில் கட்டுமான நிறுவனத்துக்கு சொந்தமான இடம் உள்ளது.
    • சோதனையின்போது பல்வேறு முக்கிய ஆவணங்கள் கிடைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    சென்னை:

    சென்னையில் இன்று 10 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். சென்னையில் உள்ள பிரபல கட்டுமான நிறுவனம் மற்றும் ஐ.டி. நிறுவனம் ஆகியவற்றுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்க துறையினர் இந்த சோதனையை நடத்தி வருகிறார்கள்.

    சென்னை தரமணியில் உள்ள ஐ.டி. வளாகத்தில் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். மேலும் சென்னை ஆழ்வார்பேட்டை டி.டி.கே. சாலையில் உள்ள கட்டுமான நிறுவனத்தின் தலைமை அலுவலகம் உள்பட 10 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.

    ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்டுமான நிறுவனத்தின் தலைமை அலுவலகத்துக்கு இன்று காலை 7.10 மணிக்கு அதிகாரிகள் காரில் வந்தனர். அவர்கள் அந்த அலுவலகத்தில் சோதனையில் ஈடுபட்டனர்.

    கட்டுமான நிறுவனத்தின் இயக்குனர் பாலா என்பவருக்கு சென்னை நீலாங்கரையில் உள்ளது. அங்கும் சோதனை நடைபெற்று வருகிறது. நீலாங்கரையில் மட்டும் 3 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

    மேலும் சைதாப்பேட்டையில் இந்த கட்டுமான நிறுவனத்துக்கு சொந்தமான இடம் உள்ளது. அங்கும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். கட்டுமான நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் ஊழியர் வைர கணேஷ் என்பவரின் வீடு புது வண்ணாரப்பேட்டையில் உள்ளது. அங்கும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.

    கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த தனியார் கட்டுமான நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இப்போது சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த சோதனையின்போது பல்வேறு முக்கிய ஆவணங்கள் கிடைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    பிரபல கட்டுமான நிறுவனம் தமிழகம் முழுவதும் முக்கியமான பகுதிகளில் இடத்தை வாங்கி குடியிருப்பு மனைகளாக மாற்றி விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

    • விஜயகாந்த் இல்லாமல் தே.மு.தி.க. சந்திக்கும் முதல் பாராளுமன்ற தேர்தல் இது.
    • தே.மு.தி.க. விரும்பிய தொகுதிகளை அ.தி.மு.க. வழங்கியுள்ளது.

    சென்னை:

    தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா சென்னையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    தே.மு.தி.க. தலைமைக் கழகத்தில் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டமும், பாராளுமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர் நேர்காணலும் நடந்து வருகிறது.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், அ.தி.மு.க. மூத்த நிர்வாகிகளும் இன்று விஜயகாந்த் நினைவிடத்தில் மரியாதை செலுத்தி விட்டு விஜயகாந்த் அறையில் சிறிது நேரம் கலந்தாலோசனை செய்தனர்.

    வருகிற 24-ந்தேதி திருச்சியில் மாபெரும் பொதுக்கூட்டம் நடக்க இருக்கிறது. அந்த பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க., தே.மு.தி.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சேர்ந்த அனைத்து தலைவர்களும் கலந்து கொள்ள இருக்கிறோம்.

    அந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வருமாறு எடப்பாடி பழனிசாமி என்னை நேரில் வந்து அழைத்துள்ளார். எனவே நானும், முக்கிய நிர்வாகிகளும் அந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறோம்.

    40 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அந்த பொதுக்கூட்டத்தில் அறிமுகம் செய்து அன்று முதல் பிரசாரத்தையும் தொடங்க இருக்கிறோம்.

    இந்த கூட்டணி ஒற்றுமையாக கூட்டணி தர்மத்துடன் செயலாற்றி 'நாளை நமதே, நாற்பதும் நமதே' என்று வெற்றி ஒன்றையே இலக்காக கொண்டு நல்ல புரிதலோடு பயணிக்க இருக்கிறோம்.

    இங்கு எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, விஜயகாந்த் ஆகிய 3 தெய்வங்களின் ஆசீர்வாதத்தோடு இந்த கூட்டணி, 2011-ல் அமைந்த வெற்றிக் கூட்டணி போல சரித்திரம் படைக்கும்.

    தே.மு.தி.க.வுக்கு மேல் சபை உறுப்பினர் சீட் உறுதியாகிவிட்டது. வெற்றிலை பாக்கை மாற்றி உறுதி செய்துவிட்டோம். ஆனால் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

    மேல்சபை எம்.பி. தேர்தலில் யார் போட்டியிடுவார் என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×