என் மலர்
நீங்கள் தேடியது "நிர்வாகிகள் நோட்டீஸ்"
- பிரதமர் மோடி பங்கேற்ற ரோடு ஷோவில் எந்தவித தேர்தல் நடத்தை விதிமுறைகளையும் மீறவில்லை.
- எல்லோரை போலவும் பிரதமரை நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆர்வ மிகுதியில் பள்ளி மாணவர்கள் தன்னெழுச்சியாகவே பங்கேற்றுள்ளனர்.
கோவை:
கோவை மாவட்டத்தில் கடந்த 18-ந் தேதி பிரதமர் மோடி பங்கேற்ற பிரமாண்ட வாகன பேரணி (ரோடு ஷோ) நடைபெற்றது. இதில் பா.ஜ.க.வினர் மற்றும் பொதுமக்கள் என லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர்.
இவர்களுக்கு மத்தியில் பள்ளி சீருடையில் மாணவ, மாணவிகளும் வாகன பேரணியில் பங்கேற்று வரவேற்றனர். இதற்கு தி.மு.க உள்ளிட்ட அனைத்து கூட்டணி கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் தேர்தல் ஆணையத்திலும் புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவிட்டார். அதன்பேரில் விசாரணை நடத்தப்பட்டு, பிரதமர் மோடியின் பிரமாண்ட ரோடு ஷோவில் மாணவர்களை பங்கேற்க வைத்ததாக சாய்பாபா கோவில் அருகே உள்ள அரசு உதவி பெறும் பள்ளி நிர்வாகம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதேபோல் பிரதமரின் வாகன பேரணியில் பங்கேற்றதாக வடவள்ளி பகுதியில் உள்ள தனியார் பள்ளியிடம் விளக்கம் கேட்டு, தனியார் பள்ளிகளுக்கான மாவட்ட கல்வி அலுவலர் செந்தில் நோட்டீஸ் வழங்கினார்.
இதற்கிடையே பிரதமரின் பேரணியில் மாணவர்கள் பங்கேற்ற சம்பவம் தொடர்பாக பா.ஜனதா மாவட்ட தலைவரிடமும் விளக்கம் கேட்டு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பியது.
அந்த நோட்டீசுக்கு கோவை மாவட்ட பா.ஜ.க. தலைவர் ரமேஷ்குமார், தேர்தல் நடத்தும் அலுவலரான சுரேஷ் என்பவரிடம் விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-
பிரதமர் மோடி பங்கேற்ற ரோடு ஷோவில் எந்தவித தேர்தல் நடத்தை விதிமுறைகளையும் மீறவில்லை. பிரதமர் மோடியை பார்ப்பதற்காக அனைவரும் அங்கு திரண்டிருந்தனர்.
இந்த பேரணியில் நாங்கள் மாணவர்களை பங்கேற்க செய்யவில்லை. மாணவர்கள் பிரதமருக்கு ஆதரவாக பதாகைகளை ஏந்துவது, துண்டு பிரசுரங்களை வினியோகிப்பது என எந்த பிரசார பணியிலும் ஈடுபடவில்லை.
எல்லோரை போலவும் பிரதமரை நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆர்வ மிகுதியில் பள்ளி மாணவர்கள் தன்னெழுச்சியாகவே பங்கேற்றுள்ளனர். ஒரு ஜனநாயக நாட்டில் பள்ளி மாணவர்கள் பிரதமரை நேரில் பார்க்க வருவதில் எந்த தவறும் இருப்பதாக கருதவில்லை.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.






