என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • தருமபுரி ஆர்.டி.ஓ., காயத்திரி பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை சரிபார்த்து, தருமபுரி வருமான வரித்துறை அலுவலர்களிடம் ஒப்படைத்தார்.
    • உரிய ஆவணமின்றி ரூ.6 லட்சத்து 54 ஆயிரத்து 505 பணத்தை எடுத்துச் செல்வது தெரியவந்தது.

    தருமபுரி:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது. இந்த நிலையில், தருமபுரி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள வரை, உரிய ஆவணங்கள் இன்றி பணம் எடுத்து செல்லவதை தடுக்க, தருமபுரி மாவட்டத்தில், 10 சோதனை சாவடிகள், 45 பறக்கும் படை குழுவினர், 45 நிலையான கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டது.

    இதையடுத்து, பறக்கும் படையினர் மாவட்டம் முழுவதும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதனையடுத்து நல்லம்பள்ளி அடுத்த சேசம்பட்டி கூட்டு ரோடு அருகே ஜெயக்குமார் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது, தருமபுரி நோக்கி வந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது அதில், 11.58 லட்சம் ரூபாய் இருந்தது கண்டு பிடிக்கபட்டது. இதையடுத்து, பறக்கும் படையினர் காரில் இருந்தவர்களிடம் விசாரித்தபோது, தருமபுரி மாவட்டம், லளிகத்தை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் மோகன், 29 என்பவர், தனியார் நிதி நிறுவனத்தில் இருந்து பணத்தை தருமபுரிக்கு கொண்டு வந்தது தெரியவந்தது.

    பணத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லாததை அடுத்து கைப்பற்றிய பணத்தை, பறக்கும் படை யினர், தருமபுரி தாசில்தார் அலுவலகத்தில் தாசில்தார் ஜெய செல்வத்திடம் ஒப்படைத்தனர்.

    தருமபுரி ஆர்.டி.ஓ., காயத்திரி பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை சரிபார்த்து, தருமபுரி வருமான வரித்துறை அலுவலர்களிடம் ஒப்படைத்தார்.

    பணத்துக்கான உரிய ரசீதை ஒப்படைத்து, வருமான வரித்துறையினரிடம் இருந்து பணத்தை பெற்றுக் கொள்ளலாம் என, வருவாய்த்துறையினர் பணத்தை எடுத்து வந்த மோகனிடம் தெரிவித்தனர். இதே போன்று தொப்பூரில் உரிய அனுமதியின்றி எடுத்து வரப்பட்ட, ரூ.69 ஆயிரம் பணத்தை, பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

    தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த கோபிநாதம்பட்டி அருகே பறக்கும் படையினர் சேலத்தில் இருந்து அரூர் நோக்கி வந்த போர்ஸ் டிராவலர்ஸ் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர்.

    அதில் உரிய ஆவணமின்றி ரூ.6 லட்சத்து 54 ஆயிரத்து 505 பணத்தை எடுத்துச் செல்வது தெரியவந்தது. இதனை அடுத்து பணத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினார்.

    அதில் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை சேர்ந்த ராஜி கவுண்டர் என்பவருக்கு சொந்தமான மாதா மலர் பீடி நிறுவனத்தின் மூலம் தயாரித்த புகையிலை வியாபார பொருட்களை ஜோலார்பேட்டை முதல் சேலம் வரை உள்ள கடைகளுக்கு விற்பனை செய்யும் விற்பனையாளராக இருந்து வருவதாகவும், விற்பனை செய்த பணத்தை எடுத்துக்கொண்டு சேலத்தில் இருந்து ஜோலார்பேட்டைக்கு கொண்டு செல்வதாக தெரிவித்துள்ளார்.

    அதற்கான உரிய ஆவணம் இல்லாததால் உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட பணம் அவரிடமிருந்து மேற்கண்ட தொகை பறிமுதல் செய்யப்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது,

    • மகாபாரத சொற்பொழிவு மற்றும் அக்னி வசந்த உற்சவ பெருவிழா நடைபெற்றது .
    • துரியோதனன் வேடமணிந்து படுகள நிகழ்வை சிறப்பாக செய்து காண்பித்தனர்.

    திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த கீழ்பாலூர் கிராமத்தில் மகாபாரத சொற்பொழிவு மற்றும் அக்னி வசந்த உற்சவ பெருவிழா நடைபெற்றது .

    125 அடியில் அமைக்கப்பட்டிருந்த துரியோதனன் படுகளம் அருகே நாடக கலைஞர்கள் பீமன் மற்றும் துரியோதனன் வேடமணிந்து படுகள நிகழ்வை சிறப்பாக செய்து காண்பித்தனர்.

    24 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியை காண கீழ்பாலூர் மற்றும் சுற்று வட்டார பகுதியில் இருந்து பல்லாயிரக்கணக்கான பொதுமக்களும் பக்தர்களும் கலந்து கொண்டு துரியோதனன் படுகளத்தை கண்டுகளித்தது குறிப்பிடத்தக்கது.

    • 14 சோதனைச்சாவடிகளிலும் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொள்ள போலீசார் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர்.
    • பதட்டமான பகுதிகளில் கூடுதலாக தற்காலிக சோதனைச்சாவடிகள் அமைக்க வேண்டும்.

    கோவை:

    கோவை மாவட்டம் கேரள மாநிலத்தின் எல்லையில் உள்ளது. இந்த 2 எல்லைகளிலும் மொத்தம் 14 சோதனைச்சாவடிகள் உள்ளன. நடுப்புணி, வடக்கு காடு, ஜமீன் காளியாபுரம், கோபாலபுரம், வேலந்தாவளம், வீரப்ப கவுண்டனூர், வாளையார், செம்மனாம்பதி உள்ளிட்ட இடங்களில் இந்த சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு இந்த 14 சோதனைச்சாவடிகளிலும் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொள்ள போலீசார் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர். தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு வினியோகிக்க பணம், பரிசுப்பொருட்கள் மற்றும் மதுபானங்கள் கடத்த வாய்ப்பு உள்ளதால் அதனை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது.

    இதுதொடர்பாக தமிழக மற்றும் கேரள மாநில அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் கோவை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார்பாடி, திருச்சூர் மாவட்ட கலெக்டர் கிருஷ்ணன் தேஜா மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

    தமிழகம் - கேரள மாநில எல்லையாக உள்ள கோவை மாவட்டத்தில் உள்ள சோதனைச்சாவடிகள் வழியாக வரும் வாகனங்களை தணிக்கை மேற்கொண்டு பணம், மதுபானங்கள், போதைப்பொருட்கள், பரிசு பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா என்பதை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.

    கேரளா மாநிலத்தில் உள்ள பாலக்காடு, திருச்சூர், எர்ணாகுளம், இடுக்கி மாவட்ட எல்லைக்கு உட்பட்ட சோதனைச்சாவடிகளில் வாகன தணிக்கை மற்றும் பாதுகாப்பு பணி மேற்கொள்வது.

    சோதனைச்சாவடிகளில் வாகன சோதனையை தீவிரப்படுத்த வேண்டும். பதட்டமான சோதனைச்சாவடிகளை கண்டறிய வேண்டும். பதட்டமான சோதனைச்சாவடிகளை கண்டறிய வேண்டும். பதட்டமான பகுதிகளில் கூடுதலாக தற்காலிக சோதனைச்சாவடிகள் அமைக்க வேண்டும்.

    மதுபானங்கள் கொண்டு செல்வதை கண்காணிக்க குழு அமைக்க வேண்டும், வெளிநாட்டு மதுவகைகள் இரு மாநிலங்களுக்கு இடையே நடமாட்டத்தை கண்காணிக்க வாகன சோதனை மற்றும் கண்காணிப்பை மேம்படுத்த வேண்டும்.

    மேற்கண்ட ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

    • 2024 பாராளுமன்றத் தேர்தல் களத்தில் நாம் சந்திக்கும் எதிரிகள் நமக்கான அரசியல் எதிரிகள் மட்டுமல்ல, இந்தியாவின் எதிரிகள்.
    • ஒவ்வொரு வாக்குச்சாவடிக்குட்பட்ட வாக்காளர்களிடமும் தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவைத் திரட்டுவோம்.

    சென்னை:

    திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

    நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் மடல்.

    இந்தியாவை மீட்பதற்கான அறப்போராட்டக் களத்தில் உங்களுடன் இணைந்து நானும் நிற்கிறேன். தமிழ்நாடு இழந்த உரிமைகளை மீட்கவும், இந்தியாவில் உள்ள மாநிலங்கள் அனைத்தும் வளம் பெறவும், இந்திய அரசியலமைப்புச் சட்டம் வலியுறுத்துகிற கூட்டாட்சிக் கருத்தியலைக் காத்திடவும், பாசிச சக்திகளை வீழ்த்திடவும் பாராளுமன்றத் தேர்தல் எனும் ஜனநாயகக் களத்தை எதிர்கொள்கிறோம்.

    திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கொள்கைக் கூட்டணி தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் உள்ள 40 தொகுதிகளைத் தோழமைக் கட்சிகளுடன் இணக்கமாகப் பங்கிட்டுக் கொண்டு களம் காண ஆயத்தமாகிவிட்டது. அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடந்த நிகழ்வில் 2024 பாராளுமன்றத் தேர்தல் களத்திற்கான தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு, கழகத்தின் சார்பில் களமிறங்கும் 21 வெற்றி வேட்பாளர்களையும் கழகத் தலைவர் என்ற முறையில் உங்களில் ஒருவனான நான் அறிவித்தேன்.

    எந்தவொரு தேர்தல் களமாக இருந்தாலும் எதனை அடிப்படை நோக்கமாகக் கொண்டு களம் காண்கிறோம் என்பதைத் தேர்தல் அறிக்கை வாயிலாகத் தெள்ளத் தெளிவாகத் தெரிவித்து மக்களைச் சந்திப்பதுதான் பேரறிஞர் அண்ணா காலத்திலிருந்து தி.மு.கழகம் கடைப்பிடித்து வருகின்ற தேர்தல் நடைமுறை. அதன் வெளிப்பாடுதான், கழகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள 64 பக்கத் தேர்தல் அறிக்கை.

    தமிழ்நாடு மீண்டும் உரிமையுடன் திகழ்வதற்காக மட்டுமின்றி, இந்தியாவில் உண்மையான ஜனநாயகமும் கூட்டாட்சிக் கருத்தியலும் நிலைபெறவும் கழகத்தின் சார்பில் வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளன. ஏழை - நடுத்தர மக்களை அன்றாடம் பாடுபடுத்தும் சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வைக் கட்டுப்படுத்தி, 500 ரூபாயாகக் குறைப்பது, பெட்ரோல் - டீசல் விலைக் குறைப்பு, தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடிகளை முற்றிலுமாக அகற்றுவது உள்ளிட்ட மக்கள் நலன் சார்ந்த வாக்குறுதிகளை வழங்கியிருக்கிறோம்.

     

    மாநிலங்கள் அதிக அதிகாரங்கள் பெறும் வகையில் அரசியல் சட்டத்தில் உரிய திருத்தங்கள், ஆளுநரின் அதிகாரங்களுக்குக் கடிவாளம், சி.ஏ.ஏ. சட்டம் இரத்து, நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு, பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படாது, நாடு முழுவதும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம், உழவர்களின் விளைபொருட்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலை, மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு 10 இலட்ச ரூபாய் வட்டியில்லாக் கடன், தமிழ்நாட்டு மீனவர்களின் நலன் காக்கும் சட்டங்கள், மாவட்டந்தோறும் தொழில்வளர்ச்சிக்கும் கட்டமைப்புக்குமான திட்டங்கள் உள்ளிட்ட இன்னும் பல வாக்குறுதிகளுடன் அனைத்துத் தரப்பு மக்களுக்குமான தேர்தல் அறிக்கையைத் திராவிட முன்னேற்றக் கழகம் வெளியிட்டுள்ளது. உண்மையான புதிய இந்தியாவைக் கட்டமைத்திடும் உன்னத இலட்சியத்துடன், தோழமைக் கட்சிகளுடன் இணைந்து தி.மு.க. களம் காண்கிறது.

    கழகத்தின் சார்பில் போட்டியிடும் 21 வேட்பாளர்களில் அனுபவமிக்கவர்களும் உண்டு; அறிமுக வேட்பாளர்களும் உண்டு. அனைவருமே உதயசூரியன் சின்னத்தின் வேட்பாளர்கள் என்பது மட்டுமே உடன்பிறப்புகளாம் உங்கள் இதயச்சுவரில் பதிய வேண்டிய செய்தி. கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளும் நமது தொகுதிகள்தான். அவர்களின் வேட்பாளர்களும் நம்மவர்கள்தான். அவர்களின் சின்னங்களும் நம்முடையதுதான். நாற்பது தொகுதிகளில் தனித்தனி வேட்பாளர்கள் நின்றாலும், அனைத்துத் தொகுதிகளிலும் உங்களில் ஒருவனான இந்த ஸ்டாலின்தான் வேட்பாளராக நிற்கிறேன் என்கிற உணர்வுடனும் கொள்கை உறவுடனும் இந்தியா கூட்டணி வெற்றிபெற்று ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திட வேண்டும் என்ற உத்வேகத்துடனும் களப்பணியாற்றிட வேண்டும் என ஒவ்வொரு உடன்பிறப்பையும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

    உங்களின் களப்பணிகளை ஊக்கப்படுத்திடவும், தமிழ்நாட்டு வாக்காளப் பெருமக்களின் ஆதரவைத் திரட்டிடவும், நாற்பது தொகுதிகளிலும் நமது கூட்டணியின் வெற்றியினை உறுதி செய்திடவும் ஒவ்வொரு பாராளுமன்றத் தொகுதிக்கும் நேரில் வருகிறேன். நாளை (மார்ச் 22) தீரர் கோட்டமாம், திருப்புமுனைகள் பல தந்த திருச்சியிலிருந்து தேர்தல் பரப்புரையைத் தொடங்குகிறேன். தொடர்ச்சியான பயணங்களுக்குத் திட்டமிடப்பட்டுள்ளது. தலைமைக் கழகம் திட்டமிட்டுள்ள நிகழ்ச்சிகளுக்கேற்ப அந்தந்த தொகுதிகளைச் சேர்ந்த மாவட்டக் கழக நிர்வாகத்தினர், தோழமைக் கட்சியினர், ஆதரவு இயக்கங்கள் உள்ளிட்ட அனைவரின் ஒத்துழைப்பையும் வேண்டுகிறேன்.

    தேர்தல் ஆணையத்தின் நெறிமுறைகளுக்குட்பட்டு, ஒவ்வொரு தொகுதியிலும் கழகத்தின் பரப்புரை இடைவிடாத அளவில் நடைபெற வேண்டும் என்பதற்கேற்ப கழகத்தின் பொதுச்செயலாளர் அண்ணன் துரைமுருகன் அவர்கள் தொடங்கி தலைமைக் கழக நிர்வாகிகளும், கொள்கைப் பரப்பு செயலாளர்களும், தலைமைக் கழகப் பேச்சாளர்களும் தொடர்ச்சியான பரப்புரைப் பயணங்களை மேற்கொள்ளவிருக்கிறார்கள். பொதுக்கூட்டங்கள், தெருமுனைக் கூட்டங்கள் ஆகியவற்றுடன் திண்ணைப் பிரசாரமும் மேற்கொள்ளப்பட வேண்டும்.

    ஜனநாயகப் போர்ப்படையின் முன்கள வீரர்களான கழக உடன்பிறப்புகளிடம் உங்களில் ஒருவனான நான் அடிக்கடி வலியுறுத்துவது போல, வீடு வீடாகச் சென்று திண்ணைப் பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டும். அதுதான் மக்களின் உள்ளத்தில் உண்மை நிலவரத்தைப் பதிய வைக்கும். நம்பிக்கையை மேம்படுத்தும். வெற்றியை உறுதி செய்யும்.

    2024 பாராளுமன்றத் தேர்தல் களத்தில் நாம் சந்திக்கும் எதிரிகள் நமக்கான அரசியல் எதிரிகள் மட்டுமல்ல, இந்தியாவின் எதிரிகள். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எதிரிகள். இந்தியாவின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் எதிரிகள். இந்தியாவின் பன்முகத்தன்மைக்கும் மதச்சார்பின்மைக் கொள்கைக்கும் எதிரிகள். கூட்டாட்சிக் கருத்தியலுக்கு எதிரிகள். மொத்தமாகச் சொல்வதென்றால், மனித குலத்தின் எதிரிகள்.

    பொய் சொல்ல அஞ்சாதது மட்டுமல்ல, பொய்களை மட்டுமே சொல்வது என்பதைக் குறிக்கோளாகவே கொண்டிருக்கிறார்கள் ஒன்றிய பா.ஜ.க ஆட்சியாளர்கள். பிரதமர் என்கிற மாண்புக்குரிய பொறுப்பை வகிப்பவர் தொடங்கி ஒன்றிய அமைச்சர்கள், இணை அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் என அத்தனை பேருமே பொய்யை மட்டுமே பரப்புரையாக மேற்கொண்டு வருவதை கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டின் வாக்காளர்கள் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். தமிழ்நாட்டிற்குக் கடந்த பத்தாண்டுகால ஆட்சியில் என்னென்ன திட்டங்களைக் கொண்டு வந்தோம் என்பதைச் சொல்வதற்கு எதுவுமில்லாமல் தி.மு.க.வை விமர்சிப்பதும், தி.மு.க. ஆட்சி மீது வீண்பழி போடுவதும், தி.மு.க. கூட்டணி பக்கம்தான் தமிழ்நாட்டு மக்கள் இருக்கிறார்கள் என்பது உறுதியாகத் தெரிவதால், தமிழர்களையே தீவிரவாதிகள் எனச் சித்தரிப்பதும் பா.ஜ.க.வின் பரப்புரை ஃபார்முலாவாக இருக்கிறது.

    நம்மிடம் தந்தை பெரியாரின் சமூகநீதிக் கொள்கை உள்ளது. ஜனநாயகக் களத்தை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்கிற கண்ணியத்தைக் கற்றுத் தந்த பேரறிஞர் அண்ணாவின் வழிமுறை இருக்கிறது. முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் வழியில் தொடரும் ஆட்சியின் சாதனைகள் நிறைந்திருக்கிறது. அவற்றைத் தேர்தல் களத்தின் ஆயுதங்களாகக் கையில் ஏந்துவோம். பத்தாண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் தமிழ்நாடு எப்படி வஞ்சிக்கப்பட்டுள்ளது என்பதை வீடு வீடாகச் சென்று ஒவ்வொரு வாக்காளரிடமும் எடுத்துச் சொல்வோம். அதற்கு அ.தி.மு.க எப்படி துணைபோனது என்கிற துரோகத்தையும் மறக்காமல் எடுத்துரைப்போம். தனித்தனியாக நிற்கும் கள்ளக்கூட்டணியின் முகத்திரையைக் கிழித்திடுவோம். வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் பொய்களையும் வதந்திகளையும் முறியடிக்கும் வகையில் ஆன்லைன் பரப்புரையையும் முனைப்புடன் மேற்கொள்வோம். ஒவ்வொரு வாக்குச்சாவடிக்குட்பட்ட வாக்காளர்களிடமும் தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவைத் திரட்டுவோம். ஒவ்வொரு வாக்கும் நம் 'இந்தியா'வின் வெற்றியை உறுதி செய்யட்டும்.

     

    பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது, எளிய மக்களை நடுஇரவில் நடுத்தெருவில் நிற்க வைத்துவிட்டு, 'புதிய இந்தியா பிறந்தது' என்று வெற்று முழக்கமிட்ட பிரதமரும் பா.ஜ.க.வினரும் இப்போது 'இந்தியா' என்று உச்சரிக்கவே தயங்குகிறார்கள் என்றால் இதுதான் நாம் கட்டமைத்துள்ள உண்மையான புதிய 'இந்தியா'வின் முதற்கட்ட வெற்றி. அந்த வெற்றி தேர்தல் களத்திலும் தொடர்ந்திடும். ஆட்சி மாற்றத்தை உருவாக்கும்.

    இதுவரை நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல்கள் அனைத்தும் யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதை முடிவு செய்வதற்கான தேர்தல்களாக இருந்தன. இந்த முறை யார் ஆட்சிக்கு வரவே கூடாது என்பதற்கான தேர்தல் களமாக அமைந்துள்ளது. இது வெறும் தேர்தல் களமல்ல.. ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டிய அறப்போர்க்களம். இந்தப் போரில் நாம் வென்றாக வேண்டும். ஓயாது உழைத்தால் உறுதியான வெற்றி நிச்சயம்.

    நாற்பதும் நமதே! நாடும் நமதே!! என்று தெரிவித்துள்ளார்.

    • பார்சல்கள் பதிவு செய்யும்போது அதில் உள்ள விவரங்கள் கேட்கப்பட்டு புக்கிங் செய்யப்படுகிறது.
    • பணம், பரிசு பொருட்கள் போன்றவை கொண்டு செல்வதை தடுக்கவேண்டும் என அனைத்து போக்குவரத்து கழக ஊழியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்ததை தொடர்ந்து ரொக்கப்பணம் கொண்டு செல்வதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. பஸ், ரெயில் நிலையங்களில் பயணிகள் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றனர். பயணிகளின் உடமைகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறது. சூட்கேஸ், டிராலி பேக், கைப்பைகள் அனைத்தும் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்யப்படுகிறது.

    அரசு விரைவு பஸ்களில் பொருட்கள் கொண்டு செல்லவும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. பார்சல்கள் பதிவு செய்யும்போது அதில் உள்ள விவரங்கள் கேட்கப்பட்டு புக்கிங் செய்யப்படுகிறது. பணம், பரிசு பொருட்கள் போன்றவை கொண்டு செல்வதை தடுக்கவேண்டும் என அனைத்து போக்குவரத்து கழக ஊழியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக அரசு விரைவு பஸ்களில் எடுத்து செல்லப்படும் பொருட்கள் கண்காணிக்கப்படுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாஜக கூட்டணிக்கு போகிறவர்களை பற்றி எங்களுக்கு கவலையில்லை.
    • திமுக அரசும், பாஜக அரசும் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை.

    மதுரை:

    மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * எங்களை பொறுத்தவரை மக்களுக்காக பணி, மக்கள் தான் எஜமானர்கள்.

    * மதவாத இயக்கத்தைவிட அதிமுக ஆபத்தான கட்சி என விமர்சனம் செய்துள்ள மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணனை கண்டிக்கிறேன்.

    * பாஜக கூட்டணிக்கு போகிறவர்களை பற்றி எங்களுக்கு கவலையில்லை.

    * தேர்தல் களத்தில் மக்கள்தான் எஜமானர்கள்... மக்களை தான் தேடி செல்ல வேண்டும்.

    * திமுக அரசும், பாஜக அரசும் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை.

    * திமுக தேர்தல் அறிக்கை... இன்னும் எத்தனை காலம்தான் மக்களை ஏமாற்றுவார்களோ.

    * பிரதமர் மோடி சிலிண்டர் விலை குறைப்போம் என்றார் செய்தாரா?

    * சிலிண்டர் விலை குறைப்பு வாக்குறுதி திமுகவின் மற்றொரு முகம் என்று கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நாம் தமிழர் கட்சிக்கு எந்த சின்னம் கொடுத்தாலும் பிரச்சனையில்லை, வெற்றி பெறுவோம்.
    • எங்களுடைய சின்னத்தை வேறு ஒருவருக்கு கொடுத்து விட்டார்கள்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது. இதை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் அந்த கட்சியின் தலைவர் சீமான் மேல்முறையீடு செய்தார்.

    இந்த மனுவை விசாரித்த நீதிபதி, 'கர்நாடகத்தை சேர்ந்த பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது தன்னிச்சையானதோ, அரசியலமைப்பு சட்டத்திற்கு முரணானதோ இல்லை' என்று கூறி அந்த மனுவை தள்ளுபடி செய்தது.

    இந்த உத்தரவுக்கு எதிராக சீமான் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு கடந்த 15-ந் தேதி விசாரித்தது.

    வாதங்களை பதிவு செய்துகொண்ட சுப்ரீம் கோர்ட்டு, கரும்பு விவசாயி சின்னம் கோரும் நாம் தமிழர் கட்சியின் மேல்முறையீட்டு மனுவுக்கு ஏப்ரல் 1-ந் தேதிக்குள் பதில் அளிக்க தேர்தல் ஆணையத்திற்கும், பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

    இந்நிலையில் சென்னையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * நாம் தமிழர் கட்சிக்கு எந்த சின்னம் கொடுத்தாலும் பிரச்சனையில்லை, வெற்றி பெறுவோம்.

    * எங்களுடைய சின்னத்தை வேறு ஒருவருக்கு கொடுத்து விட்டார்கள்.

    * மாற்றாக விவசாயத்தை முன்வைத்து ஒரு சின்னம் கேட்டால் அதையும் வேறு ஒருவருக்கு கொடுத்து விடுகிறார்கள் என்று கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 4 தொகுதிகளில் பாஜகவின் தாமரை சின்னத்தில் கூட்டணி வேட்பாளர்கள் போட்டி.
    • தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு.

    தேசிய ஜனநாயக கூட்டணி 39 தொகுதிகளுக்கான தொகுதிப் பங்கீடு நிறைவடைந்துள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

    இதில், 20 தொகுதிகளில் பாஜக வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

    மேலும், 4 தொகுதிகளில் பாஜகவின் தாமரை சின்னத்தில் கூட்டணி வேட்பாளர்கள் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.

    தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன.

    பாமக 10 தொகுதிகளிலும், அமமுக 2 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.

    இந்திய ஜனநாயக கட்சி, இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம், புதிய நீதிக் கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் தலா ஒரு தொகுதிகளில் போட்டிறயிடுகின்றன.

    இந்நிலையில், 24 தொகுதி வேட்பாளர்கள் பட்டியல் உடன் டெல்லி செல்வதாக கூறினார்.

    ஓ.பன்னீர்செல்வம் முடிவு குறித்து நான் அறிவிப்பது நன்றாக இருக்காது. அவரே விரைவில் அறிவிப்பார் என அண்ணாமலை கூறினார்.

    இதற்கிடையே, பாஜக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு நிறைவு பெற்றுவிட்டதால், ஓ.பன்னீர்செல்வம் போட்டியிட வாய்ப்பில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

    • பயணிகளை ஆம்புலன்ஸ் உதவியுடன் லால்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.
    • 15க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    லால்குடி:

    திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்து நத்த மாங்குடியில் இருந்து சத்திரம் பேருந்து நிலையம் நோக்கி அரசு பஸ் பயணிகளுடன் வந்து கொண்டிருந்தது.

    மேட்டுப்பட்டி அருகே வந்து கொண்டு இருந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையில் அங்குமிங்கும் ஓடி. சாலை ஓரத்தில் இருந்த வயலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இதில் பஸ் பயணிகள் ரத்த வெள்ளத்தில் காயங்களுடன் துடி துடித்தனர். இதனை பார்த்த அப்பகுதி பொது மக்கள் ஓடிவந்து, காயத்து டன் காணப்பட்ட 15க்கு மேற்பட்ட பயணிகளை ஆம்புலன்ஸ் உதவியுடன் லால்குடி அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.

    அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த 2 பேருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற லால்குடி இன்ஸ்பெக்டர் சரவணகுமார் மற்றும் போலீசார் சம்பவம் குறித்து அப்பகுதியில் விசாரணை நடத்தினர். பின்னர் வழக்கு பதிவு செய்து பேருந்து கவிழ்ந்தது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அரசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து 15க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும் போது, பூவாளூர் பின்னவாசல் முதல் ஆலங்குடி மகாஜனம் வரை சாலை மிகவும் குறுகலாக உள்ளதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது. சாலை அகலப்படுத்த பலமுறை கோரிக்கை வைத்தும் நட வடிக்கை எடுக்கப்படவில்லை என வேதனையுடன் அவர்கள் தெரிவித்தனர்.

    • ஊட்டி கேரட், பீன்ஸ் ஆகிய காய்கறிகளின் விலை திடீரென அதிகரித்து உள்ளது.
    • வெளி மார்க்கெட்டில் உள்ள காய்கறி கடைகளில் பீன்ஸ், கேரட் ஆகிய காய்கறிகள் ஒரு கிலோ ரூ.80 முதல் ரூ.90 வரை விற்கப்படுகிறது.

    போரூர்:

    கோயம்பேடு, காய்கறி மார்க்கெட்டில் வரத்து குறைவால் ஊட்டி கேரட், பீன்ஸ் ஆகிய காய்கறிகளின் விலை திடீரென அதிகரித்து உள்ளது.

    மொத்த விற்பனையில் ஊட்டி கேரட் ஒரு கிலோ ரூ.60-க்கும், பீன்ஸ் கிலோ ரூ.65-க்கும் விற்கப்படுகிறது. அவரைக்காய், வெண்டைக்காய், கத்தரிக்காய், பாகற்காய் மொத்த விற்பனையில் ஒரு கிலோ ரூ.20 முதல் ரூ.25 வரை மட்டுமே விற்பனை ஆகி வருகிறது. வெளி மார்க்கெட்டில் உள்ள காய்கறி கடைகளில் பீன்ஸ், கேரட் ஆகிய காய்கறிகள் ஒரு கிலோ ரூ.80 முதல் ரூ.90 வரை விற்கப்படுகிறது.

    கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் கோயம்பேடு சந்தைக்கு வரும் பீன்ஸ் வரத்து வெகுவாக குறைந்துள்ளதால் அதன் விலை அதிகரித்து உள்ளதாக மொத்த வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    • பிரதமர் மோடி பங்கேற்ற ரோடு ஷோவில் எந்தவித தேர்தல் நடத்தை விதிமுறைகளையும் மீறவில்லை.
    • எல்லோரை போலவும் பிரதமரை நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆர்வ மிகுதியில் பள்ளி மாணவர்கள் தன்னெழுச்சியாகவே பங்கேற்றுள்ளனர்.

    கோவை:

    கோவை மாவட்டத்தில் கடந்த 18-ந் தேதி பிரதமர் மோடி பங்கேற்ற பிரமாண்ட வாகன பேரணி (ரோடு ஷோ) நடைபெற்றது. இதில் பா.ஜ.க.வினர் மற்றும் பொதுமக்கள் என லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர்.

    இவர்களுக்கு மத்தியில் பள்ளி சீருடையில் மாணவ, மாணவிகளும் வாகன பேரணியில் பங்கேற்று வரவேற்றனர். இதற்கு தி.மு.க உள்ளிட்ட அனைத்து கூட்டணி கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் தேர்தல் ஆணையத்திலும் புகார் அளிக்கப்பட்டது.

    இதையடுத்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவிட்டார். அதன்பேரில் விசாரணை நடத்தப்பட்டு, பிரதமர் மோடியின் பிரமாண்ட ரோடு ஷோவில் மாணவர்களை பங்கேற்க வைத்ததாக சாய்பாபா கோவில் அருகே உள்ள அரசு உதவி பெறும் பள்ளி நிர்வாகம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    இதேபோல் பிரதமரின் வாகன பேரணியில் பங்கேற்றதாக வடவள்ளி பகுதியில் உள்ள தனியார் பள்ளியிடம் விளக்கம் கேட்டு, தனியார் பள்ளிகளுக்கான மாவட்ட கல்வி அலுவலர் செந்தில் நோட்டீஸ் வழங்கினார்.

    இதற்கிடையே பிரதமரின் பேரணியில் மாணவர்கள் பங்கேற்ற சம்பவம் தொடர்பாக பா.ஜனதா மாவட்ட தலைவரிடமும் விளக்கம் கேட்டு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பியது.

    அந்த நோட்டீசுக்கு கோவை மாவட்ட பா.ஜ.க. தலைவர் ரமேஷ்குமார், தேர்தல் நடத்தும் அலுவலரான சுரேஷ் என்பவரிடம் விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

    பிரதமர் மோடி பங்கேற்ற ரோடு ஷோவில் எந்தவித தேர்தல் நடத்தை விதிமுறைகளையும் மீறவில்லை. பிரதமர் மோடியை பார்ப்பதற்காக அனைவரும் அங்கு திரண்டிருந்தனர்.

    இந்த பேரணியில் நாங்கள் மாணவர்களை பங்கேற்க செய்யவில்லை. மாணவர்கள் பிரதமருக்கு ஆதரவாக பதாகைகளை ஏந்துவது, துண்டு பிரசுரங்களை வினியோகிப்பது என எந்த பிரசார பணியிலும் ஈடுபடவில்லை.

    எல்லோரை போலவும் பிரதமரை நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆர்வ மிகுதியில் பள்ளி மாணவர்கள் தன்னெழுச்சியாகவே பங்கேற்றுள்ளனர். ஒரு ஜனநாயக நாட்டில் பள்ளி மாணவர்கள் பிரதமரை நேரில் பார்க்க வருவதில் எந்த தவறும் இருப்பதாக கருதவில்லை.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • கன்னியாகுமரி மாவட்டம் ராமன்புதூரை பூர்வீகமாக கொண்ட சிம்லா முத்துசோழன் பிறந்து வளர்ந்தது எல்லாமே சென்னையில் தான்.
    • வக்கீலான சிம்லா முத்துசோழன், தி.மு.க. முன்னாள் அமைச்சர் சற்குணபாண்டியனின் மருமகள் ஆவார்.

    நெல்லை:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி அ.தி.மு.க. முதல் கட்ட வேட்பாளர்களை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று அறிவித்தார்.

    இதில் 16 தொகுதி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். கூட்டணி கட்சிகளுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கியது. இதைத்தொடர்ந்து தமிழகத்தில் எஞ்சிய 16 தொகுதிகளுக்கான அ.தி.மு.க. வேட்பாளர்களை எடப்பாடி பழனிசாமி இன்று அறிவித்தார். அதில் நெல்லை பாராளுமன்ற தொகுதியில் சிம்லா முத்துசோழன் போட்டியிடுகிறார்.

    தமிழகத்தில் அ.தி.மு.க. போட்டியிடும் 32 தொகுதிகளில் ஒரே ஒரு பெண் வேட்பாளர் என்ற பெயரை சிம்லா முத்துசோழன் பெற்றுள்ளார்.

    கன்னியாகுமரி மாவட்டம் ராமன்புதூரை பூர்வீகமாக கொண்ட இவர் பிறந்து வளர்ந்தது எல்லாமே சென்னையில் தான். வக்கீலான சிம்லா முத்துசோழன், தி.மு.க. முன்னாள் அமைச்சர் சற்குணபாண்டியனின் மருமகள் ஆவார். சற்குண பாண்டியன் தி.மு.க.வின் துணை பொதுச்செயலாளராகவும், கருணாநிதி முதலமைச்சராக இருந்த போது அமைச்சராகவும் இருந்துள்ளார்.

    சிம்லா முத்துசோழன் 2016-ம் ஆண்டு ஆர்.கே.நகர் தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை எதிர்த்து தி.மு.க. சார்பில் போட்டியிட்டு 30 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு தி.மு.க.வில் இருந்து விலகிய அவர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்த நிலையில் தற்போது அவருக்கு நெல்லை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட அ.தி.மு.க. சார்பில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    ×