என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • கிராமப் பகுதிகளில் தேர்தலை புறக்கணிக்கிறோம் புறக்கணிக்கிறோம் என்று சுவரொட்டிகளையும் ஒட்டி உள்ளனர்.
    • தங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றாத வரை யாரும் இப்பகுதிக்கு ஓட்டு கேட்டு வர வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி அருகே உள்ள கோடாங்கி பட்டியில் சுமார் 1000-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் வசிக்கும் 97 குடும்பத்தினருக்கு கடந்த 1994 ஆம் ஆண்டு ஆதிதிராவிடர் நலத்துறையால் வழங்கப்பட்ட பட்டாவை தனிநபர் போலி ஆவணம் தயாரித்து ஆக்கிரமிப்பு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இதுகுறித்து இப்பகுதி மக்கள் தாசில்தார், வருவாய் கோட்டாட்சியர் மற்றும் மாவட்ட கலெக்டரிடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் தாங்கள் வருகின்ற பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கூறி தங்கள் வீடுகள் தோறும் கருப்புக்கொடி ஏற்றியும், கையில் கருப்புக்கொடி ஏந்தியவாறு தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

    மேலும் கிராமப் பகுதிகளில் தேர்தலை புறக்கணிக்கிறோம் புறக்கணிக்கிறோம் என்று சுவரொட்டிகளையும் ஒட்டி உள்ளனர். தங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றாத வரை யாரும் இப்பகுதிக்கு ஓட்டு கேட்டு வர வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. ஏற்கனவே தேனி மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் தேர்தல் புறக்கணிப்பு போராட்டம் நடத்தி வரும் நிலையில் தற்போது அந்த பட்டியலில் கோடாங்கிபட்டியும் இணைந்துள்ளது.

    • இதுவரை நான் மனசாட்சிபடிதான் நடந்து கொண்டிருக்கிறேன்.
    • இது ஜனநாயக நாடு. 16 லட்சம் பேரின் வீட்டிற்கும் தனித்தனியாக எம்பி சென்று பார்க்க முடியாது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் மிரட்டுநிலை கிராமத்தில் காங்கிரசை சேர்ந்த கார்த்தி சிதம்பரம் பிரசாரம் செய்தார்.

    அப்போது அப்பகுதி இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடி கொண்டிருப்பதை பார்த்த அவர் தானும் பேட் பிடித்தார்.

    இன்னொரு முறை வரும்போது உங்களுக்கு நான் பேட் உள்ளிட்ட கிரிக்கெட் உபகரணங்களை வாங்கி தருகிறேன் என்று கூறினார்.

    இதனை கேட்ட இளைஞர் ஒருவர், 'இதன் பிறகு எப்ப நீங்க வரபோறீங்க?', என்று நக்கலாக கேட்க, சீரியஸ் ஆன கார்த்திக் சிதம்பரம் அந்த இளைஞரை அழைத்து, 'இது ஒரு தவறான புரிதல். நினைத்தால் கூட 16 லட்சம் பேரை பார்க்க முடியாது. ஒரு வார்டு கவுன்சிலர் கூட 1500 பேரை திரும்ப திரும்ப பார்க்க முடியாது. 16 லட்சம் பேரை நிகழ்ச்சி இருந்தால் தான் பார்க்க முடியும். எம்பி வந்து பார்ப்பது இல்லை என்பது ஒரு தவறான புரிதல். எம்பி வந்து பார்க்க முடியாது. இதற்கு முன்னாள் ஒரு எம்பி இருந்தாரே அவரின் பேர் தெரியுமா? என்னை எதற்கு தேர்தெடுக்கிறீர்கள். பார்லிமெண்டில் பேசுவதற்குதான். நான் பார்லி மெண்டில் பேசாமல் இருந்தால் நீங்கள் இந்த கேள்வியை கேட்டிருக்கலாம். மக்கள் குறைகளை நான் பலமுறை பார்லிமெண்டில் பேசியிருக்கிறேன். ஆனால் அதை யாரும் பார்க்கமாட்டீர்கள். இதுவரை நான் மனசாட்சிபடிதான் நடந்து கொண்டிருக்கிறேன்.

    இது ஜனநாயக நாடு. 16 லட்சம் பேரின் வீட்டிற்கும் தனித்தனியாக எம்பி சென்று பார்க்க முடியாது. ஒரு கிரிக்கெட் மேட்ச் வையுங்கள். என்னை அழையுங்கள். நான் வந்து அந்த விழாவில் கலந்து கொள்கி றேன். எனவே தவறான புரிதல் வேண்டாம்' என்று அவர் இளைஞர்களுக்கு எடுத்து கூறினார்.

    • மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெயரை சூட்ட வேண்டும் என முழக்கமிட்டார்.
    • சாலை வசதி, பாதுகாக்கப்பட்ட குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவேன் என ஓ.பன்னீர்செல்வம் வாக்குறுதி அளித்து விட்டு சென்றார்.

    கீழக்கரை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில் ஆங்காங்கே பிரசாரத்தில் ருசிகரங்களுக்கும், பரபரப்புகளுக்கும் சற்றும் பஞ்சமில்லை. கலகலவென்று பேசும் வேட்பாளர்கள், கேள்விக்கணைகளால் துளைத்தெடுக்கும் வாக்காளர்கள் என சுவாரசியங்களும் அரங்கேறி வருகிறது. அப்படி ஒரு நிகழ்வுதான் ஓ.பி.எஸ். பிரசாரத்திலும் நடந்துள்ளது.

    ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் பா.ஜ.க. கூட்டணியில் சுயேட்சை வேட்பாளராக பலாப்பழம் சின்னத்தில் தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார்.

    இந்நிலையில் நேற்று அவர் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றிய பகுதிகளான குயவன்குடி, வாலாந்தரவை, வழுதூர், பெருங்குளம், செம்படையார்குளம், கும்பரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

    அப்போது செம்படையார்குளம் கிராமத்தில் ஓ.பன்னீர்செல்வம் பிரசாரம் செய்தபோது அதே கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் கோட்சூட் அணிந்தபடி டிப்டாப்பாக பிரசார களத்திற்குள் வந்தார். பின்னர் அவர் நான் துபாயிலிருந்து வருகிறேன் என ஓ.பன்னீர்செல்வத்தை பார்த்து குரல் எழுப்பி, மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெயரை சூட்ட வேண்டும் என முழக்கமிட்டார்.

    அதற்கு ஓபிஎஸ் "தம்பி துபாயா, முதல்ல அந்த கூலிங் கிளாஸ போடுங்க" என அவருடன் சிரித்து கொண்டே பேசினார். ஆனால் அந்த இளைஞர் தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    பின்னர் அங்கிருந்து பிரசாரத்தை மீண்டும் தொடங்கிய, ஓ.பன்னீர்செல்வம் என்னை வெற்றி பெறச் செய்யுங்கள், இப்பகுதியில் சாலை வசதி, பாதுகாக்கப்பட்ட குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவேன் என வாக்குறுதி அளித்து விட்டு சென்றார்.

    • வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது.
    • கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.88-க்கும் பார் வெள்ளி ரூ.88,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னை:

    சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக உயர்ந்த வண்ணம் உள்ளது. இதனால் தங்கம் வாங்குவோர் மற்றும் நடுத்தர மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

    இந்நிலையில் வார தொடக்கமான முதல் நாளான இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது. தங்கம் கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,660-க்கும் சவரன் ரூ.360 உயர்ந்து ஒரு சவரன் ரூ.53,280-க்கும் விற்பனையாகிறது.

    வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.88-க்கும் பார் வெள்ளி ரூ.88,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    • சேலம் குரங்குச்சாவடி பகுதியில் சேலம் பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியை ஆதரித்து வேனில் நின்ற படியே பிரசாரம் செய்கிறார்.
    • தி.மு.க. வேட்பாளர் மலையரசனை ஆதரித்து ஆத்தூர் ராணிப்பேட்டையிலும், கெங்கவல்லியில் 6 மணிக்கும் வேனில் நின்றபடி பிரசாரம் செய்கிறார்.

    சேலம்:

    தமிழகத்தில் பாராளுமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு வருகிற 19-ந்தேதி நடக்கிறது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது கட்சி மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிரமாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் நேற்று ஓமலூர் அண்ணாசிலை சந்திப்பில் சேலம் பாராளுமன்ற தொகுதி தி.மு.க வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியை ஆதரித்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சரும், தி.மு.க. இளைஞரணி மாநில செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்தார்.

    அதனை தொடர்ந்து நாளை (9-ந்தேதி) காலை 9 மணிக்கு சேலம் குரங்குச்சாவடி பகுதியில் சேலம் பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியை ஆதரித்து வேனில் நின்ற படியே பிரசாரம் செய்கிறார்.

    தொடர்ந்து 10 மணிக்கு எடப்பாடி பஸ் நிலையம் அருகில் செல்லும் அவர் அங்கு வேனில் நின்ற படி சேலம் பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியை ஆதரித்து பேசுகிறார்.

    தொடர்ந்து மாலை 5 மணிக்கு கள்ளக்குறிச்சி தொகுதி தி.மு.க. வேட்பாளர் மலையரசனை ஆதரித்து ஆத்தூர் ராணிப்பேட்டையிலும், கெங்கவல்லியில் 6 மணிக்கும் வேனில் நின்ற படி பிரசாரம் செய்கிறார். இதற்கான ஏற்பாடுகளில் கட்சி நிர்வாகிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    • அண்ணாமலையை ஆதரித்து த.மா.கா. தலைவர் வாசன் கோவை சிங்காநல்லூர், இடையர்பாளையம் பிரிவில் வாக்கு சேகரித்தார்.
    • இனியும் பெண்கள் தி.மு.க.வின் பொய் பிரசாரத்தையும், வாக்குறுதிகளையும் நம்ப வேண்டாம்.

    கோவை:

    கோவை தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர் அண்ணாமலையை ஆதரித்து த.மா.கா. தலைவர் வாசன் கோவை சிங்காநல்லூர், இடையர்பாளையம் பிரிவில் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    போதைப் பொருள் கடத்தலிலும், சட்டம் - ஒழுங்கு சீர்குலைவிலும், டாஸ்மாக் மது விற்பனையிலும், மக்கள் மீது வரிச்சுமையை ஏற்றி வஞ்சிப்பதிலும் தான் தி.மு.க. அரசு முன்னிலையில் உள்ளது. தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய கட்சிகளும் இஸ்லாமியர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரை வாக்கு வங்கிக்காகவே பயன்படுத்துகின்றனர். இந்த இரு கட்சிகளுமே பாராளுமன்ற தேர்தலில் ஒரு இஸ்லாமியருக்கு கூட வாய்ப்பளிக்கவில்லை. இது இஸ்லாமியர்களுக்கு செய்யும் துரோகமாகும். ஆனால் சிறுபான்மையின மக்கள் மேம்பாட்டுக்காக பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். சிறுபான்மை மக்களின் எண்ணங்களை பிரதமர் நரேந்திரமோடி பிரதிபலிக்கிறார்.

    பா.ஜ.க. வேட்பாளர் அண்ணாமலை கோவை தொகுதியை நன்கு அறிந்தவர். இந்த தொகுதி மக்களுக்கு என்ன தேவை என்பது அவருக்கு தெரியும். தமிழகம் முழுவதும் நடை பயணம் செய்து மக்களின் அடிப்படை தேவைகளை அறிந்து வைத்துள்ளார்.

    அதனால் அவரை வெற்றி பெற செய்ய வேண்டிய பொறுப்பு கோவை தொகுதி மக்களுக்கு உள் ளது. அதன் மூலம் சிறந்த எம்.பி.யை தேர்ந்தெடுத்த பெருமை கோவை மக்களுக்கு சேரும்.

    மூன்றாவது முறையாக மீண்டும் மோடி பிரதமராக வருவது மிக அவசர தேவையாகும். இன்றைய தமிழக வளர்ச்சிக்கு மோடி அரசு தான் காரணம். தி.மு.க. அரசு விலைவாசி உயர்வு, மின்சார கட்டணம், பத்தி ரப்பதிவு கட்டணம் உயர்வு, வீட்டு வரி, சொத்து வரி உயர்வு என மக்கள் தலையில் மிகப்பெரிய சுமையை ஏற்றி வைத்துள்ளது.

    மக்கள் வாழ்வாதாரத்தை சீரழிக்கும் அரசாக தி.மு.க. உள்ளது. காலையில் குடும்ப தலைவிக்கு ரூ.1000 உத வித்தொகை கொடுத்து விட்டு மாலையில் குடும்ப தலைவரிடம் இருந்து டாஸ்மாக் வழியாக அதை தி.மு.க. பிடுங்கி கொள்கிறது. தி.மு.க. டாஸ்மாக் வியாபார அரசாக மாறி இருக்கிறது. இனியும் பெண்கள் தி.மு.க.வின் பொய் பிரசாரத்தையும், வாக்குறுதிகளையும் நம்ப வேண்டாம்.

    நீங்கள் போடும் ஓட்டு நாட்டின் வளர்ச்சிக்கானது. இரு ஆண்டுகளில் நாட்டின் பொருளாதாரம், உலக ளவில் இரண்டாம் இடத்துக்கு உயரும். உங்களுக்காக உழைக்க தாமரைக்கு ஓட்டு போடுங்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மோட்டார் சைக்கிளில் வந்த நபரை நிறுத்தி சோதனை செய்தனர்.
    • பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை பண்ருட்டி தாசில்தார் ஆனந்திடம் ஒப்படைத்தனர்.

    பண்ருட்டி:

    தமிழகம் முழுவதும் பாராளுமன்ற தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெற உள்ளது. இதனையடுத்து வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்ய பணம் மற்றும் பரிசு பொருட்கள் எடுத்து செல்லப்படுகிறதா என்று பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக பண்ருட்டியில் 3 பறக்கும் படை, 3 நிலையான கண்காணிப்பு குழுவினர் அதி நவீன கேமிரா பொருத்தப்பட்ட வாகனங்கள் மூலம் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு பண்ருட்டி-கடலூர் சாலை திருவதிகை யூனியன் அலுவலகம் அருகே பண்ருட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் சக்தி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ், போலீஸ்காரர்கள் ராஜசேகர், சுரேஷ் ஆகியோர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த நபரை நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் அவர் எந்தவித ஆவணமும் இன்றி ரூ.88 ஆயிரத்து 100 எடுத்து வந்தது தெரியவந்தது.

    இதையடுத்து அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் திருவதிகை கண்ணகி தெருவை சேர்ந்த கார்த்திகேயன் என்பது தெரியவந்தது. இதையடுத்து பறக்கும் படையினர் பணத்தை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை பண்ருட்டி தாசில்தார் ஆனந்திடம் ஒப்படைத்தனர்.

    • வனப்பகுதிகளில் யானை உள்ளிட்ட வன விலங்குகள் தண்ணீர் தேடி அடிக்கடி வெளியேறி வருகிறது.
    • வனப்பகுதியாக செல்லும் வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வேண்டும்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பகுதி உள்ளது. இங்கு, செந்நாய், மான், கரடி, யானை, உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் வசித்துவருகின்றன.மேலும் இந்த வனப்பகுதியில் கர்நாடகா மாநிலம் மைசூர் செல்லும் சாலை அமைந்துள்ளது. இதனால் கார், வேன், சரக்கு வாகனங்கள் உள்ளிட்ட ஏராளமான வாகனங்கள் இந்த வனப்பகுதி வழியாக சென்று வருகிறது.

    இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக ஈரோடு மாவட்டத்தில் 100 டிகிரிக்கு மேல் வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. இதே போல் அந்தியூர் பர்கூர் வனப்பகுதி பகுதியில் கடும் வெயிலின் தாக்கம் இருந்து வருகிறது. இதனால் அந்தியூர் அடுத்த பர்கூர் பகுதியில் உள்ள வனப்பகுதிகள் வறண்டு வருகிறது. மேலும் வெயிலினால் மரம், செடிகள் காய்ந்து வருகிறது.

    இதனால் வனப்பகுதிகளில் யானை உள்ளிட்ட வன விலங்குகள் தண்ணீர் தேடி அடிக்கடி வெளியேறி வருகிறது. வனப்பகுதிகளில் இருந்து தண்ணீர் மற்றும் உணவு தேடி வெளியேறும் யானைகள் ரோட்டில் உலா வருகிறது. இந்த வழியாக வரும் வாகனங்களை யானைகள் துரத்தும் சம்பவங்களும் அடிக்கடி நடந்து வருகிறது.

    மேலும் பர்கூர் வனப்பகுதி வனவிலங்குகள் வனப்பகுதிகளுக்குள் உள்ள வனக்குட்டையில் தண்ணீரை குடித்தும், யானைகள் தண்ணீரை மேலே தெளித்தும் வெயிலின் வெப்பத்தை தனித்து வருகிறது. இதே நிலை நீடித்தால் வனக்குட்டைகளில் தண்ணீர் இல்லாத சூழ்நிலை ஏற்படும். இதனால் வன விலங்குகள் வனப்பகுதி ஒட்டி உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் புகும் நிலையும் ஏற்படும் நிலை உள்ளது.

    இதனால் ஆங்காங்கே உள்ள வனக் குட்டைகளில் தண்ணீரை நிரப்பி வனவிலங்குகளின் தாகத்தையும் வெயிலின் வெப்பத்தை தணிக்கும் வகையில் வழிவகை செய்ய வேண்டும் என்று தன்னல ஆர்வலர்களும், பொது மக்களும் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இதே போல் சத்தியமங்கலம் வனசரகத்துக்குட்பட்ட தாளவாடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் வனப்பகுதிகளில் ஏராளமான யானைகள், சிறுத்தை, புலி, மான், கரடி உள்பட பல்வேறு வன விலங்குகள் வசித்து வருகிறது.

    இந்த வனப்பகுதி வழியாக மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. தாளவாடி, தலமலை வனப்பகுதிகளில் இருந்து யானைகள் அடிக்கடி வெளியேறி ரோட்டில் சுற்றி திரிகின்றன. மேலும் யானைகள் அருகே உள்ள வன கிராமங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசப்படுத்தி வருகிறது.

    வனப்பகுதிகளில் இருந்து வெளியேறும் யானைகள் கரும்புகள் ஏற்றி செல்லும் லாரிகளில் இருந்து கரும்புகளை ருசித்து வருகிறது. மேலும் ஒரு சில நேரங்களில் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளை துரத்தி செல்லும் சம்பவங்களும் நடந்து வருகிறது.

    மேலும் ரோட்டில் சுற்றிதிரியும் யானைகளை அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் ஆபத்தை உணராமல் தங்கள் செல்போன்களில் செல்பி எடுத்தும் வருகிறார்கள்.

    இது குறித்து வனத்துறையினர் கூறும்போது, வனப்பகுதிகளில் வெயிலின் காரணமாக கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் யானை உள்ளிட்ட வன விலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி அடிக்கடி வெளியேறி வருகிறது.

    எனவே வனப்பகுதியாக செல்லும் வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வேண்டும். வன விலங்குகளுக்கு தெந்தரவு செய்ய கூடாது. மேலும் ரோட்டில் திரியும் வன விலங்குகளை செல்பி மற்றும் புகைப்படம் எடுப்பதை தவிர்க்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • அண்ணாமலையை வீழ்த்தியே ஆக வேண்டும் என்று பல முனைகளில் இருந்து அஸ்திரம் வீசப்படுகிறது
    • சரியான நேரத்துக்கு பிரசாரத்தை தொடங்கும் அண்ணாமலை பகல் 12 மணி வரை பிரசாரம் செய்கிறார்.

    சென்னை:

    தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை போட்டியிடும் கோவை தொகுதி நட்சத்திர தொகுதியாக எல்லோராலும் கூர்ந்து கவனிக்கப்படுகிறது.

    அண்ணாமலையை வீழ்த்தியே ஆக வேண்டும் என்று பல முனைகளில் இருந்து அஸ்திரம் வீசப்படுகிறது. அத்தனையையும் தனக்கே உரித்தான பாணியில் எதிர்கெண்டு களத்தில் நிற்கிறார்.

    அண்ணாமலையின் தினசரி செயல்பாடுகள் பற்றி அவருடன் இருப்பவர்கள் ஆச்சரியத்துடன் பல்வேறு விஷயங்களை பகிர்ந்தார்கள்.

    அதிகாலை 5.30 மணிக்கெல்லாம் ரெடியாகி கீழே வந்து விடுகிறார். உதவியாளர்களை அழைத்து அன்றைய நிகழ்ச்சி நிரல் பற்றி பேசுகிறார்.

    அதன் பிறகு தன்னை தேடி காத்திருக்கும் நிர்வாகிகளை சந்திக்கிறார். அதைத் தொடர்ந்து சரியாக 7 மணிக்கெல்லாம் பிரசாரம் தொடங்கும் இடத்துக்கு சென்று விடுகிறார். சரியான நேரத்துக்கு பிரசாரத்தை தொடங்கும் அண்ணாமலை பகல் 12 மணி வரை பிரசாரம் செய்கிறார்.

    உணவு இடைவேளையில் தொண்டர்கள் ஓய்வு எடுக்கிறார்கள். ஆனால் அண்ணாமலை ஓய்வு எடுப்பதில்லை. அந்த பகுதியை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், அமைப்புகள், நலச்சங்கங்கள் பற்றி முன் கூட்டியே தகவல் சேகரித்து வைத்திருக்கிறார்.

    மதியம் ஓய்வு நேரத்தில் அவர்களை நேரில் சென்று சந்தித்து பேசுகிறார். பின்னர் மாலையில் தொண்டர்களுடன் மீண்டும் பிரசாரத்தை தொடங்குகிறார்.


    மாலையில் பிரசாரத்தை முடித்து விட்டு இரவில் தங்குமிடம் வருகிறார். அதன் பிறகுதான் முக்கிய ஆலோசனைகள் தொடர்கிறது. பிரசாரத்தை தினமும் கண்காணித்து வரும் குழுவினரை அழைத்து அன்றைய பிரசாரம் எப்படி இருந்தது? மக்களிடம் வரவேற்பு பெற்றதா? மக்கள் என்ன நினைக்கிறார்கள்? என்பது பற்றி விவாதிக்கிறார்.

    அதன் பிறகு மறுநாள் பிரசாரம் எப்படி அமைய வேண்டும், வாக்காளர்களிடம் நம்பிக்கை பெறும் வகையில் செயல்பட வேண்டிய விதம் பற்றி அனைவரிடமும் கருத்துக்கள் கேட்கிறார்.

    தொடர்ந்து கீழ்மட்டம் வரையிலான நிர்வாகிகளை அழைத்து தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ் கட்சிகள் பா.ஜனதாவை பற்றிய பேச்சுக்கள். அதற்கான பதிலடிகள் பற்றி அவர்களிடம் விளக்குகிறார்.

    இந்த நள்ளிரவு ஆலோசனை முடியவே ஒரு மணிக்கு மேல் ஆகிவிடும். அதன் பிறகு தூங்க செல்கிறார். அதிகபட்சம் 3 மணி நேரம் ஒரு குட்டி தூக்கம் போட்டு விட்டு மீண்டும் 5 மணிக்கு தயாராகி விடுகிறார். ஏற்கனவே 24x7 என்ற ரீதியில் போலீஸ் பணியில் இருந்ததால் அவருக்கு நேரம், காலம் பிரச்சனை இல்லை. எப்போதும் சுறுசுறுப்பாகவே களத்தை கலக்குகிறார்.

    பிரசாரத்தின் போது பருக, சாப்பிட என்று தனியாக எதுவும் எடுத்து செல்வதில்லை. இடைஇடையே குளிர்ந்த தண்ணீரை மட்டுமே பருகுவார். சாப்பாடு நிர்வாகிகள் வீட்டில்தான்.

    தினசரி யோகா, உடற்பயிற்சி செய்யும் பழக்கம் உண்டு. இப்போது அதற்கான நேரம் கிடைப்பதில்லை. ஆனாலும் எப்போதாவது சிறிது நேரம் ஓய்வு கிடைத்தால் அப்போது சிறிது உடற்பயிற்சி செய்வார்.

    உழைப்பு.... உழைப்பு... அதில் மட்டுமே கவனமாக இருக்கிறார்.

    • அகிலாண்டேஸ்வரி உடனுறை ஜம்புகேசுவரர் ஆலய பங்குனி தேரோட்டம்.
    • ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்.

    திருச்சி:

    பஞ்சபூதங்களில் நீர்த்தலமாக விளங்குவது திருவானைக் காவல் ஜெம்பு கேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி அம்மன் கோவில். இங்கு ஆண்டுதோறும் மாசி, பங்குனி மாதங்களில் மண்டல பிரம்மோற்சவ விழா 48 நாட்கள் கொண்டாடப்படும். இந்தாண்டுக்கான மண்டல பிரம்மோற்சவ விழா கடந்த மாதம் 17-ந்தேதி பெரிய கொடியேற்றத்துடன் தொடங்கியது. இவ்விழா வருகிற 24-ந்தேதி வரை நடைபெறுகிறது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி தேரோட்டத்திற்கான எட்டுத்திக்கும் கொடியேற்றம் கடந்த 3-ந் தேதி நடைபெற்றது. அன்று முதல் தினமும் சாமி, அம்மன் காலையில் புறப்பாடு கண்டருளியும் மாலையில் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்தும் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். நேற்று இரவு தேரோட் டத்தின் முன்னோட்ட நிகழ்ச்சியாக சுவாமி, அம்மன் தெருவடச்சானில் வீதி உலா வந்தனர்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. இதற்கென இன்று அதிகாலை சாமி, அம்மனுக்கு உற்சவர் மண்டபத்தில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து காலை 5.30 மணியளவில் உற்சவர் ஜம்புகேஸ்வரர் பெரிய தேரிலும், அகிலாண்டேஸ்வரி அம்மன் மற்றொரு தேரிலும் எழுந்தருளினர்.

    முன்னதாக விநாயகர், சுப்ரமணியர் சிறிய தேரோட்டம் தேரோடும் வீதிகளில் வந்து நிலையை அடைந்தது. பின்னர் காலை 6.50 மணியளவில் ஜம்புகே ஸ்வரர் சுவாமி தேரை பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர். மேல உள்வீதி, வடக்கு உள்வீதி, கீழ உள்வீதி, தெற்கு உள்வீதி அடங்கிய நான்கு பிரகாரங்களில் சுற்றிவந்த தேர் மேல உள்வீதியும், தெற்கு உள்வீதியும் சந்திக்கும் இடத்திற்கு வந்தது.

    பின்னர் காலை 8.15 மணிக்கு அம்மன் தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. அம்மன் தேர் சுவாமி தேருக்கு பின்னால் கொண்டு வந்து நிறுத்தப்ப ட்டது. அம்மன் தேருக்கு பின்னால் சண்டீகேஸ்வரர் சிறிய சப்பரத்தில் வந்து அருள்பாலித்தார். மீண்டும் பக்தர்களால் சாமி தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டு காலை 11 மணிக்கு நிலையை வந்தடைந்தது. அம்மன் தேர் 12.30 மணிக்கு நிலையை வந்தடைந்தது.

    தேரோட்டத்தின் போது கோவில் யானை அகிலா தேருக்கு முன் செல்ல மேளதாளம், சங்கொலி முழங்க வாணவேடிக்கையுடன் சிவ, சிவ, ஓம் சக்தி என்ற பக்தி முழக்கத்திற்கு நடுவே உற்சவர்கள் ஜெம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

    தேர்த்திருவிழாவை முன்னிட்டு கோவில் நிர்வாகம் மற்றும் மாநகராட்சி ஆகியவை சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மாநகர போலீஸ் சார்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. வியாபாரிகள் சார்பில் நடைபெற்ற அன்னதானத்தை கோவில் உதவி ஆணையர் ரவிச்சந்திரன் தொடங்கி வைத்தார்.

    தேரோட்ட விழா ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் ரவிச்சந்திரன், கோவில் பண்டிதர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் உபயதாரர்கள் செய்திருந்தனர்.

    • கணக்குகளை சமர்ப்பிக்காத நிலையில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
    • மொத்தம் 23 வேட்பாளர்களில் 9 வேட்பாளர்கள் மட்டுமே தாக்கல்.

    நெல்லை மக்களவை தொகுதியில் போட்டியிடும் 14 வேட்பாளர்களுக்கு தேர்தல் செலவின பார்வையாளர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

    தேர்தல் செலவு கணக்குகளை இன்று மாலை 5 மணிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், கணக்குகளை சமர்ப்பிக்காத நிலையில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    கணக்கு தாக்கல் செய்ய தவறினால் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அனைத்து அனுமதிகளும் ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    மொத்தம் 23 வேட்பாளர்களில் 9 வேட்பாளர்கள் மட்டுமே செலவு கணக்கை முழுமையாக தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • பாரதிசாலை x பெல்ஸ் சாலை சந்திப்பில் இருந்து நேராக கண்ணகி சிலை செல்வதற்கு அனுமதி இல்லை.
    • வாலாஜா சாலை X பெல்ஸ் சாலை சந்திப்பிலிருந்து பெல்ஸ் சாலைக்கு வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை.

    சென்னை:

    சென்னை எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுவதை முன்னிட்டு கீழ்க்கண்ட சாலைகளில் இன்று, 23.04.2024, 28.04.2024, 01.05.2024, 24.05.2024, மற்றும் 26.05.2024 ஆகிய நாட்களில் மாலை 5.00 மணி முதல் 11.00 மணி வரையில் மற்றும் 12.05.2024ம் தேதி 1.00 மணி முதல் இரவு 7.00 வரையிலும் கீழ்க்கண்டவாறு போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படுகிறது.

    1. விக்டோரியா ஹாஸ்டல் ரோடு (கெனால் ரோடு) இந்த சாலைக்கு பாரதி சாலையில் இருந்து வாகனங்கள் செல்லலாம். வாலாஜா சாலையில் இருந்து வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை.

    2. பெல்ஸ் சாலை : இந்த சாலை தற்காலிக ஒருவழி பாதையாக மாற்றப்பட்டு, பாரதிசாலை x பெல்ஸ்சாலை சந்திப்பிலிருந்து வாகனங்கள் செல்லலாம். வாலாஜா சாலை X பெல்ஸ் சாலை சந்திப்பிலிருந்து பெல்ஸ் சாலைக்கு வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை.

    கண்ணகி சிலையில் இருந்து வரும் மாநகர பேருந்துகள் பெல்ஸ் சாலைக்கு செல்ல அனுமதி இல்லை. நேராக ரத்னா கபே சந்திப்பு வழியாக திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

    3. பாரதி சாலை : ரத்னா கபே சந்திப்பிலிருந்து வரும் வாகனங்கள் பாரதிசாலை x பெல்ஸ் சாலை சந்திப்பில் திருப்பப்பட்டு பெல்ஸ் சாலை வழியாக வாலாஜாசாலை சென்று தங்கள் இலக்கை சென்றடையலாம்.

    பாரதிசாலை x பெல்ஸ் சாலை சந்திப்பில் இருந்து நேராக கண்ணகி சிலை செல்வதற்கு அனுமதி இல்லை.

    4. வாலாஜா சாலை : அண்ணாசாலையில் இருந்து அண்ணாசிலை வழியாக வாலாஜாசாலை வரும் M.T.V ஆகிய எழுத்துக்கள் கொண்ட வாகன நிறுத்த அனுமதி அட்டைகள் உள்ள வாகனங்கள் வாலாஜா சாலை, உழைப்பாளர் சிலை, காமராஜர் சாலை, கண்ணகி சிலை, பாரதி சாலை வழியாக விக்டோரியா சாலை சென்று தங்கள் வாகன நிறுத்தத்தை அடையலாம்.

    வாலாஜா சாலை X பெல்ஸ் சாலை சந்திப்பிலிருந்து பெல்ஸ் சாலைக்கு வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை.

    அண்ணாசாலையில் இருந்து அண்ணாசிலை வழியாக வாலாஜா சாலை வரும் B & R ஆகிய எழுத்துக்கள் கொண்ட வாகன நிறுத்த அனுமதி அட்டைகள் உள்ள வாகனங்கள் வாலாஜா சாலை வழியாக சென்று அந்தந்த வாகன நிறுத்துமிடங்களுக்கு செல்லலாம்.

    5. காமராஜர் சாலை : போர் நினைவு சின்னம் மற்றும் காந்தி சிலை வழியாக வரும் வாகனங்கள் M.T.V ஆகிய எழுத்துக்கள் கொண்ட வாகன நிறுத்த அனுமதி அட்டைகள் உள்ள வாகனங்கள் பாரதி சாலை வழியாக விக்டோரியா சாலை சென்று அந்தந்த வாகன நிறுத்துமிடங்களுக்கு செல்லலாம்.

    போர் நினைவு சின்னம் மற்றும் காந்தி சிலை வழியாக வரும் வாகனங்கள் B & R ஆகிய எழுத்துக்கள் கொண்ட வாகன நிறுத்த அனுமதி அட்டைகள் உள்ள வாகனங்கள் காமராஜர் சாலை, கண்ணகி சிலை, பாரதிசாலை, பெல்ஸ் சாலை மற்றும் வாலாஜா சாலை வழியாக சென்று அந்தந்த வாகன நிறுத்துமிடங்களுக்கு செல்லலாம்.

    உழைப்பாளர் சிலையிலிருந்து வாகனங்கள் வாலாஜா சாலை செல்ல அனுமதி இல்லை.

    6. அனுமதி அட்டை இல்லாத வாகனங்கள் : 1. அண்ணாசாலையில் இருந்து அண்ணாசிலை வழியாக வாலாஜாசாலை வரும் வாகனங்கள் உழைப்பாளர் சிலை, காமராஜர் சாலை வழியாக PWD எதிராக உள்ள கடற்கரை உட்புறச்சாலையில் உள்ள வாகன நிறுத்தங்களுக்கு செல்லலாம்.

    2.போர் நினைவு சின்னம் வழியாக வரும் வாகனங்கள் காமராஜர் சாலை வழியாக PWD எதிராக உள்ள கடற்கரை உட்புறச்சாலையில் உள்ள வாகன நிறுத்தங்களுக்கு செல்லலாம்.

    3. காந்தி சிலையில் இருந்து வரும் வாகனங்கள் காமராஜர் சாலை வழியாக PWD எதிராக உள்ள கடற்கரை உட்புறச்சாலையில் உள்ள வாகன நிறுத்தங்களுக்கு செல்லலாம்.

    மேற்கண்ட மாற்றங்களுக்கு வாகன ஓட்டிகள் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.



    ×