search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வனப்பகுதியை விட்டு வெளியேறி ரோட்டில் உலா வரும் யானைகள்
    X

    வனப்பகுதியை விட்டு வெளியேறி ரோட்டில் உலா வரும் யானைகள்

    • வனப்பகுதிகளில் யானை உள்ளிட்ட வன விலங்குகள் தண்ணீர் தேடி அடிக்கடி வெளியேறி வருகிறது.
    • வனப்பகுதியாக செல்லும் வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வேண்டும்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பகுதி உள்ளது. இங்கு, செந்நாய், மான், கரடி, யானை, உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் வசித்துவருகின்றன.மேலும் இந்த வனப்பகுதியில் கர்நாடகா மாநிலம் மைசூர் செல்லும் சாலை அமைந்துள்ளது. இதனால் கார், வேன், சரக்கு வாகனங்கள் உள்ளிட்ட ஏராளமான வாகனங்கள் இந்த வனப்பகுதி வழியாக சென்று வருகிறது.

    இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக ஈரோடு மாவட்டத்தில் 100 டிகிரிக்கு மேல் வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. இதே போல் அந்தியூர் பர்கூர் வனப்பகுதி பகுதியில் கடும் வெயிலின் தாக்கம் இருந்து வருகிறது. இதனால் அந்தியூர் அடுத்த பர்கூர் பகுதியில் உள்ள வனப்பகுதிகள் வறண்டு வருகிறது. மேலும் வெயிலினால் மரம், செடிகள் காய்ந்து வருகிறது.

    இதனால் வனப்பகுதிகளில் யானை உள்ளிட்ட வன விலங்குகள் தண்ணீர் தேடி அடிக்கடி வெளியேறி வருகிறது. வனப்பகுதிகளில் இருந்து தண்ணீர் மற்றும் உணவு தேடி வெளியேறும் யானைகள் ரோட்டில் உலா வருகிறது. இந்த வழியாக வரும் வாகனங்களை யானைகள் துரத்தும் சம்பவங்களும் அடிக்கடி நடந்து வருகிறது.

    மேலும் பர்கூர் வனப்பகுதி வனவிலங்குகள் வனப்பகுதிகளுக்குள் உள்ள வனக்குட்டையில் தண்ணீரை குடித்தும், யானைகள் தண்ணீரை மேலே தெளித்தும் வெயிலின் வெப்பத்தை தனித்து வருகிறது. இதே நிலை நீடித்தால் வனக்குட்டைகளில் தண்ணீர் இல்லாத சூழ்நிலை ஏற்படும். இதனால் வன விலங்குகள் வனப்பகுதி ஒட்டி உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் புகும் நிலையும் ஏற்படும் நிலை உள்ளது.

    இதனால் ஆங்காங்கே உள்ள வனக் குட்டைகளில் தண்ணீரை நிரப்பி வனவிலங்குகளின் தாகத்தையும் வெயிலின் வெப்பத்தை தணிக்கும் வகையில் வழிவகை செய்ய வேண்டும் என்று தன்னல ஆர்வலர்களும், பொது மக்களும் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இதே போல் சத்தியமங்கலம் வனசரகத்துக்குட்பட்ட தாளவாடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் வனப்பகுதிகளில் ஏராளமான யானைகள், சிறுத்தை, புலி, மான், கரடி உள்பட பல்வேறு வன விலங்குகள் வசித்து வருகிறது.

    இந்த வனப்பகுதி வழியாக மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. தாளவாடி, தலமலை வனப்பகுதிகளில் இருந்து யானைகள் அடிக்கடி வெளியேறி ரோட்டில் சுற்றி திரிகின்றன. மேலும் யானைகள் அருகே உள்ள வன கிராமங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசப்படுத்தி வருகிறது.

    வனப்பகுதிகளில் இருந்து வெளியேறும் யானைகள் கரும்புகள் ஏற்றி செல்லும் லாரிகளில் இருந்து கரும்புகளை ருசித்து வருகிறது. மேலும் ஒரு சில நேரங்களில் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளை துரத்தி செல்லும் சம்பவங்களும் நடந்து வருகிறது.

    மேலும் ரோட்டில் சுற்றிதிரியும் யானைகளை அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் ஆபத்தை உணராமல் தங்கள் செல்போன்களில் செல்பி எடுத்தும் வருகிறார்கள்.

    இது குறித்து வனத்துறையினர் கூறும்போது, வனப்பகுதிகளில் வெயிலின் காரணமாக கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் யானை உள்ளிட்ட வன விலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி அடிக்கடி வெளியேறி வருகிறது.

    எனவே வனப்பகுதியாக செல்லும் வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வேண்டும். வன விலங்குகளுக்கு தெந்தரவு செய்ய கூடாது. மேலும் ரோட்டில் திரியும் வன விலங்குகளை செல்பி மற்றும் புகைப்படம் எடுப்பதை தவிர்க்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×