என் மலர்
உள்ளூர் செய்திகள்
- எடப்பாடி பழனிசாமிக்கு ஜென்ம சனி பிடித்துள்ளது.
- பிரதமர் மோடி ஒரு அரசியல் கட்சித் தலைவரை கட்டிப்பிடித்தால் அந்தக் கட்சியே இரண்டாகி விடும்.
ஸ்ரீவில்லிபுத்தூர்:
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே திருத்தங்கல்லில் விருதுநகர் பாராளுமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை ஆதரித்து தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவரும், பட்டிமன்ற பேச்சாளருமான திண்டுக்கல் ஐ. லியோனி பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-
டெல்லியிலிருந்து ஒரு தாடிக்காரர் தமிழ்நாட்டிற்கு 5 தடவை வந்து, ஐந்து காசுக்கு பிரயோஜனம் இல்லாத லேகியம் விற்றதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும். எடப்பாடி பழனிசாமி, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை ராசி இல்லாதவர், அவருக்கு கட்டம் சரியில்லை என்கிறார். எடப்பாடி பழனிசாமி கடப்பாறையை முழுங்கிவிட்டு சுக்கு கசாயம் குடித்தால் பிரச்சனை தீராது.
எடப்பாடி பழனிசாமி தலைமை ஏற்ற பிறகு அ.தி.மு.க. தொடர்ந்து தேர்தல்களில் தோல்வியை தான் சந்தித்து வருகிறது. அ.தி.மு.க.வினர் தோல்வியால் சோகப்பாடல் பாடிக் கொண்டு இருக்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி போர்டு இல்லாத பஸ் டிரைவர். எந்த ஊருக்கு எங்கு போகிறோம் என்று தெரியாமலே, அதனை ஓட்டி சென்று கொண்டிருக்கிறார்.

மூன்று முறை தமிழக முதலமைச்சராக இருந்த ஓ.பி.எஸ். இன்று ராமநாதபுரத்தில் பலாப்பழம் விற்றுக் கொண்டிருக்கிறார். இ.பி.எஸ்.சும், ஓ.பி.எஸ்.சும் சேர்ந்து ஒரு கட்சியை நாசப்படுத்தி விட்டனர். பிரதமர் மோடி ஒரு அரசியல் கட்சித் தலைவரை கட்டிப்பிடித்தால் அந்தக் கட்சியே இரண்டாகி விடும்.
தற்போது பா.ம.க. கட்சியை சேர்ந்த ராமதாசை கட்டிப்பிடித்திருக்கிறார். அரசியலை விட்டுவிட்டு எடப்பாடி பழனிசாமி இலந்தைப் பழம் விற்க போகலாம். எடப்பாடி பழனிசாமிக்கு ஜென்ம சனி பிடித்துள்ளது. அது சாகும்வரை அவரை விடாது.
இந்த தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு மக்கள் ஆதரவு தராவிட்டால் எடப்பாடி பழனிசாமி அரசியலை விட்டு போய்விடுவாரா? பா.ஜ.க. வேட்பாளர் ராதிகா நல்ல நடிகை. முக்கா துட்டுக்கு பிரயோஜனம் இல்லாத அவரை பார்க்க வேண்டும் என்று சென்னைக்கு போனால், ஆறு காவலாளிகளை கடந்து தான் அவரையே பார்க்க முடியும். மறைந்த விஜய காந்திற்கு அரசு மரியாதை கொடுத்து நல்லடக்கம் செய்த தி.மு.க.வுக்கு தான் மனசாட்சி உள்ள தே.மு.தி.க.வினர் ஆதரவு கொடுப்பார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் பிரசாரத்தில் அவர் பேசுகையில், பெண்களுக்காக தி.மு.க. அரசு பல்வேறு சலுகைகளை வழங்கியுள்ளது குறிப்பாக மகாலட்சுமி என்னும் திட்டத்தை அறிமுகப்படுத்தி பெண்கள் வாழ்வில் வளம் சேர்க்க உள்ளது. எடப்பாடி பழனிச்சாமி நேரத்துக்கு நேரம்நிறம் மாறும் பச்சோந்தி ஆவார். அவர் எல்லோருக்கும் துரோகம் செய்தவர். மோடி தேர்தலுக்கு தேர்தல் தமிழ்நாட்டுக்கு வந்து கூளை கும்பிடு போடுவார் அவரை நம்பா தீர்கள் என்றார்.
- நாளை சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது.
- 23-ந்தேதி திருநங்கைகள் தாலி கட்டிக் கொள்ளும் நிகழ்ச்சி.
உளுந்தூர்பேட்டை:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது கூவாகம் கிராமம். இக்கிராமத்தில் உள்ள பிரசித்திப்பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை பெருவிழா வருடந்தோறும் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டு கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை பெருவிழா நாளை (செவ்வாய்க்கிழமை) சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது.
10-ந் தேதி முதல் மகாபாரதம் சொற்பொழிவு மற்றும் சுவாமி வீதியுலாவும் நடைபெற உள்ளது. 12-ந்தேதி பீஷ்மர் பிறப்பு மற்றும் 14-ந் தேதி பாஞ்சாலி பிறப்பும், 17-ந் தேதி கூத்தாண்டவர் பிறப்பும் மற்றும் சுவாமி வீதியுலா நடக்கிறது.
21-ந் தேதி கூத்தாண்டவருக்கு பாலாலயம் நடைபெறுகிறது. 22-ந்தேதி மாலை கம்பம் நிறுத்தும் நிகழ்ச்சியும், சித்திரை பெருவிழாவின் முக்கிய விழாவான திருநங்கைகள் தாலி கட்டிக் கொள்ளும் நிகழ்ச்சி 23-ந் தேதி நடைபெற உள்ளது.
அன்றைய தினம் மாலை இந்தியா முழுவதும் இருந்து வரும் திருநங்கைகள் கோவில் பூசாரி கையினால் தாலி கட்டிக் கொள்ளும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.இதனை தொடர்ந்து 24-ந் தேதி சித்திரை தேரோட்டம் நடைபெற உள்ளது.ஏப்ரல் 25-ந் தேதி விடையாற்றியும், 26-ந் தேதி தர்மர் பட்டாபிஷேகம் நிகழ்ச்சியுடன் 18 நாள் சித்திரை பெருவிழா நிறைவு பெறுகிறது.
- சூரக்குடி அரசு மருத்துவமனை செல்லும் சாலை வழியாக பரப்புரை நடைபெறும் திடலுக்கு வருமாறு வேண்டுகிறேன்.
- மாவட்ட பாசறை செயலாளர் பிரபு உள்பட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
காரைக்குடி:
தமிழகத்தில் வருகிற 19-ந்தேதி ஒரே கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் தே.மு.தி.க., எஸ்.டி.பி.ஐ. உள்ளிட்ட கட்சிகள் இணைந்து போட்டியிடுகிறது. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சூறாவளி பிரசாரம் மேற் கொண்டு ஆதரவு திரட்டி வருகிறார்.
அந்த வகையில், இன்று மாலை 4 மணியளவில் ராமநாதபுரம் அரண்மனை முன்பு நடைபெறும் தேர்தல் பிரசார கூட்டத்தில் ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் பா.ஜெயபெருமாளை ஆதரித்து பிரசாரம் மேற் கொள்கிறார்.
இதையடுத்து மாலை 7 மணியளவில் காரைக்குடி ஹவுசிங் போர்டு வி.ஏ.ஓ. காலனி திடலில் சிவகங்கை பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் அ.சேவியர்தாஸை ஆதரித்து தேர்தல் பரப்புரையாற்றுகிறார்.
இதுகுறித்து மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. கூறுகையில், பாராளுமன்ற தேர்தல் பரப்புரைக்காக காரைக்குடிக்கு கழக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க் கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி ராமநாதபுரம் பொதுக்கூட்டத்தை முடித்துவிட்டு மாலை 7 மணியளவில் வருகை தருகிறார். அவருடன் முன்னாள் அமைச்சர்கள் கழக அமைப்புச்செயலாளரும், புதுக்கோட்டை வடக்கு மாவட்ட செயலாளருமான டாக்டர்.சி.விஜயபாஸ்கர், அம்மா பேரவை செயலாளர் ஆர்.பி.உதயகுமார்,

சிவகங்கை பாராளுமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளர்கள், கழக அமைப்புச் செயலாளர் மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா, முன்னாள் அமைச்சர் ஜி.பாஸ்கரன், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர், முன்னாள் அமைச்சர், எம்.ராதாகிருஷ்ணன், சிவகங்கை மாவட்ட கழக செயலாளர் பி.ஆர்.செந்தில்நாதன் எம்.எல்.ஏ. ஆகியோர் இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறோம்.
திடலில் பிரம்மாண்டமாக மேடை அமைத்துள்ளோம். இதில் சிவகங்கை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட சிவகங்கை, மானாமதுரை, காரைக்குடி, திருப்பத்தூர், ஆலங்குடி. திருமயம் ஆகிய சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கழக மாநில நிர்வாகிகள், முன்னாள் பாராளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், ஊராட்சி கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், வார்டு மற்றும் கிளை கழக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் தொண்டர்கள் கூட்டணி கட்சிகளான தே.மு.தி.க, புதிய தமிழகம், எஸ்.டி.பி.ஐ., மருது சேனை, மனிதநேய ஜனநாயக கட்சி, ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழகம், லெனின் கம்யூனிஸ்ட் இன்னும் ஏனைய கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொள்ளும் வகையில் ஏற்பாடுகளை செய்துள்ளோம்.
சிவகங்கை, மானாமதுரை, திருப்பத்தூர், ஆலங்குடி, திருமயம் ஆகிய சட்டமன்ற தொகுதியிலிருந்தும் தேவகோட்டை பகுதியிலிருந்தும் வருபவர்கள் காரைக்குடி செல்லப்பன் வித்யா மந்திர் பள்ளி வழியாக வந்து கழனி வாசல், சூரக்குடி அரசு மருத்துவமனை செல்லும் சாலை வழியாக பரப்புரை நடைபெறும் திடலுக்கு வருமாறு வேண்டுகிறேன்.
மேலும் வாகனங்களை அதற்காக ஒதுக்கப்பட்ட இடங்களில் நிறுத்துமாறும், காவல்துறைக்கு முழு ஒத்துழுழைப்பு தருமாறும், பொதுமக்கள் இக்கூட்டத்தில் திரளாக கலந்து கொள்ள வேண்டுகிறேன் என்றார். அப்போது வேட்பாளர் சேவியர்தாஸ், சாக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் செந்தில்நாதன், காரைக்குடி நகர செயலாளர் மெய்யப்பன், மாவட்ட பாசறை செயலாளர் பிரபு உள்பட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
- 3 மண்டலங்களிலும் துணை கமிஷனராக செயல்பட்டு வருகிற அதிகாரிகள் இந்த பொறுப்பை மேற்கொண்டு வருகின்றனர்.
- தபால் ஓட்டுகள் பற்றிய விவரங்களை சேகரித்து வழங்கும் பணியில் இவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை:
சென்னை மாவட்டத்தில் உள்ள 3 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தும் அதிகாரிகளாக ஏற்கனவே 3 பேர் நியமிக்கப்பட்டனர். 3 மண்டலங்களிலும் துணை கமிஷனராக செயல்பட்டு வருகிற அதிகாரிகள் இந்த பொறுப்பை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் 16 சட்டமன்ற தொகுதிகள் அடிப்படையில் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மற்றும் கூடுதல் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகளை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.
16 உதவி தேர்தல் அதிகாரிகள் பெயர் விவரம் மற்றும் தொடர்பு கொள்ளும் எண்களுடன் தொகுதி வாரியாக விவரம் வருமாறு:-
ஆர்.கே.நகர் தொகுதி
எஸ்.வாசுகி, இணை இயக்குனர் ஆதி திராவிட நலத்துறை. செல்-73388 01243
அனுஷ்யாதேவி, மாவட்ட வருவாய் அதிகாரி, சென்னை. செல்-94450 00901.
வி.முத்துசாமி, இணை கமிஷனர், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை, செல்-90951 54565
மகாலட்சுமி, பொது மேலாளர், தமிழ்நாடு சர்க்கரை கழகம், செல்-80155 02885.
எஸ்.தனலிங்கம், பொது மேலாளர், டான்சிட்கோ, செல்-94450 06554.
எம்.கலைச்செல்வி, பொது மேலாளர், மாநில தொழில்கள் முன்னேற்ற கழகம், செல்-96778 51335.
குழந்தைசாமி, செட்டில் மெண்ட் அதிகாரி, சர்வே மற்றும் செட்டில்மெண்ட், செல்-99449 14120.
பி.மணிவண்ணன், கூடுதல் இயக்குநர், ஊரக சுகா தார மருத்துவ சேவை, செல்-73581 44619.
வி.சங்கர நாராயணன், பொது மேலாளர், தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேஷன், செல்-94865 91402.
என்.ராகவேந்திரன், பொது மேலாளர், டாம்கால், செல்-90477 99947.
செந்தில்குமார், பொது மேலாளர், அரசு கேபிள் நிறுவனம், செல்-82704 89470.
ஆர்.பன்னீர்செல்வம், சீனியர் மண்டல மேலாளர், டாஸ்மாக், செல்-96293 28933.
துர்காதேவி, செயலாளர் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம், செல்-94450 74956.
சரவணமூர்த்தி, மாவட்ட வருவாய் அலுவலர், சென்னை மாநகராட்சி, செல்-94451 90740.
விஜயலட்சுமி, பொது மேலாளர், தமிழ்நாடு பெண்கள் வளர்ச்சி கழகம். செல்-70100 34495.
கவிதா, பொது மேலாளர், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம், செல்-99629 55626.
85 வயதுக்கு மேற்பட்ட வயதானவர்கள், மாற்றுத் திறனாளிகள், தபால் ஓட்டுகள் பற்றிய விவரங்களை சேகரித்து வழங்கும் பணியில் இவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
- எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளராகவும் பணியாற்றி வந்தார்.
- அவரது மறைவுக்கு அரசியல் கட்சியினர் உள்பட பல்வேறு தரப்பினர் இரங்கல்.
அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.எஸ்.அன்பழகன் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.
கடந்த 2001- 2006 வரையில் திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் தொகுதி அ.தி.மு.க. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.எஸ். அன்பழகன். இவர் எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளராகவும் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட ஏ.கே.எஸ் அன்பழகன் இன்று காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சியினர் உள்பட பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
- சோதனையின் போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களை அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்து வருகிறார்கள்.
- கூடுதல் விவரங்களை வருமான வரித்துறையினர் விரைவில் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை:
பாராளுமன்றத் தேர்தலையொட்டி பறக்கும் படை அதிகாரிகள் பணப்பட்டுவாடாவை தடுக்க 24 மணி நேரமும் தீவிர சோதனை நடத்தி வரும் நிலையில் வருமான வரித்துறையினரும் தொடர்ச்சியாக சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.
அந்த வகையில் சென்னையில் கடந்த 5-ந்தேதி அன்று தொடங்கிய வருமான வரி சோதனை மூன்று நாட்களாக நடைபெற்று வந்தது. இந்த சோதனை நேற்று இரவுடன் முடிவடைந்துள்ளது.
அரசியல் பிரமுகர்கள், ஒப்பந்ததாரர்கள் ஆகியோர்களின் வீடுகளில் நடைபெற்ற இந்த சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கி உள்ளன. வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக கட்டு கட்டாக கோடிக்கணக்கில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலின் பேரிலேயே வருமானவரித்துறையினர் இந்த சோதனையை நடத்தி இருந்தனர்.
ஆனால் இந்த சோதனையின் போது பணம் ஏதும் கைப்பற்றப்பட்டுள்ளதா என்பது பற்றிய விவரங்களை இன்னும் வெளியிடவில்லை. இருப்பினும் சோதனையின் போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களை அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்து வருகிறார்கள்.
இது தொடர்பாக கூடுதல் விவரங்களை வருமான வரித்துறையினர் விரைவில் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- சம்பவத்தில் ஈடுபட்ட சரண்குமார், வினோத்குமார், சூரியபிரகாஷ் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
- பழனி பைபாஸ் பகுதியில் பிரசன்னகுமார் பதுங்கி இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் தனிப்படை போலீசார் இன்று அதிகாலை அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகே 19, 17 வயதுடைய 2 சகோதரிகளை கடந்த வாரம் மோட்டார் பைக்கில் 4 பேர் கொண்ட கும்பல் கடத்திச் சென்றது. தாமரைக்குளம் பகுதியில் சிறுமிகளின் காதலர்கள் முன்பே அவர்களை கட்டிப்போட்டு கூட்டு பலாத்காரம் செய்தனர்.
2 சிறுமிகளையும் 4 பேர் கற்பழித்து அதனை வீடியோவாகவும் எடுத்து வைத்துக் கொண்டு நாங்கள் அழைக்கும் போதெல்லாம் எங்கள் இடத்துக்கு வர வேண்டும். இல்லையெனில் இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவோம் எனவும் மிரட்டினர்.
திண்டுக்கல் நகரையே பெரும் பரபரப்பாக்கிய இச்சம்பவம் குறித்து சாணார்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இச்சம்பவத்தில் ஈடுபட்ட சரண்குமார், வினோத்குமார், சூரியபிரகாஷ் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
தலைமறைவான ரவுடி பிரசன்னகுமாரை பிடிக்க மாவட்ட எஸ்.பி. பிரதீப் உத்தரவின் பேரில் டி.எஸ்.பி. உதயகுமார் ஆலோசனையின் பேரில் சாணார்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேஸ்வரி, சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக தேடி வந்தனர்.
பழனி பைபாஸ் பகுதியில் பிரசன்னகுமார் பதுங்கி இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் தனிப்படை போலீசார் இன்று அதிகாலை அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர்.
பொன்மாந்துரை வடக்குத் தெருவைச் சேர்ந்த ஜான்பிரிட்டோ மகன் பிரசன்ன குமார் மீது 5 கொலை வழக்குகள், அடிதடி வழக்குகள் உள்ளது. இவர் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-
தன் மீது பல்வேறு வழக்குகள் இருப்பதால் தேர்தல் சமயத்தில் தன்னை கைது செய்து விடுவார்கள் என்று தலைமறைவாக வாழ்ந்து வந்ததாகவும், சம்பவத்தன்று தனது நண்பர்கள் உதவி என கேட்டதால் அவர்களுக்கு தான் பதுங்கி இருக்கும் இடத்தை காட்டியதாகவும் கூறினார்.
பின்னர் நண்பர்கள் 3 பேரும் சிறுமிகளை பலாத்காரம் செய்ததை பார்த்து தனக்கும் ஆசை வந்ததால் அதில் இறங்கியதாக கூறினார். கொலை, அடிதடி வழக்குகளில் ஈடுபட்டாலும் தனக்கு பெரும்பாலும் இது போன்ற விஷயங்களில் ஈடுபாடு இல்லை என்பதால் விருப்பம் இல்லாமல் இறங்கியதாகவும் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- நயினார் நாகேந்திரன் உள்பட 25 பேர் மீது வழக்குப்பதிவு.
- விதிகளை மீறி தேர்தல் பிரசாரம் செய்ததாக புகார்.
நெல்லை பாராளுமன்ற தொகுதியில் பிரதான கட்சியான பா.ஜனதா சார்பில் போட்டியிடும் வேட்பாளர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. நேற்று ராதாபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் பிரசாரம் மேற்கொண்டார்.
தேர்தல் ஆணையத்தின் உத்தரவுபடி இரவு 10 மணிக்கு மேல் பிரசாரம் செய்ய அனுமதி இல்லை. இந்நிலையில் நேற்று ராதாபுரம் தொகுதிக்கு உட்பட்ட கூடங்குளம் அருகே உள்ள செட்டிகுளம், இருக்கன்துறை உள்ளிட்ட பகுதிகளில் இரவு 10 மணிக்கு மேல் அவர் நிர்வாகிகளுடன் சென்று வாக்கு சேகரித்ததாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக தகவல் அறிந்த பறக்கும்படை அதிகாரி தினேஷ்குமார் பழவூர் போலீஸ்நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில் வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 25 பேர் மீது தேர்தல் விதிமுறைகளை மீறி இரவு 10 மணிக்கு மேல் பிரசாரம் செய்ததாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வழியில் ஒருவர் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.
- டாஸ்மாக் கடைகளை மூடினால்தான் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முடியும்.
பல்லடம்:
தமிழக பா.ஜ.க. தலைவரும், கோவை பாராளுமன்ற தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை பல்லடம் பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது செல்லும் வழியில் ஒருவர் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.இதைப்பார்த்த அண்ணாமலை அதிர்ச்சியடைந்ததுடன், ஞாயிற்றுக்கிழமை என்றாலே இப்படித்தான் நடக்கிறது. இதனால் ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் செய்ய வரவே பயமாக உள்ளது. இதற்கெல்லாம் காரணம் டாஸ்மாக் கடைதான். எனவே டாஸ்மாக் கடைகளை மூடினால்தான் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முடியும். அதற்கு நீங்கள் பா.ஜ.க.வை வெற்றி பெற செய்ய வேண்டும் என்று வாக்காளர்கள் மத்தியில் பேசினார்.
பின்னர் அவர் தனது பிரசாரத்தை தொடர்ந்தார். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- பொதுமக்கள் கோவில் முன்பு தரையில் அமர்ந்து தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- பூதப்பாடியில் சுமார் ஒரு மணி நேரம் பரபரப்பு நிலவியது.
அம்மாபேட்டை:
ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள பூதப்பாடி ஊராட்சியில் கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக அதே பகுதியில் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இதில் 44 குடும்பத்தினருக்கு பட்டா வழங்கப்படவில்லை. இவர்கள் குடியிருந்து வரும் இடம் இந்து சமய அறநிலைய துறைக்கு சொந்தமானது. இந்த இடத்தில் பொதுமக்களுக்கு பட்டா வழங்கலாம் என இந்து சமய அறநிலைத்துறை சார்பில் தடை இல்லா சான்று வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் வருவாய் துறைனர் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக பட்டா வழங்காமல் காலம் தாழ்த்தி வருவதாகம், இது குறித்து வருவாய் துறையிடம் பல முறை முறையிட்டும் எந்த வித நடவடிக்கையும் எடுக்காததால் பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக கூறி 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பூதப்பாடி பூத காளியம்மன் கோவில் முன்பு தரையில் அமர்ந்து தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அம்மாபேட்டை போலீசார், அந்தியூர் வட்டாட்சியர் மற்றும் பவானி சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் முத்துகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி தேர்தல் முடிந்தவுடன் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.
இதையடுத்து பொது மக்கள் தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் பூதப்பாடியில் சுமார் ஒரு மணி நேரம் பரபரப்பு நிலவியது.
- பிரதமா் மோடி வருகையையொட்டி சென்னை தியாகராயநகா் காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.
- காவல் துறையின் தடையையும் மீறி டிரோன்களை பறக்கவிட்டால் சம்பந்தப்பட்ட நபா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை:
பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 நாட்களே இருக்கும் நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்துக்காக தமிழ்நாட்டுக்கு இதுவரை 6 முறை வருகை தந்துள்ளார். நாளை (செவ்வாய்க்கிழமை) 7-வது முறையாக அவர் தமிழகம் வருகிறார். நாளை மாலை மகாராஷ்டிராவில் இருந்து தனி விமானத்தில் சென்னை வரும் பிரதமர் மோடி விமான நிலையத்தில் இருந்து காரில் புறப்பட்டு தி.நகர் பனகல் பார்க் பகுதியில் ரோடுஷோ நடைபெறும் இடத்தை சென்றடைகிறார்.
அங்கு புதிய நீதிக் கட்சித் தலைவா் ஏ.சி.சண்முகம் அலுவலகம் முன் பிரதமருக்கு பா.ஜ.க. சாா்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.
தொடா்ந்து பனகல் பூங்கா முதல் பாண்டி பஜாா் வழியாக தேனாம்பேட்டை சிக்னல் வரை சுமார் 1½ கிலோ மீட்டர் தூரம் வாகன பேரணி பிரசாரத்தில் பிரதமா் மோடி ஈடுபட உள்ளாா். சாலையின் இருபுறமும் நின்று பாரதிய ஜனதா கட்சியினர் மற்றும் பொதுமக்கள் பூக்களை தூவி பிரதமர் மோடியை வரவேற்கிறார்கள்.
பா.ஜ.க. வேட்பாளா்கள் தமிழிசை சவுந்தரராஜன் (தென்சென்னை), வினோஜ் பி.செல்வம் (மத்திய சென்னை), பால்.கனகராஜ் (வட சென்னை) ஆகியோருக்கு ஆதரவாக பிரதமா் மோடி வாக்கு சேகரிக்கிறார்.
ரோடு ஷோ நடைபெறும் பாண்டிபஜார் பகுதி கடை வீதிகள் அதிகம் நிறைந்த பரபரப்பான பகுதியாகும். எனவே தி.நகரில் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. ரோடு ஷோ நடைபெறும் சாலையில் உள்ள கடைகள் நாளை மூடப்படுகின்றன. ஆனால் கடைகளை மூட தேவையில்லை என்று டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். என்றாலும் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த நடவடிக்கையை போலீசார் மேற்கொள்வார்கள் என்று தெரிகிறது.
ரோடு ஷோ நடை பெறும் இடத்தில் உயரமான கட்டிடங்களில் ஏறி நின்று போலீசார் பைனாகுலர் மூலமாக இன்று காலை முதல் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு சோதனையும் நடத்தப்பட்டு வருகிறது.
தி.நகர் பகுதியில் உள்ள லாட்ஜூகள் மற்றும் தங்கும் விடுதிகளில் போலீசார் நேற்று இரவு விடிய விடிய சோதனை நடத்தினர். இன்று இரவு இந்த சோதனை மேலும் தீவிரப்படுத்தப்படுகிறது. தி.நகர் பகுதி முழுவதும் பாதுகாப்பு அதிகாரிகளின் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
நாளை மாலை நடைபெறும் பிரதமரின் ரோடு ஷோ தொடர்பாக போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர், தென் சென்னை கூடுதல் கமிஷனர் பிரேமானந்த் சின்கா, இணை கமிஷனர் சிபி சக்கரவர்த்தி ஆகியோர் ஆலோசனை நடத்தி தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து உள்ளனர். ரோடு ஷோவில் சுமார் 40 ஆயிரம் பேர் வரை பங்கேற்க இருப்பதாக பாரதிய ஜனதா கட்சியினர் போலீசாரிடம் தெரிவித்து உள்ளனர்.
இதனால் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் ஏற்படாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய போலீசார் பம்பரமாக சுழன்று பணியாற்றி வருகிறார்கள். பிரதமா் மோடியின் வருகையை முன்னிட்டு பனகல் பூங்கா பகுதியில் தென்சென்னை பா.ஜ.க. வேட்பாளா் தமிழிசை சவுந்தரராஜன் பேரணி ஏற்பாடுகள் குறித்து நேற்று பாா்வையிட்டாா்.
பிரதமா் மோடி வருகையையொட்டி சென்னை தியாகராயநகா் காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. பிரதமரின் வாகன பேரணி செல்லும் பகுதி முழுவதையும் வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீசாா் சோதனை செய்தனா்.
அந்தப் பகுதியில் உள்ள விடுதிகளில் தங்கியிருப்பவா்களின் விவரங்களைச் சேகரித்து, அவா்களது அடையாள அட்டையைப் பெற்று விசாரிக்கின்றனா். அதேபோல அங்குள்ள கடைகளில் பணிபுரியும் ஊழியா்கள் குறித்த தகவல்களையும் சேகரிக்கின்றனா்.
144 தடைச் சட்டத்தின் கீழ் சென்னையில் டிரோன்கள் உள்ளிட்ட ஆளில்லாத வான்வழி வாகனங்கள் பறப்பதற்குத் தடை விதிக்கப்பட உள்ளது. காவல் துறையின் தடையையும் மீறி டிரோன்களை பறக்கவிட்டால் சம்பந்தப்பட்ட நபா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
நிகழ்ச்சிகள் நடைபெறும் தியாகராயநகா் பகுதி, பிரதமா் மோடி தங்கும் கிண்டி கவர்னர் மாளிகை ஆகிய பகுதிகளில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பிரதமர் மோடியின் வாகன ரோடு ஷோவையொட்டி, சென்னையில் 22 ஆயிரம் போலீசாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனா். பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோா் தலைமையில் செய்யப்பட்டு உள்ளன.
நாளை இரவு சென்னை ரோடு-ஷோ முடிந்ததும் பிரதமர் மோடி கிண்டி சென்று கவர்னர் மாளிகையில் தங்குகிறார். அவா், நாளை மறுநாள் (புதன்கிழமை) காலை சென்னையில் இருந்து ஹெலிகாப்டா் மூலம் வேலூா் செல்கிறாா். அங்கு வேலூா் கோட்டை மைதானத்தில் காலை 10.30 மணிக்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் வேலூா் பா.ஜ.க. வேட்பாளா் ஏ.சி.சண்முகத்துக்கு ஆதரவாக பிரசாரம் செய்கிறார்.
பின்னா், அங்கிருந்து ஹெலிகாப்டரில் சென்னைக்கு காலை 11.30 மணிக்கு வரும் அவா், அங்கிருந்து கோவை சூலூா் விமானப்படை தளத்துக்கு விமானத்தில் செல்கிறாா். அங்கிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் பிரதமா் மோடி, நீலகிரி பா.ஜ.க. வேட்பாளா் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டுகிறாா்.
அதன்பிறகு சூலூா் விமானப்படை தளத்துக்கு திரும்பும் பிரதமா், மகாராஷ்டிரா மாநிலத்துக்கு விமானத்தில் செல்கிறாா்.
- கடம்பூர் வனத்துறையினர் மற்றும் மருத்துவ குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
- வனப்பகுதியில் உள்ள தொட்டியில் தண்ணீரை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலம் புலிகள் காப்பகத்தில் ஆசனூர், கடம்பூர், பர்கூர் உட்பட மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, சிறுத்தை, கரடி, காட்டெருமை உள்பட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் வனப்பகுதியில் உள்ள குளம், குட்டை, ஏரிகள் நீரின்றி வறண்டு காணப்படுகிறது. இதனால் வனப்பகுதியை விட்டு சமீப காலமாக வெளியேறும் காட்டு யானைகள் தேசிய நெடுஞ்சாலையோரம் உலா வருவதும், அங்கு வரும் வாகனங்களை தடுத்து நிறுத்தி உணவு இருக்கிறதா என்று தேடுவதும் தொடர்கதை ஆகி வருகிறது.
மேலும் சில யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி அருகே இரு க்கும் கிராமத்துக்குள் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்தி வருகிறது. இந்நிலையில் சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் அருகே உள்ள குரும்பூர் என்னும் இடத்தில் நேற்று இரவு வனப்பகுதியை விட்டு வெளியேறிய பெண் காட்டு யானை ஒன்று வெயிலின் தாக்கம் காரணமாக தண்ணீரை தேடி அங்கும் இங்கும் அலைந்து உள்ளது.
அதேப்பகுதியில் தங்கவேலு என்பவருக்கு சொந்தமான தோட்டத்துக்கு அருகே புறம்போக்கு இடத்திற்கு அந்த யானை வந்துள்ளது. அப்போது யானைக்காக தோண்டி வைக்கப்பட்டிருந்த அகழியில் அந்தப் பெண் யானை தவறி கீழே விழுந்தது.
ஏற்கனவே உணவு குடிநீரின்றி பலவீனமாக இருந்த அந்த பெண் யானை அகழியில் விழுந்ததால் அடிப்பட்டு உயிருக்கு போராடியது. இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் கடம்பூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக கடம்பூர் வனத்துறையினர் மற்றும் மருத்துவ குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
அங்கு உயிருக்கு போராடும் யானையை காப்பாற்றுவதற்காக அதன் காது நரம்பு வழியாக குளுக்கோஸ் ஏற்றி வருகின்றனர். யானையின் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதால் மருத்துவ குழுவினர் அதனை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
மேலும் ஜே.சி.பி. எந்திரம் மூலம் யானையை வெளியே எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது வனப்பகுதியில் வரட்சியான நிலை உள்ளதால் தன்னார்வலர்கள் மூலம் வனப்பகுதியில் உள்ள தொட்டியில் தண்ணீரை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






