என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • கிருஷ்ணகிரியில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் வேட்பாளர் வித்யாராணியை ஆதரித்து சீமான் பேசினார்.
    • சம்பவத்தால் பிரசார கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வித்யாராணி வீரப்பனை ஆதரித்து, அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று மாலை மத்தூர், பர்கூரில் பிரசாரம் மேற்கொண்டார்.

    இதைத்தொடர்ந்து இரவு கிருஷ்ணகிரியில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் வேட்பாளர் வித்யாராணியை ஆதரித்து சீமான் பேசினார்.

    அப்போது சீமான் மேடையில் பேசிக் கொண்டிருக்கும்போது கூட்டத்தில் இருந்து ஒரு வாலிபர் திடீரென்று ஓடிவந்து அவரை கட்டி பிடித்து செல்பி எடுக்க வேண்டும் என்று கூறினார்.

    உடனே ஆதரவாளர்கள் ஓடிவந்து அந்த வாலிபரை அங்கிருந்து அப்புறப்படுத்தி மேடையில் இருந்து கீழே இறங்கிவிட்டனர்.

    இதனால் சீமான் அந்த வாலிபரை முறைத்தபடி திட்டினார். இதனைத்தொடர்ந்து அவர் தனது பேச்சை தொடர்ந்தார். இந்த சம்பவத்தால் பிரசார கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

    • தமிழகத்தில் பிரதமர் செல்லாத புதிய இடங்களுக்கு அழைத்து செல்வது பற்றி 12-ந்தேதிக்கு பிறகு தெரிவிக்கப்படும்.
    • பிரதமர் தமிழகத்திற்கு வருவதில் தி.மு.க.வுக்கு என்ன பயம் என்று தெரியவில்லை.

    கோவை:

    கோவை தொகுதி பா.ஜ.க வேட்பாளர் அண்ணாமலை இன்று கோவை சரவணம்பட்டியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார். நாளை மாலை தென்சென்னை, மத்திய சென்னை வேட்பாளர்களை ஆதரித்து நடக்கும் ரோடு ஷோ நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்று ஆதரவு திரட்ட உள்ளார்.

    அதன்பிறகு மறுநாள் காலை வேலூரில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் பிரதமர், மதியம் கோவை மேட்டுப்பாளையத்தில் நடக்கும் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.

    தமிழகத்தில் பிரதமர் செல்லாத புதிய இடங்களுக்கு அழைத்து செல்வது பற்றி 12-ந்தேதிக்கு பிறகு தெரிவிக்கப்படும்.

    பிரதமர் தமிழகத்திற்கு வருவதில் தி.மு.க.வுக்கு என்ன பயம் என்று தெரியவில்லை.

    தமிழகத்தின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சரான பிறகு கடந்த 33 மாதங்களில் எத்தனை கிராமங்களுக்கு சென்று இருக்கிறார் என்று தி.மு.கவினரால் சொல்ல முடியுமா?. அவர் வெளிநாடுகளுக்கு செல்வார். தமிழகத்தில் நகரங்களுக்கு சென்று கை காட்டி விட்டு சென்று விடுவார்.

    தி.மு.க.வினர் தாங்கள் தான் ஏதோ காலை உணவு திட்டத்தை கொண்டு வந்ததாக கூறி வருகிறார்கள். ஆனால் இந்த திட்டமானது மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்வி கொள்கை திட்டத்திலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழக பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கை இன்னும் 2 தினங்களில் வெளியிடப்படும். கோவைக்கு என்று தனியாகவும் தேர்தல் அறிக்கை வெளியிட உள்ளோம்.

    ஜெயிலில் இருந்து கொண்டு ஒருவர் கதை, திரைக்கதை வசனம் எழுதுகிறார். அவர் எழுதிய கதையை தான் இங்கு வந்திருக்க கூடிய அமைச்சர்கள் பேசி வருகிறார்.

    ஜெயிலில் இருந்து கொண்டு, தங்கம், பணம் கொடுத்து மக்களின் வாக்குகளை பெற்று விடலாம் என நினைக்கின்றனர். ஆனால் அது இந்த முறை நடக்காது. எவ்வளவு தங்க சுரங்கத்தையே தோண்டி வந்து கொடுத்தாலும் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். யார் வெற்றி பெறுவார்கள் என்பது ஜூன் 4-ந்தேதி சாமானியனின் குரல் மூலம் தெரிய வரும். எங்களுக்கு 60 சதவீத வாக்குகள் கிடைக்கும். நான் வாக்குக்கு பணம் கொடுக்க மாட்டேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நான் ஒரு சாதாரண விவசாயி.
    • விவசாய கிராமங்களின் அடிப்படை கட்டமைப்புகளை ஏற்படுத்துவேன்.

    ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் பா.ஜெயபெருமாள் முதுகுளத்தூர் பகுதியில் வளநாடு, தேரிருவேலி, காக் கூர், கொளுந்துரை சாம்பகுளம், கீழத்தூவல், சேரி, வெண்ணீர வாய்க்கால், செல்வநாயகபுரம். உடையநாதபுரம், அச்சங்குளம், நல்லுக்குறிச்சி அபிராமம் பல்வேறு கிராமங்களில் இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்து பேசியதாவது:-

    தமிழ்நட்டில் நடப்பது நாடக ஆட்சி. மக்களை ஏமாற்றி பொய்யான வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்த திமுகவின் மோசடி அரசியலை மக்கள் உணர்ந்து விட்டனர். 5 ஆண்டுகளாக தொகுதி பக்கமே தலைகாட்டாமல் மீண்டும் ஓட்டுகேட்டுவரும் எம்.பி.க்கு பாடம் புகட்டுங்கள்.

    ஜெயலலிதாவின் ஆட்சியில் கிராம மக்களை வலுப்படுத்த ஆடு, மாடு, கோழி மற்றும் பெண்களுக்கு தாலிக்கு தங்கமும் கொடுத்தார். தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் மக்கள் நலத்திட்டங்கள் அனைத்தையும் நிறுத்திவிட்டன. கிராமங்களில் கூட போதை அதிகரித்துள்ளதால் இளைஞர்கள் வாழ்வு கேள்விக்குறியாகியுள்ளன.

    நான் ஒரு சாதாரண விவசாயி. உங்களுடனே இருப்பேன். விவசாய கிராமங்களின் அடிப்படை கட்டமைப்புகளை ஏற்படுத்துவேன். சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பேன். எந்த தடை இருந்தாலும் கிராமங்களில் விவசாயத்திற்கு தேவையான தண்ணீரை கொண்டு வர நடவடிக்கை எடுப்பேன். கிராம மக்களின் தேவைகளை நிறைவேற்ற இரட்டை இலைக்கு வாக்களித்து என்னை அமோக வெற்றி பெறச் செய்யுங்கள் என்றார்.

    வேட்பாளருடன் முன்னான் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், முன்னாள் எம்.எல்.ஏ. மலேசியா எஸ்.பாண்டியன், முன்னாள் எம்.பி. எம்.எஸ். நிறைகுளத்தான், முன்னான் மாவட்ட ஊராட்சி சேர்மன் வக்கீல் எம்.சுந்தரபாண்டியன், ஒன்றிய கழக செயலாளர்கள் கோ.கர்ணன், என்.டி.செந்தில்குமார். கருப்புச்சாமி. ஆனை சேரி முத்துராமலிங்கம், அம்சராஜ உள்பட அ.தி.மு.க கிளைக்கழக நிர்வாகிகள் திரளாக கலந்துகொண்டனர்.

    • தமிழ்நாட்டைப் பொறுத்த வரை 2024 பாராளுமன்றத் தேர்தல் மிகவும் முக்கியமானதாகும்.
    • பாராளுமன்றத் தேர்தலை ஒரு கட்சி குவித்து வைத்தக் கோடிகளைக் கொட்டி சந்திக்கிறது.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், வெற்றியை ஈட்ட வேண்டும் என்பதற்காக தேர்தல் களத்தில் பாட்டாளி இளஞ்சிங்கங்களாகிய நீங்கள் உழைக்கும் உழைப்பு எனக்கே புதிய உத்வேகத்தை அளிக்கிறது.

    தமிழ்நாட்டு அரசியலில் சமூகநீதி நிழல் தரும் ஆலமரமாக பாட்டாளி மக்கள் கட்சி திகழ்கிறது என்றால், அதன் வேர்களும், விழுதுகளும் நீங்கள் தான். நீங்கள் இல்லாவிட்டால் இந்த இயக்கம் இல்லை; இந்த இயக்கத்திற்கு கிடைத்த வெற்றிகளும் இல்லை. தமிழ்நாட்டில் 2024 பாராளுமன்றத் தேர்தலை ஒரு கட்சி குவித்து வைத்தக் கோடிகளைக் கொட்டி சந்திக்கிறது; இன்னொரு கட்சி குவித்துக் கொண்டிருக்கும் கோடிகளை வாரி இறைத்து எதிர்கொள்கிறது. அவர்களுக்கென்று சொல்லிக் கொள்ள சாதனைகளும் இல்லை; களப்பணியாற்ற உன்னைப் போன்ற சிங்கங்களும் இல்லை. அதனால், பணத்தை மட்டுமே முதன்மை ஆயுதமாக நினைத்து அந்தக் கட்சிகள் பாராளுமன்றத் தேர்தலை எதிர்கொண்டு வருகின்றன.

    உன்னைப் போலவே தான் நான் என்னையும் துடிப்புடன் வைத்துக் கொள்ள முயல்கிறேன். உனக்கிருக்கும் அதே உற்சாகத்துடன் தான் கடந்த மார்ச் 24-ந்தேதி பரப்புரையைத் தொடங்கினேன்.

    85 வயது முதுமையால் ஏற்பட்ட தளர்ச்சியும், சுட்டெரிக்கும் வெயிலால் ஏற்பட்ட அயற்சியும், இவற்றால் ஏற்பட்ட குறைந்த ரத்த அழுத்தமும் என்னை ஓய்வெடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கியிருக்கின்றன. அதனால், கடந்த சில நாட்களாக பரப்புரைக்கு செல்லாத எனக்கு உன்னைப் போன்ற சிங்கக் குட்டிகளின் உழைப்பு தான் நம்பிக்கையும் உற்சாகமும் அளித்துக் கொண்டிருக்கிறது. அதனால் ஏற்பட்ட புத்தெழுச்சியால் இரு நாள்கள் இடைவெளிக்குப் பிறகு இன்று மாலை திருச்சிற்றம்பலம் கூட்டு சாலையில் நடைபெறவிருக்கும் பரப்புரைக் கூட்டத்தில் விழுப்புரம் தொகுதி பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் முரளி சங்கரை ஆதரித்து வாக்கு சேகரிக்க உள்ளேன்.

    தமிழ்நாட்டைப் பொறுத்த வரை 2024 பாராளுமன்றத் தேர்தல் மிகவும் முக்கியமானதாகும். மத்தியில் மீண்டும் ஆட்சி அமைக்கப்போவது தேசிய ஜனநாயகக் கூட்டணி தான்; மூன்றாவது முறையாக பிரதமராகப் போவது நமது நரேந்திர மோடி தான் என்பது ஏற்கனவே உறுதியாகி விட்டது. ஆனால், மத்தியில் அமைக்கப்படவிருக்கும் ஆட்சிக்கு தமிழ்நாடு மற்றும் புதுவையில் இருந்து நாம் அளிக்க இருக்கும் பங்கு எவ்வளவு? என்பதை தீர்மானிப்பதற்குத் தான் வரும் 19-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது. அத்தேர்தலின் மூலமான நமது பங்களிப்பு நாற்பதுக்கும் நாற்பதாக இருக்க வேண்டும் என்பதே எனது அவா.

    2021 தேர்தலில் 500 க்கும் கூடுதலான வாக்குறுதிகளை அளித்த ஒரு கட்சி, அவற்றில் 50 வாக்குறுதிகளைக் கூட நிறை வேற்றவில்லை. மாறாக, இரு ஆண்டுகளில் மட்டும் ரூ.60 ஆயிரம் கோடிக்கு மின்கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, குடிநீர் கட்டண உயர்வு, பத்திரப்பதிவு கட்டணம் உயர்வு, கிலோவுக்கு ரூ.12 வரை அரிசி விலை உயர்வு, மூன்றாண்டுகளில் 10 முறைக்கும் கூடுதலாக பால் விலை உயர்வு, தாக்குப்பிடிக்க முடியாத அளவுக்கு மளிகைப் பொருட்கள் விலை உயர்வு என ஒவ்வொரு ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பத்தின் செலவுகளை மாதத்திற்கு ரூ.5000 முதல் ரூ.10000 வரை உயர்த்தியது தான் அந்தக் கட்சி அரசின் சாதனை. அதை நினைத்தாலே கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    இன்னொரு கட்சிக்கோ சமூக நீதியும் தெரியவில்லை, தன்னாட்சி தத்துவமும் புரியவில்லை. இலக்கும் இல்லாமல், பயணிக்கும் திசையும் தெரியாமல் கால் போகும் போக்கில் பயணித்துக் கொண்டிருக்கிறது. மக்களை ஏமாற்றும் முந்தையக் கட்சி வீழ்த்தப்பட வேண்டியதும், தேச நலனுக்கும், மாநில நலனுக்கும் பங்களிப்பு செய்யாத இரண்டாவது கட்சி வெற்றி பெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டியதும் காலத்தின் கட்டாயமாகும். அதற்காக இந்த மடலில் நான் குறிப்பிட்டிருக்கும் காரணங்கள் அனைத்தையும் திண்ணைப் பரப்புரை மூலம் மக்களைச் சந்தித்து, அவர்களுக்கு எளிமையாக எடுத்துக் கூறி புரிய வைக்க வேண்டும்.

    தேர்தல் களத்தில் இன்று வரை நாம் தான் முதலில் ஓடிக் கொண்டே இருக்கிறோம். இதே நிலை தொடர வேண்டும். தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் 10 நாட்கள் மட்டுமே இருக்கின்றன. அந்த வகையில் வெற்றி தொட்டுவிடும் தொலைவில் தான் உள்ளது. இரு மாதங்களில் வெற்றி நம்வசமான பிறகு நாம் அனைவரும் ஒன்று கூடி அதை கொண்டாடி மகிழ்வோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ஜிஎஸ்டி வரியை சரிசெய்ய வேண்டுமென்றால் மத்தியில் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி வந்தால் மட்டும் இந்த நிலை மாறும்.
    • காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 100 நாள் வேலைத்திட்டத்தின் சம்பளத்தை 400 ரூபாயாக உயர்த்தி அளிக்கிறோம் என்று உறுதி அளிக்கிறேன்.

    பாராளுமன்ற தேர்தலில் சிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் தற்போதைய எம்.பி கார்த்திக் சிதம்பரம் மீண்டும் போட்டியிடுகிறார். தொகுதி முழுவதும் அவர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் காரைக்குடியில் மக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறியதாவது,

    இந்திய கூட்டணி சார்பில் கை சின்னத்தில் போட்டியிடுவதாகவும், தனக்கு கை சின்னத்தில் வாக்களிக்கும்படியும் கூறினார். இந்த தேர்தல் என்பது மிகவும் முக்கித்துவம் ஆனது. மிக சாதாரணமாக எடுத்துக் கொள்ள கூடாது. இந்தியா எந்த திசையை நோக்கி பயணிக்க போகிறது என்பதை தேர்ந்தெடுக்கும் நேரம் இது. ஒரு வேட்பாளரை தாண்டிய தேர்தல் இது. இந்தியாவை இப்போது ஆண்டு கொண்டிருப்பது பாஜக, அவர்களின் கொள்கை இந்தி, இந்துத்துவா. அர்த்தம் என்னவென்றால் இந்தி மொழி தான் இந்தியாவின் தேசிய மொழியாக இருக்க வேண்டும், இந்தி மொழி தான் ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் மற்ற மொழிகளை எல்லாம் மட்டம் தட்ட வேண்டும் என்பது அவர்களின் எண்ணம். நமக்கு அது சரிப்பட்டு வராது. நமக்கு தமிழ் தான் முக்கியம். தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

    அவர்கள் இந்துத்துவா கொள்கையை பின்பற்றுகிறார்கள். கிறிஸ்துவர்களையும், இஸ்லாமியர்களையும் இரண்டாம் தர குடிமக்களாக நடத்தி அவர்களை மட்டம் தட்டுவதுதான் பாஜகவினரின் வேலையாக உள்ளது.

    20 ஆண்டுகளுக்கு முன் கோவில்களில் கிடா வெட்டும் நிகழ்வை ரத்து செய்தனர். இந்த இந்துத்துவா பாஜக ஆட்சி மீண்டும் வந்தால் நமது ஊர்களில் கிடா வெட்டுவதையும், சேவல் நேர்த்திக்கடனாக கொடுப்பதையும் தடை செய்து விடுவார்கள். அவர்களது இந்துத்துவா என்பது முழுக்க முழுக்க வடஇந்திய, சமஸ்கிருத, மேல்தட்டு வெஜிட்டேரியன் இந்துத்துவா. நமது நடைமுறை வாழ்க்கைக்கும் அதற்கும் சம்மந்தம் இல்லை. நமது கிராமபுற பழக்க வழக்கங்கள் தொடர வேண்டும் என்றால் இந்திய கூட்டணியான கை சின்னத்தில் வாக்களியுங்கள்.

    நாம் அனைத்து பொருட்களுக்கும் வரி கட்டுகிறோம். நாம் 1 ரூபாய் வரிக்கட்டினால் நமக்கு திரும்ப வருவது 29 பைசா மட்டும் தான். ஆனால் வட இந்தியாவான உத்திர பிரதேச மாநிலத்தில் 1 ரூபாய் வரிக்கட்டினால் 2.73 பைசா அவர்கள் திரும்ப பெறுகிறார்கள்.


    எல்லா பொருட்களுக்கும் விலைவாசி அதிகரித்துள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் 55 ரூபாயாக இருந்த கேபிள் டிவியின் சந்தா இப்போது 250 ரூபாயாக உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வுக்கு முக்கியக்காரணம் இந்தி, இந்துத்துவா அரங்சாங்கமான பாஜக மட்டுமே. விலையேற்றத்தை சரிசெய்ய வேண்டும் என்றால் ஜிஎஸ்டி வரியை சரிசெய்ய வேண்டுமென்றால் மத்தியில் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி வந்தால் மட்டும் இந்த நிலை மாறும்.

    முதலமைச்சரின் நலத்திட்டங்கள் உங்களுக்கு நல்லப்படியாக வந்து கொண்டிருக்கிறது. மகளிர் உரிமை தொகை, காலை உணவு திட்டம், கல்லூரி பெண்களுக்கு ஊக்கத்தொகை, இலவச பேருந்து இவை அனைத்தும் தொடர வேண்டுமென்றால் கை சின்னத்தில் வாக்களியுங்கள்.

    காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 100 நாள் வேலைத்திட்டத்தின் சம்பளத்தை 400 ரூபாயாக உயர்த்தி அளிக்கிறோம் என்று உறுதி அளிக்கிறேன். கல்விக்கடன் யாராவது வாங்கியிருந்தால் முழுமையாக ரத்து செய்யப்படும். இனிமேல் இரண்டு வாரங்களுக்கு யாரிடம் இருந்து உங்களுக்கு போன் வந்தால் ஹாலோ என்று கூறாமல் கைசின்னம் என்று தான் கூற வேண்டும்.

    நான் கூறிய அனைத்தும் நிறைவேற வேண்டும் என்றால் இந்திய கூட்டணியான கைசின்னத்தில் வாக்களியுங்கள் என்று கூறினார்.

    • ராமேசுவரம் இந்துக்களின் தீர்த்த மூர்த்தி ஸ்தலமாக திகழ்கிறது.
    • திதி கொடுத்து வழிபாடு நடத்தினால் பாவ விமோச்சனம் கிடைக்கும்.

    ராமேசுவரம்:

    தென்னகத்து காசியாக போற்றப்படும் ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவில் இந்துக்களின் தீர்த்த மூர்த்தி ஸ்தலமாக திகழ்கிறது. இந்த கோவிலில் அமாவாசை தினத்தன்று அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி கொடுத்து சுவாமி வழிபாடு நடத்தினால் பாவ விமோச்சனம் கிடைக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கை.

    இந்த கோவிலில் தை அமாவாசை, மஹாளய அமாவாசை, ஆடி அமா வாசை மற்றும் மாதந்திர அமாவாசை நாட்களில் அதிகளவில் பக்தர்கள் வருகை தந்து புனித நீராடி வழிபாடு செய்கின்றனர். இதன் தொடர்ச்சியாக இன்று பங்குனி மாத சர்வ அமா வாசை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் ராமேசு வரம் வருகை தந்தனர்.

    தம்மோடு வாழ்த்து மறைந்து முன்னோர்களுக்கு அக்னி தீர்த்த கடலில் நீராடி திதி கொடுத்து வழிபட்டனர். இதன் பின்னர் ராமநாத சுவாமி கோவில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்த கிணறுகளில் நீராடி ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்பாளை தரிசனம் செய்தனர்.

    ஏற்கனவே தற்போது பள்ளிகளுக்கு தேர்வு முடிந்து கோடை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் கூட்டம் அதிக மாக இருந்தது. அசம்பாவி தங்களை தடுக்கும் வகையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

    இதேபோல் விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே சதுரகிரி சுந்தர மகாலிங்கம் சுவாமி கோவிலிலும் பங்குனி மாத சர்வ அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் மலையேறி சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.

    • ரோடு ஷோ நாமக்கல்-சேலம் ரோட்டில் உள்ள எம்.ஜி.எம். தியேட்டர் பஸ் நிறுத்தம் அருகே தொடங்கியது.
    • திறந்த வாகனத்தில் வேட்பாளருடன் சென்று ஆதரவு திரட்டினார்.

    நாமக்கல்:

    மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பாரதிய ஜனதா மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம் செய்து வருகிறார். அதன்படி இன்று மதியம் 12 மணி அளவில் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் டெல்லியில் இருந்து தனி விமானத்தில் சேலம் காமலாபுரம் விமான நிலையத்திற்கு வந்தார். இதையடுத்து அங்கிருந்து ஹெலிகாப்டரில் பரமத்தியில் உள்ள பி.ஜி.பி.கல்லூரிக்கு சென்றார். அவருக்கு பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    இதையடுத்து மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் நாமக்கல்லுக்கு சென்று நாமக்கல் பாராளுமன்ற தொகுதி பா.ஜனதா வேட்பாளருக்கு ஆதரவு திரட்டும் வகையில் "ரோடு ஷோ"வில் பங்கேற்றார். இந்த ரோடு ஷோ நாமக்கல்-சேலம் ரோட்டில் உள்ள எம்.ஜி.எம். தியேட்டர் பஸ் நிறுத்தம் அருகே தொடங்கியது. திறந்த வாகனத்தில் வேட்பாளருடன் சென்று ஆதரவு திரட்டினார்.

    இதில் பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர். ரோடு ஷோவின் போது சாலையோரம் திரண்டு இருந்த மக்களை சந்தித்து தாமரை சின்னத்திற்கு வாக்குகள் கேட்டார். மத்திய மந்திரி வருகையையொட்டி அவர் செல்லும் வழிநெடுகிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மேலும் நாமக்கல்லில் டிரோன் பறக்க தடை விதித்து கலெக்டர் உமா உத்தரவிட்டு இருந்தார்.


    • எப்படி இந்தியாவின் தலைநகரை நாக்பூருக்கு மாற்ற முடியும்.
    • கமல்ஹாசன் சுய நினைவுடன், ஆரோக்கியமான கருத்துக்களை தான் பேசுகிறாரா?

    சரவணம்பட்டி:

    ஸ்ரீபெரும்புத்தூர் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் டி.ஆர்.பாலுவை ஆதரித்து அம்பத்தூரில் மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர், "பாஜகவின் கற்பனைப்படி நாக்பூர் தலைநகர் ஆக வேண்டும். இந்தியா மத சார்புள்ள, ஒரே மதம் உள்ள நாடாக வேண்டும். இந்தி மட்டுமே ஆட்சி மொழியாக வேண்டும். பாடத்திட்டத்திலும், புராணமே சரித்திரமாக மாற வேண்டும். அனைத்து தொழிலும் ஒரு சிறு குழுவுக்கே போய் சேர வேண்டும். இதெல்லாம் நடந்தா இப்ப மட்டும் இல்ல, எப்பொழுதுமே நாம் எல்லோருமே தெருவில் நிற்க வேண்டும். அதை நடக்கவிடக் கூடாது என்று பேசினார்.

    இதுகுறித்து கோவை சரவணம்பட்டியில் செய்தியாளர்கள் கேட்டதற்கு பா.ஜ.க. வேட்பாளர் அண்ணாமலை கூறியதாவது:-


    மெண்டல் ஹாஸ்பிடல் போய் மூளையை பரிசோதனை செய்ய வேண்டும். யார் சொன்னாலும் கூட மூளையை சோதனை செய்ய வேண்டும். உண்மையாலுமே நல்லா இருக்காங்களா? இரண்டு மூளையும் வேலை செய்கிறதா? சுயநினைவுடன் தான் இருக்காங்களா? சரியா சாப்பிடறாங்களா? என்று கமல்ஹாசனுக்கு மருத்துவ ஆலோசனை தரவேண்டும்.

    எப்படி இந்தியாவின் தலைநகரை நாக்பூருக்கு மாற்ற முடியும். கமல்ஹாசன் சுய நினைவுடன், ஆரோக்கியமான கருத்துக்களை தான் பேசுகிறாரா? இல்லை தி.மு.க.வுக்கு தன்னுடைய கட்சியை ஒரு ராஜ்ய சபா சீட்டுக்காக விற்கறதுக்காக இப்படி கூவ வேண்டும் என்று கமல்ஹாசன் நினைக்கிறாரா? என்பதை அவர் தான் முடிவு செய்ய வேண்டும் என்றார்.

    • பணம் கைப்பற்றப்பட்ட விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • தமிழகத்திற்கு குறைந்தபட்சம் 4 சர்வதேச விளையாட்டு மைதானம் தேவை.

    சரவணம்பட்டி:

    கோவை சரவணம்பட்டியில் பா.ஜ.க. வேட்பாளர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * கைப்பற்றப்பட்ட பணத்திற்கும், தனக்கும் தொடர்பு இல்லை என நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

    * பணம் கைப்பற்றப்பட்ட விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    * தமிழகத்திற்கு குறைந்தபட்சம் 4 சர்வதேச விளையாட்டு மைதானம் தேவை.

    * விளையாட்டு மைதானம் தேவை தான். ஆனால் முதலில் சாலையை சீரமைக்க வேண்டும்.

    * கவர்ச்சிக்கரமான திட்டங்களை கொடுத்தால் மக்கள் ஓட்டு போட்டு விடுவார்கள் என்று முதலமைச்சரே களத்தில் இறங்கி இருக்கிறார். அதுவும் பாராளுமன்ற தேர்தலின்போது. அவர்கள் 511 தேர்தல் வாக்குறுதி கொடுத்து வெறும் 20 வாக்குறுதி கூட நிறைவேற்றவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.


    இதனிடையே, பா.ஜ.க.வில் மாநில தலைவர் பதவிக்கு ஆள் இல்லை. ரெடிமேட் அரசியல்வாதி என்று ஆர்.பி. உதயகுமார் சொல்கிறார் என்று செய்தியாளர் கேட்ட கேள்விக்கு அண்ணாமலை, ஜூன் 4-ந்தேதி வரை பொறுத்து இருக்க சொல்லுங்க. அந்த கட்சி எங்க இருக்கு, அவர் எங்க இருக்காரு, எத்தனை இடத்துல எத்தனை ஓட்டு வாங்குறாங்க. என்ன இன்னும் 40 நாட்கள் தான் இருக்கு. ஒரு விளக்கு அணையும்போது பிரகாசமாக எரியும். அதுபோலதான் இன்றைய தலைவர்களின் கருத்துக்களையும் பார்க்கிறேன் என்றார்.

    • 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற செய்து டெல்லிக்கு அனுப்புனீர்கள்.
    • நீங்கள் அனுப்பிய உணர்வும், நியாயமும் வீண்போகவில்லை.

    இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பாரிவேந்தர் பெரம்பலூர் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடுகிறார்.

    தேர்தல் நெருங்கி வருவதால், பாரிவேந்தர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

    அந்த வகையில், நேற்று பொரம்பலூர் தொகுதிக்கு உட்பட்ட கல்பாடி, சிறுவாச்சூர், வேலூர் உள்ளிட்ட பகுதிகளில் பாரிவேந்தர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

    அப்போது பொது மக்களுக்கு மத்தியில் அவர் பேசியதாவது:-

    வருகிற 19ம் தேதி பாராளுமன்ற தேர்தலில் உங்களின் பொண்ணான வாக்கை தாமரை சின்னத்திற்கு வாக்கு அளித்து வெற்றிப் பெற செய்ய வேண்டும்.

    கல்பாடி என்பது நெகிழ்ச்சி தரக்கூடிய கிராமமாக உள்ளது. அதேபோல, இங்கு கூடியிருக்கும் மக்களின் முகத்தில் உள்ள சிரிப்பை பார்க்கின்றபோது நம்பிக்கை பிறக்கிறது.

    நீங்கள் வேறு யாருக்கு வாக்குத்தர முடியும் என்று யோசித்து பாருங்கள். 2019ம் தேர்தலின்போது, பல ஊருக்கு சென்றிருக்கிறேன். உங்களை சந்தித்திருக்கிறேன். வாக்கு கேட்டிருக்கிறேன்.

    அப்போது, மக்கள் எனக்கு கொடுத்த வாக்கு என்ன தெரியுமா? 6,83,000 வாக்குகள். 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற செய்து டெல்லிக்கு அனுப்புனீர்கள். டெல்லிக்கு சென்று எங்கள் ஊரின் நிலைமையை சொல்லி நிதி கொண்டு வர அனுப்புனீர்கள்.

    நீங்கள் அனுப்பிய உணர்வும், நியாயமும் வீண்போகவில்லை. மீண்டும் வந்திருக்கிறேன் என்றால் நம்பிக்கை இருக்கிறது. நீங்கள் கேட்டதை செய்து கொடுத்துவிட்டு வந்திருக்கிறேன்.

    அனைவரின் வீட்டிலும் புத்தகம் வந்திருக்கும் என்று நம்புகிறேன். இந்த புத்தகத்தில், எத்தனை முறை, எதற்காக எந்த அமைச்சரை சந்தித்து, பிரதமர் மோடியை சந்தித்து முதல் கொண்டு இதில் இடம்பெற்றிருக்கிறது.

    அதை படித்தால், பாராளுமன்ற உறுப்பினர் சரியாகதான் செய்துக் கொண்டிருக்கிறார் என்பது புரியும்.

    அரியலூர், பெரம்பலூர், நாமக்கல் இந்த நகரங்களை இணைக்கும் ரெயில் பாதை தேவை என 50 ஆண்டு காலமாக முயற்சி செய்துக் கொண்டீர்கள்.

    அதற்கான கோப்புகளை கொண்டு பிரதமரிடம் சென்றேன். உடனே ரெயில்வே அமைச்சரை அழைத்து விசாரித்தார். அதற்கு 1000 கோடி ஆகும் எனவும் அதில் முதலீடு செய்தால் லாபம் வராது என ரெயில்வே அமைச்சர் தெரிவித்தார்.

    மோடியின் உத்தரவை அடுத்து, 2024 முழு பட்ஜெட்டில் 1000 கோடி நிதி ஒதுக்கப்பட இருக்கிறார்கள். இது எனக்கும் மன நிறைவு.

    இதுபோன்று, மாணவர்களுக்கும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 365 நாட்களும் 24 மணி நேரமும் தடையில்லாமல் பார்க்கும் வகையில் சரியான முறையில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.
    • கிரகணத்தின் காரணமாக செயற்கைகோளின் பார்வையை தடுக்காது என்பதை உறுதிப்படுத்த இந்திய விஞ்ஞானிகள் ஒரு இடத்தை தேர்ந்து எடுத்துள்ளனர்.

    பூமிக்கும், சூரியனுக்கும் இடையே சந்திரன் செல்லும் போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இந்த ஆண்டின் முழு சூரிய கிரகணம் இன்று ஏற்படுகிறது. அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய 3 நாடுகளில் மட்டுமே முழு சூரிய கிரகணத்தை காண முடியும். இந்தியாவில் பார்க்க முடியாது. இந்தியாவின் ஆதித்யா எல்-1 விண்கலம் சூரியனை தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறது.

    ஆதித்யா எல்-1 விண்கலத்தால் சூரிய கிரகண நிகழ்வை காண முடியாது. இது இஸ்ரோ அமைப்பின் தவறு இல்லை. 365 நாட்களும் 24 மணி நேரமும் தடையில்லாமல் பார்க்கும் வகையில் சரியான முறையில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

    கிரகணத்தின் காரணமாக செயற்கைகோளின் பார்வையை தடுக்காது என்பதை உறுதிப்படுத்த இந்திய விஞ்ஞானிகள் ஒரு இடத்தை தேர்ந்து எடுத்துள்ளனர்.

    இதுகுறித்து இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறும்போது, "ஆதித்யா எல்1 விண்கலம் சூரிய கிரகணத்தை பார்க்காது. சந்திரன் விண்கலத்தின் பின்னால் இருப்பதால் லாக்ரேஞ்ச் பாயிண்ட் 1 (எல் 1 புள்ளி) -இல் பூமியில் தெரியும் கிரகணத்துக்கு அந்த இடத்தில் அதிக முக்கியத்துவம் இல்லை" என்றார்.

    • புகழேந்தி மரணம் அடைந்த நிலையில் அது பற்றி மாவட்ட கலெக்டர் தமிழக சட்டசபை செயலகத்துக்கு முறைப்படி சனிக்கிழமையன்று தகவல் தெரிவித்திருந்தார்.
    • ஒரு சட்டமன்ற உறுப்பினர் மரணம் அடைந்தால் 6 மாத காலத்திற்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

    சென்னை:

    விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தி வெள்ளிக்கிழமையன்று தேர்தல் பிரசார மேடையில் மயங்கி விழுந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று முன்தினம் காலை மரணம் அடைந்தார். அவரது உடல் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

    புகழேந்தி மரணம் அடைந்த நிலையில் அது பற்றி மாவட்ட கலெக்டர் தமிழக சட்டசபை செயலகத்துக்கு முறைப்படி சனிக்கிழமையன்று தகவல் தெரிவித்திருந்தார். அதை பெற்றுக்கொண்ட சட்டசபை செயலகம் தேர்தல் கமிஷனுக்கு அறிக்கை அனுப்பி உள்ளது.

    விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ. மரணமடைந்த காரணத்தால் அந்த தொகுதி காலியிடமாக உள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டுள்ளது.

    இது தொடர்பாக அரசிதழிலும் இன்று வெளியிடப்படுகிறது.

    ஒரு சட்டமன்ற உறுப்பினர் மரணம் அடைந்தால் 6 மாத காலத்திற்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஆனால் இப்போது நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடைபெற உள்ளதால் விக்கிரவாண்டி தொகுதிக்கு அடுத்த மாதத்திற்குள் (மே) இடைத்தேர்தல் நடத்தப்படுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    இந்திய தேர்தல் ஆணையத்துக்கு இதுபற்றி இன்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு டெல்லிக்கு அறிக்கை அனுப்பியவுடன் இது குறித்து தேர்தல் ஆணையம் முடிவு செய்து அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    விக்கிரவாண்டி தொகுதிக்கு மே மாதம் இடைத்தேர்தல் நடத்தப்படுமா? அல்லது பாராளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு இடைத்தேர்தல் நடைபெறுமா? என்பது ஓரிரு நாளில் தெரிய வரும்.

    ×