search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தொட்டு விடும் தூரத்தில்தான் வெற்றி- தொண்டர்களுக்கு ராமதாஸ் கடிதம்
    X

    தொட்டு விடும் தூரத்தில்தான் வெற்றி- தொண்டர்களுக்கு ராமதாஸ் கடிதம்

    • தமிழ்நாட்டைப் பொறுத்த வரை 2024 பாராளுமன்றத் தேர்தல் மிகவும் முக்கியமானதாகும்.
    • பாராளுமன்றத் தேர்தலை ஒரு கட்சி குவித்து வைத்தக் கோடிகளைக் கொட்டி சந்திக்கிறது.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், வெற்றியை ஈட்ட வேண்டும் என்பதற்காக தேர்தல் களத்தில் பாட்டாளி இளஞ்சிங்கங்களாகிய நீங்கள் உழைக்கும் உழைப்பு எனக்கே புதிய உத்வேகத்தை அளிக்கிறது.

    தமிழ்நாட்டு அரசியலில் சமூகநீதி நிழல் தரும் ஆலமரமாக பாட்டாளி மக்கள் கட்சி திகழ்கிறது என்றால், அதன் வேர்களும், விழுதுகளும் நீங்கள் தான். நீங்கள் இல்லாவிட்டால் இந்த இயக்கம் இல்லை; இந்த இயக்கத்திற்கு கிடைத்த வெற்றிகளும் இல்லை. தமிழ்நாட்டில் 2024 பாராளுமன்றத் தேர்தலை ஒரு கட்சி குவித்து வைத்தக் கோடிகளைக் கொட்டி சந்திக்கிறது; இன்னொரு கட்சி குவித்துக் கொண்டிருக்கும் கோடிகளை வாரி இறைத்து எதிர்கொள்கிறது. அவர்களுக்கென்று சொல்லிக் கொள்ள சாதனைகளும் இல்லை; களப்பணியாற்ற உன்னைப் போன்ற சிங்கங்களும் இல்லை. அதனால், பணத்தை மட்டுமே முதன்மை ஆயுதமாக நினைத்து அந்தக் கட்சிகள் பாராளுமன்றத் தேர்தலை எதிர்கொண்டு வருகின்றன.

    உன்னைப் போலவே தான் நான் என்னையும் துடிப்புடன் வைத்துக் கொள்ள முயல்கிறேன். உனக்கிருக்கும் அதே உற்சாகத்துடன் தான் கடந்த மார்ச் 24-ந்தேதி பரப்புரையைத் தொடங்கினேன்.

    85 வயது முதுமையால் ஏற்பட்ட தளர்ச்சியும், சுட்டெரிக்கும் வெயிலால் ஏற்பட்ட அயற்சியும், இவற்றால் ஏற்பட்ட குறைந்த ரத்த அழுத்தமும் என்னை ஓய்வெடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கியிருக்கின்றன. அதனால், கடந்த சில நாட்களாக பரப்புரைக்கு செல்லாத எனக்கு உன்னைப் போன்ற சிங்கக் குட்டிகளின் உழைப்பு தான் நம்பிக்கையும் உற்சாகமும் அளித்துக் கொண்டிருக்கிறது. அதனால் ஏற்பட்ட புத்தெழுச்சியால் இரு நாள்கள் இடைவெளிக்குப் பிறகு இன்று மாலை திருச்சிற்றம்பலம் கூட்டு சாலையில் நடைபெறவிருக்கும் பரப்புரைக் கூட்டத்தில் விழுப்புரம் தொகுதி பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் முரளி சங்கரை ஆதரித்து வாக்கு சேகரிக்க உள்ளேன்.

    தமிழ்நாட்டைப் பொறுத்த வரை 2024 பாராளுமன்றத் தேர்தல் மிகவும் முக்கியமானதாகும். மத்தியில் மீண்டும் ஆட்சி அமைக்கப்போவது தேசிய ஜனநாயகக் கூட்டணி தான்; மூன்றாவது முறையாக பிரதமராகப் போவது நமது நரேந்திர மோடி தான் என்பது ஏற்கனவே உறுதியாகி விட்டது. ஆனால், மத்தியில் அமைக்கப்படவிருக்கும் ஆட்சிக்கு தமிழ்நாடு மற்றும் புதுவையில் இருந்து நாம் அளிக்க இருக்கும் பங்கு எவ்வளவு? என்பதை தீர்மானிப்பதற்குத் தான் வரும் 19-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது. அத்தேர்தலின் மூலமான நமது பங்களிப்பு நாற்பதுக்கும் நாற்பதாக இருக்க வேண்டும் என்பதே எனது அவா.

    2021 தேர்தலில் 500 க்கும் கூடுதலான வாக்குறுதிகளை அளித்த ஒரு கட்சி, அவற்றில் 50 வாக்குறுதிகளைக் கூட நிறை வேற்றவில்லை. மாறாக, இரு ஆண்டுகளில் மட்டும் ரூ.60 ஆயிரம் கோடிக்கு மின்கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, குடிநீர் கட்டண உயர்வு, பத்திரப்பதிவு கட்டணம் உயர்வு, கிலோவுக்கு ரூ.12 வரை அரிசி விலை உயர்வு, மூன்றாண்டுகளில் 10 முறைக்கும் கூடுதலாக பால் விலை உயர்வு, தாக்குப்பிடிக்க முடியாத அளவுக்கு மளிகைப் பொருட்கள் விலை உயர்வு என ஒவ்வொரு ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பத்தின் செலவுகளை மாதத்திற்கு ரூ.5000 முதல் ரூ.10000 வரை உயர்த்தியது தான் அந்தக் கட்சி அரசின் சாதனை. அதை நினைத்தாலே கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    இன்னொரு கட்சிக்கோ சமூக நீதியும் தெரியவில்லை, தன்னாட்சி தத்துவமும் புரியவில்லை. இலக்கும் இல்லாமல், பயணிக்கும் திசையும் தெரியாமல் கால் போகும் போக்கில் பயணித்துக் கொண்டிருக்கிறது. மக்களை ஏமாற்றும் முந்தையக் கட்சி வீழ்த்தப்பட வேண்டியதும், தேச நலனுக்கும், மாநில நலனுக்கும் பங்களிப்பு செய்யாத இரண்டாவது கட்சி வெற்றி பெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டியதும் காலத்தின் கட்டாயமாகும். அதற்காக இந்த மடலில் நான் குறிப்பிட்டிருக்கும் காரணங்கள் அனைத்தையும் திண்ணைப் பரப்புரை மூலம் மக்களைச் சந்தித்து, அவர்களுக்கு எளிமையாக எடுத்துக் கூறி புரிய வைக்க வேண்டும்.

    தேர்தல் களத்தில் இன்று வரை நாம் தான் முதலில் ஓடிக் கொண்டே இருக்கிறோம். இதே நிலை தொடர வேண்டும். தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் 10 நாட்கள் மட்டுமே இருக்கின்றன. அந்த வகையில் வெற்றி தொட்டுவிடும் தொலைவில் தான் உள்ளது. இரு மாதங்களில் வெற்றி நம்வசமான பிறகு நாம் அனைவரும் ஒன்று கூடி அதை கொண்டாடி மகிழ்வோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×