என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • தான் நாடாளுமன்றத்தில் ஆற்றிய பணிகள், அமைச்சர்களை சந்தித்த நிகழ்வுகள் அனைத்தும் புத்தகமாக வழங்கி உள்ளதாகத் தெரிவித்தார்.
    • தயவு செய்து ஊழல்வாதிகளை தேர்ந்தெடுக்காமல் நல்லவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

    பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் ஐ.ஜே.கே. வேட்பாளர் டாக்டர் பாரிவேந்தர், பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட செங்குணம் பகுதியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். முன்னதாக வழிநெடுகிலும் மக்கள் பூக்கள் தூவியும், பெண்கள் ஆரத்தி எடுத்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதனைத் தொடர்ந்து பேசிய டாக்டர் பாரிவேந்தர், தி.மு.க. என்பது ஊழல் கட்சி எனவும், ஊழல்வாதிகளையும் அவர்களின் குடும்பத்தையும் அப்புறப்படுத்த வேண்டும் என்றும் கூறினார். மக்களுக்கு உதவ வேண்டும் என்பதற்காகத்தான் அரசியலுக்கு வந்ததாகவும் அவர் தெரிவித்தார். மேலும், தன்னை M.P.யாகத் தேர்ந்தெடுத்தால் ஆயிரத்து 500 குடும்பங்களுக்கு உயர் மருத்துவ சிகிச்சை வழங்கப்படும் என்றும் டாக்டர் பாரிவேந்தர் உறுதியளித்தார். பரப்புரையில், தேசிய ஜனநாய கூட்டணிக் கட்சியினர், ஐ.ஜே.கே. நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


    அதனைதொடர்ந்து கல்பாடி கிராமத்தில் டாக்டர் பாரிவேந்தர் பிரசாரம் மேற்கொண்டபோது, ஆளுயர மாலை அணிவித்து சிறப்பான வரவேற்பளித்தனர். அப்போது பேசிய டாக்டர் பாரிவேந்தர், தான் நாடாளுமன்றத்தில் ஆற்றிய பணிகள், அமைச்சர்களை சந்தித்த நிகழ்வுகள் அனைத்தும் புத்தகமாக வழங்கி உள்ளதாகத் தெரிவித்தார். மேலும், அரியலூர், பெரம்பலூர், துறையூர், நாமக்கல் நகரங்களை இணைக்கும் ரயில்வே திட்டம் நிறைவேற்றப்படும் என்றும் டாக்டர் பாரிவேந்தர் வாக்குறுதி அளித்தார்.

    தொடர்ந்து சிறுவாச்சூர் பகுதியில் பரப்புரை மேற்கொண்ட பெரம்பலூர் தொகுதி ஐ.ஜே.கே வேட்பாளர் டாக்டர் பாரிவேந்தர், நீண்ட நாள் கோரிக்கையான சிறுவாச்சூர் மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டதாகவும், மக்களுக்கான எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்துவிட்டு தற்போது மக்களைச் சந்திக்க வந்துள்ளதாகவும் கூறினார். பிரதமர் நரேந்திர மோடி நேர்மையான ஆட்சி கொடுத்துள்ளதாகக் கூறிய டாக்டர் பாரிவேந்தர், தயவு செய்து ஊழல்வாதிகளை தேர்ந்தெடுக்காமல் நல்லவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

    • மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார்
    • நாமக்கல் தொகுதியில் பாஜக வேட்பாளர் கே.பி.ராமலிங்கத்தை ஆதரித்து அமைச்சர் ராஜ்நாத் சிங் ரோடு ஷோவில் பங்கேற்றார்

    மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பாரதிய ஜனதா மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம் செய்து வருகிறார். அதன்படி இன்று மதியம் 12 மணி அளவில் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் டெல்லியில் இருந்து தனி விமானத்தில் சேலம் காமலாபுரம் விமான நிலையத்திற்கு வந்தார். இதையடுத்து அங்கிருந்து ஹெலிகாப்டரில் பரமத்தியில் உள்ள பி.ஜி.பி.கல்லூரிக்கு சென்றார். அவருக்கு பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    இதையடுத்து மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் நாமக்கல்லுக்கு சென்று நாமக்கல் பாராளுமன்ற தொகுதி பா.ஜனதா வேட்பாளருக்கு ஆதரவு திரட்டும் வகையில் "ரோடு ஷோ"வில் பங்கேற்றார். இந்த ரோடு ஷோ நாமக்கல்-சேலம் ரோட்டில் உள்ள எம்.ஜி.எம். தியேட்டர் பஸ் நிறுத்தம் அருகே தொடங்கியது. திறந்த வாகனத்தில் வேட்பாளருடன் சென்று ஆதரவு திரட்டினார்.

    அப்போது பாஜக வேட்பாளர் கே.பி.ராமலிங்கம் என்று சொல்வதற்கு பதிலாக ரங்கராஜன் என்று ராஜ்நாத் சிங் கூறிவிட்டார். உடனே அருகில் இருந்த கே.பி.ராமலிங்கம் தனது பெயர் ரங்கராஜன் கிடையாது ராமலிங்கம் என கூறினார். பின்பு கே.பி.ராமலிங்கதிற்கு வாக்களியுங்கள் என்று ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

    • வழக்கமாக ரூ. 2 கோடி வரை விற்பனை நடைபெறும் நிலையில் பண்டிகை, திருவிழா நேரங்களில் ரூ. 6 முதல் ரூ. 7 கோடி வரை விற்பனை நடைபெறும்.
    • மேலப்பாளையம் வாரச்சந்தைக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மாடுகள் கொண்டுவரப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சிக்குட்பட்ட மேலப்பாளையத்தில் கால்நடை சந்தை நடைபெற்று வருகிறது.

    ஆடு, மாடுகளுடன், கோழி, கருவாடு உள்ளிட்டவைகளும் விற்பனை செய்யப்படுவதால் தென்மாவட்டங்களில் பிரசித்தி பெற்ற கால்நடை சந்தைகளில் ஒன்றாக இது திகழ்கிறது.

    ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை மாடு விற்பனையும், செவ்வாய்கிழமைகளில் ஆடு விற்பனையும் நடைபெற்று வருகிறது.

    இந்த சந்தையில் விற்பனைக்கு வரும் ஆடு, மாடுகளை வாங்க நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை மற்றும் கேரள மாநிலத்தில் இருந்தும் வியாபாரிகள் அதிகளவில் வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு நெல்லை மாவட்டம் மட்டுமின்றி தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் தங்களது ஆடு, மாடுகளை சந்தைக்கு கொண்டு வந்து நல்ல விலைக்கு விற்பனை செய்கின்றனர். இந்த சந்தையில் பொங்கல், தீபாவளி, ரம்ஜான், பக்ரீத், கிறிஸ்துமஸ் உட்பட முக்கிய பண்டிகை காலங்களில் ஆடு, மாடு விற்பனை அதிகளவில் காணப்படும். வழக்கமாக ரூ. 2 கோடி வரை விற்பனை நடைபெறும் நிலையில் பண்டிகை, திருவிழா நேரங்களில் ரூ. 6 முதல் ரூ. 7 கோடி வரை விற்பனை நடைபெறும்.

    இந்நிலையில் ரம்ஜான் பண்டிகைக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் இன்று மேலப்பாளையம் சந்தையில் ஏராளமான விவசாயிகள், வியாபாரிகள் மாடுகளுடன் திரண்டனர்.

    இதற்காக மேலப்பாளையம் வாரச்சந்தைக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மாடுகள் கொண்டுவரப்பட்டது. அவற்றை வாங்க ஏராளமான வியாபாரிகள், பொது மக்களும் குவிந்தனர்.

    • சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவேண்டும் என ராமதாஸ் கூறி வருகிறார்.
    • பி.எம்.கேர் பண்டில் பெறபட்ட 34 ஆயிரம் கோடி பணம் குறித்து தகவல் அறிக்கையில் கேள்வி கேட்டால் பதில் தர மறுக்கிறார்கள்.

    தருமபுரி:

    இந்தியா கூட்டணி கட்சி சார்பில் தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க வேட்பாளர் ஆ.மணி போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் எதிரே வாக்கு சேகரித்தார் அப்போது அவர் பேசியதாவது:

    தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டுள்ள தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து லட்சகணக்கான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யவேண்டும். உதய சூரியன் சின்னத்தில் ஓட்டுக்களை போட்டு.. மோடிக்கு வைக்க வேண்டும்.

    தருமபுரி தொகுதியில் அரசு சார்பில் சிப்காட் தொழிற்பேட்டையில் 11 கோடி ரூபாய் மதிப்பிட்டில் சாலை அமைக்கப்பட்டது உள்ளி்ட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தப்பட்டிருக்கிறது.

    தற்போது புதிய அறிவிப்புகளை வெளியிட உள்ளேன். இதில் தொப்பூரில் உயர்மட்ட மேம்பாலம் அமைப்பது, ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட இரண்டாம் கட்ட பணிகள், தருமபுரி-மொரப்பூர் ரெயில்வே திட்டம், ஒகே னக்கல்லில் இருந்து ராட்சத குழாய்கள் மூலம் காவிரி உபரிநீர் தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஏரிகளில் நிரப்பு காவிரி உபரிநீர் திட்டம், விவசாயிகளுக்கான நீர் பாசன திட்டங்கள் நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படு்ம். தேர்தலுக்கு தேர்தல் தான் மோடி வந்து செல்வார். இந்தியாவிேலயே முதன் முறையாக முதலமைச்சரின் காலை உணவு திட்டம், இந்த திட்டத்தை வெளி மாநிலத தவரும், வெளிநாட்டவரும் பின்பற்றக்கூடிய திட்டமாக இருக்கிறது. இது திராவிட மாடல் அரசு.

    இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தவுடன், கியாஸ் சிலிண்டர் விலை 500 ரூபாய் வழங்கப்படும்,.பெட்ரோல் 75 ரூபாயும், டீசல் 65 ரூபாயுக்கு வழங்கப்படும். இந்தியா முழுக்க உள்ள சுங்கச்சாவடிகள் அகற்றப்படும். வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு தந்தவர் கருணாநிதி, சமூகநீதிக்காக எதிராக உள்ள பா.ஜ.க.வுடன் பா.ம.க. கூட்டணி வைத்திருக்கிறார்கள். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவேண்டும் என ராமதாஸ் கூறி வருகிறார். ஆனால் இதனை மறுத்தும் வரும் பா.ஜ.க.வுடன் பா.ம.க. கூட்டணி வைத்திருக்கிறார்.

    டிவி ஒன்றிற்கு பேட்டியளித்த ராமதாஸ் பா.ஜ.க.வி்ன் ஆட்சிக்கு பூஜ்ஜியத்திற்கு கீழே ஏதாவது மதிப்பெண் இருந்தால் தான் கொடுக்கலாம் என்றார். ஆனால் ராமதாஸ், தற்போது பா.ம.க அதே பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர்ந்துள்ளது.

    தேர்தல் நேரத்தில் வந்து செல்வார் பிரதமர் மோடி, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி செல்வதாக செங்கல்லை நட்டு அடிக்கல் நாட்டி சென்றார், அந்த ஒற்றை கல்லயும் நான் எடுத்து வந்துவிட்டேன்.

    மோடிக்கு நான் ஒரு பெயர் வைத்திருக்கிறேன், 29 பைசா, அதாவது செல்லாக்காசு, அப்படியே நீங்களும் அப்படியே அழைக்கலாம். மற்ற மாநிலங்களுக்கு கூடுதலாக ஜி .எஸ்.டி. திருப்பி தருகிறீர்கள், ஆனால் தமிழகத்திறகு 29 பைசா தான் ஒன்றிய அரசு திருப்பி தருகிறார்கள்.

    மாநில உரிமைகளை அடகு வைத்தது அ.தி.மு.க.தான். உங்கள் பிரதமர் வேட்பாளர் யார் என்று அ.தி.மு.க. கூற முடியுமா?, சசிகலாவின் காலை பிடித்து ஆட்சிக்கு வந்தவர், கடைசியில் அவர்கள் காலை வாரிவிட்டவர் எடப்பாடி பழனிசாமி. சசிகலாவுக்கு மட்டும் இல்லை. ஒட்டு மொத்த தமிழகத்திற்கு துரோகம் செய்தவர் எடப்பாடி பழனிசாமி. இந்த 2 கூட்டணி கட்சிகளையும் விரட்டியடிக்க வேண்டும்.

    கடந்த 10 வருடத்தில் பா.ஜ.க. அரசு செய்த அனைத்து ஊழல்களும் சி.ஏ.ஜி அறிக்கையில் கிடையாது. கடந்த 9 ஆண்டுகளில் பா.ஜ.க. அரசு செய்திருக்க கூடிய செலவுகளில் 7½ லட்சம் கோடி ரூபாய் பணத்தை காணவில்லை. ஆயுஷ்மான்பவன் திட்டத்தின் இறந்து போன 88 ஆயிரம் பேருக்கு ஒரே செல்போனிலிருந்து பணம் அனுப்பி இருக்கின்றனர். பி.எம்.கேர் பண்டில் பெறபட்ட 34 ஆயிரம் கோடி பணம் குறித்து தகவல் அறிக்கையில் கேள்வி கேட்டால் பதில் தர மறுக்கிறார்கள். இது தான் மோடி அரசு.

    எனவே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் யாரை கைகாட்டுகிறாரோ அவரே பிரதமர். இந்தியா கூட்டணியில் தருமபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டுள்ள தி.மு.க. வேட்பாளரை 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யவேண்டும், மோடியை விரட்டியடிக்க வேண்டும், இந்தியாவிக்கே ஒரு விடியல் ஆட்சியை தர வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • வேறு இடத்தில் அமைக்க தமிழக அரசு முன்வர வேண்டுமென பல்வேறு போராட்டங்களும் நடந்து வருகிறது.
    • பொது மக்களின் திடீர் போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

    வடலூர்:

    கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளாலாரின் சத்திய ஞான சபையும், தருமச்சாலையும் உள்ளது. இங்கு மாதம்தோறும் பூச நட்சத்திர நாளில் 6 திரை நீக்கி ஜோதி தரிசனமும், ஆண்டுதோறும் தை மாதம் 7 திரை நீக்கி ஜோதி தரிசனமும் நடைபெற்று வருகிறது.

    சத்திய ஞான சபை உள்ள பெருவெளியில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க தமிழக அரசு திட்டம் தீட்டி, ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த மாதம் நடைபெற்றது. இத்திட்டம் அறிவிக்கப்பட்டதில் இருந்தே, அந்தப் பகுதியைச் சேர்ந்த பார்வதிபுரம் கிராம மக்களும், சன்மார்க்க சங்கத்தினர்கள், பா.ம.க.வினர் என பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    சத்திய ஞான சபை உள்ள பெருவெளியில் சர்வதேச அமைப்பதை கைவிட்டு, வேறு இடத்தில் அமைக்க தமிழக அரசு முன்வர வேண்டுமென பல்வேறு போராட்டங்களும் நடந்து வருகிறது. மேலும், இது தொடர்பாக நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

    இந்நிலையில் பார்வதிபுரம் கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர், வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க தோண்டப்பட்ட பள்ளத்தில் இன்று காலை இறங்கினர். வள்ளலார் சர்வதேச மையத்தை இங்கு அமைக்ககூடாது, வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். பொது மக்களின் திடீர் போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

    • ஆயிரம் பொன் சப்பரம் தலையலங்காரம் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • இன்று முகூர்த்தக்கால் கோவில் முன்பாக நடப்பட்டது.

    மதுரை:

    தமிழகத்தின் தென் திருப்பதி என்றழைக்கப்படும் மதுரை மாவட்டம் அழகர் கோவில் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழாவிற்கான பணிகள் இன்று கொட்டகை முகூர்த்த நிகழ்வுடன் தொடங்கியது.

    மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவில் சன்னதியில் இன்று காலை சித்திரை திருவிழா கொட்டகை முகூர்த்தம் மற்றும் ஆயிரம் பொன் சப்பரம் தலையலங்காரம் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக சுவாமிக்கு பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டு கொட்டகை முகூர்த்த நிகழ்ச்சி தொடங்கியது. முகூர்த்தக்கால் கோவில் முன்பாக நடப்பட்டது. இந்த கொட்டகை மூகூர்த்த நிகழ்ச்சியில் கோவில் துணை ஆணையர் கலைவாணன் மற்றும் கோவில் பட்டர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

     இந்த நிகழ்ச்சியின் போது சித்திரை திருவிழா சைவ-வைணவ ஒற்றுமையை எடுத்துரைக்கும் நிகழ்ச்சி என்பதை நிருபிக்கும் வகையில் கள்ளழகர் கோவில் மற்றும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் ஆகிய 2 கோவில்களின் சார்பிலும் தனித்தனியாக அச்சிடப்பட்ட பத்திரிகைகள் தாம்பூல தட்டில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்தனர். பின்னர் அழைப்பிதழ்களை நிர்வாக தரப்பில் ஒருவருக்கொருவர் அளித்து திருவிழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கும் நிகழ்வு நடைபெற்றது.

    இதனைத் தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்வு நடைபெறக்கூடிய மதுரை வண்டியூர் வைகையாற்றில் அமைந்துள்ள தேனூர் மண்டபத்தில் கொட்டகை முகூர்த்தம் நடைபெற உள்ளது.

    இந்த கொட்டகை மூகூர்த்தத்தை தொடர்ந்து சித்திரை பெருவிழாவிற்கான பணிகள் தொடங்கும். 21-ந் தேதி மாலை 7 மணிக்கு அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர் கொண்டப்ப நாயக்கர் மண்டபத்தில் எழுந்தருளிய பின்னர் மதுரைக்கு புறப்பாடாகும் நிகழ்ச்சி நடைபெறும், 22-ந்தேதி மூன்றுமாவடி பகுதியில் எதிர்சேவை நடைபெறும் இதனையடுத்து விழாவின் சிகர நிகழ்வாக 23-ந் தேதி காலை கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வு நடைபெறும்.

    பின்னர் ராமராயர் மண்டபத்தில் தண்ணீர் பீச்சுதல் நடைபெறும். இதனை தொடர்ந்து 24-ந் தேதி மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்வும், அதனை தொடர்ந்து நள்ளிரவில் தசாவதாரம் நடைபெறும், 25-ந் தேதி தல்லாகுளம் பகுதியில் பூப்பல்லக்கு நிகழ்ச்சியும், 26-ந்தேதி அழகர்மலைக்கு புறப்பாடு ஆகுதல், 27-ந்தேதி சன்னதி திரும்புதல் நிகழ்வு நடைபெற்று விழா நிறைவுபெறும்.

    • பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்த திட்டமிடப்பட்டு பணிகள் தொடங்கியுள்ளன.
    • அமைச்சர் , விஜய் வசந்த், மேயர் மகேஷ், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்த திட்டமிடப்பட்டு பணிகள் தொடங்கியுள்ளன. இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்த்து மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

    இந்தியா கூட்டணி சார்பில் நாகர்கோவிலில் நடந்த மாபெரும் பிரசார பொது கூட்டத்தில், தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கலந்து கொண்டார். அப்போது அவர் பிரசாரத்தில் பேசியதாவது, மத்தியில் ஆளுகின்ற பாஜக அரசை தோற்கடிக்க வேண்டிய கட்டாயத்தை விளக்கினார்.


    அமைச்சர் மனோ தங்கராஜ், விஜய் வசந்த், மேயர் மகேஷ், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் ஸ்ரீ வல்ல பிரசாத், காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் திரு ராஜேஷ்குமார், சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ், விளவங்கோடு சட்டமன்ற வேட்பாளர் திருமதி தாரகை கத்பர்ட், இந்தியா கூட்டணி கட்சி மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகள், ஏராளமான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    • தனித்தன்மையை இழக்காமல், சகோதர உணர்வைப் பேணி வாழ்ந்து வருகிறோம்.
    • உகாதி திருநாளை வரவேற்கும் உங்கள் வாழ்வில் புத்தாண்டு மகிழ்ச்சியை மலரச் செய்யட்டும்!

    சென்னை :

    தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் யுகாதி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டிலும், பக்கத்து மாநிலங்களிலும் வாழும் தெலுங்கு, கன்னட மொழி பேசும் திராவிட உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது மனங்கனிந்த உகாதி புத்தாண்டுத் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    தமிழ்நாட்டில் வாழும் மொழிச் சிறுபான்மையினரின் நலனில் என்றுமே அக்கறையுடன் செயல்பட்டும் வரும் கழக அரசுதான் உகாதி திருநாளுக்கு அரசு விடுமுறை அறிவித்தது.

    வெவ்வேறு மாநிலங்களாக உள்ளபோதும், ஒரே மொழிக் குடும்பமாகவும், பொதுவான பண்பாட்டுக் கூறுகளையும் கொண்டவர்களாகத் தென்னிந்திய மக்களான நாம் திகழ்கிறோம். தனித்தன்மையை இழக்காமல், சகோதர உணர்வைப் பேணி வாழ்ந்து வருகிறோம்.

    புத்தாடை, மாவிலைத் தோரணம், அறுசுவையும் கலந்த பச்சடியுடன் உகாதி திருநாளை வரவேற்கும் உங்கள் வாழ்வில் புத்தாண்டு மகிழ்ச்சியை மலரச் செய்யட்டும்!

    இந்தப் புத்தாண்டு, தென்னிந்திய மக்களின் உரிமைகள் மீட்கப்படும் ஆண்டாகவும், நமக்குரிய முறையில் வரிப்பகிர்வைப் பெறும் வகையில் மாற்றத்தை ஏற்படுத்தும் ஆண்டாகவும் அமையட்டும்!

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

    • தமிழக போலீஸ் மற்றும் துணை நிலை ராணுவத்துடன் ஆங்காங்கே சோதனைகளையும் வருமான வரித்துறையினர் நடத்தி வருகிறார்கள்.
    • கடந்த 3 நாட்களாக நடந்த வேட்டையில் கோடிக்கணக்கில் பணம், நகைகள் மற்றும் ஆவணங்கள் சிக்கி உள்ளன.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் அதிக அளவுக்கு பணப்பட்டுவாடா நடப்பதாக தேர்தல் ஆணையம் கருதுகிறது. பணப்பட்டுவாடாவை தடுக்க பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வேட்டை நடத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் வருமான வரித்துறையையும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் களத்தில் இறக்கி விட்டுள்ளனர்.

    வருமான வரித்துறையுடன் ஆலோசித்த தேர்தல் ஆணைய அதிகாரிகள் 39 தொகுதிகளிலும் தீவிரமாக சோதனை நடத்த உத்தரவிட்டுள்ளனர். இதையடுத்து வெளிமாநிலங்களில் இருந்து 58 சிறப்பு அதிகாரிகள் தமிழகத்துக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தொகுதி வாரியாக கட்சிகளின் வேட்பாளர்களை தினமும் கண்காணித்து வருகிறார்கள்.

    தமிழக போலீஸ் மற்றும் துணை நிலை ராணுவத்துடன் ஆங்காங்கே சோதனைகளையும் வருமான வரித்துறையினர் நடத்தி வருகிறார்கள். கடந்த 3 நாட்களாக நடந்த வேட்டையில் கோடிக்கணக்கில் பணம், நகைகள் மற்றும் ஆவணங்கள் சிக்கி உள்ளன.

    இந்த நிலையில் வருமான வரித்துறை, பறக்கும் படை மற்றும் தேர்தல் ஆணைய அதிகாரிகளின் தீவிர கண்காணிப்பையும் மீறி முக்கிய கட்சிகள் 39 தொகுதிகளிலும் பணப்பட்டுவாடா செய்ய ரகசிய ஏற்பாடுகள் செய்து இருப்பதாக தெரிய வந்துள்ளது. பெரும்பாலான தொகுதிகளில் கோடிக்கணக்கான பணம் கொண்டு செல்லப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டு இருப்பதாக தேர்தல் ஆணையத்துக்கு ரகசிய தகவல் கிடைத்து உள்ளது.

    கட்சிகளுடன் தொடர்பு இல்லாத பொதுவான நபர்களின் வீடுகளில் அந்த பணம் இருப்பதாக தெரியவந்துள்ளது. சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு பணம் 39 தொகுதிகளிலும் பதுக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

    தங்களுக்கு சாதகம் இல்லாத தொகுதிகளில் அதிக அளவில் பணம் வினியோகிக்க சில கட்சிகள் திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    அந்த வகையில் 780 சூட்கேஸ்களில் கத்தை கத்தையாக 500 ரூபாய் நோட்டு கட்டுகள் அடுக்கிக் கொண்டு செல்லப்பட்டதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. எந்த கட்சி சார்பில் அந்த பணம் சென்றது என்று தெரியவில்லை.

    இதையடுத்து அமலாக்கத்துறையினர், வருமான வரித்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இன்னும் சில தினங்களில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா தொடங்கி விடும் என்பதால் அதற்கு முன்னதாக அந்த 2 ஆயிரம் கோடி ரூபாயையும் கைப்பற்ற தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.

    எனவே வரும் நாட்களில் வருமான வரித்துறையினர் நடத்தும் சோதனை மேலும் தீவிரமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக செலவின பார்வையாளர் விசாரணை அறிக்கையை சமர்ப்பிப்பார்.
    • தமிழகம் முழுவதும் இதுவரை 2 கோடியே 8 லட்சத்து 59 ஆயிரத்து 559 வாக்காளர்களுக்கு பூத் சிலிப்புகள் வழங்கப்பட்டு உள்ளன.

    சென்னை:

    தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் தேர்தல் நடைமுறை ஜூன் 4-ந்தேதி வரை அமலில் இருக்கும். ஏப்ரல் 19-ந்தேதி வாக்குப்பதிவு முடிந்த பிறகும் வாகன சோதனை தொடரும். எனவே உரிய ஆவணம் இல்லாமல் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் எடுத்துச் செல்வதற்கான கட்டுப்பாடுகள் ஜூன் 4-ந்தேதி வரை தொடரும்.

    தமிழகம் முழுவதும் இதுவரை தேர்தல் பறக்கும் படையால் ரூ.208 கோடி பணம், பொருட்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. இவை உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்டவை ஆகும்.

    இவற்றில் தமிழகம் முழுவதும் ரொக்கப் பணம் மட்டும் ரூ.88.12 கோடி பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. ரூ.4.53 கோடி மதிப்புள்ள மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

    தாம்பரத்தில் நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் ரூ.4 கோடி சிக்கியது தொடர்பாக சிறப்பு குழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக வருமான வரித்துறைக்கு தகவல் தெரிவித்து அவர்களும் விசாரணை நடத்தி வருகிறார்கள். ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக செலவின பார்வையாளர் விசாரணை அறிக்கையை சமர்ப்பிப்பார்.

    அதன் பிறகு இதில் இந்திய தேர்தல் ஆணையம் முடிவு எடுக்கும். இந்த பணம் யாருடையது யாருக்காக கொண்டு செல்லப்பட்டது என்கிற விவரங்களும் தேர்தல் ஆணையத்துக்கு தெரியப்படுத்தப்படும்.

    தமிழகம் முழுவதும் இதுவரை 2 கோடியே 8 லட்சத்து 59 ஆயிரத்து 559 வாக்காளர்களுக்கு பூத் சிலிப்புகள் வழங்கப்பட்டு உள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கிருஷ்ணகிரியில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் வேட்பாளர் வித்யாராணியை ஆதரித்து சீமான் பேசினார்.
    • சம்பவத்தால் பிரசார கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வித்யாராணி வீரப்பனை ஆதரித்து, அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று மாலை மத்தூர், பர்கூரில் பிரசாரம் மேற்கொண்டார்.

    இதைத்தொடர்ந்து இரவு கிருஷ்ணகிரியில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் வேட்பாளர் வித்யாராணியை ஆதரித்து சீமான் பேசினார்.

    அப்போது சீமான் மேடையில் பேசிக் கொண்டிருக்கும்போது கூட்டத்தில் இருந்து ஒரு வாலிபர் திடீரென்று ஓடிவந்து அவரை கட்டி பிடித்து செல்பி எடுக்க வேண்டும் என்று கூறினார்.

    உடனே ஆதரவாளர்கள் ஓடிவந்து அந்த வாலிபரை அங்கிருந்து அப்புறப்படுத்தி மேடையில் இருந்து கீழே இறங்கிவிட்டனர்.

    இதனால் சீமான் அந்த வாலிபரை முறைத்தபடி திட்டினார். இதனைத்தொடர்ந்து அவர் தனது பேச்சை தொடர்ந்தார். இந்த சம்பவத்தால் பிரசார கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

    • தமிழகத்தில் பிரதமர் செல்லாத புதிய இடங்களுக்கு அழைத்து செல்வது பற்றி 12-ந்தேதிக்கு பிறகு தெரிவிக்கப்படும்.
    • பிரதமர் தமிழகத்திற்கு வருவதில் தி.மு.க.வுக்கு என்ன பயம் என்று தெரியவில்லை.

    கோவை:

    கோவை தொகுதி பா.ஜ.க வேட்பாளர் அண்ணாமலை இன்று கோவை சரவணம்பட்டியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார். நாளை மாலை தென்சென்னை, மத்திய சென்னை வேட்பாளர்களை ஆதரித்து நடக்கும் ரோடு ஷோ நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்று ஆதரவு திரட்ட உள்ளார்.

    அதன்பிறகு மறுநாள் காலை வேலூரில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் பிரதமர், மதியம் கோவை மேட்டுப்பாளையத்தில் நடக்கும் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.

    தமிழகத்தில் பிரதமர் செல்லாத புதிய இடங்களுக்கு அழைத்து செல்வது பற்றி 12-ந்தேதிக்கு பிறகு தெரிவிக்கப்படும்.

    பிரதமர் தமிழகத்திற்கு வருவதில் தி.மு.க.வுக்கு என்ன பயம் என்று தெரியவில்லை.

    தமிழகத்தின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சரான பிறகு கடந்த 33 மாதங்களில் எத்தனை கிராமங்களுக்கு சென்று இருக்கிறார் என்று தி.மு.கவினரால் சொல்ல முடியுமா?. அவர் வெளிநாடுகளுக்கு செல்வார். தமிழகத்தில் நகரங்களுக்கு சென்று கை காட்டி விட்டு சென்று விடுவார்.

    தி.மு.க.வினர் தாங்கள் தான் ஏதோ காலை உணவு திட்டத்தை கொண்டு வந்ததாக கூறி வருகிறார்கள். ஆனால் இந்த திட்டமானது மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்வி கொள்கை திட்டத்திலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழக பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கை இன்னும் 2 தினங்களில் வெளியிடப்படும். கோவைக்கு என்று தனியாகவும் தேர்தல் அறிக்கை வெளியிட உள்ளோம்.

    ஜெயிலில் இருந்து கொண்டு ஒருவர் கதை, திரைக்கதை வசனம் எழுதுகிறார். அவர் எழுதிய கதையை தான் இங்கு வந்திருக்க கூடிய அமைச்சர்கள் பேசி வருகிறார்.

    ஜெயிலில் இருந்து கொண்டு, தங்கம், பணம் கொடுத்து மக்களின் வாக்குகளை பெற்று விடலாம் என நினைக்கின்றனர். ஆனால் அது இந்த முறை நடக்காது. எவ்வளவு தங்க சுரங்கத்தையே தோண்டி வந்து கொடுத்தாலும் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். யார் வெற்றி பெறுவார்கள் என்பது ஜூன் 4-ந்தேதி சாமானியனின் குரல் மூலம் தெரிய வரும். எங்களுக்கு 60 சதவீத வாக்குகள் கிடைக்கும். நான் வாக்குக்கு பணம் கொடுக்க மாட்டேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×