என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தங்கம் விலை ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை பதிவு செய்து வருகிறது.
    • வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது.

    சென்னை:

    தங்கம் விலை மீண்டும் ஏற்றத்துடனேயே பயணிக்க தொடங்கி இருக்கிறது. கடந்த 5-ந்தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.52 ஆயிரத்தை தாண்டியது. அதனைத் தொடர்ந்து விலை அதிகரித்து கொண்டே வந்து, ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை பதிவு செய்து வருகிறது. அந்தவகையில் நேற்றும் அதன் விலை உயர்ந்திருந்தது.

    அதன்படி, நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.6 ஆயிரத்து 705-க்கும், ஒரு பவுன் ரூ.53 ஆயிரத்து 640-க்கும் விற்பனை ஆனது. நேற்று மாலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.20-ம், பவுனுக்கு ரூ.160-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.6 ஆயிரத்து 725-க்கும், ஒரு பவுன் ரூ.53 ஆயிரத்து 800-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    இந்நிலையில் இன்று ஒரு பவுன் ரூ.54 ஆயிரத்தை தாண்டியது. ஒரு பவுனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.54 ஆயிரத்து 440-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.6 ஆயிரத்து 805 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 1 ரூபாய் 50 காசு அதிகரித்து 90 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    • சித்திரை பொங்கல் வழிபாடு இன்று தொடங்கி 16-ந்தேதி வரை நடக்கிறது.
    • பிரதிஷ்டை தினவிழா அடுத்த மாதம் 11-ந் தேதி நடைபெறும்.

    நாகர்கோவில்:

    அருமனை அருகே உள்ள ஒற்றயால்விளை மாத்தூர்கோணம் முத்தாரம்மன் கோவில் கொடை விழா மற்றும் சித்திரை பொங்கல் வழிபாடு இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி 16-ந் தேதி வரை நடக்கிறது.

    விழாவில் இன்று அதிகாலை 5.30 மணிக்கு உஷபூஜை, காலை 7 மணிக்கு தேவி பாராயணம், 10.30 மணிக்கு களபாபிஷேகம், 11 மணிக்கு சமய சொற்பொழிவு, மதியம் 12 மணிக்கு அன்னதானம், மாலை 6 மணிக்கு லட்சதீபம், இரவு 7.30 மணிக்கு கலை நிகழ்ச்சிகள், 8.30 மணிக்கு சிற்றுண்டி ஆகியவை நடக்கிறது.

    தொடர்ந்து வருகிற விழா நாட்களில் நிர்மால்யம், உஷபூஜை, தீபாராதனை, அன்னதானம் போன்றவை நடக்கிறது. சிறப்பு நிகழ்ச்சிகளாக நாளை (சனிக்கிழமை) காலை 10.30 மணிக்கு சுமங்கலி பூஜை, 14-ந் தேதி காலை 8.30 மணிக்கு சமய வகுப்பு மாணவ-மாணவிகளின் பண்பாட்டு போட்டிகள், மாலை 5.30 மணிக்கு திருவிளக்கு பூஜை, 15-ந் தேதி மாலை 4 மணிக்கு பூநீர் கும்ப பவனி, இரவு 2.30 மணிக்கு குருதி பூஜை ஆகியவை நடைபெறும்.

    விழாவின் இறுதி நாளான 16-ந் தேதி காலை 8 மணிக்கு துலாபாரம், 8.30 மணிக்கு வில்லிசை, 10 மணிக்கு சித்திரை பொங்கல் வழிபாடு, 10.30 மணிக்கு வலியபடுக்கை, மதியம் 12.30 மணிக்கு அன்னதானம், இரவு 7 மணிக்கு புஷ்பாபிஷேகம் போன்றவை நடக்கிறது. பிரதிஷ்டை தினவிழா அடுத்த மாதம் 11-ந் தேதி நடைபெறும்.

    • 2009-ம் ஆண்டு தேர்தலில் 322 இடங்களில் போட்டியிட்டு 116 இடங்களையே பெற முடிந்தது.
    • பா.ஜ.க.வின் 370 என்ற இலக்கு எட்ட கூடியதா? என்பதில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    பாராளுமன்ற தேர்தலில் 370 இடங்களை கைப்பற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி இலக்கு நிர்ணயித்துள்ளார். அது மட்டுமின்றி பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி 400-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

    பிரதமர் மோடி நாடு முழுவதும் பிரசார கூட்டங்களுக்கு செல்லும் போதெல்லாம் 400 இடங்களில் வெற்றி என்பதை ஒரு கோஷமாகவே எழுப்பி வருகிறார். பாரதிய ஜனதா கட்சியின் கடந்த 30 ஆண்டு கால அரசியல் பயணத்தை சற்று ஆய்வு செய்தால் பிரதமர் மோடியின் இலக்கு சாத்தியமாக வாய்ப்பு இருப்பதாக சில அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    1991-ம் ஆண்டு தேர்தலில் 364 இடங்களில் போட்டியிட்ட பா.ஜ.க. 120 இடங்களை கைப்பற்றியது. 1996-ல் 321 இடங்களில் போட்டியிட்டு 161 இடங்களையும், 1998-ல் 323 இடங்களில் போட்டியிட்டு 182 இடங்களையும் கைப்பற்றியது. 1999-ம் ஆண்டு தேர்தலில் 296 இடங்களில் போட்டியிட்டு 182 இடங்களை பெற்றது.

    2004-ம் ஆண்டு தேர்தலில் 283 இடங்களில் மட்டுமே போட்டியிட்ட பாரதிய ஜனதாவுக்கு 138 இடங்கள்தான் கிடைத்தது. 2009-ம் ஆண்டு தேர்தலில் 322 இடங்களில் போட்டியிட்டு 116 இடங்க ளையே பெற முடிந்தது.

    அதன் பிறகு 2014-ல் மோடி பா.ஜ.க. தலைவராக உயர்ந்ததும் நாடு முழுவதும் மோடி அலை உருவானது. அந்த தேர்தலில் 326 இடங்களில் போட்டியிட்ட பாரதிய ஜனதா 282 இடங்களை வென்றது. மொத்தம் பதிவான வாக்குகளில் 31.34 சதவீத வாக்குகளை பாரதிய ஜனதா கட்சி பெற்றிருந்தது.

    கடந்த 2019-ம் ஆண்டு நடந்த தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 355 இடங்களில் வேட்பாளர்களை களம் இறக்கியது. இதன் காரணமாக பாரதிய ஜனதாவுக்கு 303 இடங்களில் வெற்றி கிடைத்தது. மொத்தம் பதிவான வாக்குகளில் 37.7 சதவீத வாக்குகளை பெற்றிருந்தது.

    இந்த வரிசையில் பிரதமர் மோடி 370 இடங்களில் வெற்றி என்பதை லட்சியமாக கொண்டுள்ளார். அதற்கு ஏற்றவாறு வேட்பாளர்கள் தேர்வு செய்து அறிவிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த தடவையும் 350-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாரதிய ஜனதா போட்டியிடுகிறது. நிச்சயம் 300-க்கு மேற்பட்ட இடங்களை பாரதிய ஜனதா பிடிக்கும் என்று சில கருத்துக் கணிப்புகள் சொல்கின்றன.

    ஆனால் பெரும்பாலான அரசியல் நிபுணர்கள் பாரதிய ஜனதா கட்சி 370 இடங்களை கைப்பற்ற வேண்டும் என்றால் மொத்தம் பதிவாகும் வாக்குகளில் சுமார் 50 சதவீத வாக்குகளை பெற்றால் மட்டுமே சாத்தியம் என்கிறார்கள். இதனால் பா.ஜ.க.வின் 370 என்ற இலக்கு எட்ட கூடியதா? என்பதில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    காங்கிரஸ் கட்சி 20 முதல் 25 சதவீத வாக்குகளை பெற வாய்ப்பு உள்ளது. மாநில கட்சிகள் கணிசமான வாக்குகளை பெறும். எனவே 370 இடத்தை பெற முடியாவிட்டாலும் கடந்த ஆண்டை விட கூடுதல் சதவீத வாக்குகளை பெற பா.ஜ.க.வுக்கு வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • குக்குர் மாதிரிதானே அவருடைய முகமும் குண்டா இருக்கு.
    • அவரை பார்க்கும்போதெல்லாம் உங்களுக்கு குக்கர் நியாபகம் வரணும்.

    மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் நடந்த பரப்புரையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக அவரது மனைவி அனுராதா வாக்கு சேகரித்தார்.

    அப்போது கூட்டத்தில் பேசிய அவர், " குக்குர் மாதிரிதானே அவருடைய முகமும் குண்டா இருக்கு. அதனால.. அவரை பார்க்கும்போதெல்லாம் உங்களுக்கு குக்கர் நியாபகம் வரணும்.

    குக்கர் சின்னம் எல்லாம் இடத்திற்கும் தெரிய வேண்டும். டிடிவி தினகரனின் சின்னம் குக்கர் சின்னம். குக்கர் சின்னத்தில் குழப்பம் இல்லாமல் ஓட்டு போடுவதற்கு வயதானவர்களுக்கு எடுத்து கூறவேண்டும்.

    அவர் இதை செய்வார் அதை செய்வார் என்று உங்களுக்கு சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. ஏனென்றால், என்னைவிட உங்களுக்கு நல்லாவே தெரியும். அவர் மீது உங்களுக்கு நம்பிக்கை உள்ளது.

    அவர் உங்கள் வீட்டு பிள்ளை. உங்கள் வீட்டில் ஒருவராய் இருந்திருக்கிறார்.

    குக்கர் சின்னம் ஆர்.கே.நகரில் போட்டியிட்டபோது வெற்றிபெற்ற சின்னம். அதேமாதிரி தேனி தொகுதியிலும் அதிக வாக்கு வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற வைக்க வேண்டும்.

    குக்கர் சின்னத்திற்கு அளிக்கும் ஓட்டு, தேனி தொகுதி வளர்ச்சிக்கான ஓட்டு.

    குக்கர் என்றால் டிடிவி.. டிடிவி என்றால் குக்கர்..

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • ஆதிகேசவ பெருமாள் கோவிலில் இன்று முதல் பங்குனி திருவிழா தொடங்குகிறது.
    • பக்தர்கள் கொடிக் கயிறு, சீர்வரிசை பொருட்களுடன் ஊர்வலமாக புறப்பட்டனர்.

    திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் பங்குனி திருவிழா தொடங்குகிறது. இதனையொட்டி ஆற்றூர் அருகே பள்ளிக்குழிவிளை பள்ளி கொண்ட காவு கோவிலில் இருந்து பக்தர்கள் கொடிக் கயிறு மற்றும் சீர்வரிசை பொருட்களுடன் ஊர்வலமாக அங்கிருந்து புறப்பட்டனர்.

    மேலும் முத்துக் குடை, தாலப்பொலியுடன், நாராயணா நாராயணா என்ற மந்திரம் முழங்க கழுவன் திட்டை, சந்தை, தபால் நிலைய சந்திப்பு வழியாக சென்று ஆதிகேசவ பெருமாள் கோவிலுக்கு கொண்டு சென்றனர். கொடி கயிறை அர்ச்சகர் கருவறையில் பூஜையில் வைத்தார்.

    திருவிழாவின் முதல் நாளான இன்று காலை 8.45 மணியில் இருந்து 9.30 மணிக்குள் பஞ்ச வாத்தியங்கள் முழங்க சிறப்பு பூஜையுடன் கருட இலச்சினை பொறிக்கப்பட்ட திருக்கொடியேற்றப்படுகிறது. விழா நாட்களில் தினமும் சுவாமி வாகனத்தில் வலம் வருதல் மற்றும் கலை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. 10-ம் நாள் திருவிழாவில் சுவாமி ஆராட்டு நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினரும், பக்தர்களும் செய்துள்ளனர்.

    • இந்தியாவிலேயே குமரி மாவட்டத்தை முதன்மை மாவட்டமாக கொண்டு வர வேண்டும்.
    • ரெயில் நிலையத்தில் அனைத்து இடங்களிலும் மேற்கூரை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி பாராளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் விஜயகுமார் என்ற விஜய் வசந்த் நாகர்கோவில் மாநகர வார்டுகளில் வாக்குகள் சேகரித்தார். பெருவிளை பள்ளிவாசல் அருகே இருந்து திறந்த வாகனத்தில் நின்றபடி பிரசார பயணத்தை தொடங்கிய அவருக்கு கூட்டணி கட்சியின் சார்பில் தொண்டர்கள் மேள, தாளங்கள் முழங்க ஆரத்தி எடுத்தும், ஆளுயர மாலை அணிவித்தும், பொன்னாடை போர்த்தியும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    பின்னர் அவர் பார்வதிபுரம், ஆசாரிபள்ளம், எறும்புகாடு, மேலசூரங்குடி, குருசடி, கோணம், செட்டிகுளம், மறவன்குடியிருப்பு, இருளப்பபுரம் போன்ற மாநகராட்சி பகுதிகளில் கை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். மேலும் பீச் ரோட்டில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து பிரசார பயணத்தை நிறைவு செய்தார். அவருடன் மேயர் மகேஷ், நாகர்கோவில் மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் நவீன்குமார் மற்றும் பலர் பங்கேற்றனர். முன்னதாக அய்யா வழி அன்பு கொடி மக்கள் மாலை அணிவித்து வரவேற்பு அளித்தனர். வாக்கு சேகரிப்பின் போது வேட்பாளர் விஜய் வசந்த் பேசுகையில் கூறியதாவது:-

    எனது தந்தை வசந்தகுமார் மறைவிற்கு பிறகு அவரின் கனவுகளை தொடர்ந்து செய்வதற்கும், குமரி மக்களின் குரலாக பாராளுமன்றத்தில் 2½ ஆண்டுகள் ஒலிப்பதற்கும் எனக்கு ஒரு வாய்ப்பு தந்தீர்கள். குமரியில் முடக்கப்பட்டு நிறைவேற்றப்படாமல் இருந்த திட்டங்களை பல்வேறு இடையூறுகளுக்கு இடையே கொண்டு வந்துள்ளேன். என் தந்தை இறுதி வரை குமரி மக்களுக்காகவே வாழ்ந்தார். இந்தியாவிலேயே குமரி மாவட்டத்தை முதன்மை மாவட்டமாக கொண்டு வர வேண்டும் என்பதற்காக தொடர்ந்து உழைத்தார்.

    ஆனால் தற்போது அவர் நம்மிடம் இல்லை. அவரின் கனவை நனவாக்க வேண்டும் என்பது ஒரு மகனாகிய எனது கடமை. எனக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு தாருங்கள்.

    20 ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் இருந்த நாகர்கோவில் கோட்டார் ரெயில் நிலையம் செல்லும் சாலை, ரெயில் நிலையத்தில் இருந்து ஊட்டுவாழ்மடம் செல்லும் சாலை மற்றும் அதனை சுற்றியுள்ள சாலைகள் சரி செய்யப்பட்டுள்ளன. மேலும் டவுன் ரெயில் நிலையத்தில் அனைத்து இடங்களிலும் மேற்கூரை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. வந்தே பாரத் ரெயிலை கன்னியாகுமரி வரை நீட்டிப்பு செய்துள்ளேன்.

    நான் மக்களுக்கு விரோதமான திட்டங்கள் எதையும் குமரி மண்ணில் அனுமதிக்க மாட்டேன், அதற்காக தொடர்ந்து போராடுவேன். அரசு போட்டித் தேர்வு எழுதுவதற்கு உதவியாக பயிற்சி மையங்கள் அமைக்கப்படும். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். ஆக விரும்பும் மாணவர்களுக்கு அவர்களின் திறமையை மேம்படுத்தவும், ஊக்கப்படுத்தவும் பயிற்சி மையங்கள் அமைக்கப்படும். தோவாளையில் மலர்களை பாதுகாக்க குளிர்பதன கிடங்கு மற்றும் சென்ட் தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை எடுப்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வீட்டின் மேற்பகுதியில் தீ பிடித்ததால் தண்ணீர் ஊற்றி அணைக்க முடியவில்லை.
    • வீட்டின் உரிமையாளர்கள், விஏஓ கொடுத்த புகாரின்பேரில் 3 வழக்குகள் பதிவு செய்து வெளிப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாகப்பட்டினம்:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலையொட்டி அரசியல் கட்சியினர் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தலையொட்டி பட்டாசுகள், மேளதாளங்கள் முழங்க கட்சியினர், தங்களது ஆதரவு வேட்பாளரை உற்சாகமாக வரவேற்று வருகின்றனர்.

    நாகை பாராளுமன்ற தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிடும் வேட்பாளர் எஸ்.ஜி.எம். ரமேஷ் நேற்று காலை நாகூர் சிவன் தேரடி தெருவில் இருந்து தனது பிரசாரத்தை தொடங்கினார். அங்கிருந்து நாகூர் பட்டினச்சேரி, நாகூர் பஸ் நிறுத்தம், நாகை காடம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.

    தொடர்ந்து நாகை மேட்டுபங்களாவில் அவர் பிரசாரத்தை முடித்து விட்டு புதிய நம்பியார் நகருக்கு செல்ல தொடங்கினார். அப்போது நாகை நகராட்சி அலுவலகம் அருகே மெயின் ரோட்டில் பா.ஜனதாவினர் பட்டாசு வெடித்து வேட்பாளர் ரமேசுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    பட்டாசு வெடித்ததில் அதிலிருந்து தீப்பொறிகள் பறந்து அருகில் உள்ள ஓய்வு பெற்ற அரசு பஸ் டிரைவர் பக்கிரிசாமி(வயது 61) என்பவரது கூரை வீட்டில் விழுந்ததில், அவரது கூரை வீட்டில் தீப்பற்றி எரிந்தது. பின்னர் தீயானது காற்றின் வேகம் காரணமாக மளமளவென எரிய தொடங்கியது.

    அப்போது வீட்டில் இருந்த பக்கிரிசாமி, அவரது மனைவி பானுமதி, மகள் ஸ்ரீபிரியா, அவரது மகள் ஸ்ரீலேகா, மருமகள் ரேவதி ஆகியோர் அலறி அடித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடிவந்தனர்.

    வீட்டின் மேற்பகுதியில் தீ பிடித்ததால் தண்ணீர் ஊற்றி அணைக்க முடியவில்லை. இது குறித்து நாகை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு 2 வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

    ஆனாலும் வீட்டில் இருந்த 2 டி.விக்கள், 2 பிரிட்ஜ்கள், 2 கட்டில்கள், வாஷிங் மெஷின், 6 பீரோக்கள், 6 மின்விசிறிகள், பாத்திரங்கள் மற்றும் புத்தகங்கள் என அனைத்து பொருட்களும் எரிந்து சாம்பலானது. இதன் மதிப்பு ரூ.10 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

    இதையடுத்து வீடு தீப்பற்றி எரிந்ததை கண்டுகொள்ளாமல் சென்றதாகக்கூறி, பா.ஜனதாவினரை கண்டித்து பக்கிரிசாமியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த தாசில்தார் ராஜா சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் உடன்பாடு ஏற்படாததை தொடர்ந்து சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக சாலை மறியல் போராட்டம் நடந்தது.

    இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்த பா.ஜனதா மாவட்ட தலைவர் கார்த்திகேயன், பக்கிரிசாமி வீட்டுக்கு வந்து சேதங்களை பார்வையிட்டு உரிய இழப்பீடு தருவதாக பக்கிரிசாமியின் குடும்பத்தினரிடம் தெரிவித்தார். இதையடுத்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

    இந்நிலையில் பிரசாரத்தின்போது வெடி வெடித்து குடிசை வீடுகள் எரிந்த விவகாரத்தில் பாஜகவினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    வீட்டின் உரிமையாளர்கள், விஏஓ கொடுத்த புகாரின்பேரில் 3 வழக்குகள் பதிவு செய்து வெளிப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தடை செய்யப்பட்ட வெடியை விற்பனை செய்த கடைக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

    • வரும் 19ம் தேதி பல்வேறு மாநிலங்களில் 102 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு.
    • விழிப்புணர்வு நிகழ்ச்சியை மாவட்ட தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

    18-வது மக்களவை தேர்தல் வரும் 19-ந்தேதி முதல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. 19ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை நடைபெறும் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி நடக்கிறது. பொதுத் தேர்தலில் வாக்களிக்க கிட்டத்தட்ட 97 கோடி வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர்.

    வரும் 19ம் தேதி முதற்கட்டமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்பட பல்வேறு மாநிலங்களில் 102 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    இந்நிலையில், தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசதியத்தை வலியுறுத்தி திருவான்மியூர் கடற்கரையில் இன்று காலை பாரா செய்லிங் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை மாவட்ட தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

    • தி.மு.க.வுக்கும், பா.ஜனதாவுக்கும் இடையேதான் போட்டி. அதனால்தான் தி.மு.க.வை பிரதமர் குற்றம் சாட்டுகிறார்.
    • தமிழ்நாட்டில் பிரிவினைவாதம் பேசும் சக்திகளை அடக்குவோம், குடும்ப ஆட்சியை ஒழிப்போம் என பிரதமர் கியாரண்டி தருகிறார்.

    கோவை:

    கோவை பாராளுமன்ற தொகுதியில் பா.ஜனதா கட்சி சார்பில் அந்த கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார். அவர் நேற்று தாமரை சின்னத்திற்கு ஆதரவு கேட்டு கோவை தண்ணீர் பந்தல், மசக்காளிபாளையம் உள்ளிட்ட இடங்களில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வாகன பேரணி சென்றால் ஓட்டு கிடைக்குமா என்றும், பேட்டி அளிப்பதையே ஒருவர் வாடிக்கையாக வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அவர் வாகன பேரணி போனால் எவ்வளவு கூட்டம் வருகிறது என்று பார்ப்போம்.

    நாங்கள் வாகன பேரணியை வெறும் ஷோவாக கருதவில்லை. அதை நாங்கள் மக்கள் தரிசன யாத்திரையாக கருதுகிறோம். எங்கள் தலைவர்கள் மக்களை நேரில் சந்தித்து அவர்களின் ஆசியை பெற்று வருகின்றனர். பிரதமர் மக்களை பார்க்க வருகிறார். மக்கள் பிரதமரை பார்க்க வருகிறார்கள்.

    தி.மு.க.வுக்கும், பா.ஜனதாவுக்கும் இடையேதான் போட்டி. அதனால்தான் தி.மு.க.வை பிரதமர் குற்றம் சாட்டுகிறார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் கேட்கும் கேள்விகளுக்கு மோடி கியாரண்டி தருவாரா? என்று கேட்கிறார். அதற்கு நான் சொல்கிறேன். 2024 தேர்தலுக்கு பின் ஊழல் செய்தவர்கள் சிறையில் இருப்பார்கள் என்று பிரதமர் மோடி கியாரண்டி தருகிறார். 8½ கோடி தமிழக மக்களையும் தி.மு.க. என்ற தீய சக்தியிடம் இருந்து காப்பாற்றுவோம் என்றும், தமிழ்நாட்டை டாஸ்மாக்கில் இருந்து காப்பாற்றுவோம் என்றும் மோடி கியாரண்டி தருகிறார்.

    தமிழ்நாட்டில் பிரிவினைவாதம் பேசும் சக்திகளை அடக்குவோம், குடும்ப ஆட்சியை ஒழிப்போம் என பிரதமர் கியாரண்டி தருகிறார். பா.ஜனதா மேல்தட்டு மக்கள் கட்சி, வடமாநில கட்சி என தமிழக மக்களிடம் திராவிட கட்சிகள் ஒரு பிம்பத்தை உருவாக்கி உள்ளனர். இந்த பிம்பம் எல்லாம் உடைய போகிறது.

    அமைச்சர் உதயநிதி பிரசாரத்தின்போது ஒரு குழந்தைக்கு 'ரோலக்ஸ்' என்று பெயர் வைத்துள்ளார். கமல்ஹாசன் நடித்த விக்ரம் படத்தில் போதைக்கடத்தல் கும்பல் தலைவனாக வரும் கதாபாத்திரத்தின் பெயர்தான் ரோலக்ஸ். அந்த பெயரை குழந்தைக்கு சூட்டலாமா?

    ஐதராபாத்தில் செல்போன் ஒட்டு கேட்கப்பட்ட விவகாரத்தில் 4 போலீஸ் அதிகாரிகள் சிறைக்கு சென்றுள்ளனர். அதேபோன்ற நிலைமை தமிழகத்தில் காணப்படுகிறது.

    என்னையும், எனது குடும்பத்தினரையும் கண்காணித்து தகவல் அளிக்க ஒரு குழு கோவையில் செயல்பட்டு வருகிறது. எனது செல்போனை உளவுத்துறை போலீசார் ஒட்டு கேட்கின்றனர். என் மனைவி, என் சகோதரி மற்றும் குடும்ப உறுப்பினர்களின் செல்போன்களை ஒட்டு கேட்கின்றனர். இது ஒரு அமைச்சருக்கும், சிறையில் உள்ள செந்தில்பாலாஜிக்கும் பரிமாறப்படுகிறது. தேர்தல் முடிவுகள் வந்த பின்னர் காட்சிகள் மாறும். எனது செல்போனை ஒட்டு கேட்கும் எத்தனை உளவுத்துறை அதிகாரிகள் சிறைக்கு செல்கிறார்கள் என பாருங்கள். தி.மு.க. ஆட்சி நிரந்தரமாக இருக்க போவதில்லை.

    கொங்கு மண்டலம் தங்களது கோட்டை என திராவிட கட்சிகள் சொல்லி வருகின்றன. ஜூன் 4-ந் தேதி கொங்கு மண்டலம் யாருடைய கோட்டை என்பது தெரிந்து விடும். திராவிட கட்சிகளின் இந்த பிம்பம் உடைந்து போய்விடும்.

    மீண்டும் மத்தியில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால் தேர்தல் முறையே இருக்காது என்று கூறுவது சரியல்ல. அப்படியென்றால் 2014 மற்றும் 2019-க்கு பின்னர் தேர்தல் நடைபெறவே இல்லையா.

    ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது தான் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் எண்ணமும் கூட. மோடி அதை நிறைவேற்றும்போது கருணாநிதியின் ஆசி விண்ணில் இருந்து மோடிக்கு கண்டிப்பாக கிடைக்கும்.

    இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

    • மத்திய மந்திரி அமித்ஷா பங்கேற்கும் மதுரை நிகழ்ச்சி நிரலில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
    • பொள்ளாச்சி பா.ஜனதா வேட்பாளர் கே.வசந்தராஜனுக்கு ஆதரவாக பிரசாரம் செய்கிறார்.

    மதுரை:

    பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், தலைவர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வந்து பா.ஜனதா மற்றும் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார். மீண்டும் 15-ந்தேதி தமிழகம் வருகிறார்.

    இதற்கிடையே மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, மத்திய நிதித்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் ஆகியோர் இன்று தமிழகம் வருகிறார்கள். மதுரை, காரைக்குடி ஆகிய இடங்களில் நடக்கும் வாகன பேரணியில் அமித்ஷா பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டது. மேலும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்கிறார் என்றும் கூறப்பட்டது. அதற்கான பணிகளும் நடந்து வந்தன.

    மத்திய மந்திரி அமித்ஷா பங்கேற்கும் மதுரை நிகழ்ச்சி நிரலில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    அதன்படி, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம் நிகழ்ச்சி இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதனால் பாதுகாப்பு காரணங்களை காட்டி, மத்திய மந்திரி அமித்ஷா மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்வது தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.

    ஆனால் இன்று மாலை 6.15 மணி அளவில் அமித்ஷா பங்கேற்கும் வாகன பேரணி மதுரை நேதாஜி ரோடு தண்டாயுதபாணி முருகன் கோவிலில் இருந்து தொடங்குகிறது. அந்த பேரணி, ஜான்சிராணி பூங்கா, நகைக்கடை பஜார் வழியாக சென்று மதுரை ஆதீன மடம் அருகே நிறைவடைகிறது.

    பின்னர் அந்த பகுதியில் சிறிது நேரம் வாக்கு சேகரிப்பில் அமித்ஷா ஈடுபடுகிறார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் மதுரை விமான நிலையம் செல்கிறார். அங்கிருந்து விமானத்தில் திருவனந்தபுரத்துக்கு புறப்படுகிறார் என்று பா.ஜனதா நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு சிவகங்கை தொகுதியில் பா.ஜனதா கட்சியின் சார்பில் போட்டியிடும் தேவநாதன் யாதவை ஆதரித்து இன்று (வெள்ளிக்கிழமை) மாலை காரைக்குடியில் நடக்க இருந்த வாகன பேரணியில் அமித்ஷா பங்கேற்கிறார் என கூறப்பட்டது.

    இதற்காக அவர் மதுரையில் இருந்து காரைக்குடிக்கு ஹெலிகாப்டர் மூலம் வருவதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் அமித்ஷா பங்கேற்க இருந்த வாகன பேரணி திடீரென ரத்துசெய்யப்பட்டு இருப்பதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

    இதேபோல் மத்திய நிதித்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று தமிழகம் வருகிறார். டெல்லியில் இருந்து இன்று காலை 9 மணிக்கு பெங்களூரு செல்லும் அவர், அங்கிருந்து ஹெலிகாப்டரில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூருக்கு காலை 9.45 மணிக்கு வருகிறார். அங்கு, கிருஷ்ணகிரி பா.ஜனதா வேட்பாளர் நரசிம்மனுக்கு ஆதரவாக, பொதுக்கூட்டத்தில் பங்கேற்று வாக்கு சேகரிக்கிறார்.

    அதன்பிறகு, ஹெலிகாப்டரில் சிதம்பரம் சென்று பா.ஜனதா வேட்பாளர் கார்த்தியாயினிக்கு ஆதரவாக பகல் 12.35 மணிக்கு பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பிரசாரம் செய்கிறார்.

    அதனைத்தொடர்ந்து தஞ்சாவூர் செல்லும் அவர், அந்த தொகுதியின் பா.ஜனதா வேட்பாளர் முருகானந்தத்துக்கு ஆதரவாக வாகன பேரணி மேற்கொண்டு வாக்கு சேகரிக்கிறார்.

    நாளை (சனிக்கிழமை), கோவை அவிநாசியில் காலை 10.30 மணிக்கு தன்னார்வலர்கள் மற்றும் 100 நாள் வேலை திட்ட பணியாளர்களுடன் கலந்துரையாடுகிறார். அப்போது, நீலகிரி வேட்பாளரும், மத்திய இணை மந்திரியுமான எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டுகிறார்.

    பின்னர், மாலை 4 மணிக்கு கோவை சென்று, வேட்பாளர் அண்ணாமலைக்கு ஆதரவாக 10 ஆயிரம் பெண்கள் பங்கேற்கும் பிரமாண்ட வாகன பேரணியில் கலந்து கொண்டு நிர்மலா சீதாராமன் வாக்கு சேகரிக்கிறார். தொடர்ச்சியாக, தொண்டாமுத்தூர் செல்கிறார். அங்கு, அறிவுசார் பிரிவினருடன் கலந்துரையாடுகிறார்.

    அப்போது, பொள்ளாச்சி பா.ஜனதா வேட்பாளர் கே.வசந்தராஜனுக்கு ஆதரவாக பிரசாரம் செய்கிறார். இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் தன்னுடைய 2 நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு, கோவையில் இருந்து டெல்லி புறப்படுகிறார்.

    • தமிழ்நாட்டில் நேற்று 11 இடங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியது.
    • அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தகவல்.

    தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த சில வாரங்களாகவே வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால், வயதானவர்கள், கர்ப்பிணிகள் பகல் நேரத்தில் வெளியே செல்லவதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

    தமிழ்நாட்டில் நேற்று 11 இடங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி கொளுத்தியது.

    குறிப்பாக, திருப்பத்தூர் - 106.88, ஈரோடு - 104, சேலம் - 103.28, கரூர் பரமத்தி - 102.56, தருமபுரி, நாமக்கல் - 102.2, மதுரை விமான நிலையம் - 101.12, திருத்தணி - 100.94, வேலூர் - 100.76, திருச்சி - 100.58, மதுரை நகரம் - 100.4 ஆகும்.

    இந்நிலையில், தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    அதன்படி, தஞ்சை, நெல்லை, திருவாரூர், கன்னியாகுமரி, நாகை, மயிலாடுதுறை, ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, அரியலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, கடலூர் ஆகிய 13 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

    • செந்துரை அரசு மருத்துவமனைக்குள் சிறுத்தை செல்லும் சிசிடிவி காட்சி வெளியிடப்பட்டுள்ளது.
    • பல்வேறு இடங்களில் சிறுத்தையை தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

    மயிலாடுதுறை கூறைநாடு செம்மங்களம் பகுதியில் கடந்த 2-ம் தேதி இரவு சிறுத்தை நடமாட்டம் இருந்ததை பொதுமக்கள் பார்த்துள்ளனர். இதையடுத்து அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. பதிவுகளை ஆய்வு செய்த வனத்துறை, தீயணைப்பு துறை, காவல் துறையினர் சிறுத்தையை தேடும் பணியை தொடங்கினர்.

    இன்றுடன் 10 நாட்களாக அப்பகுதிகள் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தேடுதல் பணி நடைபெற்று வருகிறது.

    சிறுத்தையின் நடமாட்டம் பெரும்பாலும் ஆறு மற்றும் ஓடைகள் வழியாகவே இருக்கிறது.

    நேற்று முன்தினம் காலை காஞ்சிவாய் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராக்களை வனத்துறையினர் ஆய்வு செய்தனர். மேலும் சிறுத்தை பிடிப்பதற்காக வைக்கப்பட்ட கூண்டுகளிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று மதியம் முதல் சிறுத்தையின் நடமாட்டம் குறித்து எந்த தகவலும் பதிவாகவில்லை என வனத்துறையினர் தெரிவித்தனர்.

    இதனால் சிறுத்தை மயிலாடுதுறை நகரை விட்டு வெளியேறி விட்டதோ? என்ற சந்தேகமும் எழுந்தது.

    இந்நிலையில் மயிலாடுதுறையை தொடர்ந்து, அரியலூரிலும் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    செந்துரை அரசு மருத்துவமனைக்குள் சிறுத்தை செல்லும் சிசிடிவி காட்சி வெளியிடப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில்பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து, பல்வேறு இடங்களில் சிறுத்தையை தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

    ×