search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழ்நாட்டுக்கு மத்திய மந்திரிகள் அமித்ஷா, நிர்மலா சீதாராமன் இன்று வருகை
    X

    தமிழ்நாட்டுக்கு மத்திய மந்திரிகள் அமித்ஷா, நிர்மலா சீதாராமன் இன்று வருகை

    • மத்திய மந்திரி அமித்ஷா பங்கேற்கும் மதுரை நிகழ்ச்சி நிரலில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
    • பொள்ளாச்சி பா.ஜனதா வேட்பாளர் கே.வசந்தராஜனுக்கு ஆதரவாக பிரசாரம் செய்கிறார்.

    மதுரை:

    பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், தலைவர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வந்து பா.ஜனதா மற்றும் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார். மீண்டும் 15-ந்தேதி தமிழகம் வருகிறார்.

    இதற்கிடையே மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, மத்திய நிதித்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் ஆகியோர் இன்று தமிழகம் வருகிறார்கள். மதுரை, காரைக்குடி ஆகிய இடங்களில் நடக்கும் வாகன பேரணியில் அமித்ஷா பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டது. மேலும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்கிறார் என்றும் கூறப்பட்டது. அதற்கான பணிகளும் நடந்து வந்தன.

    மத்திய மந்திரி அமித்ஷா பங்கேற்கும் மதுரை நிகழ்ச்சி நிரலில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    அதன்படி, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம் நிகழ்ச்சி இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதனால் பாதுகாப்பு காரணங்களை காட்டி, மத்திய மந்திரி அமித்ஷா மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்வது தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.

    ஆனால் இன்று மாலை 6.15 மணி அளவில் அமித்ஷா பங்கேற்கும் வாகன பேரணி மதுரை நேதாஜி ரோடு தண்டாயுதபாணி முருகன் கோவிலில் இருந்து தொடங்குகிறது. அந்த பேரணி, ஜான்சிராணி பூங்கா, நகைக்கடை பஜார் வழியாக சென்று மதுரை ஆதீன மடம் அருகே நிறைவடைகிறது.

    பின்னர் அந்த பகுதியில் சிறிது நேரம் வாக்கு சேகரிப்பில் அமித்ஷா ஈடுபடுகிறார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் மதுரை விமான நிலையம் செல்கிறார். அங்கிருந்து விமானத்தில் திருவனந்தபுரத்துக்கு புறப்படுகிறார் என்று பா.ஜனதா நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு சிவகங்கை தொகுதியில் பா.ஜனதா கட்சியின் சார்பில் போட்டியிடும் தேவநாதன் யாதவை ஆதரித்து இன்று (வெள்ளிக்கிழமை) மாலை காரைக்குடியில் நடக்க இருந்த வாகன பேரணியில் அமித்ஷா பங்கேற்கிறார் என கூறப்பட்டது.

    இதற்காக அவர் மதுரையில் இருந்து காரைக்குடிக்கு ஹெலிகாப்டர் மூலம் வருவதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் அமித்ஷா பங்கேற்க இருந்த வாகன பேரணி திடீரென ரத்துசெய்யப்பட்டு இருப்பதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

    இதேபோல் மத்திய நிதித்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று தமிழகம் வருகிறார். டெல்லியில் இருந்து இன்று காலை 9 மணிக்கு பெங்களூரு செல்லும் அவர், அங்கிருந்து ஹெலிகாப்டரில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூருக்கு காலை 9.45 மணிக்கு வருகிறார். அங்கு, கிருஷ்ணகிரி பா.ஜனதா வேட்பாளர் நரசிம்மனுக்கு ஆதரவாக, பொதுக்கூட்டத்தில் பங்கேற்று வாக்கு சேகரிக்கிறார்.

    அதன்பிறகு, ஹெலிகாப்டரில் சிதம்பரம் சென்று பா.ஜனதா வேட்பாளர் கார்த்தியாயினிக்கு ஆதரவாக பகல் 12.35 மணிக்கு பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பிரசாரம் செய்கிறார்.

    அதனைத்தொடர்ந்து தஞ்சாவூர் செல்லும் அவர், அந்த தொகுதியின் பா.ஜனதா வேட்பாளர் முருகானந்தத்துக்கு ஆதரவாக வாகன பேரணி மேற்கொண்டு வாக்கு சேகரிக்கிறார்.

    நாளை (சனிக்கிழமை), கோவை அவிநாசியில் காலை 10.30 மணிக்கு தன்னார்வலர்கள் மற்றும் 100 நாள் வேலை திட்ட பணியாளர்களுடன் கலந்துரையாடுகிறார். அப்போது, நீலகிரி வேட்பாளரும், மத்திய இணை மந்திரியுமான எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டுகிறார்.

    பின்னர், மாலை 4 மணிக்கு கோவை சென்று, வேட்பாளர் அண்ணாமலைக்கு ஆதரவாக 10 ஆயிரம் பெண்கள் பங்கேற்கும் பிரமாண்ட வாகன பேரணியில் கலந்து கொண்டு நிர்மலா சீதாராமன் வாக்கு சேகரிக்கிறார். தொடர்ச்சியாக, தொண்டாமுத்தூர் செல்கிறார். அங்கு, அறிவுசார் பிரிவினருடன் கலந்துரையாடுகிறார்.

    அப்போது, பொள்ளாச்சி பா.ஜனதா வேட்பாளர் கே.வசந்தராஜனுக்கு ஆதரவாக பிரசாரம் செய்கிறார். இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் தன்னுடைய 2 நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு, கோவையில் இருந்து டெல்லி புறப்படுகிறார்.

    Next Story
    ×