search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பாரதிய ஜனதாவின் 370 இலக்கை எட்ட முடியுமா? தேர்தல் நிபுணர்கள் ஆய்வு
    X

    பாரதிய ஜனதாவின் 370 இலக்கை எட்ட முடியுமா? தேர்தல் நிபுணர்கள் ஆய்வு

    • 2009-ம் ஆண்டு தேர்தலில் 322 இடங்களில் போட்டியிட்டு 116 இடங்களையே பெற முடிந்தது.
    • பா.ஜ.க.வின் 370 என்ற இலக்கு எட்ட கூடியதா? என்பதில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    பாராளுமன்ற தேர்தலில் 370 இடங்களை கைப்பற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி இலக்கு நிர்ணயித்துள்ளார். அது மட்டுமின்றி பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி 400-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

    பிரதமர் மோடி நாடு முழுவதும் பிரசார கூட்டங்களுக்கு செல்லும் போதெல்லாம் 400 இடங்களில் வெற்றி என்பதை ஒரு கோஷமாகவே எழுப்பி வருகிறார். பாரதிய ஜனதா கட்சியின் கடந்த 30 ஆண்டு கால அரசியல் பயணத்தை சற்று ஆய்வு செய்தால் பிரதமர் மோடியின் இலக்கு சாத்தியமாக வாய்ப்பு இருப்பதாக சில அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    1991-ம் ஆண்டு தேர்தலில் 364 இடங்களில் போட்டியிட்ட பா.ஜ.க. 120 இடங்களை கைப்பற்றியது. 1996-ல் 321 இடங்களில் போட்டியிட்டு 161 இடங்களையும், 1998-ல் 323 இடங்களில் போட்டியிட்டு 182 இடங்களையும் கைப்பற்றியது. 1999-ம் ஆண்டு தேர்தலில் 296 இடங்களில் போட்டியிட்டு 182 இடங்களை பெற்றது.

    2004-ம் ஆண்டு தேர்தலில் 283 இடங்களில் மட்டுமே போட்டியிட்ட பாரதிய ஜனதாவுக்கு 138 இடங்கள்தான் கிடைத்தது. 2009-ம் ஆண்டு தேர்தலில் 322 இடங்களில் போட்டியிட்டு 116 இடங்க ளையே பெற முடிந்தது.

    அதன் பிறகு 2014-ல் மோடி பா.ஜ.க. தலைவராக உயர்ந்ததும் நாடு முழுவதும் மோடி அலை உருவானது. அந்த தேர்தலில் 326 இடங்களில் போட்டியிட்ட பாரதிய ஜனதா 282 இடங்களை வென்றது. மொத்தம் பதிவான வாக்குகளில் 31.34 சதவீத வாக்குகளை பாரதிய ஜனதா கட்சி பெற்றிருந்தது.

    கடந்த 2019-ம் ஆண்டு நடந்த தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 355 இடங்களில் வேட்பாளர்களை களம் இறக்கியது. இதன் காரணமாக பாரதிய ஜனதாவுக்கு 303 இடங்களில் வெற்றி கிடைத்தது. மொத்தம் பதிவான வாக்குகளில் 37.7 சதவீத வாக்குகளை பெற்றிருந்தது.

    இந்த வரிசையில் பிரதமர் மோடி 370 இடங்களில் வெற்றி என்பதை லட்சியமாக கொண்டுள்ளார். அதற்கு ஏற்றவாறு வேட்பாளர்கள் தேர்வு செய்து அறிவிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த தடவையும் 350-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாரதிய ஜனதா போட்டியிடுகிறது. நிச்சயம் 300-க்கு மேற்பட்ட இடங்களை பாரதிய ஜனதா பிடிக்கும் என்று சில கருத்துக் கணிப்புகள் சொல்கின்றன.

    ஆனால் பெரும்பாலான அரசியல் நிபுணர்கள் பாரதிய ஜனதா கட்சி 370 இடங்களை கைப்பற்ற வேண்டும் என்றால் மொத்தம் பதிவாகும் வாக்குகளில் சுமார் 50 சதவீத வாக்குகளை பெற்றால் மட்டுமே சாத்தியம் என்கிறார்கள். இதனால் பா.ஜ.க.வின் 370 என்ற இலக்கு எட்ட கூடியதா? என்பதில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    காங்கிரஸ் கட்சி 20 முதல் 25 சதவீத வாக்குகளை பெற வாய்ப்பு உள்ளது. மாநில கட்சிகள் கணிசமான வாக்குகளை பெறும். எனவே 370 இடத்தை பெற முடியாவிட்டாலும் கடந்த ஆண்டை விட கூடுதல் சதவீத வாக்குகளை பெற பா.ஜ.க.வுக்கு வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    Next Story
    ×