search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    வேட்பாளரை வரவேற்று பட்டாசு வெடித்ததில் வீடுகள் எரிந்த விவகாரம்: பா.ஜ.க.வினர் மீது வழக்குப்பதிவு
    X

    வேட்பாளரை வரவேற்று பட்டாசு வெடித்ததில் வீடுகள் எரிந்த விவகாரம்: பா.ஜ.க.வினர் மீது வழக்குப்பதிவு

    • வீட்டின் மேற்பகுதியில் தீ பிடித்ததால் தண்ணீர் ஊற்றி அணைக்க முடியவில்லை.
    • வீட்டின் உரிமையாளர்கள், விஏஓ கொடுத்த புகாரின்பேரில் 3 வழக்குகள் பதிவு செய்து வெளிப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாகப்பட்டினம்:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலையொட்டி அரசியல் கட்சியினர் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தலையொட்டி பட்டாசுகள், மேளதாளங்கள் முழங்க கட்சியினர், தங்களது ஆதரவு வேட்பாளரை உற்சாகமாக வரவேற்று வருகின்றனர்.

    நாகை பாராளுமன்ற தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிடும் வேட்பாளர் எஸ்.ஜி.எம். ரமேஷ் நேற்று காலை நாகூர் சிவன் தேரடி தெருவில் இருந்து தனது பிரசாரத்தை தொடங்கினார். அங்கிருந்து நாகூர் பட்டினச்சேரி, நாகூர் பஸ் நிறுத்தம், நாகை காடம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.

    தொடர்ந்து நாகை மேட்டுபங்களாவில் அவர் பிரசாரத்தை முடித்து விட்டு புதிய நம்பியார் நகருக்கு செல்ல தொடங்கினார். அப்போது நாகை நகராட்சி அலுவலகம் அருகே மெயின் ரோட்டில் பா.ஜனதாவினர் பட்டாசு வெடித்து வேட்பாளர் ரமேசுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    பட்டாசு வெடித்ததில் அதிலிருந்து தீப்பொறிகள் பறந்து அருகில் உள்ள ஓய்வு பெற்ற அரசு பஸ் டிரைவர் பக்கிரிசாமி(வயது 61) என்பவரது கூரை வீட்டில் விழுந்ததில், அவரது கூரை வீட்டில் தீப்பற்றி எரிந்தது. பின்னர் தீயானது காற்றின் வேகம் காரணமாக மளமளவென எரிய தொடங்கியது.

    அப்போது வீட்டில் இருந்த பக்கிரிசாமி, அவரது மனைவி பானுமதி, மகள் ஸ்ரீபிரியா, அவரது மகள் ஸ்ரீலேகா, மருமகள் ரேவதி ஆகியோர் அலறி அடித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடிவந்தனர்.

    வீட்டின் மேற்பகுதியில் தீ பிடித்ததால் தண்ணீர் ஊற்றி அணைக்க முடியவில்லை. இது குறித்து நாகை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு 2 வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

    ஆனாலும் வீட்டில் இருந்த 2 டி.விக்கள், 2 பிரிட்ஜ்கள், 2 கட்டில்கள், வாஷிங் மெஷின், 6 பீரோக்கள், 6 மின்விசிறிகள், பாத்திரங்கள் மற்றும் புத்தகங்கள் என அனைத்து பொருட்களும் எரிந்து சாம்பலானது. இதன் மதிப்பு ரூ.10 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

    இதையடுத்து வீடு தீப்பற்றி எரிந்ததை கண்டுகொள்ளாமல் சென்றதாகக்கூறி, பா.ஜனதாவினரை கண்டித்து பக்கிரிசாமியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த தாசில்தார் ராஜா சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் உடன்பாடு ஏற்படாததை தொடர்ந்து சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக சாலை மறியல் போராட்டம் நடந்தது.

    இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்த பா.ஜனதா மாவட்ட தலைவர் கார்த்திகேயன், பக்கிரிசாமி வீட்டுக்கு வந்து சேதங்களை பார்வையிட்டு உரிய இழப்பீடு தருவதாக பக்கிரிசாமியின் குடும்பத்தினரிடம் தெரிவித்தார். இதையடுத்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

    இந்நிலையில் பிரசாரத்தின்போது வெடி வெடித்து குடிசை வீடுகள் எரிந்த விவகாரத்தில் பாஜகவினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    வீட்டின் உரிமையாளர்கள், விஏஓ கொடுத்த புகாரின்பேரில் 3 வழக்குகள் பதிவு செய்து வெளிப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தடை செய்யப்பட்ட வெடியை விற்பனை செய்த கடைக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

    Next Story
    ×