என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • கல்வி நிறுவனங்களில் மாணவர்களின் ஆரோக்கியத்தை பேண வேண்டியது அவசியமாகும்.
    • அதிக கொழுப்பு, உப்பு, சர்க்கரை, அதீத பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்களின் பயன்பாட்டையும் குறைக்க வேண்டும்.

    சென்னை:

    பல்கலைக்கழக மானியக்குழு செயலர் மணிஷ் ஆர்.ஜோஷி, அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    இந்தியாவில் 4-ல் ஒருவருக்கு உடல்பருமன், சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலை போன்ற பாதிப்பு இருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி குழுமத்தின் (ஐ.சி.எம்.ஆர்.) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. எனவே கல்வி நிறுவனங்களில் மாணவர்களின் ஆரோக்கியத்தை பேண வேண்டியது அவசியமாகும்.

     

    அதன்படி, நாடு முழுவதும் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் உடல்நலனுக்கு ஆரோக்கியமற்ற உணவுப்பொருட்களை விற்பனை செய்வதற்கு தடை விதிக்க வேண்டும். அதே நேரத்தில் ஊட்டச்சத்து மிக்க உணவுப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை ஊக்கப்படுத்த வேண்டும் என பொதுநலனுக்கான தேசிய ஊட்டச்சத்து ஆலோசனை அமைப்பு (என்.ஏ.பி.ஐ.) கேட்டுக்கொண்டுள்ளது.

    அதனை அடிப்படையாக வைத்து உயர்கல்வி நிறுவனங்களில் (கல்லூரி கேண்டீன்களில்) ஆரோக்கியமற்ற உணவுப்பொருட்களை விற்கக்கூடாது என்ற விதிமுறையை முழுமையாக அமல்படுத்த வேண்டும். மேலும் அதிக கொழுப்பு, உப்பு, சர்க்கரை, அதீத பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்களின் பயன்பாட்டையும் குறைக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

    மேலும் பல்கலைக்கழக, சட்டக்கல்லூரி மாணவர்கள் சட்ட உதவி விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும் என்று யு.ஜி.சி. உத்தரவிட்டுள்ளது.

    • திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது.
    • பல லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. திருவண்ணாமலையில் மலையே சிவனாக வழிபடுவதால் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள "அண்ணாமலை" என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி உள்ள 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.

    இதில் கார்த்திகை தீபத் திருவிழாவின் போது மகா தீபம் ஏற்றப்படும் நாளிலும், சித்ரா பவுர்ணமி அன்றும் சுமார் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.

    இந்த நிலையில் ஆடி மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது.

    அதன்படி பவுர்ணமி வருகிற 20-ந் தேதி (சனிக்கிழமை) மாலை 6.05 மணிக்கு தொடங்கி மறுநாள் 21-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4.48 மணிக்கு நிறைவடைகிறது.

    பவுர்ணமி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தையொட்டி வருவதால் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல பல லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள் என்று மாவட்ட நிர்வாகத்தின் மூலம் எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையொட்டி மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    • மழை குறுக்கிட்டதால் ஆட்டம் 13 ஓவர்கள் கொண்ட போட்டியாக குறைக்கப்பட்டது.
    • அதிரடியாக விளையாடிய பூபதி அரைசதம் கடந்தார்.

    கோவை:

    8 அணிகள் பங்கேற்றுள்ள 8-வது தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20கிரிக்கெட் போட்டி சேலத்தில் உள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் ஸ்டேடியத்தில் கடந்த 5-ம் தேதி தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.

    சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் ஸ்டேடியத்தில் நடைபெற்ற முதல் 9 லீக் ஆட்டங்கள் கடந்த 11ம் தேதி நிறைவடைந்ததை அடுத்து தற்போது 2-வது கட்ட லீக் ஆட்டங்கள் கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகின்றன.

    நேற்று இரவு நடைபெற்ற போட்டியில் திருப்பூர் - திண்டுக்கல் அணிகள் மோதின. போட்டி துவங்குவதற்கு முன்பு மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் 13 ஓவர்கள் கொண்ட போட்டியாக குறைக்கப்பட்டது.

    இப்போட்டியில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த திருப்பூர் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 108 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ராதாகிருஷ்ணன் 36 ரன்கள் அடித்தார். திண்டுக்கல் அணி தரப்பில் சுபோத் பதி 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

    109 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய திண்டுக்கல் களமிறங்கியது. ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாக களமிறங்கிய சிவம் சிங் 4 ரன்களிலும் விமல் குமார் 17 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த பாபா இந்திரஜித் - பூபதி வைஷ்ணவ குமார் திருப்பூர் அணியின் பந்துவீச்சை நாலா பக்கமும் சிதறடித்தனர். அதிரடியாக விளையாடிய பூபதி அரைசதம் கடந்தார்.

    இந்த ஜோடியின் சிறப்பான ஆட்டத்தால் 11.5 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 111 ரன்கள் எடுத்து திண்டுக்கல் அணி வெற்றி பெற்றது. 

    • ஒவ்வொரு என் கவுண்டரின் போதும் இவ்வாறான காரணத்தை காவல்துறை தெரிவிப்பது வழக்கமானதாக இருக்கிறது.
    • அடுத்தடுத்து என்கவுண்டர்கள் என்பது சட்டத்தின் ஆட்சியைக் கேள்விக்குள்ளாக்குவதாகும்.

    நீதிக்கு புறம்பான காவல்துறையினரின் மோதல் கொலைகளுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சி சார்பில் கண்டனம் தெரிவித்துள்ளது.

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் இன்று (17.07.2024) சென்னையில் மாநில செயற்குழு உறுப்பினர் கே.பாலபாரதி தலைமையில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிரகாஷ்காரத், ஜி.ராமகிருஷ்ணன், மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் பி.சம்பத், உ.வாசுகி, பெ.சண்முகம் மற்றும் மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    அதன்படி முதல் தீர்மானத்தில் வரும் 25ம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.

    அத்துடன், 2வது தீர்மானத்தில் நீதிக்கு புறம்பான காவல்துறையினரின் மோதல் கொலைகளுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சி கண்டனம் தெரிவித்துளளது.

    இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:-

    பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு பிரிவு தலைவர் ஆம்ஸ்ட்ராங் இம்மாதம் 5ந் தேதி சமூக விரோதிகளால் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

    இக்கொலையில் சம்பந்தப்பட்ட உண்மைக் குற்றவாளிகள் தப்பி விடாமல் உரிய தண்டனை பெற்றுத் தர தேவையான சட்டரீதியான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக காவல்துறை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பொன்னை பாலு, திருவேங்கடம் உட்பட 11 பேரையும் தனது பொறுப்பில் எடுத்து காவல்துறை விசாரணை செய்து வருகிறது.

    இந்நிலையில் திருவேங்கடம் என்பவர் தப்பி ஓடியதாகவும், புழல் வெஜிடேரியன் வில்லேஜ் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கியை வைத்து காவல்துறையினரை சுட முயற்சி செய்தபோது திருவேங்கடத்தை காவலர்கள் சுட்டுக் கொன்றதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு என் கவுண்டரின் போதும் இவ்வாறான காரணத்தை காவல்துறை தெரிவிப்பது வழக்கமானதாக இருக்கிறது.

    சமீபத்தில் புதுக்கோட்டையில் துரை என்கிற துரைசாமி என்ற குற்றவாளி என்கவுண்டரில் கொல்லப்பட்டுள்ளார். இவ்வாறு காவல்துறை சட்டத்தை கையில் எடுத்துக் கொள்வது வன்மையான கண்டனத்திற்குரியது. மனித உயிரையும், மனித உரிமைகள் குறித்தும் கவலைப்படாமல் இப்படி அடுத்தடுத்து என்கவுண்டர்கள் என்பது சட்டத்தின் ஆட்சியைக் கேள்விக்குள்ளாக்குவதாகும்.

    குற்றங்கள் நடைபெறுவதை தடுப்பதற்கு என் கவுண்டர்கள் தீர்வல்ல. புலன் விசாரணையை பலப்படுத்தவும், வழக்குகளை விரைந்து முடிப்பதும், சட்டத்தின் வழிமுறையில் நின்று குற்றங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே அரசமைப்பு சட்டத்தின் வரையறை ஆகும்.

    மேலும், தேசிய மனித உரிமை ஆணையம், உச்சநீதிமன்றம் ஆகியவை கொடுத்துள்ள இதுதொடர்பான வழிகாட்டுதல்களை காவல்துறையினர் உரிய முறையில் பின்பற்ற வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு வலியுறுத்துகிறது.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • சென்னையில் வரும் 23ம் தேதி முதல் அடுத்த மாதம் 14-ம் தேதி வரை 55 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
    • இதற்கு மாற்றாகவும், பயணிகள் வசதிக்காகவும் பல்வேறு சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.

    சென்னை:

    தாம்பரம் பணிமனையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள இருப்பதால் வரும் 23-ம் தேதி முதல் அடுத்த மாதம் 14-ம் தேதி வரையில் 55 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட உள்ளது என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

    சென்னை கடற்கரையிலிருந்து காலை 9.40, 9.48, 10.04, 10.12, 10.24, 10.30, 10.36, 10.46, 11.06, 11.14, 11.22, 11.30, 11.50, மதியம் 12, 12.10, 12.30, 12.50 இரவு 11.05, 11.30, 11.59 ஆகிய நேரங்களில் புறப்பட்டு தாம்பரம் செல்லும் மின்சார ரெயில் வரும் 23-ம் தேதி முதல் ஆகஸ்டு14-ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

    சென்னை கடற்கரையிலிருந்து காலை 9.30, 9.56, 10.56, 11.40, மதியம் 12.20, 12.40, இரவு 10.40 ஆகிய நேரங்களில் புறப்பட்டு செங்கல்பட்டு செல்லும் மின்சார ரெயில்கள் 23-ம் தேதி முதல் ஆகஸ்டு 14-ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

    சென்னை கடற்கரையிலிருந்து இரவு 7.19, 8.15, 8.45, 8.55, 9.40 ஆகிய நேரங்களில் புறப்பட்டு கூடுவாஞ்சோி செல்லும் மின்சார ரெயில்கள் வருகிற 23-ம் தேதி முதல் ஆகஸ்டு 14-ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

    தாம்பரத்தில் இருந்து காலை 10.30, 10.40, 11, 11.10, 11.30, 11.40, மதியம் 12.05, 12.35, 1, 1.30, இரவு 11.40 ஆகிய நேரங்களில் புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரெயில்கள் வரும் 23-ம் தேதி முதல் ஆகஸ்டு 14-ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

    செங்கல்பட்டிலிருந்து காலை 11, 11.30, மதியம் 12, இரவு 11 ஆகிய நேரங்களில் புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரெயில்கள் 23-ம் தேதி முதல் ஆகஸ்டு 14-ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

    கூடுவாஞ்சேரியிலிருந்து இரவு 8.55, 9.45, 10.10, 10.25, 11.20 ஆகிய நேரங்களில் புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரெயில் வரும் 23-ம் தேதி முதல் ஆகஸ்டு 14-ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

    செங்கல்பட்டிலிருந்து காலை 10 மணிக்கு புறப்பட்டு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரெயில் வரும் 23-ம் தேதி முதல் ஆகஸ்ட் 14-ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

    காஞ்சிபுரத்திலிருந்து காலை 9.30 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரெயில் வரும் 23-ம் தேதி முதல் ஆகஸ்டு 14-ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

    திருமால்பூரில் இருந்து காலை 11.05 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரெயில் 23-ம் தேதி முதல் ஆகஸ்டு 14-ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

    இதற்கு மாற்றாகவும், பயணிகள் வசதிக்காகவும் பல்வேறு சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.

    சென்னை கடற்கரை-பல்லாவரம் இடையே 15 சிறப்பு மின்சார ரெயில்களும், பல்லாவரம்-சென்னை கடற்கரை இடையே 15 சிறப்பு மின்சார ரெயில்களும், கூடுவாஞ்சேரி-செங்கல்பட்டு இடையே 7 சிறப்பு மின்சார ரெயில்களும், செங்கல்பட்டு-கூடுவாஞ்சேரி இடையே 7 சிறப்பு மின்சார ரெயில்கள் என மொத்தம் 44 சிறப்பு மின்சார ரெயில்கள் வரும் 23-ம் தேதி முதல் ஆகஸ்டு14-ம் தேதி வரை இயக்கப்பட உள்ளது.

    சென்னை கடற்கரையிலிருந்து காலை 9.30, 9.50, 10.10, 10.30, 10.50, 11.10, 11.30, 11.50, மதியம் 12.10, 12.30, 12.50, இரவு 10.40, 11.05, 11.30, 11.59, ஆகிய நேரங்களில் புறப்பட்டு வரும் சிறப்பு மின்சார ரெயில் பல்லாவரம் வரை இயக்கப்படுகிறது.

    மறுமார்க்கமாக, பல்லாவரத்தில் இருந்து காலை 10.20, 10.40, 11, 11.20, 11.40, மதியம் 12, 12.20, 12.40, 1, 1.20, 1.40, இரவு 11.30, 11.55, 12.20, 12.45 ஆகிய நேரங்களில் புறப்பட்டு வரும் சிறப்பு மின்சார ரெயில் சென்னை கடற்கரை வரை இயக்கப்படுகிறது.

    கூடுவாஞ்சேரியிலிருந்து காலை 10.45, 11.10, மதியம் 12, 12.50, 1.35, 1.55, இரவு 11.55 ஆகிய நேரங்களில் புறப்பட்டு செங்கல்பட்டு வரை இயக்கப்படுகிறது.

    மறுமார்க்கமாக, செங்கல்பட்டிலிருந்து காலை 10, 10.30, 11, 11.45, மதியம் 12.30, 1, இரவு 11 ஆகிய நேரங்களில் புறப்பட்டு வரும் சிறப்பு மின்சார ரெயில் கூடுவாஞ்சேரி வரை இயக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • 11 பேர் கைதான நிலையில், இன்று இருவர் கைது.
    • இருவரை சிபிசிஐடி போலீஸ் கைது செய்துள்ளனர்.

    பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் இருவரை சிபிசிஐடி போலீஸ் கைது செய்துள்ளனர்.

    ஏற்கெனவே 11 பேர் கைதான நிலையில், இன்று மலர்க்கொடி, ஹரிஹரன் என்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இவர்களுடன், திமுக நிர்வாகியின் மகன் சதீஷ் கைது செய்யப்பட்டுள்ளார். திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக இலக்கிய அணி துணை அமைப்பாளர் குமரேசனின் மகன் சதீஷ் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

    கைது செய்யப்பட்ட மலர்கொடி மற்றும் ஹரிஹரன், சதீஷ் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதில் வழக்கறிஞர் மலர்க்கொடி ஏற்கெனவே கைதான வழக்கறிஞர் அருளுடன் தொடர்பில் இருந்தவர். இந்த 13 பேரில் திருவேங்கடம் என்கவுண்டரில் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் நடைபெற்றது.
    • மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி போராட்டம் அறிவிப்பு.

    மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, வரும் 25ம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்ச அறிவித்துள்ளது.

    இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் இன்று (17.07.2024) சென்னையில் மாநில செயற்குழு உறுப்பினர் கே.பாலபாரதி தலைமையில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிரகாஷ்காரத், ஜி.ராமகிருஷ்ணன், மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் பி.சம்பத், உ.வாசுகி, பெ.சண்முகம் மற்றும் மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு.

    மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி ஜூலை 25 அன்று தமிழகம் முழுவதும் சிபிஐ (எம்) ஆர்ப்பாட்டம்.

    ஒவ்வொரு ஆண்டும் நுகர்வோர் குறியீட்டென் உயர்வுக்கு தகுந்தாற்போல் மின் கட்டணத்தை உயர்த்த வேண்டுமென்று மத்திய அரசு கட்டாயப்படுத்துவதை கண்டித்தும், அனைத்து தரப்பு மக்களையும் கடுமையாக பாதிக்கும் தமிழ்நாடு அரசின் மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தியும், சட்டமன்றத் தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதியின்படி மாதந்தோறும் மின் அளவு கணக்கிடும் முறையை நடைமுறைப்படுத்திடக் கோரியும், தமிழ்நாட்டிற்கு தேவையான மின்சாரத்தை தமிழ்நாடு அரசே உற்பத்தி செய்யும் வகையில் புதியமின் உற்பத்தி திட்டங்களை செயல்படுத்திட கோரியும், அதானி நிறுவனத்திற்கு வழங்கும் அதீத கொள்முதல் விலையை குறைத்திட வலியுறுத்தியும், ஒன்றிய அரசின் தனியார்மயமாக்கலுக்கு இரையாகாமல் அனைவருக்கும் மின்சாரம், மக்கள் வாங்கும் கட்டணத்தில் கிடைக்கும் வகையில் தமிழ்நாடு அரசு செயல்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 25.07.2024 அன்று தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு முடிவு செய்துள்ளது.

    மக்கள் நலனை முன்வைத்து நடத்தப்படும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளாக அனைத்து தரப்பு பொதுமக்களும், வணிகர்களும், சிறு-குறு தொழில் முனைவோர்களும் பங்கேற்று வெற்றியடையச் செய்யுமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு வேண்டுகோள் விடுக்கிறது.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    • சேதுபதி, பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல்.
    • சேதுபதியிடம் இருந்த ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    சென்னை அடுத்த செங்குன்றம் பகுதியில் துப்பாக்கி முனையில் ரவுடி சேதுபதி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    செங்குன்றம் பகுதியில் 30க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய ரவுடி சேது என்கிற சேதுபதி, பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இந்த தகவலின் அடிப்படையில் ஆவடி ஆணையரகத்தின் அதிதீவிர குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் உடனடியாக செங்குன்றம் பகுதிக்கு விரைந்து சென்றனர்.

    அங்கு தனது கூட்டாளியுடன் ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த பிரபல சரித்திரப் பதிவேடு குற்றவாளியான சேதுபதியை போலீசார் கைது செய்தனர்.

    போலீசார் வந்ததை அறிந்த ரவுடி சேதுபதி ஆயுதங்களை பயன்படுத்தி தப்பிக்க முயன்றதாகவும், அப்போது போலீசார் துப்பாக்கி முனையில் சேதுபதியை கைது செய்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    சேதுபதியிடம் இருந்த ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், சேதுபதியை ரகசிய இடத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • தாதா மற்றும் ரவுடிகளுடனான தொடர்பும் அடுத்த கட்டத்திற்கு அவனை அழைத்துச் சென்று விடுகிறது.
    • 4 வகையாக ரவுடிகளை போலீசார் பிரித்து கண்காணித்து வருகிறார்கள்.

    எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே.... அது நல்லவனாவதும் தீயவனாவதும் அன்னை வளர்ப்பதிலே.... என்கிற எம்.ஜி.ஆரின் பாடல் வரிகள் இன்றைய காலகட்டத்தில் நூற்றுக்கு நூறு சதவீதம் மிகவும் பொருத்தமாகவே உள்ளது என்று கூறலாம்.

    தமிழகத்தில் கூலிப்படையினர் ரவுடிகளின் கொட்டத்தை அடக்குவதற்கு போலீசார் துப்பாக்கியை தூக்கி இருக்கிறார்கள். ஒரே வாரத்தில் இரண்டு ரவுடிகள் என்கவுண்டரில் தீர்த்து கட்டப்பட்டதையடுத்து சென்னை உட்பட அனைத்து மாவட்டங்களிலுமே ரவுடிகள் மரண பீதியில் தவித்து வருகிறார்கள்.

    ரவுடிகள் மற்றும் தாதாக்கள் எப்படி உருவாகிறார்கள். ? அதற்கான முழுமையான காரணங்கள் என்ன? என்பது பற்றி காவல்துறை வட்டாரத்தில் விசாரித்த போது அவர்கள் தெரிவித்த தகவல்கள் சினிமாவை மிஞ்சும் வகையில் திடுக்கிட வைப்பதாகவே அமைந்துள்ளன.

    அந்த அளவுக்கு ரவுடிகளின் வரலாற்றுப் பின்னணியும் அவர்கள் உருவாகும் விதமும் கிரைம் திரில்லர் கதையை மிஞ்சும் வகையிலேயே உள்ளது. சிறுவயதில் பெற்றோர்களால் புறம் தள்ளப்படும் சிறுவர்கள்... சரியான கவனிப்பு இன்றி வளர்க்கப்படும் சிறுவர்கள்....... தங்களது பகுதியில் வசித்து வரும் தவறான நபர்களோடு ஏற்படும் கூடா நட்பு போன்றவையே ரவுடிகள் உருவாவதற்கு முக்கிய காரணமாக அமைந்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.


    இது போன்ற சிறுவர்களின் ஏழ்மை நிலையை தங்களுக்கு சாதகமாக்கும் தாதாக்கள் அவர்களுக்கு பணம் மற்றும் பொருட்கள் மீது ஆசை காட்டிதங்களது இன்னொரு உலகிற்கு அவர்களை அழைத்துச் சென்று விடுகிறார்கள். இது போன்ற தாதாக்களின் திரைமறைவு உலகத்துக்கு சென்ற பிறகு முதல் குற்ற செயலில் ஈடுபடும் சிறுவர்களும் பணம் மற்றும் பொருட்களுக்கு ஆசைப்பட்டு அடுத்தடுத்து குற்ற செயல்களில் ஈடுபட தொடங்கி விடுகிறார்கள். இதுவே ரவுடிகள் உருவாவதற்கு முக்கிய மூல காரணமாக அமைந்திருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    இது தொடர்பாக போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறும்போது, "கொலை உள்ளிட்ட குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களில் சிறுவர்களும் இருப்பார்கள். ஒரு முறை இப்படித்தான் கொலை சம்பவம் ஒன்றில் 17 வயதே ஆன பாலிடெக்னிக் மாணவன் ஒருவன் பிடிபட்டான்.

    அவனிடம் நீ எப்படிடா இந்த ரவுடி கும்பலோடு சேர்ந்தாய்? என்று விசாரித்த போது அவன் கூறிய தகவல் எங்களையே கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள் வாங்கி தருவதாக கூறி என்னை அழைத்து வந்தார்கள். நானும் அவர்களோடு சேர்ந்து கத்தியை தூக்கி விட்டேன் என்று தெரிவித்தான்.

    இதுபோன்று சிறுவர்களின் குடும்ப சூழல் அவர்களது பணம் மற்றும் பொருள் தேவைகள் ஆகியவற்றையே ரவுடிகளும் தாதாக்களும் பயன்படுத்தி கொள்கிறார்கள் என்பது மிகவும் வேதனை அளிக்கும் விஷயமாகவே மாறி வருகிறது.

    இது போன்ற சிறுவர்களை நல்வழிப்படுத்துவதற்காகவே பாய்ஸ் கிளப் என்கிற காவலர் சிறுவர் மன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. இருப்பினும் சிறுவர்கள் ரவுடிகளாக தாதாக்களாக கூலிப்படை கொலையாளிகளாக மாறுவதை முழுமையாக தடுத்து நிறுத்த முடியவில்லை என்பதே நிதர்சனமான உண்மையாகும்.

    முதல் முறையாக கொலை போன்ற குற்றச் செயலில் ஈடுபடும் சிறுவன் முதலில் சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு சென்று விட்டு 18 வயதை தாண்டிய பிறகு சிறையில் அடைக்கப்படுகிறான். அங்கு அவனுக்கு ஏற்படும் தாதா மற்றும் ரவுடிகளுடனான தொடர்பும் அடுத்த கட்டத்திற்கு அவனை அழைத்துச் சென்று விடுகிறது. தமிழகம் முழுவதும் 20,000-க்கும் மேற்பட்ட ரவுடிகள் கண்காணிக்கப்பட்டு வரும் நிலையில் சென்னையில் 6000-க்கும் மேற்பட்ட ரவுடிகளை போலீசார் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். ரவுடிகள் பட்டியலில் இடம் பெற்றுள்ள ரவுடிகள் எங்கு இருக்கிறார்கள்? அவர்கள் என்ன செய்கிறார்கள்? என்பது பற்றிய முழு தகவல்களையும் அனைத்து காவல் ஆய்வாளர்களும் தங்களது விரல் நுனியில் வைத்திருக்க வேண்டும் என்கிற கட்டளையை உயர் போலீஸ் அதிகாரிகள் பிறப்பித்து உள்ளனர்.

    இதன்படி பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்துக்கு பிறகு ரவுடிகள் வேட்டையை போலீசார் தீவிரப்படுத்தி இருக்கிறார்கள். இந்த வேகத்தை தொடர்ச்சியாக மேற்கொள்ளவும் அவர்கள் முடிவு செய்துள்ளனர்.

    அதே நேரத்தில் ரவுடிகளை முளையிலேயே கிள்ளி எறிவதற்கான நடவடிக்கைகளும் தீவிர படுத்தப்பட்டு உள்ளன. ரவுடிகள் மற்றும் தாதாக்கள் சிறுவர்களை குற்ற செயல்களில் ஈடுபடுத்தி பின்னர் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதை கண்காணிக்க வேண்டும் என்றும் போலீசாருக்கு அதிரடி உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

    இதன் மூலம் இளம் குற்றவாளிகள் உருவாவதும் புதிய ரவுடிகள் முளைப்பதும் தடுக்கப்படும் என்றும் உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஏ பிளஸ், ஏ, பி, சி என 4 வகையாக ரவுடிகளை போலீசார் பிரித்து கண்காணித்து வருகிறார்கள். சிறிய அடிதடி வழக்குகள் போன்றவற்றில் தொடர்புடைய ரவுடிகள் சி பிரிவு பட்டியலிலும் அதற்கும் மேலான குற்றச் சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் பி வகை ரவுடிகள் பட்டியலிலும் ஏ வகை பட்டியலில் கொலை உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபடும் ரவுடிகளும். உத்தரவு போடும் இடத்தில் இருந்து தாதாக்கள் போல செயல்படுபவர்கள் ஏ பிளஸ் வகையிலும் இடம் பெற்று இருக்கிறார்கள்.

    இதற்கிடையே கூலிப்படையினர் ஒரு கொலை சம்பவத்தை அரங்கேற்ற ரூ. 5 லட்சத்துக்கும் குறையாமல் பணம் வாங்குவதாகவும் திடுக்கிட வைக்கும் தகவலையும் தெரிவித்துள்ளனர். கூலிப்படையினர் கொலையை செய்து விட்டு தப்பி விடுவதும்... நாங்கள்தான் கொன்றோம் என்று வேறு கொலையாளிகள் சரண் அடைந்து விடுவதும் தொடர்கதையாக இருந்து வருவதாகவும் பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

    தமிழகம் முழுவதும் ரவுடிகள் வேட்டை தீவிர படுத்தப்பட்டு வரும் நிலையில் புதிது புதிதாக உருவாகும் ரவுடிகளைகளை எடுக்கவும் காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுஉள்ளது.

    தமிழக போலீஸ் டி.ஜி.பி. சங்கர் ஜிவால், கூடுதல் டி.ஜி.பி. டேவிட்சன் தேவா சீர்வாதம் ஆகியோரது உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கைகள் தீவிர படுத்தப்பட்டு உள்ளது. இளம் வயதிலேயே குற்ற செயல்களில் ஈடுபட்டு பின்னர் ரவுடிகளாக தாதாக்களாக சிறுவர்கள் மாறுவதை தடுக்கவே முடியாதா? என்று உயர் போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது.... அவர் அளித்த பதில், "குற்ற செயல்களை கட்டுப்படுத்த தான் முடியும் முற்றிலுமாக இன்றைய காலத்தில் ஒழித்துக் கட்ட முடியாது என்பதே நிதர்சனமான உண்மையாகும்" என்றார்.

    திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பது இதுதானோ?

    • சங்கீதா என்பவருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளேன்.
    • விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் வட்டம், வளம்பக்குடி அருகில் இன்று காலை சுமார் 7 மணியளவில் கந்தர்வகோட்டையில் இருந்து சமயபுரம் கோவிலுக்கு பாதயாத்திரையாக சென்றுகொண்டிருந்தவர்கள் மீது எதிர்பாராதவிதமாக ஈச்சர் வாகனம் மோதிய விபத்தில் புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை வட்டம், கல்லாக்கோட்டை ஊராட்சி, கண்ணுகுடிபட்டியைச் சேர்ந்த முத்துசாமி, ராணி, மோகனாம்பாள் மற்றும் மீனாஆகிய நான்கு நபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    மேலும், இவ்விபத்தில் தனலட்சுமிஎன்பவர் பலத்த காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.

    இவ்விபத்தில், பலத்த காயமடைந்து தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் சங்கீதா என்பவருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளேன்.

    இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாயும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவருக்கு ஒரு இலட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.

    • குழந்தைகள், நடந்து செல்லும் சிறுவர்களை தெரு நாய்கள் கடித்து பெரும் ஆபத்தை ஏற்படுத்தி வருகின்றன.
    • 2 லட்சத்திற்கும் அதிகமான நாய்கள் இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    சென்னை:

    பரந்து விரிந்து வரும் சென்னை பெருநகரத்தின் பகுதிகளில் சுமார் ஒரு கோடி பேர் வசிக்கிறார்கள். 200 வார்டுகள் இருந்தாலும் புதிதாக விரிவாக்கம் அடைந்துள்ள பகுதிகளில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வார்டுகளின் எண்ணிக்கையையும் அதிகரிக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

    நாளுக்கு நாள் அதிகரித்து வரும். மக்கள் பெருக்கத்தின் மூலம் விரிவடைந்து வரும் சென்னை மாநகராட்சியில் தெரு நாய்கடி தொல்லை என்பது தீராத பிரச்சனையாக இருந்து வருகிறது. தெருக்களில் ஓடி விளையாடும் குழந்தைகள், நடந்து செல்லும் சிறுவர்களை தெரு நாய்கள் கடித்து பெரும் ஆபத்தை ஏற்படுத்தி வருகின்றன.

    பூங்காக்களில் வாக்கிங் செல்பவர்கள் தங்களது வளர்ப்பு நாய்களை கொண்டு செல்லும் போது அது பொது மக்கள் மீது திடீரென பாய்ந்து கடித்து விடுவதால் பூங்காக்களில் நடைபயிற்சி செல்பவர்களும் பயத்துடன் தான் செல்கிறார்கள்.

    வீட்டின் வெளியே விளையாடும் போதும், அருகில் உள்ள கடைகளுக்கு சென்று திரும்பும் போதும் குழந்தைகளை தெரு நாய்கள் விரட்டி சென்று கடிக்கின்றன. தொடர்ந்து தெரு நாய்களின் தாக்குதல் எல்லை மீறி போகிறது. தெரு நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டாலும் குறைந்தபாடில்லை.

    கடந்த 6 மாதங்களில 10 ஆயிரம் நாய்கடி வழக்குகள் பதிவாகி இருப்பதாக தகவல் தெரிய வந்துள்ளது. பொது மக்களிடம் இருந்து புகார்கள் குறைந்தாலும் சமீப காலமாக நாய் தொல்லைகள் அதிகரித்து வருகின்றன. நாய்களின் இனப்பெருக்கததை கட்டுப்படுத்த கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. எல்லா மண்டலங்களிலும் வாகனங்களில் ஊழியர்கள் தினமும் சென்று நாய்களை பிடிக்கின்றனர். ஆனாலும் தெரு நாய்களின் ஆக்ரோஷம் குறையவில்லை. சென்னையில் நாய்கடி சம்பவம் அதிகரித்து வருவதால் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து பெற்றோர்கள் கவலை அடைந்துள்ளனர்.


    தெரு நாய் தாக்குதலின் ஒவ்வொரு சம்பவத்திற்கு பிறகும் அந்த பகுதியில் உள்ள குழந்தைகள் அருகில் உள்ள பூங்காக்கள் மற்றும் தெருக்களில் விளையாட அனுமதிப்பது இல்லை.

    சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை நாய்கடி வழக்குகள் பதிவாகிறது. ஆனாலும் புகார் அளிக்கப்பட்ட சம்பவங்கள் மிக குறைவு. வடசென்னை பகுதியில் நாய்கடி சம்பவம் அதிகளவில் நடந்தாலும் பதிவு செய்யப்படாத வழக்குகள் பல உள்ளன.

    நாய் பிடிக்கும் வாகனங்களை பார்த்தது இல்லை. கடந்த சில ஆண்டுகளாக தெருநாய்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளது. ஆனால் தடுப்பூசி இயக்கமோ, கிருமி நீக்கம் செய்வதற்கான முயற்சியோ இல்லை என தண்டையார்பேட்டை பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

    வட சென்னையில் தெரு நாய்கள் காது வெட்டும் மற்றும் தோல் அலர்ஜியுடன் சுற்றித்திரிவதை காண முடிகிறது. இது மற்ற தெரு நாய்களுக்கு பரவக்கூடும். இது ரேபிஸ் நோய் பாதிப்பை உண்டாக்கும் என்று சமூக ஆர்வலர் ஒருவர் கூறினார்.

    இதுகுறித்து மாநகராட்சி கால்நடை அதிகாரி கமால் உசேன் கூறியதாவது:-

    கடந்த 3 ஆண்டுகளில் ஒவ்வொரு அண்டும் சுமார் 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் நாய்கடி வழக்குகள் பதிவாகியுள்ளன. நாய் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிகைகள் எடுக்கப்பட்டுள்ளன.

    2018-ம் ஆண்டில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் படி 58 ஆயிரம் தெரு நாய்கள் இருப்ப தெரிய வந்தது. இப்போது 2 லட்சத்திற்கும் அதிகமான நாய்கள் இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மதுரையில் உள்ள தி.மு.க. அமைச்சர்கள் இரண்டு பேரும் மதுரைக்கு எந்த திட்டத்தையும் கொண்டு வரவில்லை.
    • பாராளுமன்ற தேர்தல் ஒரு அளவுகோல் அல்ல.

    மதுரை:

    மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-

    மதுரை நகர் பகுதிக்கு கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் உயர்மட்ட மேம்பாலங்கள், சாலை வசதிகள் உள்ளிட்ட ரூ.8 ஆயிரம் கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகளை செய்து இருக்கிறோம். ஆனால் ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகளில் தி.மு.க. மதுரை மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. கலைஞர் பெயரில் நூலகம், ஜல்லிக்கட்டு மைதானம் மட்டுமே கட்டியுள்ளனர்.

    மதுரையில் உள்ள தி.மு.க. அமைச்சர்கள் இரண்டு பேரும் மதுரைக்கு எந்த திட்டத்தையும் கொண்டு வரவில்லை. கடந்த பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் டாக்டர் சரவணனுக்கு வீதிவீதியாக சென்று வாக்குகள் கேட்டோம். வேட்பாளரை வானுயர புகழ்ந்தோம். ஏழைகளின் மருத்துவர் மக்களின் மருத்துவர் என்றெல்லாம் கூறினோம். அவரது மருத்துவமனைக்கு சென்றால் இலவசமாக ஊசி போட்டுக் கொள்ளலாம் என்று கூட கூறினோம். ஆனாலும் மதுரை மக்கள் அ.தி.மு.க.வுக்கு வாக்களிக்கவில்லை.

    பாராளுமன்ற தேர்தலில் ஒரு நிலைப்பாட்டை கடை பிடித்துள்ளனர். சிறுபான்மை மக்கள் ராகுல் காந்திக்கும், குறிப்பிட்ட சமுதாயத்தினர் பிரதமர் மோடிக்கும் வாக்களித்ததால் அ.தி.மு.க.வுக்கு எதிர்பார்த்த ஓட்டுகள் கிடைக்கவில்லை. பாராளுமன்ற தேர்தல் ஒரு அளவுகோல் அல்ல. வருகிற 2026 சட்டசபை தேர்தலில் எடப்பாடி பழனிசாமி சாணக்கியர் என்பதை தேர்தல் வெற்றி மூலம் நிரூபித்து காட்டுவோம்.

    இந்த பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இதற்கு பரிசாக மின்கட்டண உயர்வை தி.மு.க. அரசு மக்களுக்கு தந்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது கருப்பு சட்டை போட்டுக்கொண்டு போராட்டம் நடத்திய மு.க.ஸ்டாலின், முதலமைச்சரான பிறகு கடந்த மூன்று ஆண்டுகளில் மூன்று முறை மின்கட்டணத்தை உயர்த்தி உள்ளார். மேலும் பல்வேறு வகைகளில் பொதுமக்களுக்கு வரிச்சுமைகளை தந்து வருகிறார். இதனை கண்டித்து வருகிற 23-ந்தேதி மாநிலம் தழுவிய போராட்டத்தை அ.தி.மு.க. நடத்துகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×