என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • மெயின் அருவிக்கு செல்லும் வழியாக நடைபாதைக்கு மேலும் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது.
    • சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி பரிசல் இயக்குவதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

    தருமபுரி:

    கர்நாடகா அணைகளில் இருந்து திறக்கப்பட்ட நீரால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 32 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.

    கர்நாடகா, கேரளா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளதால் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளான குடகு, வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

    இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி அணை தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதையடுத்து கபினி, கிருஷ்ணராஜ சாகர் ஆகிய 2 அணைகளில் இருந்து மொத்தம் 55 ஆயிரத்து 651 கனஅடி அளவில் உபரி நீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது.

    இதன் காரணமாக நேற்று மாலை நேரத்தில் இருந்து கர்நாடகா- தமிழக எல்லையான பிலிக்குண்டுலு வழியாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது.

    இதனைத்தொடர்ந்து தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியதால் கடந்த இரு தினங்களுக்கு முன்பு வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடிக்கு மேல் வந்து கொண்டிருந்தது.

    இந்த நிலையில் கபினி, கே.ஆர்.எஸ். ஆகிய அணைகளில் இருந்து வினாடிக்கு 55 ஆயிரம் கனஅடிக்கு மேல் நீர் திறக்கப்பட்டதால் ஒனேக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று மாலை 6 மணி நிலவரப்படி நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடியாக அதிகரித்த நீர்வரத்து இன்று காலை படிப்படியாக மேலும் அதிகரித்து வினாடிக்கு 32 ஆயிரம் கனஅடியாக உயர்ந்தது. இதனால் மெயின் அருவி, ஐந்தருவி, சினி பால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. மேலும், மெயின் அருவிக்கு செல்லும் வழியாக நடைபாதைக்கு மேலும் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது.

    நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக கடந்த 15-ந்தேதி மாலை முதல் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி பரிசல் இயக்குவதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து 20 ஆயிரம் கனஅடிக்கு மேல் நீர்வரத்து இருப்பதால் அருவிகளிலும் மற்றும் ஆற்றுப்பகுதியிலும் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இன்று 32 ஆயிரம் கனஅடி அளவில் தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் இன்று 3-வது நாளாக குளிக்கவும், பரிசல் இயக்கவும் தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், மெயின் அருவிக்கும் செல்லும் வழிப்பாதையையும், சீல் வைத்து பூட்டப்பட்டுள்ளது.

    இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் பரிசலில் செல்லு முடியாமல், மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் குளிக்க முடியாமலும் ஏமாற்றுத்துடன் திரும்பி சென்றனர்.

    கர்நாடகா அணைகளில் இருந்து தொடர்ந்து தண்ணீர் திறப்பு அதிகரித்து உள்ளதால், காவிரி ஆற்றிற்கு வரும் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    • அலுலலக ஊழியர் அருள் என்பவரை திருப்புளியால் தாக்கியுள்ளார்.
    • போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் மதிகோண்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட எம்.ஒட்டப்பட்டி பகுதியில் 1998-ம் ஆண்டு முதல் ஒட்டப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது.

    இந்த சங்கத்தின் இடத்தினை பெருமாள் என்பவர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு தானமாக வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் பெருமாள் மற்றும் அவரின் சகோதரர் முனியப்பன் என்பவருக்கு சொந்தமான இடத்தினை சுமார் 20 வருடத்திற்கு முன்பு இரண்டாக பிரித்து விவசா யம் செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் முனியப்பன் மகன் தொழிலாளியான மணி என்பவர் அடிக்கடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு வந்து இது தன் தந்தைக்கு சொந்தமான இடம், காலி செய்து கொடுங்கள் என அடிக்கடி தகராறில் ஈடுபட்டுள்ளார். அதனையடுத்து மதிகோண் பாளையம் போலீசார் மணியை அழைத்து சமதானம் செய்து அனுப்பியுள்ளனர்.

    இந்நிலையில் நேற்று மதியம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு சென்ற மணி என்பவர் இன்னும் நீங்கள் காலி செய்யவில்லையா என அலுலலக ஊழியர் அருள் என்பவரை திருப்புளியால் தாக்கியுள்ளார்.

    உடனடியாக அருள் என்பவர் அவரை தள்ளி விட்டு வெளியே சென்றதையடுத்து அருகே இருந்தவர்களும் மணியை தடுக்க முற்பட்ட போது அவர்களையும் இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தாக்கி உள்ளார். இதனையடுத்து அப்பகுதியில் இருந்தவர்களும் மணியை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

    இதனால் அலுவலக ஊழியர் உட்பட 4 பேருக்கு காயம் ஏற்பட்ட நிலையில் அவர்களை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

    இதுகுறித்து கூட்டுறவு வங்கி ஊழியர்கள் கொடுத்த புகாரின் பேரில் மதிகோண்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோன்று மணியும், கூட்டுறவு வங்கி ஊழியர்கள் தன்னை தாக்கியதாக போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.

    தருமபுரி மாவட்டத்தில் கூட்டுறவு வங்கிக்குள் புகுந்து தொழிலாளி ஒருவர் ஊழியர்களை கத்தியால் சரமாரியாக தாக்கிய சி.சி.டி.வி காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரியில் இன்று கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    • சென்னையில் 48 மணி நேரத்திற்கு நகரின் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    நீலகிரி மாவட்டத்துக்கு இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நீலகிரியில் ஒரு சில பகுதிகளில் இன்று மிக கனமழை முதல் அதிகனமழை பெய்யும்.

    திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரியில் இன்று கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கோவையில் இன்று கனமழை முதல் மிக கனமழை பெய்வதற்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

    நீலகிரியில் நாளை மிக கனமழை பெய்வதற்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும்.

    தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை காரைக்காலிலும் 24-ந்தேதி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    சென்னையில் 48 மணி நேரத்திற்கு நகரின் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    சென்னையில் 48 மணி நேரத்திற்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலையாக 35 டிகிரி செல்சியஸ் பதிவாகும்.

    தென் தமிழக கடலோரம், குமரிக்கடல், மத்திய, தென் வங்கக்கடலில் 22-ந்தேதி வரை அதிகபட்சமாக 65 கி.மீ. வரை காற்று வீசும்.

    காற்று வீசும் பகுதிகளில் 22-ந்தேதி வரை மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    • திண்டுக்கல் மாவட்ட இ-சேவை மைய உரிமையாளர்கள் நலசங்கம் கண்டனம்.
    • குறிப்பிட்ட பட காட்சிகளை நீக்க கோரிக்கை.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்ட இ-சேவை மைய உரிமையாளர்கள் நலச்சங்கம் சார்பில் நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மாவட்டத் தலைவர் தனராஜ் தலைமை வகித்து பேசும்போது.

    தமிழ் திரைப்பட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கமலஹாசன் நடிப்பில் சமீபத்தில் வெளியான இந்தியன் 2-திரைப்படத்தில் நடிகர் மனோபாலா நடிக்கும் ஒருசில காட்சிகளில் இ-சேவை மைய ஆபரேட்டர்கள் ரூ.300 கொடுத்தால் தான் ஆதார் தொடர்பான சேவைகள் செய்ய முடியும் என்று காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

    இந்த காட்சிகள் மூலம் இ-சேவை மைய ஆபரேட்டர்களை பற்றி தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இதனால் இ-சேவை மைய தொழில் மீதும், ஆபரேட்டர்கள் மீதும் பொதுமக்களுக்கு அதிருப்தி ஏற்படும் வகையில் காட்சிகள் இருப்பதால் குறிப்பிட்ட அந்த காட்சியை மட்டும் இந்தியன்-2 திரைப்படத்தில் இருந்து நீக்க தமிழ்நாடு மின் ஆளுமை முகமை, தகவல் தொழில் நுட்பதுறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் தமிழ் திரைப்பட இயக்குனர் சங்கர் படக்குழுவினருக்கும், திண்டுக்கல் மாவட்ட இ-சேவை மைய உரிமையாளர்கள் நலச்சங்கம் சார்பில் வேண்டுகோள் வைக்கிறோம்.

    தவறும் பட்சத்தில் திண்டுக்கல் மாவட்ட இ-சேவை மைய உரிமையாளர்கள் நலசங்கத்தின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றார். கூட்டத்தில் மாவட்ட செயலாளர் ரஞ்சித், நவீன், மாவட்ட பொருளாளர் சுதாகர் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தமிழ்நாட்டிற்கு மத்திய அரசால் வழங்கப்பட்ட முக்கிய துறைகளின் விருதுகள்.
    • சுற்றுலா துறைக்கு கிடைத்த 3 விருதுகள்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2021-ம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பு ஏற்றது முதல் தமிழக வளர்ச்சிக்காக எண்ணற்ற திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார்.

    வறுமை ஒழிப்பு, தரமான கல்வி, சுத்தமான குடிநீர், தொழில் கட்டமைப்பு, பொருளாதார வளர்ச்சி வேலை வாய்ப்பு, பெண்கள் முன்னேற்றம், சாலை வசதிகள் என அனைத்து வசதிகளையும் தமிழ்நாட்டில் செயல்படுத்தி வருகிறார்.

    இது தவிர, மகளிர் உரிமைத்தொகை, நான் முதல்வன் திட்டம், மகளிர் இலவச பஸ் பயணம், காலை உணவுத் திட்டம் என மாநில அரசால் நடை முறைப்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களும் செயல்பாட்டில் உள்ளன.

    இதன் காரணமாக தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி மிக வேகமாக உயர்ந்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

    மத்திய அரசு சமீபத்தில் இந்தியா முழுவதும் ஒவ்வொரு மாநிலங்களிலும் செயல்படுத்தப்படும் திட்டங் களை ஆய்வு செய்து ஒவ்வொரு மாநிலங்களும் திட்டங்கள் எந்த அளவுக்கு முன்னேற்றத்தில் உள்ளது என்பதை கண்டறிந்து புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ளது.

    அதன் அடிப்படையில் மாநிலங்களின் மதிப்பெண் அடிப்படையில் தமிழகம் 13 துறைகளில் நிலையான வளர்ச்சி இலக்குகளில் முன்னணியாக வகைப் படுத்தப்பட்டுள்ளது.

    அதில் நிதி ஆயோக் அறிக்கைபடி 11 நிலையான வளர்ச்சி இலக்குகளில் தமிழகத்தின் மதிப்பெண் தேசிய சராசரியை விட அதிகமாக உள்ளது.

    வறுமை ஒழிப்பில் தமிழகத்தின் செயல்பாடு தேசிய அளவில் 100-க்கு 72 என்பதை தாண்டி 92 சதவீதமாக அதிகரித் துள்ளது.

    இதேபோல் தரமான கல்வி வழங்குவதில் தேசிய சராசரி 61 புள்ளிகளை தாண்டி 76 புள்ளிகள் பெற்று முன்னிலையில் தமிழகம் உள்ளது. சுத்தமான குடிநீர், சுகாதாரம், பொருளாதார வளர்ச்சி, தொழில் புத்தாக்கம், உள் கட்டமைப்பு, கால நிலை நடவடிக்கைகள் பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி இலக்குகளில் தமிழகத்தின் மதிப் பெண்கள் தேசிய சரா சரியை விட அதிகமாக உள்ளதாக அந்த புள்ளி விவரத்தில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

    மற்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் ஒப்பிடுகையில் வறுமையை ஒழிக்கும் இலக்கில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. உயர் கல்வி மாணவர்களின் மொத்த சேர்க்கை விகிதம் முறையே 81.5 சதவீதம் மற்றும் 47 சதவீதமாக இருந்தது. இது தேசிய சராசரியான 57.6 சதவீதம் மற்றும் 28.4 சதவீதத்தை விட அதிகமாகும்.

    இதேபோல் கிராமப்புறங் களில் வாழும் மக்களில் 81.87 சதவீதத்துக்கும் அதிகமான குடும்பங்களுக்கு பாதுகாப் பான மற்றும் போதுமான அளவு குடிநீர் கிடைத்து வருவதாக குறிப்பிடப் பட்டுள்ளது.

    செல்போன் பயன்பாட்டை எடுத்துக் கொண்டால் 92.8 சதவீதம் பேர் அதாவது குடும்பத்தில் குறைந்தபட்சம் ஒரு செல்போன் வைத்திருப்பதும் ஆதார் மூலம் இணைக்கப்பட்ட மக்கள் தொகை புள்ளிவிவர சதவீதம் 97.94 என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

    தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கான முதலீடு தொடர்ந்து அதிகரித்து வருவதால் தொழில் வளர்ச்சி சிறப்பாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    கொரோனா தொற்றுக்கு பிறகு தமிழ்நாடு பல துறைகளில் நல்ல வளர்ச்சி பெற்றுள்ளதுடன் சிறந்த முறையில் திட்டங்களின் செயல்பாடுகள் உள்ளதால் வளர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளதாகவும், நான் முதல்வன் திட்டம், புதுமைப் பெண் திட்டம், முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் போன்ற எண்ணற்ற திட்டங்கள் சமூக மற்றும் கல்வி சார்ந்த துறையில் முக்கிய பங்கு வகிப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    தமிழ்நாட்டிற்கு மத்திய அரசால் வழங்கப்பட்ட முக்கிய துறைகளின் விருதுகள்.

    * தொழில் முன்னேற்றம் சம்மந்தமாக தமிழகத்தில் புத்தொழில் நிறு வனங்களுக்கு ஆதரவான செயல்பாடுகளை முன்னெடுத்ததற்காக 2021-ம் ஆண்டுக்கான புத்தொழில் 'லீடர்' விருது.

    * வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற அமைச்சகத்தால் சென்னை மாநகர போக்குவரத்து கழகத்துக்கு வழங்கப்பட்ட சிறந்த நுண்ணறிவு போக்குவரத்து அமைப்பு கொண்ட விருது.

    * ஸ்டார்ட் அப் இந்தியா வெளியிட்ட தரவரிசைப் பட்டியலில் சிறந்த புத்தொழில் சூழமை வினை கட்டமைக்கும் மாநிலங்களில் முதல் தரவரிசைப் பிரிவில் தமிழகம் இடம் பிடித்ததற்காக சான்றிதழ்.

    * உயிர்நீர் இயக்க திட்ட செயல்பாடுகளில் சிறப்பாக செயல்பட்டதற்காக தமிழ் நாட்டுக்கு முதல் மாநிலத்துக்கான விருது மற்றும் தூய்மை இந்தியா நகர்ப்புற இயக்கத்தின் கீழ் ராமேஸ்வரம் நகராட்சி போத்தனூர் பேரூராட்சிக்கு கிடைத்த விருதுகள்.

    * பிரதமரின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களுக்கான முறைப்படுத்தும் திட்டத்திற்கு ஜனாதிபதியால் வழங்கப்பட்ட சிறந்த செயல்திறனுக்கான விருது.

    * நம் ஆளுமை உள்ள கிராம ஊராட்சி எனும் பொருளில் தேசிய அளவில் முதலிடம் பெற்ற கோவை மாவட்டம் பிச்சானூர் ஊராட்சிக்கு மத்திய அரசு வழங்கிய விருது.

    சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தையொட்டி நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் உரிமை ஏற்றத்திற்கான தேசிய விருது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அபுதாபியில் ஆசிய செஸ் கூட்டமைப்பின் சார்பில் 2023-ம் ஆண்டுக்கு சிறந்த மனிதருக்கான விருது

    தமிழக அரசின் தொழில் வழிகாட்டி நிறுவனத்துக்கு புதுப்பித்தல் ஆற்றல் சார் முதலீடுகளை அதிகரிப்பதில் ஆற்றிய சிறப்பான பணிகளுக்காக கிடைத்த முத லீட்டு ஊக்குவிப்பு விருது

    தேசிய அளவிலான இந்தியா ஸ்கில்ஸ் 2021 திறன் போட்டிகளில் பதக்கங்கள் வென்றதற்கான விருது

    தேசிய அளவில் சிறப் பாக செயல் புரிந்த தமிழ கத்தை சேர்ந்த 12 ஊராட்சி களுக்கு மத்திய அரசு விருது

    பெண் குழந்தைகளின் பிறப்பு பாலின விகிதத்தை உயர்த்துவதற்காக சிறப்பாக செயலாற்றி சாதனை புரிந்த கோவை, தஞ்சை, கரூர் கலெக்டர்களுக்கு விருதுகள்

    சுற்றுலா துறைக்கு கிடைத்த 3 விருதுகள்

    சுகாதாரத்திற்கான மதிப்பீட் டில் தேசிய அளவில் 3-ம் இடம் பெற்றதற்கும், சுஜாலம் 1.0 எனும் 100 நாள் நீர் மேலாண்மை இயக்கத் தில் 5-ம் இடம் பெற்றதற் கும் கிடைத்த விருதுகள்

    மாற்றுத் திறனாளிகள் வேலை வாய்ப்பு மேம்பாட்டிற்கான தேசிய மையத்தால் தமிழ்நாடு அரசின் மாற்றுத் திறனாளிகளுக்கான 'அனைத்தும் சாத்தியம்' அருங்காட்சியகத்துக்கு கிடைத்த விருதுகள்'.

    • மாற்றுப் பாதையில் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
    • பட்டாபிராம் ரெயில்வே மேம்பாலத்தை விரைவில் திறக்க பொதுமக்கள் கோரிக்கை.

    ஆவடி:

    பட்டாபிராம், சென்னை-திருப்பதி நெடுஞ்சாலையின் குறுக்காக அமைக்க ப்பட்டுள்ள ரெயில்வே பாதை வழியாக சென்னையில் இருந்து பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் செல்லும் புறநகர் மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    அடிக்கடி ரெயில்வே கேட் மூடப்படுவதால் போக்குவரத்து நெரிசலும், அவரச தேவைக்கு செலவோரும் கடும் அவதி அடைந்தனர்.

    இந்த பிரச்சனைக்குத் தீர்வு காணும் விதமாக கடந்த 2010-ம் ஆண்டில் ரூ.33 கோடி செலவில் அப்பகுதியில் நான்கு வழிச்சாலையுடன் ரெயில்வே மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்காக, மாநில நெடுஞ்சாலைத் துறை மற்றும் ரெயில்வே துறை மூலம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    இதற்கிடையே, சென்னை- திருப்பதி நெடுஞ்சாலை 6 வழிச்சாலையாக மாற்றி அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதையடுத்து, ரெயில்வே துறை மற்றும் மாநில நெடுஞ்சாலைத் துறை திட்டத்தை மறுமதிப்பீடு செய்தது.

    இதன்படி, திட்ட மதிப்பீடு ரூ.52.11 கோடியாக உயர்ந்தது. திருத்திய மதிப்பீட்டின்படி கடந்த 2018-ம்ஆண்டு ரெயில்வே மேம்பால பணிகள் தொடங்கப்பட்டன.

    இதனை 2 ஆண்டுகளில் முடிக்க தீர்மானிக்கப்பட்டது. இதற்காக, அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. சென்னையில் இருந்து அம்பத்தூர், ஆவடி, பட்டாபிராம் வழியாக திருவள்ளூர், திருத்தணி, திருப்பதிக்கு இயக்கப்படும் வாகனங்கள் தற்போது மாற்றுப் பாதையில் இயக்கப்பட்டு வருகின்றன.

    பட்டாபிராம் போலீஸ் நிலையம் அருகே தண்டுரை, அன்னம்பேடு வழியாக மீஞ்சூர்-வண்டலூர் வெளிவட்டச் சாலை வழியாக சென்று அங்கிருந்து நெமிலிச்சேரி ரவுண்டானாவை கடந்து சென்னை- திருத்தணி நெடுஞ்சாலையில் செல்ல வேண்டும். இதனால், வாகனங்கள் சுமார் 6 முதல் 9 கிமீ தூரம் வரை மாற்றுப் பாதையில் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

    பல்வேறு காரணங்களால் பட்டாபிராம் ரெயில்வே மேம்பாலப்பணி முடிவதில் தொடர்ந்து காலதாமதம் ஏற்பட்டு வந்தது. இதனை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை எழுந்து வந்தது.

    இதையடுத்து கடந்த சில மாதங்களாக ரெயில்வே மேம்பாலப்பணிகள் வேகமாக நடைபெற்று வந்தது.

    கடந்த 6 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த மேம்பால பணி தற்போது நிறை வடைந்து உள்ளது. பாலத்தில் தடுப்புகள் அமைத்து வர்ணம் பூசப்பட்டு திறப்பு விழாவுக்கு தயார் நிலையில் உள்ளது.

    இதில் பாலத்தில் சென்னை- திருவள்ளூர் நோக்கி வாகனங்கள் செல்லும் பாதை முழுவதும் பணிகள் முடிந்து உள்ளன.

    திருவள்ளூர்-சென்னை செல்லும் பாதையில் மட்டும் சில பணிகள் முடிக்க வேண்டி உள்ளது. இதுவும் வரும் நாட்களில் விரைந்து முடிக்கப்பட்டு விடும் என்று தெரிகிறது.

    எனவே பொதுமக்களின் நலன்கருதி பட்டாபிராம் ரெயில்வே மேம்பாலத்தை விரைவில் திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்று அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • எம்.ஆர்.விஜயபாஸ்கர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
    • எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது தொழில் அதிபர் பிரகாஷ் வாங்கல் போலீஸ் நிலையத்தில் மேலும் ஒரு புகார் அளித்தார்.

    கரூர்:

    கரூரில் உள்ள மேலக்கரூர் சார்பதிவாளர் (பொ) முகமது அப்துல் காதர் கரூர் நகர காவல் நிலையத்தில் அளித்த புகாரில், போலி சான்றிதழ் கொடுத்து மோசடியாக பத்திரப்பதிவு செய்ததாக அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவரது சகோதரர் சேகர், பிரவீண் உள்ளிட்ட 13 பேர் மீது சி.பி.சி.ஐ.டி. போலீசார் 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

    இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் பிரவீண் ஆகியோரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று முன்தினம் கேரளா மாநிலம் திருச்சூரில் கைது செய்தனர்.

    இதையடுத்து கரூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் எண்-1 நீதிபதி பரத்குமார் முன்னிலையில் 2 பேரும் ஆஜர்படுத்தப்பட்டனர். இதை தொடர்ந்து எம்.ஆர்.விஜயபாஸ்கர் திருச்சி மத்திய சிறையிலும், பிரவீன் குளித்தலை கிளை சிறையிலும் அடைக்கப்பட்டனர்.

    இந்த வழக்கில் போலியான 'நான்டிரேசபிள்' சான்றிதழ் கொடுத்து உடந்தையாக இருந்ததாக கூறி சென்னை வில்லிவாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிருதிவிராஜும் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனிடையே எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது தொழில் அதிபர் பிரகாஷ் வாங்கல் போலீஸ் நிலையத்தில் மேலும் ஒரு புகார் அளித்தார்.

    அதில் தன்னை எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக குறிப்பிட்டிருந்தார். இதை தொடர்ந்து வாங்கல் போலீசார் திருச்சி வந்து சிறையில் இருக்கும் எம்.ஆர்.விஜயபாஸ்கரை கைது செய்ததாக குறிப்பாணை கடிதத்தில் கையெழுத்து பெற்றனர்.

    • மாதத்திற்கு ஒரு முறை மின் பயன்பாட்டைக் கணக்கிட வேண்டும்
    • மின்சாரக் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் மக்களை பாதிக்கும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள மின்சாரக் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

    மாதத்திற்கு ஒரு முறை மின் பயன்பாட்டைக் கணக்கிட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தலைமையில்நாளை காலை 11 மணிக்கு சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகில் தொடர் முழக்கப் போராட்டம் நடைபெற உள்ளது.

    • ஓட்டுநர் சாமர்த்தியமாக பேருந்தை இயக்கி நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
    • இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    சேலத்திலிருந்து ஈரோடு வழியே இயக்கப்பட்ட அரசு பேருந்தின் முன்பக்க சக்கரம் கழன்றதால், பேருந்து தார் சாலையில் மோதி தீப்பொறி பறக்க சென்றது. ஆனால் ஓட்டுநர் சாமர்த்தியமாக பேருந்தை இயக்கி நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    சேலம் - ஈரோடு இடையே அரசுப் பேருந்து ஒன்று திடீரென பழுதானதால், பயணிகளை இறக்கிவிட்டு மாற்று வண்டியில் அனுப்பி வைத்துள்ளனர்.

    பின்னர் ஓட்டுநரும் நடத்துநரும். பழுதடைந்த பேருந்தினை ஈரோடு பணிமனைக்கு கொண்டு செல்லும் பொழுது, பேருந்தின் முன்சக்கரம் கழன்றதால், பேருந்து தார் சாலையில் மோதி தீப்பொறி பறக்க சென்றது.

    பேருந்தில் பயணிகள் இல்லாததாலும், சாமர்த்தியமாக ஓட்டுநர் பேருந்தினை இயக்கியதாலும், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    • புதிய மின் கட்டணம் ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
    • சட்டம் ஒழுங்கு முற்றும் சீரழிந்து விட்டதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டி உள்ளார்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் வீடுகளுக்கான மின் இணைப்பில் 400 யூனிட் பயன்பாட்டாளர்களுக்கு மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மின்சார வாரிய ஒழுங்கு முறை ஆணையம் அறிவித்துள்ளது.

    இந்த புதிய மின் கட்டணம் ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வருவதாகவும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதேபோல், வணிக பயன்பாட்டிற்கு 50 கிலோ வாட்டுக்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

    இந்நிலையில் மின் கட்டண உயர்வை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற உள்ளதாக கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். வரும் 21-ந்தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளார்.

    சட்டம் ஒழுங்கு சீரழிவு மற்றும் மின் கட்டண உயர்வை கண்டித்து போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    சட்டம் ஒழுங்கு முற்றும் சீரழிந்து விட்டதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டி உள்ளார்.

    • அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.
    • அறிஞர் அண்ணா பேசிய காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

    தமிழகத்தில் இன்று (ஜூலை 18) தமிழ்நாடு தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் சிறப்பு வீடியோ பகிர்ந்துள்ளார். வீடியோவுக்கு தமிழ்நாடு வாழ்க என்று தலைப்பிட்டுள்ளார்.

    வீடியோவில் தமிழகத்தின் பெயர் மாற்ற விழாவில் தமிழ்நாடு முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணா பேசிய காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

    இந்தியாவில் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நவம்பர் 1 ஆம் தேதியை மாநில தினமாக கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திர பிரதேசம் போன்ற மாநிலங்கள் கொண்டாடி வருகின்றன. தெலங்கானா மாநிலம் ஆந்திராவில் இருந்து பிரிக்கப்பட்ட ஜூன் 2 ஆம் தேதியை மாநில தினமாக கொண்டாடி வருகிறது.

    எனினும், தமிழகத்தில் இப்படி மாநில நாள் கொண்டாடப்படாமல் இருந்தது. எனினும், தமிழ்நாடு அமைந்த நாளை தமிழ்நாடு தினமாக சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று நீண்ட காலம் கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. சில தமிழ் அமைப்புகள் நவம்பர் 1 ஆம் தேதியை தமிழ்நாடு தினமாக கொண்டாடி வந்தன. இந்த கோரிக்கை கடந்த 2012 ஆம் ஆண்டு ஏற்கப்பட்டு, அக்டோபர் 25 ஆம் தேதி அதற்கான அரசாணை வெளியிடப்பட்டது.

    அதன்படி தமிழ் வளர்ச்சி துறை சார்பில் 2019 ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் தேதி தமிழ்நாடு நாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

    2021 ஆம் ஆண்டு தமிழக முதல்வராக பொறுப்பேற்ற மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு சென்னை மாநிலத்தின் பெயரை தமிழ்நாடு என மாற்ற சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய ஜூலை 18 ஆம் தேதி "தமிழ் நாடு விழா" கொண்டாடப்படும் என்று அறிவித்து அரசாணை வெளியிட்டது. அன்று முதல் ஜூலை 18 ஆம் தேதி தமிழ்நாடு தினம் கடைபிடிக்கப்படுகிறது.


    • 3 ஆண்டுகளில் 3 முறை மின் கட்டணத்தை உயர்த்தி மக்கள் மீது கடும் இரட்டை சுமையை கொடுத்துள்ளது.
    • கடந்த தேர்தலில் அரசியலில் விட்டு ஒதுங்கி கொள்கிறேன் எனக் கூறியவர் தற்போது மீண்டும் அரசியல் குதிக்கிறேன் என சொல்கிறார்?

    மதுரை:

    தி.மு.க. ஆட்சியில் அரங்கேறி வரும் கள்ளச்சாராய உயிரிழப்பு மற்றும் போதைப் பொருட்கள் நடமாட்டம் குறித்து, தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. சார்பில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஜெயலலிதா பேரவை மற்றும் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மதுரை மேற்கு (தெற்கு) ஒன்றியம் சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழக்கு நிகழ்ச்சி சமயநல்லூரில் இன்று நடைபெற்றது.

    இதற்கு ஒன்றிய செயலாளர் அரியூர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் மலையாளம் முன்னிலை வகிததார். விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை சட்டமன்ற எதிர்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மகேந்திரன், மாணிக்கம், கருப்பையா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    அப்போது ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:-

    இன்றைக்கு தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது. நாட்டில் உள்ள அவலங்களை பற்றி சட்டசபையில் பேச முயன்றால் தூக்கி எறிகிறார்கள். தமிழ்நாட்டில் நடைபெறும் கள்ளச்சாராயம், போதை பொருள் கடத்தல் குறித்த விழிப்புணர்வு பிரசாரத்தை 38 வருவாய் மாவட்டங்களில் பட்டி தொட்டி எங்கும் ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சிகள் ஆகிய பகுதிகளில் பொதுச் செயலாளர் எடப்பாடியார் ஆணைக்கிணங்க தொண்டர்கள் பொதுமக்களுக்கு நேரில் வழங்கி பிரசாரம் செய்து வருகிறார்கள்.

    தமிழகத்தில் ஆண்டுக்கு ஒரு முறை மின் கட்டணத்தை உயர்த்துகிறார்கள். உயர்த்திய மின் கட்டணத்திற்கு வருத்தம் தெரிவிக்காமல், அதனை நியாயப்படுத்துகிறார்கள். 8 ஆண்டுகள் மின்சார கட்டணத்தை உயர்த்தாத அரசு அ.தி.மு.க. அரசு. மரக்காணம் பகுதியில் 2023 ஆண்டு கள்ளச்சாராயம் குடித்து 23 பேர் பலியான அன்று, இதுபோன்ற சம்பவம் இனிமேல் நடைபெறாது என்றார். அது வெறும் அறிவிப்போடு நின்றுவிட்டது.

    கண்டிக்க தவறிய அதிகாரிகளை இடமாற்றம் செய்து விட்டேன் என கூறும் ஸ்டாலின், ஆடதெரியாதவன் தெரு கோணல் என்பது போல தனக்கு ஆட தெரியவில்லை என ஸ்டாலினால் ஒப்புக்கொள்ள முடியவில்லை. நாங்கள் அதே அதிகாரிகளை வைத்து தான் அ.தி.மு.க. ஆட்சியில் காவல்துறையை ஸ்காட்லாந்து யார்டுக்கு நிகராக வைத்திருந்தோம்.

    நான் இங்கு யாரையும் குறிப்பிட்டு பேசவில்லை, தரக்குறைவாக பேச விரும்பவில்லை, நடந்ததை குறிப்பிட விரும்புகிறேன். 33 ஆண்டு காலம் அம்மாவுடன் இருந்தவர்கள் தென் தமிழகத்தில் இன்றைக்கு ஆடி மாதத்தில் அம்மா வழியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். நீங்கள் உங்கள் சமூகத்திற்கு என்ன செய்தீர்கள்?

    உங்களை சேர்ந்தவர்களுக்கு நீங்கள் ஏதாவது நல்லது செய்து இருந்தால் அனைவரும் உங்கள் பின்னால் வந்திருப்பார்கள். உங்களுக்கு இருக்கும் பணத்திற்கு, சொத்தை வைத்து ஏதாவது செய்து இருந்தால் அந்த பகுதியே சொர்க்க பூமியாக இருந்திருக்கும். அரசியலில் ஓரம் கட்டப்பட்டதற்கு அம்மா காரணம் அல்ல, அம்மாவின் நிழலாக இருக்கும் ஆடி மாதத்தில் சுற்றுப்பயணம் என்ற பெயரில் சுற்றுலா சென்றவர்தான் காரணம். அவர்கள், இவர்கள் இருந்தால் தான் அ.தி.மு.க. வெற்றி பெறும் என்பது கற்பனை கதை. தமிழகத்தின் இரும்பு மனிதர் எடப்பாடி பழனிசாமி.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    3 ஆண்டுகளில் 3 முறை மின் கட்டணத்தை உயர்த்தி மக்கள் மீது கடும் இரட்டை சுமையை கொடுத்துள்ளது. வெந்த புண்ணில் வேலை பாய்ச்சும் அளவில் உள்ளது. காளிமுத்து கூறியது போல கறந்த பால் மடி புகாது, கருவாடு மீன் ஆகாது. இந்த நேரத்தில் அ.தி.மு.க. தொண்டர்கள் கவனமுடன் இருக்க வேண்டும். 52 ஆண்டுகள் பொன்விழா கண்ட கட்சியில் 50 ஆண்டுகள் கடும் உழைப்பில் எடப்பாடி பழனிசாமி 4½ ஆண்டுகள் பணியாற்றியவர். அவர் தான் மீண்டும் முதல்வராக வரவேண்டும் என்று மக்கள் நினைத்தார்கள். யாரது உள்ளடி வேலையில் மூன்றாவது முறையாக சாதனை படைக்க இருந்த எடப்பாடி பழனிசாமி தோற்கடிக்கப்பட்டார்.

    பொதுச் செயலாளராக பொறுப்பேற்று எத்தனையோ வழக்குகள் நீதிமன்றங்களுக்கு சென்றபோது, தொண்டர்கள் எடப்பாடியுடன் நின்ற காரணத்தினால் அ.தி.மு.க.வை முழுமையோடு எடப்பாடி வழி நடத்துகிறார். 2 கோடி தொண்டர்கள் சுதந்திர சுவாச காற்றை சுவாசிக்கின்றனர்.

    33 ஆண்டுகள் அம்மாவுடன் இருந்து ஆட்சி நிர்வாகத்தை முழுமையாக செயல்படுத்தியவர்கள் தனக்குத்தானே பிரசாரத்தில் முன்னிலைப்படுத்தி கொள்கிறார். ஆனால் தாங்கள் சார்ந்த சமுதாயத்திற்கு அவர்களது மக்கள் படுகின்ற கஷ்டத்திற்கு தீர்வு காண ஏதாவது முயற்சி செய்தாரா? கல்வியிலே, பொருளாதாரத்திலே பின்தங்கி செத்து செத்து பிழைக்கின்றனர்.

    அந்தக் கண்ணீரைத் துடைப்பதற்கு என்ன நடடிக்கை எடுத்தார். இந்த சாதிய பின்புல சமுதாயத்தை பயன்படுத்தி தன்னை முன்னிறுத்துகிறாரே தவிர நம் மக்களுக்கு இதுவரை எதுவும் செய்யவில்லை. ஏதாவது செய்திருந்தால் இந்த நாடே அவர்கள் பின்னால் நின்றிருக்கும்.

    அ.தி.மு.க.வில் மூத்த முன்னோடிகளின் அரசியல் வாழ்க்கை கேள்விக்குறியாவதற்கு யார் காரணம்? ஆடி மாதத்தில் தென்காசியில் சுற்றுப்பயணம் என்ற பெயரில் சுற்றுலா சென்று இருக்கிறார். அவர்களுக்கு இருக்கக்கூடிய சொத்து, பணத்திற்கும் தமிழ்நாட்டு மக்களுக்கு ஏதாவது செய்திருக்க முடியும். ஆனால் எதுவும் செய்யவில்லை.

    காலமும், அதிகாரமும் கையில் இருந்தும் ஏழை, எளிய மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. நீங்கள் தமிழக மக்களுக்கு ஏதாவது செய்திருக்கிறீர்களா? அ.தி.மு.க. தொண்டர்கள் எச்சரிக்கையாகவும், கவனமாகவும், விழிப்புணர்வோடும் இருக்க வேண்டும்.

    எங்களைப் போன்ற சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், அமைச்சர்களுக்கும் தெரியும் அவர்கள் கையில் எந்த அளவிற்கு அதிகாரம் இருந்தது என்று. அவர்களால் பலன் அடைந்தவர்கள் யாராவது இருக்கிறீர்களா? சசிகலாவிடம் யாராக இருந்தாலும் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். பகல் கனவு காண்பவர்களுக்கு நிச்சயமாக பகல் கனவாக தான் போகும். உச்சநீதி மன்ற தீர்ப்பு, தேர்தல் ஆணையத்தின் தீர்ப்புகளை மதிக்க வேண்டும்.

    கடந்த தேர்தலில் அரசியலில் விட்டு ஒதுங்கி கொள்கிறேன் எனக் கூறியவர் தற்போது மீண்டும் அரசியல் குதிக்கிறேன் என சொல்கிறார்? இதில் எதை ஏற்றுக்கொள்ள வேண்டும்? ஜானகி அம்மாள் எடுத்த முடிவை முன்மாதிரியாக கொண்டு சசிகலா செயல்பட்டால் இரண்டு கோடி தொண்டர்களும் பலன் அடைவார்கள் என எடப்பாடி கூறியதை அவர்கள் செய்தால் நன்றாக இருக்கும்.

    கறந்த பால் மடி புகாது, கருவாடு மீன் ஆகாது என்பது போல மீண்டும் அ.தி.மு.க.வில் சசிகலாவை சேர்த்துக்கொள்ள மாட்டோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×