என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • மத்திய மற்றும் அதையொட்டிய வடக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காலையில் உருவானது.
    • தமிழகத்தில் இன்று ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது.

    சென்னை:

    தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் பரவலாக பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சிமலை மாவட்டங்களில் தற்போது கனமழை பெய்கிறது.

    திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இன்று முதல் 24-ந்தேதி வரை இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதற்கிடையில் மத்திய மற்றும் அதையொட்டிய வடக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காலையில் உருவானது. இது வடமேற்கு மற்றும் அதை ஒட்டிய மேற்கு மத்திய வங்காள விரிகுடா ஒடிசா மற்றும் அதையொட்டிய வடக்கு ஆந்திரா கடற்கரையில் நிலவி வருகிறது.

    இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று இரவுக்குள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும். அதன்பிறகு அது தொடர்ந்து வடமேற்கு நோக்கி நகர்ந்து நாளை ஒடிசா கடற்கரையை கடக்க வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

    இந்த நிலையில் தமிழகத்தில் இன்று ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது.

    நீலகிரியில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் ஆரஞ்சு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

    கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் லேசான மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    • காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
    • அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,000 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது.

    சேலம்:

    கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளில் இருந்து தான் தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடப்படும். 124.80 அடி கொள்ளளவு கொண்ட கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 116.60 அடியாக இருந்தது.

    அணை நிரம்ப இன்னும் 8 அடியே பாக்கி உள்ளது. அணைக்கு வினாடிக்கு 44,617 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து குடிநீர் தேவை மற்றும் பாசனத்துக்காக வினாடிக்கு 2,566 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

    அணைக்கு தொடர்ந்து சீராக தண்ணீர் வந்து கொண்டிருப்பதாலும் காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படாததாலும், இன்னும் 3 நாட்களுக்குள் கிருஷ்ணராஜசாகர் அணை முழு கொள்ளளவை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    காவிரி படுகையில் உள்ள கபினி அணை முழு கொள்ளளவை எட்டிவிட்டதால் அந்த அணையில் இருந்து தமிழகத்துக்கு நேற்று மாலை 4 மணி நிலவரப்படி வினாடிக்கு 70 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. இன்று காலை தண்ணீர் திறப்பு அளவு சற்று குறைக்கப்பட்டு வினாடிக்கு 61,316 கன அடி வீதம் நீர் கபிலா ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. இந்த அணைக்கு நீர்வரத்து 49,334 கன அடியாக உள்ளது.

    இதனால் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இந்த தண்ணீர் நஞ்சன்கூடு அருகே திருமாகூடலுவில் காவிரியுடன் சங்கமித்து தமிழகம் நோக்கி பாய்ந்தோடுகிறது.

    கபினி அணையில் இருந்து திறந்து விடப்பட்ட உபரி நீர் காரணமாக தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டு பகுதிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இன்று காலை 45 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த நீர்வரத்தை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

    மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் மாலை வினாடிக்கு 21,520 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று இரவு 35,000 கன அடியாக அதிகரித்தது. மேலும் இன்று காலையில் நீர்வரத்து அதிகரித்து வினாடிக்கு 40,018 கன அடி தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,000 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது.

    நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் நேற்று முன்தினம் மாலை 47.78 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று இரவு 51.38 அடியாக உயர்ந்தது. நீர்வரத்தை விட அணையில் இருந்து நீர் திறப்பு குறைவாக உள்ளதால் இன்று காலை 8 மணி அளவில் நீர்மட்டம் 55.12 அடியாக உயர்ந்தது. நீர்வரத்து அதிகரித்து இருப்பதால் நேற்று முன்தினம் ஒரே நாளில் 3 அடி உயர்ந்திருப்பதும், நேற்று காலை முதல் இன்று காலை வரை ஒரே நாளில் நீர்மட்டம் 4 அடி உயிருந்திருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும். நீர் இருப்பு 21.18 டி.எம்.சி.யாக உள்ளது.

    காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் தமிழக எல்லையான பிலிகுண்டு முதல் மேட்டூர் வரை வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காவிரி கரையோரம் வசிப்பவர்கள் மற்றும் கரையோர தாழ்வான இடங்களில் உள்ளவர்கள் பாதுகாப்பாக இருக்குமாறும், காவிரி ஆற்றை கடக்க யாரும் முயற்சிக்க வேண்டாம் எனவும் வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • மத்திய அரசு விரும்பும் பட்சத்தில் மீண்டும் கவர்னராக அவரே நியமிக்கப்படவும் வாய்ப்பு இருக்கிறது.
    • கேரள மாநில கவர்னர் ஆரிப் முகமது கானின் பதவிக்காலமும் விரைவில் முடிவடைகிறது.

    சென்னை:

    மாநில கவர்னராக நியமிக்கப்படுபவர்கள் 5 ஆண்டு காலம் அப்பதவியில் இருக்கலாம். அதன்பின்னர், புதியவர் ஒருவர் நியமிக்கப்படும் வரை அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்படலாம் அல்லது மத்திய அரசு விரும்பும் பட்சத்தில் மீண்டும் கவர்னராக அவரே நியமிக்கப்படவும் வாய்ப்பு இருக்கிறது.

    அந்த வகையில், தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியின் பதவிக்காலம் இம்மாதம் 31-ம் தேதி நிறைவடைகிறது. தற்போது, டெல்லி சென்ற கவர்னர் ஆர்.என்.ரவி, பிரதமர் நரேந்திரமோடி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா உள்ளிட்டோரை சந்தித்து இருக்கிறார். எனவே, அவருக்கு பதவி நீட்டிப்பு கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

    அதேபோல், கேரள மாநில கவர்னர் ஆரிப் முகமது கானின் பதவிக்காலமும் விரைவில் முடிவடைகிறது. ஏற்கனவே, ஜார்க்கண்ட் கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன், காலியாக உள்ள தெலுங்கானா மற்றும் புதுச்சேரி துணை நிலை கவர்னர் ஆகிய பதவிகளையும் கூடுதலாக கவனித்து வருகிறார்.

    இதுதவிர வேறு சில மாநில கவர்னர்களின் பதவிக்காலமும் முடிவடைய உள்ளதாக கூறப்படுகிறது. இவற்றை கருத்தில் கொண்டு, தமிழகம், கேரளா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களுக்கு புதிய கவர்னர்களை நியமிக்கலாமா? என்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.

    டெல்லி சென்றிருந்த தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்திக்க முயற்சித்தும் அது நடக்கவில்லை. எனவே, அவருக்கு பதவி நீட்டிப்பு கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    இதற்கிடையே டெல்லி சென்றிருந்த கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று இரவு சென்னை திரும்பினார்.

    • மின் கட்டண உயர்வு ஜூலை 1-ந்தேதி முதலே அமலுக்கு வந்தது.
    • மும்முனை இணைப்புக்கு ரூ,1,535-ல் இருந்து ரூ.1,610 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் வீட்டு உபயோகம், அடுக்குமாடி குடியிருப்புகள், வழிபாட்டுத்தலங்கள், சிறு, குறு தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், ஐடி நிறுவனங்களுக்கான மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

    இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, அனைத்து வகை மின்சார பயன்பாட்டிற்கும் 4.83 சதவீதம் அதிகரிக்கிறது. இந்த மின் கட்டண உயர்வு ஜூலை 1-ந்தேதி முதலே அமலுக்கு வந்தது.

    மின் கட்டணத்தை தொடர்ந்து மின்சார சேவை கட்டணங்களும் அதிரடியாக உயர்த்தப்பட்டு உள்ளன.

    அதன்படி வீடுகளுக்கு ஒரு முனை மின்சார இணைப்பு வழங்க ரூ.1,020 கட்டணம் வசூலிக்கப்பட்டது. தற்போது இந்த கட்டணம் ரூ.1,070 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. இதேபோல் மும்முனை மின்சார இணைப்புக்கான கட்டணம் ரூ.1,535-ல் இருந்து ரூ.1,610 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

    ஒரு முனை இணைப்புக்கு மீட்டருக்கான முன்பணம் (டெபாசிட் கட்டணம்) ரூ.765-ல் இருந்து ரூ.800 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மும்முனை இணைப்புக்கு மீட்டருக்கான டெபாசிட் கட்டணம் ரூ.2 ஆயிரத்து 45-ல் இருந்து ரூ.2 ஆயிரத்து 145 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

    அதேபோல் மீட்டரை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு இடமாற்றம் செய்ய ஒரு முனை இணைப்புக்கு ரூ.1,020-ல் இருந்து ரூ, 1,070 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் மும்முனை இணைப்புக்கு ரூ,1,535-ல் இருந்து ரூ.1,610 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

    மின்சார இணைப்புக்கான பெயர் மாற்றத்துக்கு ரூ.615-ல் இருந்து ரூ.645 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது என்று மின்சார வாரிய அதிகாரிகள் கூறினர்.

    • மாநிலம் முழுவதும் இன்று தமிழ்நாடு தினக் கொண்டாட்டங்கள் நடைப்பெற்றது.
    • ஆயிரமாயிரம் ஆண்டுகளாக மிகவும் வளமான கலாச்சாரமாக வளர்ந்து வந்திருக்கிறது.

    தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 18-ஆம் தேதி தமிழ்நாடு தினமாக கொண்டாடப்படும் என கடந்த ஆண்டு தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது.

    அதனையொட்டி மாநிலம் முழுவதும் இன்று தமிழ்நாடு தினக் கொண்டாட்டங்கள் நடைப்பெற்றது.

    இந்நிலையில் தமிழ் கலாச்சாரம் குறித்து சத்குரு பேசிய விடியோ ஒன்றை அவரின் சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிட்டுள்ளார்.

    அதில், "பக்தியில் ஊறி வளர்ந்தது தமிழ் கலாச்சாரம், இதனை உலகம் முழுவதும் கொண்டு சேர்க்க வேண்டும்" எனக் கூறியுள்ளார்.

    அந்த வீடியோவில் மேலும் கூறியிருப்பதாவது:-

    இந்த தமிழ் மண், தமிழ் கலாச்சாரம், தமிழ் இசை, தமிழ் நாட்டியம், தமிழ் கலை, தமிழ் மொழி என்று எதை எடுத்தாலும், தமிழ் என்றால், பக்தி என்கிற ஒரு தெம்பு. பக்தியில்லாமல் தமிழ் கலாச்சாரம் இல்லை. பக்தர்களின் நாடாக இருக்கின்ற தமிழ்நாட்டில், குழந்தை பிறந்தாலும் பக்தி, காது குத்து என்றாலும் பக்தி, வாழ்ந்தாலும் பக்தி, திருமணம் செய்தாலும் பக்தி, இறந்தாலும் பக்தி என்றே இருந்து வருகிறது.

    பக்தியிலேயே ஊறி வளர்ந்திருக்கும் இந்தக் கலாச்சாரம், நெஞ்சத்தில் இருக்கும் பக்தி என்ற தெம்பினால் எவ்வளவோ சாதனைகள் செய்து இருக்கிறது.

    ஆயிரமாயிரம் ஆண்டுகளாக மிகவும் வளமான கலாச்சாரமாக வளர்ந்து வந்திருக்கிறது. எவ்வளவு வளம் என்றால்? மற்ற நாடுகள் கற்பனை கூட செய்ய முடியாத அளவிற்கு வளமான சமூகமும், கலாச்சாரமும் இங்கு உருவாக்கப்பட்டது.

    உங்களுக்கு தெரிந்து இருக்கும், ஐரோப்பிய நாடுகளில் இருந்தவர்கள் எப்படியாவது இங்கு வந்துவிட வேண்டும் என்ற பெரிய ஆர்வம் இருந்தது. கப்பல் ஏறி வழித் தெரியாமல் அங்குமிங்கும் அமெரிக்கா வரை சென்று, இறுதியில் இங்கு வந்தார்கள். ஏனெனில் உலகிலேயே வளமான நாடாக நாம் இருந்தது தான்.

    இந்த வெற்றிகரமான வாழ்க்கைக்கு மூலமாக இருந்தது நம்முடைய பக்தி. சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்கள் மட்டுமில்லாமல் அனைத்திற்கும் மேலாக முக்கியமாக 63 நாயன்மார்கள், ஆழ்வார்கள், ஒளவையார் போன்ற பக்தர்கள் பிறந்து வாழ்ந்த கலாச்சாரம் நம்முடையது.

    இந்த தமிழ் கலாச்சாரம் பக்தியில் ஊறி நனைந்து வளர்ந்திருக்கும் கலாச்சாரம். தமிழ் மக்கள் இதை உணர்ந்து உலகம் முழுவதும் தீவிரமாக இந்த பக்தியை கொண்டு சேர்க்க வேண்டும் . இது மிக மிகத் தேவையானது. தமிழ் கலாச்சாரத்தை குறித்து வெறுமனே பேசிப் பயனில்லை. நமக்கு அதில் பெருமை இருந்தால் அதனை உயிரோடு வைத்திருக்க வேண்டும்." எனக் கூறியுள்ளார்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • அமலாக்கத்துறை செந்தில் பாலாஜி மீது சட்ட விரோ பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தது.
    • அமலாக்கத்துறை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரிய மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

    தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி செந்தில் பாலாஜி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

    இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி அல்லி இந்த வழக்கு மீதான தீர்ப்பை ஒத்திவைத்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.

    ஒரு மனுவில் வங்கிகள் அளித்துள்ள ஆவணங்களுக்கும், அமலாக்கதுறை வழங்கிய ஆவணங்களுக்கும் இடையில் வேறுபாடு இருப்பதாக தெரிவித்திருந்தது. அமலாக்கத்துறை வழங்கியுள்ள ஆவணங்களில் கையால் எழுதி திருத்தப்பட்டுள்ளது. மேலும், தடய அறிவியல் துறை ஆய்வுக்கு அனுப்பி ஆராய வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

    மற்றொரு மனுவில் சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் மீண்டும் வாதங்களை முன்வைக்க அனுமதிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இதற்கு அமலாக்கத்தறை சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. வங்கியில் இருந்து பெறப்பட்ட ஆவணங்களைதான் வழங்கியுள்ளோம். வழக்கை இழுத்தடிக்கும் நோக்கத்தில் செந்தில் பாலாஜி தரப்பில் இந்த இரண்டு மனுக்கள் தொடரப்பட்டுள்ளது. இதை தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என வாதடப்பட்டது.

    இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி அல்லி, சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் இருந்து செந்தில் பாலாஜியை விடுவிக்க மறுப்பு தெரிவித்ததுடன் அது தொடர்பான மனுவை தள்ளுபடி செய்தார்.

    அத்துடன் குற்றச்சாட்டுகள் பதிவுக்கான வழக்கின் விசாரணை 22-ந்தேதிக்கு தள்ளிவைத்து அன்றைய தினம் செந்தில் பாலாஜி நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார்.

    • ஜூலை 26ம் தேதி துவங்கி ஆகஸ்ட் 5ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
    • பேராலயத்தில், ஆண்டு தோறும் 12 நாட்கள் திருவிழா நடைபெறுகிறது.

    தூத்துக்குடியில் இந்த ஆண்டு 442வது ஆண்டு பனிமயமாதா பேராலய திருவிழா கொண்டாடப்படுகிறது.

    1500 ஆண்டுகள் பழமையான இந்த பேராலயம் போர்ச்சுகீசியர்களால் கட்டப்பட்டது.

    இந்த பேராலயத்தில், ஆண்டு தோறும் 12 நாட்கள் திருவிழா நடைபெறுகிறது.

    அதன்படி, திருவிழா, ஜூலை 26ம் தேதி துவங்கி ஆகஸ்ட் 5ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

    இந்நிலையில், 10ம் நாளான வரும் ஆகஸ்ட் 5ம் தேதி தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    தூய பணிமய மாதா திருத்தலப் பேராலய பெருவிழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

    விடுமுறையை ஈடுகட்ட ஆகஸ்ட்.10 சனிக்கிழமை வேலை நாளாக இருக்கும் என்று தூத்துக்குடி ஆட்சியர் லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.

    • மலர்க்கொடி, ஹரிஹரன், திமுக நிர்வாகியின் மகன் சதீஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
    • 14 பேரில் திருவேங்கடம் என்கவுன்டரில் கொல்லப்பட்டார்.

    பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் நேற்று மேலும் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் இருவரை சிபிசிஐடி போலீஸ் கைது செய்துள்ளனர்.

    ஏற்கெனவே 11 பேர் கைதான நிலையில், நேற்று மலர்க்கொடி, ஹரிஹரன், திமுக நிர்வாகியின் மகன் சதீஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

    திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக இலக்கிய அணி துணை அமைப்பாளர் குமரேசனின் மகன் சதீஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.

    கைது செய்யப்பட்ட மலர்கொடி மற்றும் ஹரிஹரன், சதீஷ் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதில் வழக்கறிஞர் மலர்க்கொடி ஏற்கெனவே கைதான வழக்கறிஞர் அருளுடன் தொடர்பில் இருந்தவர். இந்த 14 பேரில் திருவேங்கடம் என்கவுன்டரில் கொல்லப்பட்டார்.

    இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பிரபல ரவுடி சம்போ செந்திலை போலீசார் தேடி வருகின்றனர்.

    நேற்று கைது செய்யப்பட்ட ஹரிஹரன் கொடுத்த தகவலின் பேரில் சம்போ செந்திலுக்கு போலீசார் வலை வீசியுள்ளனர்.

    செந்தில் கொடுத்த பணத்தில் ஹரிஹரன் மூலமாக ரூ.4 லட்சம் பணம் அருளுக்கு கைமாறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ஹரிஹரன் மூலமாக அருள் மற்றும் பொன்னை பாலு கும்பலை, ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய பயன்படுத்தியதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    • ஜூன் 23-ந்தேதி நெடுந்தீவு பகுதியைச் சேர்ந்த 22 மீனவர்களை கைது செய்தனர்.
    • தமிழகம் மீனவர்களுக்கும் இலங்கை கடற்படையினருக்குமான பிரச்சனை அதிகரித்து வருகிறது.

    மதுரை:

    ராமநாதபுரம் மாவட்டம் மோர்ப்பண்ணை மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் வக்கீல் தீரன் திருமுருகன். இவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    தமிழகம் மீனவர்களுக்கும் இலங்கை கடற்படையினருக்குமான பிரச்சனை அதிகரித்து வருகிறது. ஜூன் 2-ம் வாரத்தில் கோட்டைப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த 4 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். ஜூன் 23-ந்தேதி நெடுந்தீவு பகுதியைச் சேர்ந்த 22 மீனவர்களை கைது செய்தனர்.

    கடந்த 1-ந்தேதி ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 25 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இந்த மீனவர்களின் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தங்களின் வாழ்வாதாரத்திற்காக மீன்பிடிக்கும் மீனவர்களை இலங்கை கடற்படையினர் குற்றவாளிகள் போல கைது செய்வதோடு, கிருமி நாசினியை அவர்கள் மீது தெளித்து மனித உரிமை மீறலிலும் ஈடுபட்டுள்ளனர்.

    கடந்த 2021-ல் குஜராத்தை சேர்ந்த மீனவர்கள் பாகிஸ்தான் கடற்படையினரால் தாக்கப்பட்டபோது மத்திய அரசு, பாகிஸ்தான் கடற்படையினருக்கு கடும் எச்சரிக்கையை விடுத்தது. ஆனால் தமிழக மீனவர்கள் விஷயத்தில் அதுபோன்ற நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. ஆகவே, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில், இருக்கும் 26 மீனவர்களுக்கும் சட்ட உதவிகளை வழங்குமாறு அறிவுறுத்தவும், கைது செய்யப்பட்ட மீனவர்களையும் பறிமுதல் செய்த படகுகளையும் விடுவிக்கவும் உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுரேஷ்குமார், அருள்முருகன் அமர்வு, தமிழக மீனவர்களும், இந்திய குடிமக்களே. அவர்களின் பாதுகாப்பு என்பது முக்கியமானது என கருத்து தெரிவித்தனர். ஒன்றிய அரசுத்தரப்பில், மீனவர்களை விடுவித்து தமிழகம் கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டது.

    இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த பிரச்சனை மற்றொரு நாட்டோடு தொடர்புடையது. ஆகவே, தேவையான நடவடிக்கைகளை விரைவாக மத்திய அரசு எடுக்கும் என நீதிமன்றம் நம்புகிறது எனக் குறிப்பிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.

    • அணைக்கு நீர்வரத்தும் அதிகரித்து வருகிறது.
    • பொதுப் பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமராவதி அணை கட்டப்பட்டு உள்ளது. அணைக்கு கேரளா மற்றும் தமிழக வனப் பகுதியில் உற்பத்தியாகின்ற பாம்பாறு, தேனாறு, சின்னாறு உள்ளிட்ட ஆறுகள் மற்றும் சிறு,சிறு ஓடைகள் மூலமாக நீர்வரத்து ஏற்படுகிறது.

    அதை ஆதாரமாக கொண்டு பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன திட்டத்தின் கீழ் திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.

    இந்த நிலையில் அமராவதி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பிரதான ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதால் அணைக்கு நீர்வரத்தும் அதிகரித்து வருகிறது.

    இன்று காலை 10 மணி நிலவரப்படி 90 அடி உயரம் கொண்ட அணையில் 84.20 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 6 ஆயிரத்து 344 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. இதனால் அணை இன்று இரவுக்குள் முழு கொள்ளளவை எட்டுவதற்கு வாய்ப்புள்ளது.

    அணைக்கு ஏற்பட்டுள்ள நீர்வரத்தை பொதுப் பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள். அணை நிரம்பும் தருவாயில் உள்ளதால் உபரிநீர் திறந்து விடப்பட உள்ளது. இதனால் அமராவதி ஆற்றங்கரை யோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. அமராவதி அணை நிரம்பும் தருவாயில் உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி யடைந்துள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆடி மாதத்தில் அம்மன் கோவில்களுக்கு ஒருநாள் சிறப்பு சுற்றுலா ஏற்பாடு செய்யப்படுகிறது.
    • தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக அலுவலகத்தில் இருந்து செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் புறப்பட்டு செல்லும்.

    சென்னை:

    தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் அம்மன் கோவில்களுக்கு ஒருநாள் சிறப்பு சுற்றுலா ஏற்பாடு செய்யப்படுகிறது. காலை 8.30 மணிக்கு தொடங்கி மாலை 7 மணி வரை அம்மன் கோவில்களுக்கு வேன் மூலம் அழைத்து செல்லப்படுகிறார்கள். 

    பாரிமுனை-காளிகாம்பாள் கோவில், ராயபுரம் அங்காள பரமேஸ்வரி, திருவொற்றியூர் வடிவுடையம்மன், பெரியபாளையம் பவானி அம்மன், புட்லூர் அங்காள பரமேஸ்வரி, திருமுல்லைவாயல் திருவுடையம்மன் மற்றும் பச்சையம்மன், கொரட்டூர் செய்யாத்தம்மன், வில்லிவாக்கம் பாலியம்மன் கோவில் ஆகிய அம்மன் கோவில்களுக்கு அழைத்து செல்லப்படுகிறார்கள். மதியம் கோவிலில் அன்னதானம் வழங்கப்படும். இந்த சுற்றுலா திட்டத்திற்கான கட்டணம் ரூ.1000.

    மற்றொரு அம்மன் சுற்றுலா திட்டமானது மயிலாப்பூர் கற்பகாம்பாள் கோவில், முண்டககண்ணி அம்மன், கோல விழியம்மன், தி.நகர் ஆலயம்மன், முப்பாத்தம்மன், சைதாப்பேட்டை பிடாரி இளங்காளி அம்மன், பெசன்ட் நகர் அஷ்டலட்சுமி, மாங்காடு காமாட்சி அம்மன், திருவேற்காடு தேவி கருமாரி அம்மன், கீழ்ப்பாக்கம் பாதாள பொன்னியம்மன் ஆகிய கோவில்களில் அம்மனை தரிசிக்க ஏற்பாடு செய்யப்படும். இதற்கான கட்டணம் ரூ.800.

     

    திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் உள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக அலுவலகத்தில் இருந்து செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் புறப்பட்டு செல்லும்.

    ஆடி அம்மன் கோவில் சுற்றுலாவிற்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்ய வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • 2 நாட்களுக்கு முன்பு திடீரென டெல்லி சென்றிருந்தார்.
    • சட்டம்-ஒழுங்கு பிரச்சனை குறித்து பேசியிருப்பதாக கூறப்படுகிறது.

    சென்னை:

    தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கடந்த 2 நாட்களுக்கு முன்பு திடீரென டெல்லி சென்றிருந்தார்.

    டெல்லியில் பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, மத்திய கல்வித் துறை மந்திரி தர்மேந்திர பிரதான், பாராளுமன்ற விவகாரத் துறை மந்திரி கிரண் ரிஜிஜூ ஆகியோரை சந்தித்து பேசினார்.

    அப்போது தமிழ்நாட்டு நலன் சார்ந்த விஷயங்கள் குறித்தும் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை, கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவங்கள், ஆம்ஸ்ட்ராங் கொலை உள்ளிட்ட பல்வேறு விஷ யங்கள் குறித்து உள்துறை மந்திரி அமித்ஷாவிடம் அவர் எடுத்துக் கூறியதாக தெரிகிறது. மேலும் பல்வேறு விஷயங்கள் குறித்தும் பேசியதாக தெரிகிறது.

    இந்த மாதத்துடன் கவர்னர் ஆர்.என்.ரவியின் பதவி காலம் முடிவடைவதால் அது குறித்தும் பிரதமரிடம் அவர் பேசியிருப்பார் என தெரிகிறது.

    டெல்லியில் முக்கிய பிரமுகர்களை சந்தித்து பேசிய கவர்னர் ஆர்.என்.ரவி இன்று இரவு சென்னை திரும்புகிறார் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ×