என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை செல்லக்கூடிய அனைத்து ரெயில்களும் போத்தனூர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
    • மயிலாடுதுறை - திருச்சி எக்ஸ்பிரஸ் ரெயிலை தினசரி ரெயிலாக இயக்குவதை எல்.முருகன் தொடங்கி வைத்தார்.

    கோவை:

    மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை செல்லக்கூடிய அனைத்து ரெயில்களும் போத்தனூர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், மேட்டுப்பாளையத்தில் இருந்து போத்தனூர் வரை நீட்டிக்கப்பட்டுள்ள சிறப்பு ரெயில் (வண்டி எண்.16766/16765) சேவையை மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் துறை இணை மந்திரி எல். முருகன், மேட்டுபாளையத்தில் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.

    இதேபோல, மேட்டுப்பாளையம் - தூத்துக்குடி இடையே வாரத்தில் 2 நாள் மட்டும் இயக்கக்கூடிய புதிய ரெயிலையும், கோவை - திருப்பதி எக்ஸ்பிரஸ் ரெயில் சாமல்பட்டி ரெயில் நிலையத்தில் கூடுதல் நிறுத்தமாக நின்று செல்வதையும், மைசூரு - மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரெயிலை கடலூர் துறைமுகம் வரை நீட்டித்தும், தற்போது வாரத்தில் 5 நாள் மட்டும் இயக்கப்படும் மயிலாடுதுறை - திருச்சி எக்ஸ்பிரஸ் ரெயிலை தினசரி ரெயிலாக இயக்குவதையும் மத்திய இணை மந்திரி எல்.முருகன் தொடங்கி வைத்தார்.

    • அணையின் உள்பகுதியில் தேங்கியுள்ள தண்ணீரை ஆகாயத்தாமரை முழுவதும் ஆக்கிரமித்துள்ளது.
    • அணையில் இருந்து திறந்து விடப்பட்ட வெள்ளம் நொய்யல் ஆற்றில் ஆர்ப்பரித்து சென்றது.

    சென்னிமலை:

    தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கன மழை பரவலாக பெய்து வருகிறது.

    குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை, நீலகிரி, கோவை மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்துவருவதை அடுத்து கோவை, திருப்பூர் வழியாக வரும் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.17-ம் தேதி காலை நிலவரப்படி ஒரத்துப்பாளையம் அணையில் தண்ணீர் தேக்கம் இல்லை. அப்போது அணைக்கு வினாடிக்கு 59 கன அடி தண்ணீர் மட்டுமே நீர்வரத்து இருந்தது. அணையில் இருந்து 59 கன அடி தண்ணீர் நொய்யல் ஆற்றில் திறந்து விடப்பட்டது. அப்போது அணைக்கு வந்த தண்ணீரில் இருந்த உப்புத்தன்மை (டிடிஎஸ்) 1640 இருந்தது.

    இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை, நீலகிரி, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் கன மழை பெய்து வருவதால் நேற்று முன்தினம் நள்ளிரவு நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அணைக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்தது. நேற்று காலை நிலவரப்படி அணையில் 9 அடி தண்ணீர் தேங்கி நின்றது. அணையின் உள்பகுதியில் தேங்கியுள்ள தண்ணீரை ஆகாயத்தாமரை முழுவதும் ஆக்கிரமித்துள்ளது.

    அணைக்கு வினாடிக்கு 393 கன அடி தண்ணீர் நீர்வரத்து இருந்தது. அணையில் இருந்து 229 கன அடி தண்ணீர் நொய்யல் ஆற்றில் வெளியேற்றப்பட்டது. நேற்று பகலில் மீண்டும் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. அப்போது அணைக்கு வினாடிக்கு 676 கனஅடி நீர்வரத்து இருந்தது. அணையில் இருந்து 418 கன அடி தண்ணீர் நொய்யல் ஆற்றில் வெளியேற்றப்பட்டது.

    அணையில் இருந்து திறந்து விடப்பட்ட வெள்ளம் நொய்யல் ஆற்றில் ஆர்ப்பரித்து சென்றது. நேற்று மாலை அணையில் 11.6 அடி தண்ணீர் தேங்கி நின்றது. வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஆற்றின் கரையோரம் வசிக்கும் பொது மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் நொய்யல் ஆற்றில் இன்னும் ஒரிரு நாளில் அதிக அளவு வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி நொய்யல் ஆற்றை யாரும் கடந்து செல்ல வேண்டாம் என்று பொது பணித்துறையினர் எச்சரித்துள்ளனர்.

    • சட்டசபை விதிகள் குழுவில் கொண்டுவரப்பட்ட திருத்தம்.
    • சபாநாயகர் அப்பாவு முறைப்படி அறிவித்து விதிகளில் திருத்தம் கொண்டு வந்தார்.

    சென்னை:

    தமிழக சட்டசபை கூட்டம் வழக்கமாக காலை 10 மணிக்கு தொடங்கும் கடந்த மாதம் நடைபெற்ற சட்டசபை கூட்டத்தொடர் காலை 10 மணிக்கு பதிலாக 9.30 மணிக்கு தொடங்கி மதியம் 1.30 மணிக்கு முடிவடைந்தது. மாலையில் 5 மணி முதல் இரவு 8 மணி வரை சட்டசபை கூட்டம் நடத்தப்பட்டது.

    விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நடந்ததையொட்டி கூட்டத்தொடரை விரைவாக முடிக்க இந்த நடைமுறை கொண்டுவரப்பட்டது.

    இதற்காக தமிழ்நாடு சட்டமன்ற விதிகள் குழுவில் முடிவெடுத்து தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதற்கான அறிவிப்பை சமீபத்தில் சட்டசபையில் சபாநாயகர் அப்பாவு முறைப்படி அறிவித்து விதிகளில் திருத்தம் கொண்டு வந்தார்.

    சட்டசபை விதிகள் குழுவில் கொண்டுவரப்பட்ட திருத்தம் அப்படியே நீடிப்பதால் இனி வரும் காலங்களில் சட்டசபை கூட்டம் காலை 9.30 மணிக்கு தொடங்கி மதியம் 1.30 மணிக்கு முடிவடையும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கருணாநிதி முதலமைச்சாக இருந்த கால கட்டத்தில் சட்டசபை கூட்டம் காலை 9.30 மணிக்கு தொடங்குவது வழக்கம். அந்த நடைமுறை இப்போதும் கொண்டுவரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • மரம் மின்கம்பம் மீது விழுந்ததால் மின் வினியோகமும் பாதிக்கப்பட்டது.
    • ஊட்டியில் பல்வேறு குடியிருப்புகளுக்கு அருகே தடுப்புச்சுவர்கள் இடிந்து விழுந்தன.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த 4 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது.

    நேற்றும் கூடலூர், பந்தலூர், ஊட்டி சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

    மாவட்டம் முழுவதும் பரவலாகவே அவ்வப்போது விட்டு, விட்டு மழை பெய்து கொண்டே இருந்தது. தொடர் மழையால் நீலகிரி மாவட்டத்தில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

    கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழை காரணமாக நீலகிரியில் பல இடங்களிலும் மரங்கள் முறிந்து விழுந்து வந்தன.

    நேற்று பெய்த மழைக்கும் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன.

    ஊட்டியில் இருந்து முத்தோரை பாலடா செல்லும் சாலையில் முள்ளிக்கொரை பகுதியில் அடுத்தடுத்து 5 மரங்கள் சாய்ந்து நடுரோட்டில் விழுந்தன.

    அந்த சமயம் அந்த வழியாக வந்த கார் ஒன்று மரங்களுக்கு இடையே சிக்கி கொண்டது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. தகவல் அறிந்த தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து மரங்களை வெட்டி அகற்றினர். அதனை தொடர்ந்து கார் அங்கிருந்து சென்றது. மேலும் அந்த வழியாக வந்த மற்றொரு வாகனத்தின் மீதும் மரம் விழுந்தது.


    ஊட்டியில் இருந்து பிங்கர் போஸ்ட், கால்ப் லிங்ஸ் செல்லும் சாலையில் மரம் விழுந்தது. மரம் மின்கம்பம் மீது விழுந்ததால் மின் வினியோகமும் பாதிக்கப்பட்டது.

    ஊட்டி, குந்தா உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் உள்ள சாலையோரங்களில் நின்றிருந்த சிறு, சிறு மரங்கள் பலத்த காற்றுடன் பெய்த மழைக்கு முறிந்து ரோட்டில் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    நெடுஞ்சாலைத் துறையினர் அந்த மரங்களை உடனுக்குடன் வெட்டி அகற்றி அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.

    ஊட்டி தாசபிரகாஷ் சாலையிலும் ராட்சத மரம் முறிந்து நடுரோட்டில் விழுந்தது. அத்துடன் அந்த வழியாக சென்ற மின் கம்பிகள் மீது விழுந்ததில் அவை அறுந்தன.

    உடனடியாக அங்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டு, ஊழியர்கள் விரைந்து வந்து அதனை செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

    கூடலூரில் இருந்து மைசூரு மற்றும் கேரளா செல்லும் சாலைகளில் பல்வேறு இடங்களில் அதிகளவில் மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்து அடிக்கடி பாதிக்கப்பட்டது.

    ஓவேலி, தேவர்சோலை சுற்றுவட்டாரத்தில் மரக்கிளைகள் முறிந்து விழுந்ததால் 100க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மின் வினியோகம் துண்டிக்கப்பட்டு, அந்த பகுதிகள் இருளில் மூழ்கின.

    கூடலூர்-மைசூர் சாலையில் மாக்கமூலா பகுதியில் பலத்த காற்றுக்கு சாலையின் குறுக்கே மூங்கில் புதர் விழுந்தது.

    நாடுகாணி வனச்சரக எல்லைக்குட்பட்ட புளியம்பாறை கோழிக்கொல்லியில் சாலையோரம் இருந்த மரங்கள் கனமழையால் முறிந்து சாலையில் விழுந்தது.

    பிதர்காடு வனச்சரகத்திற்குட்பட்ட பாட்டவயல் சாலையில் அய்யங்கொல்லி பகுதியில் மரம் விழுந்தது. இந்த பகுதிகளில் தீயணைப்பு துறையினர் விரைந்து மரங்களை வெட்டி அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர்.

    பந்தலூர் அத்திகுன்னாவில் இருந்து அத்திமாநகர் செல்லும் சாலையில் மண்சரிவு ஏற்பட்டதால் மரமும் முறிந்து விழுந்தது. அப்பகுதி மக்கள் ஒன்று சேர்ந்து மரத்தை வெட்டி அகற்றினர்.

    ஊட்டியில் பல்வேறு குடியிருப்புகளுக்கு அருகே தடுப்புச்சுவர்கள் இடிந்து விழுந்தன. ஒரு சில பகுதிகளில் வீடுகளின் சுவரும் இடிந்தது.

    உப்பட்டி, சேலக்குன்னாவில் வசித்து வரும் கூலித்தொழிலாளி சுசீலா என்பவரின் வீட்டின் பக்கவாட்டு சுவர், குந்தலாடி பூதானகுன்னுவில் உள்ள உதயகுமாரின் வீடு, பந்தலூர் பகுதியில் ஒரு வீடும் மழைக்கு சேதம் அடைந்தது.

    மழையுடன், கடும் குளிரும் நிலவி வருவதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

    • தபசு காட்சி வருகிற 21-ந்தேதி நடக்கிறது.
    • திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    சங்கரன்கோவில்:

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோவிலில் ஆடித்தபசு திருவிழா கடந்த 11-ந் தேதி கோமதி அம்பாள் சன்னதி முன்பு அமைந்துள்ள தங்கக்கொடி மரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழா நாட்களில் அம்பாள் தினமும் காலை, மாலை நேரங்களில் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. மேலும் கோவில் கலையரங்கத்தில் சொற்பொழிவு, பக்தி கச்சேரி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது.

    இதனை முன்னிட்டு வருவாய் மற்றும் பேரிடர் மீட்பு துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், டாக்டர் ராணி ஸ்ரீகுமார் எம்.பி., தென்காசி மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர், தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ., நகராட்சி சேர்மன் உமாமகேஸ்வரி ஆகியோர் தேரை வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.

    தேரோட்டத்தில் அ.தி. மு.க. முன்னாள் அமைச்சர் ராஜலெட்சுமி, கோவில் துணை ஆணையர் கோமதி, நகராட்சி கமிஷனர் சபாநாயகம், அறங்காவலர் குழு தலைவர் சண்முகையா மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் தலைமையில் போலீசார் செய்திருந்தனர்.

    முக்கிய நிகழ்ச்சியான தபசு காட்சி 11-ம் திருவிழாவான வருகிற 21-ந்தேதி நடக்கிறது. அன்று மாலை 6 மணிக்கு தெற்கு ரதவீதியில் சங்கரலிங்கசுவாமி கோமதி அம்பாளுக்கு சங்கரநாராயணராக காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் மண்டக படிதாரர்கள் செய்து வருகிறார்கள். 

    • அமைச்சரவையை விரைவில் மாற்றி அமைப்பார் என்றும் பேசப்படுகிறது.
    • உயர் அதிகாரிகளும் உடன் இருந்ததாகவும தகவல்கள் வெளியாகி உள்ளன.

    சென்னை:

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விரைவில் துணை முதலமைச்சர் ஆவார் என்ற எதிர்பார்ப்புக்கு மத்தியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சரவையை விரைவில் மாற்றி அமைப்பார் என்றும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் (புதன்கிழமை) முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசன் பிறந்த நாளுக்கு அமைச்சர்கள் பலர் அவரது வீட்டுக்கு நேரில் சென்று பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.

    மூத்த அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் பலர் சபரீசனை சந்தித்து வாழ்த்து கூறியதால் கட்சியில் அவரது முக்கியத்துவம் மேலும் உயர்ந்துள்ளதாகவே கருதப்படுகிறது.

    அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட வாய்ப்பு இருப்பதால் இந்த முறை சபரீசனை சந்திக்க அமைச்சர்கள் பலர் ஆர்வம் காட்டியதாக கட்சி நிர்வாகிகள் கருத்து பரிமாறிக் கொண்டனர்.

    விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எந்தெந்த அமைச்சர்கள் அதிக ஓட்டு வாங்கினார்கள். எந்த அமைச்சர்களுக்கு ஓட்டு குறைந்தது என்ற பட்டியல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கையில் இருப்பதால் சில அமைச்சர்களின் இலாகாக் களை மாற்றி விடுவாரோ என்ற ஐயப்பாடும் சில அமைச்சர்களிடம் நிலவி வருகிறது.

    இந்த சூழ்நிலையில் தான் சபரீசனை பார்த்து வாழ்த்து சொல்ல நேற்று முன்தினம் அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களும் அதிகம் பேர் சென்றதாக கட்சி நிர்வாகிகள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் அன்றைய தினம் காலை 10.30 மணியளவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுமார் 10 அமைச்சர்களுடன் திடீர் ஆலோசனையும் நடத்தி இருக்கிறார்.

    சபரீசனை சந்தித்து வாழ்த்து சொன்ன அந்த அமைச்சர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்திய ஆலோசனையில் பங்கேற்றது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

    அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, பொன்முடி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் உள்ளிட்ட 10 அமைச்சர்கள் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் நடத்திய ஆலோசனையில் பங்கேற்றதாகவும் அப்போது தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, முதல்-அமைச்சரின் செய லாளர்கள், முக்கிய துறைகளின் உயர் அதிகாரிகளும் உடன் இருந்ததாகவும தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இந்த கூட்டத்தில் அரசு நிர்வாகம் மட்டுமின்றி 2026 தேர்தல் வர இருப்பதை யொட்டி இனி எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது பற்றி பேசியதாகவும் தெரிகிறது.

    முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அடுத்த மாதம் அமெரிக்கா செல்ல இருப்ப தால் அதற்கு முன்னதாக இந்த ஆலோசனையில் பல்வேறு விசயங்கள் பேசப் பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது.

    அன்று நடைபெற்ற இந்த கூட்டத்தில் விக்கிரவாண்டி தேர்தலில் ஓட்டு குறைந்த அமைச்சர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் கேட்டதாகவும், சில அமைச்சர்கள் 'டோஸ்' வாங்கியதாகவும் கூறப்படுகிறது.

    • கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி அணை தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
    • சுற்றுலா பயணிகள் பரிசலில் செல்ல முடியாமல், மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் குளிக்க முடியாமலும் ஏமாற்றுத்துடன் திரும்பி சென்றனர்.

    தருமபுரி:

    கர்நாடகா, கேரளா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளதால் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளான குடகு, வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

    இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி அணை தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதையடுத்து கபினி, கிருஷ்ணராஜ சாகர் ஆகிய 2 அணைகளில் இருந்து நேற்று மொத்தம் 75 ஆயிரம் கனஅடி அளவில் உபரி நீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது.

    இதன் காரணமாக நேற்று கர்நாடகா-தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது.

    இதனைத்தொடர்ந்து தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியதால் கடந்த இரு தினங்களுக்கு முன்பு வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடிக்கு மேல் வந்து கொண்டிருந்தது.

    இந்த நிலையில் கபினி, கே.ஆர்.எஸ். ஆகிய அணைகளில் இருந்து நேற்று முன்தினம் வினாடிக்கு 55 ஆயிரம் கனஅடிக்கு மேல் ஒனேக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று காலை நிலவரப்படி நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வினாடிக்கு 30 ஆயிரம் கனஅடிக்கும் மேல் வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில், கர்நாடகா அணைகளில் இருந்து நேற்று மாலை 75 ஆயிரம் கனஅடி அளவுக்கு மேல் நீர் திறக்கப்பட்டதால் ஒகேனக்கல்லில் இன்று காலை நீர்வரத்து மேலும் அதிகரித்து 45 ஆயிரம் கனஅடியாக உயர்ந்து வந்து கொண்டிருக்கிறது.

    நீர்வரத்து அதிகரிப்பால் மெயின் அருவி செல்லும் வழியில் நடைபாதைக்கு மேல் தண்ணீர் செல்வதை படத்தில் காணலாம். 

    நீர்வரத்து அதிகரிப்பால் மெயின் அருவி செல்லும் வழியில் நடைபாதைக்கு மேல் தண்ணீர் செல்வதை படத்தில் காணலாம். 

     

    இதன் காரணமாக மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் ஆகிய அருவிகள் மூழ்கும் நிலையில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. மேலும், காவிரி ஆற்றங்கரையின் இருபுறமும் தொட்டப்படி தண்ணீர் சீறிபாய்ந்து சென்றது. மேலும், மெயின் அருவிக்கு செல்லும் வழியாக நடைபாதைக்கு மேலும் தண்ணீர் ஆர்ப்பரித்து சென்றது.

    நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக கடந்த 15-ந்தேதி மாலை முதல் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி பரிசல் இயக்குவதற்கும், அருவிகள் மற்றும் காவிரி ஆற்றில் குளிக்கவும், மாவட்ட நிர்வாகம் தடைவிதிக்கப்பட்டதை தொடர்ந்து இன்றும் தடை நீடிக்கப்பட்டு உள்ளது.

    மேலும், மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதைக்கு மேல் தண்ணீர் செல்வதால், சுற்றுலா பயணிகள் யாரும் உள்ளே செல்லாமல் நடைபாதைக்கு செல்லும் வழியில், பூட்டி சீல் வைத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் ஊழியர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் பரிசலில் செல்ல முடியாமல், மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் குளிக்க முடியாமலும் ஏமாற்றுத்துடன் திரும்பி சென்றனர்.

    கர்நாடகா அணைகளில் இருந்து தொடர்ந்து தண்ணீர் திறப்பு அதிகரித்து உள்ளதால், காவிரி ஆற்றிற்கு வரும் நீர்வரத்து 1 லட்சம் கனஅடி அளவு வரை வரக்கூடும் என்பதால் தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    • ஒருசில கொலை நிகழ்வுகளைத் தவிர, ஏனைய குற்றங்களில் உண்மைக் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை.
    • உண்மைக் குற்றவாளிகள் இதுவரை பிடிபடாமல் இருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    யார் ஆட்சியில் இருந்தாலும் அங்கொன்றும், இங்கொன்றும் தனிப்பட்ட காரணங்களுக்காகவும், வக்கிர புத்தி படைத்தவர்களாலும், ஒருசில கொலைகள் நடப்பது இயல்பு. குற்றவாளிகளை காவல் துறையினர் கண்டுபிடித்து கைது செய்வது நடைமுறை.

    ஆனால், தி.மு.க. ஆட்சியில் கொலைகள் செய்வதையே தொழிலாகக் கொண்டு பலர் தமிழகம் முழுவதும் சுற்றிச் சுற்றி வந்து வெறியாட்டம் ஆடுவதும், பல கொலைகளில் ஈடுபட்ட கொலையாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் காவல் துறையினர் திணறுவதும் கண்கூடாகும்.

    பகுஜன் சமாஜ் கட்சித் தலைவரும், வழக்கறிஞருமான ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்தில்கூட 'நாங்கள்தான் செய்தோம்' என்று தானாகவே முன்வந்து சிலர் சரணடைந்துள்ளதும், அதில் ஒருவரை சென்னை மாநகர் காவல் துறையினர் என்கவுண்டர் செய்ததும் விந்தையான சம்பவமாகும்.


    காங்கிரஸ் கட்சியின் நெல்லை மாவட்டத் தலைவர் ஜெயக்குமார் படுகொலை, சேலம் மாநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பகுதிக் கழகச் செயலாளர் சண்முகம் படுகொலை, மதுரையில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி பாலசுப்பிரமணியன் படுகொலை என்று கட்சி பேதமின்றி பல படுகொலைகள் அரங்கேறிய வண்ணம் உள்ளன.

    இவற்றில் ஒருசில கொலை நிகழ்வுகளைத் தவிர, ஏனைய குற்றங்களில் உண்மைக் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை. உண்மைக் குற்றவாளிகள் இதுவரை பிடிபடாமல் இருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது. 2021-ல் தி.மு.க. ஆட்சிக்கு வந்தபிறகு தமிழகத்தின் தலைநகராம் சென்னை கொலை நகரமாக மாறியுள்ளது என்ற நிலையில், கடந்த 200 நாட்களாக தமிழகமே கொலைக்களமாக மாறியுள்ளது. மக்கள் தங்களது உயிருக்கு பாதுகாப்பில்லாத சூழ்நிலையில் வாழ்வது அபாயகரமான ஒன்றாகும்.

    தி.மு.க. ஆட்சியில் தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு ஜனவரி மாதம் 80 கொலைகளும், பிப்ரவரி மாதம் 64 கொலைகளும், மார்ச் மாதம் 53 கொலைகளும்; ஏப்ரல் மாதம் 76 கொலைகளும், மே மாதம் 130 கொலைகளும், ஜூன் மாதம் 104 கொலைகளும், ஜூலை 17-ந் தேதி வரை 88 கொலைகளும் என, மொத்தம் சுமார் 200 நாட்களில் 595 கொலைச் சம்பவங்கள் அரங்கேறி உள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

    தமிழகத்தில் சென்னை மாநகரில் மட்டும் 86 கொலைச் சம்பவங்கள் அரங்கேறி முதலாவது இடத்தைப் பிடித்துள்ளது, இரண்டாவது மதுரையில் 40 கொலைச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் 35-ம், விருதுநகரில் 31 கொலைகளும் நடைபெற்று முறையே மூன்றாவது, நான்காவது இடங்களைப் பிடித்துள்ளன என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

    'அடுத்தவர்கள் சொல்வதை நாம் ஏன் கேட்க வேண்டும்' என்ற இரு மாப்போடு இனியும் செயல்படாமல், சுய சிந்தனையோடு கொலை பாதகர்களிடமிருந்து மக்களை எப்படி காப்பாற்ற வேண்டும் என்று சிந்தித்து, போர்க்கால அடிப்படையில் இந்த அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அ.தி.மு.க. சார்பில் வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தங்கம் விலை கிராமுக்கு 30 ரூபாய் குறைந்து 6 ஆயிரத்து 875 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
    • வெள்ளி விலை குறைந்துள்ளது.

    சென்னை:

    சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 240 ரூபாய் குறைந்து 55 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    தங்கம் விலை கிராமுக்கு 30 ரூபாய் குறைந்து 6 ஆயிரத்து 875 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 1ரூபாய் 45 காசுகள் குறைந்து 97 ரூபாய் 75 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது.

    • கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் 20 ஆயிரம் ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன.
    • சோலையாறு அணையின் மொத்த உயரம் 165 அடி ஆகும்.

    வால்பாறை:

    கோவை மாவட்டம் ஆனைமலை அருகே உள்ள ஆழியாறு அணை வாயிலாக கோவை மாவட்டத்தில் புதிய ஆயக்கட்டு மற்றும் பழைய ஆயக்கட்டுகளில் 50,350 ஏக்கர் நிலங்களும், கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் 20 ஆயிரம் ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன.

    ஆழியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மேல்ஆழியாறு, நவமலை, காடம்பாறை மற்றும் சர்க்கார்பதி பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அணைக்கு நீர்வரத்துள்ள பிரதான நவமலை ஆறு, கவியருவி மற்றும் வனப்பகுதியில் உள்ள சிற்றாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    இதனால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. 120 அடி உயரம் கொண்ட ஆழியாறு அணையில் கடந்த 15-ந் தேதி அணையின் நீர்மட்டம் 88.60 அடியாக இருந்தது. மூன்று நாட்களில் 12.50 அடி அதிகரித்து நேற்று காலை 8 மணி நிலவரப்படி அணை நீர்மட்டம் 101.10 அடியாக உயர்ந்தது.

    நேற்று தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே சென்றது. இதனால் இன்று காலை 7 மணி நிலவரப்படி அணை நீர்மட்டம் 106 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு 3,709 கன அடி நீர்வரத்து உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 84 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுவதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் இன்னும் ஓரிரு நாட்களில் அணை முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதேபோல சோலையார் அணையும் நிரம்பி உள்ளது. பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தின் உள்ள 10 தொகுப்பு அணைகளில் முக்கிய அணையாக கருதப்படுவது சோலையார் அணையாகும். சாலக்குடி ஆற்றின் கிளை ஆறான சோலையார் ஆற்றின் குறுக்கே 3290 அடி உயரப் பகுதியில் கட்டப்பட்டுள்ள சோலையார் அணை, 5392 மில்லியன் கன அடி தண்ணீரை தேக்கும் கொள்ளளவு கொண்டது. சோலையார் அணை தான் தமிழ்நாட்டில் உள்ள அணைகளில் மிக உயரமான அணையாகும்.

    சோலையாறு அணையின் மொத்த உயரம் 165 அடி ஆகும். தற்போது அணையின் நீர்மட்டம் 161 அடியாக உள்ளது. மேலும் நீர்மட்டம் அதிகரிக்கும்பட்சத்தில் அணையில் இருந்து உபரிநீர் திறந்து விடப்படும்.

    • சாரல் மழை லேசாக பெய்து வருகிறது.
    • பக்தர்கள் ஆர்வத்துடன் நடந்து சென்று சாமி தரிசனம் செய்தனர்.

    வத்திராயிருப்பு:

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் உள்ளது. இங்கு அமாவாசை, பவுர்ணமிக்கு தலா 3 நாட்கள், பிரதோஷத்திற்கு 2 நாட்கள் என மாதத்தில் 8 நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.

    அதன்படி ஆடி மாத பிரதோஷம், பவுர்ணமி யை முன்னிட்டு இன்று முதல் 22-ம் தேதி வரை 4 நாட்களுக்கு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.

    சதுரகிரி மேற்கு தொடர்ச்சி மலையில் கடந்த சில நாட்களாக பரவலாக சாரல் மழை லேசாக பெய்து வருகிறது. இருப்பினும் மழை எச்சரிக்கை இல்லாததால் பக்தர்கள் இன்று மலையேற அனுமதிக்கப்பட்டனர்.

    இன்று காலை 6.15 மணியளவில் வனத்துறை கேட் திறந்து விடப்பட்டு பக்தர்களின் உடமைகள் சோதனை செய்யப்பட்டது.அதன்பின் அவர்கள் மலையேறினர். 10 வயதுக்கு மேற்பட்டவர்கள் முதல் இளைஞர்கள், பெண்கள் ஆகியோர் ஆர்வத்துடன் நடந்து சென்று சாமி தரிசனம் செய்தனர்.

    பிரதோஷத்தை முன்னிட்டு இன்று மாலை 4.30 மணியிலிருந்து 6 மணிக்குள் சுந்தர மகாலிங்க சுவாமிக்கு பால், பழம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட அபிஷேகங்கள் நடைபெறு கிறது.

    அபிஷே முடிந்ததும் சாமி அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெறு கிறது. இதற்கான ஏற்பாடுகளை சுந்தர மகாலிங்கம் கோயில் பரம்பரை அறங்காவலர் ராஜா என்ற பெரியசாமி செயல் அலுவலர் ராமகிருஷ்ணன் ஆகியோர் செய்திருந்தனர்

    நாளை மறுநாள் ஆடி பவுர்ணமி என்பதோடு, அதோடு விடுமுறை நாளாக இருப்பதால் பக்தர்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • தமிழ்நாட்டில் உயர்த்தபட்ட மின் கட்டணம் பொதுமக்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
    • நீட் தேர்வு வேண்டாம் என்பது தான் எங்களது நிலைப்பாடு.

    அரியலூர்:

    அரியலூரில் தொல்.திருமாவளவன் எம்.பி. செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் உயர்த்தபட்ட மின் கட்டணம் பொதுமக்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே மின் கட்டண உயர்வை முதல்வர் பரிசீலனை செய்ய வேண்டும்.

    விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் அனைத்து கட்சிகளும் விடுத்த கோரிக்கையையடுத்து மயிலாடுதுறை-மைசூர் விரைவு ரெயில் தற்போது கடலூர் வரை நீட்டிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

    நீட் தேர்வு வேண்டாம் என்பது தான் எங்களது நிலைப்பாடு. நீட் தேர்வுக்கு எதிராக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை மத்திய அரசு அங்கீகரிக்க வேண்டும். ஜனாதிபதி அதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்.

    அரியலூர் வழியாகச் செல்லக்கூடிய அனைத்து ரெயில்களும் அரியலூர் ரெயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என தெற்கு ரெயில்வே ரெயில்வே நிர்வாகத்திடம் வலியுறுத்தியுள்ளேன்.

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை கட்சி நிர்வாகிகள் என கூறக்கூடாது. அவர்கள் கட்சி, ஜாதி ரீதியாக செயல்படுவதில்லை ஒரு குழுக்களாக செயல்படுகிறார்கள்.

    ஆம்ஸ்ட்ராங்கை என்ன காரணத்துக்காக கொலை செய்தார்கள் என்பதை கண்டறிவது தான் முக்கியமாகும். எனவே தான் உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும்.

    இக்கொலை வழக்கில் முக்கியமான நபர்கள் யார் என்பதை கண்டறிந்து அவர்களை கைது செய்ய காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். உண்மை குற்றவாளிகள் திரை மறைவில் இருக்கிறார்கள் அவர்கள் அனைவரையும் கைது செய்ய வேண்டும்.

    கடந்த 10 ஆண்டுகளில் கார்ப்பரேட் கம்பெனிகள் நலனில் கருத்தில் கொண்டு தான் நிதிநிலை தயாரித்து உள்ளார்கள். மக்கள் நலனை கருத்தில் கொண்டு நிதிநிலை அறிக்கை தயாரிப்பதில்லை.

    இப்போதும் வரக்கூடிய நிதிநிலை அறிக்கையில் மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் இருக்கும் என எதிர்பார்க்க இயலாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×