என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • தேனாம்பேட்டையில் உள்ள அம்மா உணவகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொண்டார்.
    • அம்மா உணவகங்களில் புதிய பாத்திரங்கள் வாங்க ரூ.7 கோடி கட்டடத்தை புனரமைக்க ரூ. 14 கோடி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளார்.

    சென்னை:

    ஏழை மக்கள் பயன்பெறும் அம்மா உணவகத்தின் செயல்பாடு, உணவின் தரம் உள்ளிட்டவற்றை முதலமைச்சர் ஆய்வு செய்தார்.

    சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அம்மா உணவகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

    அம்மா உணவகத்தில் உணவு அருந்தியவரிடம் உணவின் தரம் குறித்து கேட்டறிந்தார். ஊழியர்களிடம் உணவு தயாரிப்பு முறைகள், உணவின் தரம் குறித்தும் அவர் கேட்டறிந்தார்.

    இந்நிலையில் சென்னையில் அம்மா உணவகங்களை மேம்படுத்துவதற்காக ரூ.21 கோடி நிதி ஒதுக்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    தேனாம்பேட்டை அம்மா உணவகத்தில் இன்று ஆய்வு மேற்கொண்ட நிலையில் ரூ.21 கோடி ஒதுக்கீடு செய்து, அம்மா உணவகங்களை தொடர்ந்து சிறப்பாக நடத்த முதலமைச்சர் ஆணை பிறப்பித்துள்ளார்.

    சென்னை மாநகராட்சியில் 200 கோட்டங்களிலும் உள்ள 388 அம்மா உணவகங்களையும் சிறப்பாக நடத்த முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

    அம்மா உணவகங்களில் புதிய பாத்திரங்கள் வாங்க ரூ.7 கோடி, கட்டடத்தை புனரமைக்க ரூ. 14 கோடி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளார்.

    அம்மா உணவகங்களில் ஆய்வு செய்து தேவையான உதவிகளை செய்து தருமாறு அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தி உள்ளார்.

    சமையலறை மற்றும் உணவு கூடத்தை தூய்மையாக பராமரிக்கவும், ஏழைகள் பயன்பெறும் வகையில் தரமான உணவு தயாரிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

    • எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்பட 13 பேர் மீது வாங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
    • விஜயபாஸ்கர் ஆஜர்படுத்தப்படுவதை அறிந்த அ.தி.மு.க.வினர் ஏராளமானோர் கோர்ட்டு முன்பு திரண்டார்கள்.

    கரூர்:

    கரூரில் ரூ. 100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரிப்பு செய்ததாக முன்னாள் அமைச்சர் மற்றும் கரூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் எம்.ஆர். விஜயபாஸ்கரின் ஆதரவாளர்களான செல்வராஜ், பிரவீன் உள்பட 7 பேர் மீது கரூர் டவுன் போலீஸ் நிலையத்தில் மேலக்கரூர் சார்பதிவாளர் முகமது அப்துல் காதர் புகார் அளித்தார். இந்த வழக்கில் தனது பெயரும் சேர்க்கப்படலாம் என கருதிய முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கரூர் நீதிமன்றத்தில் முன்ஜாமின் கேட்டு 2 முறை தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

    இதற்கிடையே இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து கரூர் வாங்கலை சேர்ந்த பிரகாஷ் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் அவரது சகோதரர் சேகர் மற்றும் பிரவீன் உள்பட 13 பேர் தன்னை மிரட்டி அந்த ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை அபகரித்து விட்டதாக புகார் அளித்தார். இதில் எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்பட 13 பேர் மீது வாங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    இதை அறிந்து எம்.ஆர். விஜயபாஸ்கர் தலைமறைவானார். பின்னர் ஒரு மாத கால தேடுதல் வேட்டைக்கு பிறகு கேரள மாநிலம் திருச்சூரில் எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர் பிரவீன் ஆகியோரை கைது செய்து கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். அதன்பின்னர் ஆவணங்களை கண்டுபிடிக்க முடியவில்லை என போலியான நான் டிரேசபிள் சான்றிதழ் வழங்கிய வில்லிவாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரிதிவிராஜ் கைது செய்யப்பட்டார்.

    இந்த நிலையில் நேற்று மேலும் ஒரு வழக்கில் எம்.ஆர். விஜயபாஸ்கர் கைது செய்யப்பட்டார். பிரகாஷ் அளித்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட கொலை மிரட்டல், நில அபகரிப்பு உள்ளிட்ட வழக்குகளில் சம்பிரதாய கைது (பார்மல்) நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதற்கான உத்தரவை திருச்சி மத்திய ஜெயில் அடைக்கப்பட்டுள்ள எம்.ஆர். விஜயபாஸ்கரிடம் போலீசார் வழங்கினர்.

    இந்த நிலையில் தற்போது கைது செய்யப்பட்டுள்ள வழக்கில் எம்.ஆர். விஜயபாஸ்கரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று ஆஜர் படுத்தினர். இதற்காக கரூர் சி.பி.சி.ஐ.டி. போலீசார் திருச்சி சிறையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் அவரை அழைத்து வந்தனர்.

    விஜயபாஸ்கர் ஆஜர்படுத்தப்படுவதை அறிந்த அ.தி.மு.க.வினர் ஏராளமானோர் கோர்ட்டு முன்பு திரண்டார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டது.

    • வெடி விபத்தால் பாதிக்கப்பட்ட குழாய்களை சரி செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
    • திருமுருகன்பூண்டி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் வாவிபாளையம் பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரிய குடியிருப்பு உள்ளது. இங்கு 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியை சேர்ந்த சுந்தராம்பாள் (வயது 56) என்பவர் குடியிருப்பு அருகில் செடிகளை பராமரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

    அப்போது திடீரென பறந்து வந்த மர்ம பொருள் ஒன்று காலின் மீது விழுந்து காயம் ஏற்படுத்தியது. வலியால் அலறி துடித்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் உதவியுடன் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தொடர்ந்து பறந்து வந்து விழுந்த பொருள் எதுவென தெரியாமல் பொதுமக்கள் குழப்பம் அடைந்தனர். தொடர்ந்து திருமுருகன்பூண்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த திருமுருகன்பூண்டி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    குடியிருப்பு பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் சுந்தராம்பாள் மீது பறந்து வந்து விழுந்த கருப்பு நிற பொருள் எதுவென்று தெரியவந்தது.

    அப்பகுதியில் இருந்து 100 மீட்டர் தொலைவில் தனியார் நிறுவனத்தின் கியாஸ் திட்டத்தில் எரிவாயு கொண்டு செல்வதற்கான குழாய்கள் பதிக்கப்பட்டு ள்ளது. வாவிபாளையம் பகுதியில் அதற்கான செக்கிங் பாயிண்ட் அமைந்துள்ளது. செக்கிங் பாயிண்டில் அதிக அழுத்தம் காரணமாக ஏற்பட்ட வெடி விபத்தில் குழாய் பதிப்பில் இருந்த உபகரணம் பறந்து வந்து மூதாட்டியின் மீது விழுந்து காயத்தை ஏற்படுத்தியது தெரியவந்தது.

    தொடர்ந்து எரிவாயு குழாய் பராமரிப்பு பணியில் உள்ள ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர். பின்னர் வெடி விபத்தால் பாதிக்கப்பட்ட குழாய்களை சரி செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து சுந்தராம்பாள் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் கியாஸ் நிறுவனத்தின் மேற்பார்வையாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இச்சம்பவம் தொடர்பான சிசிடிவி., காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    குடியிருப்புக்கு அருகாமையில் இது போன்ற தரை வழியாக எரிவாயு கொண்டு செல்லும்போது அதற்காக பதிக்கப்படும் குழாய்களைச் சுற்றி பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தாததே விபத்திற்கு காரணம் . எனவே செக்கிங் பாயிண்ட் பகுதியை சுற்றி கம்பி வேலி அல்லது தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தேனாம்பேட்டையில் உள்ள அம்மா உணவகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.
    • உணவின் தரம் குறித்து ஊழியர்களிடம் கேட்டறிந்தார்.

    சென்னை:

    ஏழை மக்கள் பயன்பெறும் அம்மா உணவகத்தின் செயல்பாடு, உணவின் தரம் உள்ளிட்டவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

    சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அம்மா உணவகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.

    தேனாம்பேட்டையில் உள்ள அம்மா உணவகத்தில் உணவு அருந்தியவரிடம் உணவின் தரம் குறித்து அவர் கேட்டறிந்தார்.

     

    அம்மா உணகவகத்தின் உணவு தயாரிப்பு முறைகள், உணவின் தரம் குறித்து ஊழியர்களிடம் கேட்டறிந்தார். உணவகத்தில் நின்றிருந்த பொதுமக்களிடமும் தகவல்களை கேட்டறிந்தார்.

    • மாநில அரசுகளின் ஆலோசனைகளை பெறவில்லை.
    • சட்டங்களை சமஸ்கிருத மயமாக்கி உள்ளனர்.

    சென்னை:

    இந்திய தண்டனைச் சட்டம், குற்ற விசாரணை முறைச் சட்டம் மற்றும் இந்திய சாட்சிய சட்டம் ஆகிய சட்டங்களுக்கு மாற்றாக, பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா மற்றும் பாரதிய சாக்ஷைய அதினியம் என்ற பெயரில் மூன்று புதிய சட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றியது. இந்த புதிய சட்டங்கள் கடந்த 1-ந்தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன.

    இந்த புதிய சட்டங்களை எல்லாம் எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

    இந்தநிலையில், இந்த சட்டங்களை ரத்து செய்ய கோரி சென்னை ஐகோர்ட் டில், தி.மு.க., அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    பாராளுமன்றத்துக்குள் கண்ணீர் புகை குண்டு வீசிய சம்பவத்தை கண்டித்ததால், இரு சபைகளில் இருந்தும் 150 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அந்த காலக்கட்டத்தில், எந்த ஒரு விவாதமும் இல்லாமல் இந்த 3 சட்டங்களை அவசர கதியில் மத்திய அரசால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    புதிய சட்டங்களை இயற்றுவதற்கு முன்பு மாநில அரசுகளின் ஆலோசனைகளை பெறவில்லை. சில பிரிவுகளை மாற்றம் செய்து, சட்டங்களை சமஸ்கிருத மயமாக்கி உள்ளனர். இது பல தரப்பினருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

    பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தில், அரசு கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதை குற்றமாக்கியுள்ளது. குற்றங்களுக்கு தண்டனைகளை அதிகரித்துள்ளது. ஆயுள் தண்டனை என்பது வாழ்நாள் முழுவதும் எனக் கூறியுள்ளதன் மூலம், தண்டனை குறைப்பு வழங்கும் ஜனாதிபதி, கவர்னர் அதிகாரங்கள் பறிக்கப்பட்டுள்ளது.

    பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா சட்டத்தில், போலீசாருக்கு அதிக அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது. கொலை, ஆசிட் வீச்சு வழக்குகளில் கைது செய்யப்படுபவர்களுக்கு கைவிலங்கு பூட்டுவதன் மூலம் தனிநபர்களின் சுதந்திரம் பாதிக்கப்படுகிறது.

    எனவே, ஏராளமான முரண்பாடுகளுடன் இயற்றப்பட்டுள்ள இந்த 3 சட்டங்களை ரத்து செய்யவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இந்த மனுக்கள், நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், என்.செந்தில்குமார் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

    மனுதாரர் தரப்பில் மூத்த வக்கீல் என்.ஆர்.இளங்கோ ஆஜராகி, அரசியலமைப்பு சட்டப்படி ஆங்கிலத்தில் மட்டுமே சட்டங்கள் இயற்றப்பட வேண்டும். ஆனால், மத்திய அரசு சமஸ்கிருதத்தில் சட்டங்களை நிறைவேற்றியது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என வாதிட்டார்.

    இந்த வழக்கிற்கு பதில் மனு தாக்கல் செய்ய மத்திய அரசுத்தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், உதவி சொலிசிட்டர் ஜெனரல் ராஜேஸ் விவேகானந்தன் ஆகியோர் கால அவகாசம் கேட்டார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், விசாரணையை 4 வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.

    மேலும், ''மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்த சட்டங்கள் மக்களை குழப்பத்தில் ஆழ்த்தும் வகையில் உள்ளது. சிவில் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்த போதும் இதேபோல எதிர்ப்பு இருந்தது. எனவே, சட்டத்தை இயற்றுவதற்கு முன்பு சட்ட ஆணையத்தை ஆலோசித்திருக்க வேண்டும்'' என்று கருத்து தெரிவித்தனர்.

    • ஆஸ்பத்திரியில் வெடி குண்டு வைக்கப்பட்டு இருப்பதாக எழுதப்பட்டு இருந்தது.
    • போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சோழிங்கநல்லூர்:

    பெரும்பாக்கத்தில் பிரபல தனியார் ஆஸ்பத்திரி உள்ளது. இந்த ஆஸ்பத்திரிக்கு தபால் ஒன்று வந்தது. அதில் ஆஸ்பத்திரியில் வெடி குண்டு வைக்கப்பட்டு இருப்பதாக எழுதப்பட்டு இருந்தது. இதுபற்றி பெரும்பாக்கம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வெடிகுண்டு தடுப்பு போலீசார் விரைந்து வந்து சோதனை செய்தனர். ஆனால் வெடிகுண்டு எதுவும் இல்லை. புரளி என்பது தெரிந்தது. வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வந்த கடிதத்தில் மதுராந்தகம் அருகே உள்ள புக்கத்துரையை சேர்ந்த மேகநாதன் என்று முகவரி குறிப்பிடப்பட்டு இருந்தது.

    மேலும் பா.ம.க. கட்சியை தறக்குறைவாக விமர்சிக்கும் தி.மு.க. கட்சிக்கு பாடமாக வெடி குண்டு வைத்து உள்ளேன். என் சமுதாயத்துக்காக பல ஆஸ்பத்திரிகளில் வெடிகுண்டு வைத்து இருக்கிறேன் என்ற பரபரப்பு கடிதமும் இருந்தது. இதனை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • தமிழக அரசு மக்கள் மீது மின்சார தீவிரவாதத்தை கட்டவிழ்த்து விட்டிருக்கிறது.
    • பணத்திற்காக தனியாரிடம் மின்சாரத்தை வாங்கி கொண்டிருக்கின்றனர்.

    சென்னை:

    தமிழகத்தில் மின் கட்டண உயர்வை கண்டித்து சென்னை எழும்பூரில் பாமகவினர் போராட்டம் நடத்தினர்.

    பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையிலான போராட்டத்தில் ஏராளமான பாமக-வினர் பங்கேற்றனர். மின்கட்டண உயர்வையும், தமிழக அரசையும் கண்டித்து பாமக-வினர் கோஷம் எழுப்பினர்.

    இந்நிலையில் பாமக போராட்டத்தில் அன்புமணி ராமதாஸ் கூறியதாவது:

    * தமிழக அரசு மக்கள் மீது மின்சார தீவிரவாதத்தை கட்டவிழ்த்து விட்டிருக்கிறது.

    * 2 மாதங்களில் தமிழக அரசுக்கு 40 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம்.

    * இன்றும் மின்சார வாரியம் நஷ்டத்தில் இயங்குவதாக கூறுவது பெரும் மோசடி.

    * திமுக அரசிற்கு நிர்வாக திறமை என்பதே கிடையாது.

    * பணத்திற்காக தனியாரிடம் மின்சாரத்தை வாங்கி கொண்டிருக்கின்றனர்.

    * அரசு துறைகளில் மின் உற்பத்தியை நிறுத்தி விட்டதாக அன்புமணி குற்றச்சாட்டி உள்ளார்.

    • ஆம்ஸ்ட்ராங் கொலையில் பல்வேறு தகவல்கள் வெளியாகி கொண்டே இருப்பதால் போலீஸ் விசாரணை விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
    • வடசென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களிலேயே ஆம்ஸ்ட்ராங்கின் ஆதரவாளர்கள் அதிகமாக உள்ளனர்.

    சென்னை:

    பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ந் தேதி வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    கடந்த ஆண்டு சென்னையில் கொலை செய்யப்பட்ட பிரபல ரவுடி ஆற்காடு சுரேசின் கொலைக்கு பழிக்கு பழி வாங்கும் வகையிலேயே ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டிருப்பதாக பரபரப்பான தகவல்கள் வெளியானது. இது தொடர்பாக ஆற்காடு சுரேசின் தம்பி பொன்னை பாலு, குன்றத்தூரை சேர்ந்த திருவேங்கடம் உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் திருவேங்கடம் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுவிட்ட நிலையில் மற்ற 10 பேரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    ஆற்காடு சுரேசின் கொலைக்கு பழிக்குப்பழி வாங்கவே ஆம்ஸ்ட்ராங் தீர்த்துக்கட்டப்பட்டு விட்டதாக போலீசார் முதலில் கூறி இருந்தனர். ஆனால் போலீசார் நடத்திய அதிரடி விசாரணையில் ஆற்காடு சுரேசின் கொலை சம்பவம் மட்டுமே ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு காரணம் இல்லை என்பதும் பல்வேறு காரணங்கள் இருப்பதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

    வடசென்னையை சேர்ந்த பிரபல தாதா, ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு மூளையாக செயல்பட்டு சிறையில் இருந்து சதி திட்டம் தீட்டி கொடுத்திருப்பதும், அதற்கு பின்னணியில் வெளியில் இருந்து குட்டி, குட்டி தாதாக்கள் பலரும் உதவி செய்திருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.


    இதையடுத்து அ.தி.மு.க.வை சேர்ந்த மலர்க்கொடி, த.மா.கா.வை சேர்ந்த அரிகரன் ஆகியோரும் இந்த வழக்கில் கூடுதலாக கைது செய்யப் பட்டனர்.

    ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு திரைமறைவில் இருந்து இவர்கள் பல்வேறு உதவிகளை செய்து கொடுத்திருப்பதும் அம்பலமாகி உள்ளது. மயிலாப்பூரில் கொலை செய்யப்பட்ட தோட்டம் சேகரின் மனைவியான மலர்க்கொடி தனது கணவர் கொலை செய்யப்படுவதற்கு ஆம்ஸ்ட்ராங்தான் காரணம் என்று கருதி செயல்பட்டு வந்துள்ளார்.

    இதன் தொடர்ச்சியாகவே, கொலை சம்பவத்துக்கு அவர் ரூ.50 லட்சம் பணத்தை வாரி வழங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த நிலையில் புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த பிரபல பெண் தாதாவான அஞ்சலையும் ஆம்ஸ்ட்ராங் கொலையாளிகளுக்கு ரூ.10 லட்சம் பணத்தை வழங்கி இருப்பதாகவும் புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இதை தொடர்ந்து அஞ்சலையை கைது செய்ய போலீசார் தேடினார்கள். இதனால் அவர் தப்பி ஓடி தலைமறைவாகி உள்ளார்.

    புளியந்தோப்பு போலீஸ் நிலையத்தில் உள்ள ரவுடிகள் சரித்திர பதிவேட்டில் அஞ்சலையின் பெயர் உள்ளது. கந்து வட்டி வசூலிப்பது தொடர்பாக அவர் மீது புகார்கள் உள்ள நிலையில் பி.வகை ரவுடிகள் பட்டியலில் அஞ்சலை இடம் பெற்றிருக்கிறார்.

    போலீஸ் தேடுவதை அறிந்ததும் அஞ்சலை தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார். சென்னையில் அவர் எங்காவது பதுங்கி இருக்கலாம் என்கிற சந்தேகத்தில் பல இடங்களில் போலீசார் தேடினார்கள். ஆனால் அஞ்சலை எங்கும் இல்லை.


    சென்னையை விட்டு அவர் தப்பி ஓடி விட்டதை போலீசார் உறுதி செய்துள்ளனர். அஞ்சலைக்கு ஆந்திராவில் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே அவர் அங்கு சென்று யாருடைய வீட்டிலாவது பதுங்கி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். பாஜக பிரமுகரான அவர் கட்சி செல்வாக்கை பயன்படுத்தி அதன் மூலமாக முக்கிய பிரமுகர்கள் யாருடைய வீட்டிலாவது தஞ்சம் புகுந்துள்ளாரா? என்பது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இதைத் தொடர்ந்து அஞ்சலையை பிடிக்க தனிப்படை போலீசார் ஆந்திராவுக்கு விரைந்துள்ளனர். அதே நேரத்தில் சென்னையில் உள்ள அவரது நெருங்கிய உறவினர்கள் சிலரை பிடித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அஞ்சலையின் மருமகன் ஒருவரிடம் விசாரணை நடத்திய போலீசார் எப்போது அழைத்தாலும் மீண்டும் விசாரணைக்கு வர வேண்டும் என்று எழுதி வாங்கிவிட்டு அனுப்பி வைத்துள்ளனர்.

    இவரை போல அஞ்சலையின் உறவினர்கள் பலரையும் போலீசார் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளனர்.

    இதற்கிடையே ஆற்காடு சுரேசின் வலது கரமாக செயல்பட்ட தாம்பரத்தை சேர்ந்த பிரபல ரவுடி ஒருவருக்கும் ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்பு இருப்பதாக புதிய தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆற்காடு சுரேஷ் கொலை செய்யப்பட்ட உடன், 'ஆம்ஸ்ட்ராங்கை கொல்லாமல் விட மாட்டேன்' என்று அந்த ரவுடி சபதம் எடுத்துள்ளான். ஆம்ஸ்ட்ராங் கொலையில் அந்த ரவுடியும் பின்னணியில் இருப்பதாக கூறப்படுகிறது. தலைமறைவாக இருக்கும் அந்த ரவுடிகளையும் அவனது கூட்டாளிகளையும் போலீசார் தேடி வருகிறார்கள்.

    இவர்களை போன்று ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்புடைய மேலும் பல ரவுடிகளுக்கும் போலீசார் வலை விரித்துள்ளனர். இதையடுத்து இந்த வழக்கில் தொடர்புடைய ரவுடிக் கும்பலை சேர்ந்த ரவுடிகள் பலரும் ஆந்திராவுக்கு தப்பி ஓடி சென்று இருப்பதும் தெரிய வந்துள்ளது.

    இப்படி ஆம்ஸ்ட்ராங் கொலையில் தோண்ட தோண்ட பல்வேறு தகவல்கள் வெளியாகி கொண்டே இருப்பதால் போலீஸ் விசாரணையும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

    கொலை பின்னணியின் முழு நெட்வொர்க்கையும் போலீசார் அலசி ஆராய்ந்து வருகிறார்கள். இதில் மேலும் பரபரப்பான தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஆம்ஸ்ட்ராங்கை பெரம்பூரில் அவரது இடத்தில் வைத்தே கொலையாளிகள் திட்டம் போட்டு தீர்த்து கட்டி இருப்பது அவரது ஆதரவாளர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

    ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட போது அவரது உடலை பார்த்து கதறி அழுத பலர் "கூடவே இருந்தும் உங்களை காப்பாற்ற முடியாமல் போய்விட்டதே அண்ணா, யாரையும் சும்மா விட மாட்டோம்" என்று கூறி கதறி அழுதனர்.

    இதைத் தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்கள் பலர் 'பழிக்குப்பழி நிச்சயம்'என சமூக வலை தளங்களிலும் கருத்துக்களை பதிவிட்டனர். "16-வது நாளில் நிச்சயம் பழி தீர்ப்போம்" என்றும் சிலர் சபதம் எடுத்து செயல்பட்டு வருவதாகவும் போலீசுக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.

    ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டு நாளை 16-வது நாளாகும். எனவே பழிக்குப்பழியாக சென்னையில் மேலும் ஒரு கொலை சம்பவம் அரங்கேறிவிடக் கூடாது என்பதில் போலீசார் மிகுந்த கவனமுடன் உள்ளனர்.

    வடசென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களிலேயே ஆம்ஸ்ட்ராங்கின் ஆதரவாளர்கள் அதிகமாக உள்ளனர். நாளை 16-ம் நாள் நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து அசம்பாவித சம்பவங்கள் ஏதும் மீண்டும் நடைபெற்று விடக்கூடாது என்பதால் சென்னை, திருவள்ளூரில் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். ரவுடிகள் கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    • 14 சட்ட மசோதாக்களுக்கும் கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கி உள்ளார்.
    • மசோதாக்களில் அவர் கையெழுத்திட்டதும் அது சட்டமாகி விடும்.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்படும் சட்ட மசோதாக்கள் அனைத்தும் கவர்னர் ஆர்.என்.ரவியின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும்.

    அந்த மசோதாக்களில் அவர் கையெழுத்திட்டதும் அது சட்டமாகி விடும். ஆனால் கடந்த சில வருடங் களாக தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களில் ஒருசில மசோதாக்களில் கையெழுத் திடாமல் விளக்கம் கேட்டு அரசுக்கே திருப்பி அனுப்பிய சம்பவமும் அரங்கேறியது.

    இதனால் கவர்னருக்கும் தமிழக அரசுக்கும் மோதல் போக்கு நீடித்து வந்தது. இதனால் இந்த பிரச்சனை கோர்ட்டு வரை சென்றது.

    இந்த சூழலில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு கவர்னர் நடவடிக்கைகளில் சிறிது மாற்றம் தெரிய ஆரம்பித்துள்ளது.

    இந்த நிலையில் கடந்த மாதம் நடைபெற்ற தமிழக சட்டசபை கூட்டத் தொடரில் மொத்தம் 14 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு கவர்னரின் ஒப்புலுக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

    இந்த 14 சட்ட மசோதாக்களுக்கும் கவர்னர் ஆர்.என்.ரவி இப்போது ஒப்புதல் வழங்கி உள்ளார்.

    புதுக்கோட்டை, திருவண்ணாமலை, நாமக்கல், காரைக்குடி ஆகிய நகராட்சிகளை மாநகராட்சியாக தரம் உயர்த்திய மசோதா, ஊரக உள்ளாட்சிகளை நகர்ப்புற உள்ளாட்சிகளுடன் இணைக்கும் போது அப்பகுதியில் வரும் சொத்துக்கள் உள்ளிட்டவற்றை மாற்றம் செய்வதற்கான சட்ட திருத்த மசோதா.

    சென்னையில் தனியார் வளாகம் அல்லது ஒரு தனியார் தெருவின் மிக அருகில் உள்ள இடத்தில் இருந்து 30 மீட்டர் தூரத்துக்குள் கழிவுநீரை வாரியத்தின் கழிவுநீர் பாதையில் வெளியேற்றுவதற்கு இணைப்பு பெறுவதை கட்டாயமாக்கும் திருத்த மசோதா, சென்னை மாநகர காவல் சட்டத்தை மதுரை, கோவை, திருச்சி, சேலம், நெல்லை, திருப்பூர் ஆகிய நகரங்களுக்கும் விரிவாக்கம் செய்வதற்கான சட்ட திருத்த மசோதா, உள்ளிட்ட 14 மசோதாக்களுக்கும் கவர்னர் ஒப்புதல் வழங்கி உள்ளார்.

    • 2 கட்டிடம் கட்டுவதற்கு தற்போது உள்ள பள்ளி வளாகத்தில் இடவசதி இல்லை.
    • குழந்தைகள் பள்ளிக்கு செல்லாததால் அங்கு பரபரப்பாக காணப்பட்டது.

    அகரம்சீகூர்:

    பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூர் அருகே உள்ள வயலப்பாடி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடு நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் அங்கன்வாடி முதல் எட்டாம் வகுப்புகள் வரை சுமார் 220- மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

    இப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு போதுமான வகுப்பறை கட்டிட வசதி, விளையாட்டு மைதானம் இல்லை. மேலும் 2 வகுப்பறைகள் கொண்ட கட்டிடம் சிதிலமடைந்து விட்டதால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த கட்டிடத்தை இடித்து, அந்த இடத்தில் தற்போது ஒரு வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

    இப்பள்ளிக்கு 3 -வகுப்பறைகள் கொண்ட கட்டிடம் மற்றும் லேப் கட்டிடம் கட்ட அரசு அனுமதி வழங்கியுள்ளது. அந்த 2 கட்டிடம் கட்டுவதற்கு தற்போது உள்ள பள்ளி வளாகத்தில் இடவசதி இல்லை.

    ஆனால் ஊருக்கு நடுவில் அரசுக்கு சொந்தமான இடம் உள்ளது. அந்த இடத்தில் புதிய கட்டிடங்களைக் கட்டினால் மாணவர்களுக்கு போதிய இடவசதி கிடைப்பதோடு மட்டும் அல்லாமல விளையா ட்டு மைதானமும் அமைக்கலாம். பள்ளி, தற்போது ஊருக்கு மேற்கு பகுதியில் உள்ளதால் கிழக்கு பகுதியிலிருந்து வரும் மாணவர்கள் கனரக வாகனங்கள் செல்லும் பாதையில் ஆபத்தான சூழ்நிலையில் பள்ளியில் மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

    இந்நிலையில், புதிய இடத்தில் கட்டிடம் கட்டித்தர வேண்டுமென ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி மன்றத் தலைவர், துணைத்தலைவர், பள்ளி மேலாண்மைக்குழுத் தலைவர் ஆகியோர்களுக்கு பெற்றோர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

    ஆனால் மக்களின் கோரிக்கையை ஏற்காமல் மீண்டும் பள்ளி வளாகத்தில் உள் பகுதியில் கட்டிடம் கட்ட வேலைகள் ஆரம்பித்ததால் ஆத்திரமடைந்து வயலப்பாடியில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் பயிலும் மாணவ-மாணவிகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அதிர்ச்சியடைந்த பள்ளி ஆசிரியர்கள் மற்றும் வட்டார கல்வி அலுவலர் கண்ணதாசன், ஆகியோர் பள்ளி குழந்தைகளின் பெற்றோர்களின் வீடுகளுக்கே நேரில் சென்று மாணவர்களை அழைத்தபோது பெற்றோர்கள் அனுப்ப மறுத்துள்ளனர். பள்ளி திறந்து 2 மணி நேரம் ஆகியும் குழந்தைகள் பள்ளிக்கு செல்லாததால் அங்கு பரபரப்பாக காணப்பட்டது.

    பின்னர் தகவல் அறிந்து வந்த வட்டாச்சியர் கோவிந்தம்மாள், மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் பூங்கொடி, ஆகியோர் பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சு வார்த்தையில் இன்னும் சில நாட்களில் வேறு இடத்தை தேர்வு செய்து அங்கு புதிய கட்டிடம் கட்டி இந்த பள்ளியை மாற்றி தருவதாக உத்திரவாதம் அளித்ததை தொடர்ந்து பெற்றோர்கள் கலைந்து சென்றனர்.

    • மாநகர பஸ் பயணிகளுக்கு பெரும் இடையூறாக உள்ளது.
    • பொதுமக்களுக்கு இடையூறாக நிறுத்துவதால் பெரும் சிரமம்.

    சென்னை:

    சென்னையில் பஸ் நிறுத்தங்களில் ஆட்டோக்கள், ஷேர் ஆட்டோக்களை நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்வதால் மாநகர பஸ் பயணிகளுக்கு பெரும் இடையூறாக உள்ளது.

    மாநகர பஸ்கள் நின்று பயணிகளை ஏற்றி, இறக்கி செல்லும் நிறுத்தங்களில் ஆட்டோக்களை நிறுத்துவதால் பஸ் டிரைவர்கள் பஸ்சை நிறுத்தும் இடத்தை கடந்தோ, அல்லது சாலையின் நடுப்பகுதிகளில் நிறுத்தும் நிலை உள்ளது.

    இதனால் பஸ்சின் பின்னால் வாகனங்கள் அணிவகுத்து நின்று போக்கு வரத்து நெரிசல் ஏற்படுகிறது. சென்னை நகரின் எல்லா பகுதியிலும் ஆட்டோ டிரைவர்கள் பொதுமக்களுக்கு இடையூறாக நிறுத்துவதால் பெரும் சிரமத்திற்கு ஆளாகிறார்கள்.

    இதனால் மாநகர பஸ்கள் சரியான இடத்தில் நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்க முடியாத நிலை ஏற்படுகிறது. இந்த நிலையில் 110 பஸ் நிறுத்தங்களை கண்டறிந்து போக்குவரத்து போலீசார் ஆட்டோக்களை அகற்றினர். ஒவ்வொரு இடத்திலும் 6 முதல் 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

    சென்னை போக்குவரத்து போலீசுக்கு வந்த 2000 புகார்களில் 800 புகார்கள் போக்குவரத்து விதிமீறல் தொடர்பானவை. அவற்றில் கணிசமான எண்ணிக்கையில் சட்ட விரோத வாகன நிறுத்தம் சம்பந்தப்பட்டது.

    பரங்கிமலை-பூந்தமல்லி சாலை போன்ற இடங்களில் மெட்ரோ ரெயில் பணி நடைபெறுவதால் சாலை குறுகலாக உள்ளது. இந்த பகுதிகளில் ஆட்டோக்களை நிறுத்துவதால் போக்கு வரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    ஷேர் ஆட்டோக்களில் ஆட்கள் வரும் வரை நிறுத்தி விடுகின்றனர். இதனால் பஸ் டிரைவர்களுக்கும், ஆட்டோ ஓட்டுனருக்கும் இடையே தகராறு ஏற்படுகிறது. பொதுமக்கள் புகார் கூறினாலும் சண்டைக்கு வருகிறார்கள்.

    இதுகுறித்து மாநகர பஸ் டிரைவர் கூறும்போது, `பஸ் நிறுத்தங்களில் ஆட்டோவை நிறுத்துவதால் ஆட்டோ டிரைவர்களுக்கும் எங்களுக்கும் மோதல் ஏற்படுகிறது. பஸ் நிறுத்தங்களில் இருந்து 20 முதல் 30 மீட்டர் தொலைவில் நிறுத்துகிறோம் என்றனர்.

    இதுகுறித்து சென்னை போக்குவரத்து கூடுதல் ஆணையர் ஆர்.சுதாகர் கூறுகையில், பிரச்சினைக் குரிய இடங்களை கண்ட றிந்து அங்கு நிறுத்தப்படும் ஆட்டோக்களுக்கு அபராதம் விதிக்கும் நடவடிக்கை தொடங்கியுள்ளது.

    இதில் கோடம்பாக்கம், கிண்டி, அண்ணாநகர், நுங்கம் பாக்கம் ஆகிய இடங்களில் உள்ள பஸ் நிறுத்தங்களும் அடங்கும். விதிகளை மீறி னால் ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்படும் என எச்சரித்துள்ளார்.

    • பாரம்பரிய கட்டிடங்களில் ஒளி அலங்காரம் அமைக்கவும் முடிவு.
    • சுற்றுலாப் பயணிகளை கவரும் இடமாக மாற்றப்பட உள்ளது.

    சென்னை:

    சென்னை மெரினா கடற்கரைக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். இந்த நிலையில் மெரினா கடற்கரை அதிக அளவில் சுற்றுலாப் பயணிகளை கவரும் இடமாக மாற்றப்பட உள்ளது.

    இதற்காக சென்னை சாந்தோம் பேராலயத்தில் இருந்து நேப்பியர் பாலம் வரை சுமார் 4 கி.மீ தொலைவுக்கு மெரினா கடற்கரை புதுப்பொலிவு பெறுகிறது.

    சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் தற்போது மெரினா கடற்கரையையும் அதன் மேற்கு பகுதியில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க பாரம்பரிய கட்டிட ங்களையும் இணைக்கும் வகையில் காமராஜர் சாலை நடைபாதையை மேம்படுத்தும் திட்டத்தை ரூ.10 கோடி செலவில் தொடங்கியுள்ளது.

    இந்த திட்டத்தின் மூலம் சென்னை பல்கலைக்கழகம், சாந்தோம் பேராலயம், பொது பணித்துறை அலுவலக கட்டிடம், விவேகானந்தர் இல்லம், மாநில கல்லூரி உள்ளிட்ட பாரம்பரிய கட்டிடங்கள் பராமரிக்கப்பட உள்ளன.

    மேலும் மெரினா கடற்கரையில் புதுப்பொலிவான தோட்டங்கள், நீரூற்றுகள், சிற்ப தோட்டங்கள் போன்றவை அமைக்கப்படுகின்றன.

    மேலும் அகலமான நடைபாதைகள், சுற்றுலாப் பயணிகள் அமரும் பகுதிகள், தகவல் பலகைகள் அமைக்கப்பட உள்ளன.

    மேலும் மோட்டார் அல்லாத போக்குவரத்தை ஊக்குவிக்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட உள்ளன.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-

    சென்னை மெரினா கடற்கரை சாந்தோம் பேராலயத்தில் இருந்து நேப்பியர் பாலம் வரை சுமார் 4 கி.மீ தொலைவுக்கு புதுப்பொலிவுடன் மாற்றப்பட உள்ளது. மெரினா கடற்கரை பகுதியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க பாரம்பரிய கட்டிடங்களையும் பராமரித்து பாதுகாக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

    மேலும் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் பாரம்பரிய கட்டிடங்களில் ஒளி அலங்காரம் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்த சில ஆண்டுகளில் இந்த பணிகள் முடிவடைந்து மெரினா கடற்கரை புதுப்பொலிவுடன் மாற்றப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    ×