என் மலர்
உள்ளூர் செய்திகள்
- ஏற்றக்கோடு ஊராட்சி மன்ற உறுப்பினர் தெரசம்மாள் உட்பட மாற்று கட்சியினர் 20 பேர் காங்கிரஸ் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
- மண்டைக்காடு புதூர் புனித லூசியா ஆலயம் திருத்தலமாக உயர்த்தப்பட்டு முதல் திருப்பலி நடைபெற்றது.
கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
இலங்கை கைவசம் உள்ள நாட்டுப்படகுகள் மற்றும் விசைப்படகுகளை உடனடியாக மீட்டுத்தரக் கோரியும், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க கோரியும், சேதமடைந்த படகுகளுக்கு தமிழக அரசு வழங்குவதுபோல், மத்திய அரசும் தகுந்த இழப்பீடு வழங்கக் கோரியும், மீண்டும் மீண்டும் மீனவர்கள் மீன்பிடிக்கும்போது கைது செய்யப்படுவதையும், அவர்களின் படகுகளை சேதப்படுத்துவது, பறிமுதல் செய்வது போன்ற நடவடிக்கைகளை கண்டித்தும், நமது மீனவர்கள் மீதான நீதிமன்ற தண்டனையை நிறுத்தக் கோரியும், இந்திய மீனவர்களிடம் அத்துமீறும் இலங்கை கடற்படையினரை கண்டித்தும் தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் இராமேஸ்வரத்தில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டேன்.

முன்னதாக ஆரல்வாய்மொழி பகுதியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கபடி போட்டிகளை தொடங்கி வைத்தேன்.
ஏற்றக்கோடு ஊராட்சி மன்ற உறுப்பினர் தெரசம்மாள் உட்பட மாற்று கட்சியினர் 20 பேர் காங்கிரஸ் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் திருவட்டார் கிழக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ஜெபா, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ரத்தினகுமார் மற்றும் வட்டார மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மண்டைக்காடு புதூர் புனித லூசியா ஆலயம் திருத்தலமாக உயர்த்தப்பட்டு முதல் திருப்பலி நடைபெற்றது.

கோட்டார் ஆயர் நசரேன் சூசை அவர்கள் நடத்திய இந்த திருப்பலியில் நானும் கலந்து கொண்டு இறை ஆசி பெற்றேன்
- காற்றழுத்த தாழ்வு நிலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாக வாய்ப்பு.
- காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை ஒடிசா கடற்கரை அருகே கடக்க வாய்ப்பு.
வடமேற்கு மற்றும் அதை ஒட்டிய மேற்கு மத்திய வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக மாறியது.
இந்த ஆழந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தற்போது காற்றழுத்த தாழ்வு நிலையாக உருவாகியுள்ளது. இந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை, நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி ஒடிசா கடற்கரை அருகே கரையை கடக்க வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு அமையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் தமிழகம், புதுச்சேரியில் உள்ள 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்ன், தூத்துக்குடி துறை முகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
- குழந்தைகள் சாக்கடை நீரில் நடக்கும்போது நோய் பரவுகின்றது.
- சேரும் சகதியமாக உள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர்.
திருவெண்ணைநல்லூர்:
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள அரசூர் ஊராட்சியில் 7-வது வார்டு குறுக்கு தெரு, நடுத்தெரு உள்ளிட்ட தெருக்களில் கடந்த ஒரு மாத காலமாக மழை நீர் மற்றும் சாக்கடை நீர் கழிவுகள் தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசி கொசுக்கள் உற்பத்தி ஆகின்றன.
இதனால் இங்கு வசிக்கக்கூடிய ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள், பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் சேற்றில் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் குழந்தைகள் சாக்கடை நீரில் நடக்கும்போது நோய் பரவுகின்றது.
சேரும் சகதியமாக உள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர். இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், சேரும் சகதியமாக உள்ள இந்த தெருவில் நெல் நாற்றுகளை நட்டு போராட்டம் நடத்தினர். இந்த சாலையை சீரமைக்கவிட்டால் அதிகாரிகளை கண்டித்து அடுத்த கட்டமாக மீன் பிடிக்கும் போராட்டம், நீச்சல் அடிக்கும் போராட்டம் போன்ற போராட்டங்கள் நடத்தப்போவதாக தெரிவித்தனர்.
- சட்டசபை தேர்தலில் தங்களின் அரசியல் நிலைப்பாடு மாறுமா ? என்று கேள்வி.
- செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு இயக்குனர் பா.ரஞ்சித் பதில் அளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் வரும் 2026ம் ஆண்டில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில் தங்களின் அரசியல் நிலைப்பாடு மாறுமா ? என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு இயக்குனர் பா.ரஞ்சித் பதில் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது:-
பிரச்சனையின் அடிப்படையில் நாம் சில கேள்விகளை கேட்கிறோம். ஆனால், பிரச்சனைகளை தீர்த்து வைக்காத, பிரச்சனைகளை தீர்த்து வைக்க முயலாத, தீர்த்து வைப்பதற்கான காரணங்களை ஆராயததால் நாம் நிச்சயமாக நமது முடிவையும் மாற்ற வேண்டிய தேவை இருக்கும் என்று நினைக்கிறேன்.
ஆனால், இது ஒரு எச்சரிகை தான்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- உள்துறை செயலாளர் பதவியில் இருந்து சமீபத்தில் வருவாய் மற்றும் பேரிடர் செயலாளர் பொறுப்புக்கு இடமாறுதல் செய்யப்பட்டார்.
- முதல்வரின் முகவரி பிரிவின் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை:
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை செயலாளர் அமுதா ஐஏஎஸ்-க்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
உள்துறை செயலாளர் பதவியில் இருந்து சமீபத்தில் வருவாய் மற்றும் பேரிடர் செயலாளர் பொறுப்புக்கு இடமாறுதல் செய்யப்பட்ட ஐஏஎஸ் அதிகாரியான அமுதா, தற்போது முதல்வரின் முகவரி பிரிவின் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
முதல்வரின் முகவரி திட்டம், மக்களுடன் முதல்வர் மற்றும் குறை தீர்க்கும் திட்டங்களுக்கான சிறப்பு அதிகாரியாக அமுதா ஐஏஎஸ்-யை நியமித்து தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார்.
- ரெயில் பெட்டியில் பயணம் செய்த பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
- மாணவர்களின் அட்டகாசத்தால் பயணிகளுக்கும் அச்ச உணர்வு ஏற்பட்டு உள்ளது.
திருவள்ளூர்:
திருவள்ளூர் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் சென்னையில் உள்ள கல்லூரிகளில் படித்து வருகிறார்கள்.
பஸ், ரெயில்களில் பயணம் செய்யும் மாணவர்கள் இடையே 'ரூட்டுதல' பிரச்சனையால் அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது.
மேலும் பஸ், ரெயில்களில் மாணவர்கள் தொங்கியபடி பயணம் செய்து மற்ற பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர். இதனை தட்டிக் கேட்கும் பொதுமக்களிடம் மாணவர்கள் மோதலில் ஈடுபடும் சம்பவமும் அடிக்கடி நடந்து வருகின்றன. இந்த நிலையில் திருவள்ளூரில் இருந்து சென்ட்ரல் நோக்கி மின்சார ரெயில் வந்தபோது 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் இருந்து ஒரே பெட்டியில் ஏறினர்.
அவர்கள் ரெயில் புறப்பட்டதும் ரகளையில் ஈடுபட தொடங்கினர். சில மாணவர்கள் மின்சார ரெயிலின் ஜன்னலில் ஏறி நின்றபடி கூச்சலிட்டு சாகச பயணம் செய்தனர். மேலும் ரெயில் பெட்டி வாசலில் தொங்கியபடியும் சென்றனர். "பச்சையப்பா கல்லூரி மாஸ்...." என்று சத்த மிட்டபடி பயணம் செய்தனர். இதனால் அந்த ரெயில் பெட்டியில் பயணம் செய்த பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
மாணவர்களின் அட்டகாசத்தை கண்டித்த சில பயணிகளையும் மாணவர்கள் சிலர் கிண்டல் செய்து ரகளையில் ஈடுபட்டனர். இதனால் மற்ற பயணிகள் அனைவரும் என்ன செய்வது என்று தெரியாமல் அச்சத்துடனே பயணம் செய்தனர்.
இதுகுறித்து பயணிகள் கூறும்போது, "மாணவர்கள் ஆபத்தான நிலையில் ரெயில் பொட்டியின் ஜன்னலில் நின்றபடி பயணம் செய்ததை பார்க்கவே பயமாக இருந்தது. மாணவர்களின் அட்டகாசத்தால் பயணிகளுக்கும் அச்ச உணர்வு ஏற்பட்டு உள்ளது. பெரும்பாலான ரெயில் நிலையங்களில் பாதுகாப்புக்காக போலீசார் இல்லை" என்றனர்.
- கடந்த 23 மாதங்களில் 33.7 சதவீதம் மின் கட்டணத்தை உயர்த்தி இருக்கிறார்கள்.
- வெற்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டு மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்து விட்டார்கள்.
சென்னை:
தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு பா.ம.க. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை வாபஸ் பெற வலியுறுத்தி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தலைமை தாங்கினார். கவுரவ தலைவர் ஜி.கே.மணி முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தி.மு.க. தோற்று இருந்தால் நிச்சயம் மின் கட்டணத்தை உயர்த்தி இருக்க மாட்டார்கள். இது மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள அராஜகம். உயர்த்தப்பட்ட மின் கட்டண உயர்வை திரும்ப பெறும் வரை எங்கள் போராட்டம் தொடரும்.
கடந்த 23 மாதங்களில் 33.7 சதவீதம் மின் கட்டணத்தை உயர்த்தி இருக்கிறார்கள். இதன் மூலம் மின்வாரியத்துக்கு ரூ.40 ஆயிரம் கோடி வருமானம் கிடைத்துள்ளது. மின்வாரியத்துக்கு கடன் வெறும் ரூ.10 ஆயிரம் கோடி தான். ஆனால் இன்னும் மின் வாரியம் நஷ்டத்தில் இயங்குவதாக பொய் கூறுகிறார்கள்.
இதற்கு காரணம் நிர்வாக திறமை இல்லாத அரசு ஆட்சியில் உள்ளது. மக்கள் இனியும் வேடிக்கை பார்க்க கூடாது. வீதிக்கு வந்து போராடுங்கள். மின்துறை மட்டுமல்ல அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்து விட்டது. மாதம் தோறும் மின் கணக்கெடுக்கப்படும் என்றார்கள். அது என்னாச்சு? வெற்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டு மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்து விட்டார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் வக்கீல் பானு, சிவக்குமார் எம்.எல்.ஏ., ஈகை தயாளன், ரா.செ. வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
- சீர்காழி-வடரங்கம் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே நிம்மேலி கிராமத்தில் இரவில் மது போதையில் கடை மற்றும் கடைகளின் வாசல் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விற்பனை ஸ்டால்கள், தெரு மின்விளக்குக்குகள் ஆகியவற்றை சேதப்படுத்தியதோடு வீடுகள் மீது கற்களையும் தூக்கி எறிந்து மர்ம நபர்கள் அட்டகாசம் செய்துள்ளனர். மேலும் சிமெண்ட் கடை ஒன்றின் பெயர் பலகையை கிழித்து வெளியில் வைக்கப்பட்டிருந்த ஸ்டாலை அடித்து சேதப்படுத்தி உள்ளனர்.
இந்த நிலையில் தொடர்ச்சியாக இது போன்ற குற்ற சம்பவங்கள் நடைபெறுவதாக கூறி ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் இன்று திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து அங்கு வந்த சீர்காழி போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்களிடம் தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வரும் நபர்களை குறிப்பிட்டு அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.
உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று போலீசார் தெரிவித்ததின் அடிப்படையில் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் சீர்காழி-வடரங்கம் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் மிக கன முதல் அதி கனமழையும், கோயம்புத்தூர் மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் நாளை ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
வரும் 21 முதல் 25 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் இன்றும் நாளையும் 30-40 கி.மீ. வேகத்தில் தரைக்காற்று வீசும்.
தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை காரைக்காலிலும் 25-ந்தேதி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு
தென் தமிழக கடலோரம், குமரிக்கடல், வங்கக்கடலில் 23-ந்தேதி வரை அதிகபட்சமாக 65 கி.மீ. வரை காற்று வீசும். காற்று வீசும் பகுதிகளில் 23-ந்தேதி வரை மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- கடந்த 10-ந் தேதி முதல் ஆலோசனை நடத்தி வருகிறாா்.
- 2026 சட்டசபை தேர்தலில் வெற்றிபெற கடுமையாக உழைக்க வேண்டும்.
சென்னை:
பாராளுமன்ற தோ்தல் தோல்வி தொடா்பாக தொகுதி வாரியாக எடப்பாடி பழனிசாமி, நிா்வாகிகளுடன் கடந்த 10-ந் தேதி முதல் ஆலோசனை நடத்தி வருகிறாா்.
முதல் நாள் காஞ்சீபுரம், ஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. நிர்வாகிகளை வரவழைத்து கருத்துக்களை கேட்டறிந்தார்.
11-ந்தேதி சிவகங்கை, வேலூர், திருவண்ணாமலை தொகுதி நிர்வாகிகளுடனும், 12-ந்தேதி அரக்கோணம், தஞ்சாவூர், திருச்சி நிர்வாகிகளுடனும், 13-ந்தேதி சிதம்பரம், மதுரை, பெரம்பலூர் நிர்வாகிகளுடனும், 1-ந்தேதி நாகை, மயிலாடு துறை, கிருஷ்ணகிரி தொகுதி நிர்வாகிகளுடனும், 16-ந் தேதி ராமநாதபுரம், நெல்லை, விருதுநகர் தொகுதிகளை சேர்ந்த அ.தி.மு.க.வினரிடம் எடப்பாடி பழனிசாமி ஆலோசித்தார்.
இதையடுத்து நேற்று 7-வது நாளாக சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. அலுவலகத்தில் பொள்ளாச்சி, நீலகிரி, கோவை தொகுதிகளின் நிா்வாகிகளுடன் அவா் ஆலோசனை நடத்தினாா்.
அப்போது அ.தி.மு.க.வினர் ஒவ்வொருவரும் 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் வெற்றிபெற கடுமையாக உழைக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
நீலகிரி தொகுதியின் நிா்வாகிகள், பாராளுமன்றத் தோ்தலில் வலுவான தொகுதி கூட்டணி அமைக்காததால் தான் தோல்வி அடைந்ததாக கூறியுள்ளனா். அதற்கு, வரும் சட்டப்பேரவை தோ்தலில் வலுவான கூட்டணி அமையும்.
அதேநேரம், கூட்டணியை நம்பியும் நாம் இருக்கக் கூடாது. மக்களின் நம்பிக்கையை பெறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் அ.தி.மு.க.வினா் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளாா்.
கோவை தொகுதி நிா்வாகிகள் பாராளுமன்றத் தோ்தலில் 3-ம் இடத்துக்கு வந்தது குறித்து பல்வேறு விளக்கங்களை அளித்துள்ளனா். அதை ஏற்காத எடப்பாடி பழனிசாமி, கோவை அ.தி.மு.க.வின் கோட்டை என்பதை சட்டப்பேரவைத் தோ்தலில் மீண்டும் நிரூபிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளாா்.
கடைசி நாளான இன்று காலையில் விழுப்புரம், கன்னியாகுமரி ஆகிய தொகுதிகளின் நிா்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். தர்மபுரி தொகுதி கூட்டம் பிற்பகலில் நடைபெறுகிறது. இன்றுடன் எடப்பாடி பழனி சாமியின் முதல் கட்ட ஆய்வு நிறைவு பெற்றது.
இதுவரை அவர் 23 பாராளுமன்ற தொகுதி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி முடித்துள்ளார். இதர 16 தொகுதிகளின் நிா்வாகிகளுடன் நடைபெறும் ஆலோசனைக் கூட்டம் தொடா்பாக இன்னும் அறிவிக்கப்படவில்லை. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விழுப்புரம் தொகுதி நிர்வாகிகள் மத்தியில் பேசிய எடப்பாடி பழனிசாமி, வருகிற சட்டசபை தேர்தலில் தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்து செயல்படுங்கள். அப்போதுதான் வெற்றிபெற முடியும். கூட்டணியை பற்றி கவலைப்படாதீர்கள். அதனை நான் பார்த்துக் கொள்கிறேன்.
விழுப்புரம் தொகுதியில் கட்சியினர் இன்னும் வேகமாக செயல்பட்டிருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம். எந்த பிரச்சனையாக இருந்தாலும் தலைமையின் கவனத்துக்கு நிர்வாகிகள் உடனே தெரியப்படுத்த வேண்டும்.
தகவல் தொழில் நுட்ப பிரிவினர் இப்போது செயல்படுவதை விட மேலும் சிறப்புடன் பணியாற்ற வேண்டும் என்று கூறியுள்ளார்.
- 800 கிலோவுக்கும் அதிகமான விபூதி விற்பனை செய்யப்பட்டுள்ளது.
- ஆர்டருக்கு ஏற்ப விபூதி சப்ளை செய்யப்படுகிறது.
திருச்சி:
கோவில்களில் பக்தர்களுக்கு விபூதி பிரசாதமாக வழங்கப்படுகிறது. குறிப்பாக சிவன் மற்றும் முருகன், அம்மன் கோவிலில் விபூதி முக்கிய பிரசாதமாக வழங்கப்படுகிறது. திருச்சி திருவானைக் கோயிலில் உள்ள பிரசித்தி பெற்ற ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் 2022-ம் ஆண்டு மே மாதம் விபூதி தயாரிக்கும் பணி தொடங்கப்பட்டது.
அதற்காக கோவில் வளாகத்தில் தற்காலிக கொட்டகை அமைக்கப்பட்டுள்ளது. காவிரிக்கும் கொள்ளிடம் ஆற்றுக்கும் நடுவில் அமைந்துள்ள இந்த கோவில் இயற்கையான நீரைக் குறிக்கும் பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றாக உள்ளது.
இங்குள்ள கோசாலையில் இருந்து சேகரிக்கப்படும் பசுவின் சாணம் கோவிலுக்குள் உள்ள நாச்சியார்தோப்பில் பல்வேறு உருண்டை வடிவங்களில் உலர்த்தப்பட்டு பின்னர் விபூதி தயாரிக்கப்படுகிறது. இந்த கோவிலில் பக்தர்கள் வழங்கிய 48 பசுக்கள் மற்றும் கன்றுகள் கோசாலையின் மூலமாக பராமரிக்கப்படுகிறது.

இங்கு உற்பத்தி செய்யப்படும் விபூதிக்கு பக்தர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இங்கு தயாராகும் விபூதி திருச்சி மட்டுமல்லாமல் பல்வேறு சிவன் கோவில்களுக்கு சப்ளை செய்யப்படுகிறது. மேலும்
திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்கள் தவிர கடலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சில கோவில்களுக்கும் கூட கடந்த 2 ஆண்டுகளில் தேவையைப் பொறுத்து 800 கிலோவுக்கும் அதிகமான விபூதி விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து கோவில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் கூறும் போது, இங்கு கோவில் பணியாளர்கள் மாட்டு சாணத்தை பயன்படுத்தி, வேறு பொருட்கள் மற்றும் ரசாயனம் கலக்காமல், விபூதி தயாரிக்கிறார்கள் திருச்சி மற்றும் பிற மாவட்டங்களில் உள்ள குறைந்தது 20 கோவில்களுக்கு ஜூலை 2022 முதல் ஜூன் 2024 வரை 880 கிலோ விபூதி சப்ளை செய்யப்பட்டுள்ளது.
கும்பகோணம் அருகே உள்ள சுவாமிமலை சுவாமி நாதசுவாமி கோயில், கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரம், ஆலங்குடி முல்லை வனநாத சுவாமி கோயில், திருக்கருகாவூர் கோவில் உள்ளிட்ட கோயில்களுக்கு விபூதி வழங்கப்பட்டுள்ளது.
திருச்சி அருகே வயலூர் முருகன் கோவில், கடலூர் விருத்தாசலம், வடலூர் சத்திய ஞான சபை ஆகிய கோவில்களுக்கு ஆர்டருக்கு ஏற்ப விபூதி சப்ளை செய்யப்படுகிறது.
இந்த விபூதி ஒரு கிலோவுக்கு ரூ. 200 விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தற்போது சுமார் 120 கிலோ விபூதி கையிருப்பில் உள்ளது. இங்கு கோசாலையில் பராமரிக்கப்படும் பசுக்களுக்கு கிட்டத்தட்ட 20 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள கோவிலில் பயிரிடப்படும் பசுந்தீவனம் அளிக்கப்படுகிறது என்றார்.
தமிழகத்தில் பழனி, திருச்செந்தூர்கோவில் மற்றும் திருவண்ணாமலை கோவில்களில் விபூதி தயாரிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவ, மாணவியர்களை பாராட்டி வாழ்த்து தெரிவித்து, மடிக் கணினிகளை வழங்கினார்.
- நிகழ்ச்சியில் அமைச்சர்கள் எஸ்.ரகுபதி, அன்பில் மகேஸ் பொய்யாமொழி மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
சென்னை:
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், பள்ளிக்கல்வித் துறை சார்பில், 264 கோடியே 15 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 956 புதிய வகுப்பறைக் கட்டிடங்கள், 12 ஆய்வகக் கட்டிடங்கள், தகைசால் பள்ளிகளில் புனரமைக்கப்பட்ட பள்ளிக் கட்டிடங்கள் மற்றும் திருவண்ணாமலையில் முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்துடன் கூடிய ஒருங்கிணைந்த கல்வி வளாகம் ஆகியவற்றை திறந்து வைத்தார்.
அதில் பள்ளிக்கல்வித் துறையில் 114 கோடியே 29 லட்சம் ரூபாய் செலவில் 26 மாவட்டங்களில் உள்ள 106 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் கட்டப்பட்டுள்ள 515 வகுப்பறை கட்டிடங்கள் மற்றும் 12 ஆய்வகக் கட்டிடங்கள்;
தொடக்கக்கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்பட்டு வரும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஊரக வளர்ச்சித்துறை மூலம் குழந்தை நேய வகுப்பறை கட்டும் திட்டத்தின் கீழ், 68 கோடியே 66 லட்சம் ரூபாய் செலவில் 25 மாவட்டங்களில் உள்ள 176 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி களில் கட்டப்பட்டுள்ள 441 வகுப்பறை கட்டிடங்கள்;

தமிழ்நாட்டின் 28 மாவட்டங்களில் இயங்கி வரும் 28 தகைசால் பள்ளிகளில் 61 கோடியே 70 லட்சம் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்ட பள்ளிக் கட்டிடங்கள் ஆகியவை அடங்கும்.
நிகழ்ச்சியில், அமைச்சர்கள் எஸ்.ரகுபதி, அன்பில் மகேஸ் பொய்யாமொழி மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
ஜே.இ.இ. நுழைவுத் தேர்வுகளில் வெற்றி பெற்று, சென்னை, ஐ.ஐ.டியில் பயில தேர்ச்சி பெற்றுள்ள விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம், ஆதிதிராவிடர் நல மேல் நிலைப் பள்ளி மாணவர் சி. பார்த்தசாரதி, திருச்சி என்.ஐ.டியில் பயில தேர்ச்சி பெற்றுள்ள சேலம் மாவட்டம், கரியகோவில் வலவு, அரசு பள்ளி மாணவி சுகன்யா, திருச்சி சின்ன இலுப்பூர், அரசு உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளி மாணவி ரோகிணி, சட்ட பல்கலைக் கழகத்தில் பயில தேர்ச்சி பெற்றுள்ள மாணவர் அஜய், தரமணி பேஷன் டெக்னாலஜியில் பயில தேர்ச்சி பெற்றுள்ள புளியம்பட்டி மாணவியர் மீனா மற்றும் எஸ். துர்கா, மணியார்பாளையம், அரசு உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளி மாணவி பழனியம்மாள் மற்றும் மாணவர் கே. தவமணி, ஆகிய 8 மாணவ, மாணவியர்களை ஊக்கப்படுத்தும் விதமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவ, மாணவியர்களை பாராட்டி வாழ்த்து தெரிவித்து, மடிக் கணினிகளை வழங்கினார்.

சிறைகள் மற்றும் சீர் திருத்தப் பணிகள் துறையின் சார்பில் 9 கோடியே 45 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் செலவில் திண்டிவனத்தில் கட்டப்பட்டுள்ள கிளைச் சிறைக் கட்டடம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட சிறைச்சாலையில் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டிடங்கள் ஆகியவற்றையும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.






