என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்தது- இந்திய வானிலை ஆய்வு மையம்
- மத்திய மற்றும் அதையொட்டிய வடக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காலையில் உருவானது.
- தமிழகத்தில் இன்று ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது.
சென்னை:
தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் பரவலாக பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சிமலை மாவட்டங்களில் தற்போது கனமழை பெய்கிறது.
திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இன்று முதல் 24-ந்தேதி வரை இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் மத்திய மற்றும் அதையொட்டிய வடக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காலையில் உருவானது. இது வடமேற்கு மற்றும் அதை ஒட்டிய மேற்கு மத்திய வங்காள விரிகுடா ஒடிசா மற்றும் அதையொட்டிய வடக்கு ஆந்திரா கடற்கரையில் நிலவி வருகிறது.
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று இரவுக்குள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும். அதன்பிறகு அது தொடர்ந்து வடமேற்கு நோக்கி நகர்ந்து நாளை ஒடிசா கடற்கரையை கடக்க வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தில் இன்று ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது.
நீலகிரியில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் ஆரஞ்சு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் லேசான மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.






