என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • தனியார் விடுதிகளில் கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துகள் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
    • ரோந்து பணி நடைபெறும் என போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தெரிவித்தார்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த சில தினங்களாக போதைப்பொருட்கள் பயன்பாடு அதிகரித்து காணப்படுகிறது. இதனையடுத்து போலீசார் மலைப்பகுதியில் தொடர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் முக்கிய சுற்றுலா தலமான வட்டக்கானல் பகுதியில் போதை வஸ்து பயன்பாடு அதிகரித்து வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் கோட்டாட்சியர் சிவராம், நகராட்சி ஆணையாளர் சத்தியநாதன், சுற்றுலாத்துறை, போலீசார் இணைந்து இப்பகுதியில் உள்ள தனியார் விடுதிகள் முறையாக செயல்படுகிறதா, போதை வஸ்துகள் பயன்படுத்தப்படுகிறதா என அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது பாலா என்பவரின் 2 தங்கும் விடுதியிலும், மேற்பார்வையாளராக பணிபுரியும் கோவிந்தராஜ் என்பவரின் உட்ஹவுஸ் தங்கும் விடுதியிலும் சுற்றுலாப்பயணிகள் கஞ்சா பயன்படுத்தியது தெரியவந்தது. மேலும் மது பாட்டில்கள் அளவிற்கு அதிகமாக வைத்து இருந்தனர். இதுதொடர்பாக சென்னை, பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சுற்றுலாப்பயணிகளையும், தனியார் தங்கும் விடுதி உரிமையாளர் மற்றும் உட்ஹவுஸ் மேற்பார்வையாளர் உள்பட 24 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் 3 தங்கும் விடுதிக்கும் சீல் வைக்கப்பட்டது. அவர்களிடமிருந்து 150 கிராம் கஞ்சா மற்றும் அளவிற்கு அதிகமான மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தனியார் விடுதிகளில் கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துகள் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோட்டாட்சியர் எச்சரிக்கை விடுத்தார். சுற்றுலாப்பயணிகளுக்கு கஞ்சா எப்படி கிடைத்தது. யார் இவர்களுக்கு விற்பனை செய்தனர் என்பது குறித்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சோதனையால் வட்டக்கானல் பகுதியில் பரபரப்பு நிலவியது. கொடைக்கானலில் நகர் மற்றும் மலை கிராம பகுதிகளில் தொடர்ந்து தீவிர ரோந்து பணி நடைபெறும் என போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தெரிவித்தார்.

    • அரசியல் கட்சி தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
    • சாதி வளையம் வைத்து சாதி கொலையாக மாற்ற துடிப்பது சமூக ஆரோக்கியம் இல்லை.

    சென்னை:

    பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ந் தேதி சென்னை பெரம்பூரில் படுகொலை செய்யப்பட்டார். கொலை சம்பவத்துக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு நீதி வேண்டி இயக்குனர் பா.ரஞ்சித் தலைமையில் சென்னையில் நேற்று மாலை மாபெரும் பேரணி நடந்தது. இந்நிலையில் பிரபல சினிமா இயக்குனர் பேரரசு விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஒருவர் கொலை செய்யப்பட்டால் ஏன் கொலை செய்யப்பட்டார்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? கொலையின் பின்னணி என்ன? என்பதை ஆராய்வதை விட, அதை அரசியல் கொலையாகவும், சாதி கொலையாகவும் மாற்றிவிடவே பலர் துடிக்கின்றனர். அனுதாபம் காட்டுவதை விட சுயலாபம் காணவே பலர் துடிக்கின்றனர்.

    ஒரு கட்சி இன்னொரு கட்சிமீது பழி சுமத்துவது, இறந்தவர் மீது சாதி வளையம் வைத்து சாதி கொலையாக மாற்ற துடிப்பது இதெல்லாம் சமூக ஆரோக்கியம் இல்லை.

    சட்ட ஒழுங்கு பின்னடைவு என்பது வேறு. கொலைக்கு ஆளும் கட்சி காரணம் என்பது வேறு. கொலைக்கு நியாயம் கேட்பது வேறு! கொலையில் சுயலாபம் பார்ப்பது வேறு! கொலை செய்யப்பட்டவர் யார்? கொலை செய்தவர்கள் யார்? கொலைக்கான உண்மையான காரணம் என்ன? இந்த விடையை நோக்கித்தான் அனைவரும் நகர வேண்டும்.

    சிலரின் யூகங்கள் சமூகத்தில் தேவையில்லாத சலசலப்பை உருவாக்கும். எல்லாவற்றுக்கும் சாதியை முன்னிறுத்துவது

    நாட்டை நூறு வருடங்களுக்கு பின்னோக்கி இழுத்து விடும்!

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தங்கள் பயணம் தொடர்ந்து வெற்றியோடும் தாக்கம் செலுத்தும் பங்களிப்புகளுடனும் திகழட்டும்!
    • தங்களது வளமார்ந்த அனுபவமும், மதிநுட்பம் கொண்ட தலைமையும் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சியிலும் வெற்றியிலும் பெரும் பங்காற்றியுள்ளது.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூகவலை தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:-

    இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

    தங்களது வளமார்ந்த அனுபவமும், மதிநுட்பம் கொண்ட தலைமையும் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சியிலும் வெற்றியிலும் பெரும் பங்காற்றியுள்ளது.

    சமூகநீதியின் மீது தாங்கள் கொண்டுள்ள அர்ப்பணிப்பும், ஒடுக்கப்பட்டோரை உயர்த்துவதற்கான தங்களது முயற்சிகளும் எங்கள் அனைவருக்கும் ஊக்கமாக அமைந்துள்ளது. தங்கள் பயணம் தொடர்ந்து வெற்றியோடும் தாக்கம் செலுத்தும் பங்களிப்புகளுடனும் திகழட்டும்!

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • கூவம் ஆற்றில் வீசப்பட்ட மற்ற செல்போன்களையும் மீட்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.
    • தீயணைப்புத் துறையினர் மற்றும் ஸ்கூபா குழுவினரும் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    திருவள்ளூர்:

    பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். கைதான ரவுடி திருவேங்கடம் போலீசாரின் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

    இந்த கொலை தொடர்பாக குற்றவாளிகளுக்கு உதவியதாக கடம்பத்தூர் ஒன்றிய அ.தி.மு.க.கவுன்சிலர் ஹரிதரன் என்பவரை நேற்று போலீசார் கைது செய்தனர்.

    ஆம்ஸ்ட்ராங் கொலையில் ஏற்கனவே சிக்கிய வக்கீல்களான ஹரிகரன், அருள் ஆகிய 2 பேருக்கும் ஹரிதரன் நண்பர்களாக இருந்து உள்ளார். அவர்கள் கூறியபடி கொலைகுற்றவாளிகள் பயன்படுத்திய 6 செல்போன்களை ஹரிதரன் வெங்கத்தூர் பகுதியில் உள்ள கூவம் ஆற்றில் வீசியது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து நேற்று முதல் கூவம் ஆற்றில் தீயணைப்பு வீரர்களுடன், தண்ணீரில் மூழ்கி தேடும் ஸ்கூபா குழுவினரும் இணைந்து தேடினர். இதில் 3 செல்போன்கள் மட்டும் மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

    இதைத்தொடர்ந்து கூவம் ஆற்றில் வீசப்பட்ட மற்ற செல்போன்களையும் மீட்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர். இன்று காலை முதல் 2-வது நாளாக மெரினா மீட்பு குழுவினர், திருவூர் தீயணைப்புத் துறையினர் மற்றும் ஸ்கூபா குழுவினரும் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள். காலை 6.30 மணிமுதல் சுமார் 20-க்கும் மேற்பட்டோர் இதில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.

    • ஆற்காடு சுரேசின் கொலைக்கு பழி தீர்த்த அவரது தம்பி பொன்னை பாலு ஏற்கனவே ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய ஓராண்டாக திட்டம் தீட்டி வந்துள்ளார்.
    • அ.தி.மு.க.வை சேர்ந்த வக்கீல் மலர்க்கொடியும் தனது கணவர் தோட்டம் சேகர் கொலையுண்டதற்கு ஆம்ஸ்ட்ராங்கும் ஒரு காரணம் என்று எண்ணி இருந்ததாக தெரிகிறது.

    சென்னை:

    பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ந் தேதி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதுதொடர்பாக செம்பியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கடந்த ஆண்டு பட்டினப்பாக்கத்தில் வைத்து கொலை செய்யப்பட்ட பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷ் கொலை சம்பவத்துக்கு பழிக்குப்பழி வாங்கும் வகையிலேயே ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்த போலீசார் அது தொடர்பாக ஆற்காடு சுரேசின் தம்பி பொன்னை பாலு, குன்றத்தூர் திருவேங்கடம் உள்பட 11 பேரை கைது செய்தனர்.

    இவர்களில் திருவேங்கடம் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டு விட்ட நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விசாரணை சூடு பிடித்து ஜெட் வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. ரவுடிகள் பலர் பெரிய அளவில் சதி திட்டம் தீட்டி ஆம்ஸ்ட்ராங்கை தீர்த்துக் கட்டியிருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

    இந்த கொலை வழக்கில் அரசியல் பிரமுகர்கள் பலருக்கு தொடர்பு இருப் பது போலீஸ் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அ.தி.மு.க. பிரமுகர்களான மலர்க்கொடி, ஹரிஹரன், தி.மு.க. பிரமுகரான அருள், த.மா.கா.வை சேர்ந்த ஹரிஹரன், பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த அஞ்சலை ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    ஆம்ஸ்ட்ராங் கொலையாளிகளுக்கு இவர்கள் பல்வேறு வழிகளில் உதவிகளை செய்திருப்பது தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் புதிய திருப்பமாக தே.மு.தி.க. நிர்வாகி ஒருவரிடம் போலீசார் அதிரடி விசாரணையை தொடங்கி உள்ளனர்.

    திருவள்ளூரை சேர்ந்த அவர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அ.தி.மு.க. கவுன்சிலரான ஹரிஹரனுக்கு நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது.

    அந்த அடிப்படையிலேயே தே.மு.தி.க. நிர்வாகியிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த விசாரணை முடிவில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அவருக்கும் தொடர்பு இருந்தால் அவரை கைது செய்யவும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    தே.மு.தி.க. நிர்வாகியுடன் ஜல்லிமேடு பகுதியை சேர்ந்த ஒருவர் உள்பட 4 பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 16 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் 5 பேர் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளனர். இவர்களில் வக்கீல் ஒருவரும் உள்ளார். இவர்களை தவிர, மேலும் பலரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.

    ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான பெண் தாதா அஞ்சலையிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ரவுடிக் கும்பலை சேர்ந்தவர்கள் கூட்டாக சதி செய்து ஆம்ஸ்ட்ராங்கை கொன்றிருப்பது அம்பலமாகி உள்ளது.

    ரவுடி ஆற்காடு சுரேசின் கொலைக்கு பழி தீர்த்த அவரது தம்பி பொன்னை பாலு ஏற்கனவே ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய ஓராண்டாக திட்டம் தீட்டி வந்துள்ளார்.

    அதே நேரத்தில் அ.தி.மு.க.வை சேர்ந்த வக்கீல் மலர்க்கொடியும் தனது கணவர் தோட்டம் சேகர் கொலையுண்டதற்கு ஆம்ஸ்ட்ராங்கும் ஒரு காரணம் என்று எண்ணி இருந்ததாக தெரிகிறது.

    இதற்கிடையே வேலூர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள ஆயுள் கைதியான வடசென்னை தாதாவும் ஆம்ஸ்ட்ராங் மீது கண் வைத்திருந்துள்ளார். இப்படி 3 ரவுடிக் கும்பலை சேர்ந்தவர்கள் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய திரைமறைவில் திட்டம் தீட்டி வந்த நிலையில் ஆற்காடு சுரேசின் கொலையால் நிலை குலைந்து போயிருந்த பெண் தாதா அஞ்சலையும் அவர்களோடு கை கோர்த்து செயல்பட்டிருப்பதாகவும் பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இப்படித்தான் ஆம்ஸ்ட்ராங் நாலா புறமும் உள்ள ரவுடிகளால் சுற்றி வளைக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருக்கிறார் என்பது காவல் துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

    இதையடுத்து போலீசார் அதிரடியாக விசாரணை நடத்தி ஆம்ஸ்ட்ராங் கொலையின் பின்னணியில் உள்ள அனைவரையும் கைது செய்ய தீவிர வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இதனால் போலீஸ் விசாரணை விரிவடைந்து கொண்டே செல்கிறது. இதன் காரணமாக ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் பல அரசியல் பிரமுகர்களும், ரவுடிக் கும்பலை சேர்ந்தவர்களும் அடுத்தடுத்து கைது செய்யப்பட உள்ளனர். இதுபற்றி போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும் போது, ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. யாரும் தப்ப முடியாது என்று தெரிவித்தார்.

    • கஞ்சாவை தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சப்ளை செய்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
    • சில்லரை வியாபாரிகளையும் போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

    திண்டிவனம்:

    திண்டிவனம் அருகே காரில் கடத்த முயன்ற 232 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து கேரளாவை சேர்ந்த இருவரை கைது செய்தனர்.

    கேரளாவில் இருந்து கஞ்சா கடத்திக்கொண்டு ஒரு கும்பல் விழுப்புரம் மாவட்டத்திற்கு வருவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

    இந்த நிலையில் திண்டிவனம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்பாண்டியன் தலைமையில் குற்றப்பிரிவு போலீசார் பாதிரி கிராமத்தில் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அவ்வழியே வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் மூட்டை, மூட்டையாக கஞ்சா இருந்தது.

    இதனை கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார், 2 கிலோ, 5 கிலோ பாக்கெட்டுகளாக இருந்த 232 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர், தொடர்ந்து சரக்கு வாகனத்தில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.

    இதில் கேரளா மாநிலம், காசர்கோடு பகுதியை சேர்ந்த தாமோதரன் மகன் உதயகுமார் (வயது 44), சலாம் மகன் ஆசிப் (25) என தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார், கஞ்சா கடத்தலுக்கு பயன்படுத்திய காரை பறிமுதல் செய்தனர்.

    மேலும், இதுதொடர்பாக ஒலக்கூர் போலீசார் வழக்கு பதிந்து, இவர்கள் இருவரும் யாரிடம் இருந்து கஞ்சா வாங்கி வந்தனர். இதனை எங்கெங்கு வழங்குகின்றனர் என்பது குறித்து விசாரணை நடத்தினர்.

    இதில் கேரளாவில் இருந்து கஞ்சாவை எடுத்துக்கொண்டு சென்னை, செங்கல்பட்டு, திண்டிவனம் போன்ற பல்வேறு பகுதிகளுக்கு, தொடர்ந்து இவர்கள் கஞ்சா சப்ளை செய்து வந்தது தெரியவந்தது. மேலும், சில்லறை வியாபாரிகளுக்கு 2 கிலோ, 3 கிலோ, 5 கிலோ விதம் பிரித்து கொடுத்து கஞ்சாவை தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சப்ளை செய்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    மேலும் இவர்கள் பல நாட்களாக இந்த தொழிலை செய்து வருவதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக 30-க்கும் மேற்பட்டோர் சிக்குவார்கள் என போலீசார் தெரிவித்தனர். இதில் தொடர்புடைய சில்லரை வியாபாரிகளையும் போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

    • போக்குவரத்து சாலைகளில் மரங்கள் விழுந்தும், மண்சரிவு ஏற்பட்டும் வருகிறது.
    • மலைப்பாதை பகுதியில் செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி செல்கின்றன.

    அருவங்காடு:

    நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. கடந்த ஒருவாரமாக ஊட்டி, கூடலூர், பந்தலூர், குந்தா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.

    இதனால் அங்குள்ள போக்குவரத்து சாலைகளில் மரங்கள் விழுந்தும், மண்சரிவு ஏற்பட்டும் வருகிறது. மேலும் ஆற்றில் வெள்ள நீர் ஆர்ப்பரித்து செல்கிறது.

    குன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் சூறாவளி காற்றுடன் சாரல் மழை பெய்வதால் அங்கு கடுங்குளிர் நிலவுகிறது. இதனால் அங்கு வசிக்கும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளது.

    இதற்கிடையே குன்னூர் அடுத்த உபதலை-பழத்தோட்டம் சாலையில் நேற்று ராட்சத மரம் மின்கம்பி மீது விழுந்ததால் அந்த வழித்தடத்தில் உடனடியாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

    தகவலறிந்த மின்வாரிய ஊழியர்கள் மற்றும் தீயணைப்புத்துறை ஊழியர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து அந்த பகுதியில் மின்சாரத்தை துண்டித்து மின்வாளால் சாலையில் கிடந்த மரத்தை வெட்டி அகற்றினர். இதனால் அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் மின்இணைப்பு துண்டிக்கப்பட்டதுடன் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

    கூடலூர், பந்தலூர் ஆகிய பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக அங்குள்ள குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் புகுந்தது. மேலும் அங்குள்ள பெரும்பாலான விளைநிலங்களில் மழைநீர் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

    ஊட்டி-கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை மழையின் தாக்கம் சற்று குறைந்து மேகமூட்டம், பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் மலைப்பாதை பகுதியில் செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி செல்கின்றன.

    • நிதி ஆயோக் அமைப்பு 4-வது ஆய்வு அறிக்கையை அண்மையில் வெளியிட்டது.
    • தமிழ்நாடு இந்தியாவிலேயே முதல் மாநிலமாகத் தலைசிறந்து விளங்குகிறது.

    சென்னை:

    2023-24-ம் ஆண்டிற்கான ஒன்றிய அரசின் நிதி ஆயோக் அமைப்பு நீடித்த நிலையான வளர்ச்சிக் குறியீடுகள் பற்றிய 4-வது ஆய்வு அறிக்கையை அண்மையில் வெளியிட்டுள்ளது.

    நிதி ஆயோக் நிறுவனத்தின் 2018, 2019 மற்றும் 2020 ஆகிய மூன்றாண்டுகளின் அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ள வளர்ச்சிக் குறியீடுகளை எல்லாம்விட, இந்த 2023-24-ம் ஆண்டிற்கான அறிக்கை திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாடு மாபெரும் வளர்ச்சி கண்டுள்ளது என்பதைப் பறைசாற்றியுள்ளது.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திராவிட மாடல் ஆட்சி தொலைநோக்குச் சிந்தனைகளுடன் செயல்படுத்தி வரும் சீரிய திட்டங்களால் வறுமை ஒழிப்பில் தமிழ்நாடு இன்று இந்தியாவிலேயே முதல் இடம் பெற்றுச் சிறந்த மாநிலமாகத் திகழ்கிறது.

    காலநிலை மாற்றம்-சுற்றுச்சூழல் பராமரிப்பு, குறைந்த செலவில் மாசிலா எரிசக்தி இரண்டிலும் தேசிய அளவில் தமிழ்நாடு முதல் மாநிலமாக உயர்ந்துள்ளது. மேலும்,

    * பொருளாதாரம் மற்றும் சிறந்த வேலைவாய்ப்பு,

    * மக்கள் நலம் மற்றும் சுகாதார வாழ்வு,

    * தொழில் வளர்ச்சி-புத்தாக்கத் தொழில் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள்,

    * தூய்மையான குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றுதல்,

    * அமைதியைக் காத்தல், நீதி நிர்வாகம், வலுவான நிறுவனங்கள்

    * பாலின சமத்துவம், ஆகிய இனங்களில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக உயர்ந்து சிறந்துள்ளது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டங்களான, மகளிர்க்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், அரசுப் பள்ளிகளில் படித்து உயர் கல்வி தொடரும் மாணவிகளுக்கு மாதம் 1,000 வழங்கும் புதுமைப் பெண் திட்டம், மகளிர்க்குக் கட்டணமில்லாப் பேருந்து விடியல் பயணத் திட்டம், பள்ளிகளில் காலை உணவுத் திட்டம், சமத்துவத்தை நிலைநாட்டும் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம், படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளுக்கேற்ற திறன்களை வழங்கும் நான் முதல்வன் திட்டம் முதலான சமூகநீதித் திட்டங்கள் உட்பட பல்வேறு திட்டங்களால் குடும்பப் பொருளாதாரம் உயர்ந்து வறுமை ஒழிப்பில் கடந்த காலங்களைவிட மாபெரும் வளர்ச்சி கண்டு இந்தியாவிலேயே வறுமையை ஒழிப்பதில் தமிழ்நாடு தலைசிறந்த முதன்மை மாநிலமாக விளங்குகிறது என்பதை இந்த நிதி ஆயோக் அறிக்கை நிரூபித்துள்ளது.

    அதாவது, வறுமை ஒழிப்புத் திட்டத்தில் தமிழ்நாடு இந்தியாவிலேயே முதல் மாநிலமாகத் தலைசிறந்து விளங்குகிறது என்பது உட்பட

    11 இனங்களில் தமிழ்நாடு நீடித்த நிலையான வளர்ச்சிக் குறியீடுகளில் தேசிய சராசரியைவிட அதிகமாக வளர்ச்சி பெற்று முன்னணி மாநிலமாகவும், இரண்டு இனங்களில் தேசிய சராசரிக்கு இணையாகவும் வளர்ச்சி பெற்று 13 இனங்களில் மிகவும் சிறந்துள்ளது தமிழ்நாடு.

    இவையெல்லாம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திராவிட மாடல் ஆட்சியின் தொலைநோக்குச் சிந்தனைகளுடன் கூடிய சிறந்த சீரிய திட்டங்களால் தமிழ்நாடு பெற்றுள்ள வளர்ச்சிக்கான சான்றுகளாகும் என்று பலரும் பாராட்டுகின்றனர்.

    • ஒரு வருடத்துக்கு பிறகு இந்த கொலை-கொள்ளை வழக்கில் தொடர்புடைய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னிமலை:

    ஈரோடு மாவட்டம் சென்னிமலையை அடுத்த ஒட்டன்குட்டை பகுதியில் கரியாங்காட்டு தோட்டத்தில் வசித்தவர் முத்துசாமி (85). விவசாயி. இவரது மனைவி சாமியாத்தாள் (74). இவ்வூரின் அருகில் தோட்டத்து வீட்டில் விவசாயி முத்துசாமியும், அவரது மனைவி சாமியாத்தாளும் தனியே வசித்து வந்தனர்.

    இந்நிலையில் கடந்த ஆண்டில் நள்ளிரவில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த முத்துசாமி மற்றும் அவரது மனைவி சாமியாத்தாள் இருவரையும் இரும்பு ராடு மற்றும் அரிவாளால் வெட்டி படுகொலை செய்து விட்டு பீரோவை உடைத்து அதிலிருந்து 15 பவுன் தங்க நகை மற்றும் 60 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளை அடித்து விட்டு கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர்.

    இதேபோல் கடந்த 2022-ல் சென்னிமலை அடுத்துள்ள உப்பிலிபாளையம் பகுதியில் குட்டையகாட்டு தோட்டத்தில் வசித்து வந்த விவசாயி துரைசாமி கவுண்டர் என்பவரை நள்ளிரவில் கொலையாளிகள் படுகொலை செய்து விட்டு அவரது வீட்டில் இருந்த 25 பவுன் தங்க நகைகளை கொள்ளை அடித்து சென்றனர்.

    இந்த 2 படுகொலை சம்பவங்களை சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை செய்து வந்தனர். கிட்டத்தட்ட ஒரு வருடத்துக்கு பிறகு இந்த கொலை-கொள்ளை வழக்கில் தொடர்புடைய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    நீலகிரி மாவட்டம் எருமாடு பகுதியை சேர்ந்த பாபு என்பவரது மகன் கண்ணன் (25). இவர் இந்த 2 படுகொலை வழக்கிலும் கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடம் தீவிர விசாரணை நடத்தியதில் இந்த கொலையை அவரும் மற்ற சிலரும் சேர்ந்து செய்ததாக ஒப்புக்கொண்டனர். பிடிபட்ட கண்ணனிடம் இருந்து அரை பவுன் நகை மட்டும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    மேலும் உப்பிலிபாளையம் பகுதியில் குட்டைய காட்டுத் தோட்டத்தில் விவசாயி கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் தஞ்சாவூர் மாவட்டம் மனோஜ் பட்டி, பொதிகை நகரை சேர்ந்த காளியப்பன் மகன் இளையராஜன் (28). இவர் மற்றும் கண்ணன் ஆகிய இருவரிடம் இருந்து 6 பவுன் நகையை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

    இவர்கள் 2 பேரும் கடந்த ஒரு மாதங்களாக வேறொரு திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு கோபி சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இவர்களை போலீசார் சென்னிமலை அழைத்து வந்து தீவிர விசாரணை செய்து இந்த 2 வழக்குகளிலும் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். பின்னர் அவர்கள் 2 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    • ஒருங்கிணைப்பு குழுவின் முதல் கூட்டம் அறிவாலயத்தில் இன்று மாலை நடக்கிறது.
    • பல்வேறு செயல்வடிவம் குறித்து பேசப்படுகிறது.

    சென்னை:

    தி.மு.க.வில் 2026 சட்ட மன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 5 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழுவை அமைத்துள்ளார்.

    இந்த குழுவில் முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர்கள் ஏ.வ.வேலு, தங்கம் தென்னரசு, இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

    இந்த குழுவினர் நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

    இதைத்தொடர்ந்து இன்று மாலை 6 மணிக்கு ஒருங்கிணைப்பு குழுவில் இடம்பெற்றுள்ள 5 பேரும் அண்ணா அறிவாலயத்தில் கூடி அடுத்து என்னென்ன பணிகளில் ஈடுபட வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்க உள்ளனர்.

    வர இருக்கும் 2026 சட்ட மன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் தி.மு.க.வில் மேற்கொள்ள வேண்டிய மாறுதல்கள், அமைப்பு ரீதியான சீரமைப்புகளை செய்ய தி.மு.க. தலைவருக்கும், தலைமைக்கும் பரிந்துரைப்பது, கட்சி நிர்வாகிகளிடம் இருந்து வரும் புகார்களை விசாரிப்பது உள்ளிட்ட பணிகளை இக்குழு மேற்கொள்ள அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது.

    அதுமட்டுமின்றி அமைப்பு ரீதியாக மாவட்டங்களில் உள்ள பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் மாவட்டங்களை மேலும் பிரித்து புதிய மாவட்டச் செயலாளர்களை நியமிப்பது உள்ளிட்ட பணிகளை இக்குழு மேற்கொள்ள இருக்கிறது.

    இதன் காரணமாக ஒருங்கிணைப்பு குழுவின் முதல் கூட்டம் அறிவாலயத்தில் இன்று மாலை நடைபெற இருக்கிறது. இதில் பல்வேறு செயல்வடிவம் குறித்து பேசப்படுகிறது.

    • 5 நாட்களாக தொடர்ந்து மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.
    • காற்றின் வேகம் குறைந்ததால் மீன்பிடி தடையை மீனவர் நலத்துறை நீக்கி உள்ளது.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம், மன்னார் வளைகுடா மற்றும் வங்க கடலில் வீசிய சூறை காற்று காரணமாக கடந்த 5 நாட்களாக தொடர்ந்து மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை தடை விதிக்கப்பட்டது.

    இதனால் ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட மாவட்டம் முழுவதிலும் 1,500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் மீன்பிடிக்க செல்லாமல் படகுகள் துறைமுகங்களில் நிறுத்தப்பட்டது.

    இந்த நிலையில் இன்று மன்னார் வளைகுடா கடல் பகுதியில் காற்றின் வேகம் குறைந்த நிலையில் மீன்பிடி தடையை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை நீக்கி உள்ளது.

    இதனால் தனுஷ்கோடி, பாம்பன், மண்டபம், கீழக்கரை, ஏர்வாடி உள்ளிட்ட துறை முகங்களில் இருந்து விசைப்படகுகளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். 5 நாட்களுக்கு பின் மீன்பிடிக்க செல்வதால் அதிகளவில் மீன்கள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் சென்றுள்ளனர்.

    • தொடர்ந்து மழை பெய்வதால் அணைக்கு தொடர் நீர்வரத்து உள்ளது.
    • நீர்வரத்தை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    பொள்ளாச்சி:

    கோவை மாவட்ட த்தில் பி.ஏ.பி.பாசனத்தி ட்டத்தின்கீழ் அமைந்துள்ள ஆழியாறு அணைக்கட்டு 120 அடி உயரம்கொண்டது. இங்கு 3864 மில்லியன் கனஅடி நீரை தேக்கி வைக்க முடியும்.

    ஆழியாறு அணைக்கட்டு பகுதியில் சேகரிக்கப்படும் தண்ணீர் பழைய-புதிய ஆயக்கட்டு பாசன பகுதிகள் மற்றும் குடிநீர் ஒப்பந்தப்படி கேரளாவுக்கும் வினியோகிக்கப்பட்டு வருகிறது.

    கோவை மாவட்டத்தில் கடந்தாண்டு பருவமழை கைகொடுக்காததால் ஆழியாறு அணை நிரம்பவில்லை. ஆனால் இந்தாண்டு நவமலை, வால்பாறை மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்வதால் அணைக்கு தொடர்நீர்வரத்து உள்ளது.

    அதிலும் குறிப்பாக கடந்த ஒரு வாரமாக ஆழியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது.

    அந்த வகையில் கடந்த 16-ந்தேதி 91 அடி என்ற அளவில் இருந்த நீர்மட்டம் 18-ந்தேதி 100 அடியை தொட்டது. நேற்று காலை 8 மணிக்கு 109.30 அடியாக இருந்தது. பின்னர் மதியம் 2 மணிக்கு 110 அடியாக உயர்ந்தது.

    ஆழியாறு அணைக்கு தற்போது வினாடிக்கு 2634 கனஅடி நீர்வரத்து உள்ளது. மேலும் அணையில் இருந்து 84 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    ஆழியாறு அணையின் நீர்மட்டம் 110 அடியை எட்டியதை தொடர்ந்து நீர்வளத்துறை மற்றும் வருவாய்த்துறை சார்பில்ஆழியாறு, ஆனைமலை, கோட்டூர், மயிலாடுதுறை, ரமணமுதலிபுதூர் ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு முதல்கட்ட வெள்ளஅபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    மேலும் பொதுமக்கள் ஆற்றில் இறங்கி குளிக்கவோ, கால்நடைகளை குளிப்பாட்டவோ கூடாது. கரையோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு சென்றுவிடவேண்டுமென ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    ஆழியாறு அணையின் நீர்வரத்தை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    இதுகுறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், `ஆழியாறு நீர்மட்டம் 115 அடியை தாண்டியதும் 2-வது கட்ட மற்றும் இறுதிகட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படும். தொடர்ந்து 118 அடிக்கு நீர்மட்டம் உயர்ந்து நீர்வரத்தும் அதிகமாக இருந்தால் அணையின் பாதுகாப்பு கருதி உபரிநீர் வெளியேற்றப்படும்' என்று தெரிவித்து உள்ளனர்.

    ×